மகாவம்சத்தில் தமிழர் நிலை

எழுத்தாளர் : பிரகலாதன் மின்னஞ்சல் முகவரி: prakalaath2010@gmail.comBanner

இலங்கை வரலாறில் தமிழர் நிலை என்கின்ற போது தமிழர் பற்றிய வரலாறு இலங்கை வரலாற்றின் பிற்பகுதில் மட்டுமே இருப்பது போன்ற எண்ணம் நம்முள் எழலாம். இலங்கை தமிழர் வரலாறை இந்துசார் மனநிலையிலும் சிங்களவர்களை பௌத்தம்சார் மனநிலையிலும் ஆய்வு செய்ததன் விளைவே அதற்க்கு காரணம் ஆகும். இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சத்தை ஆய்வு செய்யும் பொழுதும் அதுவும் சிங்கள வரலாறு கூறும் புராணமாகவே சித்தரிக்கபட்டுள்ளது. மகாவம்சம் இலங்கையின் முழு வரலாறையும் கூறும் நூலென கொள்ளமுடியாவிட்டாலும், முற்றுமுழுதாக அதனை புறக்கணிக்கமுடியாது. இலங்கை வரலாறையும் தமிழர் வரலாறையும் காலகிரமத்துடன் அறிய ஓரளவுக்கேனும் மகாவம்சம் மட்டுமே உதவுகிறது.


முதலில் மகாவம்சம் சிங்கள வரலாறு கூறும் நூலா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதே ஆகும். மகாவம்சத்தின் பிரதான கருப்பொருள் பௌத்தம் ஆகும். பௌத்த மதத்தின் வளர்ச்சியையும் அதன் செல்வாக்கையும் உயர்த்தி காட்ட வரலாறுகளுடன் புனையப்பட்ட புராணம் என்பதே மகாவம்சத்திற்கு சரியான பதமாகும். பௌத்த மதம் இலங்கையில் தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கடைபிடிக்கப்பட்ட மதம் ஆகையால் பௌத்த புராணம் சொல்லும் மகாவம்சத்தில் தமிழரின் பங்கு மறைக்கப்பட முடியாத ஒன்றாகும். மிதமிஞ்சிய மத துதிகளையும் பௌத்தத்தை பரப்பிய மன்னர்கள் வீண் புகழ் பாடும் வர்ணனைகளை தவிர்த்துவிட்டு அதில் குறிப்பிடும் சந்தர்ப்பங்கள், பெயர்கள் அடிப்படையில் வரலாற்றை ஆராய்ந்தால், தமிழர் வரலாறு ஓரளவுக்கேனும் வசப்படும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கரும் நாகரும் இயற்;கை வழிபாடுகளை அல்லது மகாவம்சம் கூறுவதுபோல் முறையற்ற வழிபாடுகளை மேற்கொண்டவர்கள். இது சமகாலத்தில் தென்னிந்தியாவில் சோழர் சேரர் பாண்டியர்கள் கடைப்பிடித்த வழிப்பாட்டு முறைகள் ஆகும். இது பூர்வகுடிகளும் தென்னிந்திய தமிழர்களுக்குமான தொடர்பை காட்டி நிக்கிறது. குறிப்பாக நாகர்கள் நாகர்களை வழிப்பட்டார், இன்றும் நாகங்களை வழிபாடும் முறை தென்னிந்தியாவிலும் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் காணப்படும் வழக்கமாகும். மேலும் “நாக” என்ற பெயர் தமிழர் மரபில் நெடுங்காலமாக வழக்கில் இருக்கும் ஒன்றாகும்.


எழுநூறு தோழர்களுடன் இலங்கை வந்த விஜயன் இயக்கர் குல குவேனியை திருமணம் செய்தது பின் அவளை துரத்தியடித்த பின் மீண்டும் பாண்டி நாட்டில் இருந்து அரசகுமாரிகளை வரவழைத்து திருமணம் செய்து கொள்கிறான், என்பது விஜயன் வருகையில் தொடங்கும் இலங்கை வரலாறில் முக்கிய நிகழ்வாகும். இதில் தமிழர்கள் வரலாற்றின் ஆரம்பத்திலையே இணைக்கப்பட்டுவிட்டார்கள் என்பதுவும் சிங்களவர்களின் ஆரம்பம் தென்னிந்தியா மற்றும் வடஇந்தியா மன்னர்களின் கலவை என்பதுவும் இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது.


கிட்டத்தட்ட நாலாம் ஐந்தாம் நூற்றாண்டு காலப்பகுதிவரை இலங்கையில் சிங்கள இனம் ஒன்றே இருக்கவில்லை. “அதுவரை தமிழ் பேசியவர்களும், தமிழுடன் பாளி பிராமி, கலிங்க மொழிகளை கலந்து பேசியவர்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மொழி வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். “சிகல” என்ற சொல்லே மகாவம்சத்தின் மூல நூலான தீபவம்சத்தில் ஒரு இடத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் நாட்டை குறிப்பதுக்கு மாத்திரமே அன்றி இனத்தை குறிக்க அல்ல. தீசன், நாகன், சிவன் ஆகிய பெயர்கள் நாக இன மக்களின் பரம்பரை பெயர்களாகும், விஜயனுக்கு பின் வந்த மன்னர்களின் பெயர்களை ஆராய்ந்தால் நாக இன மன்னர்களின் ஆதிக்கம் தெளிவுபடுத்தப்படும். 


அநுராதபுரவை ஆண்ட நாக மன்னன் மூத்தசிவனின் (கிமு 307 – 247) மகன் தேவநம்பியதீசனின் (கிமு 247 - 207)  சகோதரன் மகாநாகனின் மூன்றாம் தலைமுறை இளவரசன் காக்கவண்ண தீசனுக்கும், களனியை ஆண்ட நாக மன்னனின் மகள் விகாரமாதேவிக்கும் பிறந்த துட்டகைமுனுவே (கிமு 101-77)  மகாவம்சத்தின் கதாநாயகனாக சித்தரிக்கப்படுகிறான். இங்கு கவனிக்க வேண்டியது துட்டகை முனு தாய் தந்தை இருவர் வழியிலும் நாகர் குலத்தை சார்ந்தவன் என்பதாகும். இன்னொரு நாகர் குல மன்னனான எல்லாளன் அல்லது  எலராக்கும் துட்டகைமுனுவிற்கும் இடையே பௌத்தத்திற்கும் வைதீகம் அல்லது ஆதிசைவ மதத்திற்கும் இடையேயான யுத்தம் சிங்கள தமிழ் யுத்தமாக பிற்கால இனவாதி வராலற்றாசிரியர்களால் சித்தரிக்கப்பட்டுவிட்டது. 


துட்டகைமுனு சிறுவனாக இருந்தபோது அவன் தந்தை காக்கவண்ண தீசன் பிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து உருண்டையாக்கி, அவனிடம், தமிழர்களுடன் சண்டை செய்யாதே என்று சத்தியம் கேட்கிறான். அந்த உணவை தட்டிவிட்டு ஓடிச்சென்று படுக்கையில் ஒடுங்கி படுத்துகொள்கிறான் , அப்போது அங்கு வந்த அவன் தாய் விகாரமாதேவி “ஏன் மகனே கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாக படுக்கலாமே” என்கிறாள். அதற்க்கு அவன் “மகாவலிக்கு அப்பால் தமிழர்களும், மறுபுறம் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும்போது எப்படி வசதியாகப்படுப்பது?”  என்கிறான்.  இந்த காட்சியை பிற்கால  வரலாற்றாசிரியர்கள் “வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும்” என்று திரிபு படுத்தி தமிழர்களின் செறிவை வடக்குக்குள் மட்டும் ஒடுக்கிவிட்டார்கள். மகாவலிக்கு அப்பால் என்றால் எவ்வளவு பெரிய பிரதேசம் தமிழர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது என்பது புலப்படும்.


துட்டைகைமுனு எலாரவுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. யுத்தத்திற்கு எலாரவை நெருங்கும் முதல் முப்பத்தியிரண்டு தமிழ் மன்னர்களுடன் யுத்தம் செய்து வென்ற பின்னே எலாரவுடன் போர் புரிந்ததாக மகாவம்சம் சொல்கிறது. இது கி மு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர்கள் இலங்கையில் பரவலாக வசித்தமைக்கு சான்றாகும். இவ்விருவர்க்கும் இடையே நடந்த யுத்தத்தில் துட்டைகமுனுவின் படையில் பௌத்தத்தை தழுவிய தமிழர்களும் இருந்தார்கள். குறிப்பாக எல்லாளனின் படைதளபதி மித்தனின் சகோதரன் மகன் நந்தமித்தன் துட்டகைமுனுவின் பிரதான தளபதிகளில் ஒருவனாக விளங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. 


இவை தவிர்த்து மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களும் கதைகளும் சங்க தமிழ் இலக்கியங்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுவும் தமிழர்களின் ஆதிக்கத்தை நன்கு தெளிவுபடுத்துகிறது. அதற்க்கு சான்றாக பல சந்தர்ப்பங்கள் உதாரணப்படுத்த முடியும்.
சங்க தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற “பரணன்” என்கின்ற வரலாற்று கவிஞனின் பெயரையுடைய, பரணன் என்கின்ற வீரன் துட்டகைமுனுவின் உதவியாளர் படையில் இருந்ததாக மகாவம்சம் இருபதாம் அத்தியாத்தில் சொல்லப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த ஐந்து தேரர்களில் ஒருவரான உதியன் மற்றும் உதியன் என்கின்ற மன்னன் பெயரும் சங்க காலத்தில வாழ்ந்த மன்னன் உதியன் சேரலாதனை நினைவுபடுத்துவதாக அமைகிறது. 

இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது!!!  
Views: 818