ஆத்மாவின் கண்

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner


காலத்தின் மாற்றம் இயற்கை ஊடாக என்றும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதியை அண்டிய குளக்கரை. வசந்த காலத்தின் ஆரம்ப பகுதி, மரங்கள் அதனை பறைசாற்றிக் கொண்டிருந்தன. துளிர்தல் எனும் செயல் எப்போதும் அழகு தானே. ஆனால் இந்த மரம் இளம் பச்சை நிறத்துளிர்களால் மட்டும் நிரம்பாது, இளங் சிவப்பு நிறத்தை துளிர்களின் நுனியில் கொண்டு இளம் பச்சை நிறத்தால் நிரம்பி காற்றில் அசைந்து கொண்டிருந்தது. இத் துளிர் இலைகள் மேல் காலைச் சூரியனின் பொன்னிற ஒளிக்கற்றைகள் பட்டுத் தெறிக்க இலைகள் அனைத்தும் பொன்றிமாகவே மாறி ஜொலித்து அக்குளக்கரை எங்கும் வியாபித்து காண்N;பாரை மெய் மறக்கச் செய்து கொண்டிருந்தது.  


ஆசையே துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என உரைத்துக் கொண்டிருக்கும் புனிதன் அந்த மரத்தின் அடியில் சருகளுக்கு மத்தியில் எவ்வித சலனமும் இன்றி தியானத்தில் அமர்ந்திருந்தான். அழகிய வட்ட வடிவான வதனம், நீண்ட கூர் மூக்கு, சிவந்த உதடுகள், அகன்று விரிந்த மார்பு, திரண்ட புஜங்கள் என அரசர்களுக்குரிய அனைத்து அங்கலட்சணத்துடன் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அவன் ஞானத்தால் நிரம்பி இருந்தான். அவன் இருந்த இடமும் அவனது ஞானத்தால் நிரம்பி இருந்தது.
  

குளத்து நீரின் ஈரப்;பதனை உறுஞ்சி எடுத்துக் கொண்ட காற்று அங்கிருந்த மரங்கள் செடிகள் என அனைத்திலும் மோதி மோதி விளையாடிக் கொண்டிந்தது. இப்போது புனிதனின் முறை. மூடியிருந்த அவன் கண்களில் மோதி திரும்பியது. மோதிய தருணத்தில் சிதறிய காற்று அவனின் சுவாசத்தின் வழி உள் சென்றும் திரும்பியது. காற்றின் குளிர்மையை அனுபவித்துக் கொண்டே மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டபடி கண்களை மெதுவாகத் திறந்தான். தாமரை மலர்வதும் இது போல தானே. 


திறந்த கண்முன் ஒரு ஆணும் பெண்ணும் அழுது சிவந்து வீங்கிய கண்களுடன் நின்றிருந்தனர். அவர்களின் நிலை ஏற்க முடியாத இழப்பினால் வருந்துகின்றார்கள் என்பதை விளக்கியது. அவர்களை புனிதன் நிமிர்ந்து பார்க்கவும் அவர்கள் அழுதபடி புனிதன் முன் மண்டியிடவும் சரியாக இருந்தது. அவன் காலடியில் ஒரு சிறுவன் உறங்கிக் கொண்டிருப்பது அப்போது தான் அவன் கண்களில் தென்பட்டது.  


“சுவாமி இவன் எங்கள் மைந்தன், நேற்று மாலை வரை இவன் பாதம் பூமியை முத்தமிட விளையாடிக் கொண்டுதானிருந்தான். இந்த பாவி தான் இரவு உணவை ஊடடி;னேன். உணவு தொண்டைக்குழிக்குள் சிக்கி உயிர் துறந்து விட்டான்.” என தலையில் அடித்து தாய் கதறி அழுதாள். அவள் குற்றவுணர்வால் அதிகம் சூழ்ந்திருந்தாள். கண்களை துடைத்துக் கொண்டே தொடர்ந்தாள் “தங்களின் சக்தி அறிந்து தான் நாங்கள் இங்கு வந்தோம். எம் மைந்தனுக்கு உயிர்ப்பிச்சை வழங்க வேண்டும் சுவாமி” எனக் கூறி புனிதனின் காலடியில் நெடுங்சாண் கிடையாக விழுந்தாள். அப்போது தான் புரிந்தது அவன் காலடியில் இறந்து காய்ந்த சருகளிடையே சிறுவன் உறங்கிக் கொண்டிருக்கவில்லை இறந்து கிடக்கிறான் என்று, எங்கும் எதிலும் எப்பிடி வேறுபட்டாலும் இறப்பின் பின் அனைவரும் சமம் எனும் உண்மை அக்கணம் அவனுக்கு புலப்பட்டது.


 “தாயே எழுந்திரு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தானே வாழ்க்கை. பிறக்கும் போது நமது வருகை வெறுமையான வரவு, அது போல தான் எமது வெளிச் செல்கையும் அமைகிறது. இந்த வாழ்க்கை பயணத்தில் இடையில் வந்து இணையும் பந்தங்கள் இடையில் விட்டுச் செல்கிறது. அல்லது நாம் இடையில் விட்டுச் செல்கிறோம். இங்கு யாரும் யார் மீதான இருப்பை வலியுறுத்த முடியாதம்மா. அவ்வாறு வலியுறுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான அதிகாரம் என்பது எம் மனதில் உதிக்கும் ஆசையாகும். ஆசையை துறப்பதன் மூலமே வாழ்வின் ஆத்மாத்தத்தை அடைய முடியும்” என்றான் புனிதன். அவன் பேச்சால் அந்த இடம் நிசப்தத்தில் ஆழ்த்தி இருந்தது. சிறிது நேரம் தான், மீண்டும் தாய் விசும்பத் தொடங்கினாள், நிசப்தம் கலைந்தது. விசும்பல் குறைய குரல் தழதழக்க “சுவாமி வாழ்வின் ஆத்மாத்தம் பற்றி நான் ஏதும் அறியிலேன். இருப்பினும் எங்கள் இருவரினது காதல் வாழ்வின் ஆத்மாவாக இருந்தவன் தான் என் மகன். இவன் உயிர் பெற ஏதும் மார்க்கம் கூறுங்கள் அது போது எமக்கு” என கூறி நின்றாள் தாய்.

 
சங்கடமான நிலையில் நிதானம் மிக முக்கியம். அதுவும் வாழ்வின் உள்ளார்ந்த யதார்த்தத்தை புரிந்து கொள்வதற்கு ஆசையைத் துறந்து நிதானம் கொள்ள வேண்டும் என்ற தன் முடிவை நினைத்து  அக்கணத்தில் புளாங்கிதம் அடைந்து கொண்டான் புனிதன். இந்த உலகவாழ்வில் இத்தனை பற்றுக் கொண்டவர்களாக இவர்களால் எப்படி இருக்க முடிகிறது. பற்றற்ற நிலை தானே பேரின்பம் அதனை விடுத்து பற்றுக் கொள்வதில் என்ன இன்பத்தை இவர்களால் பெற்றுவிடமுடிகிறது என எண்ணிக் கொண்டான். தான் கற்றது பெற்றது உணர்ந்து என அனைத்தையும் கூறிப்பார்த்தான் புனிதன், அவர்கள் மறுவதாய் இல்லை. எந்த விடயத்தையும் அனுபவரீதியாக அடைவது சிறந்தது என்பது புனிதனுக்கு தெரியும். அவ்வாறான அனுபவத்தை அவர்களுக்கு வழங்க தீர்மானித்தான். “சரி தாயே ஒரு நிபந்தனையுடன் உன் மகனின் உயிரை பெற்றுக் கொள்”. அதுவரை குனிந்து நின்ற அந்த குழந்தையின் தந்தை நிமிர்ந்து புனிதனை பார்த்தார்.

 வாழ்நாளில் இதுவரை புனிதன் சந்திக்காத பார்வை அது. “என்ன நிபந்தனை கூறுங்கள் சுவாமி” என பணிந்து நின்றாள். மிக நிதானமாக புத்தன் தொடர்ந்தான் , “அந்தி சாய்வதற்குள் இவ்வூரில் உள்ள ஏதாவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வரவேண்டும். நீங்கள் மண் எடுக்கும் வீடு இதுவரை மரணம் நிகழாத வீடாக இருக்க வேண்டும். இதுவே எனது நிபந்தனை.” என கூறி முடித்தான். அந்நிபந்தனையின் கூடாக வாழ்வின் உண்மையை அவர்களுக்கு உரைக்க விரும்பினான். அவன் கூறிய சொல் முடிவதற்குள் அவர்கள் புறப்பட்டிருந்தனர். அவர்கள் செல்லும் திசையைப் பார்த்து, அவர்களின் அறியாமையை பார்த்து புனிதன் கவலை கொண்டான். திடீர் என திரும்பி வந்த அச்சிறுவனின் தந்தை சிறுவனின் உடலை வாரி அணைத்து தூக்கி தன் மார்பின் மேல் கிடத்தினார். இடுப்பில் கட்டியிருந்த சால்வையால் புனிதன் இருந்த இடத்தை தட்டி சுத்தப்படுத்தினார். மார்பில் கிடந்த உடலை அணைத்த படி அச்சால்வையை நிலத்தில் விரித்தார் அதில் அந்த உடலை படுக்க வைத்தார். பின் தன் மேலாடையை கழற்றி சும்மாடு போல சுற்றி தலையணையாக வைத்தார் தலையில் கட்டியிருந்த துணியை எடுத்து அந்த உடலை போர்த்தி விட்டார். இருபக்கமும் விழுந்த கிடந்த கைகளை எடுத்து கண்களில் ஒற்றி அச்சிறுவனின் நெஞ்சில் வைத்தார். நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்த போது கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் விழுந்தது. விழுந்த அத்துளிகள் புனிதனை சுட்டது.


 புனிதனை பார்த்தார். “ ஒரு தந்தை தன் மகன் தன்னை உணரும் வயதை அடையும் வரை அவனை காத்து வழிகாட்டும் கடமைக்கு ஆளாகிறான் ஆனால் நான் என் மகனுக்குரிய கடமையில் இருந்து தவறியவன். உறங்கும் அவனை பார்த்துக் கொள்ளுங்கள்” என கூறி கை எடுத்து வணங்கி அத் தந்தை அவ்விடத்தை விட்டு நீங்கினார். அந்த நிமிடத்தில் இருந்து வர புனிதனுக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. புனிதன் தன்னை சுதாகரித்துக் கொண்டு நிமிர்கையில் அத்தம்பதிகள் புனிதனின் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தனர். இப்போது அந்த தந்தை சிந்திய கண்ணீரும் அச்சிறுவனின் உடலும் மட்டுமே புனிதனுக்கு தெரிந்தது. கண்களை மூடி தியானத்திற்குள் செல்ல எத்தனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அர்த்த ஜாமத்தில் அழுத ஒரு குழந்தையின் குரல் அவனை துரத்த தொடங்கியது. 

-------------------------------------------------------------------------------- 
புனிதன் கிட்டதட்ட அவனது அரண்மனை இருக்கும் பகுதியை நெருங்கி விட்டான். எத்தனை நாட்கள் நடந்திருப்பான்? நினைவில்லை. ஆனால் இந்த தேடல் என்றுமில்லாத உற்சாக உணர்வை அவனுக்கு வழங்கியிருந்தது என்பது மறுக்க முடியாது. பயணங்களில் அடர்ந்த காடுகளில் உறங்கிய போது வந்த கனவுகளில் அடிக்கடி யசோதா ஒரு குழந்தையை கைகளில் ஏந்திய படி கண்களில் கண்ணீர் நிறைய இவனை ஏறுறெடுத்தும் பார்க்காத வண்ணம் எங்கே வெறித்து நோக்கியவளாக இவன் முன்னால் நின்று கொண்டிருந்தாள். அந்த கனவுகளில் அவளின் தோற்றம் வெகுவாக மாறி இருந்தது, அவளின் கேசம் ஒழுங்காக வாரபப்டாமலும் முகத்தில் எவ்வித பொலிவு இன்றியும் அவள் தோன்றிக் கொண்டிருந்தாள். அதை தான் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அக்கனவில் வரும் குழந்தையின் முகத்தை அவனால் அடையாளப்படுத்த முடியவில்லை. இதனை நினைத்து அடிக்கடி மனவருத்தம் அடைந்தான். அனைத்திற்கும் தீர்வு அரண்மனை சென்று குழந்தையையும் யசோதாவையும் சந்திப்பதில் தான் உண்டு என அவன் நம்பிக் கொண்டான். அந்த நம்பிக்கை தான் அவனை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது.
  

என் குழந்தை எப்பிடி இருப்பான்? என் பெயர் சொல்லும் வீரம் மிக்க ஆண் மகனா இல்லை என் தேச பெருமைகளையும் அடையாளங்களையும் பிரதிநிதித்துப்படுத்தும் அன்பே வடியாய் அமைந்த பெண் மகவா? என் குழந்தை என்னை கட்டதும் எப்படி நடந்து கொள்வான்? ஒடி வந்து என்னை கட்டிக் கொள்வானா? யN;சாதா நிச்சயம் ஏதும் பேசமாட்டாள் மௌனமான அழுகையில் தன்னை வெளிப்படுத்துவாள். என் குழந்தை தூங்கும் போது அவன் தலையை என மடியில் வைத்து முடிகளைக் கோதிவிட வேண்டும். உறக்கம் கலைக்காது நெற்றியில் முத்தமிடவேண்டும். மாலை வேளை அரண்மனை உலாவின் போது மகவின் பிச்சு விரல் பற்றி கதைகேட்டு மகவுடன் பயணிக்க வேண்டும். நினைத்து நினைத்து பார்த்து சிலிர்த்துக் கொண்டான் புனிதன். அந்த சிலிர்ப்பு அவனை அரண்மனை கொண்டு வந்து சேர்த்தது. 

அவன் ராச்சியம் முற்றுமுழுதாக மாறியிருந்தது. மாற்றம் தானே வாழ்வில் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. அரண்மனைக்குள் நுழைந்தான். அரண்மனையும் மாறிப் போயிருந்தது. புனிதனை யாரும் கவனிப்பதாக இல்லை. அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தான். வாசலை அண்மித்ததும் இரு வீரர்கள் அவனை வழி மறித்தனர். அவன் அரண்மனை செல்வதை தடுத்தனர். அவனை தன்னை அறிமுகப்படுத்த முனைந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் அவன் கூறுவதைக் அலட்சியம் செய்த படி அவனை வெளியேற்றுவதில் மும்முரமாய் இருந்தனர். அலட்சியத்தின் அறிமுகத்தோடு புனிதன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.  
எத்தனை இரவுகளை தனிமையில் கடந்து வந்திருப்பான் ஆனால் இந்த இரவு மிகக் கடினமாய் கடந்து சென்று கொண்டிருந்தது. எப்படியும் காலை யசோதாவையும் குழந்தையையும் சென்று பார்த்துவிட வேண்டும் என அடிக்கடி தனக்கு சொல்லிக் கொண்டு அடைக்கலம் புகுந்த அந்த சத்திரத்தில் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருந்தான். அப்போது தான் அச் சத்திரத்தில் வேலை முடித்து இருவர், இவன் அருகில் உறங்க வந்திருந்தனர். அவர்கள் மெலிதாக தமக்குள் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். நடந்து வந்த களைப்பும் பசியும் ஒன்று சேர தூக்கம் மெல்ல மெல்ல புனிதனை தழுவிக் கொண்டது.  


இம்முறை கனவில் யசோதா, கையில் ஏந்திய குழந்தையுடன் அவனை வெறித்துப் பார்த்து விட்டு வேகமாக சென்று கொண்டிருந்தாள். புனிதன் கண்விழிக்க முயன்று கொண்டிருந்தான், முடியவில்லை. காதில் அருகில் எதோ விதமான ஒலி கேட்க, இதயம் இயங்கும் சத்தம் அதிர்ந்து கேட்டது. இனி தாமதிப்பது முட்டாள் தனம் என விளங்கியது. எழுந்தான், விடிந்தும் விடியாத மங்கலான பொழுது அது. அரண்மனை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான். 


இன்று வீரர்கள் விரட்டுவதிற்கு பதில் அடிக்க எத்தனித்தனர். பல நேர போராட்டத்தின் பின் அவன் கோரிக்கையை ஒரு காவலாளி கேட்டான். யசோதாவையும் அவர் குழந்தையையும் பார்க்க வேண்டும் என கெஞ்சினான். “நீ எந்த உலகில் வசிக்கிறாய்? அவர் எம் அரச சபையை அவமதித்து இவ்வரண்மனை விட்டு என்றோ வெளியேறிவிட்டார். இளவரன் ராகுலனும் அவருடன் சென்றுவிட்டார். அவர்கள் ராஜதுரோகத்திற்கு நிகராக குற்றம் புரிந்தவர்கள் ஆவார். அவர்களின் நலன் வேண்டுபவர்களும் அக்குற்றத்தை புரிந்தவர்களாக கருத்தாக்கம் கொள்ளப்படுவார். ஏன கூறினான். “என்ன இளவரசன் ராகுலனா?” புனிதனுக்கு ஆன்மா உருகியது. எனக்கு மகன் இருக்கிறான் என உரத்துக் கூற நா எழுந்தது. வார்த்தைகள் வெளிவர திணறியது , கண்ணீர் ஆறாய் பெருகியது. ஆண் மகன், வீரத்தின் அடையாளம், “தேசத்தின் சொத்து என் மகன் சரி அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என தெரிவிக்க முடியுமா?”  கண்ணீர் வடிய அவர்களின் கைகளைப் பற்றினான் புனிதன். பைத்தியக்காரனை பார்ப்பது போல அவனை அவர்கள் நோக்கினார்கள். அது பற்றி நாங்கள் ஏதும் அறியோம். “சரி சரி இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள நினைக்கும் நீ யார்?” அவர்களை உற்றுப் பார்த்த புனிதன் நீண்ட பெருமூச்சை விட்டவாறு நிமர்ந்தான் அந்த காவலாளியை பார்த்து கடமை “தவறியவன் என அடையாளப்படுத்திக் கொள் என கூறிவிட்டு வேகமாக நடக்க தொடங்கினான். 

Views: 964