ஈழத் தமிழ்த் திரைப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

எழுத்தாளர் : கோகுலரூபன்மின்னஞ்சல் முகவரி: kokularuban@ymail.comBanner

ஈழத் தமிழ் திரைப்படத் துறை குறித்து நாம் முன் வைக்கின்ற அவதானங்கள் எவையும் நாட்டின் அரசியல் மற்றும் சமூக பின்புலத்தை அடிப்படையாக  கொண்டு முன்வைக்கப்படுதல் மிக அவசியமானது. இந் நிலையில்  சுதந்திரத்துக்கு பின்னரான 1950 கள் முதற்கொண்டு 80 களில் உச்சம் பெற்ற இனவன்முறைகள், நீடித்த ஆயுத மோதல்கள் என இவற்றின் வரலாற்று நிலைமைகளை பின்னணியாகக் கொண்டு ஈழத் தமிழ் திரைப்படத் துறையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் செல் நெறி குறித்து ஆராய்தல் நமக்கு முக்கியமாகின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னர் சிங்கள தேசிய வாதம் ஒரு புறமும் மார்க்சிச தத்துவம் தழுவிய  எழுச்சி ஒரு புறமும் என இரு போக்குகள் முனைப்புப் பெற்றன. தன்னை சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் என அறிவித்துக் கொண்டு 1956 இல் ஆட்சிக்கு வந்த S.W.R.D பண்டார நாயக்கவின் தலைமையிலான அரசு சிங்களத் தனிச் சட்டம் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சட்டங்களை இயற்றியது, கூடவே சுதேசிய சிங்களப் பண்பாட்டின் மீது பிரத்தியேக கரிசனையையும் காட்டியது.  

இலங்கை அரசு,  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சினிமா மீதான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தத் தொடங்கிய அதே நேரம் சிங்கள சினிமா வளர்ச்சிக்குப் போதுமான ஆதரவை வழங்கியது. தமிழ் மக்களுக்கான திரைப்பட வளர்ச்சி குறித்து எந்த அக்கறையையும் அரசு காட்டவில்லை. அரச திரைப்படத் துறை உருவாக்கப்பட்டது. இந் நிலையில் பல சிங்கள கலைஞர்கள் திரைப்படத் துறையில் காத்திரமான பங்களிப்பை செய்தனர். இலங்கையின் சத்யத் ஜித்ரே என அறியப்படும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற சிங்கள கலைஞர்கள் சிங்கள திரைக்கலை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர். ஜேம்ஸ் பீரிஸின் ரகவா (1956)  போன்ற படங்கள்  சிங்கள சினிமாவின் சீரிய வளர்ச்சிக்கு   முன்னுதாரணங்களாக அமைந்தன.


தென் இந்தியாவில் இந்திய விடுதலைக்கு முன்னரும் பின்னருமான  இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் திராவிட இயக்கத்தின் எழுச்சி போன்றவை சிங்கள தனிச் சட்டம் போன்ற இன அடக்கு முறைச் சட்டங்களால் ஏமாற்றமடைந்திருந்த தமிழ் தேசத்துக்கு   எழுச்சியை ஊட்டின. அன்றைய இலங்கைத்  தமிழ் அரசியல் வாதிகளும் திராவிட இயக்கத்தின் பால் பெரிதும்  ஈடுபாடு காட்டினர். ஹிந்தி மட்டும் என்பதற்கு எதிரான திராவிட எதிர்ப்பும், சிங்களம் மட்டும் என்பதற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பும் ஒரே மாதிரியாகவே உணரப்பட்டது.


இந் நிலையில் திராவிட இயக்கத்தின் கலை, இலக்கிய முயற்சிகள் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் செலவாக்குச் செலுத்தின. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களினால் தமிழ்த் திரைப்படங்கள் திராவிட இயக்கத்தின் சமூக அரசியல் கொள்கைகளை முன் நிறுத்தி உருவாக்கப்படடன. இவை திரைப்படத் துறையில் ஆர்வம் காட்டிய ஈழத்து படைப்பாளிகளுக்கு முன் உதாரணங்களாக அமைந்தன. பேசு பொருள், வடிவம் உள்ளிட்ட போன்ற அநேகமான விடயங்கள் தமிழ் நாட்டு சினிமாவைத் தழுவியே உருவாக்கப்பட்டன.  
ஈழத்து முதல் தமிழ் திரைப்படமான சமுதாயம் 1962 இல் உருவாக்கப்பட்டது. இப்படம்  அண்ணாத்துரையின் வேலைக்காரி என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்து. 16MM இல் அமைந்த இப்படம் ஹென்றி சந்ரவன்சவால் இப்படம் இயக்கப்பட்டது.  

1951 இல் வெளியாகிய குசுமலதா என்ற படம் ஜெயமன்ன என்கிற சிங்கள இயக்குனரால் இயக்கப்பட்டது இதனை தமிழ்த்  தயாரிப்பாளர்  நாயகம் தயாரித்தார்.  இதனை முதலாவது தமிழ்த்  திரைப்படமாக கொள்வோரும் உளர் எனினும் இது  சங்ஹன பிலிதுர என்கிற சிங்களப்படத்தின் தமிழ் மொழி வடிவமேயாகும்.


1963 இல் முதல் முறையாக 35MM இல் அமைந்த கிஸ்ணகுமார் இயக்கிய தோட்டக்காரி என்கிற படம் உருவாக்கப்பட்டது. மலையக பெண் தொழிலாளியின் வாழ்வியலைப் பேசும் இப்படம்  வழமையான தென் இந்தியப்படங்கள் கொண்டிருக்கும் காதல், சண்டை, எதிர்பாரா திருப்பம், கற்பனை போன்ற அம்சங்களையே கைக் கொண்டிருந்தது


1966 முதல் 1970 வரை 6 தமிழ்த் திரைப்படங்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளன. 1966 இல் தேவானந்தா இயக்கிய பாசநிலா என்கிற படமும், சோமசேகரம்  இயக்கிய டாக்ஸி டிரைவர் என்கிற படமும் அதே ஆண்டில் வேதநாயகம் இயக்கிய கடமையின் எல்லை என்கிற படமும் வெளிவந்தன. கடமையின் எல்லை சேக்ஸ்பியரின் ஹம்லட் என்கிற படைப்பை தழுவி தமிழ்ப் பண்பாடு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
1968 இல் சில்லையூர் செல்வராசனின் இயக்கத்தில்  நிர்மலா என்கிற திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1970 இல்   தம்பூஸ் இயக்கத்தில் மஞ்சள் குங்குமம் மற்றும் வெண்சங்கு  ஆகிய படங்கள்  தயாரிக்கப்பட்டன. 
மேற்குறித்த படங்கள் யாவும் காதலும் அதைச் சுற்றிய பிரச்சனைகளையுமே மையப்படுத்தின. கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்கிற முக்கோண வடிவத்துள் மட்டுமே நிகழ்கவுள் சுழன்றன.  தென் இந்திய சினிமாவை அடி ஒற்றி தயாரிக்கப்பட இத்திரைப்படங்கள் ஈழத்து திரைப்படத் துறைக்கு புதிய பண்பாட்டுத் திசையை உருவாக்கிக் கொடுக்க தவறிவிட்டன. எனினும் இந்த நிலமை 1970 களில் மாற்றங்களுக்கு உட்படத் தொடங்கியது. 1970 களுக்கு பின்னர் ஈழத்து திரைப்படத் துறை புதிய திசை வழி நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

Views: 643