நரியானார்

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.com



Banner

அன்றைய காலை பொழுது வழமை போல தான் புலர்ந்தது. சொட்டிக் கொண்டிக்கும் பனித்துளிகளை ஊடறுத்துக் கொண்டு கதிரவன் உதித்துக் கொண்டிருந்தான் இலைகளில் சொட்டிய நீர்த்துளிகள் அவனின் ஒளிக்கற்றைகளை சிறைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தது. சில்வண்டுகளும் பறவைகளும் அவற்றின் இருப்பை குரலொலி மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. ஆக அந்த நிமிடம் எவ்வித மாறுதல்களும் இன்றி இயல்பாகவே இருந்தது. ஆனால் இவற்றில் எதிலும் ஒட்டிக் கொள்ளாது இருகண்கள் சோகத்தில்  நிறைந்து காணப்பட்டது.

'சோமா' இந்த காட்டின் நரிகளின் தலைவன். இங்கு தான் நரிகள், பல தலைமுறையாக தலைமுறையாக வசித்து வருகின்றன. சுருக்கமாக சொன்னால் நரிகளின் பிறப்பிடமே இந்த காடு எனலாம். நரிகளின் சுகதுக்கங்கள், அவற்றின் வளர்ச்சி, நம்பமுடியாத அதிசயங்கள் அனைத்தும் இங்கு தான் இடம் பெற்றது. இன்றும் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வு இடம் பெறலாம் யாருக்கு தெரியும். சோமாவின் கண்கள் மட்டுமல்ல அங்கிருந்த அனைத்து நரிகளின் கண்களும் சோகத்தையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அனைத்து முயற்சிகளிலும் இலக்கை அடையமுடியவில்லை எனில் சோகம் யாருக்கு தான் ஏற்படாது. விரத்தியின் விளிம்பை எட்டிப்பிடிக்கும் ஓர் நெருக்கடியான சூழலில் அவை இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் வெறுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. சோமா மெதுவாக எழுந்தான் குளிர்ந்த காற்றை உள்ளெடுத்து நீண்ட மூச்சை வெளியே விட்டான். 

'கவலைப்படதேங்கே தீர்வு கிடைச்சிடும்' என்றான் அவன் குரலில் நம்பிக்கையை இல்லை என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது. 
'இல்லை சோமா எத்தினை நாள் தான் உந்த ஊகங்களை நம்பிக் கொண்டிக்கிறது. எங்களுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாக வேணும்' என வயது முதிர்ந்த ஒரு நரி கூறி நீட்டிய வாலை சுருட்டி வைத்துக் கொண்டது. 

'எத்தினை காலம் தான் இந்த அரிகண்டங்களோடை கிடக்கிறது. என்ரை அப்பன்ரை காலத்திலும் இப்பிடி தான் அவர்ரை அப்பன்ரை காலத்திலும் இப்படிதான்' சலிப்பு நிறைந்த வார்த்தைகள் இப்போது வெளிவர தொடங்கின.
 
'உன்னை நம்பி தான் எங்கடை எல்லா பித்தலாட்டங்களையும் விட்டுட்டு நாங்கள் இஞ்சை வந்து கிடக்கிறம். நீ என்னடா எண்ட எப்ப பாத்தாலும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லுறாய்பா. எப்ப தான் நாங்கள் நினைக்கிறது நடக்கும்?' தமது நியாயக் கருத்துக்களால் சோமாவை ஏனைய நரிகள் நெரிக்கத் தொடங்கின. மிகவும் மனமுடைந்து போனான் சோமா.

'சீ நான் என்ரை கூட்டம் என்ரை இனம் எண்டு எவ்வளவு கஸ்ரபட்டன். எத்தினை முயற்சி, எத்தினை பரிசோதனை ஏதோ எல்லாம் என்னாலை கெட்டு போனதாய் கதைக்க எப்பிடி முடியுது? இதுக்கு பேசாமல் எங்காயாவது கண்காண தேசத்துக்கு சன்னியாசியாய் போயிருக்கலாம்' என தனக்குள் எண்ணிக் கொண்டான். சன்யாசம் என்றதும் தான் சோமாவுக்கு மின்னலடித்தது போல ஒரு விடயம் பிடிபட்டது. வரலாறுகள் அனைத்தும் இருத்தலை பற்றிக் குறிப்பிடுகின்றன. அதிலும் தவம் இருத்தல் என்பது கூடுதல் சிறப்பு  தவத்தின் வலிமை பற்றி உதாரணங்கள் அதிகம். மனமெங்கும் தெளிவு கொண்டு தவமிருத்தல் பற்றி ஏனைய நரிகளுக்கு தெரிவித்தான். 

'உனக்கு பைத்தியம்'
'உன்னை எல்லாம் எங்கெடு தலைவன் எண்டு சொல்லுறது எண்கட விதி'
"மண்டை கழண்டதுகளோடை வாழுறது தான் இப்ப டிசைன் போல"
.இப்பிடி பல விமர்சனம் எழுந்த போதும் தவமிருப்பது நிரந்தர தீர்வை பெற்று தராவிடிலும் மனஅமைதியை தரும் என அனைத்து நரிகளுக்கும் தெரிந்திருந்தது. சரி தவமிருப்பது என்று முடிவாகிவிட்டது. யாரை நோக்கி தவமிருப்பது என அடுத்த விவாதம் எழுந்தது. வரலாறுகள் புரட்டிப்பார்க்கப்பட்டதன் விளைவாக ஐயனை நோக்கி தவம் இருப்பது என்ற முடிவை அனைத்து நரிகளும் ஏகமனதாக முடிவு எடுத்தன.
தவமிருக்கும் நாளும் நேரமும் முடிவெடுக்கப்பட்டது. அசையாமல் கண்ணை அசையாமல் கண்ணை மூடி ஒரு இடத்தில் அமர்வது என்பது எளிதான காரியம் அல்ல என அனைத்து நரிகளும் அறிந்திருந்தன. எனினும் இங்கு யாரோனும் அதிகளவில் தவத்தில் ஈடுபட்டு அதிக பலனை பெற்றால் கொண்ட கொள்கைக்கு கேடு வரும் என கருதி ஒரு கயிற்றால் தம்மை பிணைத்துக் கொண்டு தவம் செய்வது என் முடிவெடுத்தன.

மறுநாள் அதிகாலையில் தவம் தொடங்கியது. கண்முன் கண்ட குட்டை குளங்களில் எல்லாம் குளித்து தம்மை சுத்தப்படுத்திய படி அனைத்து நரிகளும் கூடியிருந்தன. நீண்ட உறுதியான கயிற்றினால் அனைத்து நரிகளின் வாலும் கட்டப்பட்டு ஓரிடத்தில் அமர்ந்து தவத்தை தொடங்கின. அனைத்து நரிகளும் ஆரம்பத்தில் கண்ணை மூடிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டன. அடிக்கடி கண்களை திறந்து எந்த நரி கண்களை மூடியிருக்கிறது என நோட்டம் விட்டபடியே இருந்தன. இடையிடையே தமது வாலைதிரும்பி பார்க்க மறக்கவும் இல்லை. ஆனால் இவை அனைத்தும் சில மணித்துளிகளே இடம்பெற்றது. பின்னர் நரிகள் அனைத்தும் தவத்திற்கு தம்மை அர்ப்பணிக்க தொடங்கின. கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தன. ஆரம்பத்தில் தம்மை பிணைத்திருந்த கயிறுகளை இப்போது காணவில்லை. அருகில் இருந்த ஒலிகள் எதுவும் காதை வந்தடையவில்லை. சில்லென்று குளிர்ந்த காற்றும் உடலை ஒன்றும் செய்யவில்லை. எந்த நரி கண்ணை மூடி தவத்தில் இருக்கிறது என நோட்டம் விடும் எண்ணமும் இருக்கவில்லை. அனைத்து நரிகளுக்கும் ஒரே சிந்தனை, ஒரே நோக்கம் அது தான் அவர்களது தீர்வு. தீர்வை நோக்கியே அவர்களது சிந்தனை பயணித்து கொண்டிருந்தது. 

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. பல கோடி வருடங்கள் நடக்காத அந்த அதிசயம். காடு மயன அமைதி கொண்டிருந்தது. மெல்லிய சுகந்தம் மெல்ல மெல்ல வீச சங்கொலி அளவோடு இசைக்க பொன்ளொளி வீச வருவார் என காத்திருந்த ஐயன்  தீடீர் என வந்தார். அதிர்வில் கண் விழித்த அனைத்து நரிகளும் முன்னிரு கால்களை தூக்கி கூப்பியடிபடி ஐயனை தொழுது ஆனந்த கண்ணீர் வடித்தன. ஐயனின் கண்கள் ஆனத்தத்தால் நிறைந்திருந்தது ஆழ்ந்த தெய்வீக புன்னகையை வெளிப்படுத்தியடி ஐயன் அங்கு நின்றிருந்தார். உண்மையில் நரிகளின் தவத்தில் அவர் மகிழ்திருந்தார். அண்மைக்காலமாக யாரும் ஐயனை நோக்கி தவம் இருந்தது இல்லை இது கூட அவரின் மகிழ்வுக்கும் வரவுக்கும் காரணமாக இருக்கலாம். பார்வை எங்கும் அன்பை குழைத்து ஒவ்வொரு நரியாக ஐயன் அளவெடுத்துக் கொண்டிருந்தார். கூப்பிய கால்களை தாழ இறக்கியபடி நரிகள் ஐயனை வரவேற்றன. வரவேற்பில் மகிந்த ஐயன் 'அனைவரும் நலம் தானே' என வழமைபோல ஆரம்பித்தார். ஒரு நிமிட அமைதி அதை தொடர்ந்து ஐயனின் கேள்விக்கு நரிகள் கதற தொடங்கின. 
'ஐயனே எங்கடை குள்ளமான இந்த உருவத்தை பார்த்து எல்லாரும் சிரிக்கினம். இது எவ்வளவு அவமானம் இது' என்று கண்ணீர் விட்டது குட்டி நரி.
'இந்த வயதான காலத்தில் இந்த பாழப் போன வாலை வைச்சுக் கொண்டு என்னால் நடக்கவே முடியயேல்லை எங்காச்சும் ஆத்திலையோ கடலிலையோ விழுந்து செத்து போயிடலமோ எண்டு அடிக்கடி நினைக்கிறன்' என்று முதுமை ஒன்று கூறி ஓய்தது. ஐயனுக்கு கண் கலங்கி விட்டது. கொஞ்சமும் தாமதிக்காது ஒரு நரி அவ்ஊஊஊஊஊஊஊ என ஊளையிட்டது ஐயனின் செவிப்பறை அதிர தொடங்கியது. கண்கள் மேலே செருகி மயக்கத்தின் வாசல் கதவை அவர் தட்டும் போது ஊளைச் சத்தம் நின்றது. பெருமூச்சு விட்ட இடைவெளியில் அவர் காலடியில் அனைத்து நரிகளும் நெடுஞ்சாணாகா விழுந்தன. ஐயனுக்கு அவர்களின் பிரச்சனை என்ன என உணரும் முன்பே மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என அவை ஓயாமல் சொல்லிக் கொண்டன. 
'சரி சரி மாற்றம் வேண்டும் தான் எனக்கும் புரிகிறது. அடுத்தவரை கேலிசெய்யாத மனத்தையும் உங்கள் உடலை புரிந்து கொள்ளும் திறனையும் முதுமையை வெற்றி கொள்ளும் மனத்திடத்தையும் நானே இங்கிருந்து உங்களுக்கு கற்றுத் தருகிறேன். அதன் பின் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் உங்களிடம் ஏற்படும். மகிழ்ச்சி தானே' என பெருமை பொங்க கேட்டார். 
'அது எல்லாம் தேவை இல்லை இப்ப எங்களுக்கு' முகத்தில் அடிப்பது போல அங்கிருந்த நரி ஒன்று கூறி அமர்ந்தது. 
'எங்களுக்கு இருகிற பிரச்சனைக்கு மாற்றத்தை எங்களிட்டை இருந்து தொடங்குங்கே அதை விட்டுட்டு படிப்பிக்கிறன் எண்டு ஏன் மினக்கிட வேணும்?' 
'ஓம் ஓம் அதுவும் சரிதானே கையில வெண்ணை இருக்க ஏன் நீங்கள் கடய வெளிக்கிடுறியள்'
'எனக்கு நீங்கள் சொல்வது ஏதும் புரியவில்லையே' என அப்பாவியாய் கேட்டார் ஐயன்
'எல்லாம் தெளிவாகச் சொல்லுறன்' என்று கூறிக் கொண்டு சோமா ஐயனுக்கு அருகில் வந்தான். 'எனக்கு எதையும் சுருக்கமாத் தான் சொல்லி பழக்கம், எங்கட உயரத்தை கொஞ்சம் கூட்டி வாலை கொஞ்சம் அடர்த்தியாக மாத்தி எங்கள் குரலை கம்பீரமாக்கி கட்டுமஸ்த்தான உடம்பாக, பாக்கிற ஆக்களை சும்மா சுட்டி இழுக்கிற போல எங்களை மாற்ற வேண்டும் ஐயா' கோரிக்கை முடிந்தாயிற்று. ஆனால் ஐயனால் சரி வர புரிந்து கொள்ள முடியவில்லை. கண்களால் காட்டிக் கொடுத்து விட்டார். 
'எங்களை நீங்கள் பரிகளாக மாத்த வேணும் சுவாமி' 
ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. இப்போது தான் ஐயனுக்கு கொஞ்சம் புரிந்தது. ஐயனுக்கே சிரிப்பு அடக்க முடியவில்லை. விழுந்து புரண்டு புரண்டு சிரித்தார். ' வேடிக்கை வேண்டாம் வேறு ஏதாவது கேளுங்கள்.'
'நாங்கள் கேக்கிறது இது தான். இதை பகிடியா பாக்காதோங்கோ' என்றான் சோமா. சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்ட ஐயன், 
'சரி நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டாலும் உங்களை பரிகளாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் இல்லையே' என்றார் ஐயன் இறுக்கமாக.
'உதாரணம் இருக்கு அதுவும் வரலாற்றில இருக்கு சுவாமி, அண்டைக்கு ஆவணி மூல நாளில எங்கடை பாட்டன்மாரை நீங்கள் தான் மாத்தினியள். ஆக மாற்றம் சாத்தியம்.' இப்போது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஐயனை ஆட்கொண்டது.
'ஹம் உண்மை தான் பரிகளாக மாற்றப்பட்ட அனைவரும் பின் நரிகளாக மாறினர். அந்த அவமானத்தை விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை இதை ஏன் மறுக்கின்றீர்கள்.' ஏன கூறி வேகமாக எழுந்தார். 'அது மரபணு குறைபாடு சுவாமி இப்ப எங்களிட்டை அது எல்லாம் இல்லை, எங்கடை தவத்தாலை உங்களையே வரவைக்க ஏலம் எங்கடை பலம் உங்களுக்கு தெரியுது தானே. ஏங்களுக்கு மாற்றம் வேணும். நாங்கள் எல்லாரும் பரிகளாக மாறவேணும்' இந்த குரல் காடு எங்கும் ஓங்கி ஒலித்தது.
ஒலித்த குரல் அடங்குவதற்குள் ஐயன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். குறுக்கும் நெடுக்குமாக மிக வேகமாக நடந்து ஒரு மரத்தின் கீழ் நிஸ்டையில் அமர்ந்தார்.
அனைத்து நரிகளும் ஒன்றாக கூடின. கிடைத்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்தன. சோமா அனைவரையும் வழி நடத்திக் கொண்டிருந்தான். ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஒப்பனை பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டது. மிக கச்சிதமாக யாரும் அடையாளப்படுத்த முடியாத அளவுக்கு ஐயனுக்கு ஒப்பனை மேற்கொள்ளப்பட்டது. 
காட்டின் அனைத்து மூலை முடுக்குகள் எங்கும் 'அண்மைக்கால ஆய்வுகள் ஐயன் நரிகளின் பரம்பரையை சார்ந்தவர் என ஆதாரபூர்வமாக தெளிவு படுத்துகின்றது என்ற செய்தி நரி முகமாக மாற்றப்பட்ட ஐயனின் புகைப் படத்துடன் இடம் பெற்றன. 
Views: 530