இரா. சடகோபன் அவர்களின் 'கண்டிச் சீமையிலே'- ஒரு விமர்சனப் பார்வை

எழுத்தாளர் : தயானி விஜயகுமார்மின்னஞ்சல் முகவரி: dayani3vijayakumar@gmail.comBanner

ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த கால வரலாற்று ஆவணங்கள் மற்றும் நூல்களின்  மூலம் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது. இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்த அந்நியர்களில் பிரித்தானியர்களாலே இலங்கையின் அரசியல், பொருளாதார மட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்ய முடிந்தது. குறிப்பாக, இராஜகாரிய முறையை இல்லாதொழித்தல், பெருந்தோட்ட பொருளாதார முறையை அறிமுகம் செய்தல், ஜனநாயக நிர்வாகத்திற்குட்பட்ட ஆட்சியை அறிமுகம் செய்தல் மற்றும்  ஆங்கிலக் கல்வி அறிமுகம் போன்ற பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.
அதன் அடிப்படையில் பிரித்தானியர்களால் இலங்கையில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாக கோப்பிப் பானப்பயிர்ச்செய்கை காணப்படுகின்றது. கோப்பி பானபயிர்ச்செய்கை சுமார் 70 வருடங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கிப்பிடித்திருந்தாலும் ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ் (Hemilia Vestarix) எனும் நோயினால் கோப்பிப் பயிர்ச் செய்கை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான அத்திவாரம் இடப்பட்டது. 1833-1893 வரையான காலப்பகுதியில் கோப்பிப் பயிர்செய்கையின் மூலம் பிரித்தானிய காலனித்துவ வாதிகள் அதிக இலாபத்தினை சம்பாதித்து கொண்டதோடு இலங்கையில் புதியதொரு சமூக அமைப்பினரை இணைத்துவிட்டு சென்றனர். அவர்களே இந்திய வம்சாவழித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இந்தியவம்சாவழி மலையகத் தமிழர்கள், மலபார் வாசிகள் (கோப்பிக் காலத்தில்) என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
70 வருடகாலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்திவிட்ட கோப்பித் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை துன்பங்களின் கேடயமாக காணப்பட்டதுடன் அடிப்படை உரிமைகளைச் கூட அனுபவிக்க முடியாத அடிமை நிலையிலே வாழ்ந்து மாண்டனர். இன்றும் இந்நிலை தொடர்கின்றது. மனிதர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் இவர்களை இணைக்காது ஓர் இயந்திரத்திற்கு ஒப்பாக அக்கால காலனித்துவ வாதிகளால் நடாத்தப்பட்டனர். பிறந்தோம், உண்டோம், வாழ்ந்தோம், மடிந்தோம் எனும் வகையில் குறுகிய வட்டத்திற்கு வாழ்ந்த இம்மக்களை காலனித்துவ வாதிகள் தனது சாவிக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளாக இயக்கி வந்தனர். உழைப்புக்குச் சொந்தக்காரர்களாக காணப்பட்ட இம்மக்கள் உடைமை எதனையும் கொள்ளாத அடிமைகளாகவே வாழ்ந்தனர். ஆண்டான்களை ஆண்டவனாக எண்ணும் அளவுக்கு அடிமைகளாக வாழ்ந்தனர். இவ்வாறு சொல்லெண்ணாத் துன்பங்களை கூடையில் சுமந்து கொண்டு வாழ்ந்த மக்களின் அவலங்களை சித்தரிப்பதோடு, கோப்பிக் காலத்தில் அரசியல், பொருளாதார, சமூக நிலை மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு காணப்பட்டது என்பதை அறிவியல் அடிப்படையிலும் சமூகவியல் அடிப்படையிலும் சித்தரிக்கும் ஓர் ஆவணத்தொகுப்பாக இரா. சடகோபன் அவர்களின் 'கண்டிச் சீமையிலே'  எனும் நூல் காணப்படுகின்றது. 
'கண்டிச் சீமையிலே' நூலின் ஆசிரியர் இரா. சடகோபன் அவர்கள் கசந்த கோப்பி( மொழி பெயர்ப்பு நாவல்), உழைப்பால் உயர்ந்தவர்கள் (மொழிபெயர்ப்பு நாவல்), வசந்தங்களும் வசீகரங்களும் (கவிதைத் தொகுப்பு), ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் (சிறுவர் நூல்) என்பவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் ஒரு சட்டத்தரணியாகவும்,பத்திரிகையாசிரியராகவும், மொழிப்பெயர்ப்பாளராகவும், எழுத்தாளராகவும்  கடமையாற்றிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
'கண்டிச் சீமையிலே' எனும் நூலானது கோப்பிக் காலம் தொடர்பில் முறைசார் ஆய்வு நூலொன்று காணப்படாத இடைவெளியை நிரப்பியுள்ளது. இத்துடன் இந்நூலை ஆய்வு நூல் எனும் வகைப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு மாத்திரம் ஆராய முடியாது. காரணம் ஓர் ஆய்வு முறையியலில் கடைப்பிடிக்க அவசியமற்ற விடயங்கள் கூட இந்நூலில உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆய்வு நூலானது உணர்வு பூர்வமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை புறக்கணிக்கும்.  ஆனால் 'கண்டிச் சீமையிலே' மனித உணர்வுகளுக்கும் அவர்தம் உரிமைகளுக்கும் குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். சமூக உணர்வுகள் நூல் முழுவதும் இழையோடியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள கோப்பிக் கால ஆவண புகைப்படங்கள் கோப்பிக் கால தொழிலாளர்கள், ஆட்சியாளர்கள், அக்கால மக்களின் வாழ்வியல், கலாசார முறைகள் போன்றவற்;றை விளங்கிக் கொள்ள ஆதாரமாக உள்ளது. வாசிக்கவே தெரியாத ஒருவனால் கூட இவ்வாவண படங்களின் உதவியின் மூலம் கோப்பிக் காலத்தின் வரலாறை ஓரளவேனும் தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். இந்நூல் எழுதுவதற்கு திரப்பட்ட புள்ளித்தரவுகள், அட்டவணைகள், சம்பவ திரட்டுக்கள் என்பவற்றுக்கான ஆதாரங்கள் அவ்வவ்விடங்களிலே இணைக்கப்பட்டுள்ளமையானது நூலின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதோடு மட்டுமல்லாது ஒரு தகவல்களஞ்சியமாகவும் இந்நூல் காணப்படுகின்றது. 
கோப்பிப் பயிர்செய்கையானது 1823ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. ஹென்றி பேர்ட் (ர்நனெசல டீசைன) பிரிட்டிஷ் இராணியின் படைகளின் உயர் கட்டளை அதிகாரியாலும் அக்காலத்தில் ஆளுநராக இருந்த  எட்வாட் பானெஸ் (Edward Banes) என்பராலும் கம்பளைக்கு அருகிலுள்ள சிங்ஹபிட்டிய என்ற இடத்திலே முதலாவது கோப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இக்கோப்பித் தோட்டத்தில் கூலியாட்களாக வேலை செய்ய இலங்கையில் வாழ்ந்த சிங்களவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள்  உடன்படாததன் காரணமான வெளிநாட்டிலிருந்து கூலிகளை வரவழைப்பதற்கான முயற்சிகள் பிரித்தானியர்களால் மேற்கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் சீனத்தொழிலாளர்களை வரவழைப்பதற்கான முஷ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டாலும் சீனர்களை வரவழைத்தால் அதிகளவு பணத்தினை விரயம் செய்ய நேரிடும் , சீனர்களின் வாழ்க்கைச் செலவு அதிகம், சீனர்கள் குடும்பத்துடன் வர மறுத்தனர் போன்ற பல காரணிகளால் சீனர்களை வரவழைப்பதில் தயக்கம் காட்டினர். இதில் ஆசிரியர் விசேடமாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றார். அதாவது 'மூன்று இந்தியத் தமிழர்கள் உண்ணக்கூடிய உணவை ஒரு சீனத்தொழிலாளி உண்ணக்கூடும்' எனவே சீனர்களை வரவழைத்தால் செலவதிகம் ஏற்படும். குறைந்த முதலில் கூடிய இலாபத்தினை பெறுவது என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் சிறப்பு பண்பாகும். அவ்வகையில் குறைந்த கூலியில் அதிகம் உழைக்கக்கூடிய தென்னிந்திய தொழிலாளர்களை வரவழைப்பதில் விருப்பம் காட்டினர். உரிமை கேட்கும் மனிதர்களை பூர்ஷ்வா வர்க்கத்திற்கு பிடிக்காது. அடங்கி ஒடுங்கி வாழும் அடிமைகளைத் தான் பிடிக்கும். சொன்னதை மட்டும் செய்யும்; தலையாட்டி பொம்மையாகளாக  இந்திய தமிழர்கள் இருப்பார்கள் என்பதை அறிந்தும், அக்காலத்தில் மெட்ராஸ் மாநிலத்தில் பரவிய பஞ்சம், வரட்சி, தொழிலாளர்களின் கடன் தொல்லை என்பவற்றை காரணமாக பயன்படுத்தி தென்னிந்தியத் தமிழர்களைக் கூலிகளாக இறக்குமதி செய்தனர். மலிவான விலையில் கிடைக்கக்கூடிய அரிசி, சுகாதாரமற்ற குடியிருப்பு, அடிமைமயப்பட்ட வாழ்க்கை என்ற ரீதியில் வாழ்க்கை நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இம்மக்கள் வாழ்ந்தனர். 

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் வரும் வழியில் அனுபவித்த சொல்லெண்ணா துயரங்களை சொற்களுக்குள் சொல்லிவிட நூலாசிரியர் முனைந்து தான் சொல்வந்த விடயத்தை தெளிவாக சொல்லி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். அவ்வகையில் 'டின்னில் அடைத்த புழுக்களைப் போல் கப்பலில் வந்த தொழிலாளர்கள்' என இலங்கையில் புகழ் பெற்ற அமெரிக்க மதவாதியான கர்னல் ஹென்றி ஸ்டில் ஒல்கொட் (ர கூறியுள்ளதாக ஆசிரியர் கூறுகின்றார். அவ்வாறு கப்பல், படகுகளில் புழுக்களாக வந்த தொழிலாளர்கள் படகுகள் விபத்துக்குள்ளாகி கண்டிச்சீமைக்கு வராமலே கடலுக்கு இரையாகியதையும், கொலரா நோயின் கொடுமைக்கு இழக்காகி மாண்டுபோன வரலாறுகளையும் சொற்களின் மூலம் உயிர்ப்பித்து காட்டியுள்ளார் நூலாசிரியர். தொழிலாளர்களை ஏற்றிவரும் படகுகளில் ஒரு படகில் பயணிக்க வேண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் சட்டங்கள் கொண்டுவந்தபோதிலும் அச்சட்டங்கள் ஏடுகளில் மட்டுமே வாழ்ந்தாக பல இடங்களில் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசம் கடந்து தேசம் வந்த மக்களுக்கு கண்டி கடுங்குளிர் ஒத்துக்கொள்ளாமல் கந்தல் ஆடைக்குள் குளிரை கட்டுப்படுத்த பட்ட அவஸ்தைகளையும், மாட்டுக்கொட்டகைக்குள் குடித்தனம் நடாத்திய தொழிலாளர்களின் இரத்தத்தை பிரித்தானி துரைகளோடு அட்டையும் உறிஞ்சுக்குடித்த அவலத்தையும், தயவு தாட்சணையின்றி விலங்குகளைப் போல் நடாத்திய பொலிஸ்காரரர்களின் அடாவடித்தனத்தினையும் ஆசிரியர் உணர்வுபூர்வமாக விளக்கியுள்ளார்.
சட்டங்கள் கூட எளியோரை சுரண்டும் போக்கையே கொண்டுள்ளது. இதன் பொருள் வலியோர் சட்டங்களில் காணப்படும் ஓட்டைகளை கண்டுபிடித்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முயல்கின்றனர். ஆனால் எளியோர் தெரிந்தோ தெரியாமலோ சட்டத்தின் பிடிக்குள் உடும்பாய் மாட்டிக்கொள்கின்றனர். 1831-1837 காலத்தில் ஆளுநராக பதவி வகித்த சேர் றொபர்ட் வில்மட் ஹோர்ட்டன் (Sir Robert Willomt Harton) கோப்பிக் காலத்தில் ஆநிரைகளை மேய்ப்பதைப் போலவே துரைமார்களும் கங்காணிகளும் தொழிலாளர்களை மேய்த்துக்கொண்டிருந்தனர். தன் மனநிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அவர்களை கசக்கிப்பிழிந்தனர். ஒவ்வொரு தோட்டத்துரைகளும் முடிசூடா மன்னர்களாக நடந்துக்கொண்டனர் என்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அரச உத்தியோகத்தர்களும் கூட தொழிலாளர்களை அடக்கியாண்டனர் என்பதை வில்லியம் நைட்டன் கூறியுள்ளதாக ஆசிரியர் கூறுகின்றார். பில்கிங்டன் எனும் துரையை எதிர்த்து கதைத்த கருப்பன் எனும் தொழிலாளியை சப்பாத்துக்கால்களுடன் உதைத்து, நிர்வாணப்படுத்தி, அந்தரங்க உறுப்புக்களை தாக்கும் போது கருப்பனுக்கு மலமும் சிறுநீரும் போய்விட்டதாகவும், அதன் பின்னர் பங்களாவை கருப்பன் அசுத்தப்படுத்திவிட்டான் என்று துரை உதைத்த உதையின் கருப்பன் இறந்தே போய்விட்ட சம்பவத்தையும் ஆசிரியர் எடுத்துக்காட்டி துரைமாரின்  அடாவடித்தனத்தை விளக்கிக்கூறியுள்ளார். அத்துடன் கங்காணியின் அடாவடித்தனம் பற்றியும் 'கண்டிச் சீமையிலே' நூலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கங்காணி நினைத்தால் மாத்திரமே அன்றைய நாளுக்குரிய கூலியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததால் கங்காணிக்கும் அஞ்சியே தொழிலாளர்கள் வாழ்ந்தனர் என கூறப்பட்டுள்ளது. ராமசாமி என்ற கங்காணி ஆர்.பி. டைலர் எனும் துரையிடம் ' அவனை நல்லா ஒதையுங்க தொர எது வந்தாலும் பார்த்துக்கலாம். ஒங்க மகிழ்ச்சி தானே எங்க சந்தோசம்' என கூறியுள்ளதையும் இணைத்து கங்காணியின் அடாவடித்தனத்தினை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.    சில இடங்களில் கங்காணிகளுக்கு அஞ்சி துரைமார்கள்  இருந்ததையும் நூலாசிரியர் கூற மறக்கவில்லை. 
துரைமார்கள் எல்லோரும் காலனித்துவ வாதிகளாகவும் தொழிலாளர் நலன் பற்றி சிந்திக்காதவர்களாகவும் காணப்பட்டாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில துரைமார்கள் இக்காலத்தில் இருக்கத்தான் செய்தார்கள் என்பதையும் ஆசிரியர் இணைத்துள்ளார். குறிப்பாக ஜேம்ஸ் டைலர் என்ற துரை மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்பதால் அவரை 'சாமி துரை' என்று தொழிலாளர்கள் அழைத்தனர். இவர் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகக்கூடியவர்களாக காணப்பட்டதுடன் மாத்திரமின்றி  சடுகுடு, கிளித்தட்டு போன்ற விளையாட்டுகளை ஆடும்படி சொல்லி ரசித்துக்கொண்டிருப்பார். சார்ஸ் எலியட் என்ற சத்திரசிகிச்சை நிபுணரும் தொழிலாளர்கள் மீது கரிசணைகாட்டுபவராகஇருந்தார் என்று கூறி இரும்பு மனம் படைத்த இதயங்களிடையேயும் சில ஈரம் கசியக்கூடிய இதயங்கள் இருக்கத்தான் செய்தன என்ற விடயத்தை எடுத்துக்காட்டியுள்ளார். 
மூடபழக்கவழக்கங்கள் என்பது மலையக சமூகத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல. தெரிந்தோ தெரியாமலோ மூடநம்பிக்கைகளை வாழ்கையோடு கோர்த்து பயணிக்கும் நிலை பெரும்பாலான சமூகங்களிலும் காணப்படுகின்றன. விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்திலே மக்கள் மூடநம்பிக்கைகளை நம்புகின்றார்கள் என்றால் கோப்பிக்காலத்தில் மூடநம்பிக்கையில் மக்கள் கண்டுண்டு வாழ்ந்தது ஆச்சரியம் தரக்கூடிய விடயமல்ல. அவ்வகையில் கொலரா நோய் என்பது கோப்பிக்காலத்தில் மிகக்கொடூரமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் இந்நோய் பிசாசின் கைங்கரியம் எனவும் இதனை இந்தியாவிலிருந்து ஏவிவிட்டவர்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டால் தீர்ந்துவிடும் என்றும் போயோட்டுவதற்கான சடங்குகளை செய்தனர் என்றும் டாக்டர் சாமுவேல் பிஸ்க் கிரின் தெரிவித்தாக நூலாசிரியர் கூறுகின்றார். இன்றும் கூட பேயோட்டுதல், உடுக்கடித்தல், நேர்த்திகடன்வைத்தல், மிருகபலிகொடுத்தல் எனும் வழக்குகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அம்மை நோய் ஏற்பட்டால் வைத்தியசாலைக்குக் கூட்டிச் செல்லாமல் வீட்டிலே வைத்து மாரியம்மன் தாலாட்டுப்பாடுதல், மஞ்சள் நீர் ஊற்றுதல், வேப்பிலையில் படுக்க வைத்தல் எனும்  எனும் அடிப்படையிலே நோயை தீர்க்கும் வழக்கு மலையகத்தில் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
மலையகத்தின்  புகழ் புத்த மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் உதயமானது கோப்பிக்காலத்திலே உருவானது. குறிப்பாக மன்னாரிலிருந்து குருநாகல் வழியாக கண்டிக்கு வரும் வழியில் மாத்தளையில் தடுப்பு முகாம்களில் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டதாகவும் அவ்விடத்திற்கு சற்றுத்தொலைவில் வில்வமரம் ஒன்று இருந்தது. அவ்வில்வமரத்தின் அடியில் கல்லொன்றை வைத்து மாரியம்மனாக வணங்கினார்கள். அவ்வாறு அவர்கள் வழிபட்ட அந்நடுகல் தெய்வமே இன்று இலங்கையில் பிரசித்துப்பெற்ற ஆலயமாக மாறியுள்ளது என 'கண்டிச் சீமையிலே' நூலில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கலாசார வரலாற்று நியழ்வுகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது.  இதனை அடிப்படையாக வைத்துப்பார்க்கும் போது தற்போது மலையகத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான ஆலயங்கள் கூட  இவ்வாறான நடுகல் தெய்வ வழிபாட்டு முறையின் மூலமே தோன்றியிருக்கக் கூடும் என்ற ஊகம் எழுகின்றது.
கோப்பித் தோட்ட தொழிலாளர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளம் காண்பது என்பது பிரித்தானிய துரைகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. அவர்களின் பார்வைக்கு தொழிலாளர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்ததன் காரணமாக தனி நபரை அடையாளம் காணமுடியாமல் திண்டாடினர். இதன் காரணமாக ஆண்கள் அனைவரையும் ராமசாமி எனவும் கருப்பன் எனவும்  பெண்கள் அனைவரையும் மீனாட்சி என்றும் கூப்பிட்டதாக டீவைவநச டீநசசல நூலின் ஆசிரியர் வில்சன் கிறிஸ்டியன் கூறியதாக  'கண்டிச் சீமையிலே' நூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய தேசத்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருவதை பார்க்கும் பொதுவாக 'வெள்ளையர்கள்' என்ற சொல்லையே நாம் உச்சரிக்கின்றோம். இவர்கள் இந்த தேசத்திற்குரியவர்கள் என்பதை அடையாளம் காண்பது கடினமாக தோன்றும். அது போல பிரித்தானியர்களுக்கும் இருந்திருக்கலாம். ஆனாலும் இவ்விடயம் பல கேள்விகளை எழுப்புகின்றது. குறிப்பாக துரை ஒருவரை ராமசாமி என அழைத்தால் தன்னைத் தான் அழைக்கிறார் என எல்லோரும் ஓடிவரக்கூடும். குறிப்பிட்ட ஒரு நபரை அழைப்பதற்கு எவ்வாறான முறைகளை பின்பற்றினர் என்று சிந்திக்க தோன்றுகின்றது. ஒருவேளை உடலியல் தோற்றத்தை குறியீடாக கொண்டோ, அருகில் இருந்தால் சுட்டிக்காட்டியோ அழைத்திருக்க கூடும். பிற்பட்ட காலங்களில் தொழிலாளர்களுடனே துரைமார் இணைந்து கடமையாற்றியதன் காரணமாக தனி நபர்களின்; பெயர்களை அறிந்திருக்க வாய்ப்புகளும் ஏற்பட்டிருகக்கலாம். 
கோப்பிக் காலத்தில் கொலரா நோய் என்பது பெரும் பூதாகரமான பிரச்சினையை எழுப்பிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொற்று நோய் முதலாளி, தொழிலாளி ; பார்ப்பதில்லை என்பதால் தொழிலாளர்களை மாத்திரமின்றி சில பிரித்தானிய அதிகாரிகளையும்  கொன்றது. இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டச் சொந்தக்காரரான  ஹென்றி பேர்ட் , சாமி துரை என அழைக்கப்படும் ஜேம்ஸ் டைலர், அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஹென்றி வார்ட் போன்றோர் கொலரா நோய்க்கு இலக்காகி இறந்தனர். தொழிலாளர்கள் வகைத்தொகையின்றி ஆயிரக்கணக்காக இறந்ததையும் தெளிவாக புள்ளிவிபரங்களுடன் ஆசிரியர் இணைத்துக்கூறியுள்ளார்.
கொலரா நோயிலிருந்து தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கான முறையான சுகாதார வசதிகள் இல்லாத நிலையினையும், கொலரா நோய் மாத்திரமின்றி பாலியல் நோய்களினால் தொழிலாளர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர், அவ்வாறு பாலியல் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், காலனித்துவ வாதிகளால் தொழிலாளர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான விதம் என பல்வேறு கோணங்களில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் 'கண்டிச் சீமையிலே' நூலில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக 50 ஆண்களுக்கு ஒரு பெண், 100 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் காணப்பட்டதால் தொழிலாளர்களின் அந்தரங்க உரிமையை பேண முடியாத அவலம் ஏற்பட்டதோடு மாத்திரமின்றி உண்ண, உடுத்த வழியின்றி குப்பைகளைக் கூட உண்டு வாழ்ந்த அவலத்தை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.  துரைமார்களே வைத்தியர்களாக செயற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள், பயிற்றப்பட்டதா வைத்திய அதிகாரிகளினால் தொழிலாளர்களின் உயிர் காவுகொள்ளப்பட்ட விதம், தொழிலாளர்களின் இறப்பு ஒரு பொருட்டாக காணப்படாத விதம், இறந்த பின் பிணங்கங்கள் கூட நிம்மதியாக உறங்கவில்லை என பல்வேறு பட்ட சமூக அநீதிகளை படம் பிடித்துகாட்டியுள்ளார் நூலாசிரியர்.  
கூலித்தொழிலாளர்கள் என்பதால் காலனித்துவ வாதிகள் கூறும் எல்லாக்கருத்துக்களுக்கும் தலையை ஆட்டுவார்கள் என்ற கண்ணோட்டமே பொதுவாக நோக்கப்பட்டாலும் மதமாற்ற விடயத்தில் தொழிலாளர்கள் இறுக்கமான கொள்கைகளை பின்பற்றியதாக ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். மதம் போதித்த போதகர்களால் மனிதம் போதிக்கப்படாததால் கோப்பிக் காலத்தில் மதமாற்றம் என்பது நடைபெறாத ஒருவிடயமாகவே உள்ளதென நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் தேயிலையின் அறிமுகத்தினை தொடர்ந்தும் தேயிலைக் காலத்தில் ஏற்பட்ட கிறிஸ்த்தவ மதபிரசாரங்களின் போது தொழிலாளர்கள் மதமாற்றத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக தாழ்ந்த சாதியினரே இம்மத மாற்றத்திற்கு அதிகளவு நாட்டம் காட்டினர். இன்றும் கூட மதமாற்றம் என்பது மலையகத்தில் மறைமுகமாக நடைபெற்றுக்கொண்டு வருவதை கட்டுரைகள், ஆய்வுகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 
சாதிப்பிரச்சினை என்பது கோப்பிக்காலத்திலிருந்து மலையகத்தில் இருந்து வருகின்றது என்ற விடயத்தை கண்டிச் சீமையிலே நூல் எடுத்துக்காட்டியுள்ளது. பள்ளர்- 26% பறையர்- 30%, சக்கிலியர்-16% அகம்படியார்- 5% கள்ளர்-5%, மொட்டை வெள்ளாளர்- 3%, ரெட்டியார்-3%  எனவும் ஏனைய சாதிப்பிரிவினர் 2 சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சாதி மாறி திருமணம் முடித்தால் ஒதுக்கி வைக்கும் நிலை காணப்பட்டதோடு மாத்திரமின்றி உயர் சாதியினர் நோய் ஏற்பட்டால் கூட வைத்தியசாலைக்கு செயல் மறுத்துவந்தனர் எனவும் அதற்கு முக்கியமான காரணம் வைத்தியசாலையில் கீழ்  சாதியினரே சமைப்பதால் அவர்கள் உண்ணும் உணவை உண்ணமுடியாது என்பதாகும். இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டி வறுமை நிலையில் இருந்தாலும் கூட தங்களின் வாழ்க்கை நெறிமுறையில்  பிசகாதவர்களாகவே இருந்துள்ளனர் என்பதையும் இணைத்துக்காட்டியுள்ளார். அத்துடன் சீட்டு போடுதல், பண்டமாற்று முறை, சாராய கலாசாரம், சேமிப்பு முறை, பாடசாலைகள் உருவான வரலாறு, லயம் உருவான வரலாறு, கிறிஸ்த்தவ பாதிரிகளின் அடாவடித்தனம், சிறைச்சாலைகளில் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகள் போன்ற பல விடயங்கள் 'கண்டிச் சீமையிலே' நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.   
தொகுத்து நோக்கும் போது 'கண்டிச் சீமையிலே' நூலினை பொதுவானதொரு வகைப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆராய்வதை விட பல்வேறுப்பட்ட பார்வைகளில் இந்நூலை நோக்க முடியும். கோப்பித்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள், அவர்களின் அவர்களின் உரிமை மீறல்கள் பற்றி எழுதப்பட்ட நூலாகவும் காணப்படும் அதேவேளை கோப்பிக் காலம் தொடர்பில் எழுதப்பட்ட வரலாற்று, விஞ்ஞான, ஆவண தொகுப்பாகவும் நோக்கமுடியும். அத்தோடு பல்வேறு நூல்கள், நாவல்கள், பதிவேடுகளிலிருந்து கனிசமானளவு தகவல்களைத் திரட்டி தொகுக்கப்பட்டுள்ளதால் தகவல் களஞ்சியமாகவும், கோப்பிக் காலம் தொடர்பில் பெரும்பாலான தகவல்களை இணைத்துள்ளதால் கோப்பிக் காலம் தொடர்பானதொரு பொது அறிவுப் பெட்டகமாகவும் காணப்படுகின்றது.இனிவரும் காலங்களில் மலையக மக்களின் வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டுமாயின் 'கண்டிச் சீமையிலே' நூலை நகர்த்தி விட்டு வரலாற்றை திருப்பிப் பார்க்க முடியாது எனும் வகையில் இந்நூல் தனக்கானதொரு முத்திரையை பதித்துள்ளது என்றால் மிகையாகாது. ஒரு கட்டிடமோ, கோயிலோ, வீதிகளோ அமைக்கப்பட்டால் அதற்கான கடினமாக உழைத்து வியர்வை சிந்திக் கட்டி வடிவமைத்த காரணகர்த்தாக்களைப் பற்றி சிந்திக்காத நிலை நடைமுறையில் காணப்படுகின்றது. அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதை முடிவுரையில் கவிதையாக ஆசிரியர் இணைத்துள்ளமையானது  பாட்டாளி மக்களின் குரலாகவும் அவர்களை கதாநாயகர்களாகக் கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.  
' தாஜ்மகாலைக் கட்டியது யாரென்று கேட்டேன்?
ஷாஜகான் என்றார்கள்
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது
யாதென்றுக் கேட்டேன்?
ராஜராஜசோழன் என்றார்கள்.
பிரமிட்டைக் கட்டியது யாரென்று கேட்டேன்?
பாரோ என்றார்கள்.
மலையகத்தின் பெருந்தெருக்களையும்
பாலங்களையும் தண்டவாளங்களையும் கட்டியது
யாரென்று கேட்டேன்?
பிரிட்டிஷ்காரன் என்றார்கள்' மூலம்:- கண்டிச் சீமையிலே

Views: 756