திருமண வழக்குரை (இலங்கையில் விவாகரத்துக்கள் தொடர்பான சமூகவியல் பார்வை)

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.comBanner

விவாகரத்துக்கள் அதிகரித்துக் கொண்டு செல்லும் இன்றைய காலத்தில் திருமணத்தின் புனிதத் தன்மையே கெட்டு விடுகின்றது. ஆயிரம் காலத்துப் பயிர் அரை நாளிலேயே முடிந்து விடுகின்ற துர்ப்பாக்கிய நிலை. கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிக்க இலங்கையில் விவாகரத்து வழக்குகள்; தினம் தினம் அதிகரத்துக் கொண்டு செல்வது வேதனைக்குரியதே. 18-25 வயதிற்குள் தான் விவாகரத்துக் கோருவோர் தொகையும் அதிகமாகக் காணப்படுவதாக வழக்காடு மன்றக் கருத்துக் கணிப்புக்கள் செப்புகின்றன. இவர்களைச் சமாளிக்கவே முழு நாளும் தமக்குத் தேவைப்படுவதாக வழக்கறிஞர்கள் கவலை கொள்ளும் அளவுக்கு விவாகரத்து வழக்குகளின் அதிகரிப்பு நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு முன்னேற்றமடைந்து கொண்டு வருகின்றது.

2010ம் ஆண்டு, இலங்கையில் 1000 பேருக்கு 0.15 வீதம் என்ற அடிப்படையில் விவாகரத்துப் பெறுவோர் புள்ளிவிபரம் காணப்பட்டதுடன் அது தற்போது துரிதமாக அதிகரித்து வருவதும் கண்கூடு. அதே ஆண்டு இலங்கையின் சட்டங்கள் தொடர்பாக ரடா ப்பிளிக் மற்றும் கெம்ம தொம்சன் (Tara Blick and  Gemma Thomson) ஆகிய பிரிட்டனின் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஒப்பீட்டளவில் இலங்கையர்களின் விவாகரத்து 1.5 வீதமாகவும் இங்கிலாந்தில் 42 வீதமானதாகக் காணப்படுவதாகவும் பதிவு செய்ததுடன் இலங்கையர்களின் கலாசாரம், குடும்ப உறவை வலுப்படுத்துவதாக அமைவதாகவும் பாராட்டிச் சென்றனர்;. எனினும் அவர்களின் ஆய்வுக்குப் பின்னுள்ள பதினைந்து வருடக் காலப்பகுதியினை எடுத்து நோக்கின் பாரிய சமூகச் சீர்கேடுகளையும், விவாகரத்து வழக்குகளையும் இலங்கையின் குடும்பநல நீதிமன்றங்கள் சந்தித்து வருகின்றன.
ஒரு நாளைக்கு நானூறு விவாகரத்து வழக்குகள் இலங்கையில் பதிவாகுவதாக சமூக சேவைகள் திணைக்களம் 2014ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகளவு விவாகரத்துக்கள் திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளேயே நடைபெறுவதாகவும் அது, வருடாந்தம் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளது. திருமணமாகி 3-5 வருடங்களுக்குள் தமது குலம் தளிர்க்கும் புனிதமான குடும்ப உறவாம் திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவது பெரும்துயரச்; செய்தியாகும். இது ஐந்து வருட ஒப்பந்தத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்மவர்களின் வேலை முறைமைக்கு ஒப்பானதே.
 
இலங்கைத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் 1867ம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம் மற்றும் இவற்றுடன் இணைந்த பொதுச் சட்டம் என்பவற்றின் அடிப்படையில் இலங்கைத் திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களின் விபரங்களைத் திரட்டுகின்றது. மேற்கூறப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் விவாகரத்துப் பெற்றவர்களின் விபரங்களைச் சேகரித்து வருடா வருடம் இத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொதுக் கல்வி ஊடகப் பிரிவு (Public education media unit 2014) இன் கருத்துக் கணிப்பின்படி கொழும்பில் 57 வீதமான திருமணங்கள் விவாகரத்தால் தோல்வியடைந்தவையாகும். கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி போன்ற பின்தங்கிய பகுதிகளிலும் ஏனைய மாகாணங்களிலும் விவாகரத்தின் படிப்படியான அதிகரிப்பைக் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாய்வு கொழும்பு மாவட்டத்தை விவாகரத்தின் மையம் (Divorce hub) என்கின்றது. 

இலங்கைச் சட்டக் கோவையின் 1995ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின்படி பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலார் மட்டுமே சட்டப்படி திருமணம் செய்ய முடியும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதுடன், சமயாசார முறைப்படி பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் திருமணம் செய்வதும் பாரிய குற்றமாகும். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியன் ஒரு வழக்கில் 18 வயதிற்குக் குறைந்த எவ்வகைத் திருமணமும் தேச வழமைச்சட்டம் மற்றும் பொதுத் திருமணக்கட்டளைச் சட்டம் என்பவற்றின் அடிப்படையில் செல்லுபடியற்றது என்றதுடன் அந்தத் திருமணத்தைச் செல்லுபடியற்றதாக்கும் தன்மை சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திற்கே உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார். அதே போன்று குணரட்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்கில் ஷிராணி திலகவர்த்தன 18 வயதிற்குக் குறைந்த பதிவுத் திருமணம் செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அவசரக் கல்யாணம். எதையும் யோசிப்பதில்லை. யாரையும் எதிர்பார்ப்பதில்லை. தாம் நினைத்தது தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து முதிர் பருவம் எய்தியிருப்பவர்களின் ஒரு பேச்சைத் தானும் கேட்பதில்லை. படித்துப் பட்டம் பெற்று விட்டால் அனைத்தும் தமக்கு மட்டுமே தெரியும் என்ற அகம்பாவமும் அதிகாரமும் (empowerment) இருவர் மனங்களிலும் குடி கொண்டுள்ளதனால், காதல் திருமணங்கள் கணப் பொழுதில் அரங்கேறி முடிவுரையினையும் கண்டு விடுகின்றன. தற்காலத்தில் அவசர அவசரமான நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் விவாகரத்துக் கோருவது தான் வேடிக்கை.
 
இலங்கையின் பொதுச்சட்டத்தின் அடிப்படையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் அதே சட்டத்தின் முன் விவாகரத்துப் பெற்றுக் கொள்வதற்குப் போதிய இடவசதி காணப்படுகின்றது. ஆனால் அதற்குச் சில நிபந்தனைகள் காணப்படுகின்றன. இலங்கைத் திருமணச்சட்டம் அவ்வளவு சீக்கிரத்தில் உறவை அறுத்து விட எத்தனிக்கவில்லை என்பது நிதர்சனம். 17ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மக்கள் கூட திருமணப்பிரிப்புத் தொடர்பான சட்டம் இல்லாதவர்களாகவே இருந்தனர். எனினும் கைத்தொழிற்புரட்சியின் பின்னரான காலப்பகுதியில் புத்தொளிர்க்காலம் (enlightenment) எழுச்சி பெறவே தனிமனித சுதந்திரம் முன்னிற்கவும் சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிரித்தானியாவின் திருமண விவாகரத்துச் சட்டம் (Matrimonial Causes Act of 1857 1857)  என்னும்; அடிப்படையில் திருமணப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
சட்டத்தைக் காட்டிலும் அறமும் சமயமுமே அக் காலத்தில் முன்னிலை வகித்தமையினால் அப்போது திருமணப்பிரிவுச்சட்டம் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. எனினும் தொழினுட்ப வளர்ச்சி போன்ற இன்னோரன்ன காரணங்களால் பிற்கால சமூகத்தவர்கள் சட்டத்திற்கே முதன்மையளித்தனர். அதனால் திருமணத்தின் பின்னர் சின்னதாக சண்டை வந்தாலும் விவாகரத்தொன்றே சிறந்த தீர்வென்று எண்ணி நீதிமன்ற கதவுகளைத் திறக்க ஆரம்பித்தனர். இலங்கை, இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சி நாடு என்பதுடன் இலங்கைச் சட்டங்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே சட்டவுருக் கொண்டமையினால் இலங்கையின் சட்டக்கோவையானது திருமணச் சட்டத்துடன் இணைந்து விவாகரத்துச் சட்டங்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

திருமணம் என்பது இரு மனங்கள் ஒரு மனமாக சங்கமிக்கும் புனித நிகழ்வு. எதிர்கால சந்ததியினரை உருவாக்க இவ்வளவு காலமும் தனியாளாக (single) இருந்த ஆணும் பெண்ணும் பிள்ளைகள் பெற்று பேரின்பம் அடைவதற்காக குடும்பம் என்னும் சமூகத்தின் சீரிய அலகினுள் அடியெடுத்து வைக்கும் இன்பமயமான நாளே திருமண நாளாகும். அத்தகைய தேன்கூடு சொல்லிக் கொள்கின்றளவு காரணங்கள் ஏதுமின்றி கண் முன்னே பிரிகின்ற போது தான் அது அவர்களது வாழ்வை மாத்திரமல்ல எதிர்கால சமூகத்தவர்களையே குழி தோண்டிப் புதைக்கும் அற்ப காரியமாக உருமாறி விடுகின்றது. இதனை இலங்கைச் சட்டத்தின் வாயிலாகச் செய்ய முடியும்.  இலங்கையின் திருமணப்பதிவுக் கட்டளைச்சட்டம், பிரிவு 19இன் கீழ் பின்வரும் அடிப்படை விடயங்களைச் சுட்டுகின்றது. 

1. சோரம் போதல் (Adultery) அதாவது கணவன் அல்லது மனைவி தம்முடைய துணையைத் தவிர வேறொருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளல்

2. வன்ம உறவறுப்பு (malicious desertion) அதாவது கணவன் அல்லது மனைவி கொடூரமான நடத்துகைக்கு உட்படுத்துகின்ற போது அதனைச் சகித்துக் கொண்டு வாழ விரும்பாத கணவன் அல்லது மனைவி வழக்குத் தாக்கல் செய்ய முடியும். இதில் துன்பத்தை விளைவிக்கும் துணையிடமிருந்து தப்புவதற்கு அதனைத் தாங்காத மற்றைய அப்பாவித் துணை இல்லத்தை விட்டு வெளியேறல் சாதாரண உறவறுப்பு (simple malicious desertion) ஆகும். பாதிக்கப்பட்ட தரப்பு திருமண இல்லத்தில் இருக்க மற்றைய தரப்பு வீட்டை விட்டு வெளியேறல் ஊகித்தறியக் கூடிய வன்ம உறவறுப்பு (constructive malicious desertion) ஆகும். 

3. தாம்பத்திய உறவில் ஏற்படக் கூடிய தகைமை இழப்பு (Incurable impotency) அதாவது கணவன் அல்லது மனைவியினுடைய குணப்படுத்த முடியாத மலட்டுத்தன்மையினை (இது ஆணின் தந்தையின்மையையோ பெண்ணின் மகப்பேற்றுத் தன்மையையோ குறிப்பதில்லை) நிரூபித்தல். திருமணம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் வாழ்க்கைத்துணை பாலியல் ரீதியாக உறவைப் பேண முடியாத மலட்டுத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

இவையே இலங்கையின் திருமணக்குற்றங்களாகும். இலங்கையின் கொழும்பில் சோரம் போதல் மற்றும் வன்ம உறவறுப்பு என்பவற்றின் அடிப்படையில் வழக்குகள் பதிவாகின்றன. எனினும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள நகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இரண்டு வகையான வன்ம உறவறுப்பு விவாகரத்துக்கள் மாத்திரமே பதிவு செய்யப்படுவதாகவும் 2014ம் ஆண்டில் வலைப்பதிவு (டிடழபள) ஒன்றிற்கு சட்டத்தரணி பாயிஸா முஸ்தபா மார்க்கர் (Faisza Musthapha Markar)

விவாகரத்துப் பெற விரும்பும் ஒருவர் இத்தகைய திருமணக்குற்றங்களைத் தாண்டி விவாகரத்துப் பெற முடியாது. அத்துடன் இருதரப்புச் சம்மதத்துடன்  விவாகரத்துப் பெறுகின்ற முறைமையும் இங்கு இல்லை. எனினும் திருமணத்தீர்வுகள் எனும் விடயத்தில் நீதிமுறைப்பிரிவு இன் அடிப்படையில் தம்பதிகள் விவாகரத்துப் பெறுவதற்கு விவாகரத்திற்குச் சமமான அல்லது அதனை விட மோசமான காரணங்களை ஆதாரம் காட்டி மாவட்ட நீதிமன்றத்தில் சட்டமுறைப் பிரிவைப் பெறலாம். 

இதனடிப்படையில் இலங்கையின் குடியியல் நடைமுறைச் சட்டக்கோவை (1889) திருத்தப்பட்டது இல 20 இன் 1977 20 in 1977Civil procedure code in 1889 as amended of 20 in 1977) பிரிவு 602(2) (அ) மூலம் இரு வருடங்களுக்கான பிரிவாணையினைப் பெறுவதுடன் அதன் பின்னரான ஏழு வருடங்கள் அவர்கள் ஊனிலும் உறக்கத்திலும் (bed and board) தம்பதிகளாக  வாழாதிருப்பின் இச்சட்டத்தின் படி பிரிவு 602 (2) (ஆ) வினூடாக விவாகரத்துக் கோர முடியும். ஆனால் தம்பதிகள் தாம் இணைந்து வாழ விரும்பின் பிரிவாணை இரத்துச் செய்யப்படும். எது எவ்வாறான போதிலும் இலங்கையில் திருமணமான தம்பதியினர் விவாகரத்துக் கோரும் போது திருமணக்குற்றம் நிச்சயம் காண்பிக்கப்பட வேண்டும். இந்த வகையில் இலங்கையில் திருமணத்தீர்வுகளாக விவாகரத்து (Action for Divorce), திருமண வறிதாக்கல் (Action for Nullity of marriage) மற்றும் நீதிமுறைப்பிரிவு (Action for Judicial Separation)

மேற்சொன்ன அனைத்தும் இலங்கையின் 1907ம் ஆண்டின் திருமணப்பதிவுக் கட்டளைச்சட்டம் இல.19 இன் கீழ், இலங்கையின் முஸ்லிம் மற்றும் கண்டியச் சட்டத்தின் கீழ் திருமணப்பதிவைச் செய்தவர்கள் தவிர தேசவழமை உட்பட நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் இப் பொதுச்சட்டம் ஏற்புடையதாகும். நாட்டினை நல்வழிப்படுத்துவதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக திருமணம் முடிவடைந்தவுடனேயே எவ்வௌ; வழிகளில் விவாகரத்துப் பெறலாம் என்று இக் காலத்தின் இரு சாராரும் சிந்திப்பதே வருத்தமளிக்கின்றது. மேலைத்தேயமயமாதல், நவீனமயமாதல் மற்றும் நகரமயமாதல் செயற்பாடுகள் முன்னேறிக் கொண்டு வரும் சூழ் நிலையில் படித்துப் பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துச் செல்கின்றனர். இந் நிலையிலும் எதற்காக விவாகரத்து வழக்குகள் இலங்கையின் சகல மாவட்ட நீதிமன்றங்களிலும் தொகை ரீதியாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என்பதனை சற்றே சிந்திக்க வேண்டியுள்ளது.

புராதன இலங்கையின் விவசாய குடும்பத்தின் அமைப்பினை எடுத்துக் கொண்டால் கணவன் வேலைக்குச் சென்று குடும்பத்தின் தேவைகளை நிவர்த்தி செய்பவராக இருப்பதுடன், மனைவி, கணவரின் தொழிலுக்கும் உதவி செய்வதுடன், வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். இது தான் நியதியாக இருந்தது. எந்த விதமான நவீன தொழினுட்ப சாதனங்களோ, கருவிகளோ இல்லை. எனவே கணவனும் மனைவியும் அதிக நேரம் தமது குடும்ப நலனுக்காக செலவழித்தார்கள். குழந்தைகளை சமூகமயமாக்குவதில்  இருந்து சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் குடும்ப அலகினாலேயே நிறைவேற்றப்பட்டது. இன்னொரு முக்கியமான விடயம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைமை பின்பற்றப்பட்டமையினால் உறவுகளின் முக்கியத்துவம் நன்கு தெரிந்த சமுதாயமாகக் காணப்பட்டது. அதனால் விவாகரத்து என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.
 
இன்றைய நவீனத்துவ வாழ்க்கை ஐரோப்பிய அமெரிக்கக் கலாசாரத்தின் தழுவலாக வருவதனால் அவர்களைப் பின்பற்றி கீழைத்தேய மக்களும் வாழ்வது ஒரு நாகரிகமாக மாறி விட்டது. இன்று பெண்களும் வேலைக்குச் செல்கின்றார்கள். சில வீடுகளில் கணவனை விட மனைவியே அதிக சம்பளம் வாங்குகின்றார். கல்வி, சிறப்புத் தேர்ச்சி (specialization) என்பவற்றில் பெண்களின் முன்னேற்றம் அபரிமிதமானது. ஆனால் குடும்ப வாழ்க்கையில் பெண்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள் என அண்மைய ஆய்வுகள் சான்று பகர்கின்றன. ஏனெனில் குடும்பத்தை நல்வழிப்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உண்டாக்கும் சக்தி பெண்களிடத்திலே தான் அதிகம் காணப்படுகின்றது. ஒரு வீட்டின் பெண்ணின் கல்வி நிலையை வைத்து அந்த வீட்டின் பிள்ளைகளின் கல்வி நிலையை மதிப்பிடலாம். ஆனால் அவளின் கல்வி பிழையான பாதைக்கு வித்திடுவதே இன்றைய அதிகரித்த விவாகரத்துக்களின் விஸ்வரூபத்திற்குக் காரணம்.

பெண்ணால் தனித்து அனைத்து வேலைகளையும் கவனிக்க முடியும். அலுவலக வேலைகளையும் வீட்டு வேலைகளையும் சலிக்காமல் செய்யும் சூட்சுமம் பெண்ணிற்குக்; கை வந்த கலை. ஆனால் ஆண்களுக்கு மனைவி போனால் சகலமும் போச்சு. ஆண்களும் தனித்து அனைத்தையும் செய்து முடிப்பார்கள் தான், இல்லையென்று இல்லை. ஆனால் இயற்கையின் படைப்பில் பெண்கள் தனித்து இயங்கும் வல்லமை கொண்டவர்கள். ஆண்களுக்குப் பெண் துணை தேவை. பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஆண்களே தமக்குத் தேவையில்லை தம்மால் தனித்து இயங்க முடியும் என்ற தப்பான அபிப்பிராயம் பெண்ணின் மனதில் குடிகொண்டு விட்டதனால் திருமண வைபவங்கள் வழக்காடு மன்றங்களை இன்று அதிகம் சந்திக்கின்றன. 

நான் கை நிறையச் சம்பாதிக்கிறேன். கார், வங்கிப்பண நிலுவை, சொந்த வீடு அனைத்தும் உள்ளது ஆகவே எனக்கு ஆணின் துணை தேவையில்லை என்ற எண்ணம் திருமணமான கொஞ்ச நாளிலேயே எதிர்கொள்ளும் கருத்து முரண்பாட்டில் பெண்ணின் மனதுள் துளிர் விடுகின்றது. குடும்பம் மற்றும் தாம்பத்தியம் சார்ந்த பிரச்சினைகளைக் கேட்டறிய வயதிலும் அனுபவத்திலும் பெரியோர் இல்லாத தனிக்குடும்ப வாழ்க்கை முறைமை (ரேஉடநயச கயஅடைல) வாழ்வதனால் இரு சாராரும் சற்றும் சிந்திக்காது வழக்கறிஞர்களை நாடுகின்றனர். இதனைத் தான் வள்ளுவர் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்,

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும் (குறள் 448)

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவர்களின் துணையில்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர்கள் இல்லாது விடினும் கெட்டு விடுவான். அதனைப் போன்றே தம்பதியினர் தவறான பாதையில் செல்லும் போது அல்லது பிழையான வழியிலே செல்லும் போது அறிவுரை சொல்ல எவரும் இல்லை என்றால் அங்கே பிரிவு நிச்சயம். கணவன் மனைவி மட்டும் வாழும் இன்றைய நவயுக வாழ்க்கை, தம்பதியினருக்கு அதிகம் திகட்டுகின்றது. எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சாவது உறுதி தானே.

தினமும் தோன்றும் பிரச்சினைகளைத் தீர்த்து அதனால் நெருக்கமாகும் அந்நியோன்யத்தை அனுபவிக்க இன்றைய தம்பதியினருக்கு நேரம் இல்லை. எனவே தான் தாம் வாழுகின்ற வாழ்க்கையில் சிறிய மனக்கஷ்டம் வந்தாலும் ஆறுதலாக அமர்ந்து பேசித் தீர்ப்பது கஷ்டமான விடயமென எண்ணி விடுகின்றனர். அத்தோடு அடுத்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்து தமது குடும்ப வாழ்விற்குள் ஏற்றத்தாழ்வுகளை வளர்த்துக் கொள்கின்றார்கள். யாரும் யாருக்கும் பாரமாக, தொல்லையாக இருக்க விரும்பாது அவர்களின் பார்வையில் இலகு வழியாகத் தோன்றும் விவாகரத்தை நாடுகின்றனர்.
 
திருமணமாகி தேன்நிலவு முடிவடைந்ததன் பின்னர் தான் நிஜமான வாழ்க்கைக்குள் தம்பதிகள் இருவரும் அடியெடுத்து வைப்பர். இரண்டு வீடுகளில் இரண்டு சூழலில் வாழ்ந்தவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கின்ற போது சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றுவது இயல்பே. அவற்றையெல்லாம் சகித்துப் பொறுமையுடன் வாழ்ந்தால் கல்யாணம் வெற்றி விழா தான். ஆனால் இன்றைய இளம் சந்ததியினர் அவ்வாறில்லையே. பொருளாதாரச் சிக்கல், ஒருவருக்கொருவர் சரியான புரிந்துணர்வின்மை மற்றும் மூன்றாமவர்களின் வெளியுறவுத் தலையீடுகளால் உண்டாகும் சந்தேகங்கள் என்பவற்றினால் திருமணம் என்னும் மலர் விரிவதற்கு முன்பே கருகி விடுகின்றது. 

திருமணத்திற்கு முன்னர் ஆணோ அல்லது பெண்ணோ எந்நேரமும் தாம் மகிழ்ச்சியாக இருப்பதனைப் போன்றே கற்பனை செய்து கொண்டு இல்வாழ்க்கையில் நுழைவதனால் கனவுக்கும் இயல்பு வாழ்க்கைக்குமான முரண்பாடு பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றது. தமது கனவின் நிறைவேறாத்தன்மை, வாழ்வின் நிச்சயமற்ற தன்மை என்பவற்றை எண்ணி வாழ்க்கையை இரு சாராரும் வாழ மறந்து பணத்தின் பின்னால் ஓடத் தலைப்படும் போது உறவின் தற்கால விரிசல் நிரந்தர பிரிவான விவாகரத்திற்குக் கதவு திறக்கின்றது. 

ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு வாரம் முடிவடைந்ததும் விவாகரத்துப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் வரும். ஆனால் நாம் தான் திருமணத்திற்கான அடித்தளத்தினைக் கண்டறிவதுடன் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தந்திரோபாயங்களையும் கண்டறிய வேண்டும். ஆனால் இன்றைய சமூகத்தவர்கள் திருமணத்தின் அடிப்படையைத் தானும் கண்டறிவதற்கு முயல்கிறார்கள் இல்லையே என உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரும் நாடகாசிரியருமான றொபேட் அன்டேசன் (சுழடிநசவ யுனெநசளழn) திருமணம் தொடர்பாக இன்றைய சந்ததியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சந்தோஷம், இழப்பு, கவலை, கோபம், களிப்பு, மனப்பதற்றம், சோகம் என அனைத்து உணர்வுகளும் கலந்து வருவது தானே திருமண வாழ்க்கை. தம்பதிகள் தாம் பிரச்சினைகளைக் கண்டறிந்து உடனுக்குடன் தீர்ப்பதுடன் தாம்பத்திய உறவையும் வலுப்படுத்த வேண்டும். ஆனால்; இந்த விபரங்கள் அனைத்தும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிந்தும் அவற்றைத் தமது வாழ்வில் நடைமுறைப்படுத்தாமையே விவாகரத்து வழக்குகள் உச்சம் தொடக் காரணமாகும். 

போதியளவு கல்வியறிவின்மை, பொருளாதரச் சிக்கல்தன்மை மற்றும் சூழ்நிலைகளைச் சரியாக விளங்கிக் கொள்ளாமை, மது பாவனையினால் ஏற்படும் குடும்ப வன்முறைகள், கணவன் மனைவியை அடித்தல் போன்றன ஏழை மக்களிடத்தும் பின்தங்கிய கிராமப்புறங்களிலும் விவாகரத்துக்கள் உருவாகக் காரணங்களாகும். அதே வேளை பணக்காரர்களிடத்து விவாகரத்து வழக்குகள் தோன்றக் காரணமாவது இருபாலாரின் எதிர்பார்க்கை ஏமாற்றமடைவது, தமது துணையன்றி வேறொருவருடனான உடலுறவு, நம்பிக்கையின்மை, பற்றுதியின்மை, சந்தேகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். திரைப்படங்கள் பார்த்தும் நாவல்கள் வாசித்தும் அதில் வருகின்ற கதாநாயகன் கதாநாயகியைப் போன்ற வாழ்க்கைத் துணையினை எதிர்பார்த்து அது பொய்த்துப்போகின்ற போது ஏற்படும் விரக்தி, ஏமாற்றம் மற்றும் ஆற்றாமை என்பனவும் விவாகரத்தைத் துரிதப்படுத்தும். 

அத்துடன் போலியான விளம்பரங்கள், போலியான உடல் தோற்றம் என்பவற்றை உண்மையென நம்புவதுடன், வெளிநாட்டு மோகம், பண வசதி, சீதனம் போன்ற காரணங்களை முதன்மைப்படுத்தித் திருமணம் செய்பவர்களுமுளர். சிகை மற்றும் முக அலங்காரங்களைக் கண்டு வெறும் உடற்கவர்ச்சியால் மதி மயங்கிக் காதலித்தோ, நிச்சயித்தோ திருமணம் செய்து விட்டு, பின்னர் அதனை நினைத்து வருத்தப்படுவதுடன் திருமணப்பிரிப்புக்கும் அவசரமாகவே முடிவெடுப்பர். வெறும் உடற்கவர்ச்சியும் பணபலமும் மாத்திரமே திருமண பந்தத்தை இறுதி வரை கொண்டு சேர்க்காது என்ற எண்ணம் இன்றைய இளம் பருவ வயதினருக்கு ஏனோ புரிவதில்லை.

இவ்வாறான விவாகரத்து வழக்குகளில் இருந்து விடுபட வழியே இல்லையா? என இன்றைய மூத்தோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கலாய்க்கின்றனர். அனைத்துக் காரியங்களுக்கும் பின்புலத்தில் ஒரு காரணம் இருப்பதனைப் போன்று விவாகரத்து வழக்குக்கே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே பிரச்சினைகளைத் தீர்த்து வளமான வாழ்வு வாழ்வதற்கு இடமுண்டு. அதற்கு வாழ்க்கைத்துணை இருவரும் பூரண ஒத்துழைப்பு நல்கினால் நிச்சயம் சுபீட்சம் கிட்டும். இருவருமே பிரச்சினை ஏற்பட்ட பின்னர் அப் பிரச்சினைக்கான மூல காரணத்தைத் தேடித் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

மேலைநாடுகளில் நன்கு பயிற்றப்பட்ட தொழில்முறை ஆலோசகர்கள் அதிகளவில் இருக்கின்றார்கள். அந்நாட்டு மக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெரும்பாலும் அவர்களின் ஆலோசனைப்படியே செயற்படுத்துவதனால் சமூக உளவியல் தொடர்பான பிரச்சினைகளை முழுப்பலத்துடன் அவர்கள் எதிர்கொள்ளத் தயாராகின்றனர். ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் மனநல ஆலோசகரோ அன்றில் குடும்ப நல ஆலோசகர்களோ தொழில் முறையாக செயற்படுவது குறைவு. அவ்வாறே ஆலோசகர்கள் காணப்பட்டாலும் விவாகரத்துப் பெறுவதற்கு தயக்கம் காட்டாத தம்பதியினர் குடும்ப நல ஆலோசகர்களைச் சந்திப்பதற்கு வெட்கப்படுகின்றனர். இதனால் இலகுவில் பேசித் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகள் கூட நீதிமன்றம் வரை செல்கின்றது.

குடும்பப் பிணக்குகளைத் தீர்க்க தொழில்முறை ஆலோசகர்களை நாடுவது பெரும் நன்மை தரும். இலங்கையில் 94 ஆலோசகர்கள் (counselors) முழுநேரக் கடைமை புரிகின்றார்கள். 20 ஆலோசகர்கள் ஒப்பந்த அடிப்படையில் யுத்தப் பாதிப்புப் பகுதியான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் மக்களின் உளவியல் தேவைக்கான ஆலோசகர்களாக இருக்கின்றனர். பாடசாலை, சிறைச்சாலை, வைத்தியசாலை, புனர்வாழ்வளிப்பு நிலையங்கள், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்கள் போன்றனவற்றில் முழு நேர ஆலோசகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் ஆதரவற்றோர், ஆலோசனை தேவைப்படுகின்றவர்கள் எந்த நேரத்திலும் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற முடியும். அதிகரித்துச் செல்லும் விவாகரத்தைத் தடுக்கும் அரணாக இவ்வாறான செயற்பாடுகள் அமையும். 

எமது பாரம்பரியச் சமூகம் கூட்டுக்குடும்பப் பின்னணி கொண்டது. இது குடும்ப ஒற்றுமைக்குப் பெரிதும் வழிகோலிற்று. வீட்டில் மூன்று தலைமுறை கண்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் புதிதாகத் திருமணம் முடித்தவர்களுக்கு ஏற்படும் சிறுசிறு உளப்பூசல்கள் நன்றாகத் தெரியும். எனவே இலகுவில் பிரச்சினையினைத் தீர்க்க வழி கண்டுபிடித்து விடுவார்கள். அது மாத்திரமன்றி வீட்டிலிருக்கின்ற தாத்தா தனது பேரனுக்கு தன் வாழ்க்கையின் அனுபவங்களைக் கூறி அவனை ஆற்றுப்படுத்துவார். அதே வேளை வீட்டிலுள்ள பாட்டி புகுந்த வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி கணவனுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பது வரை எடுத்துரைப்பார். அதனால் உள்நாட்டு யுத்தங்கள் போன்று உருவாகும் கணவன் மனைவி சண்டைகள் காலையில் ஆரம்பித்தால் மாலையில் முடிவடைந்து விடும். 

இத்தகைய சந்தர்ப்பங்கள் தனி வீட்டில் தனிக்குடித்தனம் நடாத்தும் தம்பதிகளுக்கு வாய்ப்பதில்லை. தனிக்குடும்ப வாழ்க்கைமுறை என்பது இப்போதெல்லாம் ஒரு சமூக வடிவமைப்பாக மாற்றமடைந்து கொண்டு வருகின்றமை மன வேதனையையே ஏற்படுத்துகின்றது. கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடும்ப வாழ்க்கை முறைமையின் சமூக மாற்றம், சமூகக்கட்டமைப்பினையே முற்று முழுதாக புரட்டிப்போடும் விவாகரத்து என்னும் கடமையினைச் செவ்வனே செய்கின்றது. காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும் கதையாகவன்றி காவோலைகளான பெரியோரின் அனுபவப்பாடங்களை இளையோர் கற்றுக் கொள்ளத் துணிய வேண்டும். தமக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களைத் தமது வீட்டிலுள்ள மூத்தவர்களுடன் செலவழிக்கின்ற போது வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை அறிந்து கொள்ள முடிவதோடு விவாகரத்து வரை செல்ல வேண்டிய தேவைப்பாடும் குறைந்து விடும்.
 
விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை வேலைப்பழு காரணமாக ஒருவரையொருவர் சந்திக்கக் கூட நேரம் ஒதுக்காததனால் ஏற்படுவதாகும். தீண்டும் இன்பமானது உறவை வளப்படுத்தும். ஆனால் நவீன கலாசாரத்தில் ஆளுக்கொரு தொலைபேசி, மடிக்கணனி என்று தனியாள் தேவைகள் இயந்திரங்களுக்குள் முடங்குவதால் ஆணும் சரி பெண்ணும் சரி தமது துணையுடன் நேரம் செலவழிப்பதில்லை. குடும்ப வாழ்க்கையில் கண்டிப்பாக தாராளமான விட்டுக் கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, நான் பெரிது நீ பெரிது என்ற தன்மையின்றி கணவன், மனைவிக்கும் மனைவி, கணவனுக்கும் சேவை செய்யும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல், ஒருவரையொருவர் பாரபட்சமின்றி மனமுவந்து பாராட்டும் குணம் போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதனூடாக ஊடலினூடே கூடல் கொண்டு எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததைப் போன்ற வாழ்க்கை வாழலாம்.

குறிப்பறிந்து நடந்து கொள்ளும் பண்பினை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அது அவ்வளவு இலகுவான காரியமல்ல. எனினும் முயற்சித்தால் நிச்சயம் முடியும். முதலில் வாய் வார்த்தையினை மட்டுமே புரிந்து கொண்டு செயற்படும் தம்பதியினர் அவர்களுக்குள் ஏற்படும் உள்ளார்ந்த முழுமையான புரிந்துணர்வு காரணமாக உடல் மொழியினையும் அங்க அசைவுகளைக் கொண்டும் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்வர். மனதிலுள்ளதை எந்தவித வஞ்சக எண்ணமுமின்றி அப்படியே தமது கருத்துக்களைத் தம்பதியினர் வெளிப்படுத்தும் போது அது ஒருவகைச் சண்டை போன்று பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மையில் அது கணவன் மனைவியின் ஆழமான அன்பும் காதலும் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகும். இதனைத் தான், 

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 
ஒல்லை உணரப் படும் (குறள் 1096)

என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. கணவன் பேசுகின்ற போது அவள் யாரோ எவரோ என்று பகைவரைப் போன்று பதில் சொன்னாள். ஆனாலும் மனதிலே பகையேயில்லாத, கோபமேயில்லாத அன்பு நிறைந்த சொல் என்பது விரைவிலேயே அவள் கணவனுக்குப் புலப்பட்டு விடுகின்றது. அவ்வாறு ஒருவருக்கொருவர் முழுமையான புரிந்துணர்வு என்பது இன்றைய காலத்தில் இருவருக்கும் மிகுந்த தேவையானதொன்று. உதாரணத்திற்கு, கணவனைப் பற்றித் தவறான செய்தியொன்றினை மனைவி கேள்வியுறுகிறாளெனின், என் கணவன் அப்படிச் செய்திருக்கமாட்டார் என்ற முழு நம்பிக்கை அவள் மனதில் ஏற்பட வேண்டும். அதனை விடுத்துச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற போது காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்ற கதையாகி விடும். 

கணவன் மனைவி விவாகரத்துப் பற்றி யோசித்தாலும் அம்மா அப்பா விவாகரத்துப் பற்றி கனவிலும் சிந்திக்கக் கூடாது என்பர். ஏனெனில் விவாகரத்து வழக்குகளில் சுயநலமாகத் தமது சுதந்திரம் பற்றியும் எதிர்கால நல்வாழ்வு பற்றியும் யோசிக்கின்றவர்கள் பிள்ளைகளைப் பற்றி சிறிதும் எண்ணுவதில்லை. பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மௌனமாக பாதிக்கப்படுபவர்கள் எதிர்கால வளங்களே. பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இன்றி வளர்பவர்கள் தாம் எதிர்கால சமூகத்தில் வன்முறை கொண்டவர்களாக உருவெடுத்து சீரழிகின்றார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதுவுமேயறியாத பிள்ளைகள் வாழ்வையிழக்க விவாகரத்து என்னும் காலன் காரணமாகின்றான். 

எனவே தான் பெற்றோர் விவாகரத்துப் பெற்றுத்தான் தீருவோம் என முடிவெடுத்தால் பிள்ளைகளுக்கு முன்னே நின்று கொண்டு சண்டை போடாதீர்கள், நீங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையும் பிரிவதற்கான காரணத்தைப் பிள்ளைக்குப் புரிய வையுங்கள், உங்கள் இருவரின் இரத்தப்பிணைப்பென்பதால் அவர்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்புத் தேடிக் கொடுங்கள். இதனால் திருமணம், பெற்றோர், அன்பு, அரவணைப்புப் போன்ற விம்பங்கள் எப்பொழுதும் குழந்தைக்கு அழகானதாகவே இருக்கும். அவ்வாறில்லையெனில் சமூகத்தின் அச்சாணியான குடும்ப அலகே பிள்ளைக்குத் திகட்டத் தொடங்கி விடும் என்பது உளவியலாளர்களின் அறிவுரையாகவுள்ளது. 

கணவன் மனைவிக்குள் சிறிதாய் ஒரு கருத்து மோதல் வருகின்றதா? தயவு செய்து வேலைக்கு லீவு போட்டேனும் தனியான இடத்தில் இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசுங்கள். தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கப் பின்நிற்காதீர்கள். சண்டைக்கான காரணம் தெரிந்து பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் அவர் முதலில் பேசட்டுமே என்ற மனப்பான்மையினை விடுத்து நீங்களாகவே சென்று முதலில் கதைத்துப் பாருங்கள் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் புரியும். சமூகமயமாக்கம் செய்கின்ற போது திருமணம் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த பூஞ்சோலையில்லை. அது நாம் கற்கின்ற பாடத்தினைப் போன்று ஆழமாகக் கற்க வேண்டிய விடயம். பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதனைத் தீர்த்து இன்ப வாழ்வு வாழ்வதற்குப் பிள்ளைகளைப் பக்குவப்படுத்தி வளர்க்க வேண்டும் என்கின்றனர் சமூகவியலாளர்கள். 

கணவன் மனைவி பிரச்சினைக்குள் மூன்றாமவரை உள்ளிழுக்காதீர்கள். தூது விடும் மரபு வேண்டவே வேண்டாம். நயவஞ்சக எண்ணம் கொண்டவர்களுடனும், போட்டி பொறாமை கொண்டவர்களுடனும் வாழ்ந்து வருகின்றோம். எனவே மூன்றாமர் நிச்சயம் உங்கள் இருவருக்குமிடையிலான பிரச்சினையினை பெரிதாக்குவார்களே தவிர இணைய விடமாட்டார்கள். பிறகு பார்க்கலாம் என்ற எண்ணமே வேண்டாம். எனவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக நேருக்கு நேர் நின்று கதைத்துத் தீர்த்து விடுங்கள். அது இருவரின் அந்நியோன்யத்தை அதிகரிக்கும் அளவுகோலாகும்.
 
திருள்ளுவரின் திருக்குறள் சொல்லும் காதல் வாழ்வும் குடும்ப ஒழுகலாறும் பற்றிய கருத்துக்கள் எந்த நூலும் கூறாத அற்புதக் கருத்துக்களாகும்.  அவை மனப்பாடம் என்ற வகையிலே சிறு வயதில் எம் மனங்களில் திணிக்கப்படுவதால் வேண்டாத புத்தகமாக அதனை ஒதுக்கி விடுகின்றோம். அது கட்டாயம் கசடற்றக் கற்று அதன்படி ஒழுக வேண்டிய மிக உன்னத நூலாகும். களவியலும் கற்பியலும் காதலின் உன்னதத்தைக் கூறும். அதே வேளை ஊடலும் கூடலும் வாழ்வின் அழகுக்கு இன்றியமையாதது என்பதனை உரைக்கும். பெரும் பிணக்கும், சிறு மன வேறுபாடும் இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கை சிற்றின்பப்பேறை அடையாது என்கின்றது. 

திருமணத்தில் ஏற்படும் சிக்கலை அவிழ்க்க முடியாமல் தானே தம்பதியினர் நிரந்தரப் பிரிவான விவாகரத்தை நாடுகின்றனர். ஆனால் அதற்குப் பின்னராவது அவர்கள் நிம்மதியாக இருக்கின்றார்களா? என்றால் இல்லை என்ற பதிலையே உளவியலாளர்கள் கூறிச் செல்கின்றனர். விவாகரத்துப் பெற்ற ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும்  பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். எதிர்காலத்தைத் தனித்து எதிர்கொள்ளும் போது ஏற்படும் பீதி , மனச்சோர்வு, எதிலும் ஓர் பிடிப்பற்ற தன்மை, வெறுப்பு, கடுங்கோபம், ஆற்றாமை, நம்பிக்கையின்மை, சீற்றம், போதைக்கு அடிமையாதல் ஆளுமையிழப்பு, தூக்கமின்மை, எதிலும் விருப்பற்ற தன்மை, மன அழுத்தம், சமூகப்புறவொதுக்கம் மற்றும் உளப்பிரச்சினையானது உடல் தொடர்பான உபாதைகளுக்கு வழியேற்படுத்தல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து விவாகரத்துப் பெற்றவர்கள் தமது எதிர்கால வாழ்வையே கேள்விக்குறியாக்குகின்றனர்.

இலங்கைச் சமூகம் எப்பொழுதும் அடுத்தவர் என்ன செய்கிறார்கள் என அடுத்த வீட்டு ஜன்னலையே கவனித்துக் கொண்டிருக்கும் குணம் கொண்டது. எனவே நிச்சயம் விவாகரத்துப் பெற்றவர்களை மன ரீதியாகக் காயத்திற்கு உட்படுத்தும். அதற்காக மற்றயவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி வாழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை. அதே வேளை பிரச்சினைகளற்ற குடும்பங்களும் இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி தான். இலங்கையின் சமயமும் சமூகக் கட்டமைப்பும் திருமண வாழ்வினையே வலியுறுத்துகின்றன. மானிடனும் இல்லறத்தைத் தானே நாடுகிறான். சன்னியாசம், இல்லற வாழ்வினைக் காட்டிலும் கடைப்பிடிக்கக் கடினமானது. அறவழியிலே இல்வாழ்க்கையினை கடைப்பிடிக்கும் போது கிடைக்கின்ற பயன், தவம் செய்வதனைக் காட்டிலும் சிறந்ததாகும். 

அறப்பண்புகளைக் கடைப்பிடித்து அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு, தனது முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐவருக்கான கடமைகளைச் சிறப்பாகச் செய்து இல்லாளுடன் இல்லான் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கை சொர்க்கபுரி. எனவே 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீக தம்பதியராய் ஏற்றம் காண வாழ்க்கையின் சின்ன சின்ன விடயங்களையும் ரசித்து வாழ இன்றிலிருந்தே உறுதி பூணுவோம். திருமணம் இணைந்து வாழும் வாழ்க்கைக்கானது, அதனை விடுத்து முறிவுக்கான திறவுகோல் அல்ல என்பதனை உலகிற்கு பறை சாற்றுவோம். 'காணிநிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும், காணிநிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும், பாட்டுக் கலந்திடவே–அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும்' என்ற பாரதியின் கனவு மெய்ப்பட, கிடைக்கப் பெற்ற சொற்ப வாழ்வைச் சிறப்பாகத் தான் வாழ்ந்து விட்டுப் போவோமே.

Views: 1066