சொன்னதும் சொல்லாததும்- பகுதி 1

எழுத்தாளர் : பிரகலாதன் மின்னஞ்சல் முகவரி: prakalaath2010@gmail.comBanner

“பின்பற்றப்படும் வரையே அது மதம் பரப்ப தொடங்கும்போதில் அது நோய்” என்று யாரோ சொன்னதாய் நினைவு. ஒவ்வொரு சமூகக் கட்டமைப்பையும், அதன் கலாசாரத்தையும் அங்கு பின்பற்றப்படும் மதமே பிரதான காரணியாக முன்னின்று வடிவமைக்கிறது. மதமொன்று சிதைவடையும்போது மக்களின் சமூகக் கட்டமைப்பு உடையத்தொடங்குகிறது. அக்கட்டமைப்பு உடைவதனால் புதிதாக இன்னொரு கட்டமைப்பு உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனை  பயன்படுத்தி ஒரு சாரார் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்ட வலுகட்டாயமாக சமூகக் கட்டமைப்பை உடைத்து இன்னொரு சாராரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தமக்கு அடிமையாக மாற்றிகொள்கிறார்கள். அப்படி இன்னொரு மதத்தை சிதைத்து உருவான மதம் தான் இன்று அதிகமான தமிழர் பின்பற்றும் இந்து மதம்.

தமிழருக்கென்று தனியாக மதம் இருந்ததும் அதை அழித்த வரலாறும் பலருக்கு தெரியாது. அம்மதம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சிதைக்கப்பட்டுவிட்டது. இதனை இப்போது ஆராய்ந்து பழந்தமிழர் கலாச்சாரத்தை மீட்கவோ புரட்சி செய்யவோ போவதில்லை அவை சாத்தியமும் இல்லை. ஆனால் அழிந்தது நம் வாழ்வியல், அதனை அறிவது நம் கடமையாகும்.

ஆதி தமிழர்கள் தமது முன்னோர்களையே கடவுளாக எண்ணினார்கள், அதற்காக அவர்கள் நினைவாக நடுகல் வைத்து வணங்கினார்கள், அதுவே அவர்களது இறைமை என கொண்டார்கள். அந்த முறைமையிலே ஆதிகுடிகளின் தலைமைகள் அவர்களின் கடவுளர் ஆனார்கள். நால்வகை (பாலை தவிர்ந்த) நிலங்களுக்கும் தெய்வங்களாக இருந்தவர்கள் பற்றி தமிழின் தொன்மையையும் வாழ்வியலையும் கூறும் தொல்காப்பியம் இப்படி கூறுகிறது,

மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே,

மாயோன் மேவ காடுடைய நிலம் சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம், வேந்தன் மேவுவது சுவையுடைய நீர் உள்ள நிலம், வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம். இந்த நான்கு நிலங்களும் முல்லைகுறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும் என்று பொருள்பட மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்று ஆதிதமிழர் வழிபட்ட நிலக்கடவுளரை குறிப்பிடுகிறது. இவர்கள் தவிர பாலைநில கள்வர்கள் பெண் கடவுளான கொற்றவையை வழிபடும் வழிபாடும் வழக்கில் காணப்பட்டது. மேலும் எட்டுத்தொகையில் சில இடங்களிலேயே  சிவன் வழிபாடு பற்றி குறிப்பிடப்படுகின்றது. எனவே சங்ககாலத்தில் சிவன் வழிபாடு முக்கியம் பெற்றிருக்கவில்லை எனக்கொள்ளலாம்.

காலப்போக்கில் ஏற்பட்ட வணிகத்தொடர்புகளாலும், சில இடபெயர்வுகளாலும் தமிழ் பிரதேசத்தில் வடமொழி பேசும் ஆரியம் குடிகொண்டது.  ஆரியம் தன்னை தமிழ் நிலத்தில் உறுதி செய்திட முதலில் அரசர்கள் மூலம் அதிகாரமாக உள்நுழைந்தது பின் படிப்படியாக மதத்தில் கலந்தது. மிகவும் திட்டமிட்ட செயன்முறையின் மூலம் தமிழ் மதத்தை சிதைத்து தன்னை இணைத்தது. பாபநாசம் படம் பார்த்திருப்பீர்கள், அதில் ஒரு நாளை திரும்ப Re-create செய்து குற்றத்தை மறைப்பார்கள் அதே வழிமுறையில் ஒரு மதத்தையே Re-create செய்யும் நுண்ணியமான தொழினுட்பம் அப்போதும் பின்பற்றப்பட்டது.  

முதலில் ஆதி தமிழர்களை வாழ்வில் ஜோதிடம், பரிகாரம் போன்ற பூஜா புனஸ்காரங்களை உட்புகுத்தினர். அறிவியல் வளர்ந்த இன்றும்கூட வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு ஆயிரக்கணக்கான சாமியார்களும், ஜோதிடர்களும் இருக்கும்போது அன்று இது மிக சாதாரணமாக இருந்திருக்கும். அதன்பின் அவர்கள் வழிபட்ட கடவுள்களையும் தமிழர் வழிபட்ட கடவுளையும் ஒப்பிட்டு ஒன்றாக காட்டினார்கள்.  சேயோன் ஸ்கந்தன் ஆனான், மாயோன் விஷ்ணு ஆனான், இப்படியே படிப்படியாக வேந்தன், கொற்றவை, சிவன் ஆகியோர் இந்திரன், பார்வதி ருத்திரன் ஆனார்கள். கூடவே கவர்சிகரமான புராண கதைகளை அவர்கள் மீது ஏற்றிவிட்டார்கள். புராணங்களில் இருந்த மாஜயாலம் நிறைந்த கதைகள் மக்களை கவர்ந்து இழுக்கவும் மக்களும் அதுவும் நம்ம முருகன் தானே, நம திருமால் தானே என்ற மனநிலையில் அவற்றை ஏற்றுகொள்ள தொடங்கினார்கள்.

“கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் 

கடவுளும் இலவே!”


என்று நடுகல்லை வணங்குவோமே தவிர நெல், அரிசி பரவி வழிபாடும் கடவுள் எங்களுக்கு இல்லை என்று புறநானூறு சொன்ன தமிழர் மரபு சிதைக்கப்பட்டு அதுவரைகாலமும் சாதரணமாக வழிபட்ட கடவுளருக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன, படையல்கள் வைக்கப்பட்டன குறித்த நிலவாழ் மக்கள் மட்டும் வழிபட்டவர்கள் மீது பெரும் தெய்வம் என்ற போலி வலை  பின்னிகொண்டது. கூடவே தமிழர் தொன்மமும் அழிவும் தொடங்கியது. வேத ஆகமத்தை மூலமாக கொண்டு அதுவரை காலமும் இல்லாத சாதி பிரிவினைகளை உருவாக்கினார்கள். ஆண்டான் அடிமை கலாச்சாரம் உருவானது.

இன்றும் கூட உலகின் எதாவது மூலையில்  புத்தர் பெருமானும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற கதையை கூறப்பட்டு கொண்டிருக்ககூடும் ஏன் நீங்களும் இதை கேள்விப்பட்டிருக்கலாம். வேத ஆகமத்தை மறுத்த புத்தரின் மீது கூட புராணம் ஏற்றும் ஒரு முயற்சி அது. மாயோனை மும்மூர்த்திகளில் ஒருவனாய் எடுத்துக்கொண்ட சமஸ்கிருதம் சேயோனை முழுதாக கவ்விக்கொள்ள முடியவில்லை, அதன் எச்சமாகவே முருகனை இன்றும் தமிழ் கடவுள் என்று விளித்துகொண்டிருக்கிறோம், ஆனாலும் முருகன் மீது இயன்றளவிற்கு புராணம் ஏற்ற தவறவில்லை. முருகனுக்கு தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத இரு மனைவியர் அதுவும் ஒருவர் தேவ குல தெய்வானை, மற்றவர் குறத்தி வள்ளி, இதில் எதாவது தர்க்கம் இருக்கின்றதா? இந்த குழப்பத்துக்கு காரணம் ஒருவர் ஆரியம் வழி தெய்வானை, மற்றவர் தமிழர் வழி வள்ளி. அடுத்தது முருகனின் தளபதி வீரபாஹு என்பவர், இதிலும் தமிழ் கடவுளுக்கு சமஸ்கிருத பெயருடைய தளபதி. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று சிந்தித்தால் இரண்டு வேறு கலாச்சாரம் இணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் அவ்வளவுதான்.

மெதுமெதுவாக தாங்களின் ஆதிக்கத்தின் கீழ் தமிழர் மதத்தை கொண்டுவந்தது சம்ஸ்கிருத சைவ மதம். இதன் விளைவாக ஆங்காங்கே தமிழர் வழிபாடு முறைமைகளும் சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரின் கீழ் ஒதுக்கப்பட்டு இறுதியில் மறைந்து போனது. (இன்றும் கூட சில இடங்களில் சிறு தெய்வ வழிபாடு காணப்படுகிறது). முன்னிலாத சாதி பிரிவினைகளும் சமய அனுட்டானங்கள் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளும் பரப்பட்டன. கலாச்சார சிதைவுடன் மொழி சிதைவும் தொற்றிகொண்டது.

வட எழுத்துகள், சொற்கள் தமிழில் கலந்தது, ஒரு மொழியில் இன்னொரு மொழி கலக்கும்போது சில வரைமுறைகள் இருக்கு. தமிழில் இல்லாத சொற்கள் இணைவதில் ஆபத்து இல்லை, ஆனால் ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொல்களை திரித்து பயன்படுத்துவது மொழி அழிவு அல்லவா. தமிழில் ஆங்கில சொற்களை கலந்து பேசும்போது, நம்மால் அது ஆங்கிலம் என்று பிரித்து அறியமுடியும், ஆனால் வடமொழி அப்பிடி இருக்காது.உதாரணமாக,  சொறி (sorry) என்றால் அது நமக்கு ஆங்கிலம் என்று புரியும், ஆனால் “தானம், கருமம்” இப்படியான சொற்கள்  தமிழ் மொழியென்றே நாம் நினைப்போம் அனால் இவை வடமொழி என்பதை அறிவதும் கடினம். இக்கட்டுரையில் எனக்கே தெரியாமல் நிறைய வடமொழி வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறேன், அதற்கு மன்னித்துகொள்ளவும்  “வார்த்தை” என்பதும் தமிழ் இல்லை சொல் என்பதே சரியான தமிழ் ஆகும். அடச்சே மன்னிப்பும் கூட தமிழ் இல்லையாம்.இப்படியாக மொழி கலாச்சாரம் என்று தமிழரின் அடிப்படை சிதைந்து இன்று நம் கலாச்சாரமே முற்றாக மாறிவிட்டது. 

சரி இதெல்லாம் எங்கட வீட்ல சொன்னால் எல்லாத்தையும் கேட்டிட்டு உனக்கு நேரம் சரியில்லை கோவிலுக்கு வா நேர்த்தி கட்டி அம்மனுக்கு அபிஷேகம் பண்ணினாத்தான் சரியாகும் எண்டு சொல்லுவாங்க.

Views: 468