பௌத்தத்தின் சாத்தான்

எழுத்தாளர் : சுஜீந்தன் பரமேஸ்மின்னஞ்சல் முகவரி: psugeenthan@gmail.comBanner

அப்பொழுதுதான்  கண்களை  மிகுந்த  சிரமத்தின்  மத்தியில்  திறந்துகொண்டார் அக்கிழவர். ஒரு அறுபத்தைந்து வயது  மதிக்கக்கூடிய தோற்றம். உடுத்தியிருந்த காவியுடை  கிழவர் ஏதோ சாமியார் என்பதை சொல்லவர அடித்திருந்த  மொட்டையோ  இல்லை இல்லை .,  இவர் சாமிகளிலும் பெரிய பிக்கு சாமி  என்பதை  அடித்தே  உரைத்தது.  

ஏனோ தெரியவில்லை  உடலெல்லாம்  யாரோ  யானையை  விட்டு  உழுதது போல் வலி பிய்த்து எடுத்துக்கொண்டிருந்தது. கண்களை  மூடி  மூச்சை ஆழ இழுத்து விட்டால் சிறிது சுகமாய் இருக்கலாம்  - என  மூளையில் உறைக்க - எண்ணத்தை செயல்படுத்தும் நோக்கில் உடனடியாய் விரைந்தவர் அடுத்த கணமே  புரையேறி  இருமினார்., “கருமம்  என்ன  நாற்றம் இது..? குடலைப் புடிங்கியெறிகிறது..?” என மனதளவில் எண்ணினாலும் வாயினால் வசை பாட முடியவில்லை. காரணம் அட்டசீலம் எனும் துக்கத்தைப் போக்கும்  எட்டுநெறிமுறைகளும் நல்மொழி பற்றி அப்படித்தான் கூறியிருக்கின்றன பௌத்தத்தில். மனதளவில் இல்லை என்றாலும் வெளிப்படையிலாவது கொள்கை கடைப்பிடித்தல் கட்டாயம் என்பது அவர் கோட்பாடு. அதுவும் இடம்வலம் தெரியாத இடத்தில்.. அச்சச்சோ  கட்டாயம் பின்பற்றவேண்டிய கோட்பாடு அது. இல்லையென்றால் கடவுளுக்கெல்லாம் கடவுளைப் போன்று..,   ஆசையைத்துறந்து தர்மத்தை போதித்த புத்தன் கடவுளாகிப் போன அந்த மதத்தில் கிட்டமுட்ட கடவுளுக்கு நிகராக நாற்காலி போட்டு இவரால் அமர்ந்திருக்க முடியாது.

            ஆம் அப்படித்தான் கூறியாக வேண்டும். சரியாக அந்தத்தீவின் கடவுளாகவே இருந்திருக்கிறார் இன்றுவரை. கௌதம புத்தனுக்கு அடுத்ததாக அவதரிக்க போகும் - தேரவாத, மகாயான, மற்றும் வஜ்ரயான எனும் அத்தனை பௌத்தங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படப்பட்டு காத்திருக்கும் - இருபத்தி ஒன்பதாவது புத்தனான மைத்திரேயராய் இவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லைத்தான், ஆயினும் அந்தநாட்டில் கிட்டமுட்டவாவது அப்படித்தான் கருதப்பட்டார் என்றே கூறவேண்டும்.

***************

 அன்று பாடசாலை பஸ்ஸில் திடீரென ஏறிய அந்த இரு பிக்குக்களும் கத்திக் கூச்சலிட்டதே காஞ்சனவின் மனதில் வேரோடிக்கொண்டிருந்தது. பாடசாலை முடிந்து திரும்பும் வரை இதே சிந்தனைதான், வெறும் பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட பஸ்ஸில் திடீரென ஏறவும் - இரு பிள்ளைகளை தம்முடன் விட்டுவிடும் படி தடையேதும் இன்றி ஆர்ப்பாட்டம் செய்யவும் -  தடுக்க வந்த போலிசே திக்குமுக்காடிப் போகும் வண்ணம் வாதிடவும் – மீறி மறித்த போலீசையும் உதறித்தள்ளிவிட்டு தம்வழியில் செல்லவும் இவர்களால் முடிகிறது அதுவும் சுதந்திரமாய்.

       ஊர் பன்சலவிலும் தான் இருக்கிறாரே சூரத்த தேரோ , எதுவித ஆர்ப்பாட்டமோ அதிகாரமோ இன்றி, போகிறவருகிற ஆதரவற்றவர்களை எல்லாம் ஆரத்தழுவி அன்பைபொழிந்து  எப்படி அவரால் இப்படி எல்லாம் இருக்க முடிகிறதோ அதுதான் புரியவில்லை காஞ்சனவிற்கு. அதுவும் தெருவிலேயே சாகவிடவேண்டிய நாயிலும் கேவலமாக கிடக்கும்  பிச்சைக்காரர்களை எல்லாம் தூய்மைப்படுத்தி தன்னால் இயன்றமட்டும் அவர்களுக்கெல்லாம் தொழில்வாங்கிக்கொடுத்து – சிறுவர்களைப் படிப்பித்து – சீச்சீ.., அவர்களின் விதி அப்படித்தான் விதிக்கப்பட்டுள்ளது, அவர்கள் அப்படி வாழவே சபிக்கப்பட்ட சாத்தான்கள்  என்பதை எல்லாம் மறந்து புனித மார்க்கத்தை பின்பற்றும் ஒருவர் எதற்காக தன்னிலையைத் தாழ்த்தி அடுத்தவர்களுக்கு இவ்வளவுதூரம் உதவவேண்டும்.  சூரத்த தேரோ குறித்த நினைவுகள் வரும்போதெல்லாம் இதயத்தில் கம்பளிப்பூச்சி ஊர்வதுபோன்ற உணர்வே ஏற்பட்டிருக்கிறது காஞ்சனவிற்கு. தன் மனதில் ஊர்ந்த கம்பளிப்பூச்சியை அடுத்தவர் மனதிலும் ஊரவிட அந்த பதின்ம வயதுகளிலேயே படாதபாடுபட்டான் காஞ்சன.  சந்தர்பம் கிடைத்தபோதெல்லாம் சூரத்த தேரோ பற்றி அவதூறுகளைப் பரப்பி , அவர் கற்பித்த சிறார்களிடமே அவரை காமுகனாக காட்ட விளைந்து அவன் எடுத்த முயற்ச்சிகள் ஏராளம்.

                              தான் எடுத்த அத்தனை முயற்ச்சிகளும் சூரத்த தேரோ எனும் நிஜ அன்பின்முன் தோற்றபோது தானே பிக்குவாய் வந்து இவர் போன்ற பிக்குகளை வீழ்த்தினால் என்ன என்றெல்லாம், கடுமையாக சிந்தித்து இருக்கிறான் காஞ்சன.    சூரத்த தேரோ போன்ற பிக்குக்களை அடியோடு வெறுத்த  காஞ்சனவிற்கு, பஸ்ஸில் சந்தித்த ஆர்ப்பாட்டமான பிக்குகள் - அதுவும் எல்லோரும் மிரளும் போலீசையே மிரட்டும் பிக்குகள் – வித்திசாயமானவர்களாய் மட்டுமல்ல புனிதமானவர்களாயும் தெரிந்தார்கள். ஆமாம் புனிதமார்க்கத்தை பேணுபவர்கள் நினைத்ததை அனுமதிப்பதுதானே பொலீசின் கடைமையும் கூட. புனிதமார்க்கத்தைப்  பேணுபவர்களை அவமதிப்பது இவர்கள் மதமாகப் பின்பற்றும் புனித மார்க்கத்தையே அவமதிப்பதல்லவா..? புனிதத்தின் உச்சமான புத்தன் எல்லோராலும் மேலானவனாக கொண்டாடப்படுகிறான், அவன் வழியைப் பின்பற்றும் இவர்கள் குறைந்தது அடுத்த பட்சமாவது கொண்டாடப்பட வேண்டுமல்லவா..?? அன்றுவரை ஆர்மியாக வருவதே இலட்சியமாய் கொண்டிருந்த காஞ்சனவின் மனதில் புதிதாய் ஒரு ஆசை இழையோட ஆரம்பித்திருந்தது.

******

பஸ்களில் கர்ப்பிணிகளுக்கெனவும், ஊனமுற்றவர்களுக்காகவும்  ஒதுக்கப்பட்ட சீட்டில் பிக்குகள் அமர்ந்திருக்கலாம்., ஆனால் பிக்குகளுக்கான சீட்டில்த்தான் கர்ப்பிணிகள் உட்பட ஊனமுற்றவர்கள் கூட அமர முடியாது என்றிருக்கும் அந்த நாட்டில் காஞ்சன தேரோ எனும் அந்த பிக்கு அந்தத்தீவு முழுதும் மிகப் பிரபலமடைந்திருந்தார். அவரது நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் பௌத்தமதத்தை சார்ந்தே இருந்தது என்றாலும் பல இடங்களில் விசித்திரமாகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார்.

                   அவர் நினைத்தால் பூதங்களை உருவாக்கிடமுடியும் உருவாகின கிறீஸ் பூதங்கள்., அவர் நினைத்தால் அரசமரங்களின் கீழ் புதிதாக புத்தரை நிறுவிடமுடியும் ஆம் அவை இந்துக்கோயில்களாகவோ தனியார் காணிகளாகவோ இருக்கும் பட்சத்தில் முன்னுரிமையும் கூட. முக்கியமாக தமிழ் பிரதேசங்கள் தோறும் எங்கெல்லாம் அரசமரம் இருக்கிறதோ அங்கெல்லாம் புத்தர்கள் உருவாகினார்கள்., ஏன் ஆத்திர  அவசரத்துக்கு ஒண்டுக்கு ஒதுங்கும்  அரசமரங்களின் கீழ்கூட முட்டுக்கட்டாய் முளைத்த புத்தர்கள் ஏராளம் . அவர்களால் அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்க முடியும் தேர்தல்களுக்கான நாட்கள் கூட அவரால் தான் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி முடிய ஒருவருடம் இருக்கும் முன்பே இவர்களால் தேர்தலை நடத்தி மண்ணைக் கவ்விக் கொண்ட பெருந்தகைகளும் , துட்டகைமுனுவின் வாளிற்கு இரத்தக் காணிக்கை வழங்கி அரசியலில் கோட்டைவிட்ட அரசியல்வாதிகளும் இவரது அடிவருடிகளே.

      மக்களும் , அரசியல் வாதிகளும்  இவரால் கௌரவிக்கப்பட்டார்களோ இல்லையோ  கண்டதை எல்லாம் விழுங்கும் காக்கைகள் போல இவர் கௌரவத்தை விழுங்கியே வாழ்ந்து வந்திருக்கிறார் அந்தநாட்டில். அதற்கு இவர் சொல்லும் காரணங்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானதாய் எல்லாம் இருப்பதில்லை என்ன கொஞ்சம் மூளை வேகிப்போகும் அவ்வளவுதான். இதே காரணங்கள்தான் இவர்களால் காலம்காலமாய் சொல்லப்பட்டு வருவதும் கூட. பல இடங்களின்  விகாரை பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளில் இவர்கள் பொலிசைத் திருப்பி அடித்த போதுகூட இதே காரணங்கள் தான் கூறப்பட்டன. “அரசாங்கமே எம்கையில் போலீஸ் யார் கேட்க..?” என்றெல்லாம் இவர்களது காரணங்கள் சிறுபிள்ளை  மிரட்டல்களாய் எப்போதும் அமைவது இல்லை மாறாக அடக்குவதாய் இருந்திருக்கின்றன. அவர்களுக்கு தெரியும் அரசாங்கம் தம்கையில் இருப்பதற்கான காரணமும் அதுதான்.

                              “அடே மூடர்களே.., நாம் புனித மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களடா.. எங்கள் ஆசைகள் அனைத்தையும் துறந்து வாழ்வின் அர்த்தத்தை நோக்கிப் பயணிப்பவர்கள் நாங்கள்.. நீங்கள் எங்களுக்கு செய்யும் சேவைமூலம் புண்ணியத்தையும் அடுத்தபிறவிக்கான நல்பயன்களையும் சம்பாதிக்கிறீர்கள்.. மாறாக எம்மைப் பகைப்பதன் மூலம் எங்களின் சாபத்தையல்ல அந்த கர்மாவின் சாபத்தையே  சம்பாதிக்கிறீர்கள்... எங்களை நீங்கள் போற்றாவிடில் பேய்களும் பிசாசுகளும் இந்நாட்டில் குடிகொள்ளும்.. வடக்கிலும் கிழக்கிலும் இருந்து சாத்தான்கள் உங்களை சூழ்ந்துகொள்ளும்.. நீங்களே சாத்தானாகிப் போவீர்கள்.. உம்மைநாம் அறைவது, மேலும் எம்மை அவமதித்து உங்கள் பாவங்களை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்பதற்காகவே.. நாம் உம்மிடம் பணிந்து போவது எமக்கு புண்ணியத்தையும் உமக்கு பாவத்தையுமே தேடித்தரும்.. உமக்கு பாவம் சேர்த்து கிடைக்கும் புண்ணியம் எமக்கு வேண்டாம்.. என்மார்க்கம் என்னைப்பார்துக்கொள்ளும் ஆனால் நீங்கள்..?? எம்மை மதிப்பதன் மூலமும் காப்பதன் மூலமுமே புண்ணியங்களை தேடிக்கொள்ள முடியும்.. உங்களுக்கு புண்ணியம் சேர்க்கும் மூலமாய் - நானிருப்பதன் மூலம் என்கணக்கில் புதிதாயும் அதிகமாயும் புண்ணிய வரவு நிகழும் ” இப்படியான வாதங்களும் காரணங்களுமே இவர்களை இன்னும் கேட்பாரற்று ஆக்கியிருந்தது அந்த நாட்டில்.

                வாயிலிருந்து லிங்கம் எடுக்காமல், பிள்ளைவரம் கொடுக்காமல், கோட்டைகளை கட்டி ஆசிரமங்கள் என்று புளுகாமல் , கையிலும் காற்றிலும் வீபூதி எடுக்காமல் , பரவசநிலைக்கு ஆட்படுத்தும் பானங்களை வழங்காமல், கமராக்களுக்கு ஆபாசம் கற்பிக்காமல்  இப்படியான சொல்லாடல்கள் மூலமும் அரசியலில் தகுந்த சதியாலோசனைகள் மூலமாயும் அந்தநாட்டின் நொட்டு நொடிசெல்லாம்  பிரபலமானவர்தான் காஞ்சன தேரோ. அந்நாட்டின் அரசியல் முதல்கொண்டு கட்டைப் பஞ்சாயத்து வரை இவர்கையில் இருந்ததாலோ அல்லது இவர் சொல்ப்படியே நிகழ்ந்ததாலோ தன்னை கிட்டமுட்ட கடவுளாகவே கருதியிருந்தார் காஞ்சன தேரோ. நரகமும், சொர்க்கமும் தான் சொல்லும் திசையில் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் போகும் என்பது அவரது நினைப்பின் உச்சமாகவே இருந்திருக்கிறது இன்றுவரை ஏன் இனியும் கூட அப்படித்தான் இருக்கும்.

****

இனியும் இப்படியொரு நாற்றத்தை சகிக்கமுடியவில்லை காஞ்சன தேரோவால். முற்றிலும் இருட்டான ஏதோ ஒரு பிணநாற்றம் பிடித்த இடத்தில்க் கிடக்கிறார்  என்பதைத்தவிர எதையுமே சிந்திக்கத் தோன்றவில்லை .  யாரோ தன்னை கடத்தி வந்து விட்டார்களா என்ன..?? ஐயோ என்னைக்கடத்தி வீணாக பாவத்தை சம்பாதிக்கபோகும் அந்த சாத்தான்களைப் பாவங்களில் இருந்து காப்பாற்றியே ஆக வேண்டும் அவர்கள் யாராக இருக்கும் பட்சத்திலும் .  ஆனால் யார் கடத்தி இருப்பார்கள்.?

                             மெல்ல குரலெடுத்து உறுதியாய் கதைத்தார் காஞ்சன தேரோ “யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் ..?” ஹ்ம்ம்கூம் பதிலே காணோம்.

“என்னைக்கடத்தி பெரும்பாவத்தையும் பழியையும் தேடிக்கொள்ளாதீர்கள்” – அறிவுரை

“உங்களை எதுவும் என்னால் செய்துவிட முடியும்”- மிரட்டல்

“அறவே ஒழிந்து போக சபிக்கவும் முடியும் “-சாபம்

“சகல சௌபாக்கியமும் அளிக்கவும் முடியும் “ – வரம்

               இப்படி எப்படியெல்லாம் கதைத்தால் மனித மனம் இழகுமோ அப்படியெல்லாம் கதைத்தார் காஞ்சன தேரோ. ஆசைகளையும் அமிர்தங்களையும் வார்த்தைகளிலே கூட்டி வாயிலேயே சொர்க்கத்தைப் படைத்தார். இன்னும் என்னவெலாம் முடியுமோ அதெல்லாவற்றையும் விட்டெறிந்தார் வார்த்தையில்.. ஹ்ம்ம்கூம் துளிக்கும் பிரயோசனமில்லை. எந்தவிதப் பதிலுமே இல்லை.

மௌனமும் அவமதிப்பும் கோபத்தை வரவழைக்க அறையினுள் அடித்த நாற்றத்தை வார்த்தையில் இறக்கிப் பொறிந்து தள்ளினார் கோபத்தில் ”அடே சாத்தானே.. நீ யாராயிருப்பினும் நாசமாயே போ.. என்னைக் கடத்தி துன்பதிற்குள்ளாக்கும் நீயும் உன் கொள்கையும் ஒழிந்து போகட்டும்.. அடே சாத்தானே நான் கடவுளடா என்னால் எதுவுமே செய்துவிடமுடியும்.. என்னை வெளியில் மட்டும் விட்டுப்பார்..எதுவுமே செய்துவிடமுடியும் ...நான் கடவுளடா...அடேய் நான் கடவுளடா...” வேதனையும் கோபமும் கண்ணீரையும் கூடவே வரவழைத்திருந்தது பிக்குவிற்கு.

“நீ கடவுளென்றால்., நான்..??” ஒரு வினாடி ஒரே ஒரு வினாடிதான் பதில் அதுவும் அமைதியாயும் சற்று அழுத்தமாயும்.

“யார்..? யார் அது..? எங்கிருந்து அந்த குரல் கேட்டது..? “ எதுவுமே புரியவில்லை பாவம் காஞ்சனவிற்கு.  “நீ கடவுள் என்றால் நான்” இந்த வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன காஞ்சன தேரோவின் காதுகளில். அர்த்தம் புரிந்த மிரட்ச்சியுடன் பின்னால் திரும்பியவரின் கண்களில் அப்பொழுதுதான், அது பட்டது .

                          ஆம் நாட்டை யார் ஆள வேண்டும் என்றே தீர்மானித்த காஞ்சன தேரோ, நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கே நாள் குறித்துக் கொடுத்த காஞ்சனா தேரோ, அந்த தேசமே காலடியில் வீழ்ந்திருக்க உயர்ந்து நின்ற காஞ்சன தேரோ, காணும் இடங்களில் எல்லாம் புத்தனை நொடிப்பொழுதில் உருவாக்கிய காஞ்சனதேரோ, கிறீஸ் பூதங்களை எல்லாம் உருவாக்கி உயிரெடுத்த  காஞ்சனதேரோ, அரசாங்க கட்டளையுடன் வந்த விதானையையே வசைகளால் மிரளச்செய்த காஞ்சனதேரோ, பொலீசையே அறைந்த காஞ்சன தேரோ இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்துதீர்த்த காஞ்சனதேரோ, சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுளாகவே வாழ்ந்து கடவுளாகவே  தீர்மானித்த அந்த மனிதக்கடவுள்  காஞ்சனதேரோ – நாட்டின் பணக்காரர்கள் எல்லாம் வீழ்ந்து கிடந்த கால்களை எலிகள் தின்ன- பொலீசை அறைந்த கைகளை காகங்கள் கொத்தித் தின்ன  - அத்தனைக்கும் மூலமான மூளையை நரிகள் நாசம் செய்ய – வசைபாடிய வாய்களில் புழுக்கள் புழுத்திருக்க - உடலெல்லாம் பூச்சிகள் புத்தெடுத்து, எலும்புகள் வெளியே தெரிய, அகோரமாய் அழுகிய நிலையில் நாற்றமடித்துப் போய்ச் செத்துப் பிணமாய்க்கிடந்தார் அந்த காட்டினுள்.

 

                                                                                                

 

Views: 328