நான் சாபம்.

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.comBanner

'நான் தான் உங்கட சாபம். தரித்திரம் பிடிச்ச இந்த கிழவன் இனி பேசமாட்டான்", எண்டு சொல்லிப் போட்டு வந்திட்டன். அந்த சொல்லு முடியேக்கை என்ரை மனசு கனக்க தொடங்கிட்டுது. அந்தப்பாரத்தை இறக்கி எங்கெ வைக்க? இது கடைசி வரைக்கும் தொடந்து கொண்டிருக்கும்.

பழசை அசை போட்டு பாக்கிறது தானே தனிமையோடை குணம். அதை என்ரை மனசு வேகமாக செய்யுது. உழுது விதைக்கிறது தான் என்ரை தொழில், நான் கடவுளின்ரை நிழலை விதைக்கிறத நம்புறவன். விதையில இருந்து வாற ஒவ்வொரு பூவையும் இங்கெ தான் தூவிக் கொண்டு இருந்தனான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பூ. நிறத்திலை, வாசத்திலை, வடிவத்திலை இப்பிடி நிறைய. ஒரு முறையும் பூக்காமல் விட்டதும் இல்லை. ஆனா ஒரு முறை ஒரு விதை பூக்காமல் போட்டுது. அந்த விதையிலை இருந்து ஒரு கனவு வந்திச்சு. அது தான் என்ரை சாபம் எண்டது எனக்கு அப்ப தெரியேல்லை. கனவை என்ன செய்ய எண்டு தெரியாது. அதை புதைக்கவோ? எரிக்கிறதோ? குழம்பிப்போய் அலைஞ்சு திரிஞ்சன். அப்ப தான் கனவை எங்காகவது எறிஞ்சு போட்டு வரலாம் எண்டு நினைப்பு வந்திச்சு. 

கனவை ஒரு மூட்டையாக கட்டி தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினன். வயசு போன நேரம் கை, கால் வலி இல்லாமல் இருக்குமோ?. என்ரை கால் கடுத்த நேரம் கனவு கதைக்க தொடங்கிச்சு. ''பாவம் நீ என்னை இறக்கி விட்டா வலிக்கிற உன்ரை காலை பதம பிடிச்சு விடுவன்'' கனவு இப்பிடி தான் கதைக்க தொடங்கினது. அப்ப என்ரை காலை என்னாலை தூக்கி வைக்க முடியேல்லை அந்தளவுக்கு காலில வலி. கண் கலங்கிப் போனன், என்ரை வாழ்க்கையில இவ்வளவு நெருக்கமாக யாரும் இருந்தது இல்லை. லேசான மயக்கம் , கீழ இருந்திட்டன். தோளிலை இருந்த கனவு மூட்டையோடை இறங்கி வந்து எனக்கு முன்னுக்கு இருந்திட்டுது.  அப்ப தான் கனவை நேர பாத்தன். எப்பிடி அதை சொல்லுவன். எப்பிடி நீங்கள் அதை பாக்கிறியளோ அப்பிடி தான் கனவு. கனவு ஒரு கண்ணாடி. அதிலை தெரிஞ்சது நான் தான். என்னை நான் பாத்துக் கொண்டே இருந்தன். கால் வலி அப்ப இருக்கேல்லை எண்டு தான் நினைக்கிறன். அப்பிடியே கொஞ்ச நேரம் தான் அயந்து தூங்கிட்டன்

அழுகை சத்தம் ஒண்டு, பாத்த  முன்னுக்கு கனவு அழுது கொண்டு இருந்திச்சு. பதறிப்போய் நிமிந்து பாத்தன் '' உன்னை எப்பிடி நீ வெறுக்கிறாய்' விசும்பலோடை கனவு கேட்டுது. வெறுப்பா? எனக்கு தெரிஞ்சது உழுறதும் விதைக்கிறம் தானே. நான் ஒண்டும் சொல்லேல்லை. ''உன்னை நீ நேசிக்கிறியே'' திரும்பவும் கனவு தான். ' பூக்களை தூவிப்போட்டு அடுத்த விதைப்புக்கு காத்திருக்கிறது தான் என்ரை தொழில்' எண்டன் கொஞ்சம் கோபத்தோடை. 'உன்னை உனக்கு தெரியுமோ?' கனவு கேட்ட அந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியேல்லை . நான் தலையை குனிஞ்சிட்டன். என்னையாவது உனக்கு தெரியுமோ எண்டு கனவு கேக்கேக்கை கனவை பாக்க வேணும் போல கிடந்தது. நான் கனவை நிமிந்து பாத்தன் கனவு எனக்கு கண்ணாடி. அதிலை தெரிஞ்சது நான் தான். என்னை நான் பாத்தன் எவ்வளவு நேரம் எண்டு தெரியாது

இப்ப நடக்கிறது போல தான் அப்பவும் வேகம நடந்தன். நான் இருக்கிற இடத்தை நோக்கி அப்ப பக்கதில வந்திந்த கனவு, ' ஏன் என்னை எறியாமல் விட்டனி' எண்டது. என்னை நான் எப்பிடி எறிவன் இதை எப்பிடி சொல்லுறது எண்டு தெரியேல்லை எனக்கு. 'எனக்கு உழுது விதைக்க மட்டும் தான் தெரியும்' எண்டு சொல்லிட்டு வேகமா நடந்தன். 'அப்ப என்னை ஏன் விதைக்கேல்லை?' விடமால் துரத்திச்சு கனவு ''அது எனக்கு பழக்கமில்லை'' எண்டன். ''உன்னை உனக்கு தெரியாது அது தான் பிரச்சனை'' கொஞ்சமாக என்னை நெருங்கிச்சுது கனவு. 'அது என்ரை வேலை இல்லை' சொல்லிக் கொண்டு நான் ஓடத் தொடங்கினன். கூடவே ஓடி வந்த கனவு 'அது உன்ரை இயலாமை, இனி என்னை விதை என்னை மட்டுமே விதை' எண்டு என்னை தடுக்க வந்திச்சு. வழக்கத்தை மாத்த என்னாலை முடியாது கனவை ஓங்கி அடிச்சன். கனவு உடைஞ்சு தூளாப்போட்டுது. அதே கோபத்தோடை கனவின்ரை துகளை தாண்டி போயிட்டன். 

ஆனா கால் வலிக்கிற நேரம் எல்லாம் கனவின்ரை நினைப்பு வந்திட்டே இருந்திச்சு. 'காலை பதம பிடிச்சு விடுவன்' எண்ட குரல் அடிக்கடி கேட்டுது. அப்ப எல்லாம் கனவை அடிச்சதை நினைச்சு அழத்துடங்கிடுவன். முதல் முதலா என்னை பாத்தததை நினைச்சு பாத்தன். அந்த நினைப்போடையே விதைப்பு காலம் வந்திட்டுது. கனவின்ரை நினைப்பு காணாமல் போட்டுது. ஒவ்வொரு விதையா பாத்து பாத்து நட்டன். பூக்கிற காலத்தில எல்லாம் பூத்து நிண்டுது. ஆனால் எதையும் தூவுறதுக்காக புடுங்க முடியயேல்லை.  ஒரு பூவும் அதுகளை தொட கூட விடேல்லை. உடையஞ்ச கனவை நான் கடந்து வரேக்கை கனவின்ரை துகள் ஒவ்வொண்டும் என்னேடை வந்திட்டுது. எனக்குள்ளை வந்திட்டுது இப்ப இந்த கிழவன் ஒரு கனவு, ஒரு கண்ணாடி. ஒவ்வொரு விம்பமும் இதிலை விழும். ஆனால் தங்களை தாங்களே ஏற்றுக் கொள்ளுவினமோ இப்ப நான் தரித்திரம் பிடிச்ச கிழவன். நான் கனவு, நான் கண்ணாடி, நான் சாபம்.
Views: 319