திரு விஞ்ஞானம்

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBannerசூரியனை மையப்படுத்தி சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ சாத்தியக் கூறுகள் உள்ளன. இன்றைக்கு 460 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிட்டிய நட்சத்திர விசையினால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகள் கதிரவன் முகில் படல் மூலம் வெளியேறி அதற்கும் கோண முடங்கான இயங்குவிசையை கொடுத்தது. இது முகில் சுழற்சி, ஈர்ப்பு செறிவு ஆகியவற்றை விரைவு படுத்தியது. அதனால் செறி தொகுதிகள் இறுக்கமடைந்து மத்தியில் வெப்பம் பெருகியது. இவ்வெப்பம் வெளியேறமுடியாது போய் மையவெப்பம் கூடிக் கொண்டது. இறுதியில் நீர்வாயு கீலியம் ஆக அணுமாற்றம் பெற்று ஒரு நட்சத்திரம் எரிந்து ஒரு சூரியன் உருவாகியது. இது கருநிலைக் கோட்பாட்டின் படி சூரியன் உருவான கதை.

இவ்வாறு உருவாகிய சூரிய மண்டலத்தில் வெடித்து சிதறிய துண்டுகளில் ஒன்று 457 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியாக  உருப்பெற்றது. நீண்ட காலத்தின் பின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்து மேகங்கள் குளிர்ந்து பெருமழை பெய்தது. மழைநீர் தேங்கி கடல்கள் உருவாகி கடல்வாழ் உயிரினங்கள் தோற்றம் பெற 400 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன
இந்த கூர்ப்பின் படி 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சிறிய ஆபிரிக்க குரங்கின் இரு மரபின் வழித்தோன்றலின் ஒன்றான வாலில்லாக் குரங்கினம் ஒன்று எழுந்து நிமிர்ந்து நின்று நடக்க கூடிய ஆற்றலை பெற்றது.
20 லட்சம் ஆண்டளவில் இந்த வாலில்லா குரங்கினம் மனித இனமாக வகைப்படுத்தப்படுகிறது. இதுவரை கிடைக்கப்பட்ட தகவல்களின்படி முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சம் ஒரு பெண் ஆவாள். 1974 இல் ஆபிரிக்கா எதியோப்பிய பகுதிகளில் அவள் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. அவள் Australopithecus afarensis என வகைப்படுத்தப்பட்டாள். பின் இது இளைமணி நிறமூர்த்த ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்த பட்டது.

இவ்வாறு தோன்றிய மனித இனம் பொதுவாக ஆண் பெண் என்ற இரு பாலின வகைக்குள் உள்ளக்கப்பட்டிருந்தன. ஆனால் அண்மைக்காலமாக மூன்றாம் பாலினம் என்ற சொற்றோடர் பற்றிய உரையாடல்கள் உலகம் முழுவதும் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த மூன்றாம் பாலினம் பற்றிய உரையாடவேண்டுமெனில் பின்வரும் தகவல்களையும் உள்ளடக்குதல் அவசியமாகிறது. 

மனிதனில் பால்நிலை தீர்மானிக்கும் படிநிலைகள் பற்றிய பூரண தெளிவு அவசியம்.மனிதனில் பால்நிலை தீர்மானிக்கும் படிநிலை கருவில் நிகழ்கிறது. இது நிறமூர்த்தங்களாலும் ஹோர்மேன்களாலும் தீர்மானிக்கப்பட்டு உடல்கூற்றியல் சார்பாக வெளிப்படுத்தப்படுகிறது. பால்நிலையை தீர்மானித்தலானது. உள்ளக மற்றும் வெளியக இலிங்க உறுப்புக்கள் உருவாக்கம், மார்பு, உடல்நிலை முடி உருவாக்கம் ஆகியன பிரதான காரணியாகிறது. மனித கலங்களில் 46 நிறமூர்த்தங்கள், 23 சோடிகளாக காணப்படுகின்றது. இதில் 1 சோடி நிறமூர்த்தம் பால் நிர்ணயத்திற்கு பொறுப்பான இலிங்க நிறமூர்த்தங்கள் ஆகும் ஆணில் XY எனவும் பெண்ணில் XX எனவும் பொதுவாக இவ்விலிங்க நிறமூர்த்தங்கள் அமைத்திருக்கும்.

ஒரு மடிய பிரிவினால் உருவாக்கப்படும் சூல்கள் X நிறமூர்த்தத்தினையே கொண்டிருக்கும். விந்தணுக்கள் X அல்லது Y நிறமூர்த்தத்தினை கொண்டிருக்கும். இவை இரண்டும்  இணைந்து இரு மடிய கலம் உருவாகும் பொழுது  XX பெண்ணாகவும் XY ஆணாகவும் உருவாகின்றது. 

ஆண் பெண் இனப்பnருக்க தொகுதிகள் உருவாக்கம் பெறுவது முளைய நிலையில் மீசோநெப்றிக் (mesonephric duct) மற்றும் பராமீசோநெப்றிக் (paramesonephric duct)  தொகுதிகளில் இருந்தாகும். Y நிறமூர்த்தங்களில் காணப்படும் SRY gene தொகுதி ஆதிக்கமடைந்தால் மீசோநெப்றிக் (mesonephric duct தொகுதி விருத்தியடைந்து விதைகளை உருவாக்கும். பராமீசோநெப்றிக் (paramesonephric duct) தொகுதியின் விருத்தி கட்டுப்படுத்தப்படும். SRY gene இல்லாவிடத்து பராமீசோநெப்றிக் (paramesonephric duct) தொகுதி விருத்தியடைந்து சூலகங்கள் உருவாக்க மீசோநெப்றிக் (mesonephric ductதொகுதியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். அது சாதாரணமாக நிகழும் பொறிமுறைகளின் சுருங்கிய வடிவம் ஒன்று.

இதில் நிறமூர்த்த்தில் ஏற்படும் குளறுபடி காரணமாகவோ அல்லது ஹோர்மோன்கள் காரணமாகவோ சுரப்பிகளில் பிரச்சனையே இருபாலினர் (Intersex) உருவாக காரணமாகிறது.
உதாரணமாக 

1. X நிறமூர்தத்தினை காவிவரும் சூல் அரிதாக இலிங்க நிறமூர்த்தம் எதனையும் காவிவராத விந்தணுவுடன் ஒன்று சேரப் பெறும் அவ்வேளைகளில் நிறமூர்த்தம் 22+XO கொண்ட பெண்கள் உருவாக்கமடையும்

2. ஒருமடிய பிரிவினால் உருவாகும் வழு வகைகாரணமாக இரு மடிய நிறமூர்த்தத்தைக் கொண்ட சூல் (XX) அல்லது விந்து (XY) ஒரு மடியக்கலத்துடன் இணைவதால் 22+XXY உருவாகிறது.

3.Congenital adrenal hyperplasia – கருவில் XX நிறமூர்த்தங்களைக் கொண்ட பெண் சிசுவில் 21 Hydroxylase deficiency, 11 hydroxylase deficiency அல்லது 3 beta hydroxylase deficiency நொதிய குறைபாட்டால் பெண் இலிங்க உறுப்பு ஆண் என்றோ பெண் என்றோ பிரித்து அறியமுடியாத பொது இலிங்க உறுப்பாக ( ambiguous genitalia ) உருவாகுதல்

4.இது போன்ற நிறமூர்;த்த  இனப்பெருக்க ஹோர்மோன்கள் இலிங்க அங்க உருவாக்க பொறிமுறையில் தோன்றும் சிக்கல்களால் உருவாக இருபாலினர் 2015 அமெரிக்க உளவியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் (American psychiatric association 2015 ) பால் (Sex) வரைவிலக்கணத்தில் ஆண் (Male), பெண் (Female), உடன் மூன்றாவதாக இருபாலினர் (Intersex) இம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிமுகங்களுடன் பால், பால்நிலை தொடர்பான குழப்பங்கள் பற்றிய ஆய்வினை தொடங்கலாம். இன்னும் மேலதிக விளக்கங்களை இலகுவாக புரிந்து கொள்வதற்காய் பின்வரும் சொற்றொடர்களின் விளக்கத்தை அறிதல் வேண்டும்

1.பால் - Sex
இது ஒருவரின் உயிரியல்  சார்ந்த செயற்பாடு. இது பொதுவாக ஆண் (Male), பெண் (Female) அல்லது இருபாலியலாளர்கள் (Intersex) என வகைப்படுத்துகிறது. இவ்வாறு வகைப்படுத்த பாலுறுப்புகள் (Gonads) நிறமூர்த்தங்கள் (Chromosome), உள்ளக இனப்பெருக்க உறுப்புகள் (Internal sexual organs), இலிங்க உறுப்புகள் (External sexual organs) என்பன பயன்படுத்த படுகின்றன.

2.பாலினம் (Gender) 
பாலினம் என்பது ஒரு நபரின் உயிரியல் சார்ந்த பால் நிலை (Biological sex) அவர் வாழும் காலம் மற்றும் கலாச்சாரத்திற்று ஏற்ப மனப்பாங்கு உணர்வுகள் நடத்தை மூலம் வெளிப்படுத்தபடுபவை ஆகும்.

3.பாலின அடையாளம் (Gender identity) 

ஒருவர் தனது பாலினத்தை எவ்வாறு உணர்ந்து கொள்கிறார் என்பதாகும். அதாவது உணர்வு ஆணாக அல்லது பெண்ணாக இருக்கும் உணர்வுடன் தொடர்பானதாகும். உயிரியல் சார்ந்த பால் (Biological sex) மற்றும் பாலின அடையாளம் ஒத்து போகவிடத்து அவர் மாற்றுப்பாலினமாக வகைப்படுத்தப்படுகிறார்

4.பாலினத்தை வெளிப்படுத்தல் (Gender expression) 

ஒருவர் தனது கலாசாரத்திற்று ஏற்ப தனது பாலினத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதாகும்.உதாரணமாக ஆடை அணியும் முறை தொடர்பாடல் செய்யும் முறை ஈடுபாடுகளை வெளிப்படுத்தும் முறை.

5.பாலியல் நாட்டம் (Gender Orientation) 

என்பது ஒருவர் யாருடன் நீடித்த உணர்வுபூரணமான காதல் வயப்பட்ட அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. இது ஒருவரின் அடையாளம், நடத்தைகள், சமூக உறுப்பாண்மையுடன் தொடர்புடையது.
பொதுவாக 
1.எதிர்பால் நாட்டம் - Heterosexual
2. இருபால் நாட்டம் - Bisexual
3. தற்பால் நாட்டம் - Homosexual
4. நாட்டம் இன்மை - ASexual
5. நாட்டம் தொடர்பாக தெளிவற்ற நிலை

பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் சில உயிரியல் (Biological) மாறுபாட்டால் தம்மை எதிர்ப்பாலினமாக அகவுணர்ந்து பல உளவியல் சிக்கல்களை கடந்து தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை முறையையும் அவ்வாறே நடந்து கொள்பவர்ள் அலி அல்லது பேடி என்ற சொல்லால் அறியப்பட்டு வந்தனர். காலமாற்றம் ஏற்படுத்திய மாற்றம் அலி என்ற சொல் கேவலப்படுத்தி மகிழத்தக்க இழிபிறவிகளாக கருத செய்தது. அதற்கேற்ப அலி அல்லது பேடி என்ற சொற்பயன்பாடும் ஒரு கேலிப்பொருளானது. இந்த சிறிய அறிமுகத்தோடு திருநங்கை மற்றும் திருநம்பி என்ற பதங்களை அறிய முற்படுவோம்

1. மாற்றும்பாலினர் (Transgender)

ஒன்றுக்கு மேற்பட்ட பாலின வாழ்க்கை அனுபவத்தை உள்ளவர்கள். இது தங்களை மாற்று பாலியளராக இனம் காண்பர். பாலின பல்வகை வேறுபாட்டுக்குள் (Gender spectrum) இருப்போர் என தம்மை விபரிப்பார்கள். அதாவது ஆண் அல்லது பெண் என்ற பிரிவுக்கு வெளியில் வாழ்பர்பன போன்றோரை உள்ளடக்கலாம்.

2. மாற்று பாலியலாளர்கள் (Transsexual)

பிறப்பால் ஒரு பாலினமான அடையாளம் காணப்பட்டு ஆனால் தங்களை வேறாக அடையாளம் காண்போர். இவர்கள் ஹோர்மோன் சிகிச்சை, பாலை மாற்றுவதற்று சத்திர சிகிச்சை அல்லது வேறு தோவது செய்முறைகளின் ஊடாக தாங்கள் உள்வாரியாக உணரப்பட்ட அடையாளத்திற்கு தக்க தங்களது உடலை சீரமைத்துக் கொள்ள ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மருத்துவ சிகிச்சையை தேடுபவர்கள் அல்லது உட்படுபவர்கள் 

3.இருபாலியலாளர்கள் (Intersex)

பிறப்பின் போதோ அல்லது பருவமடைந்து பின்போ அவர்களுடைய ஒடல் சிறப்பியல்புகளில் இருந்து ஆண் அல்லது பெண் என இலகுவில் பாகுபடுத்த முடியாதோர்

4.மாற்றுப்பாலின உடை அணிபவர்கள் (Crossdresser)

தனது உணர்வுரீதியான உளவியல்ரீதியான சமூநிலைக்காக எதிர்பாலினருடன் பொதுவாக தொடர்புடைய உடைகளை அணிபர்கள்.

இவர்கள் பற்றி உரையாடல்கள் ஆரம்பகாலத்திலும் காணப்பட்டன அவை பற்றிய தகவல்களை கீழே பார்க்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் அலி பேடி இடமி சிப்பந்தி கிலிபம் சண்டகம் கோடிர் என முப்பதிற்கும் மேற்பட்ட சொற்களால் அழைக்கப்பட்டனர்.சிங்களத்தில் நபுக்சக எனவும் அரபுமொழியில் முக்காகத்துன் எனவும் பாக்கிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் முக்காடதுன்களுக்கு பதிலாக ஹிஜ்ரா எனவும் உருதில் ஹிஜ்ரா என்றும் தெலுங்கில் தொம்மதிவாது , கொஞ்சவாது என்றும் கன்னடத்தில் கேதி என்றும் கேரளத்தில் மேனகா என்றும் அழைக்கப்பட்டனர். அண்மைக்காலங்களில் திருநங்கை அல்லது திருநம்பி என்று அழைக்கப்படுகின்றது.

9 (ஒன்பது) என்று மாற்று பாலினத்தவரை எள்ளி நகையாடும் தன்மை காணப்படுகிறது. உண்மையில் ஒன்பது உருவான கதை சுவாரசியமானது. 1947 இல் Dr.Harry Klinefelter மற்றும் அவர்களது ஆராச்சியாளர்கள் இணைந்து 9 ஆண்களில் அவர்கள் நடத்திய ஆராச்சி பற்றிய முடிவுகளை சமர்ப்பித்தனர். அவ்வாண்கள் அனைவரும் முலை பெருத்து, விதைகள் சிறுத்து, சிறந்த விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலாதவர்களாக காணப்பட்டனர். இவர்கள் 1950 காலப்பகுதிகளில் XXY எனும் நிறமூர்த்தக் குறையாடு உடயவர்கள் அறியப்பட்டதுடன் Dr.Harry Klinefelter நினைவாக Klinefelter syndrome  எனவும் பெரியப்பட்டது. 

அரவாணன் என்னும் பெயர் உருவானதும் அண்மையிலே. கூத்தாண்டவர் கோவில் தமிழகத்தில் 44 இடங்களில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் விழாவில் நடந்த அழகிப்போட்டிக்கு தலைமை ஏற்ற மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர். இரவி 12.05.1998 அன்று முதல்முதலாக அரவாணி எனும் பெயரை முன்மொழிந்தார்.

எகிப்திய வரலாற்றில் அரசர்களை பரோக்கள் (Pharaoh) என அழைப்பர். பரோக்கள் அனைவரும் கட்டாயம் ஆண்களாவே இருக்க வேண்டும் என்பதும் விதி. கிமு 1450 ஆம் ஆண்டில் எகிப்த்தினை Hatshepsut எனும் பெண் அரசாண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக அவள் வெளி சமூகத்திற்கு ஆண் ஆகவே அறிமுகப்படுத்தப்பட்டாள். இன்றும் அவள் பற்றிய ஓவியங்களில் மேலாடையற்று மார்பகங்கள் விருத்தியடையாததாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

பின் வந்த Amenhotep எனும் பெயருடையவன் Nefertiti எனும் பெண்ணை மணந்து கொண்டு Akhenaten எனும் பெருடன் அரசை ஆட்சி செய்தான். இவன் தன்னை பெண்ணாகவே வெளிப்படுத்தினாள் இன்றும் ஓவியங்களிவ் இவன் உருத்தில் மார்பகங்கள் விருத்தியடைந்து போலவும் இடுப்பு, பெண்களை போல விரித்தியடைந்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவன் எகிப்திய பரோ வரலாற்றில் ஒரு Herotic king என விபரிக்கப்படுகிறான். தன்னுடைய மாற்றுபாலின விருப்பம் தொடர்பாக எகிப்திய கடவுகளிடம் விண்ணப்பம் செய்ததாகவும் அது மறுக்கப்படவே கடவுகளிடம் இவன் போர் தொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின் இவன் எகிப்தில் உள்ள கடவுள் சிலைகளின் ஆண்குறிகளை அகற்றிவிட உத்தரவிட்டதாகவும் வரலாறு கூறுகின்றது.


சிகண்டியின் வரலாறும் மகாபாரததில் ஒரு திருநம்பியின் வெளிப்பாடே. காசி அரசனுக்கு மூன்று மகள்கள் அம்பா, அம்மிகா, அம்மாலிகா. இவர்களின் சுயம்வரத்தில் பீஸ்மர் அங்கிருந்த மன்னர்களை தோற்கடித்து அம்மூவரின் விருப்பத்திற்கு எதிராக அஸ்தினாபுரத்து அரசன் விசித்திரவீரியனுக்கு மணம் முடிக்க கொண்டு சென்றார். ஆனால் அம்பா சால்வ நாட்டு மன்னிடம் மனதை பறிகொடுத்திடுந்தாள். எனவே விசித்திரவீரியனை அம்பா மணந்து கொள்ளாது அவள் தங்களை மணந்து கொள்கிறான். அம்பா தான் விரும்பியவனை நாடிச்சென்றாள். அவளை பீஸ்மர் ஜெயித்து சென்றதால் சால்வநாட்டு மன்னன் அவளை ஏற்க மறுத்தான். பீஸ்மரிடம் திரும்பி வந்ம அம்பா தன்னை மணந்து கொள்ளும் படி வற்புறுத்தினாள். ஆனால் பீஸ்மர் தன் தாய் கங்காதேவிக்கு செய்த சத்தியமாக பிரம்மச்சரியத்தை மீற மாட்டேன் எனக்கு கூறி அவள் வேண்டுகோளை மறுத்தார். இதனால் அவமானமும் கோவமும் அடைந்த அம்பை பிஸ்மரை பழிவாங்க கடும் தவம் புரிந்து மறுபிறவி எடுக்கிறாள். பிஸ்மர் குருசேத்திரத்தில் அர்ச்சுனனின் அம்புபடுக்கையில்  உயிர் துறக்கிறார். பீஸ்மர் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த மாட்டேன் எனும் கொள்ளை உடையவர். அதே நேரம் பெண்கள் அக்காலத்தில் யுத்தகளத்திற்கு யுத்தம் செய்ய செல்வது மரபு இல்லை. எனவே சிகண்டி பெண்ணாகப் பிறந்து ஆணாக தன்னை வெளிப்படுத்தி வந்த சிகண்டி ஆண்வேடம் தரித்து களம் சென்று பீஸ்மரை வீழ்த்துகின்றாள். ஆகா சிகண்டி என்ற கதா பாத்திரம் திருநம்பியின் வெளிப்பாடே எனக் கொள்ளலாம்.

திருநங்கைகள் குறித்த மற்றயஇலக்கிய பதிவுகள்.

"பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க" 
(திருவாசகம்- திருவண்டை பகுதி 57)

"ஆண் எனக் தோன்றி அலி எனப் பெயர்த்து" 
( திருவாசகம் - திவண்டை பகுதி 138)

"பெண்ணாகி ஆணாய் அலியுமாய் பிறங்கொள்சேர்" 
(திருவாசகம்- திருவெண்பாவை 8)

"ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்" 
(திருவாய்மொழி)

"பெண் ஆண் அலியாகும் பித்தா பிறை சூடி" 
( சம்பந்தர் 18 – 3)

"ஆண்டென் அலியுரு வாய்நின்ற ஆதியை" 
(திருமந்திரம் மறைப்பு 3: 420)

இதனடிப்படையில் நோக்கினால் இந்து சமயக் கடவுளரை மூன்றுபாலினமாக உருவகப்படுத்தியுள்ளமை தென்படுகிறது. இதுமட்டுமன்றி சோதிடத்தில் புதன் மற்றும் சனி ஆகிய நாட்கள் அலி நாட்கள் எனப்படுவதுடன் மிருகசீடம் , சதயம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் அலி நட்சத்திரங்கள் எனவும் அழைக்கப்டுகின்றன். மேலும் சிவன் அர்த்நாரீஸ்வர அவதாரம் எடுத்துக் கொண்டதாகவும் விஸ்ணு மோகினி அவதாரம் எடுத்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறிநிற்கின்றன.
 
கிறிஸ்தவ சமயம் "அண்ணகன்" என்னும் பதத்தை மிகவும் தெளிவாக வேதாகமங்களில் பயன்படுத்துகிறது

"தாயின் வயிற்றில் இருந்து அண்ணகனாய் பிறந்தவர்கள் உண்டு: 
மனுசர்களில் அண்ணகராயாக்கப்பட்டவர்கள் உண்டு: 
இதனை ஏற்றுக் கொள்ள வல்லவன் ஏற்றுக் கொள்ளக்காவான்" 
(மத்தேயு 19:12)

"அவ்வாறே அண்ணகனும் தன்னை பட்ட மரம் என்று கூறாதிருக்கட்டும்" 
(ரசயத 56:3)

இவ்வடிப்படையில் அண்ணகன் என்ற சொல்லாடலோடு ஒரு அங்கீகரிக்கப்பட்ட இனமாக கிருஸ்தவ மதம் இதை பதிவு செய்கிறது.

தமிழின் முதல் தத்துவ நூல் எனப் போற்றப்படும் நீலகேசி திருநங்கையின் துன்பம் பற்றி இவ்வாறு கூறுகிறது. 
"பேடி வேதனை பெரி
தோடி யூரு மாதலாற்
சேடி யோடு வண்யிற்
கூடியாவதில்லை"

அது போலவே தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகிறது.

"பெண்மை சுட்டிய மிருகங்கள் உயர்திணை மருங்கின் 
ஆண்மை திருந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் தத்தமக்கிலவே
உயிர்திணை மருங்கில் பால் பிரிந்திசைக்கும்"

 மேலும் பெண் தன்மை மிகுந்தால் பெண்பாலிலேயே அழைக்கவேண்டும் என்றும் பெண்ணாக இருந்து ஆண் தன்மை மிருதியாக இருந்தால் ஆன் விகுதியினை வினை முடிவே கொடுக்க வேண்டும் என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது.
பேடி என்ற சொல் ஆண்பால் சொற்களை குறிக்கும் ஈறுகளுடன் வருவதற்கு இடமில்லை (495) என்று கூறுகின்றது.

நன்னூல்
"பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லாது அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணை அன்னாவும் ஆகும்" என்றும் கூறுகிறது.

புறநானூறு
"சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் 
கூனும் குறறும் ஊனமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு 
எண்பேர் எச்சம் என்று எவை எல்லாம் 
பேனதமை அல்லது ஊதியம் இல்"
எனக் கூறுகின்றது

திருக்குறள்
பகையத்து பேடிகை ஒவ்வாள் அவையகத்து
அஞ்சும் அவன் கள்ள நூல் - குறள் 727

போர்க்களத்தில் பேடியின் கையில் உள்ள கத்தி போல் சபை ஒடுக்கம் கொண்டவன் கற்ற கல்வி யாவும் சபையில் பயனற்று போகும்.

நாலடியார் பார்வையில்
செம்மையொன்றில் சிறியார் இனத்தவராய்க்
கொம்மை வரி முலையாள் தோள் மரிஇ உம்மை
வலியால் பிறர்மனை மேல் சென்றாரே இம்மை 
அலியாகி ஆடி உண்பர் - நாலடியார் 35

முற்பிறப்பில் தமது வலிமையில் பிறர் மனைவியை கவர்ந்து சென்றவரே இப்பிறப்பில் அலித்தன்மை கொண்டு பிறக்கின்றனர். இவ்வாறு பிறக்கின்றவர் வயிற்றுப்பிழைபிற்காகத் தெருக்களில் வாழ்கின்றவர்கள் என நாலடியாரில் அலிபிறப்பு பற்றி கூறப்படுகிறது.

திருமந்திரம்
"குழவியும் ஆணாய் வலத்து வாகில்
குழவியும் இரண்டாம் அபாகக் எதிர்க்கில் 
குழலி அலியாகும் கொண்டக்கால் ஒக்கியே"
திருமந்திரம் 446

சுவாச உயிர்ப்பு இருவரும் மருவுங்காலத்து வலது மூக்கின் வழி வந்து கொண்டிப்பதாக பிறக்கும் மகவு ஆண். இடது மூக்கின் வழி வந்து கொண்டிருந்தால் பெண்ணாகும் இரண்டு மூக்கினால் ஒத்து வந்து கொண்டிருந்தால் பிறப்பது அலியாகும் எனக் கூறுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் பேடிக்கூத்து என்ற சொல்வடிவம் பயன்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'காமன் ஆடும் பேடாடலும்' என்கிறது சிலப்பதிகாரம் ( அரங்கேற்றும் காதை 22) இது வாணாசுரன் நகரத்திலிருந்து தன் மகனாகிய அநிருத்தனை சிறை நீக்க ஆண் திரித்து பெண் கோலத்துடன் காமன் ஆடிய கூத்தை குறிப்பதாகும்.

"பேடிகாலத்ததும் பேடி கண் குநகும்"
"பேடியர் அன்றோ பெற்றியின் நீங்கிடின்"
"ஆண் பிறப்பு ஆக் அருளறம் ஒழியாய''
"நல்லாய் ஆண் உரு நாள் கொண்டிருந்தேன்."

இனி சமகால நிலவரங்களை அலச ஆரம்பிப்போம்.

இலங்கை சட்டக் கோவையைப் பொறுத்தவரை ஓர்பாலின சேர்க்கை என்பது இன்றும் அங்கீகரிக்கப்படவில்லை. இலங்கை தண்டனை கோவை 365 A 22 இன் படி ஓர் பாலின சேர்க்கை என்பது 10 வருடம் வரை தண்டிக்க கூடிய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.தற்போதைய இலங்கைய ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களால் 17.8.2016 அன்று நிலுக்கா எகநாயக (Niluka ekanayake) எனும் மாற்று பாலின திருநங்கை மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில் மாற்றுப்பாலினர் தொடர்பாக Equal ground எனும் அரசசார்பற்ற லாபமின்றிய நிறுவனம் ஒன்று சேவையாற்றி வருகிறது. அவர்கள் மாற்றுப்பாலித்தினரின் பிரச்சனையை தீர்த்து வைத்தல் அவர்களின் உரிமையை பெற்றுக் கொடுத்தல் போன்ற விடங்களில் செயற்பட்டு வருகின்றது.163 நாடுகளில் திரு நங்கைகள் மற்றும் திரு நம்பிகளை அங்கீகாரம் செய்துள்ளனர்.
 
சமகாலத்தில் புரிதலில் உள்ள பிரச்சனை இருபாலினரையும் மாற்றுப்பாலினரையும் ஒன்றாகக் கருதுதலும் அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்ளாமல் விவாதத்தில் ஈடுபடுதலும் ஆகும். மாற்றும்பாலினர் நம் சமூகக்க கட்டமைப்பு உருவாகிய காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றார்கள். தற்காலத்தில் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக ஒரு குழுஅமைத்து வாழும் முறையினைப் பின்பற்றி வருகிறார்கள் வீட்டில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகள் மனஅழுத்தங்கள் என்று பல காரணங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பின்புலமாக இருந்தாலும் அவர்கள் அவ்வாறு சிறுகுழுக்களாக சிறிய வட்டத்தினுள் ஒடுங்கிக் கொள்ளுவதால் அவர்கள் வெளியுலக தொடர்பை துண்டித்துக் கொள்கிறார்கள் இச்செயற்பாடு ஆரோக்கியமானதா என்பது கேள்விக்குரியதே மேலும் மாற்றுப்பாலினர் தம்மை இருபாலினராக சமூகத்திற்று அடையாளம் காட்டிக் கொண்டு இது நிறமூர்த்தக் குறைபாடு, இயற்கையின் சாபம் என கூறிக் கொள்வது எவ்வித்திலும் பொருத்தமற்றதன்று.

பாலினம் அவரவர் வாழும் சமூகக்கட்டடைமைப்புக்கு ஏற்ப வெளிப்படுத்தப்படும் விடயம் என்பதால் ஒருவர் தன் பாலினத்தை மாற்றுப்பாலினமாக உணர்ந்து கொள்ளுதல் அச்சமூகக் கட்டமைப்பின் தவறா என்ன வினா இக்கட்டுரை முடிவில் முன்வைக்கபட்டுகிறது.

நன்றி

சிவகுமாரன் டிசாந்த்

உசாத்துணை:

1. Anderson, Don L. (1989) Theory of the Earth

2.http://news.nationalgeographic.com/news/2006/09/060920-lucy.html

3.Langman's Medical Embryology

4.guidelines for psychological practice with lesbian gay and bisexual clients https://www.google.lk/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwj4hLDi9tTQAhWIM48KHQibCEoQFggiMAE&url=https%3A%2F%2Fwww.apa.org%2Fpubs%2Fjournals%2Ffeatures%2Famp-a0024659.pdf&usg=AFQjCNG77rdWWjG0ZEjoaGSqELZjoV35OA&bvm=bv.139782543,d.c2I

5.http://genetics.emedtv.com/klinefelter-syndrome/history-of-klinefelter-syndrome.html

6.http://www.ancient.eu/pharaoh/

7.https://www.change.org/p/concerned-citizens-against-365-365a

Views: 981