பின்னொரு நாளில்

எழுத்தாளர் : ராஜா நர்மிமின்னஞ்சல் முகவரி: rajanarmi0@gmail.comBanner

ஆத்மார்த்தமான உறவுகளுடனான
இறுதி நாள் 
ஏன்
நாமறியாமலேயே நம்மைவிட்டு 
அந்நியப்பட்டு போகின்றது.....
இதுதான் இறுதி சந்திப்பு,
இறுதி பார்வை,
இறுதி ஸ்பரிசம்
இறுதி முத்தம்,
இறுதி வார்த்தை,
இறுதி இராப்போசனம்,
என்பதெல்லாம் தெரியாமல்
என்னென்ன அபத்தங்கள்
செய்து விடுகிறோம்.........?

நீ எனக்குத்தான்,
நீங்கள் எனக்குத்தான் என்ற
உறவின் அடிப்படைகள்
எத்தனை தூரம் பொய்யானது...........?


நீ சரி சொல்லியிருக்கலாம்,
ஏன் நான் கூட சொல்லியிருக்கலாம் 
இறுதி நிமிடங்களை,
இறுதி நினைவுகளை,

நாம் 
இரணங்களாக கொண்டாடி விட்டோம்?
வார்தையாலும்,
செயல்களாலும்
ஏன் அப்படி காயப்படுத்திக் கொண்டோம் 

நம் வாழ்வின் இறுதி நாள் வரை 
நினைவாக
வலிக்கப்போகின்ற பிடித்தவர்களின்
பிடித்தவர்களின் பிரிவுத்தினத்தில்
இறுதியில் சரி
அன்போடு அணைத்திருக்கலாம், 
ஒரு மெல்லிய முத்தத்தை
பதித்திருக்கலாம்.....
பிடித்தவரின்,
பிரியமானவரின் கைகளை கண்களில் ஒற்றியபடி
கொஞ்சம் அழுதிருக்கலாம்,
தோளில் கொஞ்சம் சாய்ந்திருக்கலாம், 
மடியில் கொஞ்சம் படுத்திருக்கலாம்,

கத்தி கத்தியே களைத்துப் போயும்,
ஒருவரை ஒருவர் குறைபட்டுக்கொள்ளும் 
நாம் 
அன்று மௌனமாய்
ஒரு மெல்லிசை போல மௌனித்திருக்கலாம்............

உனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை
இறுதி நாளில் சரி செய்திருக்கலாம்.......

இப்படி எதையுமே செய்யாமல் 
அந்நாளில்
அத்தனை அமர்க்களப்படுத்தி விட்டு நீ இருப்பாய் என
எப்படி என்னால் 
இனி எப்போதுமே சாத்தியப்படாத
நம்பிக்கையோடு நகர்ந்து வர
முடிந்தது???
Views: 349