சிறுத்தைகள்

எழுத்தாளர் : சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்மின்னஞ்சல் முகவரி: Superkirus@yahoo.comBanner

செட்டி குளத்தை அண்மித்த கிராமம் ஒன்றில் சிறுத்தையால் [Leopard] தாக்கப்பட்ட ஆடொன்றை சிகிச்சை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. பல இடங்களில் அந்த ஆடு கடிக்கப்பட்டு காப்பாற்ற முடியாத ஆபத்தான நிலையில் இருந்தது. நிறை சினையாக இருந்தமையால் அதனால் ஓட முடியாமல் சிறுத்தையிடம் சிக்கி விட்டது. அந்த பகுதி மக்கள் ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஒருவாறு அதனை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். ஆட்டுக்கு கழுத்துப் பகுதியில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டு இருந்தது. அதற்கு  மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணை கலந்த கை வைத்தியத்தை அவர்கள் செய்திருந்தனர். மூன்று நாட்கள் சாப்பிடமுடியாது இருந்த ஆடு திடீரென பிரசவ அறிகுறிகளை வெளிபடுத்திய போதும் அதனால் சாதாரணமாக  குட்டிகளை போடமுடியவில்லை. சில மணி நேரத்தின் பின் என்னை அழைத்திருந்தனர். குட்டிகளை போடக் கூடிய வலு அந்த ஆட்டிடம் காணப்படவில்லை. குரல்வளை, களம் உட்பட கழுத்துப் பகுதி கடுமையாக  பாதிக்கப்பட்டு மிகவும் நலிந்து போன அந்த சிறிய ஆட்டின் குட்டிகளை ஒருவாறு உயிருடன் இழுத்து எடுத்தேன். அன்று மாலையே தாய் ஆடு இறந்து போனது. அண்மைக் காலத்தில் அடிக்கடி சிறுத்தைகள்  ஆடு மாடுகளை வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டிருகின்றன என்பதை அந்த பகுதி மக்களின் கருத்துப்படி அறிந்து கொண்டேன். அவர்கள் சிறுத்தையை புலி என்றே அழைப்பர். மடுக்காட்டினை அண்மித்த பகுதியிலும் ஆடுகள் சிறுத்தைகளால் தாக்கப்பட்ட சம்பவங்கள் அங்கு வேலைக்கு சென்ற பின் அறிந்து கொண்டேன். எனினும் மனிதர்கள் தாக்கப்படுவது மிக குறைவு.

பேராதனை பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஹந்தானை மலை பகுதியை அண்மித்த கிராமம் ஒன்றில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை ஒன்றை பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போதுதான் மிருக காட்சி சாலை தவிர்ந்து சிறுத்தையை முதன்முதலில் மிக அருகில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. மேற்படி கிராமத்தில் அடிக்கடி இரவு நேரத்தில் சிறுத்தைகளின் பிரசன்னம் இருப்பதாகவும் அவை நாய், ஆடு மாடுகளை பிடித்து செல்வதாகவும் அறிய முடிந்திருந்தது. அந்தக் கிராமம் மிக அண்மைக் காலத்தில்தான் மலைக் காடுகளை அழித்து உருவாக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட யால தேசிய வனத்தில் சிறுத்தைகள் வாகன விபத்துகளில் அடிக்கடி இறப்பதை செய்திகள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் ஏறக்குறைய இருபதுக்கு மேற்பட்ட சிறுத்தைகள் அங்கு ஏற்பட வாகன விபத்துகளில் இறந்திருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இலங்கையின் அதி உச்ச வேட்டை விலங்காக [predatar] சிறுத்தைகள் காணப்படுகின்றன. இங்கு சிங்கங்களோ, வரிப்புலிகளோ கிடையாது. சில பழைய குறிப்புகள் சில நூறு வருடங்களுக்கு முன் சிங்கங்களும், புலிகளும் அவதானிக்கப்பட்டதாக கூறுகின்றன. எனினும் அவற்றுக்கு வலுவான ஆதாரங்கள் கிடையாது. ஒருவேளை அவை மிச்சமின்றி வேட்டையாடப் பட்டிருக்கலாம். சிங்களவர்கள் மகாவம்சத்தில் வரும் சிங்கபாகுவின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு தங்களை சிங்கத்தின் தொடர்ச்சியாகவே கூறிக் கொள்கின்றனர். பிறப்புரிமை கோட்பாடுகளின் படி அதற்குரிய சாத்தியத்தன்மை மிக மிக குறைவு.

பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்திருந்த ‘’ஜிம் கார்பெட்’’ எழுதியிருந்த ‘’குமாயுன் புலிகள்’’ குறிப்புகளில் மனித வேட்டையாடும் சிறுத்தைகளை பற்றிய விபரங்கள் உள்ளன. வேட்டை இலக்கியங்களின் வரிசையில் ஜிம் கார்பெட்டின் நூல்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. குமாயுன் புலிகள் குறிப்புகளில் ஜிம் கார்பெட் தன்னுடைய ஆட்கொல்லி சிறுத்தைகள் மற்றும் புலிகளை வேட்டையாடிய அனுபவங்களை விபரித்திருப்பார். அவரின் குறிப்புகளின் படி சிறுத்தைகள் பொதுவாக இரவு நேரங்களில்தான் ஆட்கொல்லிகளாக மாறுகின்றன. அவை பகலில் மனிதனை எதிர்கொள்ள பயந்தவை. ஒரு சிறுத்தை  ஆட்கொல்லியாக மாறிய பின் மனிதர்கள் தொடர்பான அச்சம் அதற்கு நீங்கி விடும். எனினும் புலிகள் [tiger] பெரும்பாலும் பகலில்தான் மனிதர்களை கொல்கின்றன.  அதாவது பகலில் நிகழும் கொலைகளுக்கு புலிகளும் இரவில் நிகழும் கொலைகளுக்கு சிறுத்தைகளும் பெரும்பாலும் பொறுப்பாளிகள்.

புலிகளும் சிறுத்தைகளும் ஆட்கொல்லியாக மாற காடுகளில் அவற்றின் இயல்பான உணவுகள் குறைவடைதல்,அவை அங்கவீனமாக மாறுதல் அல்லது காயமுறுதல், வயதாகி வேட்டையாடும் ஆற்றலை இழந்திருத்தல், சினைப்பட்டிருத்தல் அல்லது குட்டிகளுடன் இருத்தல்  போன்ற காரணிகளை ஜிம் கார்பெட் கூறியிருப்பார். மனிதன் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் இயல்பான உணவு கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவற்றை அந்த நிலைக்கு தள்ளுகின்றன. இறந்த மனித உடல்களை புலிகள் உண்ணாது. எனினும் சிறுத்தைகள் உண்ணும். அதாவது தோட்டி வேலையும் செய்யக் கூடியன. 1918ல் இந்தியாவில் ஏற்பட்ட ‘’யுத்த ஜுரம்’’ என்னும் ஒரு வகை கொள்ளை நோய் காரணமாக ஏராளமான மனித உயிர்கள் குமாயுன் பகுதியில் காவு கொள்ளப்பட்டன. எனினும்  இறந்த மனிதர்களை தகனம் செய்ய முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டதால் மலைப் பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளில் எறிந்து விடுகின்றனர். அந்த சடலங்களை உண்ட சிறுத்தைகள் மனித மாமிசத்துக்கு பழகிவிட அதன்பின் மனிதர்களை கொல்லத் தொடங்கின. குறிப்பாக அங்கு வாழ்ந்த இரண்டு சிறுத்தைகள் குறித்த காலத்தில் மட்டும் ஐந்நூறுக்கு மேற்பட்ட மனித உயிர்களை பலி கொண்டன.[குமாயுன் புலிகள் பக்கம் 15-17]

குமாயுன் புலிகள் புத்தகத்தில் வரும் ‘’ராபின்’’ எனும் குறிப்பில் தன் நாயுடன் சேர்ந்து அவர் செய்த சிறுத்தை வேட்டையை பற்றி ஜிம் கார்பெட் எழுதியிருப்பார். அண்மையில் மடு பாலம்பிட்டியில் சிறுத்தை தாக்கிய கழுத்தில் காயம்பட்ட வேட்டை நாய் ஒன்றை சிகிச்சை செய்திருக்கிறேன். சிறுத்தையின் பலமான பிடி கழுத்தை மையப் படுத்தியே அமையும்.

ஜிம் கர்பெர்ட் The Man Eating Leopard Of Rudraprayag  எனும் இன்னொரு வேட்டை நூலையும் எழுதியிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட மனித உயிர்களை பலி கொண்ட அந்த சிறுத்தையை வேட்டையாடியதை அழகாக விபரித்திருப்பார். இந்த புத்தகத்தை மையப்படுத்தி அதே பெயரில் BBC இனால் விபரண சித்திரம் ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அதனை youtube இணையத்தில் பார்க்க முடியும். மேலும் ஜிம் கர்பெட்டின் வாழ்கையை மையப்படுத்தி நாற்பதுகளில் Man Eaters Of Kumaunஎனும் திரைப்படம் வெளிவந்திருந்தது.

இலங்கையில் பிறந்த கனேடிய  எழுத்தாளர் Chiristoper Ondaatje எழுதிய The Man Eating Leopard Of Punanai என்னும் புத்தகம் மட்டக்களப்பு புனானை பகுதியில் வாழ்ந்த ஆட்கொல்லி சிறுத்தையை பற்றியது. Chiristoper Ondaatje ஏராளமான வேட்டை மற்றும் விலங்குகள் தொடர்பாக குறிப்புகளை எழுதியவர்.

5Panthera pardus kotiya எனும் இலங்கை சிறுத்தை உலகெங்கிலும் வாழும் சிறுத்தைகளில் இருந்து வேறுபட்டது. இலங்கைக்கே உரித்தானது. உலக சிறுத்தைகளில் இது ஒரு வகை உப இனத்திற்குரியது [subspecies]. இலங்கை சிறுத்தைகள் போல உலகில் ஒன்பது வகை உப இனங்கள் உள்ளன. எனினும் அவை பிறப்புரிமை ரீதியில் வேறுபட்டவை. இந்திய சிறுத்தைகளை விட அளவில் சிறியவை. இலங்கையில் ஏறக்குறைய 7௦௦-9௦௦ சிறுத்தைகள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலர், வறல், ஈர வலயங்கள், மலைப்பகுதி, அயனமண்டல மழைக் காடுகள் [சிங்க ராஜா வானத்தை அண்மித்த பகுதிகள்]  என சகல இடங்களிலும் இவை வாழ்கின்றன. யால, வில்பத்து, போன்ற பாதுகாக்கப்பட்ட வனங்களுக்குள் [protected area]  இவற்றை அதிகமாக அவதானிக்கலாம். பெரும்பாலும் இருபது வருடங்கள் வரை வாழக் கூடியவை. வேட்டை விலங்குகள். ஊன் உண்ணிகள் [carnivore]. Endangred species எனும் அழிவடையும் ஆபத்துக்குள் வாழும் இனமாக வகைப்படுத்தபட்டுள்ளன.

தென் இலங்கையின் யால வனப் பகுதியில் சிறுத்தைகள் மிக அடர்த்தியாக வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. [18/100km2]. உலகத்தில் இந்த அடர்த்தி மிக மிக அதிகம். இந்தப் பகுதியை இலங்கைச் சிறுத்தைகளின் சொர்க்கபுரி என்பர். பெண் விலங்குகள் 3௦ கிலோவை அண்மித்த எடை உடையன. 3-4அடி நீளமானவை. ஆண் சிறுத்தை 5௦கிலோ வரை நிறை உடையது. 4அடிக்கு மேற்பட்ட நீளம் கொண்டது.

சிறுத்தைகள் தமக்குள் ஒரு வித எல்லைகளை [Territory] வகுத்துக் கொள்பவை. ஆண் விலங்கு தனியாக வாழும் [solitary] அதேவேளை பெண் விலங்கு குட்டிகளுடன் வாழும். பொதுவாக ஒரே தடவையில்  2-3 குட்டிகளை ஈனும். ஏனைய காட்டு விலங்குகளைப் போல சிறுத்தைகளிலும் குட்டிகள் ஐம்பது வீதமே உயிர் பிழைத்து வளர்கின்றன. பொதுவாக ஒரு வயதுக்குள் குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம். நோய்கள் காரணமாகவே குட்டிகள் பெரும்பாலும் இறக்கின்றன. குட்டி குறித்த வயது வந்தவுடன் தாய் விலங்கை விட்டு பிரிந்து தனக்கான எல்லையை வகுத்துக் கொண்டு வாழத் தொடங்குகின்றன. எல்லைகள் மீறப்படும் போது பிரச்சனைகள் எழுகின்றன. சிறுநீர் கழித்தல், மரங்களில் நகங்களால் விறாண்டுவதன் மூலம் தமது எல்லைகளை அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றன. அதாவது இது ‘’என் ஏரியா உள்ளே வராதே’’ என ஏனைய சிறுத்தைகளுக்கு வலியுறுத்துகின்றன. இதே இயல்பை பூனைகள் மற்றும் புலி சிங்கம் போன்ற ஏனைய சிறிய முதல் பெரியது வரையான பூனைக் குடும்ப விலங்குகளும் கொண்டிருகின்றன. இனப் பெருக்க காலத்தில் மட்டுமே பெண்ணுடன் ஆண் சேரும். மற்றபடி பிரிந்தே வாழும். சிறுத்தையின் ஆற்றல் குறையும்போது அதன் ஆள்புல பகுதியை இன்னொரு சிறுத்தை கைப்பற்றிக் கொள்ளும்.

மிக வேகமாக ஓடக் கூடிய சிறுத்தைகள் சிறந்த வேட்டையாடிகள். சிங்கம், புலி போன்ற ஏனைய பெரிய பூனைக் குடும்ப விலங்குகளுக்கு இல்லாத மரம் ஏறும் பண்பு சிறுத்தைகளுக்கு இருப்பது சிறப்பு. மரங்களில் இருந்து பாய்ந்து அதாவது அழுத்த சக்தியை பயன்படுத்தி வேட்டையாடுகின்றன. புள்ளி மான்கள், குரங்குகள், காட்டுப் பன்றிகள், காட்டு எருமைகள் போன்ற விலங்குகளை வேட்டையாடுகின்றன. அண்மைக் காலங்களில் காடுகளை அண்மித்த கிராமங்களில் புகுந்து நாய், ஆடு, மாடு, கோழி என வளர்ப்புப் பிராணிகளையும் பிடித்துச் செல்கின்றன. சிறுத்தைகள் இரவு நேரத்துக்குரியன [Nocturnal]. சில வேளைகளில் பகலிலும் அவதானிக்கப்படுகின்றன.

 இலங்கையின் யால வில்பத்து வனப் பகுதிகளில் சிறுத்தை சவாரி [leopard safari] மிக பிரசித்தம். அதிகளவு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறுத்தைகளை பார்க்க இங்கு வருகின்றனர். அதிக சுற்றுலா வருவாயை ஈட்டித் தரும் இடங்களாக அவை அமைகின்றன. ஏராளமான சவாரி வாகனங்கள் யால பகுதியில் இயங்குகின்றன. அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. மேற்படி வாகனங்களில் அடிபட்டே சிறுத்தைகள் அதிகம் இறக்கின்றன. பொதுவாக சுற்றுலாப் பயணிகள் தமது சவாரியின்போது முடிந்த வரை சிறுத்தைகளை பார்க்க விரும்புவார்கள். எனினும் சிறுத்தைகளை காணும் நிகழ்தகவு மிக மிகக் குறைவு. அவை அடர் காடுகளுக்குள்ளே பெரும்பாலும் வாழ்வதால் இந்த நிலைமை ஏற்படுகிறது. எனவே சவாரி வழி காட்டிகளும் [Guides] வாகன ஓட்டிகளும் தமது சுற்றுலாப் பயணிகளுக்கு உச்ச பட்ச திருப்தியை வழங்க முயல்வார்கள். அதாவது அனுமதிக்கப் பட்ட காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் முடிந்தவரை சிறுத்தைகளை காண்பிக்க முயல்கின்றனர். அப்போது தான் உச்ச பட்ச கவனிப்பும் [tips], அடுத்த முறை அவர்களை தேடி வரும் நிலையும் கிடைக்கும். அதற்காக தமக்குள் ஒரு வலையமைப்பை அதாவது ஒரு சவாரி வாகனத்தில் சிறுத்தை காட்சிப்படும் எனில் உடனடியாக கைபேசி மூலம் ஏனைய வாகனங்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் வேகமாக குறித்த இடத்துக்கு பயணிக்கிறார்கள். இதன் போதுதான் அதிக உயிர் சேதங்கள் சிறுத்தைகளுக்கு  ஏற்படுகிறது. சிறுத்தைகள் மட்டுமல்ல ஏனைய காட்டு விலங்குகளும் மேற்படி சவாரி வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. பொதுவாக காலை வேளைகளில்தான் சிறுத்தைகள்  அதிகமாக இறக்கின்றன. சில வேளைகளில் தமக்குக் தென்படும் சிறுத்தைகளை ஏனைய வாகனங்களை நோக்கி துரத்தும் கைங்கரியங்களையும் இவர்கள் செய்கிறார்கள்.

 உண்மையில் காட்டு விலங்குகளை அவற்றின் இயற்கையான நிலையில்தான் அவதானிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான அனுபவம் கிடைக்கும். அதுதான் முறை. எனினும் தற்கால சுற்றுலாப் பயணிகள் தமது சமூக வலைத்தள மோகம் காரணமாக முடிந்தவரை விலங்குகளை படம் பிடிக்க முயல்கிறார்கள். அதற்கு இந்த சவாரி வழிகாட்டிகள் உதவுகின்றனர். இதன் காரணமாக அண்மையில் யால பாதுகாக்கப் பட்ட வனப் பகுதிக்குள் தொலைபேசி பாவனையை  தடை செய்திருக்கின்றனர். சவாரி நேரங்களில் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்றன. சவாரி வாகன சாரதிகளுக்கும் வழி காட்டிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. எனினும் பணம் மீதான ஆசையால் சட்ட விரோதமாக சிலர் நடப்பதால் சிறுத்தைகளின் இழப்புகள் ஏற்படுகின்றன்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியேயும் அதிக சிறுத்தைகள் இறக்கின்றன. அதிகரித்த மனித குடியேற்றங்களால் காடுகள் குறுகல் அடைகின்றன. சிறுத்தைகளின் வாழ்விடம் அழிக்கப்படுகிறது. சிறுத்தைகள் வேட்டையாடும் மான் போன்றவற்றை மனிதர்கள் இலக்கு வைப்பதால் அவற்றுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மனித குடிகளை அடைந்து ஆடு, நாய் போன்றவற்றை வேட்டையாட முயல்கின்றன. இதனால் அவை வெடி வைத்தும், விஷம் வைத்தும் பொறி வைத்தும் மின்சாரம் பாய்ச்சியும் கொலை செய்யப்படுகின்றன. வறட்சிக் காலத்தில் நீர்தேடி வரும் சிறுத்தைகள் கிணறுகளுக்குள் விழுகின்றன. மேலும் சிறுத்தைகளை வேட்டையாடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சிறுத்தைத் தோல்,சிறுத்தைப் பல் போன்றவற்றை பெறவும் சில நாட்டு மருந்துகளை செய்ய சிறுத்தை  மாமிசம் பயன்படுகிறதால் அதனைப் பெறவும் வேட்டையாடப்படுகின்றன.

கடத்தல்காரர்கள் சிலர் இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறுத்தைக் குட்டிகளை கடத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட வடபகுதியில் சில இடங்களில் சிறுத்தைக் குட்டிகள் கடத்தல்கார்களிடம் இருந்து மீட்கப் பட்டத்தை செய்திகள் வாயிலாக அறிந்திருப்போம். சில இலட்சம் பெறுமதி இந்த கடத்தலில் அவர்களுக்கு கிடைக்கிறது. பொதுவாக குட்டிகளை பெற தாய் விலங்கு கொலை செய்யப்படுகிறது. ஒரு பெரிய சிறுத்தையை கொல்லும்போது அந்தப்பகுதியின் சூழல் சமநிலை குழப்பப்படுகிறது. உணவுச் சங்கிலி அறுக்கப் படுகிறது. சிறுத்தையின் சந்ததி மட்டுப்படுத்தப்படுகிறது.

முன்னைய காலத்தில் அரசர்களும், வேட்டைகாரர்களும் பொழுது போக்குக்காக, தமது கௌரவத்தை நிலை நாட்டுவதற்காக தோல் பற்களை பெறுவதற்காக  சிறுத்தை ,வரிப்புலி, சிங்கங்களை வேட்டையாடினார்கள். ஒரு காலத்தில் இலங்கையில் காணப்பட்டதாக கருதப்பட்ட சிங்கம், புலி போன்ற விலங்குகள் மேற்படி வேட்டைக்காரர்களால் தான்  அழிக்கப்பட்டிருக்க வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வெள்ளைக்கார தளபதிகளால் ஏராளமான விலங்குகள் பொழுதுபோக்காக அழிக்கப்பட்டிருந்தன. அதைத்தான் இன்றைய வேட்டைக்காரர்களும் கடத்தல்காரர்களும் செய்கிறார்கள். இப்படியே போனால் ஏனைய விலங்குகள் இலங்கையில் இருந்து அழிந்து போனது போல சிறுத்தைகளும் அழிந்து போகலாம்.

இலங்கை அரசாங்கமும் சில தன்னார்வு  நிறுவனங்களும் சிறுத்தைகளை அழிவிலிருந்து காப்பாற்றும் செயல் முறைகளை முடுக்கி விட்ட போதும் சிறுத்தைகள் அழிந்து கொண்டுதான் இருகின்றன. பொதுவான விழிப்புணர்ச்சி மக்களிடம் கிடையாது. வடக்குக் கிழக்கில் முன்பு விடுதலைப் புலிகள் சிறுத்தையை தேசிய விலங்காக அறிவித்து அதனை காப்பாற்ற முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் தலைவர் இந்திய இராணுவ காலப்பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்றை வளர்த்திருந்திருக்கிறார். அவர்களது தாக்குதல் படையணி ஒன்றின் பெயர் சிறுத்தைப் படையணி.

அதிகரித்த மனிதனின் தேவைகள் சூழல் தொகுதியை சிதைக்கத் தொடகியுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் தனது இறுதி பயணத்தை இதன் காரணமாக தொடங்கியுள்ளன. இயற்கையில் காணப்படும் சிறு பொருளும், மரமும், செடியும், பூச்சியும், புழுவும், யானையும் சிறுத்தையும் நதியும் மலையும் என சகலதும் இணைந்தே இயற்கை எனும் பிரமாண்ட விந்தையை தருகின்றன. இந்த பிரமாண்ட விந்தை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனால் சிதிலமடைகிறது. இறுதியில் மனிதனுக்கும் வாழ முடியாத நிலை ஏற்படும் என்பது மட்டும் நிதர்சனம்..

Views: 1299