நல்லூர் அழகன் - முருகன்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

மாலை நேரம்...... வெள்ளவத்தை...... அடை மழை. வளமை போல அன்றும் என்னிடம் குடையில்லை. ஒரே ஓட்டமாக ஓடி பூட்டியிருந்த ஒரு கடையின் முன் தாவாரத்துக்குள் ஒதுங்கினேன். எனக்கு முன்னரே ஒருவர் அங்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். கொஞ்சம் முன் மொட்டையுடன், அறுபதை தாண்டிய உடலமைப்புடன் இருந்தார் அவர். பெரும்பாலும் ஓய்வு பெற்ற அரச ஊழியராக இருக்கலாம். கிட்டத்தட்ட தெப்பலாக நனைந்திருந்தார். சாட்ஷாத் சிங்களவர். 'எவன் ஒருவன் அகப்படுவான்' என்று காத்துக் கொண்டிருந்திருப்பார் போல. நான் வந்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. கதையைத் தொடக்கினார். 
(எனக்கு சிங்களம் கொஞ்சம் மட்டு. இந்த லட்சணத்தில் நான் அவரோடு கதைத்த சிங்களத்தை அப்படியே இங்கே போட்டால் உங்களுக்கு தமிழே மறந்து போகும் வாய்ப்புக்கள் இருப்பதால், எங்களுக்கிடையிலான சம்பாசனையின் தமிழாக்கத்தையே இங்கு தருகிறேன்)
'மகன், நீங்கள் யாழ்ப்பாணமா..?'  என்று ஆரம்பித்தார். 'என்னண்டு தான் மூஞ்சையைப் பார்த்தவுடனே கண்டு பிடிக்கிறாங்களோ தெரியலை? எனக்கெண்டு வந்து மாட்டுதுகள் பார்' என்று நினைத்துக் கொண்டு,   
 'ஆமாம். நான் யாழ்ப்பாணம் தான்' – நான்.
'யாழ்ப்பாணத்தில எவடம்?' என்று அடுத்த கேள்வி கேட்டது, அந்த மு.மொ. 
'ஒருவேளை இந்தாளுக்கு யாழ்ப்பாணம் நல்லாய் தெரிஞ்சிருக்குமோ?' என்று நினைத்துக் கொண்டு, 'பருத்தித்துறை றோட் தெரியுமே?' என்று கேட்டேன். நான் பருத்தித்துறை என்று சொன்னது, அவருக்கு பீதுருதாலகால என்று விளங்கியிருக்கும் போல. (பருத்தித்துறைக்கு சிங்களம் பேதுரு). அது அவரின் முழிப்பில் தெளிவாகவே தெரிந்தது. இப்படியான கிறிட்டிக்கல் நேரத்தில் பயன்படுத்துவதற்கென்றே நம்மவர்கள் ஒரு பிரம்மாஸ்திரத்தை வைத்திருக்கிறார்கள். அது சர்வ நிச்சயமாக வேக்அவுட் ஆகும். ஏனென்றால் அதன் வலிமை அப்படி. 
'உங்களுக்கு 'நல்லூர் கோயில்' தெரியுமா?' என்று நானும் அந்த பிரம்மாஸ்திரத்தை அவர் மீது பிரயோகித்தேன். அவர் முகம் முழுவதும் பல்லாக தலையாட்டினார். அந்த தலையாட்டலில், அவருக்கு யாழ்ப்பாணத்தில் நல்லூர் மட்டும் தான் தெரிந்திருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. 'நல்லூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் இடது பக்கம் போக வேண்டும்' என்று என் வீட்டுக்கு பாதை சொன்னேன். இப்போது அவர் எனது வீட்டை இலகுவாக கண்டுபிடித்து விட்டார். பெரும்பாலும் நாளை என் வீட்டுக்கு தேனீர் குடிக்க வரவும் வாய்ப்பு இருக்கிறது.

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், நல்லூர் என்பது யாழ்ப்பாணத்தின் அழிக்க முடியாத ஒரு அடையாளம். 'யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரபலம், நல்லூரால் யாழ்ப்பாணமே பிரபலம்' என்பதை எவராலுமே மறுக்க முடியாது. இப்படியாக எமக்கு ஒரு நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கின்ற நல்லூர் கோயில் பற்றி நாம் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கின்றோம்? எங்கள் வயதுடைய எழுமாற்றான ஒருவரிடம் போய் நல்லூர் பற்றி சொல்லச் சொன்னால், 'அது ஒரு முருகன் கோயில், ஓகஸ்ட் மாதத்தில இருபத்தைஞ்சு நாள் திருவிழா நடக்கும், யாழ்ப்பாணத்து பெண்கள் எல்லாம் விதம்விதமான பாவாடை தாவணிகளில வலம் வருவார்கள், அதைவிட விதம்விதமான அலங்காரத்துடன் முருகன் வலம் வருவான், ம்ம்ம்ம்ம்.....' அவ்வளவுதான். உண்மையில் அவ்வளவு தானா...? இன்றைய காலத்தில் எமக்கென்று இருப்பதே மிகச் சில அடையாளங்கள் தான். அவற்றில் முக்கியமான இந்த நல்லூர் கோயில் பற்றி சிறிதளவாவது  அறிந்து வைத்திருக்க வேண்டியது எமது கடமை அல்லவா...? அதற்கான ஒரு சிறு முயற்சி தான் இந்த கட்டுரையின் தொடர்ச்சி .......

.......................

நல்லூர் கோயிலின் முன்கதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் குறைந்தது கி.பி 948ம் ஆண்டுக்கு முன்னராவது செல்ல வேண்டும். இப்போதைய காலம் போலவே அன்றும் நம்மவர்கள் வாழ வசதியான இடம் இல்லாமல், விரும்பிய தொழிலைச் செய்ய இயலாமல், வழிகாட்ட சரியான தலைவன் இன்றி, யார் யாரோ அன்னிய அரசர்களுக்கு அடிமைத் தொழில் செய்து கொண்டு, அதில் வரும் சொற்ப வருமானத்தின் பெரும்பகுதியை வரியாக செலுத்திக் கொண்டு ஏதோ உயிர் வாழ்கின்றோம் என்ற ஒரே திருப்தியோடு வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அத்தி பூத்தாப் போல எப்பவாவது இருந்துவிட்டு சிறிது காலங்களுக்கு அபூர்வமாக சில  நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். அவர்களும் நிரந்தரமில்லை. ஆனாலும் அவர்கள் தாங்கள் இருக்கின்ற அந்த சிறிய காலத்துக்குள் ஏதாவது சில நல்லவற்றை செய்துவிட்டு போய்விடுவார்கள். அவற்றுள் ஒன்றிரண்டு காலம் கடந்து நிலைத்து நிற்கும். அவற்றுள் ஒன்று தான் இந்த நல்லூர் கோயில்.

கி.பி 948ம் ஆண்டு காலப் பகுதியில், உத்தர தேசம் என்று சொல்லப்படுகின்ற இலங்கையின் வட பகுதி முழுவதும் சுந்தர சோழன் எனப்படுகின்ற சோழ அரசனின் ஆட்சியின் கீழ் இருந்தது. தன் ஆட்சிக்கு உட்பட்ட இலங்கையின் பகுதிகளை நிர்வகிக்க அவ் சோழ அரசனால் நியமிக்கப்பட்ட சேனாதிபதியே புவனேசவாசர் என அழைக்கப்படுகின்ற புவனேகவாகு ஆவார். நாம் நம் வரலாறுகளில் அடிக்கடி பராக்கிரமவாகு, விஜயவாகு போன்ற சிங்கள மன்னர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பதால், இந்த புவனேகவாகுவும் ஒரு சிங்களவரே என்ற மயக்கம் எம்முள் ஏற்படலாம். ஆனால் இவர் சோழ பரம்பரையில் வந்த கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு தமிழ்ச் சேனாதிபதி ஆவார். (கிட்டத்தட்ட வீரவாகு போல) இந்த புவனேகவாகுவின் தலைமையின் கீழ், தமிழ் கடவுள் முருகனுக்கு குருக்கள் வளவு என்று அழைக்கப்படுகின்ற இப்போது நல்லூர் கோயில் அமைந்திருக்கும் அதே இடத்தில் முதலாவது ஆலயம் கட்டப்பட்டது. இது அளவில் பெரியதாகவும் புற மதில்களை கொண்டதாகவும் அமைக்கப்பட்டது. இவ் ஆலயத்துக்கு பல நிவந்தங்களை வளங்கியதோடு பூசை செயற்பாடுகளுக்காக பொருத்தமான குருமார்களையும் நியமித்தார் புவனேகவாகு.  இவ்வாறு கி.பி 948ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட முதலாவது நல்லூர் ஆலயம், ஏறத்தாள 13ம் நூற்றாண்டு வரை சிறப்புற்று விளங்கியது.

1450ம் ஆண்டளவில் இலங்கையின் வட பகுதியை கனகசூரிய சிங்கையாரியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆறாம் பராக்கிரமவாகுவால் வடபகுதியை கைப்பற்றும்படி அனுப்பப்பட்ட சேனாதிபதியான சப்புமல்குமாரய்யா என்கின்ற செண்பகப் பெருமாளால் முதலாவது முருகன் கோயிலுக்கு வந்தது ஆப்பு. 

மலையாள தேசத்தைச் சேர்ந்த பணிக்கன் ஒருவனுக்கும், ஆறாம் பராக்கிரமவாகுவின் குல இளவரசி ஒருத்திக்கும் மகனாகப் பிறந்த இந்த செண்பகப் பெருமாளை தனது மகன் போலவே வளர்த்தான் ஆறாம் பராக்கிரமவாகு.  இயல்பாகவே சரியான முரடனான இவன் பெரும் படையுடன் வட பகுதிக்குள் புகுந்து அதை முற்றிலுமாக துவம்சம் செய்தான். அவனின் இந்த வெறியாட்டத்தில் புவனேகவாகுவால் கட்டியெழுப்பப்பட்டு பெரும் புகழுடன் விளங்கிய முதலாவது நல்லூர் ஆலயமும் முற்றாக அழிந்தே போனது. இவ்வாறு தான் கைப்பற்றிய வட இலங்கை அரசை கி.பி 1467ம் ஆண்டு வரை அவனே ஸ்ரீ சங்கபோதி புவனேகவாகு என்ற பெயருடன் ஆட்சி செய்தான். 'நூறு வருடங்களுக்க பிறகு வரப்போகும் மடையர்களுக்கு எந்த 'புவனேகவாகு' நல்லூரை கட்டினான் அல்லது அழித்தான் என்று தெரியவா போகிறது?' என்ற எண்ணமே அவனது இந்த 'புவனேகவாகு' என்ற பெயர் மாற்றத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம். 

இக் காலப்பகுதியில், தான் செய்த பிழைகளுக்கு பரிகாரம் தேடும் பொருட்டு அவன் நல்லூர் கோயிலை முத்திரைச் சந்தியில் (இப்போது கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடத்தில்) மீண்டும் கட்டுவித்தான். இவ் இரண்டாவது ஆலயம், மிகப் பெரிதாக தென்னிந்திய கோயில்களின் சாயலில் ஆகம விதிகளுக்கு அமைவாக அமைக்கப்பட்டது.  மிகப் பெரிய புற மதில் சுவர்களுடன் கூடிய இக் கோயிலே அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய ஆலயமாக திகழ்ந்துள்ளது. 'பிற்காலத்தில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது, சிறிது காலம் இந் நல்லூர் கோயிலை தங்களின் கோட்டையாக பயன்படுத்தினர்' என்ற வரலாற்று ஆதாரத்திலிருந்து சங்கபோதி புவனேகவாகு (எ) சப்புமல் குமாரய்யா (எ) செண்பகப் பெருமாளால் கட்டப்பட்ட இந்த நல்லூர் ஆலயம் எந்த அளவுக்கு பலம் பொருந்தியதாக அக் காலத்தில் இருந்திருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். இன்றும் இக் கோயிலின் புற மதில் சுவர் எச்சங்களை பாழடைந்த நிலையிலுள்ள யமுனாரிக்கு அண்மையில் காணலாம்.      
பின்னாட்களில் அதாவது கி.பி 1478ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சிங்கைப் பரராஜ சேகரன், இந் நல்லூர் கோயிலுக்கு காவல் கோயில்களாக வட திசையில் சட்டநாதர் கோயிலையும், கிழக்கு திசையில் வெய்யிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தென் திசையில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கு திசையில் வீரமாகாளி அம்மன் கோயிலையும் கட்டுவித்தான். மேலும் அவன் யமுனா நதியிலிருந்து நீர் கொணர்வித்து, அந் நீரைக் கொண்டு இப் புதிய நல்லூர் கோயிலுக்கு அண்மையில் யமுனாரி என்கின்ற திருக்குளத்தை அமைப்பித்தான்.

இவ்வாறு இவ் இரண்டாவது ஆலயம் பிரபல்யம் அடையத் தொடங்கிய சிறிது காலத்திலேயே போர்த்துக்கேயரின் பார்வை யாழ்ப்பாணத்தின் மீது விழுந்தது. இப் போர்த்துக்கேயரின் தொடர்ச்சியான படையெடுப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறத் தொடங்கிய யாழ்ப்பாணம், கி.பி 1620ம் ஆண்டு பிலிப் டி ஒலிவேறா என்ற போர்த்துக்கேய படைத் தளபதியின் படையெடுப்புடன் முற்றாக சிதைந்து போனது. யாழ்ப்பாணத்தை முற்றாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தீவிர மத வெறியனான ஒலிவேறா யாழில் இருந்த அனைத்து இந்து கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கினான். அவனது இந்த கொடிய மத வெறிக்கு 1621ம் ஆண்டு நல்லூர் கோயிலும் இரையானது. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நல்லூர் கோயிலின் கற்களை வைத்தே அது இருந்த அதே இடத்தில் அவன் தமக்கான தேவாலயம் ஒன்றைக் கட்டுவித்தான்.  

போர்த்துக்கேயருக்கு பின் கி.பி 1658ல் ஆட்சிக்கு வந்த ஓல்லாந்தரும் தம் ஆரம்ப காலங்களில் தம் மத கொள்கைகளை மிக வலிமையாக கடைப்பிடித்தாலும் தம் ஆட்சியின் இறுதி காலங்களில் மதம் தொடர்பான தம் கொள்கைகளை கொஞ்சம் தளர்த்தவே, மீண்டும் யாழ் மண்ணில் இந்து சமய வழிபாடுகள் துளிர்விட ஆரம்பித்தன.

1734ம் ஆண்டில் கிருஷ்ணர் சுப்பையர் என்ற அந்தணரின் பெரும் முயற்சியால் யமுனாரிக்கு அண்மையில் நல்லூர் கந்தனுக்கான மடாலயம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மூல மூர்த்தியாக வேலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த மடாலயம் ஓலைகளால் வேயப்பட்ட சிறு குடிலாகவே அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் கிருஷ்ணர் சுப்பையர் மற்றும் சில ஆர்வலாகளின் பெரும் முயற்சியால் 1749ம் ஆண்டளவில் புராதன நல்லூர் கோயில் அமைந்திருந்த அதே குருக்கள் வளவு பிரதேசத்தில்  இப்போதைய நல்லூர் கோயில் சிறு ஆலயமாக கட்டி முடிக்கப்பட்டது. இவர்களின் இம் முயற்சிக்கு அப்போது யாழ்ப்பாணத்தின் கச்சேரியில் சிறாப்பராக வேலை செய்த  தொன்யுவான் மாப்பாண முதலியார் பல வழிகளில் உதவி செய்தார். இவ் ஆலயத்தை அமைக்க நிதி திரட்டுவதற்காக கிருஷ்ணர் சுப்பையர் ஊர்ஊராக திரிந்தார். அவருடன் தொன்யுவான் மாப்பாண முதலியாரின் மகனான இரகுநாத மாப்பாண முதலியாரும் முழு மூச்சுடன் செயற்பட்டார். அவர்களின் பெரும் முயற்சியினாலேயே இன்றைய நல்லூர் ஆலயத்துக்கு ஒரு நிலையான அமைவிடமும் வடிவமும் கிடைத்தது என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு ஓட்டினால் வேயப்பட்டிருந்த இவ் ஆலயத்துக்கு 1899ம் ஆண்டில் முதலாவது பிரதான மணிக் கோபுரம் கட்டப்பட்டது. பின்னர் மூலஸ்தானம் கருங் கற்களால் கட்டப்பட்டு 1902ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1909ம் ஆண்டு காலப்பகுதியில் கோயிலின் சுற்றுப் பிரகார மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு காலத்துக்கு காலம் பல வளர்ச்;சிகளுக்கு உட்பட்ட இவ் ஆலயம் இன்று மூன்று கோபுரங்களுடனும் இரண்டு பிரதானமான பெரும் வீதிகளுடனும் சிறந்து விளங்குகின்றது. 

இங்கு தற்போது ஒவ்வொரு நாளும் ஆறு காலப் பூசைகள் நிகழ்வதோடு வருடத்தின் ஆடி-ஆவணி மாதங்களில் இருபத்தைந்து நாட்கள் மகோற்சவமும் இடம்பெறுகின்றது. இன்றைய ஒரே தமிழ் கடவுள் இந்த நல்லூர் முருகன் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  

.......................

மாலை நேரம்..... அமெரிக்காவின் நியூயோக் சிட்டி... அடை மழை. வளமை போல இன்றும் என்னிடம் குடையில்லை. ஒரே ஓட்டமாக ஓடி கார் பாக்கிங் ஒன்றினுள் ஒதுங்குகின்றேன். எனக்கு முன்னரே ஒருவர் அங்கு ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார். அதே முன் மொட்டையுடன், அதே அறுபதை தாண்டிய உடலமைப்புடன் இருக்கிறார் அவர். ஆனால் நூறு வீதம் தூய வெள்ளைக்காரர். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் அவரிடமிருந்து அதே கேள்வி,
'மை சண், வெயார் ஆர் யூ புறொம்?'
நான் சிரித்துக் கொண்டு என் பிரம்மாஸ்திரத்தை அவர் மீது பிரயோகிக்கின்றேன். அது வெற்றிகரமாக அவரிடம் செயற்பட ஆரம்பிக்கிறது. அவரும் நிச்சயமாக நாளை என் வீட்டுக்கு தேனீர் குடிக்கப் போவார். நல்லூர் முருகன் வாழ்க......!!!

.......................

ஆதாரம்: 
'நல்லை நகர் நூல்' (ஆசிரியர்: கந்தையா குணராசா என்கின்ற செங்கை ஆழியன்)
'யாழ்ப்பாண அரச பரம்பரை' (ஆசிரியர்: கந்தையா குணராசா என்கின்ற செங்கை ஆழியன்) 

          

           

Views: 404