இன்றைய பாடசாலை மாணவர்கள்

எழுத்தாளர் : ந. கிருத்திகன்மின்னஞ்சல் முகவரி: nkiruthikan21@gmail.comBanner

சிந்திக்கும் திறன் மனிதருக்கு மனிதர் மாறுபடும். இந்தக் காலத்தில் அதிகளவு புத்திசாலிகள் இன்றைய பாடசாலை மாணவர்கள் தான். தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, தர்க்க ரீதியாகவும் சரி பல மடங்கு முன்னிலையில் உள்ளவர்கள் இன்றைய மாணவர்கள் தான். இவ்வளவும் வைத்துள்ள இன்றைய பாடசாலை மாணவர்கள் ஏன் வழி தவறுகிறார்கள்?  இவ்வாறு வழி தவறுவதற்கு காரணம் யாது என நோக்கும் போது நிறைய விடயங்களை அலசப்படல் வேண்டும்.
இன்றைய காலத்து பெரும்பாலான பெற்றோரின் குறிக்கோள், தனது பிள்ளையை பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ, சட்டத்தரணியாகவோ அல்லது ஒரு நிறுவனத்தின் முகாமையாளராகவோ வரவேண்டும் என்பது தான். இங்கே பிள்ளைகளின் விருப்பம் என்பதை விடுத்து, பெற்றோரின் விருப்பின் படியே பிள்ளைகளின் வளர்ப்பும் இடம்பெறுகிறது. இதன் ஆரம்பம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையிலிருந்தே தொடங்குகிறது. அதன் தொடர்ச்சி சாதாரண தரம் மற்றும் உயர்தரம் என்பது வரை நீடிக்கிறது. சிறந்த பெறுபேறு எடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளின் திறமைகளை கண்டு கொள்ளக் கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் போகிறது. இங்கே தான் பிள்ளைகளின் அதிருப்தி வெளிப்படுகிறது. விருப்பமில்லாத துறையில் கவனத்தைச் செலுத்தும் போது அதில் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாதவர்களாக மாறுகின்றனர். எத்தனையோ பிள்ளைகள் தமது பெற்றோரின் வறட்டுக் கௌரவத்திற்காக, தமக்கு பிடித்த பிரிவுகளை விடுத்து, வேறு பிரிவுகளில் தமது உயர்தரக் கற்கையை மேற்கொண்டு, அதன் பின்னர் என்ன செய்வதென்றே தெரியாமல் இன்னமும் தவிர்க்கின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் பெற்றோர்கள் மட்டும் தான். 
வெறும் புத்தகப் பூச்சிகளாக வளரும் அல்லது வளர்க்கப்படும் இன்றைய பெரும்பாலான சிறப்பாகப் படிக்கக் கூடியவர்கள் என்று பெயரெடுத்த பிள்ளைகளை, மைதானத்துக்குள் கூட்டிச் சென்று விளையாட விடும் போது தான் தெரிய வரும், அவர்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதிலுமே கரிசனை இல்லை என்று. வெறும் படிப்பினை மட்டும் வைத்துக் கொண்டு மாத்திரம் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை இந்தக்காலப் பெற்றோர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒலிம்பிக்கில் இலங்கை எந்த பதக்கமுமே பெறவில்லை என்று விமர்சிப்பவர்கள், தமது பிள்ளைகளை நாளொன்றுக்கு ஒரு மணித்தியலாமாவது மைதானத்துக்குள் விளையாட விடுகிறார்களா என்ற கேள்வி தான் என்னுள் எழுகிறது. எப்பொழுது பார்த்தாலும் படித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் உலகத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது. அயலவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது. தமது நாட்டில் என்ன பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. வெறும் புரோயிலர் கோழிகளாகவே வளரும் அல்லது வளர்க்கப்படும் பிள்ளைகளினால் குறிப்பிட்ட ஒரு வட்டத்தைத் தாண்டி வெளியில் செல்லவே முடியாது. இதனைப் பெற்றோர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த காலத்து மாணவர்களிடம் வாசிப்பு என்பது அருகி வரும் ஒரு விடயமாக மாறி வருகிறது. வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்ற உண்மையை இப்போதைய பெரும்பாலான பாடசாலை மாணாக்கர் மறந்து விட்டனர் போலும். சில மாணவர்கள் தமது புத்தகப் பாடப்பரப்பினைத் தாண்டி வெளியே வெறேதும் வாசிக்காதவர்காளாக உள்ளனர். தினசரி பத்திரிக்கைகளை வாசித்துக் கூட தமது உலக அறிவை வளர்க்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பாடசாலை நூலகத்தை இவர்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனினும் இவர்களுக்கு முன்பிருந்த தலைமுறை வாசிப்பில் ஆர்வம் கூடியவர்களாக இருந்திருந்தனர். அந்த தலைமுறைக்கு  இந்த இணையம் சமூகவலைத்தளங்கள் என்பவற்றில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். அண்மைய காலங்களில் இந்த சமூகவலைத்தளங்களின் பாவனை நம்மிடையே அதிகரித்தாலும், பாடசாலை நேரங்களில் இதன் தாக்கம் குறைவு அல்லது இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இன்றைய மாணவர்கள் படிப்பினை விடுத்து, சமூகவலைத்தளங்களில் அதிகளவு நேரத்தினை ஒதுக்குவதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிப்பிற்குள்ளாகிறது. சமூகவலைத்தளங்களினால் நன்மை தீமை என்பதை ஆராய்வதனை விடுத்து, தேவையான நேரத்தில் மாத்திரம் மாணவர்கள் அதனைப் பாவிக்கலாம். 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்' எனும் வாசகம் இவர்களிற்கு மிகப் பொருந்தும். 
அடுத்து இன்றைய மாணவர்களிற்கான மிகப் பெரிய சவாலாக இருப்பது மதுபாவனை புகைத்தல் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவாகும். ஒரு காலத்தில் பாடசாலை விட்டு வெளியேறிய பின்பு கேள்விப்படும் இந்த வார்த்தைகள் இப்பொழுது பாடசாலைகளுக்குள்ளே பாவிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது. எங்கே இந்த தவறு நடந்திருக்கின்றது என்று அவதானிக்க வேண்டும். உண்மையில் இந்த பொருட்களில் என்ன தான் இருக்கிறது என்று சாதரணமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கத்திற்கு, கட்டாயத்தின் பேரில் அடிமை ஆகுவதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகமாக உள்ளது. சிலவற்றை வாழ்கையில் கடந்து போக வேண்டும். ஆனால் பள்ளி பருவ மாணவர்கள் இப்படியான தேவையற்ற விடயங்களிற்கு அடிமைப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தினைத் தொலைக்கும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
தற்கால மாணவர்கள் வெறும் படிப்பில் மட்டும் தமது புலனை செலுத்தாது, உலக விடயங்கள், இணைப்பாட விதான செயற்பாடுகள் போன்ற எல்லாவற்றிலும் தமது திறமைகளை வெளிக்காட்டி, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் நற்பிரஜைகளாக வரவேண்டும் என அனைவரினதும் ஆழ்மன ஆசையாகும். 
Views: 539