மெல்லத்தமிழ் இனி 2

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.comBanner

பொன்பரப்பி எப்படி ஒரு தானியக்கிடங்காக தென்னிந்தியாவுக்கு விளங்கியதென்று  பட்டினத்துப்பாலை உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாக நிறுவியிருந்தேன். வில்பத்து பிரிவுகளின் பெயர்களை இம்முறை அரசாங்கப்பதிவேடுகளிலிருந்து தொகுக்க முடிந்தது. கொக்காரி வில்லு , இலவன்குளம், மாக்கிளான் காடு, நடுநாவல், மூலைக்கண்டல் வெளி, பொம்பரப்பு, கருநாவற்குடா, இலந்தைமோட்டை , தலைவில்லு, பணிக்கர் வில், கொம்பன் சாய்ந்த பீவல், ஆலம் வில்லு, வீரக்குட்டி வில்லு, ஆத்தாள் வில்லு, நாவலடி ஊற்று ,மாணிக்கப்பளை ஊற்று, பட்சி ஓடை, மதுர ஓடை, பெரிய வில், பெரிய நாகவில், பலகைத்துறை, காளிவில்லு, மரைவில்லு, மணல்வில்லு, ஒரு சாய்ப்புக்கல், மட்டிமடு, குதிரைமலை ,மாவலங்கை மோட்டை, தங்கை வில்லு முள்ளிக்குளம், கட்டக்கண்டல், கொக்குமோட்டை என்று நீள்கிறது பட்டியல். இங்கே பொம்பரிப்புவ என்று பொன்பரப்பி மட்டும் பெயர் மாறிவிட்டது. ஏனையவைகள்இன்னும் அப்படியே தூய்தமிழிலேயே இருக்கின்றன.

விலங்குகளின் புகலரணாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்ற வில்பத்தின் கடற்பகுதியொன்று குதிரைமலை என்ற பெயரிலுள்ளது. கடலுக்கு அண்மையதும் கடலை விட்டு சடுதியான உயரம் அதிகரிக்கின்றதுமான இப்பகுதியில் பழங்காலத்திலேயே சில அரேபியர்களின் கல்லறைகள் அங்கே வைக்கிற அளவுக்கு பரபரப்பான துறைமுகமாக குதிரை மலை விளங்கியிருக்கின்றது.
குதிரைமலை வடமேற்குக்கடலின் ஒரு பழைமையான துறைமுகம். கிரேக்க இலக்கியங்களிலும் "ஹிப்பரஸ் " என்று  குதிரைமலையை ஒரு முக்கியமான துறைமுகமாக கருதுகின்றனர்.  உரோமர்களின் வரலாற்றாசிரியர் பிளினியும் இதை ஹிப்பரஸ் என்றே கூறுகின்றார். ஹிப்பஸ் என்பது குதிரையையும் ஓரஸ் என்பது மலையையும் குறிக்கும் கிரேக்கச்சொற்கள்.
வரலாற்றாய்வாளர் பிளினி  பேரரசன் க்ளோடியஸ்  காலத்தில் அன்னியஸ் லொக்கமஸ் என்ற கடலோடி பதினைந்து நாட்கள் கடலில் அலைந்து ஒதுங்கிய துறைமுகம் குதிரைமலை என்றும் அங்கே அன்னியஸ்  குடியிருப்புக்களை கண்டதாகவும் குறிப்பிடுகின்றார். ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டுவர்ட்டின் கருத்துக்களின் படி சொலமன் என்ற பேரரசரிற்கு கிழக்கிலிருந்து வருவிக்கப்பட்ட யானைத்தந்தங்களும்,  குரங்கும், மயில்த்தோகைகளும் குதிரைமலையில் இருந்து வருவிக்கப்பட்டவை என்கிறார். இதுவரையில் குதிரைமலைத்துறை தொடர்பான தொல்பொருளாய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமையால்  வெளிநாட்டு இலக்கிய ஆதாரங்களை வைத்தே தொன்மையை நிறுவ வேண்டியிருக்கின்றது. அங்கே இருக்கின்ற சிதைவுகள் கட்டுமானங்கள் பிரபலமானவையே. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட வில்பத்துக்காட்டுக்குள் இருப்பதால் அதைப்பற்றிய விடயங்கள் மிகக் குறைவானதாகக்கிடைக்கின்றன. 1923இல் இலங்கைப்புறவுருவப்படத்தை வரைந்த கள ஆய்வாளர் ஜீ.எச்.ஏ.டி.சில்வா குதிரைமலையை ஆராய்ந்த பின் தன் படத்தில் பண்டைய துறைமுகம், சிதைவுகள் , கிணறு என்று குறிப்பெழுதியிருக்கிறார். என்றாலும் புதையல் அகழ்பவர்கள் போன்ற சட்டவிரோத செயற்பாட்டாளர்களும் காட்டுயானைகளும் எஞ்சியிருக்கின்ற கட்டுமானங்களையும் சிதைத்துக்கொண்டிருக்கின்றன.தோணிக்கல் என்ற வடமேற்குக்கிராமத்தின் கல்வெட்டு ஒன்றில் அச்சநகர் என்று இருப்பது அசுவ (குதிரை)நகர் என்பதன் திரிபாக்கம் என்றும் குறிப்பிடலாம். குதிரைமலைக்கண்மையில் அரண்மனையொன்றின் சிதைவுகள் இருப்பதாக மன்னார் புத்தளம் பழைய வீதிக்கண்மையில் வசிக்கிற முதியவர் ஒருவரிடம் கேட்டறிந்தேன். இப்போது அனுமதிக்கப்படாத பகுதியான குதிரைமலைப்பகுதியின் படங்களும் மிகக்குறைவாக இணையத்தில் கிடைக்கின்றன.  தேரோடு வீதி என்னும் பெயருடைய பகுதி அடர்ந்த காட்டுக்குள் இருப்பதற்கும் காரணம் சொல்லித்தெரிய வேண்டியதல்ல. 

குதிரைமலையின் இந்தத்தொல்லியல்சிறப்பை புவியியலின் படி சிறப்பாக இருக்கின்ற கற்பிட்டித்துறைக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதற்கு காரணங்கள் தேடிப்பார்த்தால் சில விடயங்கள் புரியும். மணற்தீவு சேவகன்தீவு கொத்தாந்தீவு கரைத்தீவுகள் இப்போது மணல்வெளிகளாக பெருநிலப்பரப்போடு இணைந்தே இருக்கின்றவை. கடற்கோள்களில் புவியியல் அமைப்பை மாற்றியிருக்க வாய்ப்புக்கள் உள்ளன. இலக்கியங்களும் அதைத்தான் சொல்கின்றன. களனி திஸ்ஸனின் ஆட்சிக்காலத்தில் நடந்த கடற்கோளில் முத்துக்குளிப்போரின் நானூறு ஊர்கள் காவுகொள்ளப்பட்டனவாம். சலாபம் சிலாபத்துறை போன்ற ஊர்களின் பெயர்கள் முத்துக்குளிப்பதை அடிப்படையாகக்கொண்டவைஎன்பதைக்கொண்டே மூழ்கிய பகுதிகள் வடமேற்கிற்குரியவை என்று உய்த்தறியமுடியும். களனி விகாரை கடலில் இருந்து இருபத்தைந்து மைல்கள் தொலைவில் கட்டப்பட்டிருந்தாலும் இப்போது கடலிற்கு இரண்டு மைல் தொலைவில் தான் விகாரை இருக்கின்றது. 

சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற குதிரைமலையைப்பற்றி குறிப்பிடுவது புதிய ஆய்வுக்கான களம் ஒன்றை திறந்து விடலாம். ஏனென்றால் குதிரைமலையை ஆண்டவர்கள் என்ற கருத்தமைவோடு எழினி அதியமான் பிட்டங்கொற்றன் ஆகிய மன்னர்களை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அவர்கள் குறிப்பிடுகின்ற குதிரைமலைக்கான இடம் தமிழ்நாட்டின் கொங்குநாடு மேற்குமலைத்தொடர்ச்சி என்றே அறிஞர்களால் காலங்காலமாக  வழங்கப்பட்டு வருகின்றது. "ஊராக்குதிரைக் கிழவ" என்றும் , "வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாட் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் " என்று அகம் 143 இலும்
" ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினி " என்று புறம் 158 இலும் குதிரைமலையை மன்னர்களைக் குறிக்கின்றது சங்க இலக்கியம். இது மேலும் ஆராயவேண்டியது.

மகாவம்சத்தின் படி விஜயன் வருகை என்ற சம்பவத்தின் உள்ளீடுகளை வடமேற்குக்கரையின் வழங்குதல்களோடு இணைத்துத்தருவதற்கும் முயற்சித்திருக்கிறேன்.  விஜயன் சிங்கத்தின் பரம்பரை போன்ற புனைவுகளை விடுத்துவிட்டு வரலாற்றுச்செய்திகளை ஆராயப்போனால் ஆதிக்கமாக இருந்த இயக்கர்கள் என்று குறிக்கப்படுகின்ற ஒரு நாகரீகமடைந்த இனக்குழுவிடம் இருந்த ஆதிக்கம் படிப்படியாக வட இந்தியாவில் இருந்து வந்தவர்களால் பறிக்கப்பட்டதாக பார்க்க முடியும். அதில் பிரதானமான வெற்றியொன்றைப்பெற்றவனாக அல்லது மிகப்பெரிய குடியேற்றம் ஒன்றிற்கு தலைமையேற்றவனாக விஜயன் இருக்க முடியும். பின்வந்த புனைவாளர்கள் விஜயன் எனப்படுகின்ற அர்சுனன் நாகநாட்டுக்கு வருகை தந்து பட்டத்திற்குரிய அரச குமாரியை மணந்து சென்றான் என்கிற மகாபாரதச் செய்தியின் பாதிப்பில் தமக்கான வரலாறு ஒன்றை உருவாக்கிக்கொள்ள முயற்சித்தார்கள் என்ற வகையிலும் இதை அணுகலாம். ஏனென்றால் கிருஷ்ணனின் கதை  தான் மகாவம்சத்தில் பண்டுகாபயனின் வரலாறாக இருக்கின்றது. ஆனால் குவேனி தொடர்பான இன்னமும் சில நம்பிக்கைகள் வடமேற்கு மக்களிடையே பேணப்பட்டிருக்கின்றன. தாமிரபரணி தம்பபண்ணி பெயர் ஒப்பீடுகளை கடந்த கட்டுரையில் பார்த்திருந்தோம்.ஆரம்பத்தில் விஜயனையும் நண்பர்களையும் சிறைவைத்த  இயக்கர்களின் தலைவி குவேனி பின் விஜயனின் திறமையிலும் பேச்சிலும் இளகி விடுவிக்கிறாள்.பின்பு விஜயனோடு இணங்கி இரண்டு மகன்களை பெற்றிருக்கிறாள். பின்பு விஜயன் மதுரையோடு மணத்தொடர்புகளை மேற்கொள்ள இடையூறு எனக்கருதி குவேனியைப்பிரிகிறான். குவேனி காட்டிக்கொடுத்தவளாகி இயக்கர் கூட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகிறாள். புத்தளம் குருநாகல் பிரதான பாதையில் இருக்கின்ற "விலாக்கட்டு பொத்த " என்ற ஊர் "கட்டாயமாக்கி பிரிந்த" என்ற அர்த்தத்தில் குவேனியை விஜயன் பிரிந்த பள்ளத்தாக்கே அது என்று அந்தப்பிரதேச மக்களிடையே நம்பிக்கை நிலவுகின்றது. புத்தளத்தின் லத்தோணிகல என்ற ஊரின் பெயரின் அர்த்தம் சிங்கள மொழியில் "புலம்பல் கல் " எனபதாகும். மக்களின் நம்பிக்கைப்படி துரோகியென்று பிரகடனப்படுத்தப்பட்டு கூட்டத்தை விட்டு துரத்தி விடப்பட்ட குவேனியும் மகன்களும் "லத்தோணிகல" என்கிற புலம்பல் குன்றின் மீதிருந்து புலம்பியபடி குவேனியின் தந்தையிடம் அடைக்கலம் கோரினாள் என்றும் நம்புகிறார்கள். அடைக்கலம் கேட்டு வந்த குவேனியை தந்தை மறுதலித்த பிறகு இதே பாறையில் வைத்து இயக்கனொருவன் முஷ்டியால் குத்திக்கொன்றான் என்றும் பிரதேசக்கதைகள் உலாவுகின்றன. குவேனியின் தம்பிமுறை ஒருவன் திசால ஜீவகத்த ஆகிய குவேனியின் குமாரர்களோடு தப்பிச்சென்றதாகவும்  அங்கே சபர குலம் இவர்களால் உருவாக்கப்பட்டதும் அந்த இடம் சபரகமுவ பகுதியாக அடையாளம் காட்டப்பட்டதாகவும் பதிவுகள் சொல்கின்றன.

லத்தோணிக்கலவின் வெண்சிவப்புப்பாறைகளின் மீதான கோடுகள் இதுவரையில் வெளியுலகத்தால் பெருமளவு அறியப்படாதது. கருப்புநிறத்தில் மூன்றங்குல அகலத்தில் வரையப்பட்ட அக்கோடு பாறையின் எந்த ஆழத்திற்கும் ஊடுருவி இருக்கின்றது. பாறையை சேதப்படுத்திக்கொண்டே சென்றலும் அக்கோட்டை அழிப்பது இயலாத விடயம். ஏதோ ஒருவகை கலவையால் வரையப்பட்ட தெளிவான இந்தக்கோடு குவேனியின் தகப்பனால் வரையப்பட்ட எல்லைக்கோடு என்று உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். அக்கோட்டைத்தாண்டி உள்ளேவர முயற்சித்த போதே குவேனி கொல்லப்பட்டாளாம். குவேனி கதைகளை போல இராவணன் பற்றிய ஐதீகங்கள் தொடர்பான சிங்களப்பெயர்களும் வடமேற்கில் நிலவுகின்றன. வாரியபொல என்கிற போது வா என்றால் காற்று ரிய  என்றால் வாகனம் பொல என்றால் தரிப்பிடம் . இராவணனின் புட்பக விமானத்தை தரித்து வைத்த இடம் என்பதால் தான் வாரியப்பொல என்ற பெயர் வந்ததாக அங்கே நம்புகிறார்கள். இப்படி வடமேற்கின் தொன்மங்கள் ஊருக்கு ஊர் பெயர்களில்கூட கொட்டிக்கிடக்கின்றன. பிச்சாண்டியாவ என்ற புத்தளம் அநுராதபுரம் வீதியில் இருக்கின்ற புத்தளக்கிராமத்தில் இரண்டு துறவிகளுக்குரிய குகைகளும் அதற்குள் கல்வெட்டுப்படிமங்களும் இன்னும் முழுமையாக  ஆராயப்படாமல் இருக்கின்றன. கிடைத்த தகவல்களின் படி  வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் கோபட்டி என்கிற துறவியொருவர் வைத்தியராக அக்கிராமத்து மக்களுக்கு சேவையாற்றியதாக சொல்கின்றார்கள்.கலன்தாய சிதைவுகள் என்று தொல்பொருள்த்திணைக்களம் ஆனைமடுவில் ஒரு சிதைவுக்களத்தை பாதுகாக்கிறார்கள். ஏழு கட்டடங்களின் சிதைவுகள் அங்கே இருக்கின்றன. அது தமிழ்த்தொல்லியலின் எச்சம் தான் என்பதற்கு அந்த இடத்தை இன்னும் " கோயிலடி கம" என்று வழங்குவதிலிருந்தே உறுதிசெய்து கொள்ள முடியும். ஆனால் அங்கே எந்தக்கோவில்களும் இல்லாத படியால் சிதைவுகளை கோயிற்சிதைவுகளாக கொள்வதில் தவறேதுமில்லை. அரசாங்கப்பதிவுகளிலும் கோயிலடிகம என்ற பெயர் அங்கீகரிப்பட்டுள்ளது. லபுக்கல சங்கடயகம போன்ற பல வடமேற்குக்கரையின் சிதைவுகள் பின்புலமறியப்படாமல் இருக்கின்றன. பெரியகுளம. குந்தாணிகம கல்வெட்டு மற்றும் கட்டிடச்சிதைவுகளும் பின்புலம் காணப்படவில்லை.

பிற்காலத்தில் வடமேற்கின் தமிழர்களை  இடம்பெயரச்செய்த அல்லது அழிக்கச்செய்த நிகழ்ச்சி ஒன்று இதுவரை எம்மத்தியில் பேசப்படாத ஓலைச்சுவட்டுத்தொகுதி ஒன்றில் புள்ளிவிபரங்களோடு கிடைக்கின்றது. தென்னிலங்கை மன்னன் மன்னனொருவன் (அநேகமாக ஆறாம் பராக்கிரமபாகு ) தன் ஆட்சிக்காலத்தில் வடமேற்கின் கரையோரங்களிலும் சமவெளிகளிலும் பாரம்பரியமாக முத்துக்களின் வியாபார நலன்களை பெற்றுவந்த  தமிழர்களின் பலம் அவனது இராச்சிய விரிவாக்கத்திற்கு இடையூறாயிருந்த படியாலும் தன் படைகளின் வலிமையில் நம்பிக்கையில்லாத படியாலும் கூலிப்படைகளை வரவழைத்திருக்கிறான்.

இது பற்றிய விபரங்களை புள்ளிவிபரங்களோடு தருகிற "முக்கர ஹட்டன"  (முக்குவர்களின் தோல்வி)என்கிற நான்கு பனையோலைகளில் எழுதப்பட்ட சுவடி தம்மன்கடுவயில் பாதுகாக்கப்பட்டு பிற்காலத்தில் பிரித்தானிய நூதனசாலைக்கு வழங்கப்பட்டது. கடைம் பொத்  , விற்டி பொத்  போன்ற சிங்கள வரலாற்றிலக்கியங்களின் கவிதை வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த முக்கர ஹட்டனவை 1936ஆம் ஆண்டு சிலுமின வெளியுலகத்துக்கு கொண்டு வந்திருந்தது. வன்னி உபாத என்ற ஓலைச்சுவடிக்கட்டும் ராஜசிம்ஹ கலே ப்ரவர்தி என்கிற நூலும் புத்தளத்தமிழர்களின் மரபுகள் பற்றிய கதைகளும் முக்கர ஹட்டன கூறும் செய்திகளையே சொல்வதால் அதன் நம்பகம் உறுதியாகின்றது.

முக்கர ஹட்டனவின் படி சாகவருடம் 1159 இல் முக்குவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த புத்தளம் துறைமுகத்தை பராக்ரம்பாகுவின் கூலிப்படைகள் மூன்று மாதங்கள் நிகழ்ந்த கடும் போரின் பின்பு  கறவாக்கள் கைப்பற்றினார்கள். போரில் முக்குவர்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் கறவாக்களின் சார்பில் ஆயிரத்து ஐந்நூறு போர்வீரர்கள் இறந்தததோடு  இரண்டாவது கோட்டைக்காக நிகழ்ந்த இன்னொரு கட்டயுத்தத்தில் 2800வீரர்கள் உயிரிழக்க நேரிட்டது. இரண்டாம் கட்ட போரின் போது படைநகர்த்திய தலைவனான மாணிக்கத்தலைவன் (manikka talavan) கொல்லப்பட்டான். இரண்டு கோட்டைகளிலும் கறவாக்களின் சிவப்புநிறக்கொடிகள் பறக்கவிடப்பட்டதோடு வடமேற்கு முழுமையாக ஆக்கிரமிப்புப்படைகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இங்கே சொல்லப்பட்ட மாணிக்கத்தலைவனைப்  பற்றி தனியாக ஒர கட்டுரையே வரைகிற அளவுக்கு தகவல்களை என்னால் தொகுக்க முடிந்திருக்கிறது. அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

மாணிக்க தலைவனுக்கு அடுத்த நிலையில் வர்ணசூரிய தோமரம் நாதன் ஆடப்பன் , குருகுலநாட்டு தேவன், அதிராச ஆடப்பன், குருகுலசூரிய முதியான்சே , பரதகுல சூரிய முதியான்சே , அரசகுல சூரிய முதியான்சேவும் படைகளுக்கு தலைமை தாங்கினார்கள் என்கிறது. இந்த படைத்தலைவர்களும் படையினரும் சேவகர்களும் உள்ளடங்கலான அனைவருமே தமிழ்நாட்டின் கீழைக்கரை , காஞ்சி மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள். வெற்றியின் பின்னர் 7740 படைவீரர்கள் புதிய குடியேற்றவாசிகளாக புத்தளத்துறையை சுற்றிக்குடியமர்ந்தார்கள் களனி மோதரையிலும் தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டார்கள். அத்தோடு இந்த படையினரைத்தங்க வைப்பதே தனக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு என்று எண்ணிய மன்னனும் பரவேணி என்று சொல்லப்படுகின்ற நிலங்களை கறவாக்களிற்கு வழங்கினான்.இந்தப்பரவேணி நிலங்கள் முன்னேசுவரம் , ஆனைவிழுந்தான், பெரியமுல்ல வீதி, ஹூனுப்பிட்டிய வீதி, நீர்கொழும்பு என்பவைகள் உள்ளிட்ட வடமேற்குக்கரையின் நீட்சியாக மேற்குவரை செல்கின்றது என்கிறது முக்கர ஹட்டன.

இசுலாமியர்களாக பெருவாரியானவர்களின் மதமாற்றம் வடமேற்கில் நிகழ்ந்த ஒரு சந்தர்ப்பம் பற்றி அறியத்தருவது என் கடமையாகிறது. அதற்கான பின்னணியும் முக்கர ஹட்டனவை சார்ந்ததுவே. ஒரு இடத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் குழு தங்கள் பழைய வரலாற்றை கலைகளிலும் இலக்கியங்களிலும் பிரதிபலித்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் காலத்திற்கேற்ப சிறுசிறு மாற்றங்களை தேவைகளைப்பொறுத்து புனைந்தும் கொள்வார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ளவைகளை வாசியுங்கள்.

நிகழ்ந்த சம்பவம் ஒன்று  பல இடங்களில் வேறு வேறு விதமாக திரிபுகள் சிதைவுகளோடு கதைகளில் வழங்கிவருவது வழமையே. ஆனால் அக்கதைகளிலிருக்கிற ஒற்றுமைகளை மட்டும் கவனத்திற்கொண்டால் சில வரலாற்றுண்மைகளைக் கண்டு கொள்ள முடியும். இதற்கு புனைவுகளையும் புனைவுகளை எழுதியவர்களின் பின்னணி நோக்கங்களையும் பற்றிய அறிவும் அவசியமானதே.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக்குடா நாட்டிலும் முள்ளியவளைப்பகுதிகளிலும் கிழக்கே மட்டக்களப்பு அம்பாறையில் தமிழ்ப்பகுதிகளிலும் வடமேற்குக்கரையோர சமவெளிப்பகுதிகளிலும் வழங்கப்படுகின்ற ஒரு தொன்மம்  ஆராயப்பட வேண்டியதாகத் தோன்றியது. புனைவுகள் இடைச்செருகல்களை அகற்றி தொன்மத்தை அறியமுற்பட்ட போது ஆறு விடயங்கள் இதில் சிறுசிறுமாறுதல்களுடன் பொதுவாக இருக்கின்றது.

போரில் பங்குபற்றிய பிரதானமானவர்கள்

1.வெடியரசன்/வேதியரசன் 
என்கிற  மன்னன்/குறுநிலத்தலைவன்/கடற்படைகளுக்கு பொறுப்பானவன்/ கடற்கொள்ளையன் வாழ்ந்திருக்கிறான்
நெடுந்தீவு மற்றும் மன்னார் அரிப்புத்துறை கோட்டைகளோடு தொடர்பானவன்

2.அவனுக்கு சம காலத்தவனான மீரா என்கிற இசுலாமியன்/ வெடியரசனின் ஆட்களோடு சார்பாக போரிட்ட இசுலாமியர்களின் தலைவன் /குதிரைமலையில் அராபியர்களின் ஆதிக்கத்திற்கு காரணமாக இருந்தவன்

3.மாணிக்கத்தலைவன் என்கிற கடற்படையொன்றின் தலைவன் / தமிழ்நாட்டில் இருந்து வந்தவன்/ கீழைக்கரையைச் சேர்ந்தவன் /மீகாமன் என்கிற பதவிப்பெயராலும் அழைக்கப்பட்டான்

4.போர் நடந்த இடம் - வடமேற்குக்கரை / புத்தளம் கடனீனேரி/ மன்னார்க்கடல்/ யாழ்ப்பாணத்தீவுகளிற்கிடைப்பட்ட கடற்பகுதி

5.போரிற்கான காரணம் - கண்ணகியின் உடைக்கப்படாத சிலம்பு / பெறுமதியான நாகமணி / வெடியரசனின் மகள் மீதான எதிர்ப்படைத்தலைவனின் காதல்/ தென்னிலங்கை மன்னனின் கூலிப்படைகள்

6.சிங்கள மன்னனின் பங்களிப்பு - மரக்கலங்கள் வழங்கினான்/ கூலிப்படையாக வரவழைத்தான் / அவனின் படைகளையும் எதிரிப்படைகளில் பங்களித்திருந்தன

7.அராபியர்களின் பங்களிப்பு - குதிரைமலையின் மீரா என்கிறவன் முக்குவர்களுக்கு படையுதவி வழங்கினான். வெடியரசனிற்கு பிறகு குடிகளின் தலைவனாகினான்/ எஞ்சியவர்களை முகமதியர்களாக மாற்றியவன்

8. போரின் முடிவு - வெடியரசனின் மரணம் , மீகாமன் படைகளின் வெற்றி  புதியவர்களின் குடியேற்றம் , பூர்விகமாக வாழ்ந்த மக்களின் இடப்பெயர்வு

வடமேற்கில் நிலவுகின்ற கதைகளின் படி அப்பிரதேசங்களை ஆண்டுவந்த வெடியரசனின் மகளை மணமுடித்துத்தருவது உள்ளிட்ட மாணிக்கத்தலவனின் கோரிக்கைகளை வெடியரசன் நிராகரித்ததால் அவன் படைகளுடன் போர் தொடுத்துவந்திருந்தான். இதன் போது வெடியரசனின் படைபலம் குறைந்திருந்த படியால் அவன் குதிரைமலையில் இருந்த அராபிய இசுலாமியர்களின் உதவியை நாடினார்களாம். மங்களவெளிக்கும் கட்டைக்காட்டுக்கும் இடையிலான் வில்லுச்சமவெளியில் போர் நிகழ்ந்த இடம் என்றும் குறிப்பிடுகிறர்கள். மாணிக்கதேவன்புற்று என்கிற இடத்தில் கொல்லப்பட்ட மாணிக்கத்தலைவனின் உடலம் புதைக்கப்பட்டது(எரிக்கப்படவில்லை) என்பது புத்தளத்து மக்களிடையே புளங்குகின்ற கருத்து. போர்முடிவில் பிரதியுபகாரமாக முக்குவர்களின் பெரும்பாலானவர்கள் இசுலாத்தை தழுவி முஸ்லிம்களாகிவிட மிகுதிப்பேர் வெளியேறிவிட்டார்கள் என்றும் நம்புகின்றனர்.

சிலப்பதிகாரத்தின் அண்மைய இடைச்செருகலான கப்பல்வைத்த காதை மட்டக்களப்பு அம்பாறை கண்ணகி கோவில்களில் பாடப்படுகின்றது. கண்ணகியின் தகப்பன் கண்ணகித்திருமணத்திற்காக அணிவிக்க விரும்பிய நாகமணியை எடுத்துவர மீகாமனை அனுப்பிவைக்கிறார். மீகாமன் அதியரசன் அதிபத்தன் வழிவந்தவ கடற்படைத்தலைவன். தென்னிலங்கை மன்னனிடம் மரக்கலங்களைப்பெற்று படையெடுக்கிறான். தோல்வியடைந்த வெடியரசனை பாய்மரத்தில் கட்டிவைக்கிறான்.

யாழ்ப்பாண வைபவ மாலை வையாபாடல் போன்ற பிரதானமாக யாழ்ப்பாணத்தைப்பற்றிய வரலாற்றை அடிப்படையாக்க்கொண்ட இலக்கியங்களின் வெடியரசன் தொடர்பான பார்வை வேறுவிதமானது.  வையாபாடலின் மூன்று பாடல்கள் இச்சம்பவத்தை விபரிக்கின்றன. வையாபாடல் குடியேற்றங்களின் வரலாறுகளைக்குறிக்கும் நோக்கில் எழுதப்பட்டிருப்பதால் இக்கதையின் படி தோற்ற வெடியரசனே மட்டக்களப்பின் முதல் குடியேற்றமான முக்குவக்குறிச்சியையும் தோல்வியடைந்த சக இசுலாமியத்தலைவன் மீரா மன்னார் விடத்தல்த்தீவில் முகமதியக்குறிச்சியையும் அமைத்தார்கள் என்கின்றது. யாழ்ப்பாண வைபவமாலையின் படி சேந்தான்குளம் உசுமான் துறை என்று சொல்லப்பட்டிருக்கிறதோடு கடற்கொள்ளையர்கள் என்றுதான் வெடியரசன் மீரா குறிப்பிடப்படுகின்றனர். மு.க.சிவப்பிரகாசம் என்பவர் வெடியரசன் கூத்துக்களின் செய்திகளை தனி நூலில் சொல்லியிருக்கிறார்.

வெடியரசனின் தோல்வியை மட்டக்களப்பு அம்பாறையில் உள்ள கண்ணகி கோவில்களின் சடங்குகளின் போது கண்ணகி வழக்குரை காவியம் என்று புனைவுகளோடு வெடியரசன் தோற்ற வரலாறும் நினைவுகூரப்படுகின்றது.வைகாசி மாதங்கள் தோறும் கண்ணகி ஆலயங்களில் சிலம்பு கூறல் என்கிற பெயரிலே வெடியரசனின் தோல்வியை நினைவுகூறுகிற மரபை முல்லைத்தீவில் காணமுடியும். தவிர வெடியரசன் கூத்துக்களும் வடக்கில் பரவலாக கடந்த தசாப்தம் வரை நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை என்று தொன்மையான ஒரு கட்டிடத்தொகுதியின் இடிபாடுகள் இன்றும் எஞ்சியிருக்கின்றன.

ஆக முக்கர ஹட்டன தரவுகளோடு சொல்கின்ற போரில் ஈடுபட்ட மாணிக்கத்தலைவன் என்ற பெயரும் அவனது இறப்பும் போர் பற்றிய செய்திகளும் அவன் தமிழ்நாட்டில் இருந்து கடற்படைத்தலைவன் என்பதும் பூர்விகமானவர்கள் அகற்றப்பட்டார்கள் என்பதும் வடக்கின் யாழ்ப்பாண மாவட்டத்திலும் முல்லைத்தீவிலும் கிழக்கில் மட்டுஅம்பாறையிலும் வடமேற்கில் புத்தளம் கற்பிட்டி சிலாபத்திலும் நிலத்தொடர்பில்லாத ஏதோ ஒருவகையில் வெவ்வேறுவடிவங்களில் நினைவுகூறப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

மட்டக்களப்புக்கு முக்குவர்கள் வருகை தந்தார்கள் என்றே சகல பதிவுகளிலும் கிடக்கின்றது. அதாவது அங்கேயே அவர்கள் தனி இனக்குழுமமாக தோற்றம் பெற்று வளர்ந்திருக்கவில்லை. எங்கிருந்து எப்போது என்ற கேள்விகளைத்தாண்டி நாகரிகமடைந்தவர்களாகத்தான் இடம்பெயர்ந்து/ இடம்பெயர்க்கப்பட்டு கிழக்குக்கு வந்திருக்கிறார்கள். இனக்குழுமங்களின் இடப்பெயர்வு என்றால் பொதுவாக வரட்சி கடற்பெருக்கு இயற்கை அழிவுகள்,  படையெடுப்புக்கள் கொள்ளைநோய்கள் தான் பொதுவான காரணமாக இருக்கும். இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயருபவர்கள் என்றால் மட்டக்களப்பை விட்டும் எப்போதோ இடம்பெயர்ந்திருப்பார்கள். ஆக இடம்பெயருவதற்குக்காரணம் படையெடுப்பாகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து தமிழ்பேசக்கூடிய இனக்குழுக்கள் இடம்பெயர்ந்து வந்திருப்பார்களெனில் வடமேற்கு வடக்கை தான் தங்குமிடமாகத்தெரிவு செய்திருப்பார்கள். அதுவே மிகக் கிட்டிய மார்க்கம். ஆகவே அநேகமாக நான் கூறிய வெடியரசன் தொன்மங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறை தமிழ் மக்களிடம் ஏனையவர்களை போலவே தோல்வியொன்றை நினைவுகூறுகிற வழக்கமிருப்பதாலும்,  கலாச்சார ஒற்றுமைகளில் இசுலாமியர்களோடு பிணக்கமில்லாமல் இருப்பதாலும் (வடமேற்கிலும் கிழக்கிலும் தான் முஸ்லிம் தமிழ்க்கிராமங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருக்கின்றன) முக்கர ஹட்டனவை அவைகளோடு முடிச்சுப்போட்டேயாக வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றேன்.
மட்டக்களப்புக்கு முக்குவர்கள் வருகை தந்தார்கள் என்றே சகல பதிவுகளிலும் கிடக்கின்றது. அதாவது அங்கேயே அவர்கள் தனி இனக்குழுமமாக தோற்றம் பெற்று வளர்ந்திருக்கவில்லை. எங்கிருந்து எப்போது என்ற கேள்விகளைத்தாண்டி நாகரிகமடைந்தவர்களாகத்தான் இடம்பெயர்ந்து/ இடம்பெயர்க்கப்பட்டு கிழக்குக்கு வந்திருக்கிறார்கள். இனக்குழுமங்களின் இடப்பெயர்வு என்றால் பொதுவாக வரட்சி கடற்பெருக்கு இயற்கை அழிவுகள்,  படையெடுப்புக்கள் கொள்ளைநோய்கள் தான் பொதுவான காரணமாக இருக்கும். இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயருபவர்கள் என்றால் மட்டக்களப்பை விட்டும் எப்போதோ இடம்பெயர்ந்திருப்பார்கள். ஆக இடம்பெயருவதற்குக்காரணம் படையெடுப்பாகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து தமிழ்பேசக்கூடிய இனக்குழுக்கள் இடம்பெயர்ந்து வந்திருப்பார்களெனில் வடமேற்கு வடக்கை தான் தங்குமிடமாகத்தெரிவு செய்திருப்பார்கள். அதுவே மிகக் கிட்டிய மார்க்கம். ஆகவே அநேகமாக நான் கூறிய வெடியரசன் தொன்மங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறை தமிழ் மக்களிடம் ஏனையவர்களை போலவே தோல்வியொன்றை நினைவுகூறுகிற வழக்கமிருப்பதாலும்,  கலாச்சார ஒற்றுமைகளில் இசுலாமியர்களோடு பிணக்கமில்லாமல் இருப்பதாலும் (வடமேற்கிலும் கிழக்கிலும் தான் முஸ்லிம் தமிழ்க்கிராமங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருக்கின்றன) முக்கர ஹட்டனவை அவைகளோடு முடிச்சுப்போட்டிருக்கிறேன் 

Views: 1246