உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

சென்ற மாத உவங்கள் இதழுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவு எமக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. உங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி. கடந்த மாத இதழ் தொடர்பான உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நாம் மதிக்கிறோம். அந்த வகையில் கடந்த மாத உவங்கள் இதழில் அனேக ஆக்கங்களில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்பட்டதுடன் கௌதமியின் ஆங்கில கவிதையின் சரிபார்க்கப்படாத கவிதைப் பிரதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இத்தவறுகளுக்கு உவங்கள் ஆசரியர் குழுவினர் மனவருத்தம் தெரிவிப்பதுடன், இனி வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது தவிர்க்கப்படும் என்பதையும் கூறிக் கொள்கிறோம். 

அடுத்து உவங்கள் சஞ்சிகையின் தோற்றம் பற்றி ஓர் குறிப்பை வெளியிடுவது இவ்விடத்தில் பொருத்தமானது என கருதுகின்றோம். அந்தவகையில் இணையச்சஞ்சிகை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எமது கலந்துரையாடல் மிகச்சிறுகிய வட்டத்துக்குள்ளேயே ஆரம்பித்தது. வழக்கமான பெயர்களை விட புதியதாக எங்களோடு அன்றாடம் நெருக்கமாக பாவிக்கப்படுகின்ற சொல் ஒன்றை வைப்பது தனித்துவமாகவிருக்கும் என்றெண்ணினோம்.

பெடியள் போன்று பல இலங்கையில் வழக்கிலிருக்கின்ற பெயர்களை நண்பர்கள் பரிந்துரைத்தாலும் உகரம் தான் எங்களின் தெரிவாக இருந்தது.

எதையும் எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல. தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.

குறளும் கூட உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களும் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம். உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் உ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர். அதாவது உலகைக் குறிக்க உ எனப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு

அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது.

எனவே வளைவுக் கோடும் - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும் தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின்கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். (இதற்கும் பிள்ளையார் சுழி என்பதற்கும் தொடர்பு கிடையாது

உவங்கள் = உவன்+கள் என்று ஆண்களை மட்டும் குறிக்கும் சொல்லும் இல்லை. யாழ்ப்பாண பிரதேசவாதச் சொல்லாகவும் இல்லை என்பதே உண்மையாகும். - இது  தான் உவங்கள் உருவான கதை

இம்மாத உவங்கள் இதழும் வழமை போலவே பல ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இவ்வெளியீட்டிலும் எழுத்துப்பிழைகளை  முடிந்தவரை சரி செய்திருக்கிறோம்.  எழுத்துபிழைகளை  சரிபார்த்து உதவிய தயானிக்கு நன்றி கூறுவதுடன் இம்மாத உவங்கள் முகப்பு பக்கத்தை வடிவமைத்து தந்த கனிஸ்கர் ரவீந்திரன் அவர்களுக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறோம். மேலும் இச் சஞ்சிகை தொடர்பான கருத்துக்களை வாசகர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டு அடுத்த வெளியீட்டில் உங்களை உவங்களின் வழி சந்திக்கிறோம் 


நன்றி


தொகுப்பாசிரியர்கள்
editor.uvangal@gmail.com
Views: 404