தூணிலும் இருப்பார்...?!

எழுத்தாளர் : கிஷாந்மின்னஞ்சல் முகவரி: krushkishanth8@gmail.comBanner


'நித்யா, இங்க ஓடிவா. வேகமா வா நித்யா.'

'ஏன் இப்ப உயிர் போற மாதிரி கத்திறீங்க? '

அவளுடைய சலிப்பைக் கொஞ்சங்கூட பெரிதுபடுத்தாமல் தன்னுடைய கருவியில் ஒரு சில பொத்தான்களை அழுத்தியும், சுழற்றிகளை சுழற்றியும் மாறுதல்களை செய்துகொண்டிருந்தார் '26ம் நூற்றரண்டின் ஐன்ஸ்டீன்' சிற்றம்பலம்.

'நாடகம் பார்த்துக்கொண்டிருந்தவள கத்திக்கூப்பிட்டுட்டு அங்க அந்த மிஷினோட என்ன குடும்பம் நடத்திட்டிருக்கிங்க? '

'நித்யா, நான் நெருங்கிட்டேன் என்டு நினைக்கிறன்.'

'கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருசமாச்சு... இன்னும் ஒழுங்கா என்னக்கூட நெருங்க முடியேல. இதில வேற எங்க இப்ப புதுசா நெருங்கிட்டீங்க?'

மனதிலுள்ள கோபங்களை இவ்வாறாக ஏளனமாக அவள் வெளிப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. சிற்றம்பலமும் இதற்கெல்லாம் அசருபவரும் அல்ல. திருமணமான முதல் நாளிரவே அவருக்கும் அவளுக்குமான பிரச்சினை ஆரம்பித்திருந்தது. இருப்பினும் 'திருமணமானவர்கள் பிரியத் தடை' என்று அரசாங்கம் 2350ல் கொண்டு வந்த சட்டத்தின் காரணமாக 15 வருட குடும்ப வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பதினைந்து வருடங்களில் சிற்றம்பலம் நித்தியாவுடன் கதைத்தது, சண்டைபிடித்தது, அவ்வப்போது ஹோர்மோன் தூண்டும் போது கட்டில் பகிர்ந்தது என ஒரு 1200 மணித்தியாலயங்களை செலவிட்டிருப்பார். அவரது எண்ணவோட்டத்தில் சொல்லப்போனால் 50 நாட்களை வீணடித்திருப்பார்.

'இங்கபாரு, ஆரம்பத்தில மனுசங்கள மிஞ்சின சக்தி ஒன்டு இருந்ததாகவும், அத கடவுளென்ட பேரில் கும்பிட்டதாகவும் 2150 இல் எழுதப்பட்ட ஒரு ஆர்டிகல் இருக்கு.'

'என்ன உளருறிங்க? கடவுளா? மனுசங்கள விட மிஞ்சின சக்தி எப்பிடி இருக்கும்?'

'அதத்தான் பதினைஞ்சு வருசமா யோசிச்சுயோசிச்சு கஸ்டப்பட்டு இதக் கண்டுபிடிச்சிருக்கன்.'

ஒரு அறை முழுவதையும் நிரப்பியிருந்த கணினிகளின் சாம்ராஜ்யத்தை பெருமையுடன் சுட்டிக்காட்டியபடி நின்றுகொண்டிருந்தார் சிற்றம்பலம்.

'இங்கபாரு நித்யா, உண்மேலயே கடவுள் என்ட ஒருத்தர் இருந்திருக்கனும். பழைய எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் படிச்சிருக்கன்.  அதில நிறைய இடங்களில ஏதோ ஒரு சொல் இல்லாமப் போயிருந்ததா எனக்கு தோணிட்டே இருந்திச்சு. எங்களோட கல்யாணம் நடந்த அண்டைக்குத்தான் அந்தக் கட்டுரைய படிச்சன். பிறகு கடவுள் என்ட சொல் விடுபட்ட இடங்களில நிரப்ப பேர்பெக்டா பொருந்திச்சு'

சிற்றம்பலம் சொல்வதை நித்யாவால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
 'அதெப்பிடி உலகம் முழுக்கலிலயும் ஒரு சொல்ல இல்லாமல் செய்யேலும்? எந்த அகராதிலேயும் கூட அப்பிடி ஒரு வார்த்தையப் பார்க்கேலயே!' யோசித்து யோசித்து குழம்பினாள். இறுதியாக, 
'அந்தக் கருமத்த விடுங்கோ. இப்ப என்னத்துக்கு என்னக் கூப்பிட்டனீங்க? இந்த மெஷினெல்லாம் வைச்சு என்ன செய்யப்போறிங்க? '

சிற்றம்பலத்தின் கண்களில் பெருமை பொங்க ஆரம்பித்தது. மெதுவாக தனது கருவியைப்பற்றி விளக்கத்தொடங்கினார்.

'இதப்பாரு. நாங்கெல்லாம் கேக்கிறது இருவது ஹேர்ட்ஸ் தொடக்கம் இருவதாயிரம் ஹேர்டஸ் வரைக்குமுள்ள ப்ரீகுவென்சில இருக்கிற சத்தத்தத்தான். அதுக்குமேலயும் போய் யோசிச்சா ரேடியோ வேவ் மீடிறனா உச்சமா முன்னூறு ஜிகா ஹேர்ட்ஸ் வரைக்கும் உருவாக்கி பிறகு அத இருவதாயிரம் ஹேர்ட்ஸிற்கு உள்ள மாத்தி தகவலப்பரிமாறுறனாங்கள்.'

'இதெல்லாம் 1ம் ஆண்டு பாடப்புத்தகத்திலேயே படிச்சிட்டன். இந்த விசர இப்ப ஏன் அலட்டுறீங்க.'

'அவசரப்படாத நித்யா, பொறுமையா கேளு. மனுசன மிஞ்சின சக்தியாத்தான் கடவுள சொல்லி இருக்குது அந்தக் கட்டுரையில. சோ, முன்னூறு ஜிகாஹேர்ட்ஸிற்கு மேல இருக்கிற ஏதாவது மீடிறனில கடவுள் ஏதாவது கதைச்சுக்கொண்டிருக்கலாம். அவரோட நாங்க ஏதாவது கதைக்கவும் வாய்ப்பிருக்கு. அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு இந்த மிஷின உருவாக்கினனான்.'

நித்யாவுக்கு பெருமைப்படுவதா, கோவப்படுவதா என்று நிலையான முடிவுக்கு வரமுடியவில்லை. திருமணமாகிப் பதினைந்து வருடத்தில் தன்னைக்கூட சரிவரத்தொட்டதில்லை. ஆனால், கடவுள் என்று ஒருத்தர் இருக்கிறதயும் ஆராய்ஞ்சு, அவருடன் கதைப்பதற்கு கருவியையும் உருவாக்கிய கணவனை ஒருவித ஏக்கத்துடன் பார்த்தாள்.

'எல்லாம் சரி. எல்லாக் கட்டுரையிலயும் கடவுள் என்ட வார்த்தைய அழிச்சிருந்தா எப்பிடி அந்த ஒரு கட்டுரையில மட்டும் அழியாம இருந்திருக்கும்? '

நித்யா தான் ஏதோ பிரமாதமான கேள்வியொன்றைக் கேட்டுவிட்ட தோரணையில் வழமையிலும் நிமிர்ந்து நின்றாள். சிற்றம்பலம் இந்தக் கேள்வியை பலமணிநேரமாக எதிர்பார்த்தவர் போல சட்டெனப் பதில் சொன்னார்.

'எனக்கும் தெரியல நித்யா. அது ஒருவேளை கடவுளின்ட விளையாட்டாக்கூட இருக்கலாம்.'
சிற்றம்பலத்தின் பதில் நித்யாவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்பதனை அவளது முகம் அப்பட்டமாகக் காட்டியது.

'அதப்பற்றி பிறகு யோசிக்கலாம், இப்ப மெஷினப்பாரு. இது அல்ட்ரா ப்ரீக்குவென்சி வேவ்-அ உருவாக்கிறதுக்கான சிஸ்டம். கிட்டத்தட்ட ரெண்டு இலட்சம் ஜிகா ஹேர்ட்ஸ் வரைக்கும் உருவாக்கும். இது அந்த ப்ரீகுவன்சிய ரீட் பண்ணுறதுக்கான சிஸ்டம். பிறகு அந்தத் தொங்கலில் இருக்கிறது அல்ட்ரா ப்ரீகுவென்சிய இருவதாயிரம் ஹேர்ட்ஸ்ஸ விட குறைச்சு எங்களால கேட்கக்கூடிய மாதிரி செய்றதுக்கான சிஷ்டம்.'

அறையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்த கருவிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வியந்து போனாள் நித்யா. கணவனின் அறிவுத்திறன் அவளுக்குஅளவுகடந்த ஆச்சர்யத்தை அளித்தது. மனைவியின் மனதில் தன்னை எண்ணிப் பெருமை பொங்குவதனை சிற்றம்பலம் அவளது முகத்தை வைத்தே அறிந்துகொண்டார்.
சிற்றம்பலம் மெதுவாக சென்று மூன்று கருவிகளையும் ஒன் செய்தார். பின் வெள்ளோட்டம் விடுவதற்காக மனைவியை மூன்றாவது கருவியின் ஹெட்செட்டை காதில் மாட்டச்சொல்லிவிட்டு முதலாவது கருவியின் ஒலிவாங்கியை கையில் எடுத்துக்கொண்டார். வழமையான புராணம் போல் 'மைக் டெஸ்டிங் 1...2...3...' என ஆரம்பித்த வண்ணம் இரண்டாவது கருவியின் திரையைப்பார்த்தார். ஒலி உள்வாங்கப்படுவதற்கு ஆதாரமாகக் கோடுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. மனைவியைத் திரும்பிப்பார்த்தார். 'கேட்கிறது' என்பதற்கு அடையாளமாக பெருவிரலை உயர்த்திக் காட்டினாள்.
இப்போது மீடிறனை மெதுமெதுவாக அதிகரித்து அதிகரித்து தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தார். எவ்வித கோளாரும் இன்றிக் கருவி வேலை செய்வதை உறுதிசெய்ததும் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் ஓடிச்சென்று மனைவியைக் கட்டியணைத்து முத்தம் பதித்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நித்யா உறைந்து போய் நின்றாள்.

'நித்யா, இப்ப அந்த மீடிறன்ல என்ன அதிர்வு வந்தாலும் எங்களால கேட்க முடியும். நான் கதைச்சத கடவுள் கேட்டிருந்தா கண்டிப்பா ரிப்ளை வரும்.' என்ற சிற்றம்பலம் ஆவலாக இரண்டாவது கருவியின் திரையைப் பார்க்க ஆரம்பித்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. திரையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஐந்து நிமிடம்...பத்து நிமிடம்... அரைமணிநேரம்... ஒரு மணிநேரம்... திரை நிர்ச்சலனமாக அப்படியே இருந்தது. சிற்றம்பலத்தின் முகத்தில் தோல்வியின் ரேகை படிய ஆரம்பித்ததை நித்யா சட்டென அவதானித்தாள்.

'விடப்பா, சிலவேளை அந்தாள் நித்திரகொண்டிருக்கும். எழும்பினப்பிறகு ஏதாவது கதைக்கும்.'
'இல்ல நித்யா, சாதாரணமான மனுசங்க நாங்களே வெறும் ஒரு மணிநேரம் தான் நித்திரைகொள்ளுறம். இப்பத்தான் உயிர கண்டுபிடிக்கிற பரிசோதனைய 99 வீதம் முடிச்சிருக்கம். அந்தக் கட்டுரையில கடவுள் இறப்பே இல்லாதவர் என்டு சொல்லியிருக்கு. அப்ப அவர் கண்டிப்பா இப்ப ரிப்ளை பண்ணியிருக்கனும்.'
'யோசிச்சுபாரப்பா, மனுசன் தனியாளா கதைக்க ஆருமே இல்லாம இவ்வளவு காலம் இருந்திருக்கும். அப்ப நித்திரக்கொள்ளுறதத் தவிர வேற என்ன வேல இருக்கும்.? '

'புரியாம பேசாத நித்யா, அவர் தெளிவான உருவமில்லாத ஒரு சக்தி மாதிரி இருப்பார் என்டுதான் அதில போட்டிருக்கு.'

கணவனை ஆறுதல்படுத்த பேச்சை ஆரம்பித்த நித்யா இப்போது பொறுமையின் எல்லையில் நின்றுகொண்டிருந்தாள்.

'உன்ட இந்த விசர் கட்டுரைய முதலில தூக்கிப்போடு. மூன்டு மணியாச்சு. இனியாரும் முழிச்சிருக்கக்கூடாதென்டு அரசாங்கத்தின்ட உத்தரவு. மறந்துபோச்சே? அந்த மருந்தப் போட்டுட்டுப்படுப்பம் வா'

என்றவள் மருந்தினை எடுக்கச் சென்றாள்.
'வள்...வள்...வள்...' தூரத்திலிருந்து ஆரம்பித்த நாய்களின் சத்தம் ஒவ்வொரு வீட்டிற்கும் பரவ ஆரம்பித்தது.

'இந்தா மருந்தக் குடி. படுப்பம்.'

'வள்...வள்...வள்...' இப்போது சிற்றம்பலத்தின் வீட்டு நாய் குரைக்க ஆரம்பித்தது.

'இது ஏன் இப்ப புதுசா இப்பிடி குரைக்குது? ஒருநாள் கூட இப்பிடி செஞ்சதில்லையே.' நித்யா குறைபட்டுக்கொண்டிருந்த வண்ணம் மருந்தை விழுங்கச்சென்றாள். சிற்றம்பலத்தின் நெற்றி சுருங்கி எதையோ பலமாக யோசிக்கின்றார் என்பதை எடுத்துக்காட்டியது. திடீரென அவரது கண்கள் பளிச்சிட்டன.

'பொறு நித்யா, மருந்தக் குடிக்காத, நாங்க 2..50ற்கு நித்திரகொள்ளனும் என்டிறது சட்டம். எழும்ப 4 மணி ஆகும்.'

'பிறந்ததில இருந்து இப்படித்தானே, அத ஏன் இப்ப சொல்லுறீங்க? '

'பொறு, ஒரு மணித்தியாலம் நித்திர கொள்ளனும் என்டது சரி. ஏன் இந்த நேரத்தை அதுக்கு தெரிவு செய்யனும்? அதுவும் கண்டிப்பா மருந்தக் குடிச்சிட்டு நித்திரகொள்ளனும் என்டு சட்டம் போடனும்?'

சிற்றம்பலத்தின்  கேள்வி நித்யாவிற்குள்ளும் குழப்ப அலைகளை ஏற்படுத்திவிட்டது. முப்பத்தைந்து வருடங்களாக அவர்கள் தினமும் கடைபிடித்தது. 'ஏன் இவ்வளவு நாளும் யோசிக்கேலே?' அவள் தனக்குள்ளே கேள்விகேட்டாள்.

சிற்றம்பலம் வேகமாக அறையின் நடுவிலிருந்த, மூன்று கருவிகளையும் இணைக்கும் கணினியிடம் ஓடினார். வேகமாக 0,1 என கோடிங்குகளை அடுக்க ஆரம்பித்தார்.

'திரும்ப என்ன செய்யிறிங்க? '

இப்போது கருவிகளிடம் ஓடிச்சென்று உட்சுற்றுகளில் திருத்தம் செய்ய ஆரம்பித்தார்.

'எங்களால கேட்கக்கூடியது இருவது ஹேர்ட்ஸ் தொடக்கம் இருவதாயிரம் ஹேர்டஸ் மட்டும் தான். அப்ப எங்கள விடப் பெரிய சக்தி நாங்க பயன்படுத்திற உச்ச அளவான முன்னூறு ஜிகாஹேர்ட்ஸ விட பெரிசா இருக்குமென்டு யோசிச்சன்.'

'அதத்தான் முதலே சொல்லீட்டிங்களே!'

'ஆனா அந்த சக்தி இருவது ஹேர்ட்ஸ்ஸ விட குறைவாவும் இருக்கலாம் என்டு யோசிக்காம விட்டிட்டன். நாய்களுக்கு இருவது ஹேர்ட்ஸ்ஸ விட குறைவாவும் கேட்கும்.'

நித்யாவிற்கும் ஏதோ புரிவதுபோல் பட்டது. இப்போது சிற்றம்பலம் அனைத்து மாற்றங்களையும் செய்து முடித்திருந்தார்.

'இஞ்சேருங்கோ, அங்க திரையில ஏதோ காட்டுது.'

சிற்றம்பலத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பிறவிப்பலனை அடைந்தது போல மூன்றாவது கருவிக்கு ஓடிச்சென்று ஹெட்செட்டினை எடுத்துக் காதில் மாட்டினார்.

'எல்லாத்தையும் அழிச்சு முடிச்சு இப்ப என்னையும் அழிக்கப்பார்க்கிறாங்களே! இந்த அநியாயத்த யாரிட்ட போய் சொல்லுறது?' 

Views: 511