திரை

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

காட்சி – 04

மூன்று பேராகச் சேர்ந்து ஒரு மாதிரி அந்த பெரிய செட்டை தூக்கிக்கொண்டு போய் மேடையின் நடுவில் வைத்து, ஒழுங்கு படுத்தி, அவற்றுக்கு முன்னால் நீளமான ஒரு வாங்கை வைத்து, அதன் மேல் வெள்ளை துணி ஒன்றை விரித்து விட்டு 'அப்பாடா...!!' என்று நான் நிமிர்வதற்கும் 'ICU' என்று எழுதி கீழே சிவப்பு பெயின்டால் பெரிய சக அடையாளம் போட்ட அந்த ரெஜிபோம் கதவு உடைந்து விழுவதற்கும் சரியாக இருந்தது. உடனேயே என் 'அப்பாடா...!!'வை அப்படியே நிறுத்தி விட்டு, எங்கேயோ ஏமலாந்திக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பிடித்து,

'இந்த சீன் முடியும் வரைக்கும் இந்த ரெஜிபோம் கதவை இப்பிடியே பிடிச்சுக் கொண்டு இந்த செட்டுக்கு பின்னால நில்லு' என்று சொல்லி அந்த கதவு பிரச்சினைக்கு ஒரு மாதிரி முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மீண்டும் 'அப்பாடா...!!'வைத் தொடர்ந்தேன். 

எல்லாம் சரி என்று நான் சைகை காட்டியதும், திரை மெதுவாக விலகத் தொடங்க தன் உயரத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கோட்டை அணிந்திருந்த அந்த பெண் மேடையினுள் நுழைந்தாள். ஒரு சாயலுக்கு அவளைப் பார்க்க கிறிஸ்தவ பாதிரியார் போல இருந்தாலும், அவள் கழுத்தில் கொழுவியிருந்த டெதஸ்க்கோப்பும், நான் மற்றும் என் சக குழுவினரால் நெற்றி வியர்வை சிந்த போடப்பட்டிருக்கின்ற செட்களும் அவள் இந்த சீனில் ஒரு வைத்தியர் தான் என்பதை சபைக்கு ஆதாரப்படுத்திக் கொண்டிருந்தன.
வழமையான செக்அப்புக்கு வைத்தியசாலைக்கு வரும் ஹீரோயின் (இந்த நாடகத்தில் ஹீரோவே இல்லை என்பது எக்ஸ்ரா தகவல்) திடீரென்று அங்கு மயங்கி விழ, அவளைப் பரிசோதிக்கும் வைத்தியர் ஹீரோயினுக்கு பிரைன் கியூமர் என்பதை கண்டு பிடிக்க, பின்னர் அதைக் குணப்படுத்த அவசரமாக ஒப்ரேசன் செய்ய வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் என்ற வழமையான பிரைன் கியூமர் புராணத்தை அவளது குடும்பத்தினரிடம் பாட,....... இப்படியாக இந்த சீன் நீண்டு, மயக்க நிலையில் கொஸ்பிட்டல் கட்டிலில் ஹீரோயின் தனியே படுத்திருப்பதில் முடியும். 

இந்த இடத்தில் ஹீரோயினைப் பற்றி சில வசனங்களையாவது நான் சொல்லியே ஆக வேண்டும். அவற்றில் சிலதாவது இந்தக் கதையின் கிளைமாக்சுக்கு அவசியம் தேவைப்படும். பொதுவான உயரத்தில், கொஞ்சம் குண்டான உடலமைப்புடன், 'பெயார் இன் கலர்' என்று சொல்லும் படியான நிறத்துடன், கிட்டத்தட்ட வட்டமான முகத்துடன், அதில் சற்றே பெரிய கண்களுடன், சிரிக்கும் போது லேசாக குழி விழும் கன்னங்களுடன்....... சுருக்கமாக ஒரு வரியில் சொன்னால் சோனாஷி சின்ஹாவால் கலப்படம் செய்யப்பட்ட நித்யா மேனன் மாதிரி இருப்பாள் அந்தக் ஹீரோயின். நிறை குறைந்தது ஐம்பது கிலோவாகவாவது இருக்கும் என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். இந்த நி.மேனனின் உண்மைப் பெயர் கதைக்கு தேவை இல்லை என்பதால், அதை இங்கு தவிர்த்து விடுகிறேன்.   

சீன் தொடங்கியது. சோனாஷ கலப்பட நித்தியா மேனன் மேடைக்கு என்றி ஆகி, டொக்டருடன்  ஏதேதோ உப்புச்சப்பில்லாத விடயங்களையெல்லாம் பேசிவிட்டு மயங்கி விழுவதற்கு மேடையில் பொருத்தமான லொக்கேசன் ஒன்றை தேடிப்பிடித்து விழ ஆரம்பிக்கும் போது தான் நான் அதைக் கவனித்தேன். ஒன்பதாவது காட்சியான ஜெயில் சீனுக்கு வரவேண்டிய சிறைக் கூண்டு மாதிரியான செட்டை இந்தக் காட்சிக்குள் யாரோ கொண்டுவந்து வைத்துவிட்டார்கள். ஒரு பார்வைக்கு அது வைத்தியசாலை யன்னல் கம்பிகள் போலத் தெரிந்தாலும் அது உண்மையில் இந்த வைத்தியசாலை காட்சிக்கு வரவேண்டியதில்லை. நாடகத்தை கொஞ்சம் உற்றுக் கவனித்தால் ஒன்பதாவது காட்சியில் இந்த பிழையை இலகுவாக கண்டுபிடித்து விடலாம். 

'இதெல்லாம் இந்த குமரன்ட வேலையாய் தான் இருக்கும். அவன் தான் இவ்வளவு காலமும் இந்த நாடகத்துக்கான எந்த ஆயத்தங்களுக்கும் வரேல்லை. நேற்றைய கடைசி ரியேசலுக்காவது வா என்று நான் சொல்லியும், அவன் வரேல்லை. இண்டைக்கு வந்து முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாத்துக்கும் முந்திக் கொண்டு நிண்டான். எண்டபடியால் அவன் தான் இதை செய்திருப்பான்.' என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்த என் மனது ஆத்மார்த்தமாக அவனைத் திட்டத் தொடங்க எனது கண்களோ ஜானகி அக்காவைத் தேடியது.

அப்போது தான் ஜானகி அக்கா குமரனின் முந்திரிக் கொட்டை வேலையை கவனித்தார் போலும். அவர் தலையில் கையை வைத்தபடி என்னைப் பார்ப்பதும், கொஸ்பிட்டல் சீன் முடிவதும் 'அது' நிகழ்வதும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தது. உண்மையில் நான் மட்டுமல்ல எவருமே 'அதை' எதிர்பார்க்கவில்லை. நான்காவதாக கொஸ்பிட்டல் சீனும் ஒன்பதாவதாக ஜெயில் சீனும் வருகின்ற உச்சக்கட்ட ருவிஸ்ட் உள்ள எங்கள் நாடகமே எதிர்பார்க்காத மிகப்பெரிய திருப்பம் 'அது'. கடந்த மூன்று மாதங்களாக எந்த பிழையும் ஏற்படக் கூடாது என்று அருந்தவம் செய்து இப்போது  மேடையேறியிருக்கின்ற இந்த நாடகத்துக்கு இப்படியா ஒரு தடங்கல் ஏற்பட வேண்டும்? 

இப்போது எனது மூளையிலிருந்து குமரன் முற்றாக இல்லாமல் போயிருந்தான். அதற்குப் பதிலாக, 'இப்போது என்ன செய்வது?, மீதமாக இருக்கின்ற பத்து சீன்களையும் எப்படி நடத்தி முடிப்பது?, எல்லாவற்றுக்கும் முதலில் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கின்ற ஜானகி அக்காவின் துர்வாச கோபத்தை எப்படி தணிப்பது? எக்சற்றா.' கேள்விகளால் எனது மூளை சடுதியாக நிரம்ப ஆரம்பித்து ஒரு கணம் அது அப்படியே நின்று போய்விட்டது. மூளை ஸ்தம்பித்த இந்த இடைவெளியில் சின்னதாக ஒரு பிளாஸ் பாக்....

.....................................

ஏறத்தாள மூன்றரை மாதங்களுக்கு முன்னர்..... 

எங்கள் மன்றத்தின் இளைஞர்களுக்கான மாதாந்தக் கூட்டம். 

உலகிலுள்ள பெரும்பாலான இளைஞர் மன்றங்களைப் போல இங்கும் பெண்கள் தான் பெரும்பான்மை. 'மூன்றரை மாதங்களில் வரவிருக்கின்ற வருட இறுதி கலை நிகழ்வில் யார் நாடகம் நடிப்பது?' இது தான் இன்றைய கூட்டத்தின் மெயின் ரொப்பிக். நாடகம் என்றால் சும்மா இல்லை. அதற்கு நிறைய நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் எம் மன்ற பெரியவர்கள் எழுதப்படாத சட்டமாக வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆண்கள் அல்லது பெண்கள் என்று தனியாக ஒரு பாலர் தான் நடிக்க முடியும், நடிக்காத பாலர் நடிப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், எல்லா சீன்களும் ஏதாவது ஒரு நல்ல போதனையை பார்வையாளர்களுக்கு சொல்ல வேண்டும், ஆபாசமான, லோக்கலான வசனங்களை அறவே பயன்படுத்தக் கூடாது. இப்படியாக இலங்கைப் பிரச்சினை போல நீண்டு கொண்டே போகும் இந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும். விரும்பியோ விரும்பாமலோ அவற்றை முழு மூச்சாக நாங்கள் பின்பற்றியே ஆக வேண்டும். 

நீண்ட வாத பிரதிவாதங்களுக்கு (எல்லாமே பெண்கள் தான்) பின்னர் ஆண்கள் நாடகம் நடிப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அவ்வளவு இலகுவில் சிக்கிவிடுவோமா நாங்கள்? அதுவரை பேசாமல் சிவனே என்றிருந்த எங்கள் தலைவர் நாயகம் பிரஷாந்த் 'நாங்கள் நாடகம் நடித்தால் வெளிப்பகுதி போக்குவரத்து ஆயத்தங்களையெல்லாம் யார் பார்ப்பது?' என்று ஒரு டூஸ்ராவைப் போட்டான். முரளிக்கு மட்டுமல்ல, சரியான ரைமிங்கில் மிக நேர்த்தியாகப் போட்டால், டூஸ்ரா எல்லோருக்குமே கை கொடுக்கும். அது இப்போது எங்களுக்கும் வாய்த்திருக்கிறது. ஒரு மாதிரி நாடகம் பெண்களின் கைகளுக்கு மாறியது. நல்ல இலக்கிய அறிவுள்ள ஜானகி அக்கா கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் பண்ண பெண்கள் படையணி நாடகம் நடிப்பதென்றும் செட்கள்; மற்றும் பின்னணி ஒழுங்கமைப்புகளை ஆண்கள் பார்த்துக் கொள்வதென்றும் முடிவானது. 

அடுத்ததாக, யார் சீன் ஒழுங்கமைப்புகளுக்கு பொறுப்பாக இருப்பதென்ற கேள்வி உருவெடுத்தது. அதற்கு என்னை பதிலாகப் போடுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. (இந்த பிளாஸ் பாக் பகுதியில் இவ்வளவு நேரமும் நான் என்றி ஆகவில்லை என்பதைக் கவனிக்குக) உண்மையில் இந்த வருடத்தில் நான் கலந்துகொண்ட இரண்டாவது மன்றக் கூட்டமே இது தான். அதுவும் கோஇன்சிடன்ட்டாக இன்று சைட்டில் எனக்கு இரண்டு மணித்தியாலங்கள் லீவு கிடைத்துவிட அதைப் பயன்படுத்திக் கொண்டு நான் இந்தக் கூட்டத்துக்கு வந்தால், இங்கு எல்லோருமாகச் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்பை என் தலையில் போட்டுவிட்டார்கள். 'கொம்பனியின் மனேச்மென்ட் பிரச்சினை' என்ற பிரம்மாஸ்திரம் வரையான என்னிடம் இருக்கின்ற அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தேன். அவை எதுவுமே ஒரு சதவீத பலனையும் எனக்கு தரவில்லை. இறுதியில் கற்ற மொத்த வித்தைகளையும் இதில் இறக்குவதென்ற முடிவுக்கு வந்தேன். தயாரானேன். களத்தில் இறங்கினேன். ஆனால் எப்போது கற்ற வித்தைகளை எப்போது இறக்குவது என்ற குழப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை. 

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எனது அணிக்கு ஆள் திரட்டி, எனது வேலைகளை ஆரம்பித்து, அவற்றை நாடக பெண்கள் அணியுடன் செக் பண்ணி, அவற்றுக்கு மேலிடத்திலிருந்து அப்புறூவ் வாங்கி.....அப்பப்பப்பா.....!!! அதை ஒரு தனி நாவலாகவே எழுதலாம்.

...............................


திரை கல்லாக சமைந்துவிட்டது. 

ஆம், கொஸ்பிட்டல் சீன் முடிய, மேடையை மூடுவதற்காக திரையை இழுத்தபோது அது எங்கேயோ சிக்கிக் கொண்டு நகர மறுத்து விட்டது. ஹீரோயின் பாவமாய் நடு மேடையில் செய்வதறியாமல் அப்படியே படுத்திருந்தாள். 'இப்போது என்ன செய்வது?' என்ற கேள்வி பல வடிவங்களில் எங்கள் எல்லோர் முகத்திலும் பிரதிபலித்தது.

இதெல்லாம் சில வினாடிகளுக்குள் நடக்க,

'என்ன எல்லோரும் பார்த்துக் கொண்டு நிற்கிறியள். ஸ்கிறீன் அப்படியே இருக்க அடுத்த சீனை ரெடி பண்ணுங்கோ. அதை தவிர இப்ப எங்களுக்கு வேற வழி இல்லை. முதல்ல இவளை வாங்கோடு சேர்த்து மேடையில இருந்து தூக்கிக் கொண்டு வாங்கோ.' ஜானகி அக்கா கட்டளை இட்டார். எல்லா இடத்திலும் அவசர நேரத்தில் விரைவாக முடிவெடுக்க ஜானகி அக்கா மாதிரி ஒருவர் அவசியம் இருந்தேயாக வேண்டும். அவரின் கட்டளையை செயல்ப்படுத்த மேடையின் பக்கம்  திரும்பியபோது தான் அவர் சொன்ன இரண்டாவது வசனம் எனக்கு உறைத்தது. அச்சம், மடம், நாணம் மற்றும் இன்ன பிறவெல்லாம் என்னை ஆக்கிரமிக்க நான் அப்படியே நின்று விட்டேன். 'ஒரு பெண்ணை அதுவும் படுத்திருக்கின்ற பெண்ணை எப்படி தூக்குவது?', 'இந்தப் பெண் குறைந்தது ஐம்பது கிலோவாவது இருப்பாள். அவளைத் தூக்கிக் கொண்டு வரும்போது அரை வழியில் நான் வாங்கை விட்டுவிடால்..?', 'அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்?' என்ற பலவிதமான கோணங்களில் என் மூளை அந்தக் கட்டளையின் உட்பொருளை ஆய்வு செய்யத் தொடங்கியது. ஜானகி அக்காவோ பத்திரகாளியாக மாறத் தொடங்கியிருந்தார். ஆனால் ஒருவரும் மேடைக்கு செல்லக் கூட எத்தணிக்கவில்லை. 

ஜானகி அக்காவின் பத்திரகாளி அவதாரத்தைப் பார்க்கப் பயந்து நான் எந்த சுரமும் இல்லாமல் மேடையைத் திரும்பிப் பார்த்தேன். செட்டில் இருந்த 'ICU' கதவை பிடித்துக் கொண்டிருந்த அந்த அப்பாவிக்கு கை உளைந்திருக்க வேண்டும். அவன் அந்தக் கதவை மெதுவாக கீழே பதித்தான். அந்த இடைவெளியால் எனக்கு ஆருத்ரா தர்சனமே கிடைத்தது. அதனூடாக மேடையின் பின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த லைட் சுவிச்கள் எல்லாம் என் கண்ணில் பட நான் நயன தீட்சை பெற்றவனானேன். என் மூளை பழைய போமுக்கு மீண்டது. அடுத்த போல் நிச்சயமாக சிக்சர் தான்.

நான் செட்களின் பின்பக்கமாக அந்தச் சுவிச்களை நோக்கி முன்னேறி, அவை எல்லாவற்றையும் அணைத்தேன். இப்போது மேடை இருட்டானது. செயற்கை பிறைன் கியூமர் வந்த, இந்த பதட்டத்துக்குள்ளும் அச்சம், மடம், நாணத்தையெல்லாம் எனக்கு ஏற்படுத்திய அந்த நித்யா மேனன் மிக இயல்பாக வாங்கிலிருந்து இறங்கி மேடையின் பின்புறம் சென்று மறைந்தாள். 

இப்போது சுவிச்களுக்கு அருகில் நாடகம் நன்றாகத் தெரிந்த ஒருவர் நிறுத்தப்பட்டார். ஒவ்வொரு காட்சி முடியும் போதும் அவர் மேடை லைட்களை அணைக்க வேண்டும் என்றும் அந்த இடைவெளியில் அடுத்த காட்சிக்கான செட்கள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. எனது அணியினர் அடுத்த காட்சிக்கான செட்களை தயார்ப்படுத்த இருட்டான மேடைக்கு நகர்ந்தனர். 

.............................


காட்சி – 05

இருண்ட மேடையில் லைட்கள் ஒளிர்ந்தன. ஹீரோயினின் அம்மா அழுத கண்களுடன் மேடையினுள் நுழைந்தார். எனக்கு போன உயிர் மீண்டும் வரத் தொடங்கியிருந்தது.


Views: 804