நிறங்களுக்கும் மணம் உண்டு 02

எழுத்தாளர் : தனுஸ்சயன் கருணாகரன்மின்னஞ்சல் முகவரி: Thanussayan@gmail.comBanner

தனிமையில் இருந்து வெறுத்து போன அவர்கள் இருவரும் அடிக்கடி எங்கும் தூரப்பயணம் செல்வதுண்டு.. வழமையாக தல்செவனா பீச் சிலேயே அவர்களது தூரப்பயணங்கள் முடிந்து போயிருக்கும். அந்த அலை நிறைந்த ஆழமான கடலில் அரை நிர்வாணமாக தத்ததளித்து திரியும்போது அவர்களது தனிமைகள் கவலைகள் எல்லாம் கரைக்கப்பட்டு எல்லையில்லா தூரத்தில் காணாமல் போவது போல் ஓர் உணர்வு

'வானம் எவளா பெருசென்னடா.. நாங்க ஒரு குட்டி புள்ளிக்க இருந்து கொண்டு என்னாமா பண்ணுறம்'
'என்னடா திடீர் தத்துவம் எல்லாம்'
'பின்ன இங்க நாங்க படுற பாட்டுக்கு தத்துவம் வராம வேறென்ன வரும்'
'வேறொண்டும் வரும். சப்பா... '
'என்னடா..? '
'தண்ணி லைட்டா சூடா இருக்கா பார்... என்னொண்டாலும் இப்பிடி தண்ணில போற சுகம் தனிதான்'
'சைக்... கறுமம் புடிச்சவனே... அங்கால அரக்கி போய் அடிடா'
'எல்லாம் தண்ணி தானே.. எப்பவோ முடிஞ்சு அதெல்லாம். ஸ்டொக் இல்ல'
'எத்தின மீன் சாகப்போதோ.. கடவுளே'

அந்த வானம் எவ்வளவு பெரியது. ஆயிரம் கோடி நட்சத்திர வெளிச்சங்களை அருகிலுள்ள சூரியனின் கதிர்கள் குறுட்டடித்துக்கொண்டிருந்தன. ஏதோ இனம் புரியாத வெளிச்சத்தின் வியாபகத்தில் உண்மையான பார்வைகள் இருட்டிக்கொண்டிருப்பதாய் அவனுக்கு தோன்றியது. அலைகளில் தெறித்து கரை முட்டும் நுரைகளில் பிரதிபலித்துக்கொண்டிருந்த வெளிச்சம் எத்தனை மேகங்கள் சூரியனை மறைத்தாலும் அஸ்தமனம் வரை முழுமையாக நீங்கப்போவதில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள அவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.

'தமிழர் சிங்களவர் எண்டு இனவாதம் கதக்கிறம் ஆனா அவன் சுச்சூ அடிச்ச தண்ணில நானும்.. நான் சுச்சூ அடிச்ச தண்ணில அவனும்தானே குளிக்கிறம்... '
'தெய்வமே எவளவு பெரிய தத்துவத்த சுச்சூவ வச்சு சிம்பிளா சொல்லீட்டிங்கள்.. '
'தூ...  ஹிஹி... '
'ஹாஹா..'
சிரிப்புச்சத்தங்களுடனும் கடல்காற்றுடனும் அந்த மதிய வெயில் குளிர்ந்து கொண்டிருந்தது
'இல்லடா பாரன் அவங்கள் மாதிரி வாழ்ந்திட்டா சோலியில்ல.. எவ்வளவு ஜாலியா.. சந்தோசமா.. ஒற்றுமையா இருக்கிறாங்கள்'
' ஓம் ஓம்... அவளவு சனத்த சாக்கொண்டவங்கள் தானே சந்தோசமா தான் இருப்பாங்கள் '
'துவேசக் கத கதக்காத.. அவங்களும் மனுசர் தானே... நாங்க மட்டும் சும்மா இருந்தமா.. திருப்பி சாக்கொல்லேலயா.. ஒண்டோ நூறோ உயிர் உயிர்தான்'
'பேக்கத கதக்கிறாய்.. அடி வாங்கினவனுக்கு தான் வலி தெரியும்.. உனக்கெங்க விளங்க போது'
'டேய் நாங்க எங்களுக்குள்ளயே ஊர்ச்சண்ட மதச்சண்ட சாதிச்சண்ட எண்டு அடிபட்டுக்கொண்டிருந்தா மத்தவன் அடிப்பான் தானே.. முதல்ல உங்கள திருத்துங்கோ பேந்து ஊர திருத்தலாம். இப்பயும் சும்மா விசர் நாயள் மாரி எப்ப கடிக்கிற எண்டு வஞ்சம் வச்சு திரியுதுகள்' 

அவன் ஒற்றை வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் உறைந்துகிடந்தன. இவ்வளவு நேரமும் கரையில் அமைதியாய் நின்ற நாய்க்கூட்டம் நேரம் பார்த்து காத்திருந்தது போல தங்களுக்குள்ளே கடிபடத்தொடங்கின. அன்று மேகமற்ற வானில் என்றுமில்லாதவாறு சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

அடுத்த போட்டோக்களை தட்டிக்கொண்டே அந்த நாள் கடற்கரை ஞாபகங்களையும் மீட்டிக்கொண்டிருந்தான்.  பக்கத்து சீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அப்பாவுக்கு இவன் சிரிப்புகளும் நேரம் கடந்த ஞாபகங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பாவின் நண்பர் ஒருவரின் மரணச்சடங்குக்காக பருத்தித்துறை வரைக்கும் சென்றுகொண்டிருந்தான். போருக்கு போடப்பட்ட பாதையில் உள்ளே கிராமங்களை சுற்றிக்கொண்டே குதிரை வண்டியாய் மினி வான் குலுங்கிக்கொண்டு பாய்ந்தது.

'வைரவர் கோயிலடி இறக்கம் இருக்கா'

கண்டக்டரின் சத்தம் ஆழ்நிலை உறக்கத்திலிருந்த அப்பாவை குலுக்கி எழுப்பியது..

'ஓம் ஓம்... இறக்கம்.. வா தம்பி'

இறங்கிய இடத்திலிருந்து அருகில்தான் மரண வீடு.. உயர்ந்து நின்ற பனை மரங்களும், பனம்பழ வாசமும் கண்ணை சுற்றி மொய்க்கும் கொசுக்களும், குத்தரிசி வயலும், புளியமரமும், ஈச்சம்பழ செடிகளும், காற்றில் மிதந்த எருக்கலை விதைகளும், கிளிப்பொந்து தென்னைமரங்களும், கள்ளுப்பானைகளும், கடல்காற்றும் அந்த கிராமத்தில் அவர்களுக்கு புதிதாக தெரியவில்லை.

வீடியோக்களும் போலிக்கதறல்களும் அற்ற ஆடம்பரமில்லா மரண வீடு ஆழ உறங்கிக்கொண்டிருந்தவரின் தூக்கத்தை கலைக்காது அமைதியாயிருந்தது. அழுது முடித்து திராணியற்ற கிழவிகள் அவர்களை கண்டவுடன் சம்பிரதாய ஒப்பாரியை அடித்தொண்டையிலிருந்து தொடங்கினார்கள். கட்டியணைத்த கதறல்கள் ஓய்ந்து முடிய சடங்குகளுடன் நடந்துகொண்டிருந்தன. அவன் அப்பாவிடம் கூறிவிட்டு காலாற நடந்து அருகில் ஏதாவது சாப்பாட்டுக்கடை உள்ளதா என தேடிக்கொண்டிருந்தான்.

அந்த கிராமத்திலேயே அது கொஞ்சம் நவீனமான சாப்பாட்டுக்கடைதான். ரைல்ஸ் பதித்த நிலமும் சீலிங் பானும் விடிய பொரித்த பர்ரீசும் நன்றாக இருப்பது போல தெரிந்தன. மேல் நிலை தலையில் முட்டாமல் குனிந்து உள்ளே போய் ஒரு கதிரையில் இருந்தான்.

'தம்பி இங்கவாங்கே.. அங்க வேண்டாம் இதில இருங்கோ'
'ஆ சரி...'
'என்ன சாப்பிடபோறீங்கள்.. பர்ரீஸ் கிடக்கு இப்ப போட்டதுதான்'

அவருடைய கவனிப்பை பார்க்கும் போதும் யாரும் பெரிதாக அந்த கடைக்கு வருவது போல தெரியவில்லை. வீடுகளில் அரிசிமாக் கழியும் ஒடியல் கூழும் தெவிட்டத்தெவிட்ட தின்பவர்களுக்கு பழைய பற்றீஸ் ஒன்றும் பிரமாதமாக இருக்காதுதான். இவனைப்போன்ற வெளியூர்க்காரரும், ஊரோரமாக விளையாடித்திரியும் சிறுவர்களும், வேலைகள் முடித்து வீடு திரும்புபவர்களும் எப்போதாவது பற்றீஸ் கடிப்பார்கள். அந்த பர்ரீஸ் கடையில் இரு வகையான கதிரைகள் இருந்தன. நல்ல நிலையில் இருக்கும் பழைய பிளாஸ்டிக்கதிரைகளும் தனியாக ஒதுக்குபுறமாக பழைய உடைந்த வாங்குகளும் கிடந்தன. அவன் முதலில் இருந்த உடைந்த வாங்குகளில் ஏன் இருக்க கூடாது என்று கடைக்காரன் தடுத்ததை திருப்பி கேள்வி கேக்க வேண்டும் என்று ஏதோ அவனை உறுத்திக்கொண்டிருந்தது.

'என்ன பேசாம இருக்கிறீர் பற்றீஸ் கொண்டரட்டா?'
'இருக்கட்டும் ஒரு பிளேன் ரீ போடுங்கோ'
'தம்பிக்கொரு பிளேன்ரீ...'

தேயிலை வடியை கழுவிக்கொண்டே ரீ மாஸ்டர் வெற்றிலையை உமிழ்ந்துகொண்டிருந்தான்

'அண்ண.... ஏன் அந்த பழைய வாங்குகள் கிடக்கு'
'சும்மாதான் தம்மி'
அவர் கதையில் மழுப்புகளும் மறைப்புகளும் தெரிந்து போல் ஓர் உணர்வு.
'சும்மா சொல்லுங்கோ அண்ண... ஏன்?'
'நீங்க எந்த ஊர்க்காறர்?'
'நான் யாழ்ப்பாணம் டவுண்... நீங்க சொல்லுங்கோ ஏன்?
'இல்ல தம்பி அது இங்க கள்ளுச்சீவிற கூலி வேல செய்யிற ஆக்கள் இருக்கிறதுக்கு... '
'ஓஓ... ஏன் அண்ண இதில இருந்தா என்ன'
'என்ன தம்பி உலகம் தெரியாத ஆளா இருக்கிறீர். சாதி குறஞ்ச ஆக்கள் மத்த ஆக்கள் புழங்கிற கதிரயள்ள புழங்கினா சனம் என்ர கடக்கு வராது. அவேளுக்கெண்டு தனி டம்லருகளும் கிடக்கு அவேல சேத்து புழங்கினா என்ர சீவியம் சிரிச்சுப்போடும்..'

இந்த காலத்திலும் என்னும் மண்வாசம் மாறாத கிராமப்புறங்களில் சாதிய நாற்றம் இரத்தத்தில் ஊறிக்கிடக்கின்றன என்பது கதைகளில் மட்டுமல்ல நேரிலும் அவனுக்கு உறைத்துக்கொண்டிருந்தது.

'சரி தம்பி நீங்க என்ன சாதி?'
'தெரியாது அண்ண...'
'நல்லம்தான் தம்பி தெரியாம இருந்திட்டா சிக்கலே இல்ல'

என்று இளக்காரச் சிரிப்புடன் அவன் கல்லாவுக்கு நடந்தான் அந்த நாற்றம்பிடித்த பிளேன்ரீயை விட அவனது வார்த்தைகள் நாறிக்கொண்டிருந்தன. அப்போதுதான் அவனுக்கு அந்த ஞாபகங்கள் குத்திட்டு நின்றது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் பரவலான சாப்பாட்டுக் கடைகளில் கூலி வேலை செய்பவர்களும் கள்ளுச்சீவும் தொழிலாளர்களையும் இவன் ஒருபோதும் கண்டதில்லை. சந்தைகடைகளின் உட்புறமாக உள்ள ஒதுக்குப்புற தேநீர்க்கடைகளிலேயே அவர்களின் அரட்டைகள் நேரம்கடந்து தொடர்வதை கவனித்திருக்கிறான். எப்போதாவது அவர்கள் பெரிய கடைகளுக்கு வந்தாலும் ஒதுக்குப்புற மூலையில் இருந்து தேனீரில் மட்டும் கவனத்தை குவியவைத்து பழைய டம்லரில் குடித்துவிட்டு செல்வதை இவன் இதுவரை பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை..

காலகாலமாக மறைந்திருந்த சாதிய வெறி நாய்களின் குதறலின் பயத்திலேயே அவர்கள் ஒதுங்கிவிட்டனர். என்னதான் காலம் கடந்து நாய்க்கடிகள் தொலைந்தாலும் என்னும் ஒதுக்கப்பட்ட தொழில்களை செய்பவர்களாக பார்க்கப்படுபவர்களை அந்த நாய்கள் குறிவைத்து கடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இவர்களும் அந்த நாய்களுக்கு பயந்து தாமாகவே ஒதுங்கிப்போகின்றனர். இருந்தும் அந்த நாய்கள் அவர்களின் நிம்மதியான உறக்கங்களில் என்னும் குரைத்துக்கொண்டுதான் இருக்கின்றன..
இப்போது அந்த அம்மா கோழியின் விலாவை பிழந்துகொண்டிருந்தார். இவன் உதாசீனம் செய்த அதிருப்தியில் கிழவன் அமைதியாயிருந்தார்.

அந்த கிழவனை பார்த்து உதாசீனமாக சிரித்த சிரிப்புடனும் கோழிக்கறியுடனும் அந்த நாள் கடந்து போனது
மீண்டும் 3.30 மணித்தியாலத்தில் யாழ்ப்பாணம். இம்முறை பயணம் அவ்வளவு இனிதாக தெரியவில்லை சந்தோசமாக பார்த்த சயன்ஸ் கோலும், சாப்பாட்டுக்கடைகளும், கோக்கோ கோலாவும் சாதிய வடுக்களின் சின்னங்களாகவே அவனுக்கு தெரிந்தன. ஒழிந்திருக்கும் ஏதையோ தேடுவது போலவே அவன் பார்வை போய்க்கொண்டிருந்தது.

'என்னத்தடா ஜோசிச்சுகொண்டிருக்கிறாய்?'
'இல்லடா அந்த கிழவன் அண்டக்கு தண்ணி அள்ளக்கூடா எண்டெதல்லோ அதில இருந்து ஆர் எதும் சொன்னாலும் அவயளும் சாதி பாக்கினயமோ எண்டு தோணுது'
'பேயா அது கிழடுடா.. இந்த காலத்தில ஆர்ரா'
'சொல்லேலாதுடா.... என்னும் இருக்குதுகள் சனங்கள்'
'விட்ரா எவன் பாத்தா எங்களுக்கென்ன... எவனும் ஏதும் கதச்சா பேந்து அவனுக்கு சீன் செய்வம்'
'ஹிஹி.. அதுவுஞ்சரிதான்'

தூக்கத்தில் ஏதோ கடிநாய் அவனை குதறிக்கொண்டிருக்கிறது. அவனும் விடாமல் நாயை கடித்துக்கொண்டிருக்கிறான்.. எங்கும் ரெத்த வெள்ளம்.. மரணத்தின் வாசம்.. கொஞ்சம் கொஞ்சமாக இருண்டுகொண்டே போகிறது.. இருண்டுகொண்டே போகிறது..

எந்தளவுதான் அவன் சீரியசாக இருப்பதுபோல் தன்னைத்தானே பாவனை செய்துகொண்டாலும் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. எவன் கேட்டா எனக்கென்ன என்ற நிலைமைக்கு அவனை தயார்ப்படுத்திக்கொள்ள இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இருந்தும் அன்று மட்டும் கிளாசில் ஏதோ தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு. திடீர் எக்சாமுக்கு காசில்லாமல் திணறிக்கொண்டிருந்தது அவன்மட்டும்தான் என்று அவனுக்கும் தெரியும். சிதறிப்பிரிந்திருந்த அறுநூறு பேரில் அவன் நண்பர்களைத் தேடுவது ஏதோ கிரிமினல் கேஸ் வீடியோ கேம் விளையாடுவதுபோல இருந்தது.  ஐம்பது ஷரூபாய் வைக்காவிட்டால் எக்சாம் எழுத விடாத முரட்டு ஆசாமிகளுடன் மல்லுக்கட்ட முடியாமல் அவன் முளித்துக்கொண்டிருந்தான்.

'நண்பன்.... நண்பன்..'
'என்னயா..?'
'எக்சாம் காசில்லயோ..? திணறிக்கொண்டிருக்கீர்...'
'ஓமோம் மறந்திட்டன்'
'இந்தாரும் அடுத்த கிளாஸ் தாரும்'
அருகில் எத்தனையோ பழக்கமானவர்கள் இருந்தும் இரண்டு வாங்கு தள்ளி இருந்த அவனது செயல் அன்று அவனை ஒருநாள் தெய்வமாக்கியது.. வழமை போல வேண்டாம் என்று மறுக்க முடியாதவனாய் அமைதியாய் எட்டி வாங்கிக்கொண்டான்.
'தாங்ஸ்டா'
கறைபடிந்த பற்களிலும் அவன் தூய்மையான சிரிப்பு மினுங்கிக்கொண்டிருந்தது.
எக்சாம் முடிய மீண்டும் சிரிப்புடன் அவனைக்கடந்து தன் கூட்டத்தை தேடிக்கொண்டிருந்தான்

'கிழமக்கு கிழம எக்சாம் வச்சே உழைக்கிறாங்கள்.. வாங்கிற காசுக்கு விட தெரியுற மாதிரி வையுங்களன்டா'
'ஹிஹி... அதுவுஞ்சரிதான்'
'டேய் எங்கடா இருந்தீங்க நாயளே.. எக்சாம் காசில்லாம நான் பட்ட பாடு'
'ஹாஹா.. அப்ப காட்ட பறிச்சிட்டானா..'
'இல்ல இல்ல பெடியனொருத்தன் காசு தந்தான்'
'என்னடா அதிசயம்... யாழ்ப்பாண பெடியனோ..
'ஓம்போல... அந்தா பச்ச ரீசேட்.. அவன்தான்'
'எங்கடா'
'குருட்டு பயலே அந்தா பாரடா'
'அட அவன் கரையூர்ப்பெடியன்.. சட்டப்படி ஆள்'
'ஓமடா பக்கத்தில இருத்த தெரிஞ்ச பெடியளே பேசாம இருந்தாங்கள் இவன் அங்கால இருந்தவன் எட்டி தந்தவன்'
'இவங்கள் பச்ச நப்பியள்.. தரமாட்டாங்கள்.. அவன் பாவமடா கரையூர்ப்பெடியன் எண்டு பெருசா ஆரும் சேருறேல'
'ஏன்டா கரையூர்ப்பெடியன் எண்டா என்ன சிக்கல்'
'இல்லடா கொஞ்சம் முரடான ஆக்கள் அவங்கள் மீன்புடிதானே ஏதும் கேஸ் எண்டா திருக்க வாலால வெட்டுத்தான் அதான் இவங்களுக்கு பேப்பயம்.. ஆனா செம ஆக்கள்டா அவங்கள். பழகினா உயிரக்குடுக்கிறமாரி பழகுவாங்கள்'
அவர்கள் மீதுள்ள பயம் மட்டும் அவன் கிளாசில் யாருமிருக்காத முதல் வாங்கில் தனிமையிலிருக்கௌ காரணமாக தெரியவில்லை.
'அடேய் பாத்து வா நேத்து அந்த விசர்நாய் என்ன கடிக்க வந்திட்டு'
'ஓமடா யாழ்ப்பாணம் எண்டு வச்சதுக்கு பதிலா நாய்ப்பாணம் எண்டு வச்சிருக்கலாம்'
'ஹிஹிஹி...'
சிரிப்புகளுக்கு சந்தமாக நாய்களும் குரைத்துக்கொண்டிருந்தன.....

தொடரும்.........................
 
Views: 297