மயில்களும் மனிதனும்

எழுத்தாளர் : சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்மின்னஞ்சல் முகவரி: Superkirus@yahoo.comBanner

சிறுவயதில் மயிலிறகை புத்தகங்களில் வைத்து குட்டி போடும் என முகப் பவுடரை தூவி பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். மயிலிறகு அழகானது. மயிலும் அழகானது. இந்த கட்டுரையை எழுதும் போது.....’’மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...’’ எனும் தமிழ் சினிமாப் பாடல் என் மனதையும் மெல்ல மெல்ல வருடிச் செல்வதை உணர்கிறேன்.

என்னுடைய அலுவலகம் அமைந்துள்ள பகுதி காடுகளால் சூழப்பட்ட இடையிடையே வயல் வெளிகளும் குளங்களும் நிறைந்து அழகாய் காட்சிதரும் இலங்கையின் வட புலத்து கிராமம் ஆகும். வீட்டில் இருந்து நான் செல்லும் பாதையும் அப்படியானதே. ஏராளமான பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஊர்வனக்கள் என இயற்கையின் அதிசயங்களை ஒன்றாக அங்கு காணமுடியும். அவற்றில் என்னைக் கவர்ந்த ஒரு ஜீவனாக  மயிலை குறிப்பிடலாம். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லைகளை ஊடறுக்கும் எனது தினசரி பயணம் மயில்களை காணாது அமையாது. கூட்டம் கூட்டமாக இரை தேடிச் செல்லும் அழகிய மயில்களை காண்பேன். குஞ்சுகளுடன் செல்லும் மயில் கூட்டங்களையும், பெண்மயிலை கவர தன் பொல்லாத சிறகை விரித்து ஆடும் ஆண் மயில்களையும்  கண்டிருக்கிறேன். விபத்தில் சிக்கிய மயிலுக்கு சிகிச்சை செய்திருக்கிறேன். வீதி விபத்தில் இறந்து போன ஒரு சில மயில்களையும் விவசாயிகளால் நஞ்சு வைத்து கூட்டமாக் கொலை செய்யப்பட்ட பாவப்பட்ட மயில்களையும் பார்த்திருக்கிறேன்.

இந்த கட்டுரை மயில்களின் வாழ்க்கையையும் அவற்றுக்கு  இன்று மனிதனிடம் இருந்து விடுக்கப்படும் சவால்களையும் மனிதனுக்கு அவை செய்யும் தொல்லைகளையும் பற்றி ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளுடன் சிலாகிக்க விழைகிறேன்.

கோழிக் குடும்பத்தை சேர்ந்த மயில்களில் ஆண் பறவை பெண்ணை விட பெரியது. நன்கு வளர்ந்த ஆண் மயில் இரண்டிலிருந்து மூன்றடி வரை நீளமானது. தோகை நான்கிலிருந்து ஐந்தடி வரைக்கும் இருக்கும். ஆண் மயிலில் எடை நான்கிலிருந்து ஆறு கிலோ வரையிலும் பெண்ணின்  நிறை மூன்றிலிருந்து நான்கு கிலோ வரைக்கும் இருக்கும்.

ஆண் மயில்தான் தோகையை கொண்டிருக்கும். பொதுவாக இயற்கையில் இனசேர்க்கைகாக பெண் உயிரிகளை கவர்வதற்காக ஆண் உயிரிகள் சில அழகிய உடல் வடிவங்களை கொண்டிருக்கும். அதற்கு மயிலும் விதிவிலக்கு கிடையாது. மயில் தோகை ஆண் மயிலில் மட்டும் படைக்கப்பட்டிருப்பதன் சூட்சுமம் இதுதான். மயிலின் இனப்பெருக்க காலத்தினை அண்மித்து  ஆண் மயிலின் முதுகுப் பகுதியில் இருந்து தோகை வளரும். அந்த காலப் பகுதியில் ஆண் மயில் பொலிவுடன் காணப்படும். இனப்பெருக்க கால முடிவில் தோகை படிப்படியாக உதிர்ந்துவிடும். வெப்பம் குறைந்து கார்மேகம் சூழ்ந்த வேளையில்தான மயில்கள் இனசேர்க்கை செய்கின்றன. ஆண்மயில்கள் தமது தோகையை விரித்து ஆடி பெண்ணை கவர எத்தனிக்கும். எதிர்ப்படும் ஆண்மயில்களை தனது பலமான வலது காலால் தாக்கியும் கொத்தியும் தோற்கடிக்கும். இதைவிட தனது தொண்டைப் பகுதியை தானே கொத்தி தன்னை வருத்துவது போல காட்டிக் கொண்டு பெண்ணை கவர முயலும். இது மயில்களுக்கு மட்டுமேயான இயல்பு. இனச்சேர்க்கை பொதுவாக இரவு நேரங்களில்தான் நிகழும். முட்டை இடும் மயில்கள் 28 நாட்கள் அடை காத்து குஞ்சு பொரிக்கின்றன. மரக் குச்சிகளை கொண்டு நிலத்தில் கூடு அமைக்கின்றன.

இன்று விவசாயத்தில் மிகப் பெரும் பீடையாக மயில்கள் உருவெடுத்துள்ளன. முன்பெல்லாம் காடுகளில் மட்டும் வாழ்ந்த மயில்கள் காடுகளின் அழிவுடன் காடுகளை அண்மித்த விவசாய நிலங்களுக்குள் இடம்பெயரத் தொடங்கின. சிறு தானியங்கள், பூக்கள் பூச்சிகள், பாம்புகள் சிறிய ஊர்வனக்களை உணவாக கொண்ட மயில்கள் விவசாய நிலங்களில் மேற்படி உணவுகள் குறிப்பாக தானியங்கள்  கிடைக்க அவற்றை இலக்கு வைத்து அங்கு குடிபுகத் தொடங்கின. பகலில் நெல் வயல்கள் மிளகாய் தோட்டங்களில் தானியங்களை உண்ணும் அவை இரவில் அருகே காணப் படும் மரங்களில் உறங்க தொடங்குகின்றன. சில மயில்களை கொண்ட ஒரு மயில் கூட்டம் குறித்த சில மணித்துளிகளிலே ஏராளமான நெல் மற்றும் இதர தானியங்களை உண்ணுகின்றன. பொருளாதார ரீதியாக இது கணிசமான அளவு இழப்பை விவசாயிகளுக்கு  தரக்கூடியது. இன்றைய நாட்களில் காடழிப்பால் நரி, மரநாய், கரடி, சிறுத்தை போன்ற மயில்களை வேட்டையாடும் விலங்குகள் [predators] குறைவடைய உணவுச் சங்கிலி சமநிலை குழம்பி மயில்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.இன்று காடுகளில் மட்டுமின்றி நகரங்களை அண்மித்த வயல் நிலங்களிலும் மயில்களை அவதானிக்கலாம்,

இதன் காரணமாக விவசாயிகள் மயில்களை கொல்லுவதற்கு முயல்கின்றனர். விஷம் வைத்தும் மின்சாரம் பாய்ச்சியும் அவை வேட்டையாடப் படுகின்றன. மேலும் பூச்சிக் கொல்லிகள் காரணமாக இறந்த  பூச்சிகளை உண்கின்ற மயில்கள்  பாதிப்படைகின்றன.

மனிதனுடைய நாகரிக வளர்ச்சியில் மனிதனுக்கு அண்மையில் மயில் இருந்திருக்கிறது. ஆதி வேட்டை மனிதன் வரைந்த குகை ஓவியங்களில் மயில் உருவங்கள் குறிக்கப்பட்டுள்ளன. தொன்மையான பல சிற்பங்களிலும்    சித்திரங்களிலும் மயிகள் உருக்கொண்டுள்ளன. பண்டைய இலக்கியங்களில் மயில் மிக முக்கியமான ஒரு இடத்தை பெற்றிந்திருக்கிறது. இந்துக் கடவுளான முருகனின் வாகனமாக இருந்திருக்கிறது. மத்திய கிழக்கின் குர்து யாசிடி இனத்தின் கடவுளாகவும் மயில் [MELEX TAUS- மயில் தேவதை] விளங்குகிறது. பல நாடுகளின் பண்டைய நாணயங்களின் சின்னமாக மயில் விளங்கி இருக்கிறது. சிம்மாசனங்களில் இந்தியாவின் மயில் சிம்மாசனம் மிக பிரசித்தி பெற்றது. இந்தியா பர்மா போன்ற நாடுகளின் தேசிய பறவை மயில்தான். உரோம மற்றும் கிரேக்க பேரரசுகளின் காலத்தில் மயிலின் தோகையில் செய்யப்பட்ட பொருட்கள் மிக பிரபலம். மசிடோனியா அரசன் அலெக்ஸ்சான்டரின் மஞ்சனையில் மயில் சின்னங்களும் மயில் தோகை விசிறிகளும் இருந்திருக்கிறது. அரசர்களுக்கு விசிறும் விசிறிகளிலும்  மணி முடியிலும் மயில் தோகை உண்டு. கிருஷ்ண பகவானின் தலையில் மயில் இறகு மணிமகுடம்  காணப்படுகிறது.

முன்பு பண்டை தமிழர்கள்  போரின் போது இறந்த வீரர்களை கௌரவிக்க நடுகற்களில்  மயில் இறகால் அலங்கரிப்பர்கள். தமிழில் மயில் வாகனம், மயூரன், மயூரா, மயில் சாமி என பெயர்களும் மயிலாடுதுறை மயிலாப்பூர் மயூராபதி என மயில் தொடர்பான  ஊர் பெயர்களும் உண்டு. தமிழ் கலைகளில் மயிலாட்டம் ,காவடி என்பன மயில் தொடர்பானவை. காவடியில் மயில் இறகுகள் பயன்படுகின்றன. ஆண் மயில் பெண் மயிலை கவரச் செய்யும் அசைவுகள் காலப் போக்கில் மயிலாட்டம், காவடியாட்டமாக மாறின.

பண்டைய இலக்கியங்களில் தலைவன் தலைவியின்  விரகதாபத்தை, காமத்தை குறிப்பிடும் குறியீடாக மயில் விளங்கியது. ஓவியங்களில் காமத்தின் பதிலீடாக மயில்  சித்தரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து அன்பின் அடையாளமாக மயிலை குறிபிடுகிறார். பழைய முஸ்லிம் மன்னர்களின் ஓவியங்களில் மயில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. மயில்களில் இருந்து செய்யப் படும் எண்ணை எலும்பு முறிவுக்கு சிறந்த மருந்தாக இருப்பதாக கருதப்படுவதால் அவை இலக்கு வைக்கப் படுகின்றன. கலைக் கூத்தாடிகள் மேற்படி எண்ணைகளை உடலில் பூசுவதால் உடல் நெகிழ்வு தன்மை அடைவதாக கருதுகின்றனர். மேலும் வழுக்கை விழுந்தவர்களுக்கு மயில் எண்ணை சிறந்தது எனும் உறுதிப்படுத்தப்படாத எண்ணமும் கிராமப் புறங்களில் இன்றும் உள்ளது. முன்பு எலிக் கடி , வயிற்றுபோக்கு, வாந்திபேதிக்கு மயிலில் இருந்து தயாரிக்கப் பட தைலங்கள் பயன்பட்டிருகின்றன. அர்த்த சாஸ்திரத்தில் கெளடில்யர் விஷ முறிவுக்கு மயில் இறைச்சி பயன்படுவதாக கூறியுள்ளார். அதாவது மருத்துவத்துக்காக  பல பகுதிகளில் மயில்கள் காலகாலமாக  வேட்டையாடப்பட்டிருகின்றன.

முன்பு இலங்கையின் யுத்த காலத்தில் ஆட்டிலறி எறிகணை அடிக்கும் போது மயில்கள் பயத்தில் கத்துவதை கேட்டிருக்கின்றேன். அவற்றின் அழகைப்போல் அவை எழுப்பும் ஒலி இனிமையானது கிடையாது. கர்ண கொடூரமாக அதாவது துணை தேடும் கடுவன் பூனை கத்துவது போல் இருக்கும். யாராவது காடுகளுக்குள் திடீரென புகும் போது அவை சத்தமிட்டு ஓடும்.

இன்றைய நாட்களில் மயில்கள் மனித குடியிருப்புகளுக்குள்ளும் விவசாய பகுதிகளுக்குள்ளும் அதிகம் அதிகம் வரத் தொடக்கிவிட்டன. அதாவது அவற்றின் இயற்கை வாழிடங்கள் அருகி விட்டன அல்லது அவை வாழ அந்த இடங்கள் பொருத்தமற்றதாக மாறத் தொடங்கியுள்ளன. அழிவடையும் இனங்களாக மாறிவிட்டன. இலங்கை இந்தியா பர்மா இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டும் வாழும் இந்த அழகிய பறவை முற்றாக அழிவடையும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.மனிதனின் தொடர்ச்சியான இயற்கை மீதான ஆக்கிரமிப்பு மயில்களை மட்டுமின்றி ஏனைய சகல உயிரினங்களையும் அழித்தொழிக்கும் வகையில் அமைவதுதான் மிக வேதனையானது.

Views: 1498