அன்பிற்குரியவளே அனன்யா,

எழுத்தாளர் : அதிசயா மின்னஞ்சல் முகவரி: athisayablog@gmail.comBanner

துயர் அடர்ந்த இந்த பகலின் வெம்மைக்குள் நின்றபடி உன் ஸ்நேகத்தின்  குளிர்ச்சித்துகள்களை பற்ற நினைப்பது எத்துணை இடர்மிக்கது என்பதை அறிவாயா? இப்போதெல்லாம் இப்படியாய் புலம்பி உன்னை சங்கடப்படுத்துவதற்றாய் மன்னிக்க வேண்டுகிறேன். அனன்யா எனைக்கூர்ந்து அறிபவளே அத்தனை பேரும் சுற்றி இருக்கும் சபை ஒன்றில் அமர்ந்;தபடி என் கதையை கேளுங்கள் என கெஞ்சும் குரலில் ஒவ்வொருவரிடமும் மன்றாடி ஆகிவிட்டது. இன்னம் யாரும் எனக்காய் புறப்படக்காணோமே. என் துணையானவளே பலவீனமான நான் நீ கை நெகிழ்ந்த கணத்திலிருந்து சிறு துரும்பை போல எங்கும் சேரமுடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறேன் சூன்ய வெளியில் தனித்துப்போன சாபம் போல அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறேன். அனன்யா கசப்பு இல்லாத இந்த பரலோக பானத்தை என்னால் அருந்த முடியாதபடி என் தொண்டை அடைத்துக்கொள்கிறது. ஏன் தாயே நீயேனும் தெரிந்து கொள். மலர்ச்செண்டுகளை ஒரு கையால் வாங்கியபடி சிரித்துக்கொண்டே மிகக் கவனமாய் மறு கையால் இருதயத்தின் காயங்களை மறைத்துக்கொள்ள சித்தமாக்கப்பட்டவன்; நான். வாசம் மிக்கவளே தேவதைகள் என்மீது தூவிப்போகும் பூக்கள் எல்லாம் ஏன் இத்தனை பாரமாய் என்னை அழுத்தி தரையோடு தாழ்த்துகின்றன என்பதை அறிவாயா??

கொண்டாட்டத்திற்தாய் அலங்கரிக்கப்ட்ட  இந்த மார்கழி இரவுகளில், மின்விளக்கில் பட்டு வழிந்து ஒடும் துளி மழையாய் எங்கேனும் மறைந்து போவதே எனக்கு ஆசுவாசமாயிருக்கும். கடந்து போன காலங்களின் மீது வெறுப்பும் வேதனையும் கொண்டிருக்கிறேன். எல்லா சாமானியனின் ஏக்கத்தையும் போல ,மற்றொரு வாய்ப்பிருந்தால் எல்லாம் சரி செய்து விடுவேன்; என கூறவும் முடியாதபடி அடர்த்தியாயுளது என் பலவீனங்கள்.

ஏகாந்தியாய் நான் அலைந்து கொண்டிருந்த காலங்களில் சூழ்ந்திருந்த நிசப்தம் எனை ஒருபோதும் அச்சுறுதியதல்லை. தனிமையின் விரல்களை பற்றியபடி எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டிருந்தேன். தோள் சேர்ந்த துணையென ஏகாந்தத்தை அணைத்தபடி சுகமாய் தூங்கியிருந்தேன். நீதான் அனன்யா ஒரு பளிங்குக் கனவு போல வந்து இறங்கினாய். சீராக வாரப்படாத என் கேசங்களை என் தூய விரல்களால் நீவிவிட்டு போவோம் வா என்றாய். அன்றிலிருந்து உன் சார்ந்தே இயங்கத் தொடங்கியிருந்தேன். மெதுவாய் மெதுnதுவாய் நானும் உன் போல இலேசானவனாய் மாறிக்கொண்டிருந்தேன். புனிதத்தின் படிமங்களை உன்மேல் சுமத்தி உனை பாரப்படுத்த விருப்பமில்லை. ஆனாலும் நான் பெரும் பாவியாயிருந்தேன் என்பதை நீ அறிவாய். வாழ்நாள் நெடுகிலும் தைரியம் மிக்கவனாக எனை மெய்பிக்கத் தெரிந்தேன். எந்தத் தோல்விகளையும் அடியாழத்தில் புதைத்து விட்டு மிகவே இயல்யாய் இருகக் கற்றிருந்தேன். ஆனாலும் என் அனன்யா யார் யாரோ இயக்கிய பாதைகளில் நேசத்தின் பொருட்டு நான் நடந்திருந்தேன். அவை ஒருபோதும் என்  பாதைகள் ஆகிவிடாது என தெரிந்தும் மாற்றுப்பாதையை சிந்தித்ததே இல்லை. அனன்யா எனக்கான சாரதி நான் என்றாகி புறப்படும் பயணம் ஒன்றிற்காய் காத்திருந்ததில் மிகவும் களைப்பாயிருக்கிறேன். இத்தனை களைப்பும்  சேர்ந்து எனதான அந்த பயணங்கள் ஒருபோதும் ஆரம்பிக்காது என்பது போல எனை வருத்துகின்றன.

தோள்களை குறுக்கியபடி முக்காடிட்டுக்கொண்டு இருள் ஊறும் வீதிகளில் வேகமாய் கடந்துபோகிறேன். இப்படி உலகத்தின் பால் எனை மறைத்துக்கொண்டு எதையோ தேடி விரைந்துகொண்டிருக்கின்றன இந்த நாட்கள்.

அனன்யா எப்போதேனும் நான் அழுது பார்த்திருக்கிறாயா.. இன்று காற்றுக்கும் கேட்காதபடி உதடுகளை வலிந்து அமுக்கி ரகசியமாய் அழுதுகொண்டிருக்கிறேன். நீயும் வரமாட்டாய். அறிவேன். அனன்யா எதனாலும் வெல்லமுடியா என் இதயத்தை வைத்து இனியும் என்னதான் செய்யமுடியும் சொல். துயர் என்ற சொல்லை விட அதீதமான வேதனைமிக்கது என் நாட்கள். என் ப்ரியத்திற்குpயவளே உனை நினைத்தே அதிகம் பயம் கொள்கிறேன். இப்படியாய் ஆகிப்போன  என்னை எப்படி  எதிர்கொள்வாய் அனன்யா? கனியும், காயம் ஆறும் எனக்காத்திருந்த காலங்களெல்லாம் இத்தனை வேகமாய் ஓடி முடிந்துவிட பரிதாபத்திற்குரிய குற்றக்காரனாய் கைகட்டி நிற்கிறேன்.
நீயும் நீங்கிவிட்டால்.....

அனன்யா உன்னிடமாய் ஏராளம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனாலும் பெருத்த அடைமழையின் இரைச்சல் போலவேதான் என் வார்த்தைகள் முட்டிமோதி சொரிகிறது. நினைப்பதை உனக்கு புரியும் படி சொல்லிவிட முடியாதவனாயிருக்கிறேன். விழுங்கித்தொலைக்கமுடியாத முள் போல் இந்த துயரமானது அடர்ந்த ஆண் கண்ணீராகி, இப்படியாய் சபைநடுவே சொரிவது அவமானமாய் இருக்கிறது. இத்துணை மன்றாடியும் வாராது எனை தவிக்க விடுவதேன். நீ வந்து என் தலை கோதி ஒருமுறை போய்வருவோம் என நம் பயணங்கள் ஊறு எனை அழைத்துப்போகாயோ....காலை சுற்றி இருக்கும் இந்த பந்தத்தின் அபத்தங்களை கடந்து தூர கொண்டு போ. இதன் பால் வரும் இழப்புக்களை உன் உள்ளங்கை சூட்டில் தாங்கியாக வேண்டும்.

அனன்யா புரண்டு  அழுது, அரற்றி மன்றாடி என்னுடன் சமரசமாகி எத்தனை பாரங்களை தான் தனியாக தாங்கினேன். என் தேவதைத்தோழியே உன் விரல் கொண்டு என் தலை கோது. மோட்சத்தின் சாரள இடுக்கில் இருந்து விழும் துளி, தீர்த்தமாய் அது என்னை கரை சேர்க்கும், அனன்யா இக்கட்டான பொழுதுகளின் போது உன் உள்ளங்கைகளை என்னுடன் கோர்த்து எனக்காக பிரார்த்தனை பண்ணும் போதெல்லாம் கண்காணாத தேவனின் வாசனையாக உனை உணர்ந்தேன். உன் இருதயம் முழுதுமாய் இரக்கமும் கரிசனமுமே ததும்பி இருந்தது. இப்போதும் அது வேண்டும் எனக்கு, எனை நிறுத்தி வைத்து கேள்வி கேட்க முன் எனக்கு நம்பிக்கையும் தைரியமும் தந்து எனை நிதானப்படுத்தி உட்கார வை. ஆழ இழுக்கும் மூச்சு ஒவ்வொன்றும் நடுங்கியபடியே தான் வருவதும் போவதுமாக இருக்கிறது.

அனன்யா ஓய்ந்து முடிந்த மழையின் சாரல்கள், விறைத்து எனை நடுக்கமுறுத்துகிறது. நனைந்துபோன கோழிக்குஞ்சு நான் உன் சூடான இறக்கைகளின் அடியில் வைத்துக்கொள். அனன்யா இத்தனை கேள்விகள் கேட்டு பரிகசிக்கும் உலகின் முன் தைரியம் தரும் உன் கைகளை இறுக பற்றிக்கொள்ள வேண்டும். இப்பெரும் இரைச்சலை தனியாக தாண்ட பதறுகிறேன். பெருத்த தனிமை எனை பார்த்து பழிக்கையிலே, வேண்டாமென்று விலக்கியவைகள் எனை துயர்படுத்துகையில், அச்சுறுத்தும் வார்த்தைகள் வதைகளாய் எனை நெருக்குகையில் வேர்விட்டு விளைந்த அபத்தங்கள் தொண்டையில் விடமாய் இறுக்குகையில் அனன்யா நீ எனக்காக பேச கூட வேண்டாம். என்னருகில் நீ இருந்தால் போதும். கடந்த விடுவேன், அதுவரையில் துணைவா தோழி.


Views: 520