அலை அழித்த தமிழின் அழிந்து போன பக்கங்களில் இருந்து...

எழுத்தாளர் : சுஜீந்தன் பரமேஸ்மின்னஞ்சல் முகவரி: psugeenthan@gmail.comBanner

திருக்கோணாமலை தரிசனம்

பிஞ்ஞகனும், இக்கியும் மலையிலிருந்த கோவில் தரிசனத்தை முடித்து தந்த பிரசாதத்தையும் மென்று கொண்டு இராவணன் வெட்டுக்கருகில் நின்றுகொண்டு கடலை இரசித்துக் கொண்டிருந்தார்கள். பிஞ்ஞகன் இயற்கையில் லயித்திருக்கும் வேளையில் கடலையை மென்றுகொண்டே இக்கி அங்கிருந்த இராவணன் சிலையையும் அந்த இராவணன் வெட்டையும் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். கடலையால் எறிந்து பிஞ்ஞகனை தன் பக்கம் திருப்பினான்.

“ஆக, எதையாவது நினைச்சுக்கொண்டு ராவணன் வெட்டுக்குள்ள கல்லைப் போட்டால், அது சரியாக் கடலுக்க போய் விழுந்தால், நினைச்ச காரியம் நடக்கும் என்று சொல்லுறாய்...”

“ஐதீகமடா.”

இவ்வளவு பெரிய பாறையை நாள் முழுக்க இருந்து வெட்டின நேரம், ராமர் பாலத்தைக் குறுக்க வெட்டியிருந்தா அந்தாள் செத்திருக்காது...”

“அந்தக் காலத்தில உன்னை மாதிரி அறிவான அரக்கர்கள் ராவணன் படையில இருக்கேல போல.. அதோட இந்த ராவணன் என்றது ஒரு ஆள் இல்லையடா. இதை வெட்டினது ஒருத்தன் எண்டா, ராமனிட்ட வெட்டுப்பட்டது இன்னொருத்தன்.அது ஒரு நீண்ட அரச வரிசையடா.. இராவணன் என்றால் இரு - ஆவணன் - தனது புகழை ஆவணமாக இருத்திப் போபவன். தமது புகழை இருத்திப் போன இயக்கர் மன்னர் வரிசையைத்தான் நாங்கள் இராவணர் என்று சொல்லுறம். காலங்கள் கழிந்தாலும் நீடித்து நிலைக்கும் புகழுடையவன் என்பது இராவணன் என்பதன் விளக்கம். அப்படி நீடித்த புகழுடையவர்கள் பலர் இருக்கிறார்கள் வரலாற்றிலே.

அகண்டன் - ஆழியைத் தடுக்க ஆட்களை நிறுத்தியவன்

குமரியை நிர்மாணித்து நாடுசெய்தபோது மயனின் பெருஞ்சேனையின் ஒரு பகுதி, தொலைவிலிருந்த பெருநிலப்பரப்பின் மறு எல்லையிலிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காகவும், ஆழியின் வழியாக வரக்கூடிய ஊறுகளை ஒதுக்குவதற்காகவும், கீழ்க்கரையோரம் நிலைகொண்டு வாழ அனுப்பப்பட்டது. கடலிலும் பாய்ந்து மீன்களையே வேட்டை செய்யக்கூடிய கடல் வேடர் என்கிற வீரர் படையோடு, அதன் தலைவன் அகண்டன் புறப்பட்டான். நிலத்தை முடித்து நீரைத் தொடும் எல்லையைக் காண, மலையேறி இறங்கி நிலப்பகுதி எல்லை கண்டான். அந்த வளம் கொழிக்கும் மண்ணெல்லாம் வாழ்ந்துவந்த தேவதைகளை வணங்கி, அந்த நிலத்தில் நிலைகொள்ள அனுமதி வேண்டினான். அந்த மலையினின்று நீர்தெறிக்கும், நாற்புறமும் நதி வழியும் பொன்விளையும் பூமியின் நீரணங்குகள் தாங்கள் என்றன அத்தேவதைகள். அவற்றைச் சாந்தி செய்து, பலிகொடுத்து, அவை செழிக்கவைத்த மண்ணில் வாழ ஆரம்பித்தது கடல்வேடர் கூட்டம். தம் பலம் இயற்கை தந்த கொடையாக வாய்க்கப்பெற்ற அந்தப் பலங்கொடை வீரர்கள் அந்த நிலத்தை - பின்னாளில் அந்த நிலம் தனித் தீவாகி ஈழமண் என்று பெயர்கொள்ளப் போகிறபோது, ஒதுக்கப்பட்டுக் கடல் வேடர் இனமே கரையில் குறுகப்போவதை அறியாமல் - காவற் கடமையைச் செய்யத் தொடங்கினர். அகண்டனின் தலைமையில் அனைத்தும் சிறப்பே நடந்தது. பரம்பரைகள் வளர்ந்தன. அகண்டனின் மகன் ஆள ஆரம்பித்தான்.

ஆலகாலன் - ஆழிகள் எல்லாம் கோட்டைகள் செய்தவன்

அகண்டன் ஆழியிலிருந்து வரும் ஆபத்தைக் கரையில் வைத்து எதிர்கொள்ளக் குடிகளை அமைத்தால், மகனோ கடலிலேயே ஆபத்தை முறியடிக்கக் கோட்டைகள் கட்டத் தொடங்கினான். தென்புறத்தின் எல்லைகளில் பெரியதும் சிறியதுமாக இரண்டு கோட்டைகளைக் கட்டிக் காவலைப் பலப்படுத்தினான். பெரிய ஆலகாலன் கோட்டை, சிறிய ஆலகாலன் கோட்டை என அவை பெயர் பெற்றன.

இடைமருதன் - இடபத்தில் திரிந்த இசைரசிகன்

காவலெல்லாம் பலம்தான், கடல்வேடர் தயார்தான் என்றாலும் வந்தபாடில்லை ஆபத்து தென்கரையோரம். கடல்வேடர் தலைவனானான் இடையன் ஒருவன். எருதுகளை வளர்க்கும் எருது. அழகியலின் வரம் கிடைத்த ஆடவன். பேரழகு கொட்டிக் கிடக்கும் நிலத்தின் கரையிலிருந்து ஆபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததில், தன் மக்கள் அழகைக் கொண்டாட மறந்த அவலத்துக்காய் தலையிலடித்துக்கொண்டான். அழகைப் பரப்பத் தொடங்கினான். மருதநிலத்தினின்று பாயும் நதிகளின் அழகைச் செப்பனிடத் தொடங்கினான். நதிகளின் திசைகளில் திருத்தங்கள் செய்தான், நான்கு திக்கும் நதிகளைப் பகிர்ந்தளித்தான். மங்கையர் குளிக்க நீர்வீழ்ச்சிகள் வேண்டி, மலைகளை செங்குத்தாய் வெட்டி அருவிகள் செய்தான். பின்னானில் நாட்டின் பேரழகின் காரணமான நீர்வீழ்ச்சிகள் அனைத்தையும் வடிவமைத்தான். தம் பேரழகைத் தமக்கே அறிமுகம் செய்த இடைமருதனை வியந்தன நீரணங்குகள். இடமருதன் சொன்ன திக்கில் சொன்ன வேகத்தில் பாய்ந்தன ஆறெல்லாம்.’ பெய்!’ என்று கட்டளையிட்டால் பெய்தது முகிலெல்லாம். இடைமருதன் ஆட்சியில் நீரும், மண்ணும், பாறையும், மரமும் நிறைந்திருந்த நிலப்பகுதி, மயனே வியக்கும் மன்மதபுரியானது. பின்னாளில் எட்டுத் திக்கிலிருந்தும் அந்த மண்ணுக்கு வந்துவாழ மாந்தரெல்லாம் ஆசைப்படுமளவு முத்துத் தீவாக ஆகக் காரணன் அந்த இடைமருதனே.

நீரணங்குகளில் குறிசொல்லுப்பவள் மணிநீலி. மணிநதியாகப் பாய்ந்து ஆழியில் கலக்கும் நதித் தேவதை. ஒருநாள் அவள் கொடுங்கனா ஒன்றைக் கண்டாள். ஆபத்துக் குறிகள் பல கண்டாள். உடனடியாய் மருதனிடம் முறையிட்டாள். தம்மை அழிக்கவரும் எந்த ஆபத்தும் நீலிகளைப் பாதித்துவிடக்கூடாது என்று அவர்களைக் காக்கத் தயாரானான் மருதன். வேடரைக் காக்க ஆவன செய்யச் சொல்லி நீலிகளின் தலைவி மானீலி சொன்னாள். காப்பது கடல்வேடர் கடன், அதிலே மாண்டால் அதுவும் கடன்தான் என்று அவர்கள் கருத்தைப் புறக்கணித்து, நீர் மகளிருக்கு அவர்கள் பாதுகாப்பாய் வாழ ஒரு நிலத்தை அமைத்தான் இடைமருதன். பார்வையில் மட்டுவரை களப்பாக இருக்கும்வண்ணம் ஒரு கரையை அமைத்து, களப்புக்குள் கடநீரைப் புகவிட்டான். வளம் கொழிக்கும் இடமாக அதை ஆக்கி, நீர் மகளிரை அதற்குள் பாதுகாப்பாகத் தங்கவைத்தான்.

நீலிகளின் முன்கூறலின்படி, வேடர் இனத்தின்மீது முத்திக்கிலும் இருந்து வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களால் தாக்குதல்கள் நடந்தன. காலத்துக்குக் காலம் நடந்த யுத்தங்களில் கதிர்காமத்தில் இருந்த தங்களது தெய்வத்தின் கோயிலையும், அதனைச் சுற்றிய தமது அரச நிலங்களையும் வேடர்கள் அந்நியரிடம் இழந்தார்கள். படிப்படியாக ஒடுங்கி, கரையோரங்களின் நிலங்களில் வேடர் ஒதுங்கி வாழத் தலைப்பட்டனர். ஆதித் தமிழ் வேடர், பின்னாளில் தீவின் கிழக்குக் கரையெல்லாம் வாழத் தொடங்கியபோது, அந்தக் கரை முழுவதையும் அன்றாடம் வெள்ளத்தாலும் சூறாவளியாலும் சூறையாடியது நீர். நீலி கண்ட கொடுங்கனா ஒற்றை ஆபத்தல்ல, தம் இனத்துக்குத் தொடரப்போகும் ஆபத்தின் முன்குறி என்பது உறைத்தது கடல் வேடருக்கு.

ஈறிலான்- ஆத்மலிங்கத்தை தாரை வார்த்தவன்

இமயம் எனும் நெடுமலைத் தொடரின் பெருமலை கயிலை. சிவனுறையும் மலையென்றே பாரெல்லாம் புகழ் பரப்பி நின்றது. மலையொன்றின் உச்சியில் கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தான் மலையொத்த தோளுடையான். ஈறிலான் என்பது அவன் பெயர். தென்தீவின் இயக்ககுடியில் பிறந்தவன். அழித்திட நினைப்பவர்க்கெல்லாம் அழிவையே பரிசாய் கொடுத்துப் பழக்கப்பட்ட குடியில் பிறப்பெடுத்தவன். தான் அரசேற முதல், தன் நாட்டை பலமாக்க சிவனது துணை நாடி வந்து தவம் செய்தான் மலையேறி.

தன் குடியாளும் தென் தீவில் சிவனாள மலையுண்டாயினும் அதில் இருந்தாள அவன் வடிவுடைத்த லிங்கம் வேண்டும். இவன் கொண்ட தவத்தின் நோக்கமும் அதுதான். சிவனின் வழியால் நீரே உறைந்து செயலற்றிருக்கும் இம்மலையில் சிவனருளால் பெறப்போகும் லிங்கம் தன்னூரின் நிலை காக்கும் என்பதே ஈறிலானின் எண்ணம். கடும் தவமியற்றியவன் தன்னிலை மறந்தான். தானுண்ணும் ஆகாரம் தொலைத்தான். குளிரிலும் பனியிலும் தொடர்ந்தது அவன் தவம். வருடங்கள் கழிந்தும் மாறாமனத்துடன் மலையுடன் மலையாய், பனிமலைச் சிலையாய் உறைந்தே போனான். பாரதத்தெய்வங்கள் எல்லாமே மிரண்டு விட்டன இவன் தவத்தை கண்டு. இப்படி ஒரு பெருந்தவம் இயற்றும் மனிதன் நிச்சயம் பெரும்பலம் படைத்தவனாய்த்தான் இருக்க முடியும். இவனுடன் சிவபலமும் சேர்ந்துகொண்டால் அவன் தேசம் அழிக்க முடியாததாய் சுடர் விடத் தொடங்கிவிடும். அஞ்சிய தெய்வங்கள் எல்லாம் மிஞ்சிய விதி செய்து நடப்பதை அவதானிக்கத் தொடங்கின.

தன் பக்தனின் தவத்தை மெச்சிய சிவனோ அசரீரியாய் காற்றிலே தோன்றினான். ”ஈறிலா உன் தவம் கண்டு மெய்சிலிர்த்தேன்.. என் மீது நீ கொண்ட பக்தியால், நான் உன் நாட்டில் நீ நினைத்த மலையில் உறைய சித்தம் கொண்டேன்.. இப்போது ஒரு லிங்கத்தை நீ பெறுவாய். அது உன்தேசம் காத்து நிற்கும் ஆத்மலிங்கமாய் விளங்கும்..” எனக்கூறி நீரினை உள் ஒடுக்கி அதைசுற்றி பாறையை உருக்கி அதனூடே லிங்கத்தை அமைத்து வழங்கினான் ஈறிலன் கைகளில். பாறையும் நீரும் ஒருங்கே ஒடுங்கித் திரவமாய் உள்ளுறைவதால், அலுங்காமல் குலுங்காமல் லிங்கத்தை நடந்தே கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதை புவியிலே வைத்தால் புவியுடன் உறைநீர் தொடுத்து, உருகிய பாறை மண்ணுடன் இணைந்து லிங்கம் அவ்விடத்தில் உறைந்துவிடும் என்றும் அசரீரி எச்சரித்திருந்தான்.

இப்படி ஒரு தவத்தை இயற்ற தேவன் எவனாலும் முடியாது. கடுந்தவமியற்றி சிவனருள் பெற்று இவ்வரிய சிவலிங்கத்தை பெறவும் இயலாதுஒரே வழி ஈறிலானை சூழ்ச்சியால் மடக்கி அவன்கொண்ட சிவலிங்கத்தையே அவர்கள் மண்ணில் பிரதிட்டை செய்வதுதான். அடுத்தவன் கடும்தவத்தில் விளைந்த பயனை சூழ்ச்சியெனும் சிறு உழைப்பால் பறித்திட நினைத்தன அம்மண்ணின் தெய்வங்கள். துணைபோனதோ சிவனது புதல்வர்களுள் ஒருவன். ஈறிலான் பாதையில், இமயமலை அடியில் கோகர்ணம் எனுமிடத்தில் அழுதபடியே சிறுவன் ருவன் குறுக்கிட்டான்.

இறுகிய உடம்புக்காரன்தான், இருந்தாலும் ஈரமனதுக்காரன் ஈறிலன். சிறுவனின் அழுகைக்கு காரணம் கேட்டான். சிறுவனோ மலையிலிருந்து கீழ் நோக்கி கைகளைக் காட்டிஅம்மா, அம்மா..’ என்று அழுதான். அன்னை ஆபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. காப்பது மன்னன் கடன். ஆனால் மலையிறங்க லிங்கத்தைத் தரையில் வைக்கவேண்டும். வைத்தால் லிங்கம் நிலத்தோடு பொருந்திப் போய்விடும். சிறுவனை நோக்கினான். “சிறுவனே கேள்! இது கயிலையில் சிவன் தந்த லிங்கம்.. சிறிதுதான், ஆனால் கனம் கூடியது. உன்தாயின் நிலை அறிந்து வரும்வரை இதை கையில் வைத்திரு. இதை எக்காரணம் கொண்டும் கீழே வைத்துவிடாதே. உன்னால் இதன் பாரத்தை தாங்க முடியாது போயிற்றானால் ஒரு குரல் குடு நான் மறுகணம் இங்கே வந்து விடுகிறேன்.. சிறுவன் தலையசைத்து வாங்கிக் கொண்டான்.

தேவர் சூழ்ச்சி அறியாத ஈறிலான் மலையிறங்கத் தொடங்கினான். ஆண்டாண்டு காலம் அசையாது தவமியற்றி அவன் பெற்ற லிங்கம் அந்த இடத்திலேயே நிலத்தில் வைக்கப்பட்டது சிறுவனால். தமிழ் மண்ணைக் காக்க மன்னன் எடுத்த முயற்சி, தேவர் சதியால் முறியடிக்கப்பட்டது.

உருத்திரன் - திருக்கோணேச்சரம் கட்டியவன்

உருத்திரனின் போர்ப்படையே அந்தப் பாறைக் கோயிலைக் கட்டும் பணியில் முடுக்கி விடப்பட்டிருந்தது. கடலலை மோதியும் நகர்த்த முடியாப் பெரும் பாறையின் உச்சியில் தான் ஆசைப்பட்டபடியே ஈசனுக்குக் கோயிலைக் கட்டினான் ஈசபக்தன் உருத்திரன். கடலினுள் நுழைந்து பாறைகளை காவியவன் அவற்றிலே சுவர் எழுப்பி மிகப்பெரும் கோட்டையையும் உருவாக்கிக் கொண்டான். சிவனமர்ந்த மலையிலேயே கல்செதுக்கி அதனிலேயே சிவலிங்கத்தை செதுக்கி கடலினை பார்த்திருந்து தீவினைக் காக்கும் படி அமைத்தான் கோவிலை. திரு என்றுமே கோணாதபடிக்கு வளம் நிறைந்த அந்தக் குன்றம்தான் திருக்கோணா ஈச்சரமானது.

ஊழிநடன்வீணையில் தோற்று சிவனை மயக்கியவன்          

யுத்தம் ஒன்று வந்தால், அதிலே எதிரிக்கு ஊழிக் காலத்தைக் காட்டுபவன் ஊழிநடன். தான் கொடுத்த அழிவை தானே இரசித்து அழிவிலும் ஆடுபவன் இவன் என்பதே இப்பெயர் கொண்ட அர்த்தம். ஆடலிலும் பாடலிலும் கைதேர்ந்து இருந்தவன் வீணையை மீட்டி அதிலெழும் இசையால் நோய்களை மாற்றும் திறனையும் கொண்டிருந்தான். வீணையால் புகழ் பரப்பி அதையே தன் குலத்தின் கொடியாகவும் மாற்றிய சாமகானன். வீணையின் வல்லமை எண்ணி மகிழ்ந்திருந்த அவனோடு, இசைப்போட்டிக்கு வந்தான் குறுமுனி ஒருவன். எவனது இசை மனங்களைக் கரைக்கிறதோ, அவனது இசையே சிறந்தது என்றான் ஊழிநடன். ‘மனங்கள் கரைவது கண்ணில் தெரியாது, பாறையைக் கரைக்க இசைப்போம் வாஎன்றான் குறுமுனி. போட்டி தொடங்கியது. பாறைகளைப் பஞ்சாக்கப் பாடத் தெரிந்தவனுக்கு, பாறையை உருக்கத் தெரியவில்லை. குறுமுனி இசையில் பாறைகள் உருகின. தோல்வியை ஏற்று, குறுமுனியைப் பரிசுகளால் நிரப்பி அனுப்பினான் அவன்.

பாறையைக் கரைக்க முடியாத அந்தப் பாறையைக் கரைத்தது அவனது அன்னையின் நிலை. அசைய இயலாத நோய்க்கு ஆட்பட்ட அவள், சிவனை வழிபட ஆசைப்பட்டாள். தாய்க்காக திருகோணமலையை பெயர்த்து வந்து சிவலிங்கத்தை தாய் முன் தாபிக்க ஆசை கொண்டான் ஊழிநடன். மலையென நிலைத்த சிவன் கோவிலுள் நுழைந்து லிங்கத்தை பெயர்க்க முற்பட்டவன் மலையுடன் லிங்கம் தொடுப்பில் இருப்பதை உணர்ந்து கொண்டான். மலையினைப் பிளந்தால் ஒழிய லிங்கத்தை வேறாக்க முடியாது. தன் பெரும் வாளால் மலையினைப் பிளந்து தன் உரம் கொண்ட தோள்களால் மலையினை நகர்த்த முற்பட்ட போது. மலையினின் மேலிருந்து கால் கட்டைவிரலினை ஊன்றி அழுத்தினான் சிவன். மலையினின் அடியினில் புகுந்த ஊழிநடன் சிவனது அழுத்தத்தால் மலையுடன் அமுங்கினான். “ஐயனே பொறுத்தருள வேண்டும் தாய் உன்னை காண ஆசை கொண்டாள் ஆதலால்தான் உன்னை எடுத்துப் போக நினைத்தேன்..” என்ன சொல்லியும் சிவனின் அழுத்தும் விரலின் அழுத்தம் கூடியதே தவிர குறைந்த பாடில்லை. இசைப்பிரியன் சிவன் என்பதை உணர்ந்து, அவன் கோபத்தைக் கரைக்க மனங்கொண்டான் நடன். வீணை கிடைக்காத இறுக்கத்தில் தனது உடலிலிருந்து நரம்புகளை உருவிக் கதையிலே கட்டி வீணையை அமைத்தவன், பாடத் தொடங்கினான். பாறையை உருக்கா சாமகானன் இசை, ஈசனை உருக்கியது. கால் தளர்ந்தது. ஊழிநடன் விடுபட்டான். அன்னைக்காய் பாறையைத் தகர்க்காதே, அன்னைக்குக் காட்சி கனாவில் கிடைக்கும் என்று சமாதானம் சொல்லி அனுப்பினான் இறைவன்.

 

எழுநீரன்-சுடுநீர் கிணறுகளை வாளால் அமைத்தவன்

எழுநீரனோ தன் தாயில் நீங்காத பாசம் கொண்டவன். எது எவ்வாறாயினும் தாய் சொல்லே தலையாய சொல்லாய் ஏற்று ஆட்சி நடத்தியவன். அந்தத் தாய் நோயால் மரணித்துப் போக, அவளின் பிதிர்க்கடனைச் செலுத்த நீர்நிலை தேடினான். தமிழ்மன்னன் அவன்மீது என்ன கோபமோ, எந்த நீர்நிலையும் நீரை நெகிழ்த்தவில்லை. புவி மேவி வெளியே பாய மறுத்து உள்ளோடும் நீரை மேல் கொண்டுவந்து தாயின் ஈற்றுக் கிரியைகளை முடித்திட சித்தம் கொண்டான். வாளினால் நிலத்தினை துளைத்து ஏழ் வகை நீரூற்றுக்களை உருவாக்கினான். அன்னையின் கடன் கழித்தான். எழுவகை நீரினை எழுப்பியதால் எழுநீரன் எனும் பெயர் உடையவனாய் அழியாப் புகழ் படைத்தான்.

ஏறேறி-வாலிக்கு உதவியவன்

அந்தத் தீவின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் வேண்டுமானால், சோலையுள் அலைந்து அதில் சொட்டும் தேனினை எடுத்துச் சுவைத்து வாயினைத் தயார்படுத்த வேண்டும். ஆண்ட அரசன் பெயர் ஏறேறி. இயக்க வம்சத்தில் உதித்தோரில் முன்னோரும் பின்னோரும் கண்டில்லாதவாறு பார்புகழும் வீரமும் ஊர்புகழும் நேர்மையும் உடையவனாய் சீர்பெரும் சிறப்பாட்சி நடாத்திவந்தான் அந்தத் தீவுமுழுவதும்.

தீவின் மேற்கிலே ஒரு பெருந்தேசம் வேறொரு குடியின் ஆட்சியில் இருந்தது. எறேறியோடு நட்பாயிருந்த அந்தத் தேசத்து அரசன் வாலி. மலைதோறும் தாவி, கிழங்குகளையும் பழங்களையும் உண்டுவாழும் அந்த இனத்தவர் இயற்கையோடு இணைந்தே வாழ்ந்து வந்தனர். ஏனைய விலங்குகளோடு நிலத்தைப் பங்கிட்டு வாழ்ந்த அவர்களின் பலமும், காட்டு விலங்குகளுக்கு ஒப்பாகவே இருந்தது. அவர்கள் இனத்துக்குள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் போது பூகம்பத்தையே தோற்கடிக்கும் அளவுக்கு பூமி நிலை குலைந்து போகுமாம்.

அப்பேர்ப்பட்ட பலத்துக்கே பெயர்போன வம்சத்தில் பிறந்தவர்களிலேயே வாலியை போல் ஒரு வீரன்  தேடினும் இல்லை. எதிரி ஒருவன் இவன் முன் நின்றால் அவன் பலத்தின் பாதியை உறிஞ்சி எடுத்துத் தனதாக்கி கொள்வான் வாலி. பலம் என்பது இருவகைப்படும். ஒன்று ஒருவனின் துணிவு, மற்றையது எதிரியின் அச்சம். வாலியின் உடலைப் பார்த்த மாத்திரத்தில், இவன் கம்பீர தோற்றத்திலேயே எதிரி துணிவிழந்து பலவீனமாகிப் போவான், அதனாலேயே எதிரியின் பலம் பாதியாய் குறைய அந்தப் பலவீனத்தையும் சேர்த்துப் பலமாக்கி எதிரியை விடவும் பலமடங்கு பலசாலியாய் மாறுவான் வாலி. இதற்கேற்பவே எதிரியின்பலத்தையும் பாதியாக்கும் பலவான் எனும் பெயர் பெற்றிருந்தான் வாலி. அத்தகு வாலிக்கு சுக்கிரீவன் என்றொரு தம்பி. சுக்கிரீவனின்பால் வாலி மிகப்பெரும் நம்பிக்கையும் தீராத பாசமும் கொண்டிருந்தான். ஆனால் சுக்கிரீவனுக்கோ தமையனில் இருந்த பாசத்தை விட அவன் அரியணையில் தான் பாசமும் காதலும் அதிகமாய் இருந்தது. அரியணையை கண்ணுறும் போதெல்லாம் தனக்கேயுரிய பெண்ணொருத்தியை தமையன் வைத்திருப்பதுபோல் கடுப்புறுவான் சுக்ரீவன்.

தமையன் உயிரோடிருக்கும்வரை தன்னால் அரசாளமுடியாது என்பதை நன்கறிந்திருந்தான். தமையனுக்கு வாரிசுகள் இல்லாவிட்டாலாவது அவனைக் கொன்று ஆட்சியை பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அவனுக்கோ இடியுதித்த வாலி என்னும் கைதவழும் புதல்வன் ஒருவன் இருந்தான். சுக்கிரீவனுக்கோ ஆட்சி ஆசை பிடித்தாட்டியது. எப்படியாவது அரசை கைப்பற்ற வேண்டும். அதுவும் வாலியின் மைந்தன் கைக்குழந்தையாய் இருக்கும் பொழுதே வாலியை தீர்த்தால்தான் இது சாத்தியம். சரியான சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்தான் வஞ்சக நெஞ்சுடன் சுக்கிரீவன். திட்டம் தீட்டப்பட்டது.

வாலியின் அரசுக்குட்பட்ட காட்டு எல்லைகளில் வாழும் கிராம மக்களை ஒரு பெரும் விலங்கு படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது எனும் முறைப்பாடு வாலியின் காதுக்கு வந்து சேர்ந்தது. தம்பி சுக்கிரீவனை மட்டும் அழைத்துக் கொண்டு எதுவந்தாலும் பார்த்து விடலாம் எனும் முடிவுடன் காட்டிற்குள் நுழைந்தான். தம்பியுடையான் படைக்கே அஞ்சமாட்டான் கேவலம் ஒரு விலங்குக்கா அஞ்சுவான்..

தமையனும் தம்பியும் இரவுபகலாக அந்த விலங்கை தேடி அலைந்தார்கள். இருபகல் ஓரிரவுத் தேடலின் பின் அந்த மிகப்பெரும் விலங்கைக் காட்டின் ஒரு குகையருகே கண்டு கொண்டார்கள். கொடூர நோயால் விகாரமடைந்து தனது கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட பிரமாண்டப் புலி அது. சுக்கிரீவனும் பலசாலிதான், ஆனால் இவ்விலங்கை கண்ணுற்றதும் என்ன நினைத்தானோ தெரியாது தமையனை முன்னனுப்பி தான் சிறிது பின் வாங்கிக் கொண்டான். இருவரும் சேர்ந்துதான் மோதினார்கள் ஆனால் வாலி அளவுக்கு தன் முழுப் பலத்தையும் சுக்கிரீவன் காட்டவில்லை. ஒரு மரத்தை பெயர்த்தெடுத்துக் கொண்டு விலங்கை அயராது வாலி தாக்கிக் கொண்டிருக்க சுக்கிரீவனோ தூரத்தில் நின்று பாறைகளை தூக்கி விலங்கின் மீதெறிந்து தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தான். போராட்டத்தில் வாலியின் கை மெல்லமெல்ல ஓங்க ஆரம்பித்தது.

மரத்தை எறிந்துவிட்டு ஆக்ரோசமாக சுழன்றான் வாலி. விலங்கின் ஒரு காலை பிடித்து அதை சுழற்றி சுழற்றி அறைந்தான் அருகிலிருந்த குன்றுடன். சுக்கிரீவன் திகைத்துப் போனான் தமையனின் வீரத்தை பார்த்து. ஆனால் தமையன் களைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் கண்டுகொண்டான். சுக்கிரீவனை ஒருகணம் வாலி பார்த்தபோது வாலியின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருந்த அந்த விலங்கு வாலியை தள்ளி பாறையில் மோதிவிட்டு அந்தக் குகையினுள் ஓடி மறைந்து போனது.

நிலைகுலைந்த வாலி எழுந்து தன் தம்பியை பார்த்துதம்பி நான் இக்குகையினுள் உட்சென்று இந்த விலங்கை ஒரு கை பார்த்து விடுகிறேன் நீ இங்கேயே காத்திரு. அப்படி நான் இக்குகையில் இருந்து மீளவில்லையாயின் குகையுள் இருந்து வெளிவரும் விலங்கை குகையின் மீதிருந்தே பாறையை வீழ்த்திக் கொன்றுவிடு.” என்று சொல்லி அவன் பதிலைக் கூட எதிர்பாராது குகையினுள் ஓடி மறைந்தான் வாலி. நஞ்சே நெஞ்சாய் உடைய சுக்கிரீவன் தமையன் குகையினுள் சென்று மறைந்ததுமே தாமதம் சிறிதும் இன்றி பெரும் பாறைகளை உருட்டி அந்த குகையின் வாசலை அடைத்தான். தாமதமின்றி தலைநகர் நோக்கி விரைந்தான். ‘விலங்குடனான யுத்தத்தில் என் தமையன் வாலி மாண்டுபோனான் அவனாசைப்படி நானே இனி மன்னன்என்றறிவித்து முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அங்கே குகைக்குள் வாலியின் நிலையோ வேறாக இருந்தது. கடும்கோபத்தில் குகை நுழைந்தவன் அவ்விலங்கை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தான். விலங்கோ எதுவும் செய்யத் திராணியற்று உயிர்காப்பதற்காக மட்டுமே போராடிக் கொண்டிருந்தது. வாலி கோபத்தின் உச்சியில் இருந்தான் இரவு கழிந்து அடுத்த நாள் மதியம் வரை நிகழ்ந்த அப்போராட்டத்தை இனியும் தொடர விரும்பாதவனாய் முஷ்டியை மடக்கி அதன் முகறையில் அறைந்து அந்த விலங்கை தூக்கி குகையின் சுவரிலே அறைந்தான். இப்படியே தொடர்ந்து அப்பெரும் விலங்கை மீண்டும் மீண்டும் அறைந்தவன் இறுதியில் அதன் வயிற்றில் தன் முழங்காலால் மிதித்து அந்த விலங்கின் வாயை தன் கைகளால் பிடித்து ஒரே மூச்சில் அதை கிழித்து எறிந்து அந்த விலங்கின் கதையை முடித்தான்.

விலங்கை கொன்று புதைத்தவன் குகையின் வாசலை அடைந்தபோதுதான் குகைவாயில் மூடப்பட்டிருந்தது தெரிந்தது. தம்பி சூழ்ச்சி செய்திருக்கிறான் என்பது அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. கொதித்தெழுந்த கோபத்தில் குகையை அடைத்த அப்பெரும் கற்களை தன் தோள் கொண்டே முட்டி மோதினான். காளையின் மோதலில் கவிழும் கரும்புகள் போலகற்கள் பொலபொலவென்று உதிர்ந்தன.

தம்பியின் துரோகத்துக்குப் பாடம் கற்பிக்க விடுவிடுவென்று அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான். ஆனால் அங்கோ வாலியின் ஊரில் ஏறேறியின் ஆர்பாட்டம் தொடங்கியிருந்தது. விடயம் இதுதான் - தமையன் மரித்ததாய் முடிசூடிக் கொண்ட சுக்ரீவன் வாலியின் மகன் வளர்ந்தால் தன் ஆட்சிக்கு எங்கே கேடாய் வந்து தொலைந்துவிடுவானோ என்று பயந்தான். அந்த குழந்தையை கொல்லத் துடித்துக் கொண்டிருந்தவன் அதற்கான துரிதமுயற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினான். தன் கணவனின் இறப்பில் நம்பிக்கை அற்றிருந்த, அவன் வருவான் என்றே எண்ணியிருந்த வாலி மனையாள், மகனின் உயிருக்கும் கேடு உண்டாகப் போகின்றது என அறிந்து தன் கையாலாகாத நிலையை நொந்து கலங்கிக் கதறினாள்.

இவள் கதறல் எவன் காதுக்கு வீழ்ந்ததோ இல்லையோ ஏறேறி காதிலே விழுந்தது. நம்பியவருக்கு மனதால் கேடு விளைவிக்க நினைப்பவரையே தொலைத்து விடும் வம்சத்தில் பிறந்தவன் நண்பனின் குடும்பத்துக்கு தொல்லை என்றால் சும்மாவா இருந்துவிடுவான். கொண்ட கோபத்தில் வெகுண்டெழுந்து தனித்தே சுக்கிரீவன் பறித்த நாட்டினுள் புகுந்தவன் தன் முழுப்பலத்தையும் ஒன்றாக்கி இயங்கிக் கொண்டிருந்தான். குகைவிட்டு தேசம் வந்த வாலியோ தன் நண்பன் ஏறேறியை முற்றிலும் எதிர் பார்த்திருக்கவில்லை ஆனால் நலம் விசாரிக்க இது நேரமும் இல்லை கண்ணாலே நன்றி சொன்னவன் ஏறேறியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டான்.

இருவரையும் சமாளிக்க தன் படையையே அனுப்பிய சுக்கிரீவன் தான் தப்பி ஓடுவதற்கு குதிரைவண்டியையும் தயார் செய்ய மறக்கவில்லை. அங்கேயோ வாசலில் சண்டை துவங்கி விட்டிருந்தது. சண்டை என்பதை விட ஏறேறியின் விளையாட்டு என்பது பொருத்தமாய் இருக்கும். வந்த ஒவ்வொருவரையும் வெறும் கைகளால் சுழற்றி எறிந்தவன். குதிரையில் வந்தவர்களை குதிரையுடன் தூக்கி யானைப் படை மீது எறிந்தான். யானையின் துதிக்கையை வாலியும் உடலை ஏறேறியும் பிடித்து வந்த காலாட்படை மீது சுழற்றி எறிந்தார்கள். கையில் ஆயுதமேதுமின்றியே வந்த போராளிகளையே ஆயுதமாய்க் கொண்டு அவர்களையே திருப்பித் தாக்கினார்கள் அந்த ஆருயிர் நண்பர்கள். அந்த இருவரது தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் சுக்கிரீவனின் சேனை அல்லலுற்றது. ஏறேறியின் போராடும் முறையை கண்கொண்டு கண்ணுற்ற சுக்கிரீவனோ யுத்தத்துக்கு போகாது, தன் மனைவி மக்களுடன் கடல்தாண்டி ஓட்டம் பிடித்தான்.

ஏறேறியை கட்டித்தழுவிய வாலிஏறேறி..!! மிகப்பெரும் உதவி செய்திருக்கிறாய்... நீயோ மனித இனம் நீ மோதிய என்னினத்தாரோ சாவைக்கூட விரும்பினால் மட்டுமே பெற்றுக்கொள்ளும் அற்புத இனம்.. இவர்களுடன் நான் மோதியது பெரிதல்ல ஆனால் தவறினால் மரணமே கிட்டும் என அறிந்தும் எனக்காக நீ தனித்தே போரிட்டு என்நாட்டை மீட்டுத் தந்திருக்கிறாய்.. நட்புக்காய் உயிர்கொடுக்கும் உத்தமனே இனி வரும் காலத்தில் என்வழி தோன்றும் சந்ததி அனைத்துமே உன் சந்ததிக்கு ஏதும் கேடென்றால் உனக்காகவே போரிட்டு உனக்காகவே மடியும்.. உன்சந்ததிக்கு கேடு விளைவிப்பவர்கள் யாராயினும் என்னைத் தாண்டியே உன் தேசம் நுழையட்டும்..” என்று வாக்குறுதியும் அளித்து கடலுக்குள் பலமான கோட்டையையும் அமைத்து அத்தேசத்துக்கு காவலுக்கும் இருந்துவிட்டான்.

இவ்வாக்குறுதியை தன் நன்றியின் வெளிப்பாடாகவே வாலி அளித்தான். ஆனால் ஏறேறி மரித்து அவனது மகன் அரசேறும் போது இதே வாக்குறுதிதான் இவனது சந்ததியையே இல்லாது ஒழிக்கப் போகிறது என்பதை வாலி அறிந்திருக்கவில்லை. அதற்கு தப்பிப் போன தன் தம்பி சுக்கிரீவன் துணைபோவான் என்பதையும் தெரிந்திருக்கவில்லை

 

ஐந்திறன்- ஆரியனால் அழிந்தவன்

அந்தத் தீவின் தலைமைப் பீடத்தை கிழக்கில் இருந்து மத்தியில் உள்ள அந்த மிகப்பெரும் குன்றுடன் கூடிய கோட்டைக்கு மாற்றியிருந்தான் ஐந்திறன். சிங்கத்தின் உருவத்தில் தோன்றிய அக்கோட்டை சிங்கமலைக் கோட்டை என்று பெயர் எடுத்தது நெடுந்தூரத்தமிழர் வரலாற்றில்அந்தக் கோட்டையில் மக்களும் படைவீரரும் பிரபுக்களும் கூடி நிற்க இயக்கர் குலத் தலைவனின் வழிகாட்டி, நீர்த் தேவதைகள் நீளிகளின் வாக்குகளைக் கூறும் கணியன் கலையாடிக் கொண்டிருந்தான்.

ஐந்திறனுக்கு பிறந்த பெண்பிள்ளையால் நாட்டுக்கு கேடு, ஐந்திறனுக்குச் சாவு!’ என்பதே கணியன் வாக்கு. பிள்ளையை மன்னன் பிரிந்தால் மட்டுமே மன்னனை உயிர் பிரியாது என்று கூறிச் சரிந்தான் கணியன்.

ஐந்திறனின் மனதைத் தேற்றி பிள்ளையைத் தொட்டிலில் இட்டு கடல்கடந்து கொண்டுபோய் மிதிலையின் மன்னன் ஜனகனின் தோட்டத்தில் வைத்தான் ஐந்திறனின் மாமன் மாரீசன். அவளின் வளர்ப்புப் பற்றியும் அடிக்கடி தகவல் தந்தான். வளர்ந்து பெரியவள் ஆனவள் தசரதன் மைந்தன் இராமனை மணந்தாள் எனும் செய்தி தேனாக இனித்தது ஐந்திறன் காதுக்கு. அடுத்த சில நாட்களில் வந்த செய்திதான் தூக்கி வாரிப்போட்டது அவனை. கைகேயி என்பாள் இட்ட சதியால் இராமன் காடு வந்தானாம் கூடவே ஐந்திறனின் மகள் சீதையும் காடு வந்தாளாம் எனும் செய்தி மாரீசன் வழி கிட்டியிருந்தது ஐந்திறனுக்கு. அரண்மனை ஒன்றில் அழகாய் வளர்ந்தவள் கொடிய மிருகங்களின் காட்டிலே தனித்து வாழ்வதா எனக் கலங்கிய   ஐந்திறன் தன் தங்கை சூர்ப்பனகையை அனுப்பி சீதையை இராமனின் வனவாசம் முடியும்வரை தான் வைத்திருப்பதாக வேண்டி தூதனுப்பினான். ஆனால் அவளின் நோக்கம் புரியாமல் அச்சத்தில் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினான் ராமன் தம்பி. பெண்ணென்றும் பாராது மூக்கை அரிந்து துரத்தினான். ‘பெண்ணின் மூக்கறுக்கும் கயவனிடம் நம்பி எப்படி என்மகளை காட்டிலே தங்க வைப்பேன்எனும் கோபத்தில் கிளம்பிய ஐந்திறன் சீதையை தடைகளை மீறித் தூக்கி வந்துவிட்டான். தன் மகளுக்காகவே ஒரு பூந்தோட்டத்தை அமைத்து ஒரு குகையையும் உருவாக்கி அவளை அங்கேயே தங்கவைத்து காவலுக்கு காவலரையும் இட்டான். மகளைச் சேர்ந்து வாழ்ந்தால் நாட்டுக்கும் தனக்கும் கேடு என்கிற கணியன் வாக்கை - நீலிகளின் எச்சரிக்கையை மறந்துபோனான்.

அங்கோ இராமனும் இலக்குவனும் பெரும் கோபத்திற்காளானார்கள். இருவரும் தனித்துப் போய் ஐந்திறனை வெல்லவே முடியாது. அவனது வீரம் அப்படிப்பட்டது. கூடவே வாலியின் காவலும் இருக்கிறது என்றெண்ணும் போதுதான் வாலியின் சகோதரன் சுக்கிரீவன் நினைவு வந்தது இருவரிடமும். சுக்கிரீவனிடம் உதவிநாடிப் போனவர்களுக்கு அவனிட்ட நிபந்தனை பெரிதாக இருந்தது. ஐந்திறனை வெல்வதே இயலாத காரியம் போதாதென்று வாலியின் துணை வேறிருக்கிறது வாலியை யுத்தத்தில் வெல்லவும் முடியாது. மறைந்திருந்து வாலியைக் கொல்லவேண்டுமென்று நிபந்தனை இட்டான் சுக்கிரீவன்.

திட்டப்படி சுக்கிரீவன் வாலியைத் தனிச்சமருக்கு அழைத்தான். காத்திருந்தது போலக் குதித்தான் வாலி. அண்ணனுக்கும் தம்பிக்கும் யுத்தம் தொடங்கியது. தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட பாணங்களை வாலியின் முதுகில் மறைந்திருந்து பாய்ச்சிக் கொன்றான் பெரும் வீரன் என்று உலகம் கொண்டாடும் ராமன்.

ஐந்திறனைக் கொல்லும் நோக்கத்துக்கு, தலைவனை இழந்த வாலியின் படையைத் தயாராக்கினான் சுக்கிரீவன். தலைவன் இல்லாத வாலியின் மக்கள் இரத்த உரிமை வாரிசு சுக்கிரீவனைப் பணிந்தார்கள். அவர்களின் படையுடன் ஐந்திறன் தீவுக்குள் ராமன் நுழைய, தமிழன் ஆட்சியை அழிக்க அந்தக் கடலே தன் ஆழம் குறைத்து, நடுப்பாதை காட்டி வழிவிட்டது.

இத்தீவின் வரலாற்றில் புகழ் படைக்கும் வீரர்க்கெல்லாம் துரோகிகள் இருந்து தொலைவர். அப்படித்தான் ஐந்திறனுக்கும் வீபிடணன் என்பவன் உருவாகி தமையனைக் காட்டிக் கொடுத்து அத்தீவைத் தோற்கடித்தான் இராமனுடன் கூட்டுச்சேர்ந்து. ஆட்சிக்காய் அலைந்த இருவரும் தமையன்மாரைக் கொன்று முடிசூடிக் கொண்டார்கள் ஒருவன் சுக்ரீவன் மற்றவன் விபீடணன்.

இங்ஙனம் ஐந்திறனை கொன்று சீதையை மீட்டவன், அவள் கொண்ட கற்பிலும் அவள் காத்த நெறியிலும் சந்தேகப் பட்டான். பெண்களைத் துச்சமாய் மதிக்கும் குணமுடையவன் அவன். தாடகையைக் கொன்றவர், சூர்ப்பனகை மூக்கை அறுத்தவர், மண்டோதரியைப் புலம்ப வைத்தவர், சகோதரர் ராமலக்குவணர். சீதையின் கற்பில் சந்தேகம் கொண்டான் ராமன். தன்னைப் பிரிந்துவாழ்ந்த நாளின் கணக்குக் கேட்டான். தீயை மூட்டித் தாண்டச் சொன்னான். தாண்டிக் கற்பை நிரூபித்தும், பிள்ளைகள் பெற்றும், ராமனின் சந்தேகம் எனும் வியாதி தீர்ந்திருக்கவில்லை. அந்த வியாதி சீதையைக் காட்டில் விட்டது கடைசியில்.

தேசத்தின் இளவரசியாகப் பிறந்து, நாடெல்லாம் அலைக்கழிந்து, காடு வாழ்ந்து, கடுஞ்சொல் தாங்கி, மணாளனின் மதிப்பிழந்து, கர்ப்பகாலத்தில் காட்டில் விடப்பட்டு, அத்தனை துயரமும் கண்ட சீதையின் சோகத்தைப் பொறுக்காது, பூமி பிளந்து அவளைத் தன்னுள் எடுத்துக் கொண்டது.

***

பிஞ்ஞகன் இராவணன் கதைகளைச் சொல்லும் போதே தன்னிலை மறந்திருந்தான்.

அப்ப உந்த சீத்தா எலிய, இராவணன் வெட்டு, பெரிய இராவணன் கோட்டை சிறிய இராவணன் கோட்டை, கோணேசர் கோவில், இராவண எல்ல நீர்வீழ்ச்சி, கன்னியா உதெல்லாத்தையும் உருவாக்கினவன் வெவ்வேறு இராவணன் என்டுறாய்..”

ஆமடா, இராவணன் எண்டுறது ஒரு பட்டப்பெயர். காலம் தன் புகழை ஆவணப்படுத்திய அத்தனை ராவணனையும் ஒன்றாக்கி, அத்தனை பேரின் தலைகளையும், வலிமைகளையும் ஒருவனுக்கே ஏற்றியது. இராவணேஸ்வரன் என்கிற பெருமன்னன் அப்படித்தான் வரலாறுகளில் படைக்கப்பட்டான்..“

 “பொறு, பொறு, நீ சொல்வது போல் பார்த்தாலும் ஒன்பது இராவணன்தானே வருகிறது, இராவணனுக்குப் பத்துத் தலையல்லவா?”

அகண்ட இராவணன், ஆலகால இராவணன், இடைமருத இராவணன், ஈறிலா இராவணன், உருத்திர இராவணன், ஊழிநட இராவணன், எழுநீர இராவணன், ஏறேறி இராவணன், ஐந்திற இராவணன்... இத்தனை பேருமே நீண்டகாலம் முன்னர் வாழ்ந்தவர்கள். காலம் கடந்த புகழ் உடையவனுக்கு மட்டுமே ராவணன் என்கிற பெயர் வரும். அப்படி ஒரு பெயர் வரவேண்டும் என்றால், காலத்தைக் கடந்து ஒரு மன்னனின் பெயர் நிற்கவேண்டும். நாம் அறிந்த அண்மைக்கால வரலாற்று மன்னர்களின் பெயர்களில் எந்த மன்னனின் பெயர் காலம் கடந்து இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்து நிற்கப் போகிறதோ, அவனே அடுத்த ராவணன் - ஒளிர்மேனி ராவணன். விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்கிற கதையைப் போல, இந்தப் பத்தாவது ராவணனும், இதுவரை ஈழத்தை ஆண்ட மன்னர்களில் யார் என்று பார்க்கவேண்டுமானால், ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.”

அடுத்த இராவணன் யாராக இருக்கும் என சிந்திக்க தொடங்கினான் இக்கி. எல்லாளனோ - ராஜேந்திர சோழனோ - புவனேகபாகுவோ - யாரோ - கடைசிவரை ஒளிர்மேனி இராவணன் எனும் பத்தாவது இராவணன் தானாகவோ இல்லை பிஞ்ஞகனாகவோ இருக்கப் போவதில்லை எனும் புத்திசாலித்தனமான முடிவை மட்டும் எடுத்திருந்தான். கூடவே இன்னொரு குழப்பம்  அவனை  வாட்டிக் கொண்டிருந்தது. இராவணன்களின் பெயர்களோ தமிழின் உயிர்எழுத்து வரிசையில் அமைகிறதைப் பார்த்தால் ஒளிர்மேனி இராவணன் தான் கடைசியா..? இல்லை உயிர் எழுத்து முடிந்து உயிர்மெய் எழுத்தும் தொடருமோ..? சிந்தித்துக் கொண்டே பிஞ்சகனை நோக்கித் திரும்பினான் இக்கி. பிஞ்சகனின் கண்களோ வானத்தை நோக்க அவனது உடல் மெல்ல ஒளிர்விட ஆரம்பித்திருந்தது. 

Views: 833