சியாம்

எழுத்தாளர் : நீதுஜன் பாலாமின்னஞ்சல் முகவரி: neethujan@gmail.comBanner

“இத்தினை வருசம் கழிச்சு வந்தும் அம்மாட சாப்பாட்ட விட சியாம்கடை கொத்து உனக்கு முக்கியமாய் போச்சு என்ன?

அம்மாவின் அறம் பாடலையும் தள்ளிவிட்டு நான் சியாமின் சாப்பாட்டுக்கடைக்கு போவது சாப்பாட்டுக்காக அல்ல. சியாம் கடை எனக்கு சாப்பாட்டுக் கடை என்பதையும் தாண்டி நட்பானது. பல்கலைக்கழகம் போகும்வரை - கொழும்பின், காசு வாங்கிக்கொண்டு காலாவதியான ரொட்டி போடும் சாப்பாட்டுக் கடைகளுக்கு நாக்கையும் வயிற்றையும் அடைவு வைக்கும்வரை - எனக்கு மிதிவெடியும், சோடாவும், கொத்துரொட்டியும் போட்ட கடை. அந்தக் காலங்களில் ரியூசன் முடிந்ததும் சியாம் கடை போய் ஒரு வடையை எடுத்துக் கடிக்காமல் நான் வீடு போனதில்லை. கடையின் முதலாளி, அவர் பிள்ளைகள், வேலை செய்பவர்கள் எல்லோருமே எனக்கு நட்பானவர்கள். சிற்றுண்டிகள் வைத்திருக்கும் அலமாரியிலிருந்து யாரையும் கேட்காமலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, நானாகவே அதற்குரிய காசைக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அந்தக் கடையில் செல்வாக்கு இருந்தது. அந்த அதிகாரத்தை நண்பர்கள் முன் அடிக்கடிப் பயன்படுத்துவதில் எனக்கு ஒரு அற்ப பெருமிதம். அப்பா மல்லாகம் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும்போது அறிமுகமான அந்தக் கடை, ஏறத்தாழ ஒரு அங்கமாகவே மாறிப் போனது என் வாழ்க்கையின் விடலைப் பொழுதுகளில். மாலைகளில் பாடசாலை மைதானத்தில் விளையாடிவிட்டு, சியாம் கடையில் நண்பர்களுடன் கொத்துரொட்டி சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து அம்மா சமைத்து வைத்த சாப்பாட்டைப் புறக்கணித்து, அதற்காக அம்மாவிடம் ஏச்சு வாங்கியவாறே தூங்கப் போவது எனது இருபது இருபத்தொரு வயதுக் காலகட்டத்தின் அன்றாட நிகழ்வாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை, மல்லாகம் அரசாங்கத்துக்கே அந்த சியாம் கடைதான் சாப்பாடு போட்டது. கடை இருந்த இடம் மல்லாகம் சந்தி, வேறு சாப்பாட்டுக் கடைகள் அந்தப் பகுதியில் இல்லை, விலை மலிவு என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கடைக்கு எல்லோரும் போவதற்குக் காரணம் - சியாம்.

சியாம் அந்தக் கடையின் ரொட்டி மாஸ்டர். அந்தக் கடையின் ரொட்டி போடும் கிழவனின் பெயரில்தான் மல்லாகமே அந்தக் கடையை விளித்தது. மல்லாகம் என்ன, கடையின் முதலாளி கந்தசாமி அண்ணனே கடையைக் குறிப்பிடுவது அப்படித்தான். ‘ரிப் டொப் உணவகம் என்கிற அந்த விசித்திரமான பெயர் உலகத்துக்கு எடுபடவில்லை. கந்தசாமி கடை என்றும் அது அழைக்கப்படவில்லை. சியாம் கடை என்றால், இளவாலை முகாமில் வலைகள் காயவைத்திருக்கும் மணல் வீதியில் தவழ்ந்து மண் தின்னும் பச்சைக் குழந்தையும் வழி காட்டும். காட்டிவிட்டு, “அந்தக் கடைக் கொத்து மாதிரி ஒரு கொத்தை என்ட இத்தினை வருச வாழ்க்கையிலையே சாப்பிட்டதில்லை அண்ணை என்றும் சொல்லும். முதலாளியையே பின்னுக்குத் தள்ளிய அந்தப் பிரபலத்துக்குக் காரணம் சியாமின் கைப் பக்குவம். அவன் போடுகிற கொத்தும் சரி, ரொட்டியும் சரி, ஏன், டீயும் சரி, பிரபஞ்சத்தில் வேறு எவராலும் போடப்பட முடியாதது என்று பழம் பிள்ளையார் கோயில் வாசலில் கற்பூரம் அடித்துச் சத்தியம் பண்ணத் தயாராக ஆயிரம் பேர் உள்ளார்கள் நான் உட்பட.

“உவனை நம்பித்தான் தம்பி நான் கடை போட்டதே. என்பார் கந்தசாமி அண்ணை. இளம் வயதில் இவர் கொழும்பில் செர்வராக வேலை செய்த ஹோட்டலில் ரொட்டி மாஸ்டராக இருந்த சியாமுடன் பழக்கமானது முதல்  இடையில் ஒரு கலவரத்தின்போது ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட, மீண்டும் யாழ்ப்பாணம் ஓடி வந்தபோது போக வழி இல்லாது இருந்த அநாதை சியாமையும் அழைத்து வந்து, தன் மனைவி நகையை விற்றுத் தொடங்கிய கடைதான் இது என்பது வரையான அந்த நீண்ட வரலாற்றை கேட்காத ஆட்களில்லை தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில். “உந்தாள் இந்தக் கதையை சொல்லித்தான் கறிக்கு வாற ஆடுகளிண்ட கழுத்தையும் அறுக்கிறது போல.. என்பது கதை கேட்டுக் காதுரத்தம் கொடுத்தவர்களின் அனுமானம்.

 

சியாமுக்கும் கந்தசாமிக்கும் இடையிலான நட்பு, சியாமுக்கு கந்தசாமி மேலான மதிப்பு, கந்தசாமிக்கு சியாம் மேலான பரிவு.. இந்தப் பாசப் பிணைப்புத்தான் இந்தக் கடையை இத்தனை காலம் நடத்தி வருகிறது. தனது கடை சியாம் கடை என அழைக்கப்படுவதில் சிறிதும் பொறாமை இல்லை கந்தசாமிக்கு. இத்தனைக்கும் தொடக்க காலத்தில் ரொட்டியின் சுவையை சிலாகித்தவர்களுக்கு எல்லாம் சியாமை அறிமுகப்படுத்தி அவனின் புகழ் பரப்பியதும் இவர்தான். சியாம் கூச்ச சுபாவி. வெளியில் வருவதோ, யாருடனும் அதிகமாகப் பேசுவதோ இல்லை. ‘மேல்வீடு சுகமில்லை என்கிற கதையும் உலாவியது ஒரு காலத்தில். இந்த உலகத்துடன் பேசுவதற்கு ஒன்றுமில்லாதவனாக, அடுப்போடு மட்டுமே சொந்தம் கொண்டாடுபவனாக இருந்தான் அவன். தாய் தகப்பன், சொந்த இடம், வந்த விதம்.. இது எதுவும் தெரியாத சியாமைப் பற்றி கந்தசாமிக்குத் தெரிந்த ஒரே விடயம் அவன் ஒரு முஸ்லிம் என்பது மட்டும்தான். அது உலகத்துக்கே தெரிந்தது விடுதலைப்புலிகள் இனச் சுத்திகரிப்பு என்கிற பெயரில் முஸ்லிம்கள் அனைவரையும் யாழ்ப்பாணத்தை விட்டு அகற்றியபோதுதான்.

“இவன மட்டும் கலைச்சிருந்தா நான் மறுபடியும் ரோட்டுல பிச்சை தான் எடுத்திருக்கோனும் தம்பி.. என்று சொல்லுவார் கந்தசாமி. சியாமுக்கே தெரியாத அவனது அடிகுடிகளை எல்லாம் கிளறி, அவன் ஒரு முஸ்லிம் என்பதை கண்டுபிடித்து, அவனை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொடியள் வந்து கடை வாசலில் நின்றபோது கந்தசாமிக்கு கண்களே இருட்டத் தொடக்கி விட்டது. வந்தவர்களின் காலில் விழுந்து, அவன் முஸ்லிம் பழக்கம் எதையுமே பின்பற்றுவதில்லை, அவன் முஸ்லிம் என்பதை அவனே மறந்துவிட்டான் என்று சொல்லி, கதறிக் கூத்தாடி, அவனது அறையைக் காட்டி, இஸ்லாம் சம்பந்தப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்பதை நிரூபித்து, அவன் ஏதும் தவறுசெய்வானாகில் அவனை தானே வெட்டிப் போடுவதாக வாக்களித்து அவனை விடுவிக்க அவர் படாத பாடில்லை. கெட்டு ஒழியட்டும் என்று அவனைப் புலிகள் விட்டுப் போனதை இன்றைவரை பெருமையாகச் சொல்லுவார் கந்தசாமி.. “அண்டைக்கு யாழ்ப்பாணத்திலையே தங்கின ஒரே ஒரு முஸ்லிம் இவன்தான் தம்பி..

இத்தனை பெருமையும், வரலாறும் கொண்ட சியாம் கதைப்பதே இல்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்து விடுவான். சிரிப்பதோ, அழுவதோ கூட இல்லை. புலிகள் தன்னை விரட்ட வந்த வேளையில் கூட, கந்தசாமி அவர்கள் காலில் விழுந்து கதறிக் கொண்டிருந்த போதுகூட, அவன் ரொட்டிக்கு மாக்குழைத்துக்கொண்டிருந்தான். சலனம் இல்லாதவன்.  விடியற்காலையிளிருந்து நள்ளிரவுவரை மாடாய் உழைத்து, வேலை முடிந்ததும், தனக்காக கந்தசாமி கடைக்குப் பின்னால் கட்டிக் கொடுத்திருக்கும் கொட்டிலில் போய் படுத்துவிடுவான். சம்பளம் கேட்பதில்லை, சாப்பாடு கேட்பதில்லை, உடுதுண்டுகூடக் கேட்பதில்லை. கந்தசாமியும் கேட்குமளவு விட்டதில்லை. அவனுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார்.

நூற்றி அறுபது ரூபாயின் ஒரு கோழிக் கொத்துக்குப் பின்னால் இத்தனை கதைகளையும் கொண்ட சியாமின் கடைக்கு இரண்டு முழு வருடங்கள் கழித்துப் போகிறேன். பல்கலைக்கழகம் முடித்த கையேடு சிங்கப்பூரில் வேலை எடுத்துப் போய்விட்டேன். இடையில் ஒரே ஒருமுறை பட்டமளிப்புக்கு கொழும்பு வந்ததன் பிற்பாடு இப்போதுதான் யாழ்ப்பாணம் வரும் வாய்ப்புக் கிடைத்தது. வந்த உடனேயே எனக்கு மனதில் ஓடிய நினைவு இதுதான்.. சியாம் கடை.. நண்பர்கள், உறவுகள், பாடசாலை எல்லாம் தொடர்பிலேயே இருந்தன. பேஸ்புக்கோ, ஸ்கைப்போ கேவலம், ஒரு போனோ அந்தத் தொடர்பைத் தந்துவிடும். நாக்கின் தொடர்பு?

இரண்டு வருடம் கடையை சற்று மாற்றி இருந்தது. முதலாளி மேசையில் இருந்த கந்தசாமியின் மூன்றாம் மகன் என்னை அடையாளம் கண்டுவிட்டான். ஓடிவந்து - “வாங்கோ அண்ணை, அங்க இருக்கேக்க ஒரு கோல் கூடப் பண்ணேல்ல.. - உள்ளே இருத்தி ஒரு சோடாவை உடைத்தான்.

“கொப்பர் எங்க?

“இப்ப வருவார்.. எப்பிடி சுகம்?

“நமக்கென்ன.. அத விடு, சியாம் எங்க?

“அவருக்கு இப்பெல்லாம் ஏலாமப் போச்சு.. அடுப்பில நிக்கிற அளவுக்கு முடியுறேல்ல.. கொட்டிலுக்க இருந்து சமையல்காரருக்கு எல்லாம் சொல்லச் சொல்ல, மற்றாக்கள் செய்யுற மாதிரித்தான் இப்ப போகுது.. 

“ஆளைப் பார்க்கவோ?

“ஆளுக்குக் கொஞ்சம் அறளை பெயர்ந்துட்டு.. வெளி ஆக்களைப் பார்த்தால் கண்டபாட்டுக்கு ஏச்சு.. கண்டதையும் எறிவார்.. கடை ஆக்களோட மட்டும் தான் கதைக்கிறது... அதுவும் சமையல் அளவுகள், பதங்கள் சொல்லுறது மட்டும் தான்..

கதைத்துக்கொண்டு இருக்கும்போதே கந்தசாமி வந்தார்.

“அட தம்பி.. வந்துட்டீரே... இனி இஞ்ச தானோ?

“பார்க்கலாம்.. இனி வேலை இல்லை எண்டு அங்க இருந்து கலைச்சு விட்டுட்டாங்கள்... வேற இடம் பார்ப்பம்... அது சரி அண்ணை, சியாமுக்கு என்ன ஆச்சு?

“இவன் ஏதும் சொன்னவனே? அடேய், தம்பி வெளி ஆள் இல்லையடா.. அவருக்கு சொல்லலாம்.. சரி சரி தம்பி, பின்னால வாரும்..

கூட்டிக்கொண்டு போனார். ஒரு வடையை எடுத்துக் கடித்தபடி போனேன். சாப்பிடும் இடத்தைக் கடந்து டீ போடும் மேடை. சியாம் டீயை ஆற்றும் வேகம் பார்க்கவே டீ குடிக்க வருவதுண்டு சிலர்... அடுத்ததாக பார்சல் கட்டும் பகுதி... மல்லாகம் பள்ளிக்கூடத்தின் விழாக்கள், செத்த வீடுகள், பாட்டிகள் என்று தினம்தோறும் நூற்றுக்கணக்கில் பார்சல்கள் புறப்படும். எல்லாம் சியாம் மாயம். சியாம் கையால் போட்டால் மட்டும் ஓடர், இல்லாட்டி வேணாம்.. என்று குறிப்பிட்டுச் சொல்லிப் பார்சல் எடுப்பவர்களும் உண்டு.. சியாம் என்பது ஒரு சமையல்காரன் இல்லை... பண்டக்குறி. ஒரு பிராண்ட். கந்தசாமி கடையின் துருப்புச் சீட்டு. ஒவ்வொரு சாப்பாட்டிலும் சேரும் ஒரு வாசனைத் திரவியம் - சியாம் உடம்புக்கு முடியாது படுத்தான் என்று ஏதும் செய்தி மல்லாகத்தில் பரவினால் அடுத்த நான்கைந்து நாட்களுக்குக் கடையில் சன வரத்துப் பாதியாகி விடும் - அடுத்து சமைக்கும் பின்கட்டு.. அதைத் தாண்டி கடைக் கட்டடத்திலிருந்து தனியாக இருந்தது சியாமின் கொட்டில். சகல வசதிகளுடன் கந்தசாமி அமைத்துக் கொடுத்த மாளிகை...

“சியாம் எனக்குக் கடவுள் தம்பி... அவன் இல்லாட்டி இந்த பிசினஸ் இல்ல, கார் இல்ல, பெட்டைக்குக் கலியாணம் இல்லை, இந்த மூண்டு தறுதலைகளுக்கும் எதிர்காலம் இல்ல... கொழும்பில இருந்து ஓடி வரேக்க எனக்கு எந்தத் தொழிலும் படிவு இல்லை தம்பி.. எந்த வித்தையும் தெரியாது... எனக்கு இருந்த ஒரே ஒரு சொத்து இந்தச் சியாம் தான் தம்பி.. இத்தினிக்கும் அவன் என்னட்ட இருந்து ஒரு ஐஞ்சு சதம் சம்பளம் வேண்டினதில்ல.. அனாதையா இருந்த அவனுக்கு ஒரு உறவாய் இருந்ததை தவிர நான் வேற எதையும் செய்யேல்ல தம்பி..  ஆனா, என்ட கடைக்கு இத்தினை சனம் வாரத்துக்கு ஒரே காரணம் சியாம் தான் தம்பி.. அவன்ட பெயர் தான்.. அவன்தான் பிராண்ட்.. சியாம் இல்லாட்டி வியாபாரம் இல்லை தம்பி...

கதவைத் திறந்தார். “இந்த விஷயம் வெளில தெரிஞ்சா சனம் வரத்து கட்டாயம் குறையும் தம்பி.. முந்தி மாதிரி இல்லை என்று கதை வரும், வியாபாரம் படுக்கும் தம்பி.. வெளி ஆக்கள் ஒருத்தருக்கும் தெரியாது.. நீர் வெளி ஆள் இல்லை தம்பி.. அதுதான் உமக்கு மட்டும் சொல்லுறன்.. வெளில சொல்லிப் போடதையும்...

சியாமின் படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.. பாவித்த கட்டில், அலமாரி, உடுப்புகள் எல்லாம் அப்படியே இருந்தது..

“ஒருநாள் காலமை வழக்கமா விடியவே எழும்பி வேலைகளைத் தொடங்குறவனைக் காணேல்லையே என்று வந்து பார்த்தா கிழவன் கதை முடிஞ்சு கிடக்கிறான் தம்பி.. உழைச்சு உழைச்சுத் தேஞ்ச உடம்பு நல்ல சாவுல நித்திரையிலையே போய்ட்டான்..

அழத் தொடங்கினார். வாயிலிருந்த வடையின் சுவை குறையத் தொடங்கியது.

Views: 392