மிரட்டும் தஞ்சைப் பெருங்கோவில் மர்மங்கள்

எழுத்தாளர் : ந. கிருத்திகன்மின்னஞ்சல் முகவரி: nkiruthikan21@gmail.com



Banner

எம்மையும் மீறி ஒரு சக்தி எம்மை ஆட்டுவிக்கிறது என்ற தொனிப்பட, அந்த சக்தியினை கடவுள் எனும் பெயர் கொடுத்து இருப்பவர்கள் ஆத்திகர்கள். அந்த கருப்பொருளுக்கு தன்னம்பிக்கை எனும் பெயர் கொடுத்து அதன்படி வாழ்பவர்கள் நாத்திகர்கள். என்னைப் பொறுத்தவரையில் கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என்று சண்டை போடுவது முட்டாள்தனம். இருந்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனை தான் என்னுள் அதிகம். 

எம் அனைவருக்கும் நியூட்டனின் விதிகள் தெரியும். அதிகம் நியூட்டன் என்றதுமே புவியீர்ப்பு விசை என்றே சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்கு நான் எடுத்து கொள்வது நியூட்டனின் மூன்றாம் விதி. அதாவது எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்பது தான். பரிசோதனைகளில் சில இடங்களில் இந்த விதி சரியாக அமையாவிடினும், வாழ்கையில் நிச்சயம் ஒரு மனிதனை ஆட்டுவிக்கும் விடயமாக இது இருக்கும். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அது தான் உங்களை வந்து சேரும் என்பது தான் இதன் சாராம்சம். 

தஞ்சையின் பெருமைகள் எண்ணிலடங்காதவை. உண்மையிலேயே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அதன் கலைச் சிற்பங்கள் அமைந்தது இதற்கான பிரதான காரணியாக இருந்தது. இதனைக் கட்டுவித்த இராஜ ராஜ சோழன், கலைகளிலே அதி இரசனை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். ஒரு சாதாரண கோவிலைக் கட்டுவதென்பதே பெரும்புண்ணியம். இதில் மன்னன் கட்டியதோ மகா கோவில். இராஜ ராஜ சோழன் சைவத்திற்கு செய்த பெரும் தொண்டாகவே இதனைச் சைவ ஆர்வலர்கள் கருதுகின்றனர். சோழ இராச்சியத்தில் தான் சைவம் நிலைநிறுத்தப்பட்டது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. 

இந்தக் கோவிலிலுள்ள லிங்கம் அதிநீளமுடையது. இந்த லிங்கத்திற்கு அதிக சக்தி உள்ளது என பலர் நம்புகின்றனர். இந்த கோவிலில் உள்ள கலைவடிவங்கள், சிற்பங்கள்  என்பனவற்றை எவ்வாறு இவ்வளவு நேர்த்தியாக, எந்தவொரு குறையும் இல்லாமல் அன்றைய நாட்களில் சிற்பிகள் எவ்வாறு செதுக்கினர் என்று தான் ஆச்சரியமூட்டுகிறது. இவ்வளவு தூரம் கடவுளிற்காக பாடுபட்ட இராஜ ராஜ சோழனுக்கு உண்மையில் கடவுள் எவ்வளவு அனுக்கிரகம் கொடுத்திருக்க வேண்டும், சிவபக்தனை சிவன் ஆட்கொண்டிருப்பார் என்று எத்தனயோ கேள்விகள் என்னுள் எழுந்து பலரோடு இதனைப் பற்றி ஆராய்ந்தேன். பலர் அவனது பிற்கால வாழ்க்கையைப் பற்றி ஆராயவில்லை.  

தஞ்சைப் பெருங்கோவிலுக்குள் சென்ற அரசியல்வாதிகளுக்கு என்ன நடந்தது என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தஞ்சையின் சிறப்புக்களை ஆராய்ந்த எமது சைவ வரலாற்றாசிரியர்கள், அதன் ஒரு மர்மப் பக்கத்தினை தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஆராய மறந்துவிட்டனர் போலும். பிரபலங்கள் தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் வந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ அவர்களிற்கு ஆபத்து நிச்சயம் எனும் ஒரு பிரமை ஓடிக்கொண்டிருக்கிறது எல்லோர் மனதிலும்.

எந்த ஒரு பிரபல நபர் அல்லது உயர் பதவி வகிப்பவரும், தஞ்சைப் பெரிய கோயிலின் கேரளாந்தகன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், அவருக்கு தீமை நடக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை அக் கோயிலைச் சுற்றிச் சுற்றி உலாவுகின்றது. பல்வேறு கதைகளும் நிகழ்வுகளும் அந்த நம்பிக்கைக்கு உயிரூட்டுகின்றன. ஆனால் கேரளாந்தகன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றவர்களுக்கு மட்டும் தான் இந்த நிலையா என்று நோக்கினால், 'இல்லை! தஞ்சைப் பெரிய கோயிலுடன் எந்த வகையிலாயினும் தொடர்புபடும் பெரும்புள்ளி எவருக்கும் இதே நிலை தான்!' என்கிறது கடந்த கால வரலாறு.

அறுபதுகளில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலில் இராஜ ராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசைக் கோரினார். இக் கோரிக்கை மூலமாக அக்காலத்தில் பெரிய சர்ச்சை உருவானது. இராஜ ராஜ சோழன் சிலையை கோயிலின் வளாகத்திற்கு உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. 'தஞ்சைப் பெரிய கோயிலானது, நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் ஒரு கலைக் கோயில். புதிதாக சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் இடம் இல்லை' என்று இந்திய மத்திய அரசு காரணம் கூறியது.

இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், தஞ்சைக் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்குப் புதிய மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே வராஹி அம்மன் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. வராஹி அம்மனுக்கும் புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்கு குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள்.

 'இராஜ ராஜன் சிலையினை புதிதாக உருவாக்கி கொண்டு போய் கோயில் வளாகத்தின் உள்ளே வைக்கக் கூடாது என்றால், வராஹி அம்மனுக்கு மட்டும் எவ்வாறு புதிதாக மண்டபம் கட்ட முடியும்? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?' என்று கருணாநிதி தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இந்தக் கேள்வி எழுப்பிய சர்ச்சையின் காரணமாக வராஹி அம்மனுக்காக புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தை இடிக்கும்படி இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்தப் பிரச்சினை நடந்த சிறிது காலத்திற்குள் அன்றைய கருணாநிதி அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சியானது, நீக்கம் செய்யப்பட்டது. இங்கு ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தஞ்சை பெரிய கோயிலினுள், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த அக்காலத்தில், அவருடைய உத்தரவின் பேரில் இந்திய மத்திய அரசு  'எமர்ஜென்ஸி' என்று சொல்லப்படும் அவசர காலச் சட்டத்தை அமுற்படுத்தியது.  எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் தோல்வி அடைந்தார். அவரது ஆட்சியும் fiye;jJ. பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு பெரும் அரசியல் தலைவர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டது தான் இந்த மர்மம் குறித்த பயம் மக்கள் மத்தியில் விரைவாகப் பரவியதற்கான தொடக்கப்புள்ளி.
தொடக்கப் புள்ளியைத் தொடர்ந்து, வரலாறில் வந்து சேர்ந்த தொடரும் புள்ளிகளால், இந்த மர்ம நம்பிக்கையையும் அது பற்றிய தகவல்களும் எங்கும் பரவியது. 1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதலமைச்சராக இருந்த காலத்தில் ராஜராஜ சோழன் சிலைக்கான முடிசூட்டு விழா தஞ்சையில் நடந்தது. இது சக்கரவர்த்தியாக உலகாண்ட இராஜராஜ சோழனின் ஆயிரம் ஆண்டு பூர்த்தி விழா என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. 

பெரிய கோவிலில் ஆண்டு தோறும் இராஜராஜனின் பிறந்த நட்சத்திரமாக சொல்லப்படும் சதயத்தில், சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பார்த்தால் ராஜ ராஜ சோழனுக்கு 998 - வது சதய விழாதான் அப்போது கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது. அரசியல் காரணத்திற்காகவோ அல்லது வேறு என்ன காரணத்திற்காகவோ, 998 -வது பிறந்த நாள் என்பதைக் கண்டு கொள்ளாமல், இந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில், ராஜ ராஜ சோழன் செப்புச் சிலையை அலங்கரித்து எடுத்துச் சென்று முடிசூட்டு விழா நடத்த வேண்டும் என்பது முதல் ஏற்பாடாக இருந்தது. ஆனால் கோயில் அந்தணர்கள் இதற்குச் சற்றும் உடன்படவில்லை.  'இராஜ ராஜ சோழனின் செப்புச் சிலை, ஆலயங்களில் உள்ள நாயன்மார்களின் செப்புச் சிலைகளுக்குத் தரப்படும் பக்தி மரியாதைகளுடன் தினமும் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது. அதை இவ்வாறு பொதுக்கூட்டங்களுக்கு எடுத்துச் சென்று வைப்பது என்பது சரியல்ல' என்று அந்தணர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், ஆலய சந்நிதியிலேயே முடிசூட்டு வைபவத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி தனது கையால் முடிசூட்டுவது என்று செய்யப்பட்ட ஏற்பாட்டையும் ஆலயத்தைச் சேர்ந்த அந்தணர்கள் முதலில் ஏற்கவில்லை. ஆனால் பிறகு பேசாமல் இருந்துவிட்டார்கள்.

இந்த முடிசூட்டு வைபவத்தில் பங்கு கொள்வதற்காக வரும்போதுதான் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தஞ்சைப் பெரிய கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார் என்று சொல்லப்படுகின்றது. அதன் பிறகு சில நாட்களில்  எம்.ஜி.ஆரின்  உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கொஞ்ச நாட்கள் நோயினால் பீடிக்கப்பட்டு அப்படியே உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து எவருமே எதிர்பார்க்காத  விதமாக பாரதப் பிரதமராக இந்திரா காந்தியின் விபரீத மரணமும் நிகழ்ந்தது.  அவர் பிரதமராக இருக்கும் போதே தனது மெய்ப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திரா காந்தி இறந்தமைக்கு சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான பொற்கோவிலுக்குள் 'ஒப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' எனும் இராணுவ நடவடிக்கைத் திட்டத்தைச் செயற்படுத்தியமையே  முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனாலும் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகள் தஞ்சையின் இந்த மர்மத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் நடுங்கச் செய்துவிட்டன. 

வருடம்தோறும் தஞ்சைக் கோயிலில் நடக்கும் சதயத் திருவிழா குறித்த அந்த ஆண்டு நடக்காமல் போய்விட்டது. ஆயிரம் ஆண்டு விழா என்று சொல்லி விட்டு, 998 வது பிறந்த நாள் விழா எப்படிக் கொண்டாடுவது என்ற தயக்கம் மட்டும் அதற்குக் காரணமல்ல. அந்த சதய விழாவை விரும்பினாலும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இராஜராஜ சோழனின் சதய விழா நடக்க வேண்டிய அன்றுதான் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இறுதியாத்திரை நடைபெற்ற நாளாக அமைந்தாகச் சொல்லப்படுகின்றது. 

இராஜராஜ சோழன் கட்டுவித்த இந்தத் தஞ்சை பெரிய கோவிலுக்கு முக்கிய நபர்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும் என, பல கருத்துக்கள் நிலவுவதால். தஞ்சைக்கு வரும் பெருமளவிலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை இன்றும் தவிர்த்த வண்ணம் உள்ளனர். இக் கோயிலின் மர்ம சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் என பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாக்கி, ஒரு பட்டியலையே போட்டுக் காண்பிக்கின்றனர் தஞ்சையின் மர்மங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். 

'பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய சிவலிங்கத்திற்கு பலவித சக்திகள் ஏற்றப்பட்டுள்ளன. ஆனால், அந்த சக்தியை சரியானபடி பூட்டி வைக்கவில்லை. அதனால் சக்தி வீண்
ஆகின்றது. அதனால்தான் தஞ்சை பெரியகோயிலுக்குள் சென்றால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இதேபோன்றுதான் சக்தியைப் பூட்டி வைக்காமல் விட்டிருக்கிறார்கள். உரிய பரிகாரங்களும் பூஜைகளும் செய்து இந்த சக்தியைப் பூட்டிவைக்க முடியும். ஆனால், தற்போதுள்ள சமூக அமைப்பு அதற்கு அனுமதிப்பதில்லை' என்கிறார்கள் கோயில் சாஸ்திரம் அறிந்தவர்கள்.

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 45க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது விபத்து நடந்த யாக சாலையைக் காண்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும் தஞ்சை வந்த பல முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியைத் தவிர்த்தனர். அவர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியே செல்லாமல் பக்கவாட்டில் உள்ள 'சிவகங்கைப் பூங்கா' வாயில் வழியாகச் சென்றனர். இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இந்தத் தீ விபத்து சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் பெரும் தூணாக விளங்கிய தலைவர் ஜி.கே.மூப்பனாரும் பிரதான வாயிலான கேரளாந்தகன் திருவாயிலை தவிர்த்துக் கொண்டார்.

இது போலவே கருணாநிதி தஞ்சையில் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வொன்றிற்கும் கேரளாந்தகன் வாயில் வழியே செல்லாமல், வேறு வாசலால் சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, 'தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா' நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், முன்பு போல சிவகங்கை பூங்கா வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் 'சென்டிமென்டுக்கு' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர். அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசிச் சென்றார்.

அவ்வாறு பேசிச் சென்ற ராஜா, '2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கி, பதவி இழந்து, கைதாகி டில்லி திகார் சிறையில் சிக்கித் தவித்தார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், கூட்டணியாக இருந்த காங்கிரஸ், - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்தது. கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என சிக்கலான நிலமைகள் ஏற்பட்டன. அவை பெரிய கோவில் மர்ம சக்தியின் வல்லபத்தை மீண்டும் நிரூபித்துள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது.
கடந்த தமிழகத் தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியது என்கின்றார்கள் இந்த விடயம் பற்றி தொடர்ந்து அவதானிக்கும் நபர்கள். அதேவேளை, அண்மையில் இறந்த தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா  அந்தக் கோவிலுக்குள், எந்த வாசலாலும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இராஜ ராஜனின் ஆன்ம குருவாக அறியப்படுகின்ற கருவூர்ச் சித்தரின் ஆலோசனைக்கு இணங்கவே அவன் இக் கோயிலைக் கட்டும் பணியைத் தொடங்கினான் என்றும், ஆனால் அக்கோயில் கருவூர்ச் சித்தர் வகுத்த முறைக்கு அமைய நடத்தப்படாமல், பண்டிதர்களின் விருப்பத்திற்கேற்ப நடந்தமையால் இக் கோயில் சித்தர் சாபம் பெற்றது எனவும் கதைகள் சொல்கின்றன. இராஜ ராஜன் வைதீகப் பண்டிதர்களுக்கு அதிகளவில் நிலங்களையும் சொத்துக்களையும் தானமளித்து இருக்கின்றமையை நாம் சரித்திரத்தின் பக்கங்களில் காணலாம். என்றும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் ஆன்ம ஈடேற்றத்தை முதன்மையாகக் கருதி வந்த சித்தர்களுக்கு பண்டிதர்களின் வெற்றுச் சடங்குகள் பிடிக்காமற் போயிருத்தல் இயல்பே.

கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி செய்த முதலாம் ராஜராஜசோழனால் 1010ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சை பெரியகோயில், அந்த மன்னன் பெயராலேயே ராஜராஜேஸ்வரம் என அழைக்கப்பட்டது. 29 ஆண்டுகள் பேரரசனாக ஆட்சி செய்த ராஜராஜன் தனது 25-வது ஆண்டு ஆட்சியின்போது இக்கோயிலைக் கட்டி முடித்து குடமுழுக்குச் செய்தான். பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அவன் உயிரோடு இருந்து ஆட்சி செய்தது வெறும் 4 ஆண்டுகளே. 

மொத்தமாக 29 வருடங்கள் இராஜா ராஜா சோழன் இராச்சியத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. தனது ஆட்சியின் 25வது வருடத்தில் இந்த கோவிலின் வேலைகளை முடித்துள்ளான். அதற்கு முன் ஈழம், முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் ஆகியவற்றைத் தன் வலிமைமிகுந்த கடற்படையால் வெற்றிகொண்டான். கலிங்கம், மைசூர், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போர்களிலும் பெருவெற்றி பெற்றிருந்தான். இந்த போர்களின் பின் தான் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். ஒரு வேளை இந்த கோவிலைக் கட்டுவதற்கு போர்களில் பிடிபட்ட கைதிகளை அடிமைகளாக்கி தான் இந்த மாபெரும் கட்டுமானத்தை உருவாக்கியிருக்க வேண்டும். கோவிலைக் கட்டி முடித்து, சரியாக நான்கு ஆண்டுகளில் இராஜா ராஜா சோழன் மரணித்துள்ளான். இரண்டு ஆண்டுகள் முடிவின் போதே இராஜேந்திர சோழனுக்கு முடி சூட்டு விழாவினை நடாத்தியிருக்கிறான். அவனது மரணம் தற்கொலை என அறியப்படுகிறது. அவன் தனது இறுதி நேரத்தில் பித்துப் பிடித்தவன் போல அலைந்திருக்கிறான். இங்கே தான் அந்த சூழ்வினை ஆக்கிரமித்துள்ளது. அந்த போர்களில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்?? எத்தனை கொலைகள் கற்பழிப்புக்கள் சூறையாடல்கள் நடந்திருக்கும்??? எத்தனை பேரின் சாபங்கள் அடங்கியிருக்கும்??? அத்தனையையும் போக்க கோவில் கட்டலாம் என்று இராஜ ராஜ சோழன் நினைத்திருப்பார் போலும். செய்த பாவங்களிற்கு பரிகாரமாக ஒரு கோவில் கட்டி தீர்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கும். இதனை தான் நான் முதலே சொன்னேன் நியூட்டனின் மூன்றாம் விதி என்று. நாம் என்ன செய்கிறோமோ, அது தான் மீண்டும் எம்மை வந்து சேரும்.

அதே போல தான், உண்மையில் அரசியல் வாதிகள் அல்லது பிரபலங்கள் தஞ்சைக் கோவிலுக்குள் சென்றால் ஏதும் நடக்கும் என்றதொரு பிரமை இருப்பது ஒரு விதத்தில் நல்லது தான். அப்படியே, கட்டாயம் ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் கோவிலுக்கு சென்றால் தொடர்ந்தும் நல்லாட்சியில் இருக்கலாம் என்ற கருத்தொன்று எப்பொழுது நம்பப்படுகிறதோ அன்று தான் தமிழ்நாட்டில், ஊழலில்லாத, மக்களுக்காக உழைக்கும் அரசாங்கத்தினை உருவாக்கலாம்.       
Views: 1684