கைலாசபதியும் சமூகவியலும்

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.comBanner

ஒரு சம்பாஷணையூடாக இந்தக் கட்டுரையினை ஆரம்பிக்கிறேன். எனக்கும் என் நண்பருக்கும் இடையிலான உரையாடல் இது. நான் கைலாசபதி தொடர்பாக இம்முறை உவங்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர், எந்தக் கைலாசபதி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்குத் தெரிந்த வரை கைலாசபதி என்றால் அது பேராசிரியர் க. கைலாசபதி மட்டும் தானே. ஏன் இவ்வாறு கேட்கிறாள் என்று யோசித்தவாறே, யாழ் பல்கலைக்கழகத்திலே மண்டபம் அமைத்துள்ளார்களே அந்தக் கைலாசபதி என்றேன் நான். அதற்கு அவள், ஓ அவரா!! மண்டபம் அமைத்துள்ளார்கள் என்று தெரியும். ஆனால் எதற்கு, ஏன் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். ஆனால் என்னுள் தான் பல வினாக்களை அது எழுப்பிற்று.

ஆக இதிலிருந்து ஒன்று தெரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகில் பல கைலாசபதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தமிழ்ச் சேவையும் இடம்பெற்றிருக்கின்றது. கைலாசபதி தொடர்பான தேடலில் ஈடுபட்ட போது பொ.கைலாசபதி தொடர்பான தகவலும் கொசுறாகக்; கிடைத்தது. ஈழத்து இலக்கியம் பயின்றவர்கள், தமிழ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பேராசிரியர் கைலாசபதி என்கின்ற போது பேராசிரியர். க. கைலாசபதி தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால், சாதாரண மக்களுக்கும், வேறுதுறைகளிலே ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கைலாசபதி என்கின்ற போது எந்தக் கைலாசபதி என்ற குழப்பநிலை தோன்றுவது தவிர்க்க இயலாதது. எனவே, யார் இந்தக் கைலாசபதி? அப்படி என்ன செய்துவிட்டார் தமிழ் உலகுக்கு? என்ற வினாவை எழுப்புவோருக்கு அறிமுகம் தேவையற்றவரான பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதியின் அறிமுகம் அவசியம் தேவையானதே.

அத்துடன் பேராசிரியர் கைலாசபதி தொடர்பாக இப்பொழுது எழுதுவதற்குத் தேவை என்ன உள்ளது என எண்ணுவோருக்குச் சரியான பதில் 'வரலாறு மிக முக்கியம் மக்காள்' என்பதே. நாம் வந்த பாதை நமக்குச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய சந்ததியினர் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தின் காரணத்தால் ஈழத்து இலக்கியப் போக்கினையே சமூக ஊடகத்தினூடாகத் தவறாகப் பயன்படுத்தும் தன்மைகளைத் தான் அதிகம் காண்கின்றோம். எனவே கோயிலின் அத்திவாரத்தைச் சரியாகப் போட்டால் தான் கோபுரம் அழகாகத் தெரியும். அந்த அடிப்படையை, மூலாதாரத்தை நமக்கு வழங்கிய முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்வது தமிழினதும் தமிழ்ச்சமூகத்தினதும் வளர்ச்சியை அளவிடவும் நாம் சரியான பாதையில் செல்வதற்கும் வாய்ப்பாக அமையும். 

பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். தன்னை முன்னிறுத்தி ஈழத்தில் இலக்கிய பரம்பரையொன்றினை உருவாக்கிய கெட்டிக்காரர். திறனாய்வு சம்பந்தமான பேச்சுக்களே தமிழுக்கு இழுக்கு என பாரம்பரிய தமிழ் விற்பன்னர்கள் எண்ணிக் கொண்டிருந்தவேளை, திறனாய்வில் உச்சநிலை கண்டவர். 

தனக்கேற்றதுறை எது எனக் கண்டு கொள்வதில் தான் ஒவ்வொரு கலைஞனதும் வெற்றியும் நிலைபேற்றுத் தன்மையும் தங்கியுள்ளது. அந்த வகையில் கைலாசபதி தனக்குள் பல் திறமை கொண்ட மிகச் சிறந்த படைப்பாளியாக இருபதாம்; நூற்றாண்டுகளில் திகழ்ந்த போதிலும் தனக்கேற்றதுறை திறனாய்வே எனத் தெரிந்து திறனாய்வு என்றாலே கைலாசபதி என்று தமிழுலகில் அழியாப் புகழடைந்தார். சிறந்த பேச்சாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், போதனாசிரியர், நாடக நடிகர், நவீன இலக்கியகர்த்தா (நாவல், சிறுகதை. கவிதை, நாடகம் எழுத்தாளர்), திறனாய்வாளர், ஒப்பியலறிஞர் போன்ற பல்திறன் கொண்ட இலக்கியவாதி கைலாசபதி. 

இப்படியாகக் பேராசிரியர் கைலாசபதியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் ஒரு கடல். அதனை அளந்து கூறுவதென்பது இயற்கைக்கு முரணானது. அவ்வாறே கைலாசபதியின் இலக்கியப் பணியினை வரையறுத்துக் கூறுவதுமாகும். தமிழ் உள்ளகாலம் வரைக்கும் கைலாசபதியும் அவர் தம் தமிழ்த் தொண்டும் நின்று நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். எனவே தான் இக்கட்டுரை, பேராசிரியர் கைலாசபதியின் சமூகவியல் பார்வையினையும் அவருடைய இலக்கியங்கள் எவ்வாறு சமூகத்தைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன என்பது தொடர்பாகவும் ஆராயவுள்ளது. 

பேராசிரியர் சு. வித்தியானந்தரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்து பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்து முதலாவது தலைமையாசிரியராகப் பதவியேற்று அது பின்னர் பல்கலைக்கழகமாக உயர்வதற்கு முன்னின்று உழைத்த பெருந்தலைவர். ஒரு மனிதன்; பிறப்பது வேண்டுமானால் சாதாரண நிகழ்வாக இருக்கலாம் ஆனால் இறப்பது சரித்திரமாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில்; அப்படிப்பட்ட சரித்திரத்தை உருவாக்கிய வரலாற்று நாயகன் பேராசிரியர் கைலாசபதி. பொதுவாக இலக்கிய கர்த்தாக்கள் இறந்த பின்னர் தான் உலகம் அவர்களைக் கொண்டாடும். சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை அதற்குச் சிறந்த உதாரணம். ஆனால் கைலாசபதி தமிழுக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கின்ற போதே மக்களாலும் கலைஞர்களாலும் ஆராதிக்கப்பட்டவர். 

கைலாசபதியின் வாழ்க்கைக் குறிப்புக்கள் அடங்கிய முழுமையான நூல் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றி அவரது ஆசிரியர்களும், மாணவர்களும், சகபாடிகளும், கலைஞர்களும் எழுதிய கட்டுரைகளினை ஆதாரமாகக் கொண்டு அவரின் ஆரம்ப வாழ்க்கை, இலக்கிய பயணம், சமூக சிந்தனையினூடான இலக்கிய பங்களிப்பு என்பவற்றை அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. வெறுமனே இலக்கியங்களைப் படைத்துத் தரப்படுத்தலையும் ஜனரஞ்சகத்தையும் வெளிப்படுத்தும் ஜனரஞ்சகவாதியாக மட்டும் தன்னைக் காட்டிக் கொள்ள  விரும்பாது தனது இலக்கியம், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

பேராசிரியர் கைலாசபதியினால் எழுதப்பட்ட நூல் வரிசை பின்வருமாறு: 

இரு மகாகவிகள், பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது), இலக்கியமும் திறனாய்வும், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும் (அவர் மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து எழுதியது), சமூகவியலும் இலக்கியமும், திறனாய்வுப் பிரச்சினைகள், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் என்பன பேராசிரியரால் தமிழில் எழுதப்பட்டன. 

தமிழ் ஹீரோயிக் பொயற்றி (Tamil Heroic poetry) , த ரிலேசன் ஒவ் தமிழ் அன்ற் வெஸ்டேன் லிற்றேஜர் (the relation of Tamil and western literature), ஒன் ஆர்ட் அன்ட் லிற்றேஜர் (On Art and literature), (on barathi) போன்ற நூல்கள் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. எனினும் அவரின் பல இலக்கியங்கள் அவர் அமரத்துவம் அடைந்த பின்னர் தொகுக்கப்பட்டவையாதலால் இலக்கியங்கள் தோற்றம் பெற்ற சரியான காலவரையறையினை மேற்கொள்வது இயலாததாகின்றது. 

முன்னுரைகள் மாத்திரம் நாற்பத்தி மூன்றுக்கு மேல் எழுதியுள்ளார். பத்திரிகைக்கும், இதழ்களுக்கும், சஞ்சிகைக்கும் எழுதிய பல கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் உள்ளன. இவை அனைத்துமே அவரது காலத்திலும் காலத்தைக் கடந்தும் சமூகத்தில் பெரும் புரட்சியினை ஏற்படுத்துவனவாய் அமைந்துள்ளன என்பது மனங் கொள்ளத்தக்கது.

இலங்கை, பிரிட்டிசாரின் காலனியாதிக்கத்தின் கீழிருந்த காலப்பகுதியில் ஆங்கில மோகம் உச்சந் தொட்டிருந்த காலத்திலும்  தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று அதில் முதல் தரத் தேர்ச்சி பெறுவதென்பது மிகப் பெரிய சாதனையே. அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் கைலாசபதி அவர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதே வாழ்நாள் சாதனையாக இன்றும் இலங்கையிலுள்ள இளைஞர்கள் குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கைலாசபதி, ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து வந்து, இலங்கையில் இருந்து கொண்டே தன் வாழ்நாளெல்லாம் சேவையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புலமை கொண்டவராக விளங்கிய கைலாசபதி, தன்னுடன் இணையும் நட்பு வட்டாரத்தையும் அவர்களுக்கே உரித்தான தனித்திறமையை வளர்ப்பதில் அவர்களுக்கு உற்ற துணையாக ஊக்குவிப்பாளராகவும், சிறந்த படிக்கல்லாகவும் திகழ்ந்துள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே.

1933ம் ஆண்டு சித்திரை மாதம் ஐந்தாம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியைக் கோலாலம்பூர் விக்டோரியா இன்ஸ்டிடியூட்டிலும், இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கற்றார். இங்கு கற்குங்காலை மாக்ஸியவாதியான ஆசிரியர் மு. கார்த்திகேசனின் தொடர்பு கிடைத்ததுடன், பொதுவுடைமைவாதியாகக் கைலாசபதி மிளிர்வதற்கு இவரின் தொடர்பும், அவரின் பாசறையில் கல்வி கற்றமையுமே அடிப்படையாக அமைந்தன.
  
பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது உயர்கல்வியைக் கற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியதுடன் அங்கு தமிழ்ப் பாடத்தைத் தனது சிறப்புத்துறையாகத் தெரிவு செய்து அதில் முதலாம் தரத்தில் சித்தியும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற வேளையில், பேராசிரியரி. சு. வித்தியானந்தர், பேராசிரியர். வி. செல்வநாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்ற ஈழத்தின் புகழ்பூத்த பேராசிரியர்களைத் தனது குருவாகக் கைவரப் பெற்றவர். அப்பல்கலைக்கழகத்தின் இளங்கதிர் சஞ்சிகைக்கு அவர் எழுதிய 'நாடும் நாயன்மாரும்' என்ற கட்டுரையின் மூலம் சிறந்த ஆய்வாளராகத் தமிழுலகில் தன்னை வெளிப்படுத்தினார்.

பல்கலைக்கழகக் கல்வியை முடித்த கையுடன் லேக்கவுஸ் பத்திரிகையான தினகரனில் (அரச பத்திரிகை) உதவி ஆசிரியராக இணைந்து பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பத்திரிகைத்துறைக்கும் அக்கால இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றினார். தினகரன் பத்திரிகையில் அவர் பணிபுரிந்த காலப்பகுதி பத்திரிகை வரலாற்றின் சொர்க்ககாலம் என வர்ணிக்கப்படுகின்றது. 

அதன் பின்னர், மறுபடியும் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். ஆனால் இம்முறை மாணவராக அல்ல, உதவி விரிவுரையாளராக. அதன் பின்னர் விரிவுரையாளராகி, புலமைப்பரிசில் பெற்று இங்கிலாந்தில் பேமிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பினை மேற்கொண்டார். அங்கு கைலாசபதியின் ஆய்வுக்கான மேற்பார்வையாளராக இருந்த பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சன் கார்ல்மாக்ஸின் சீடராக மிளிர்ந்தவர். அவரின் உறுதுணையுடன் ஏலவே பொதுவுடைமைத் தத்துவம் விதைக்கப்பட்ட கைலாசபதி சமூகவியலின் மாக்ஸியச் சிந்தனைகளில் மூழ்கித்திளைத்து மாக்ஸியவாதியானார். 

திறனாய்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கைலாசபதி தனது கலாநிதிப்பட்ட ஆய்வுக்காகத் தெரிவு செய்த துறை எதுவெனத் தெரியுமா? அது ஒப்பியல் இலக்கிய நோக்கு. அவர் சங்கத் தமிழ்ப்பாடல்களை கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் ஒப்பு நோக்கி தனது முனைவர்பட்ட  ஆய்வை மேற்கொண்டார். அவரின் ஆய்வு 1968ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் தமிழ் ஹீரோயிக் பொயற்றி (Tamil Heroic Poetry) தமிழ் வீரயுகக்கவிதைகள் என்ற நூலாக வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. 

அங்கிருந்து மீண்டும் இலங்கை வந்தவருக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் கிடைத்து, அங்கே தமிழ்த்துறைத் தலைவராகக் கடமைப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்தியாலங்கார வளாகத்தின் இந்து நாகரீகத்துறை தலைவர் பதவி வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இருந்த போதே வெளியிடங்களில் கலை கலாசார நிறுவனத்தொடர்புகளையும் பேணிக் கொண்டார். அதன் பயனாக பல்வேறு சபைகளுக்கும், திணைக்களங்களிலும் முக்கிய பொறுப்பேற்றுக் ஈழத்தின் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய  வளர்ச்சிக்கும் உந்துதலாக மிளிர்ந்தார். அமெரிக்காவின் கலிபோர்ணியப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்
.
இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் வளாகம் ஒன்றை ஆரம்பித்த போது அதன் தலைவராகவும் தமிழ்ப்பேராசிரியராகவும் கைலாசபதியவர்கள் கடமை புரிந்தார். ஆமலே குறிப்பிட்டது போன்று, இந்த வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்று இன்று தலை நிமிர்ந்து சிறப்பிடம் பெறுவதற்குப் பேராசிரியர் கைலாசபதியின் பெரும் பணி ஈழத்து வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. அப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியாவும் அவர் செயற்பட்டுள்ளார். 

இது பேராசிரியர் கைலாசபதியின் வாழ்க்கை வரலாற்றின் பரந்து கிடக்கும் இலக்கியப் பணிகளின் சிறு அறிமுகம் மாத்திரமே. இங்கு அவரின் குடும்பப் பின்னணி பற்றியும் குறிப்பிடுவது சாலப்பொருந்தும். ஏனெனில் கைலாசபதியின் ஒவ்வொரு வெளியீடுகளிலும் அவரின் மனைவியின் உறுதியும் உறுதுணையும் வெளிப்பட்டு நிற்குமாற்றைக் காணலாம். 'மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும்' என்ற நூலைத் தன் மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து ஆய்வுரையாக வெளியிட்டுள்ளார். சர்வமங்களம் அவரின் சர்வமாகத் திகழ்ந்தார் என்பது கைலாசபதியின் சமகாலத்தவரின் ஆணித்தரமான கருத்தாகும். இவர்களுக்கு சுமங்களா, பவித்ரா என்ற இரு மகள்மார் உள்ளனர்.
 
இவ்வாறாக இலக்கிய வாழ்க்கையினைச் சிறப்புற மேற்கொண்ட கைலாசபதியவர்கள், குடும்பப் பின்னணியிலும் மேன்மையான வாழ்க்கை வாழ்ந்து தனது எழுத்துக்கள் மாத்திரமல்ல. இயல்பு வாழ்வும் கூட சமூகவியல் தளத்தினைப் பின்னணியைக் கொண்டதாக அமைத்துள்ள பாங்கைக் காணலாம். 1982ம் ஆண்டு இவ்வுலகை விட்டு அமரத்துவமடைந்த வேளை தமிழ் இலக்கிய உலகே தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்திருந்த தன்மையினை அக்கால இலக்கியங்களுடாக அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. அத்தகு பேராசிரியர் கைலாசபதியின் வரலாற்றினை கைப்பிடிக்குள் அடக்கி விட முடியாது.  

தமிழ் இலக்கிய, கல்வி, கலை, கலாசார, அரசியல் துறைகளில் சிறப்புத் தன்மை கொண்ட ஆய்வறிவாளர் (Intellectual) என்று போற்றத்தக்கவர் கைலாசபதி அவர்கள். புறநிலைக் கொள்கையிலே (Practical criticism) கைதேர்ந்தவர். இவர் இலக்கிய வரலாற்றாசிரியராக இருந்து திறனாய்வைச் செய்திருக்கின்றார். திறனாய்வுக் கட்டுரைகள், தனியாட்கள் ஆய்வாராய்ச்சி என்பவற்றைத் தமிழுலகில் சீரிய முறையில் அமுல்படுத்தியுள்ளார். தனிமனிதப்பண்புகளை அதிகம் வெளிப்படுத்தியது சமூகவியலே. கூட்டான சமுதாய வாழ்க்கையினைப் பாடுபொருளாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்திலே தனிமனிதப் பண்புகளையும் தனிமனிதத் தன்மையினையும் அறிமுகப்படுத்தியவராக கைலாசபதி விளங்குகின்றார். ஆகவே சமூகவியல் தொடர்பாகவும் அதில் மாக்ஸிசம் தொடர்பாகவும் அறிந்து கொள்வதன் மூலமே கைலாசபதி சமூகவியல் கருத்துக்களை குறிப்பாக மாக்ஸிசத்தினை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பது புலனாகும். 

ஒரு சமூகவியலாளன் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று கரிசனை கொள்வதுடன், தற்போது சமூகம் எவ்வாறு உள்ளது, அதன் கடந்த காலம், அதன் மாற்றங்கள் என்பது தொடர்பாக ஆராய்ந்து வரலாற்றுடன் இணைத்து சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படுத்துபவனாக இருக்க வேண்டும். அந்த வகையிலே பேராசிரியரான கைலாசபதி தனது இலக்கியத்திலே சமூகக் கருத்துக்களை உட்புகுத்தி சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக விளங்கினார். பேராசிரியரின் கூற்றாகவே தனது இலக்கியங்கள் சமூகவியல் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றுள்ளன என விளக்கக் காணலாம். 

கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நான் எழுதி வெளியிட்டிருப்பவற்றைப் பார்க்கும் போது அவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் சமுதாயத் தொடர்பமைவு உள்ளனவாய் இருக்கக் காண்கிறேன். திறனாய்வுத் துறையில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கிய கால முதல் கலை இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும் சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆராய்ந்து வந்திருக்கிறேன். மார்க்சீயத்தைத் தழுவிக் கொண்ட நாள் முதலாக அதன் முனைப்பான கூறுகளில் ஒன்றாகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்குக் கொண்டு வந்துள்ளேன். சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்விற்கு என்னை இட்டுச் சென்றது. இவற்றின் பயனாக இலக்கியத்தை அறிவியல் அடிப்படையிலே அணுகக் கற்றுக் கொண்டேன். (க.கைலாசபதி, 1979)

சமூகவியல் மனிதப் பண்பியல் துறைகளுடன் சமூக விஞ்ஞானத் துறையாக வளர்ந்து வருகின்றது. அது இன்று இலக்கிய ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்கின்றார். கைலாசபதி கூறும் சமூகவியல் மாக்ஸிசம் சார்ந்ததாகவே இருக்கக் காணலாம். அவரின் அனைத்து ஆக்கங்களிலும் பொதுவுடைமைத் தத்துவம் இழையோடியிருக்கும் பாங்கை அவதானிக்க முடியும். 

சமூகவியிலின் தந்தையென வர்ணிக்கப்படும் ஓகஸ்ட் கொம்ற் புலக்கொள்கைவாதம் சார்ந்ததாக சமூகக் கட்டமைப்பினை ஆராய்ந்ததுடன் சமூக மாற்றத்தை விரும்பாதவராக பாரம்பரிய சமூகத்திலே ஊறித் திளைத்தவராகக் காணப்படுகின்றார். அவர் கார்ல் மாக்ஸிற்கு எதிரானவராகவே முதலாளித்துவ சமூகத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் தத்துவங்களை வெளிப்படுத்தினார் என்பது கைலாசபதியின் வாதம். மாக்சிசவாதியாகத் தன்னை வரித்துக் கொண்டமையால் மாக்ஸ் கூறும் சமவுடைமையே சமூகக்கட்டமைப்பின் வாதமாக முன்வைக்கின்றார். இளங்கோவின் ஊழிக்கோட்பாட்டுத் தத்துவத்தைப் புறக்கணித்து விட்டு சிலப்பதிகாரத்தைப் பற்றிய ஆய்வு செய்வதென்பது கடினமென்கின்றார். ஆக எழுத்தாளர்களின் வகிபங்கான தனிமனித இயல்பே முன்னிற்பதுடன் வாசகர் பற்றிய அக்கறை குறைந்தவராகவே கைலாசபதி விளங்கியிருக்கக் காணலாம். 

எனினும் கைலாசபதியின் ஆய்விலக்கியங்கள் மரபு வழியினின்றும் சற்றே விலகி புதிய ஆய்வுப் பரம்பரையினை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. ஆய்வுரைகளுக்கான உசாத்துணையினை வழங்குகின்ற போது நூலாசிரியர், நூலின் பெயர், பதிப்புப் போன்ற விடயங்களே உள்ளடக்கப்படும். ஆனால் கைலாசபதி உசாத்துணையில் நூலாசிரியர் பற்றியோ நூல் பற்றியோ அடிக்குறிப்பொன்றினை வழங்கும் மரபைக் காணலாம். அத்துடன் வாசகர்களுடன் தான் பகிர விரும்பும் நூற்பட்டியலையும் அவ்விலக்கியத்தின் முடிவில் இணைத்து விடுவார். அது ஒரு ஆர்வமிக்க வாசகர் வட்டத்தை அவர் பக்கம் திருப்பக் காரணமாக இருந்தது. அவரின் இத்தகைய முயற்சி ஆய்வுலகிற்குப் புதியதாக இருந்ததுடன் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குச் சிறந்த வடிகாலாக அமைந்துள்ளது. அவரின் கட்டுரையின் முடிவில் அமைந்த சான்றாதாரங்களைப் பார்த்த போது நாமும் ஏன் அந்த உசாத்துணை அமைப்பைப் பயன்படுத்தக் கூடாது? என்ற எண்ணத்தை இக் கட்டுரையாளருக்கும் ஏற்படுத்திற்று. 

வரலாறு என்பது தானே தோன்றியதன்று. அது மனிதனாலும் சமூகத்தினாலும் படிப்படியாக புனையப்பட்டு கட்டியமைக்கப்பட்டது என்பதே மாக்ஸின் வாதம். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் தமக்கேற்றாற் போல் உலகை மாற்றியமைத்துக் கொண்டார்கள். முதலாளித்துவ சமுதாயம் தமது இருப்புத்தன்மையினை உறுதிப்படுத்த உழைக்கும் கூலித் தொழிலாள மக்களை தமது இலாப நோக்கங்கருதி உருவாக்கினர். அதனூடாக முதலாளிமார் ஆள்பவர்களாகவும் உழைக்கும் வர்க்கத்தினர் அடிமைகளாகவும் ஆளப்படுபவர்களாகவுமே அமைகின்றனர். உதாரணமாக, தெற்காசிய நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் சாதிக்கட்டமைப்பில் உயர்சாதி மக்கள், தாழ்சாதி மக்கள் என்ற வேறுபாட்டை, செய்யும் தொழிலைக் கொண்டு வேறுபடுத்தி ஆளும் உயர்சாதியினர் தாழ்சாதி மக்களை அடிமைகளாகவே கொண்டாடிய வரலாறு இன்று வரை தொடர்கின்றதே, எதனால்? நிலவுடைமைப் பொருளாதாரத்தை மையப்படுத்தி பாகுபாடுகளை முதலாளித்துவ சமூகம் உருவாக்கிய ஒற்றைக் காரணம் தானே. 

கைலாசபதி காலவோட்டத்தைக் கருத்திற்கொண்டு இலக்கியம் படைத்தார். ஒவ்வொரு இலக்கியமும் தோற்றம் பெற்றதற்குப் பின்புலத்தில் காரணம் உண்டு என்றும் அது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றாற் போல் மாற்றங் காணும் என்றும் நம்பினார். இன்றிலிருந்து வேறுபட்டதான முன்னைய வரலாறு என்று ஒன்று உண்டு என்றும் அதனைக் கண்டறிவது தான் வரலாறு மற்றும் இலக்கிய ஆய்வு என்பதும் கைலாசபதியின் வாதம். நிகழ்காலத்துத் தேவைகள் முற்காலத்து வரலாற்றைக் கட்டமைக்கின்றது என்று கூறும் கைலாசபதி. அகலிகை வரலாற்றையும் கண்ணகி கதையினையும் மேற்கோள் காட்டி ஒப்பியலிலக்கிய ஆய்வில் பெண்களுக்கான கற்பு நெறி, ஆணாதிக்கச் சிந்தனை போன்றன வரலாற்றுச் சூழலில் மக்களின் உணர்வு அழுத்தங்களுடனும் உளவியலுக்கு முன்னுரிமை கொடுத்தும் தோற்றம் பெற்றுள்ளன என்கின்றார். 

இலக்கியம் காலத்தின் கண்ணாடியாகும். தமிழ் சமுதாய வரலாற்றை ஏனைய எழுத்தாளர்கள் வேறு விதமாக நோக்க கைலாசபதியோ கார்ல் மாக்ஸின் மாக்ஸிய தத்துவத்திலிருந்து ஆராய்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்றாற் போல் தான் இலக்கியம் படைக்கப்பட்டு வரலாறு தோற்றம் பெற்றுள்ளது என நிறுவுகிறார். சங்க இலக்கிய காலம் (கி.பி. 250 வரையான காலப்பகுதி), பக்தி இலக்கிய காப்பிய காலம் (கி.பி.600-1300), நவீன இலக்கிய காலம் (கி.பி.19ம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை) என மூன்று காலங்களை முக்கியத்துவப்படுத்தி காலபேத ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன் சமுதாயச்சிந்தனைகள், அக்கால இலக்கியங்களில் தனித்தன்மை பெறுமாற்றை விரிவாகக் கூறியிருக்கக் காணலாம். 

கார்ல் மாக்ஸ் எவ்வாறு சமுதாயத்தை, நிலத்தையும் மூலதனத்தையும் மையப்படுத்திக் கணிப்பிட்டு வகைப்படுத்தினாரோ அதனைப் போன்று கைலாசபதியும் மாக்ஸைப்பின்பற்றி ஒவ்வொரு தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தினையும் வகைப்படுத்துகின்றார். பழம் பொதுமைச்சமூகம், அடிமைச்சமூகம், நிலவுடைமைச்சமூகம், முதலாளியச்சமூகம், சமவுடைமைச்சமூகம் என்கின்றார். தமிழ் இலக்கிய வரலாறு தமிழர் தம் தனித்தன்மை பொருந்திய பொற்காலம் என வரலாற்றாய்வாளர்கள் உரைப்பர். ஆனால் கைலாசபதியோ தமிழரின் நிலைமாறுகால மாற்றம் ஏற்பட்ட காலமாக சங்ககாலத்தமிழர் வரலாற்றை சமூகவியல் நோக்கில் எடுத்துரைக்கக் காணலாம். 

முன்னர் குழுவுக்கும் கணத்துக்கும் பொதுவாக இருந்த சகோதரத்துவ ஒழுகலாறு இப்பொழுது தலைநிலையெய்திய 'பெருஞ்செய்யாடல்' ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்கால கட்டத்திலே தவிர்க்க முடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன. அக்காலத்திலே புலவராக மட்டுமன்றி அறிவராகவும் வரலாற்றாசிரியராகவும் போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர்கள் இந்த நடைமுறை விதிகளைப் பிரசித்தப்படுத்தினர். சமுதாயம் முழுதற்கும் பொதுவானவையல்ல. இவ்விதிகள் தலை மக்களுக்கிடையேயுள்ள 'கண்ணியமான' உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படை எனலாம். (க.கைலாசபதி)

கைலாசபதியின் போக்கில் சமூகவியல் இரண்டு வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்று சோஷலிஸக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டது. மற்றையது சோஷலிஸ விரோத நெறியில் வளர்ந்தது என்கின்றார். அந்த வகையிலே ஓகஸ்ட் கொம்ற், ஹெர்பெட் ஸ்பென்சர், வில்லியம் கிரஹம்சும்னர், மாக்ஸ் வெபர் போன்ற சமூகவியலாளர்கள் சோஷலிஸ விரோத நெறியில் வளர்ந்துள்ளதோடு சமூகவியல் கோட்பாடுகளையும் வகுத்துள்ளார்கள் என்கின்றார். அவர்களின் சமூகவியல் தொடர்பான கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதுடன், சமுதாய மாற்றத்தினை விரும்பாதவர்களெனவும் வர்ணிக்கின்றார். 

மேற்கூறியோரது கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதாயின், சமுதாயத்தையும் சமுதாய அமைப்பையும் உள்ளவாறே கொண்டு அதன் இயக்கப்பாட்டைக் கூறுகளாய் விவரிப்பது சமூகவியலாகும். பொருளாதாரப் பிரச்சினைகளையோ உறவுகளையோ பிரச்சினைகளாகக் காண அவர்கள் விரும்பவில்லை. கூர்ந்து நோக்கினால் விஞ்ஞான அடிப்படை என்ற பெயரில் அதனுடன் ஒப்புமை காட்டினாலும் உண்மையில் விஞ்ஞான நோக்கத்திற்கு முரணாகவே இவர்கள் நடந்து கொள்கின்றார்கள். இவர்களது ஆய்வுமுறை அனுபவ வாதத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். (க.கைலாசபதிஇ 1979) 


சமூகவியல் என்பது எதனைக்குறிக்கும். அதற்கு ஒரு வரைவிலக்கணத்தினையும் கைலாசபதி குறிப்பிடுகின்றார். விஞ்ஞானப்பூர்வமாகவும் புறநிலையாகவும் மனிதனையும் சமுதாயத்தையும் ஆராய்வதே சமூகவியலின் சாராம்சமாகும் என்கின்றார். சமூக நிறுவனங்களைப் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்வதுடன் சமூகத்தின் அடிப்படை குடும்பமும் அதன் சமூகமயமாதல் செயற்பாடும் என்பது சமூகவியாளர்களின் கருத்தாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஞ்ஞானங்களுக்கெல்லாம் இளைய விஞ்ஞானமாகக் கைத்தொழிற்புரட்சியின் பின்னர் சமூகத்தைப்பற்றிய கரிசனைகளும் புத்தொளிர்க்கால சிந்தனைகளும் எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றியது தான் சமூகவியலாகும். 

சமூக நிறுவனங்களும், நடைமுறைகளும், நம்பிக்கைகளும், வழக்காறுகளும் சமூகவியலில் ஆராயப்படுகின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளும் கைலாசபதி, சமூக நிறுவனங்கள், சமயம், பொருளாதாரம், அரசியல், குடும்பம் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதுடன், இவை யாவற்றினுடைய இயக்கத்தையும், இயக்காற்றலையும் ஆராய்வதே சமூகவியலின் தலையாய பண்பும் பணியுமாகும் என்பதனை ஒப்புக் கொள்கின்றார். 

சமூகவியலில் பயன்படுத்தும் ஆராய்ச்சித்தகவல்கள், தரவுகள், செய்திகள், பக்கச்சார்பற்றவை என்றும் ஆராய்ச்சியாளன் எத்தகைய விழுமியங்களையும் பற்றி நிற்காது தனது ஆய்வை மேற்கொள்வதுடன் அவனுக்கு தரவுகளை மீறிய தனது துறைக்குப் புறம்பான அக்கறைகள் இருக்க முடியாது என்று சமூகவியல்வாதியான மாக்ஸ் வெபர் கூற கைலாசபதியோ அதனைப் புறக்கணித்து மாக்ஸின் பொதுவுடைமைக் கோட்பாட்டிற்குள்ளேயே நின்று திறனாய்வை மேற்கொண்டிருக்கக் காணலாம். மாக்ஸிசம் தொடர்பாக ஒரு சமூகவியலாளர் கூறிய கருத்தினை இங்கு, கைலாசபதி மேற்கோள் காட்டுகின்றார். 

முதலாளித்துவ சமுதாயத்தின் தவிர்க்க இயலாத புரட்சிகர நியதியை வெளிப்படையாகக் கூறி, அதனை வளர்க்க முனையும் அளவுக்கு மாக்ஸிசம் ஒரு சமூகவியலாகும். வர்க்கப் போராட்டத்தின் இயக்காற்றலை நாம் கைக்கொள்ள வேண்டும் என்று நம்மை அவசியப்படுத்துவதால், ஒரு விதத்தில் அது சமூகவியலைச் சார்ந்து நிற்கின்றது எனலாம். ஆயினும், சமூக உறவுகள் உற்பத்திச் சக்திகளின்றும் உறவுகளினின்றும் பொருளியலினின்றும் பிரித்தெடுக்கப்பட்டனவாய் இருக்க முடியும் என்று கருதக் கூடிய விதத்தில், சமூகவியல் அடிப்படையில் சமூகத்தின் நியதியை மாக்ஸிசம் காணவில்லை ((Shaw,Martin 1975)

காலவதியாகி விட்ட கோட்பாடு, சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களைனக் கொண்டது மாக்ஸிசம் என்றும் விமர்சனங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகியிருக்கின்றன. மாக்ஸின் கொள்கைகள் உலக அரங்கில் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது. தமிழர்களும் மாக்ஸின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. மாக்ஸின் பொதுவுடமைக் கொள்கை தமிழுக்குப் புதிது. இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் கொம்யூனிஸ்ட்வாதத்தை, பாரம்பரியக் கலாசாரக் கொள்கைகளில் ஊறித்திளைத்தவர்கள், வரலாற்றை மாற்றிப் போடும் இக்கொள்கையினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

எனினும் தற்துணிவுடன் கைலாசபதி மாக்ஸியத்தினை ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் திறனாய்வுக்கும் ஒப்பியலுக்கும் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மகத்தானது. மாக்ஸியத்தை ஏற்றுக் கொள்கின்றோமோ இல்லையோ, ஆனால் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி என்ற இரண்டு ஆளுமைகளை விடுத்து ஈழத்தின் திறனாய்வினை எடுத்தியம்புவது சற்றும் இயலாத காரியமே. 

1953-1982 வரையான குறுகிய காலப்பகுதியில் ஒரு சகாப்தத்தினை உருவாக்குவதென்பது அபூர்வமான விடயமே. ஆனால் கைலாசபதியோ 49 ஆண்டுகள் என்ற குறைந்த ஆயுட்காலத்தில் தன்னை மீறியதாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் துணைபுரிந்துள்ளார். இந்தியாவில் இருக்கின்ற இலக்கியவாதிகள் கைலாசபதியின் திறனாய்வுத் திறமையினைக் கண்டு ஐயப்பட்டுள்ளதோடு வியப்புற்றுப் பாராட்டியுமுள்ளனர். 

ஜெயகாந்தன் தொடக்கம் பல இந்திய, இலங்கை இலக்கியவாதிகளை அவர்கள் சமூகவியல் நோக்கில் இலக்கியம் படைக்காது அழகியலுக்காக மாத்திரமே இலக்கியம் படைத்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் இலக்கியங்கள் சமூக மாறுதலுக்கு வழிகோலவில்லை. கற்பனை வளம் பொருந்திய படைப்புக்களாக இருப்பினும் அவை மக்களின் உளரீதியானதும் பிரச்சினைகளிலிருந்து வெளிக் கொண்டு வரும் யுக்திகளை விவரிப்பனவாகவும் இருக்க வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.

தனது சமகால இலக்கியவாதிகள் கூறும் கருத்துக்களை அவர்கள் சார்பாக பக்கச்சார்பற்று விமர்சனத்திற்கு உட்படுத்தாது, மாக்ஸிசக் கொள்கையுடன் ஒப்பிட்டு திறனாய்வு செய்திருக்கின்றார். சில இடங்களில் மாக்ஸின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் அதனைத் திணிக்கும் தன்மைகளையும், ஏனைய பார்வையுடையவர்களை சமுதாயப்பார்வைக்கு எதிரானவர்களாக ஒதுக்கி விடும் தன்மையினையும் காணக்கிடைக்கின்றது. க.நா. சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்றோர் 'மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்று கைலாசபதியினை விமர்சனம் செய்யும் போக்கும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய காலப்பின்னணியில், மாக்ஸிசக் கருத்துக்களை, கடினமான சொற்பிரயோகத்தை, அப்படியே பயன்படுத்தாது தனது இலக்கியத்திற்குத் தேவையானதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்ததில் கைலாசபதி திறனாய்வாளராகவும் ஒப்பியல் இலக்கியவாதியாகவும் வெற்றி வாகை சூடுகின்றார். கார்ல் மாக்ஸின் பொதுவுடமைவாதத்தைப் பற்றி, முழுமையான அறிவை வெறுமனே கோட்பாடாகவன்றி இலக்கிய வரலாற்று நோக்கில் தெரிந்து கொள்ளவும், புதிய திறனாய்வு முயற்சிகளை மேற்கொள்ளவும், ஒப்பியல் இலக்கியம் படைக்கவும் கைலாபதியின் நூல்கள் துணை புரியும் என்பது குன்றிலிட்ட விளக்கே. 

Views: 800