கத்தறகம மேவிய பெருமாளே

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.comBanner

வடக்கு கிழக்கில் மிகப்புதியதாக அமைக்கப்படுகின்ற புத்தர் சிலைகளும் தாகபைகளும் விகாரைகளும் எவ்வாறான செயற்கையான கலாச்சார வரலாற்று மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு ஒன்றிற்கான அத்திவாரமாக இருக்கப்போகின்றது என்பதை எல்லோராலும் உணர முடிகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சிநிரலின் படி திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்பதால் இவைகளின் உண்மையான வரலாற்றை ஆவணப்படுத்துவதானது சிறுபான்மைச்சமூகமாக இந்நாட்டில் எம் பண்பாடு பாரம்பரியங்களில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற செயற்கை மாற்றங்கள் மற்றும் திணிப்புக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள  உதவுவதாக இருக்கும் என்ற நோக்கமே இம்முறையும் என் கட்டுரைக்கான நோக்கம்  ஆகின்றது.

கடந்த இரண்டு உவங்கள் இதழ்களிலும் வெளிவந்த "மெல்லத்தமிழ் இனி" கட்டுரைகளில் வடமேற்கில் சடுதியாக ஏற்பட்ட சமூகவியல் மாற்றத்தை  என் இயலுமையை உச்ச  அளவிற்கு பயன்படுத்தி ஆதாரங்களுடன் நிறுவியிருந்தேன். அவை தொடர்பாக எதிர்க்கருத்துகள் சில பேரிடம் இருந்து வந்திருந்தாலும் பல பேர் அக்கட்டுரைகளைப் பகிர்ந்திருந்தார்கள் பாராட்டியிருந்தார்கள். இக்கட்டுரைகளின் கனதியை அறிந்துகொண்ட சில சகோதர மொழிபேசும் முற்போக்கான நண்பர்கள் அவைகளை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் ஏற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றார்கள். உண்மையில் என்னுடைய தொழிற்துறையானது இலக்கியம் வரலாறு சமூகவியல் போன்ற துறைகளைச்சாராத படியால் எழுதுவதற்கான நேரம் வழிகாட்டுதல் மற்றும் முறையான இத்துறைகளில் துறைசார் தேர்ச்சி உள்ளிட்ட எனக்கான வளங்கள் ரீதியில் மிகக்குறைவே. என்றாலும் என்னுள்ளே இருக்கின்ற ஆதங்கங்களை எழுத்துக்களிலாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற தீவிரமான நோக்கத்தை நிறைவேற்றவே எழுதுகின்றேன். இக்கட்டுரைகளில்  வர்ணனைச்சொற்களில் வரட்சி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும் உள்ளடக்கங்கள் மீது மிகநம்பிக்கையோடு இந்த முறையும் ஒரு புதிய தலைப்புக்குள் நுழைகின்றேன்.

கத்தறகம மகா றுகுணு தேவாலயம் என உத்தியோக பூர்வமான பதிவுகளில் குறிப்பிடப்படுகின்ற கதிர்காமத்தலத்தைப்பற்றி கொஞ்சம் நீளமாகப்பார்ப்போம். தென்கிழக்கிலங்கையின் காடு மண்டிக்கிடக்கிற குன்றுகளில் ஒன்றாக அம்பாந்தோட்டையிலிருந்து 95கிலோமீற்றர்கள் தொலைவிலும் திஸ்ஸமகாராமவிலிருந்து 16 கிலோமீற்றர்கள் தொலைவிலும் மாணிக்ககங்கைச்சாரலில் இருக்கின்றது கதிர்காமம்.          

கதிர் காமக்கோயிலின் அமைப்பைப்பொறுத்த வரையில் வடக்கு முடிவெல்லையில் கதிர்காமக்கடவுளின் கோயிலும் தெற்குப்புறமாக பார்த்தபடியும் தெற்கு முடிவெல்லையில் இருக்கிற வள்ளியம்மை கோயில் வடக்கு நோக்கியபடியும் உள்ளது.  ஆகமங்களின் அடிப்படையிலான  ராஜ கோபுரம் முன்மண்டபம் மகாமண்டபம் கர்ப்பக்கிரகம் என்று எதுவும் கதிர்காமத்தில் கிடையாது. யாழ்ப்பாணத்து கண்ணகி ஆலயங்கள் எவ்வாறு சமஸ்கிருத மயமாகி முற்றிலும் தன் தொன்மைகளை இழந்து ராஜராஜேஸ்வரி ஆலயங்களாகவும் சக்தி சமேத சிவாலயங்களாகி இருக்கின்றதோ அதே போலக்கதிர்காமமும் கத்தறகமவாகிப்போய் விட்டது எனலாம். காலையில் ஐந்து மணி பத்து மணி, மாலை ஆறு மணி என்று தினமும்  மூன்று வேளைகள் முருகன் சந்நிதி திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. முன்புறம் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. குடிலாக இருந்த ஆலயத்தை  இப்போதுள்ள வடிவத்தில் 1581ல் முதலாம் ராஜ சிங்கன் கட்டியதாகவும் , 1634ல் இரண்டாம் ராஜசிங்கன் கட்டியதாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

உள்ளே கருவறை எனப்படும் இடத்துக்கு முன்பாக மொத்தமாக ஏழு திரைகள் தொங்குகின்றன. முதல் திரையில் மயில்வாகனத்தில் அமர்ந்த முருகனும் வள்ளி தேவசேனையின் உருவங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியமே இங்கு மூலவர் என்று சொல்ல முடியும் . முன்மண்டபத்தில் சுமார் ஐம்பது பேர் வரையில் நிற்கமுடியும். அந்த மண்டபத்தின் இரு புறமும் மேலே கண்ணாடியிடப்பட்ட வண்ணப் படங்களில் முருகனது காட்சிகள் உள்ளன. ஓவியம் ஒன்றில்  அருணகிரிநாதர் முருகனை வழிபடுவதான காட்சியொன்றையும் வரைந்துள்ளனர்.

மற்றைய ஆலயங்களுக்கு முரணாக சாணி எரித்து திருநீற்றை எடுக்காமல் மலையில் இயற்கையாகக்கிடைக்கின்ற விபூதியை கதிர்காமத்தில் பிரசாதமாக அளிக்கிறார்கள்.  மலையிலிருந்து வெட்டி எடுத்து வந்து மிகவெண்ணிறமாக வழ வழ என்று தொடுகைக்கு இதமாகவிருக்கிற திருநீறாக்கி அங்கு வழிபடவருபவர்களுக்கு வழங்குகிறார்கள் கப்பறாளைகள். 

ஆலயத்தின் முகப்பில் ஒரு வளைவு இருக்கிறது. அதில் சிங்கள மொழியில் எழுதியுள்ளார்கள். சில தசாப்தங்களுக்கு முன் வரை அந்த வளைவின் உச்சியில் வேல் ஒன்றினைச்சுற்றி ஓம் என்ற தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட அலங்காரம் இருந்திருக்கிறது. மறுசீரமைப்பு வேலைகளின் போது அந்த அலங்காரம் அகற்றப்பட்டு புதிதாக வைக்கப்படும் போது ஓம் அகற்றப்பட்ட வெறும் வேல் மட்டும் வைக்கப்பட்டது. 

கதிர்காமத்தின் வலதுபுறமாக விநாயகர் கோயில் இப்போது கண தெய்யோவாகி இருக்கிறார். அதற்குப்பக்கத்தேயும் பல பெரிய சிறிய அளவிலான புத்தர் சிலைகள் பரவி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அருகில் பெருமாள் சந்நிதி என்கின்ற விஷ்ணு கோயிலில் விஷ்ணுவே இல்லை. புத்தர் தான் புன்னகைத்த படி இருக்கிறார். இதைப்பற்றி பிறகு சொல்லுகின்றேன். முருகனுக்கு இடதுபுறமாக சற்றுத்தள்ளி தேவசேனை சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இது காலத்தால் மிகப்பிந்தியது. 

சிவனொளிபாதம் போன்றே மிகப்பழைய வழிபாட்டாளர்களின் பல்வகைமையை கொண்ட இன்னொரு இலங்கையின் ஆலயம் என்று கதிர்காமத்தைச் சொல்லமுடியும். இலங்கையின் பௌத்தர்கள் கத்தறகம தெய்யோ என்று  போற்றுவதோடு தீவிரமான சடங்குகள் பெரகராக்களையும் இப்போது நிகழ்த்துகின்றனர். புத்தர் தரிசித்த பதினாறு இடங்களில் இதையும் ஒன்றாக சொல்கிறார்கள். கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் மகாகோசனின்  புத்தரின் மூன்றாவது இலங்கை வருகையின் போது அவர் தீகவாபியிற் சில காலம் தங்கிப்பின்பு இங்கே காவல் தெய்வமானார் என்றும்  கப்புறாளைகள் பிரசங்கம் செய்கின்றனர். பௌத்த பூசாரிகளான இந்தக்கப்புறாளைகள் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு திரைச்சீலையால்  மூடப்பட்டிருக்கிற கருவறைக்குள் மந்திர உச்சாடனத்தை  செய்கிறார்கள். பழங்கள் நிறைந்த தட்டுக்களை வாங்கித்திரையிலிருக்கும் முருகனுக்கும் கருவறைக்கும் காட்டிவிட்டு விபூதிப் பிரசாதத்துடன் நம்மிடம் தருகிறார்கள். தவிர புத்தரும் சிலையாக ஆலய வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. தேவானம் பியதிஸ்ஸ மன்னன் சிறுகுடிலை கதிர்காமக்கடவுளுக்கு நிறுவினான் என்கிறார்கள். மஹரஜ கெமுனு அரசன் எல்லாளனுடன் யுத்தத்திற்குச்செல்லும் முன் றுகுணு கத்தறகம தெய்யோவுக்கு வேண்டுதல் செய்தான் என்கிறது மகாவமிசம். மேலும் வெற்றியின் பிறகு 15000 ஏக்கர் நிலத்தை கதிர்காமத்திற்கு மானியமளித்தான் என்கிறது கந்த உபாத்த என்கிற இலக்கியம்.

கதிர்காமம், செல்லக்கதிரகாமம், வேத்தியகிரி என்று வழிபடுதலங்களின்  நீட்சியாக மாணிக்க கங்கையின் ஓரத்தில் அமைந்திருக்கிறது  கிரிவிகாரை என்கிற தாகபம். இக்கிரிவிகாரை பிற்காலத்தின் கதிர்காம உற்சவங்களுடன்  மிகத்தொடர்பானதாக விளங்குகின்றது. இந்தக் கிரிவிகாரை இருக்கிற சிறு பகுதியை மகுல் மகா சாய என்கின்றார்கள்.இங்கிருந்து எடுக்கப்பட்ட மன்னன் ஒருவனை ஒத்த சிற்பத்தை மகாசேனன் என்றும் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அவனே இத்தாகபத்தை கட்டுவித்தான் என்றும் இலங்கைத்தொல்லியலாளர்கள் வரையறுத்திருக்கிறார்கள். ஆனால் கதிர்காமத்தலத்திற்கும் , கிரவிகாரைக்கும் எந்தத்தொடர்பும் இதுவரையில் வரலாற்றியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லை. 

விசேடமாக மத அடிப்படையிலான முசுலீம்களின் ஒன்றுபடல் தொடங்கும் வரையில் முசுலிம்  மக்களும் சிலகாலங்கள் முன்பு வரையில் கதிர்காமத்தின் தீமிதிப்பில் பங்கெடுத்ததாகப் பதிவுகள் உண்டு. சில முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் படி மோசஸ் அல்லது  மூசாநபியின் ஞானகுரு அல்காதிர் என்னும் இறைத்தூதரரே கதிர்காமத்தில் உருவமற்றவராக இருக்கிறார் என்கிறார்கள். சூபி ஞானிகள் பலர் இங்கே சமாதியடைந்ததாகக்கூறுவார்கள். இப்போது பிரதான ஆலயத்திற்கு முசுலிம்கள் வருவது மிகக்குறைவு. சில ஷியா பிரிவினர் வழிபட்ட தர்கா ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின்றது. 

சில ஆய்வாளர்களின் தகவல் மூலங்கள்  கதிர்காமக்கடவுள் என்பது ஒரு போதிசத்துவர் என்றும் சில தகவல்கள் உள்ளூர் குறுநிலத்தலைவன் ஒருவனே கடவுள் நிலைக்குயர்த்தப்பட்டான் என்றும் சொல்கின்றன . சூரசங்காரம் நிகழ்ந்த இடம் கதிர்காமமே என்று கந்தபுராணத்திற்கு புறநடையாக சில சமய இலக்கியங்கள் சொல்கின்றன. ஆறுபடைவீடுகளில் ஒன்றாக கதிர்காமமும் இருந்ததாகவும் திருச்செந்தூர் பிற்காலத்தில் ஆறுபடைவீடுகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டதாகவும் சிலர் ஊகங்கள் சொல்கின்றார்கள். குன்றுதோறாடும் குமரன் என்ற வழக்கு பழமையானது என்பது கதிர்காமத்திற்கு பொருந்துகின்றது. வள்ளி என்பவள் கதிர்காமத்து வேடன் மகள் என்றெல்லாம் ஊகங்கள் இருக்கின்றன. 

சைவத்தமிழ்மக்கள் கதிர்காமத்திற்கு வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து அடர்காடுகளினூடாக  மாதக்கணக்கில் நடை ஊர்வலமாக சென்று ஆடித்திருவிழாவில் பங்கெடுக்கும் பாரம்பரியத்தைக்கொண்டவர்கள். கதிர்காமம் என்கிற பெயரில் இருக்கிற கதிர் என்பதை தினைக்கதிர்களை குறிப்பதாகச் சொல்லுவதோடு இன்னமும் எஞ்சியிருக்கின்ற ஆனால் மிகப்பின்னடைவாகிக்கொண்டு வருகின்ற கதிர்காமத்து தமிழ்வழி மரபுகளை பின்பற்றுபவர்கள். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்த வரையில் கதிர்காமத்தைப்பற்றி அருணகிரி நாதர் தன் திருப்புகழ் நூலில்

"கதிரகாம வெற்பில் உறைவோனே!"

"சோதி சிவஞானக் குமரேசா தோமில் கதிர்காமப் பெருமானே!

"கதிரகாம மூதூரில் இளையோனே!'

"அரிய கதிர் காமத்தில் உரிய 
  அபிராமனே!'

"மணிதரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாளே!'

"கதிர்காம மேவிய பெருமாளே" 

என்றெல்லாம் பதின்மூன்று பாடல்களில் குறிக்கிறார். ஆனால் இவைகளில் எதுவுமே  கதிர்காமத்தின் வரலாற்றை நிறுவத்தக்க சான்றுகளுடன் தரவில்லை. ஆனால் கடைசிப்பாடலில் இராமாயணத்து அனுமனை இலங்கையோடு தொடர்பு படுத்தும் வரிகள் வருகின்றன. மணிதரளம் வீசி அணி அருவி சூழும் மருவு  கதிர்காமப் பெருமாள் காண் என்கிற திருப்புகழ் வரிகள் கதிர்காமச்செழிப்பைக்காட்டுகின்றன. கதிரமலைப்பள்ளு என்ற இலக்கியம் பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கிறது. 

முருக வழிபாட்டின் தொன்மையான வடிவங்களாக சங்கத்தமிழிலயக்கியங்கள் சொல்கின்றதான  குன்றக்குரவை வேலன் வெறியாட்டு போன்றவற்றின் சிதைந்த வடிவங்கள் வழங்கி வருதலையும், தேனில் பிசைந்த தினை மாவை அருட்பண்டங்களாகத்தருகின்ற நடைமுறையுள்ளிட்ட விடயங்களும் கதிர்காமத்தின் தொன்மையை காட்டி நிற்கின்றன. குறிஞ்சித்திணையின் வாழ்க்கை என்று தொல்தமிழ்இலக்கியங்கள் வர்ணிக்கும் வாழ்க்கையை அங்கிருக்கும் பகுதியளவு நாகரிகமடைந்த வேடர்களிடம் காணமுடியும்.

இரண்டாம் இராச சிங்கன் காலத்தில் வாழ்ந்த கல்யாணகிரி என்கின்ற ஞானியாரும் சைவக்கதிர்காம வரலாற்றில் முக்கியமானவர். அவரே தேவசேனாவுக்கு கோயில் மடம் கட்டியதோடு கல்யாண மண்டபத்தையும் கட்டினாராம் என்கிறார்கள். முத்தியடைந்த அவர் முத்திலிங்கம் என்றழைக்கப்பட்ட இடத்தில் சமாதியானார் என்றும் அவரின் பரம்பரையினரின் சமாதிகளும் அங்கே இருக்கின்றன.

கல்யாணகிரி ஞானி தவிர வடவிந்தியாவில் பிறந்து கதிர்காமத்தில் துறவறம் இருந்த காலத்தில் கண்டியரசனால் நாடுகடத்தப்பட்டு வேலூரில் மரணமடைந்தார் என்று நம்பப்படுகின்ற பாலசுந்தரி , வாரணாசியை சேர்ந்த மங்களாபுரி ஞானியர் , பால் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பால்குடி பாபா ஆகியோர் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கதிர்காமத்தோடு தொடர்புபடுகின்றனர்.  சூபிபாபாக்களின் சிலரின் சமாதிகளையும் சுமந்து நிற்கின்றது கதிர்காமக்குன்றின் அடிவாரம். 

பிற்காலத்தில் நடந்த வழக்கொன்றின் படி கதிர்காம உரிமை தொடர்பில் பகிரப்பட்ட விபரங்கள் பல திட்டமிடப்பட்ட சிங்கள பௌத்த மயமாக்கலொன்றின்  உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருந்தன. கதிர்காமக்கடவுள் கத்தறகம தெய்யோ ஆக்கப்பட்டு வரவேற்பு நிலைக்கோபுரத்தின் உச்சத்தில் இருந்த ஓம் என்கிற தமிழ் எழுத்துக்கள் இல்லாமற் போனதன் பின்னணியும் பௌத்த மயமாக்கலை வெளிப்படையாகவே அறிவித்தன. 

கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமிகள் என்பவரை  வெளியேற்றி மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள சித்தார்த்த தேரோ என்கிற கதிர்காமத்தின் செல்வாக்கான பிக்கு ஒருவர் முயற்சித்து வருகிறார் என்று பதிவு செய்கிறது 1898ஆம் ஆண்டுக்கான வழக்கு ஒன்று.  

குறித்த சித்தார்த்த தேரரே  கத்தறகம என்கிற பிரதிமையை கதிர்காமம் என்கிற அடையாளத்தை அழித்து பிரதியிடும் வேலையை தொடங்கிய முதல் நபர் எனலாம் . மிகத்தூரநோக்கோடு திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களின் துணையோடு சட்டவிரோதமான முறையில் செய்த செயற்பாடுகளை விபரமாக பார்ப்போம். இதே சம்பவங்களையொத்த சிறு சிறு சம்பவங்களை வாசகர்கள் இப்போது விசேடமாக நயினாதீவு மாதகல் கனகராயன்குளம் கிளிநொச்சி மாமடுவ கோணேச்சரம் மட்டக்களப்பு என்பவற்றில் நடக்கும் சம்பவங்களோடு எவ்வளவுக்கு ஒன்றித்துப்போகிறது என்பதை உணர வேண்டும் என்பதற்காக சம்பவத்தொகுதியை உடைத்து சிறு சிறு நிகழ்வுகளாகத் தருகின்றேன்.

சித்தார்த்த தேரர் வேதிகித்திகந்த என்படும் கதிரைமலை உச்சியிலுள்ள கதிர்காமக் கந்தனை வடக்கிலிருந்து கிழக்கு வழியாக தெற்குக்குள் பாதயாத்திரையாக வந்த வழிபடச் செல்வோர் பரம்பரையாக எத்தனையோ நூற்றாண்டு காலமாக மலையேறிய பாதையை தடுத்தும் மறித்தும் பக்தர்களை மேலே செல்லவிடாமல் இடையூறுகள் பல விளைவித்ததோடு தன் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார். 

பின்பு 1946ம் ஆண்டில் தத்தாராமகிரி சுவாமி மலையேறும் வழியில் உள்ள விநாயகர் கோயிலை புதுப்பிக்க  முயற்சித்தபொழுது  குறித்த சித்தார்த்த தேரர் என்கின்ற பிக்குவும் அவரது அறைகூவலில் ஒன்றிணைந்த பௌத்த குருமாரும் சில கப்புறாளைகளை ஏவிவிட்டு அக்கோயிலினைக் கட்ட விடாது குந்தகம் செய்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் திஸ்ஸமகாராம  பூர்விக மக்களும் தத்தாராமகிரி சுவாமி உள்ளிட்ட சைவமக்களும் காயமடைந்தார்கள்.

1952ம் ஆண்டில் கொழும்பில் உள்ள இராம கிருஷ்ண மடத்தினர் கதிர்காமக் கந்தன் கோயிலுக்குரித்தான காணியொன்றில் சைவ யாத்திரீகர்கள் தங்கி வழிபட்டுச்செல்ல வசதிகள் செய்து மடம் ஒன்றை நிறுவியிருந்தார்கள். மறுபடி ஒன்றிணைந்த சித்தார்த்த தேரர் உள்ளிட்ட குழுவினர் அதிகாரத்தரப்புடன் இணைந்து அப்பகுதிக்கிராம சேவகரின் இரகசிய ஆதரவுடன் சைவ அன்பர்கள் மடத்தில் தங்கி வழிபாடு செய்வதற்கு பலவித இன்னல்களையும் இடையூறுகளையும் விளைவித்து மடத்தை வெறுமையாக்கினார்.

1952-53 வருடத்தில் யாத்திரீகர்கள் அன்பர்களின் வசதிக்காக மேற்கூறிய தத்தாராமகிரி கோயில் கிணற்று நீரை மேலே தொட்டியொன்று கட்டி அதில் சேமித்து வைத்தார். ஆனால் 1972ம் ஆண்டில் அன்றைய அரசாங்கத்தின் ஆணையின் பேரில் அதன் ஏவப்பட்ட குழுக்களும், அதிகாரிகளும், சேவகர்களும், தண்ணீர் தொட்டியை உடைத்தெறிந்ததாக பதிவுகள் உள்ளன. 1970ம் ஆண்டு சித்திரை மாதமளவில் தத்தாராமகிரி சுவாமி தடுப்புக்காவலில் பௌத்த கடும்போக்காளர்களின் தூண்டுதலில் ராணுவத்தினரால் வைக்கப்பட்டார். இதன் போது கோயிற்கட்டடங்கள் சூறையாடப்பட்டதுடன் முக்கிய ஆவணங்கள் கையாடப்பட்டன. தேவசேனை அம்மன் கோயிலின் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

1970ம் ஆண்டின் போது தான் வேதிகித்திகந்த எனப்படும் கதிரைமலையிலுள்ள கோயிலை அதன் சட்டரீதியான நிர்வாகியிடமிருந்து மேற்குறித்த பிக்குவும் அவரின் சகாக்களும் பலவந்தமாகக் கைப்பற்றினர். இந்த ஒரே நோக்கத்திற்காகத்தான் சித்தார்த்த தேரர் குழுவினர் மிகவும் பிரயத்தனப்பட்டார்கள். இறுதியில் அதிகாரத்தின் துணையோடு மலையுச்சியைக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

1972ம் ஆண்டில் தத்தாராமகிரி சுவாமியால் அக்காலத்து மதிப்பில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் ரூபா செலவில் கட்டிய கட்டடங்களையெல்லாம் தகர்த்தெறியும்படி அரசாங்கம் 
உத்தரவிட்டது. பல நூற்றாண்டுகளாக பிரதான ஆலயம் இருந்த தொன்மம் நிறைந்த காணியைக் கூட சுவீகரிக்கப்போவதாக அரசாங்கம் அறிக்கைவிடுத்தது. இதைத்தொடர்ந்து தத்தாராமகிரி சுவாமியின் பொறுப்பிலுள்ள கோயில் காணிகளுக்குள் குறித்த தேரரும் பிற பௌத்த குருக்களும் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமித்துக் கொண்டதோடு புதிய சகாப்தம் கதிர்காமச்சூழலில் ஆரம்பமாகத்தொடங்கியது. அடுத்த நாளே கதிர்காமக் கந்தன் கோயில் பகுதியிலிருந்து வரலாற்றுப்பாரம்பரியமான மற்றும் குடியேறிய சகல இந்துக்குடும்பங்களையும் விரட்டிவிட்டு கதிர்காமத்தில் உள்ள சகல கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் தாம் கைப்பற்றப் போவதாக சித்தார்த்த தேரர் குழு வெளிப்படையான கூட்டமொன்றில் எச்சரிக்கின்ற அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு அவர்களுக்கிருந்திருக்கிறது

எச்சரிக்கையை அவர்கள் செயற்படுத்துவதற்கு கப்புறாளைகளை அணுகினர். கப்புறாளைகள் துன்புறுத்தல்களிற்குப் பயந்து விஷ்ணு கோயிலில் இருந்த தொன்மையான விஷ்ணு விக்கிரகத்தை நீக்கிவிட்டு புத்தரின் உருவத்தை வைத்தார்கள். அதிகாரத்துக்கு வந்த பிக்குமார்கள் கப்புறாளைகளைக் கொண்டு தத்தாராமகிரி சுவாமியின் பொறுப்பில் இருந்த சுமார் 346 ஏக்கர் கோயில் காணி நிலங்களில் குடியிருந்தோரையும் பயிர் செய்தோரையும் அவரவர்கள் செலுத்த வேண்டிய வாடகைப் பணத்தையும் கோயில் மான்யத்தையும் கொடுக்கவிடாதவாறு பலாத்கார வழிகளைக் கையாண்டு நிர்வாகத்தை நிதிப்பற்றாக்குறைக்கு உள்ளாக்கினார்கள்.

1978ம் ஆண்டு தை மாதம் 29ஆம் திகதி வெளியான சிலோன்ஒப்சேவர் பத்திரிகை சித்தார்த்ததேரர் தொடர்பில் பரபரப்புச்செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அச்செய்தியின் படி சுதந்திரதினமன்று  கதிரைமலையுள்ள 26 ஏக்கர் காணியையும் அதிலுள்ள அசையும் அசையா பொருட்களையும் தனக்கும் தன் உறவினர்ச்சந்ததிக்கும் கதிரமலை ஆட்சியுரிமையோடு சேர்த்து பிரித் தானமாக தனக்கு வழங்குமாறு  சித்தார்த்த தேரர் ஜனாதிபதியை வற்புறுத்தியதாக தெரிவித்தது . ஆனால் வேதிகித்திகந்தவை அவ்வாறு வழங்கமுடியாது என்பதை ஜனாதிபதி மறுப்பறிக்கையில் அறிவித்திருக்கிறார். 

1955ம் ஆண்டளவில் நிறைவேற்றதிகாரம் மிக்க பிரதமராக பதவி வகித்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க கோயிலுக்குரிய காணிகளையும், கட்டடங்களையும், தலங்களையும் நகர அபிவிருத்திக்குட்பட்ட பகதியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டிருந்தார். நாடு நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதென கூறப்பட்டாலும், 38வது பிரிவு முதலாவது அனுபந்தம் வழங்கும் சட்டப்பாதுகாப்புகளையும் மீறி துணை அதிகாரிகளும் , அதிகாரிகளும் மற்றும் அரச பணியாளர்களும் சட்டத்திற்கு  விரோதமான செயல்களில் ஈடுபட இவ்வுத்தரவுகள் இடமளிக்கத்தொடங்கின. 1966ம் ஆண்டு ஆனி 20ம் திகதி வெளியான 10,953ம் இலக்க அரசாங்க வர்த்தமானியின் நாடு நகர திட்டமிடல் சட்டத்தின் 21வது பிரிவின்படி  சட்டப்போர்வையின் கீழ் இரண்டாவது பிரதமர் பிரேமதாசா மேற்கூறிய ஆக்கிரமிப்புத்தனமான செயல்களை வன்மத்துடன் புரிந்துள்ளார்.

நன்றிக்கடனாக ஏழுமலை உச்சியிலிருந்து 15,000 ஏக்கரா நிலத்தை கோயிலுக்கு தர்மசாஸனம் செய்தான். கதிர்காம மலையின் முழுமையான நிர்வாகம் தமிழ்க்கப்புறாளைகளிடமே ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் வரலாற்றின் படி 1815ம் ஆண்டில் கண்டிச்சாசனம் கைச்சாத்திடப்பட்டு மூன்று வருடங்கள் கழித்து கண்டிக்கலகம் வெடித்தது. கலகத்தலைவர்களுக்கு கதிர்காமக் கப்புறாளைகள் உதவிகள் புரிந்ததாகக் கேள்வியுற்ற தேசாதிபதி சேர். ரோபர்ட் பிரவுண்றிக் கதிர்காமத்திற்கு படையெடுத்து கப்புறாளைகளை காட்டுக்குள்  விரட்டிவிட்டு கோயில் நிர்வாகத்தையும் பூசை உரிமைகளையும் தமிழ் பிராமண பூசகர்களிடம் ஒப்படைத்துச்சென்றார். இதனால் ஓரளவு ஆகமவிதிகள் புகத்தொடங்கின.மரபுகள் எதையும் பிராமணர்கள் மாற்றவில்லை. அவர்களின் பாதுகாப்பிற்காக பிரித்தானிய காவல் துருப்புகளை அங்குவிட்டுச் சென்றார் தேசாதிபதி. ஆனால் தரிசு நிலச்சட்டம் அமுலுக்கு வந்ததும் நிர்வாகத்துக்கென ஒரு பஸநாயக நிலமே நியமிக்கப்பட்டார். இன்றும் அப்பதவி அமுலில் உள்ளது.சொற்பகாலம் அமைதி நிலவியது. கதிர்காமத்திலே சுமார் ஒரு வாரம் ஆளுனர் சேர். ஆர்தர் கோர்டன் கூடார மடித்து தங்கினார். பிரித்தானிய காவல் நீக்கப்பட்டதும் பஸ்நாயக்க நிலமே உள்ளூர் சிங்களவர்களைத்தூண்டி விட தமிழ் பிராமணர்கள் ஓட்டம் பிடித்தனர். கப்புறாளைகள் மீண்டும் கோயிலை கைப்பற்றினர்.

பெரஹராக்கள், திருவிழாக்கள் என்பன வகைதொகையின்றிப் பெருகின. அடியார்கள் அதிகரித்தனர். பின்னர் ஏற்பட்ட தொற்று நோய்களும் மலேரியாவும் கதிர்காமத்தை மக்கள் வாழ முடியாத கிராமமாக்கிவிட்டது. சில வருடங்கள் கழிந்தன. விவசாயிகள் மீண்டும் சேனைகளுக்கு திரும்பி கமம் செய்ய ஆரம்பித்தனர். கதிர்காமத்தெய்வத்தின் புகழ் உலகெலாம் பரவியது. திருவிழாக்காலத்தில் அடியார் கூட்டம் அதிகரித்தது. ஒரு பூதரும் அறியாத யந்திரப் பேழையை காவிக்கொண்டு வாயையும் சீலையால் மூடிக்கட்டிக்கொண்டு கப்புறாளை யானை மீது அமர்ந்துவரும் காட்சியைப் பார்த்து அடியார் ஆனந்த பரவசம் அடைகின்றனர் .  தொழிலாளர்கள் ஆவேசங்கொண்டு ஆடிப்பாடி கந்தசுவாமியாரை வள்ளியம்மையிடம் அழைத்துச் செல்கின்றனர். தீர்த்த திருவிழா கடைசிநாள் நடைபெறுகிறது. பக்தர்கள் பாபவிமோசனமடைந்து புனிதராவதாக எண்ணிக்கொள்கின்றனர்.

இக்காலப்பகுதியில் தான் பிரதமர் சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டார நாயக்க நாடு நகர திட்டமிடல் சட்டத்தைக் கொண்டு வருகிறார். ஆன்மிக யாத்திரைத்தலமான கதிர்காமம் களியாட்டத்தலமாகின்றது. சிங்கள பௌத்த பிக்குகள் கதிரைமலையை (வேதிகித்தி கந்த) கைப்பற்றிய பின்பு ஏழுமலைகளையும் பௌத்த மகாசங்கத்தின் அதிகாரத்திற்குட்படுத்த ஜனாதிபதியின் உதவியை நாடினார்கள். பிக்குகளின் கோரிக்கைக்கு இணங்க இலங்கையின் முதல் ஜனாதிபதி ஜுனியஸ் ரிச்சார்ட் ஜயவர்த்தனா மறுத்து விடுகிறார். கதிரைமலையை சித்தார்த்ததேரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் உறுதியில் அவர் கைச்சாத்திடவில்லை. இருந்தும் பிக்குவின் செயல்கள் ஓயவில்லை. பௌத்தத்தை நிலைநாட்ட கங்கணங்கட்டிக் கொண்டு பலதரப்பட்ட அதிகாரமட்டங்களின் உதவிகளோடு சதிகள் பல செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் செய்த ஆக்கிரமிப்புச்செயற்பாடான 1977ம் ஆண்டில் செல்லக்கதிர்காமத்தை பலவந்தமாகக் கைப்பற்றியமையோடு தமிழ்ப்பாரம்பரியம் விட்டுப்போய்விட்டது. இனி அது திரும்பப் போவதில்லை.

கதிர்காமத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழா ஆடிமாதம் திருவோணம் பௌர்ணமியன்று நடைபெறுகின்ற ஆடிவேல் உற்சவமாகும்.  பத்து நாட்கள் நடைபெறுகின்ற நடக்கும் இவ்விழா இப்போது பெரகரா வடிவத்திற்கு மாற்றம் பெற்றிருக்கின்றது. முதன்விருதை பஸ்நாயக்க நிலமே பெறுபவராக இருப்பார். கர்ப்பக்கிரகத்திலுள்ள யந்திரப் பேழையை பிரதம கப்புறாளை வெளியே எடுத்து வந்துஅலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏறி பவனி வருவார். மாணிக்க கங்கையில் தீர்த்தம் கொடுப்பார். இந்த விழாவில் காவடி எடுத்து வரும் காட்சியே எஞ்சியிருக்கிற தமிழ்ப்பண்பாட்டுக்காட்சி எனலாம். இப்போது திருவிழா நடைபெறும் காலமும் மாற்றப்பட்டு விட்டது.

இப்போது உலகில் இங்கு மட்டும் தான் கத்தறகம தெய்யோ என்று கடவுள் பெயருக்கு காசோலை (செக்) எழுதி உண்டியலில் போட்டால் அது வங்கிகளில் செல்லுபடியாகும் என்ற நடைமுறை இருக்கின்ற அளவில் ஆட்சியாளர்களின் ஆதரவு கத்தறகம தெய்யோவிற்கு கிடைக்கின்றது.

Views: 1151