காதல் தினம் - காமன் விழா - இந்திர விழா

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

காதலர் தினம் - காமன்விழா - இந்திரவிழா 
 
பல்கலைக்கழகம் இறுதியாண்டு கல்வி முழுதுமாக வைத்தியசாலையை மையப்படுத்தியதாகவே அமைந்தது. அடுத்து வரும் வருடங்களில் internship க்கு தயார்படுத்தல், அதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா தீத்திட்டு இருந்தத ஒரே அடியா இடிச்சு வாய்க்குள்ள அனுப்பிடனும் எண்டு வாத்திமாரும் அவழத்தையும் சிக்காம விக்கமா விழுங்கிடனும் எண்டு பொடியலும் வாட்டுக்குள்ளேயே சுத்திட்டு திரியுரகாலம்.
 
மெடிசின் அப்போய்மெண்ட் எண்டா இன்னும் சொல்லதேவையில்ல. இன்னும் பத்து நிமிசம் இருக்கு நாங்க வேணும் எண்டா ஒரு long case  பாக்கலாம் இல்லை எண்டா ஒரு ரெண்டு short case செய்யலாம் இல்லை நீங்க விருப்ப பட்டா நாங்கள் வீட்ட போகலாம் எண்டு 4.50 pm க்கு தெய்வத்திட்ட வதைபட்ட நாட்களும் உண்டு. 
 
விடுதிக்கும் வாட்டுக்கும் இருக்கும் நடை தூரத்தில் வாட்டில் இருக்கும் நோயாளிகளை ஞாபகப்படுத்தல், அவர்கள் பிரச்சனைகளை பரிசோதனை முடிவுகளை பட்டியல் படுத்தல், அவர்கள் தொடர்பாக தெய்வம் என்னிடம் கேக்கும் என நான் எதிர்பாக்கும் வினாக்களுக்கு விடைகளை தயார்படுத்தல் என அந்த 500M இலும் குறைவான தூரம் கூட ஒவ்வொரு மாணவனுக்கும் அது அதிக வேலைப்பழு நிறைந்த தூரம். 

இப்படியாக 24 X 7 நாட்களும் ஒரே மாதிரியாக அமைந்த ஒரு நாளில் அன்று முதல் கட்டிலில் இருந்த எனது heart failureஆச்சியை நினைத்து கொண்டு நான் நடந்து கொண்டிருந்தேன். அதற்கு முன்தினம் காதருகே வளர்ந்திருந்த கேசத்தினை விரல்களால் உரசி இது fine crepitation மறுபடியும் காதருகே கடாதாசி ஒன்றை கசக்கி இது  coarse crepitation எனவும் எத்தினையோ தரம் நாங்க படிச்சுருக்கிறோம் என் தெய்வம் தோழன் ஒருவனை இம்சித்தையும், தோழி ஒருத்தியின் விரல்களை பிடித்து  percussion படிப்பித்தையும் நினைத்து இண்டைக்கு எனக்கு என்ன நடக்க போகுதோ எண்டு வயித்துகுள்ள வண்ணாச்சிபூச்சி பறக்க இஸ்ட தெய்வங்களை எல்லாம் கும்பிட்டு கொண்டு வாட்டுகுள்ள புகுந்தன்.  

முழிவளம்  Ward sister ஆ டொக்டர்.. குட்மோர்னிங்.  Congratulations. இண்டைக்கு என்ன ஸ்ப்பெசல்...?' 
ஜய்யயே காலங்காத்தால இண்டைக்கு என்ன causality ஆ ஒரு வேளை மறந்துட்டமோ என என்னை நானே கடிந்து கொண்டு ' குட்மேர்னிங் சிஸ்டர். என்ன causality ஆ இண்டைக்கு...??' 
'என்ன தம்பி  Valentine's Day தெரியாம causality   ஆ எண்டு கேக்குறீங்க....?'  
எனக்கு யாரோ நடு உச்சில ஆணி அடிச்ச மாரி இருந்துச்சு 'ஆ.. அதுவா..?' எண்டு சிஸ்டர சமாளிச்சுட்டு எட Valentine's Day மறக்குற அளவு படிப்பா எண்டு என்னை நானே நிந்தித்து கொண்டு சரி நாம தான் யார்க்கும் வாழ்த்தல நமக்கு யாராவது வாழ்த்தியிருக்கிறாங்களா எண்டு பார்த்து ஏமந்து மீண்டும் மனதை நோகடிக்க பண்ணிகொண்டு வழமை போல் 24 X 7 நாட்களில் ஒன்றாகிய நாள் ஆகியது அன்று

காதலர்தினம் அல்லது வலன்டைன்ஸ் டே காதலர்களுக்கு சிறப்பான தினமாக (உண்மையை சொல்லபோனால்....) உலகம் எங்கும் கொண்டாட படுகிறது. இது ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரேமினை ஆட்சி செய்த Claudius 2 மன்னன் காலத்தில் அரச சட்டமாக இளைஞர்கள் காதல் , திருமணம் செய்யகூடாது என சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து st valentine எனும் பாதிரியார் இரகசிய காதல் திருமணங்களை நடத்தி வைத்தார். இதற்காக அவர் சிறை பிடிக்கப்பட்டார். சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண்தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் ஏற்பட அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ்கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள். ஆனாலும் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானார்.  

விழி இருந்தும் வழி இல்லாமல் - மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க வழி இழந்து, 
நீ மன வலி தாங்காது கதறும் ஒலி கேட்டும், 
உனை மீட்க வழி தெரியாமல் மக்களுக்காக பலியாடாகப் போகிறேன் - நீ 
ஒளியாய் வாழு! பிறருக்கு வழியாய் இரு!! 
சந்தோஷ ஒளி உன் கண்களில் மின்னும்!!  

என எழுதி முடிவில்  'உன்னுடைய வலண்டைனிடமிருந்து' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அவர் நினைவாக Valentine's Day  அனுசரிக்க படுவத்தாய் வரலாறுகள் கூறுகின்றன. இந் நிகழ்வுகள் கி.பி 240 ஆம் ஆண்டுப்பகுதிகளில் இடம் பெற்றதாகவும் 200 ஆண்டுகளின் பின்பு அனுஸ்டிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இதனால் பழைய காலத்தில் ரோமில் ஆடல் பாடலுடன் பெப்ரவரி 13 தொடக்கம் 15 வரை கொண்டாடப்பட்ட விழாவான லூப்பர் கேலியா காணாமல் போனது என்பது குறிப்பிட தக்கதாகும்.
 
இது போன்றே சீனர்களின் காதலர் தினம் ஒரு சுவாரஸ்யமான கதையுடன் தொடர்புபட்டது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம். 

இது போன்றே தமிழர் நம் பாரம்பரியத்திலும் காதலை கொணடாடிக் களித்த விழா காணப்படுகிறது. அக்கொண்டாட்டமே காதலை கொண்டாடும் கொண்டாட்டங்களில் காலங்களில் முந்தியது என கூறினால் யார் நம்புவார்கள்?. சோழன் செம்பியன் (கி.மு 3-ம் நூற்றாண்டுக்கும் முந்தியவன், கடைச்சங்கத்திற்கும் முற்பட்டவன்) பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது தமிழர் வரலாற்றில் காதலை கொண்டாடும் இரு முக்கிய விழாக்களான காமன் விழா மற்றும் இந்திர விழா  காணப்படுகின்றன. எனினும் காமன் விழா என்பது வடநாட்டிலும் கொண்டாடப்பட்ட விழாவாகும். இது பங்குனி மாத பௌர்ணமியில் கொண்டாடப்பட்டது இன்றும் இவ்விழா ஹோலிப் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. அந்தப் பண்டிகை, பண்டைய தமிழ் நாட்டில், தெய்வத்தின் திருமண நாளாக  பங்குனி உத்திரத் திருநாளாக, எல்லாக் கோவில்களிலும் கொண்டாடப்பட்டது. திருவரங்கத்தில் அத்திருநாள் கொண்டாடப்பட்ட விதம் அகநானூறிலும் சொல்லப்படுகிறது. இனி இந்திர விழா பற்றி நோக்கலாம்.

தமிழ் நாட்டில் இந்திரனுக்குக் கோவிலும், விழாவும் தொன்று தொட்டு இருந்திருக்கின்றன. தொல்காப்பியர் கூறும் ஐவகை நிலங்களில் மருத நிலத்துக்குக் கடவுள் இந்திரன் என்பது தவிர்க்கமுடியாத உண்மையாகும். இந்திரனுக்குரிய கோவில் அவனின் ஆயுதமான வஜ்ராயுதம் முன்னிறுத்தி வஜ்ரக் (வச்சிரக்) கோட்டம் எனப்பகிறது. இதனை புறநானூற்றுப் பாடல் 241 இல் காணமுடியும். இவ்வாறு போற்றப்பட்ட இந்திரனுக்காக எடுக்கப்பட்ட விழா இந்திர விழாவாகும். 

இந்திர விழாவானது சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்கு சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீஷரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். 

இவ்விருவிழாக்கள் பற்றிய தகவல்களை சிலப்பதிகாரத்தில் தெளிவாக காணக்ககூடியதாகவுள்ளது. வட நாட்டில் இருந்து இந்திர விழாவைக்காண விஞ்சை வீரன் எனும் இளைஞன் தன் துணையுடன் புகார் நகர்க்கு வந்தான் என்கிறார் இளங்கோவடிகள்.  மேலும் அவன் வடசேடி எனும் நாட்டைச் சார்ந்தவன் என்றும் கூறுகிறார். தேசம் கடந்து காதலை கொண்டாட ஆடவரும் மகளீரும் ஒனறு சேரும் விழாவாக இந்திர விழா அமைந்திருந்து என்பது கவனிக்கத்தக்க தொன்றாகும். இவ் இந்திரவிழா சோழநாட்டுக்காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.  

 எடுக்கும் முறையையும், கொடியேற்றும் முறையையும், 
 
„இந்திரவிழாவைக் கொண்டாடும்போது என்னென்ன செய்ய வேண்டும்? எவ்வாறெல்லாம் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்? என, நெடுங்கோட் செம்பியன் குறிப்பிட்டதாக மணிமேகலை தெரிவிக்கின்றது.

'காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணல் பரப்புங்கள், ஊர் அம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரைகளை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களைக் காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில் மலர்ச்சோலைகளில் குளிர்ந்த மணலை உடைய ஆற்றங்கரையில் மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்'என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான். 

இச்செய்திகளைத் தொகுத்துக் கூறும் மணிமேகலைப் பாடல்கள் வழியாகக் காதற் பெருவிழாவுக்கு இருந்த பெருமையை நாம் உணர்கின்றோம். விழாக்காலத்தில் காதலர் தங்குவதற்காக „மூதூர்ப் பொழில்' என்ற சிறப்பிடம் அமைக்கப்பட்டிருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. அந்த இடத்திற்கு „இளவந்திகை‟ என்ற பெயரும் இருந்திருக்கின்றது. இந்தப் பூங்கா அழகிய பெருஞ் சோலையாக அமைக்கப்பட்டிருந்திருக்கின்றது. இளவேனிற்காலத்தில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு),  வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய பூக்களைப் பூக்கும் மரங்களையும் மலர்க்கொடிகளையும் பூங்காவில் வளர்த்திருந்தனர் என்ற செய்தியையும் மணிமேகலை பகிர்கின்றது. 

அதே போன்று இவ்விழா எவ்வாறு கொண்டாடப்படவேண்டும் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. 

'ஐவகை மன்றத்து அரும்பலி யுறீஇ வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தங்கிய கொள்கைத் தருநிலை கோட்டத்து மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து' 

(சிலம்பு: இந்திரவிழவூரெடுத்தகாதை 140-146)  என்று விளக்குகிறது.  

கால்கோள் - விழாவின் தொடக்க நாள கடைநிலை - விழாவின் முடிவு நாள். கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா 28 நாள்கள் நடைபெறும். இருபத்தெட்டாவது நாள் கொடியிரங்கி விழாவை நிறைவு செய்து கொண்டாடுவர். அந்த நாளே சிறப்புப் பூசனைக்குரிய விழா நாளாகும். காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள ஐந்து வகை மன்றங்களிலும் வழிபாடு செய்துவிட்டுக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த முரசை எடுத்து அரசனுடைய யானையின் மேல் ஏற்றி, இந்திர விழா தொடங்கும் நாள், முடியும் நாள் ஆகியவற்றை முரசறைந்து நகர மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.விழாத் தொடங்கும்போது கற்பகத்தருக் கோட்டத்தில் உள்ள ஐராவதம் என்னும் யானையின் உருவம் வரையப்பட்ட கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து, தருநிலைக் கோட்டத்தில் வானுயர உயர்த்தி கால்கோள் விழா செய்தனர். 

இவ்விழாவின் (கால்கோள்) போது நகரங்களில் உள்ள நெடுநிலை மாளிகைகளின் வாயில்கள்,முத்துக்கள் நிறைந்த மகரவாசிகை, தோரணங்கள், பசும்பொற்பூரண கும்பம், பொலிந்த பாலிகை, (முளைப்பாரி) பாவை விளக்கு, பசும் பொற்படாகை (கொடி)  தூமயிர்க்கவரி, சுந்தரச் சுண்ணம் ஆகிய மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.இத்தகைய மாளிகைகள் நிறைந்த நெடுவிதிகளில் ஐம்பெருங்குழுவினராகிய (அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணம்) எண்பேராயத்தினராகிய(கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர மாந்தர், நனிபடைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர்) ஆகியோர், அரசகுமாரர், பரத குமாரர்(வணிகர்) கவர் வரிப்புரவியராகிய விரைந்து செல்லும் குதிரைப்படை வீரர்கள், யானைப்படையினர், குதிரைகள் பூட்டிய தேர்ப்படையினர் ஆகியோர் ஒனறு; சேர்ந்து அரசனின் கொற்றம் மேலும் மேலும் மேம்படுவதற்கு வாழ்த்திச் செல்வர். அவ்வாறு வாழ்த்திக் கொண்டே தண்ணறுங்காவிரி பெருந்துறையிலிருந்து புண்ணிய நன்னீர் பொற்குடத்தேந்தி வந்து மண்ணகம் மருள, விண்ணகம் வியப்ப விண்ணவர் தலைவனாகிய இந்திரனை விழுநீராட்டினர். மன்னர்களின் முடிசூட்டுவிழா போன்றுதான் இந்திரவிழாவின் போதும் நகரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு அரச அதிகாரிகள் புடைசூழ இந்திரனுக்கு அபிஷேஹம் செய்யப் பட்டது. எனவே அரசர்க்கெல்லாம் அரசனாகவும் தெய்வமாகவும் திகழும் இந்திரனுக்கு வருடந்தோறும் மன்னர்கள் தாங்கள் முடி சூட்டிய அன்றோ வேறோர்  நாளிலோ நடத்தப்படும் அபிஷேக விழாவாகிய முடிசூட்டு விழாதான் இந்திர விழா என்றும் குறிப்புகள் உள்ளது. இதற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஒர் உப கதையும் காணப்படுகிறது. முன்பொரு காலத்தில் வட சேடியை 'உபரிசர வஸு' என்னும் மன்னன்  ஆண்டு வந்தான். அவனைப் பற்றிய கதையை புராணங்களிலும், இராமாயண, மகா பாரதத்திலும் காணலாம். அவன் இந்திரனுக்கு நண்பன். இந்திரன் அசுரர்களை வெல்ல, நாராயணன் அருளால் நான்முகப் பிரம்மனிடமிருந்து ஒரு கொடியைப் பெற்றிருந்தான். பிறகு அதைத்  தன் நண்பனான உபரிசர வஸுவிடம் கொடுத்தான். உபரி சர வஸு தன் நாட்டில் அதை ஏற்றி  மிக விமரிசையாக விழா எடுத்தான். அந்த விழா எடுக்கும் மன்னனைப் பகைவர்கள் வெல்ல முடியாது. அந்த நாட்டு மக்கள் சுகத்துடன்  வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.  இக்காரணத்தாலும் இந்திர விழா அரச அனுசரனையுடன் வெகு விமர்சையாக இ;டம் பெற்றிருக்கலாம். சேடி மன்னர் இந்திரவிழா கொண்டாட ஆரம்பித்த பின்னர் தான் இந்திர விழா பிற நாடுகளிலும் பரவியிருக்கிறது.  வசு வாழ்ந்த காலம் கி.மு. 5,6 ஆம் நூற்றாண்டாகும்.  வசுவால் விழா எடுத்துக் கொன்டாடப்படுவதை அறிந்த இந்திரன், 'எனக்கு மகிழ்ச்சியுடன் விழா எடுக்கும் அரசர்களும் பிறரும் சிறந்த தகுதியை அடைவார்கள்' என்று கூறினான் என்கிறது மகாபாரதம்.  சேடிமன்னன் வசு தொடர்ந்து இவ்விழா எடுத்து வந்ததால் தொடர்ந்து கடவுள்களுக்கெல்லாம் அரசனாக விளங்கினான் என்றும் மஹாபாரதம் கூறுகிறது.  

இரகு வம்சதில், 'எந்த அரசன் இந்திரனுக்கு விழா எடுத்துக் கொடி நாட்டுகிறானோ அந்த அரசனுடைய நாட்டில் சந்தேகமேயில்லாமல் வேண்டிய அளவு மழை பெய்யும்' என கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இந்திர விழாவும் மன்னர்கள் முடிசூட்டு விழாவும் ஒரே மாதிரியான விழா சிறப்புடன் ஆடம்பரமாக கொண்டாடப்பட்ட விழா என தெரிய வருகிறது.  அதனால் தான் சிலப்பதிகாரம், இந்திர விழா, கரிகால் சோழனின் தண்பதங்கொள்ளும் (முடி சூட்டு விழா) தலை நாள் போல இருந்தது எனக் கூறுகின்றது. மகாபாரதமும் சேடி மன்னன் முடிசூடிய தினத்தில் தான் வருடந்தோறும் இந்திர விழா கொண்டாடப்பட்டது என்கிறார் 

பதின்மூன்று ஆண்டுகளாக இந்திரவிழாவில் கலந்து மகிழ்ந்து கொண்டாடிய கோவலனும் மாதவியும் தமது பதின்மூன்றாவது ஆண்டு இந்திரவிழாவின் போதே பிரிவுறுகின்றனர் என்ற குறிப்பு மூலம் இடைவிடாது பூம்புகாரில் இந்திர விழா கொண்டாடப்பட்டதையும் அதற்கு அனைவரும் சென்று மகிழ்ந்திருந்தனர் என்பதையும் எடுத்துக் கூறுகின்றது.  

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வசியும் வளமும் (மழையும் செல்வமும்) பெருக வேண்டி வாழ்த்தி விழா எடுக்கப்பட்டதைக் கூறுகிறது. மணிமேகலையில் இந்திரவிழா எடுக்கத்தவறும் அரசர்களின் ஆநிரைகளையும் ஆடுகளையும் கடல் கொள்ளும் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத் தக்கது. 

இந்திர விழாவும் மன்னர்கள் முடிசூட்டு விழாவும் ஒரே மாதிரியான விழா என்பது தெரிய வருகிறது. அதனால் தான் சிலப்பதிகாரம், இந்திர விழா, கரிகால் சோழனின் தண்பதங்கொள்ளும் (முடி சூட்டு விழா) தலை நாள் போல இருந்தது எனக் கூறுகின்றது.  மகாபாரதமும் சேடி மன்னன் முடிசூடிய தினத்தில் தான் வருடந்தோறும் இந்திர விழா கொண்டாடப்பட்டது என்கிறார். 

கடைச்சங்கத்திற்கு முன்னவனான செம்பியன் காலத்திருந்தே கொண்டாப்பட்ட இப்பெருவிழா சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில் கைவிடப்பட்டதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. தன் குழந்தையைத் தவற விட்டுவிட்ட நெடுமுடிக்கிள்ளி, குழந்தையைக் தேடுவதில் மூழ்கியிருந்ததாலும், குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தாலும், விழாக்களில் விருப்பற்று இருந்ததாலும்,  காமன் விழாவைக் கொண்டாட மறந்துவிட்டான் என மணிமேகலைப் பாடல் ஒனறு கூறுகின்றது. 

சிலப்பதிகார காலத்திற்கும் மணிமேகலை காலத்திற்கும் இடையே ஒரு கடற்கோள் இடம் பெற்று புகார் நகரம் அழிந்திருக்கின்றது. இந்திரவிழா நடைபெறாமற் போனதால் இந்திரன் கோபமுற்று விடுத்த சாபத்தாலேயே கடற்கோள் எழுந்து புகார் நகரை அழித்தது என, அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறுகின்றார். அதுபோன்று பின்னாளில் காதல், மணவாழ்வு என்பவற்றைப் புறந்தள்ளி துறவறத்தைப் பெரிதும் போற்றிய சமண, பௌத்த மதங்கள் தமிழகத்திலே வலுவாகக் காலூன்றியதாலும், ஆட்சியாளர் அம்மதங்களைத் தழுவி நின்றதாலும் அரசு தழுவிய காதல் விழாக்கள் வழக்கற்றுப் போயின. அது போன்றே திருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை, அதற்குரிய ஏற்பாட்டை கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார். இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருஸ்ணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். கிருஷ்ணரின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டான். அன்றில் இருந்து கோவர்த்தன பூஜை செய்வதன் மூலம் செல்வம், புகழ். அழகு என்ப கிடைக்கும் என்ற ஜதீகம் ஏற்பட்டது. என கிருஸ்ணலீலையில் குறிப்பிடப்படுகிறது.   இது போன்ற காரணங்களால் பிற்காலத்தில் இந்திர விழா கொண்டாடப்படாது போயிருக்க கூடும். எது எவ்வாறாயினும் பல்வேறு உப கதைகளைக் கொண்டு தோற்றம் பெற்ற இந்திர விழா அனைத்து மக்களையும் ஒனற்pணைத்து காதலை, வெற்றியை, மகிழ்வைக் கொண்டாட துணை நின்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத விடமாகும். தமிழர் தம் வாழ்வின் கொண்டாட்டங்கள் சமூக ஒனற்pணைவினை ஏற்படுத்தி வலுவுடைய சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிந்தது என்பதில் அனைவரும் பெருமை கொள்ளவேண்டிய விடயமாகும்.  
 
இனி காமன் விழா பற்றிய சற்று ஆராயலாம். 

காமத்தை கொண்டாட மறந்த இலக்கியங்கள் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு காமம் அல்லது காதல் மனித வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகிறது. அதனால் தான் எழுத்து, சொல் எனும் இருபெரும் மொழிப்பகுப்புகளுக்கு மட்டும் இலக்கணம் எழுதாமல் மனித வாழ்வுக்கும் சேர்த்து இலக்கணம் எழுதிய சிறப்பு நூல் தொல்காப்பியம் காதலைப்பற்றி கூறுகின்றது. பொருளதிகாரத்தில் அக இலக்கியத்தில் களவியல் என்னும் ஒரு பகுதியுண்டு. தொல்காப்பியர் குறிப்பிடும் களவு என்பது, „ஆண், பெண் எனும் ஒத்த இயல்புடைய காதலர் இருவர் மனமொருமித்து மறைந்தொழுகும் ஒழுக்கம்‟ என்பதாகும் என்கிறார். பெற்றோர் கொடுக்கக் கொள்ளாது தாமே எதிர்ப்பட்டு விரும்பிய உள்ளத்தோடு மறைந்து உறவாடுவதினால், இது களவு எனப்பட்டது என்கின்றனர் உரையாசிரியர்கள். வடமொழியாளர் வகுத்த எட்டு வகையான திருமண முறைகளில் ஒனற்hன காந்தர்வ திருமணமுறைக்கு ஒப்பானது ஆகும். இந்தக் களவு என்பதை, 


„....மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் 
துறையாமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே‟        தொ. பொ. 92  


பொருளதிகாரத்தில் 92 முதல் 141 வரையிலான சூத்திரங்களால் களவியல் வாழ்வின் இலக்கணங்களைக் கூறியிருக்கின்றார் தொல்காப்பியர். அகத்தியம் போன்ற பழம்பெரும் இலக்கண நூல்களின் தொடர்ச்சியான தொல்காப்பியம்,காதல் ஒழுக்கத்தைப் பெரிதும் போற்றி இலக்கணம் வகுத்திருக்கின்றது. சங்க இலக்கியங்கள் பதினெட்டில் பெரும்பாலானவை காதற்சுவை மிக்க அக இலக்கியங்களே. உலகப்புகழ் பெற்ற அறநூலான திருக்குறளை எழுதிய வள்ளுவர் காதலைப் போற்றியதைப் போன்று எவரும் போற்றவில்லை. காதல் என்ற சொல்வழக்கு பிற்காலத்தேதான் தோன்றியது. காமம் என்ற சொல் கொண்டே முன்னோர் காதலைக் குறித்தனர். திருக்குறளின் மூன்றாம் பகுப்பு காமத்துப்பால் என்றே அழைக்கப்பட்டது.  காதலுக்கு என கடவுளை வைத்து வணங்கி கொணடாடி மகிழ்ந்த முறை எம் சமூகத்தில் தொன்று தொட்டு வந்த முறையாகும்.  

காமன் எனும் பெயர் காதற்கடவுளான மன்மதனைக்குறித்து நிற்கிறது. ரதி எனும் துணையுடன் சேர்ந்து காதல் உணர்வை உயிர்களிடையே ஏற்படுத்தி உலகின் உயிரினதோற்றத்திற்கு துணைநிற்பதை தலையாய கடமையாக் கொண்டவன். இவ்வாறான வல்லமை கொண்ட காமதேவன் சிவனின் நெற்றிக் கண் கொண்டு எரிக்கப்பட்டு மீள உயிர் கொண்ட நிகழ்வு காமன் விழா என கொண்டாடப்படுகிறது. சரி ஏன் எரிக்கப்பட்டான் என்பதை இக்கட்டுரையில் சொல்லி விடுவது பொருத்தமானது. சூரபத்மனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தேவர்கள் சிவனைநோக்கி தவம் புரிந்தனர் தவத்தின் முடிவில் சிவன் தோன்றி தன் குமாரனால் சூரபத்மன் வதைக்கப்படுவான் என வரமருளினார். ஆனால் அப்போது சிவன் மணம் முடிக்காதவராக இருந்தார். அவரை மணம் முடிக்க பார்வதி தேவி இமவானின் மகளாக பிறந்து சிவனை நோக்கி தவம் இருந்தார். ஆனால் சிவன் திருக்கைலாயத்தில் தட்சணாமூர்த்தியாக மோனத்தவத்தில் இருந்தார். அவர் தவநிலை கலைந்து பார்வதியை மணந்தால் தான் சூரபத்மனிடம் இருந்து விடுதலை பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்த தேவர்கள் சிவனின் தவதை;தைக் கலைக்க மன்மதனை நாடினார்கள். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்ற மன்மதன் சிவனின் மேல் கரும்பால் செய்த வில்லைக் கொண்டு மலர்க்கணைகள் தொடுத்தான். மோனத்தவநிலை கலைந்த சிவன் கோபம் கொண்டவராக மன்மதனை நோக்க அவன் எரிந்து சாம்பலானான். இதனை கேள்வியுற்ற ரதி சிவனிடம் மன்னிப்பு வேண்ட சிவன் தன் திருமணநாளில் அவனை உயிர்ப்பித்பதாக வாக்களித்தார். அவ்வாறே அவனை (அனங்காக) ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிபவனான உயிர்ப்பித்தார். இவ்வாறு காமகதனம் நடந்த நாள் காமன் விழாவாக்க கொண்டாடப்படுகிறது. இது பத்து முதல் பதினாறு தினங்கள் கொண்டாடப்பட்டு இநுதி நாளான்று காமன் உயிர் பெற்ற திருநாளாக கொண்டாடி மகிழ்வது வழக்கமாக காணப்படுபகிறது. இது பண்டைத்தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும்
.  
இந்திரனைப் போன்று காமனுக்கும் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடியிகிறது. 'காமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறு கடுந்திண்டேர் கடவி நாம் அமர் காதலர் தணைதந்தார் விரைந்தே' (கலி 27) என கலித் தொகையில் குறிப்பிடப்படுகிறது.  ஊரிலே காமவேள் விழா நடப்பதைத் தலைவி கண்டால் கலங்குவாளே‟ எனக் கருதித் தலைவன் திண்மையான தேரேறி வந்ததாகக்  கலித்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது. காமவேள் விழாவின் போது காதலர் மகிழ்ந்துலாவி களி கொண்டு விளையாடுவர் என்பதை மற்றுமொரு பாடல் புலப்படுத்துகின்றது. 'மல்கிய துருத்தியுள் மகிழ்ந்துணைப் புணர்ந்தவர் வில்லவன் விழாவில் விளையாடும் பொழுதன்றோ.' (கலி 35).  இதே போன்று சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் காமவேள் விழா பற்றி கூறப்படுகையில் 'வெண்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுள்ளன்' என்படுகிறது. மன்மதன் கோவிலை காமவேள் கோட்டம் என சிலப்பதிகாரம் கூறுகின்றது. கானா திறம் உரைத்த காதையில் தேவநந்தி கண்ணகியிடம் 'சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய புண்ணிய தீர்த்ங்களின் துறைகளில் மூழ்கி காமவேள் கோட்டம் சென்று காமதேவனை தொழும் மகளீர் தம் கணவனுடம் கூடி பிரியாத வாழ்வு வாழ்ந்து இன்புறுவர்'; என்று கூறுவாள் அவள் கூற்றின் வாயிலாக காமனுக்கு இருந்த கோவிலை பற்றி அறியமுடிகிறது.  காமன் விழா பாவை நோன்பின் ஒர் பிரிவாகவும் கருதப்பட்டு வருகிறது. தான் விரும்பும் ஒருவரை அடைவதற்காகவும், கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்காகவும் காமன்விழா கொண்டாடப்பட்டதை நாச்சிமார் திருமொழியும் கூறி நிற்கிறது.  'தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள், ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா, உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன், வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே'  இப்பாடல் மூலம் காமன் விழா அனுஸ்டிக்கப்பட்ட முறையினையும் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இளவேனில் காலம் மன்மதனுக்குரிய காலமாகும்.  சோழ அரசனான தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் என்பான் பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க காமன் விழாவை அரச விழாவாக நடத்த ஆரம்பித்தான் என்ற செய்தியும் உண்டு. இந்த மன்னன் „சங்ககாலச் சோழ மன்னருள் ஒருவனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன்‟ என புறநானூறு (49) கூறுகின்றது. தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் மாசித்திங்களில் கால்கோல் இட்டு பங்குனித் திங்கள் சித்திரைநாள் வரை 28 நாட்கள் இந்த விழாவைக் கொண்டாடினான் என மணிமேகலை கூறுகின்றது. பின்பனிக்கால நிறைவில் இளவேனிற் காலத்தின் தொடக்கத்தில் நாடு புதுப்பொலிவுறத் தொடங்கும். மரஞ்செடி கொடிகள் தளிர்த்துப் பூக்க ஆரம்பிக்கும். இதனை வசந்தகாலம் என்றும் கூறுவர். வசந்தன் என்பது காமனின் மறுபெயர். ஆணும் பெண்ணும் காதற்பெரு விருப்போடு களிகொள்ளும் காமன் காலம் இதுவென உறுதிபடத் தெரிகின்றது. 

எது எவ்வாறாயினும் காதலை மதித்து அதனை கொண்டாடிய மரபு நம்பிடையே தொன்று தொட்டு காணப்பட்டிருந்தது என்பதை தெளிவாகக் காணமுடிகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் செயன்முறையில் நாம் எம் பல பண்டிகைகளை கைவிட்டு மேலைத்தேசத்திடம் கடன் வாங்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்நேரத்தில் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. 

உண்மையில் இந்திரவிழா பற்றிய தேடுதல்களில் ஆரம்பித்ததே இந்த ஆய்வு. ஒவ்வொரு வருடமும் வல்வையில் இந்திரவிழா இன்னமும் சிறப்பாக நடக்கிறது. யாழ்பாணத்தில் நடைபெறும் மிகவும் பிரத்தியேக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படிகிறது. பல்கலைக்கழக ஆரம்ப காலப்பகுதியில் நண்பர்களுடன் இணைந்து இந்திரவிழா கொண்டாட்டங்களில் களிப்புற்று இருந்த நாட்கள் இனும் நினைவில் உள்ளது. வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்த திருவிழா அன்று இரவு நடைபெறும் இந்திரவிழா. முன்னர் இந்திரவிழா சிறப்பாக நடைபெற்ற காலங்களில் பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான பகுதி வாழை, சவுக்கு மரங்கள் மற்றும் மின்குமிழகள் உட்பட்ட சோடனைகளால் அலங்கரிக்கப்படுவதுடன், இந்து சமயத்தை பிரதிபலிக்கும் மிகப் பிரமாண்டமான உருவப்படங்கள் வீதி தோறும் வைக்கப்படுவது வழமையாம். இந்திரவிழாவின் பிரதான நிகழ்வுகள் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் இடம்பெறுவதுடன், வேம்படி, குச்சம், ரேவடி, வல்வெட்டிதுறைச் சந்தி, மதகடி, அம்மன் கோயில், ஆலடி மற்றும் ஊரிக்காட்டு பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுவதும் வழமையாம் என பெரியவர் ஒருவர் பெருமூச்சுவிட்டு கொண்டதை வைத்து அவர் இளமை காலங்களில் எவ்வளவு தூரம் இந்திர விழாவினை அனுபவித்துள்ளார் என்பதினை என்னால் ஊகிக்கமுடிந்தது. இலங்கையின் இதரபகுதிகளில் இந்திரவிழா கொண்டாட்ங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மலையகதில் காமன் கூத்து இன்னமும் பிரபல்யமே. ஒருநாள் இரவு முழுவதும் நடக்கும் என தோழி ஒருத்தி கூறினார். அடுத்தவருடம் தவறாமல் காமன்கூத்து போய்பார்க்கவேண்டும் என உறுதியாக உள்ளேன்.   வல்லை இந்திரா விழா மற்றும் மலையக காமன் கூத்து  எதை அடிவேராக் கொண்டுள்ளன என்பது பற்றிய சிந்தையில் மூழ்க்கத் தொடங்குகிறேன்


உசாத்துணை 
1.காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும் - சோதிமலர் ரவீந்திரன்
2. சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக்கோலங்கள் - இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு 2003
3. சிலம்பு மேகலை - பா. சிவராமகிருஸ்ணன்
4. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm
5. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p10413fr.htm
6.https://www.olrl.org/lives/valentine.shtml
 
Views: 1620