பஞ்சானும் குஞ்சும் படிச்ச கவி கொஞ்சமில்லை

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.comBanner

சம்பவம் 01

நேற்று

'தட்டி உட்ட வட்டாவும்
தாமரப்பூ கிள்ள வெட்டும்
பொன்னான பாக்கு வெட்டியும்
போட்டுச் சப்ப ஆருமில்ல'

'அந்தக் கிழவனுக்கு வேற வேல ஒண்டும் இல்ல விறாந்தையில இருந்து கொண்டு எந்நேரமும் முணுமுணுத்துக்கு இருக்கிறதுதான் வேலை' என்று கடிந்து கொள்கிறாள் சீமா. வைரக்கற்கள் கொண்ட ஒரு பெரும்புதையல் கவனிப்பாரற்ற ஒரு தரிசுநிலத்தில் இருப்பதைப் போல, ஆங்காங்கே சில குடிசைகளில் இந்தக் கிழட்டுக் குரல்களின் கவி முணுமுணுப்புகள் இன்னும் சில எண்ணக்கூடிய வருடங்கள்தான் உயிர்ப்புடன் துடிக்குமோ என்று எண்ணத்தோன்றுவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை.

சம்பவம் 2

இன்று

ஐந்து வருடத்திற்கு முன்னர் மூத்தப்பா உயிரோடு இருக்கும் போது அலைபேசியில் பதிந்தெடுத்த சில கவிகளை கணணியில் பதிவு செய்து மீளக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அருகில் பார்த்துக் கொண்டிருக்கிற நண்பனின் முகம் மாறிப்போய் ஒரு ரசனையே இல்லாத, இளைஞர்களின் நாகரீகத்திற்கொவ்வாத ஒரு பிராணியை பார்ப்பது போல் கடுகடுத்துக் கொண்டு, மன்னிக்கவும் என்னைப் பார்ததுப் பரிதாபப்பட்டுக் கொண்டு எழுந்து சென்றான். அவன் ஹிப்ஹொப் காலத்து இளைஞன். இது முரண்நகையான விடயம்தான் என்றாலும், யார் யாரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும் என்கிற நிலை தொடர்பிலோ அது தொடர்பில் தர்க்கத்தில் ஈடுபட்டு புரியப்படுத்த வேண்டிய நிலையிலே எனது சீவியத்தை கழித்து நான் எஞ்சியிருக்கிற ஒரு சில வார்த்தைகளையும் காற்றில் கரைவதற்கு முன்னர் தேடி எழுத்திற் பதிக்காமல், எதிர்காலத்தின் கடனாளியாவதை விரும்பவில்லை.

அந்தக் கிழவனின் முணுமுணுப்பு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னரான அவரின் பொழுது போக்கு நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்கின்றது. வானொலிகளற்ற, அலைபேசிகளற்ற வாகன இரைச்சல்களற்ற, காற்றில் சலசலக்கும் கானகத்து மரங்களினதும், பட்சிகளினதும், வயல்வெளியின் தண்ணீர் சலசலப்புகளினதும் ஓசைகளுக்கு பழக்கப்பட்டுப்போன வேட்டை வீரர்கள் இன்று சாய்வு நாற்காலிகளில் தஞ்சம் கொண்டிருக்கின்றனர் 

கிழக்கிலங்கை முஸ்லிம் நாட்டார் கவிகள்  

கிழக்கிலங்கை என்பது திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பைக் குறிக்கின்றது. கடல் வளமும், கழனிகளும், காடுகளும் இந்நிலப்பரப்பிற்கு எழில் சேர்க்கின்ற அதே வேளை இங்குள்ள மக்களின் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்துள்ளன. இப்பிரதேசம் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிந்தைய காலம் வரை பெருமளவு பாரம்பரியங்களில் திழைத்துப் போயிருந்தது. ஈழத்து மக்கட் பண்பாட்டில் தனித்துவமான இயங்கியலைக் கொண்டுள்ள பல பாரம்பரியங்கள் இங்கு நிலவி வந்திருக்கின்றன. அவற்றுள் கிராமியக் கவிகள் எனப்படும் நாட்டார் பாடல்கள் பிரசித்தமானதொரு பங்கை வகிக்கின்றன. எழுதப் படிக்க தெரியாத கிராமத்து மக்களினது வாய்வழியாகவே பல நூற்றாண்டு காலம் கடத்தப்பட்டு வந்த செய்திகளின் சாரமாகவும், கிராமத்து மக்களின் அக உணர்ச்சிகளின் வெளிப்பாட்டு சாதனமாகவும் இவை நிலவி வந்திருக்கின்றன. 

கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அவர்களின் வாழ்வியலை ஆராய்கின்றபோது நாட்டார் பாடல்களை தவிர்த்து விட்டு அவற்றைக் கண்டுகொள்வது இலகுவானதொன்றல்ல. இதில் கிழக்குப் பிராந்திய முஸ்லிம் மக்களிடையே வழக்கிலிருக்கும் நாட்டார் பாடல்கள் குறிப்பிடத்தக்க அளவு செழுமையானவையாகக் காணப்படுகின்றன. அவற்றின் எதுகை, மோனை, ஓசை நயம், எளிய சொற்களையும், கடின சொற்களையும் இலாவகமாக கையாளுதல், குறியீட்டுமுறையில் செய்திகளை சொல்லுதல் போன்ற சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. இவை தமிழிற்கும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களிற்கும் இடையே வேரொடி விழைந்த உறவுகளை தூலாம்பரமாகக் காட்டுகின்றன.

இவற்றின் சிறப்பியல்புகளாக பத்து விடங்களை முத்துமீரான் பட்டியற்படுத்தியுள்ளார். 
1. வாய்மொழியாகப் பரவுதல், 
2. தோன்றிய காலத்தை அறுதி செய்வது கடினம்
3. தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுதல்
4. ஒரே சமயத்தில் மாறிய வடிவிலும், நிலைத்த வடிவிலும் வழங்கப்படல்
5. அடி வரையறை இல்லை
6. எளிமையானவை
7. மண்வளச் சொற்களைக் கொண்டிருத்தல்
8. உள்ளதை உள்ளவாறு கூறுதல்
9. மறித்து வருதல்
10. எதுகை, மோனை, அடுக்குத் தொடர் போன்ற இலக்கண அமைப்புகளையும் பெற்றிருத்தல் என்பனவாகும்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கவிகளைப் பகுப்பதில் பல ஆய்வாளர்களும் பல முறைகளைக் கையாண்டுள்ளனர்.   இக் கவிகளை காலவாரியாக பகுக்கின்ற போது 
கி.பி 700 -1500 : பூவல் கிணற்றுக்காலம் 
கி.பி 1501-1796 : கொட்டுக்கிணற்றுக் காலம் 
கி.பி 1796-1948 : கற்கிணணற்றுக் காலம் என்று மருதூர் ஏ மஜீட் பகுத்துள்ளார்.

இவற்றை பொருள்சார்ந்து பகுக்கும் போது  தாலாட்டு, பாலர் பாடல்கள், விடுகதைகள், நகைச்சுவைப் பாடல்கள், நையாண்டிப்பாடல்கள், தொழிற்பாடல்கள், ஆசைக்கவிகள், தூதுவிடு பாடல்கள், பிரார்த்தனைப் பாடல்கள், சத்தியப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பொல்லடிப் பாடல்கள், வழிநடைச்சிந்து, மாப்பிள்ளை வாழ்த்து, மழை வெள்ளம் புயல் போன்றன உணர்த்தும் பாடல்கள் என பலவகையாக பகுக்கலாம். இவற்றுள் சிலவற்றைப் பார்போம்

தாலாட்டு 

ஆராரோ ஆரிவரோ ......
நித்திரைக்கோ நீயழுதாய்
என் நேசமுள்ள பாலகனே
கத்திறத கேட்டு மனம்
கலங்குறதே நித்திரை செய் 
ஆராரோ ஆரிவரோ ......
முத்துக் கலிமாவை 
மவ்னமுடன் மனனஞ்செய்து
நெத்தியின் மத்தியிலே
நிலை நிறுத்தி நித்திரை செய்
ஆராரோ ஆரிவரோ ......
நித்திரையும் மவுத்தாகும்
நினைவெல்லாம் ஹயாத்தாகும்
பத்திரமாய் என்மகனே
பக்தியுடன் நித்திரை செய்


என்று இந்தப்பாடல் நெடித்து செல்கின்றது. இப்பாடல்கள் குழந்தைகளிற்கு சிறுபராயத்திலிருந்தே மார்க்கம் தொடர்பான பரிட்சயத்தை ஏற்படுத்துகின்றன. இன்று வானொலி ஓசைகளினாலும் தொலைக்காட்சி நாடகங்களினாலும் மறக்கடிக்கப்பட்ட தாய் சேய் உறவின் நெருக்கத்தை உண்டாக்கும் இக்கவிகளின் பண்பாடு இன்று எங்காவது ஒரிரு இல்லங்களிலேயே ஒலிக்கின்றது.

ஓரோரோ.... ஓரகண்டே –நீ
ஓராட்டக் கேளாயோ...

என் கண்ணே நீயுறங்கு!
என் கண்மணியே... நீயுறங்கு.

பாலுக்கோ நீயழுதாய்? – என்ரவாப்பா
பசிக்கிதென்றோ நீயழுதாய்?

தேடாத திரவியமே – என்ர வாப்பா
தேன் தேடாப் பாலகனே......

என்று தொடர்கிறது. இப்பாடல்களின் ஓசை நயம், பிள்ளைகளை உறங்கச் செய்வதொடு சொற்பெருக்கையும் (Vocabulary) மொழிவளத்தையும் தாய்மடியிருந்தே பெற்றுக் கொள்ளத் துணை நிற்கின்றன. பிள்ளையின் முகம்பார்த்து தாய் உரையாடுவது பிள்ளையின் மனவளர்சிக்கு பெரிதும் துணைநிற்பதை உளவியலாளர்கள் ஆராய்சிகளில் கண்டுணர்ந்துள்ளார்கள். ஆய்வாளர் கரோலைன் தனது குழந்தை உளவியல் ஆய்வு நூலில் தாலாட்டைப்பற்றி பெரிதும் சிலாகிக்கின்றார். தாலாட்டு தாய்-சேய் இடைத்தொடர்பிற்கு துணைபுரிகின்றது என்பதை வலியுறுத்துகின்றனர்.  இன்னொரு பாடலிலே 

ஓரோரோ ஓரகண்டே – நீ
ஓராட்டக் கேளாயோ

சிற்றெறும்பு, வண்டு, கொசு
தேள், மூட்டை, வெண்கறையான்
குத்தினதோ இத்தனையும் - என்
குலக்கொழுந்தே நித்திரை செய்  

என்று வெகு இலாவகமாக குழந்தைகளிற்கு உயிரினங்களின் பெயர்களை பதியச் செய்கின்றது இந்தப்பாடல். ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்கு பல்வேறு விதமான பாடல்களைப் பாடி உறங்கச் செய்திருந்தாலும் அம்மரபு இன்ற வழக்கொழிந்து வருகின்றது. இது சென்ற தலைமுறையோடு நிறுத்தப்பட்டுவிட்டதை அவதானிக்க முடிகின்றது. எத்தனையோ சொற்செறிவு மிக்க பல பாடல்கள் இன்னும் பதியப்படாமல் மடிந்தும் விட்டன. 

நொடிக் கவிகளும், பாலர் பாடல்களும் 

விளையாட்டுப்பாடல்களைப் பொறுத்தவரை அக்காலச் சிறுவர்கள் தாங்களாகவே அமைத்த பாடல்களும், பெரியவர்கள் ஊட்டிய பாடல்களும், விடுகதை நொடிகளும் மாத்து நொடிகளும் கொண்ட பாடல்களும் உள்ளன உதாரணமாக சில நொடி (விடுகதை) கவிகளைப் பார்க்கலாம்.

காய்க்கும், பூக்கும் , கலகலக்கும்.
காகமிருக்க கொப்பில்லை.  அது என்ன?  (திராய்)

பொட்டுப் போல் இலையிருக்கும், பொரிபோல் பூப்பூக்கும் 
தின்னக் காய் காய்க்கும், தின்னாத கனி கனியும். அது என்ன? (முருங்கை)

எட்டுக்கால் ஊன்றி, இரு கால் படமெடுத்து
வட்டக்குடை பிடித்து, வாராராம் வன்னியனார் அது என்ன?  (நண்டு)

முட்டையிடும் சட்டை கழட்டும், மூனு மாசம் அடைப் படுக்கும்
நாக்கு நீட்டும் படமெடுக்கும், நாயன் ஆணைப் பாம்புமில்லை அது என்ன (பனங்கிழங்கு)

தொப்பென விழுந்தான், தொப்பி கழன்றான் (பனம்பழம்) 

கோடைக்குக் குளத்தருகே, மாரிக்கு மழையருகே
சென்னாச் செருப்படி, செல்லாட்டியும் செருப்படி அது என்ன? (செருப்படி பற்றை )

இவை போன்று சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டுகின்ற பல விடுகதைகளும் புதிர்களும் ஒரளவு வழக்கிலுள்ளன. என்றாலும் கிராமியத்தின் சூழமைவில் ஏற்படுகின்ற பெருமாற்றங்களால் தொலைத்த வண்ணத்துப் பூச்சிகளினதும், மின்மினிகளினதும், குறிஞ்சாப் பூக்களினதும் சலனங்களற்ற இன்றைய வளிமண்டலங்களில், வாகனங்களின் பேரிரைச்சலுக்குள்ளும், ஆங்கில வழிக் கல்விமுறைகளாலும் இவையும் மறைந்து போய்விடும் அபாயம் உணரப்படுகின்றது. 

விளையாடுப் பாடல்களைப் பொறுத்தவரை இவை சிறுவர்களின் பெரும்பாலான விளையாட்டுகளில் இடம்பெற்றள்ளன. இவை உடலை அசைத்து சந்தத்திற்கேற்ற இசைப்பனவாகவோ, அல்லது சந்தர்ப்பத்திற்கு பாடுவனவாகவோ அமையும்.

கிள்ளிக் கிள்ளிப் பிராண்டியரே
கிள்ளி அப்பம் திண்டவரே
பாதிப்பிலாக்காய் திண்டவரே
பாவட்டங் கைய முடக்கு. 

சுடு சுடு மாம்பழம்............., ஆல பற பற... கொக்குப் பற பற ..இ ஒரிப்படம் திரிப்படம் ஓதிய மங்களம்..., உம்மா கடைக்கு போனா.....

போன்ற விளையாட்டுக்களில் சிறுவர்களின் பெருஞ்சாதனம் அவர்களின் குறும்புத்தனமான கைகள் .விளையாட்டுப் பொருட்கள் ஏதுமற்ற பொழுதுகளிலும். தங்கள் கைகளை விரித்து மடித்து  விளையாடும் இவ்விளையாட்டு ஒரு பாடல் விளையாட்டாகும். விளையாட்டின் இறுதியில் தோற்பவருக்கு கையால் அடி கொடுப்பதற்காக தப்பிக்கும் முன்சோதனைப் பாடலும் ஒன்றுள்ளது. தோற்றவரின் இரு கைகளுக்கு நடுவில் பாடிக் கொண்டே குத்தும் போது அதை பிடித்தால் தப்பித்து விடுவார் இல்லையென்றால் தொடர்ந்து பாடலுடன் அடிவிழும். இனி அடியிலிருந்து மறுக்கி தப்பிக்க வேண்டும். இது சிறுவர்களிடம் இருந்த சவாரஸ்யமானதொரு பொழுது போக்காகும் சில வேளை பெரியவர்களும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார்கள்.

பாட்டங்குத்து பறையன் குத்து
புள்ளக் குத்து -இது 
புளியங்கொக்து
புடிக்கக் குத்து

பிடியை தவறவிடால்

என்ட பிள்ளைக்கு வைச்ச சோறையும்
சுண்டங்காய் கறியையம்
எதால வந்து திண்டாய் பூனை
ஓட்டாலயா மோட்டாலயா?      ஓட்டால 

இன்று அன்ரொய்ட் மெய்நிகர் உலகத்தில் சிறுவர்கள் காணமல் போய்விடுகிறார்கள், அவர்களின் பார்வைகளும், மழலைப் பேச்சுக்களும் மௌனித்துப் போகின்றன. நிலவுக்கு சாந்தமாமா என்றழைக்கும் வழக்கம் உள்ளது இது தொடர்பில் சாந்தமாமாப் பாடலும், பொருளை அவர்கையாலே மறைத்து வைத்து எடுக்கும் (Navigation Games  ) புளியடிப் பாடலும், ஆக்காட்டிப் பாடலும் சிறுவர் கவிகளில் பிரபலமானவை. 

வளர்ந்தோர் கவிகள்

வளர்ந்தவர்களினால் பாடப்படும் கவிகளில் காதல், வெறுப்பு, ஏக்கம், தனிமை, நகைச்சுவையுணர்வு, தொழிலார்வம், சமய உணர்வு, தத்துவங்கள் என பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான வளர்ந்தோர் கவிகளை இனிப்பார்ப்போம்.
 
வளர்ந்தோரின் கவிகளில் நையாண்டிக்கவிகள் சுவாரஸ்யமானவை. இவை பண்டிகைக்காலங்களில் மேடையமைத்து வாதுக் கவிகளாக மாறிமாறி பாடப்பட்டுள்ளன. இவ் அரங்கியற்பாரம்பரியம் இன்று வழங்கொழிந்து விட்டது சம்மாந்துறைப் பிரதேசத்தில் கிடைத்த இதுவரை பதிப்பிக்கப்படாத வாதுக்கவியொன்று
 
'பள்ளித் தெருவட்டப் புள்ளைகாள் -நாங்க 
பாத்தாலும் ரெண்டொரு புள்ளiயாள்
ஊருப்புரளிகள் வந்தாக்கால் - நாங்க
உட்டுப் பிரயவும் மாட்டங்காள்

............. குறிச்சொரு வட்டையாம் - அதில்
முத்த சனங்கள் அதிகமாம்
ஓதப் படிப்புகள் இல்லையாம்
ஒண்டும் தெரியாத மூடங்காள்' என்று ஒரு குறிச்சிக்காரர் படிக்க

அடுத்தவர்

கிக்கிலிப் பேயர்ர கிட்டங்கி – அது
கீழும் மேலும் புகாருமாம்
வெளவால் உறையும் வீட்டில் -அங்க
வாடி போட்டு தங்கினாக

அப்புடி இப்புடி செரிக்கட்டி – ஒரு
அருமை கெட்ட கப்பல் செயதாக
வெட்டக்கெறக்க வெக்கத்தில – அத
ஊட்டுக்க வச்சு அழகு பாத்தாக   
  
என்று ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு நக்கலாக அடுத்த குறிச்சிக்காரார்கள் படிப்பார்கள்

அடுத்தவர்களை நகைச்சுவைகாக கேலிசெய்யும் பாடல்கள்

நாகப் பழத்திலையும்
நற்காசம் பூவிலையும்
காகச் சிறகிலையும் - மச்சி நீ
கடுங்கறுப்பாய் ஆனதென்ன

கானாங் கறுப்பியரே
கருநிற ஒளிதரு பொன்னிற வண்டே
கற்பவழக்கொடி முத்தெழில் முகத்தாய் -உன்ன
கண்டு வெகு காலமாச்சே 

கூழா மரத்தில் 
குரங்கிருந்து கத்துறாப் போல் 
கந்தில இருந்த கருங்குரங்கோ - இப்ப 
வாய்திறந்த

கத்தாத காகம்
கதறாத காகம் 
எத்தாத காகம்
எறிஞ்சிருவன் பொல்லால 

வீடிக் கொற பொறுக்கி 
விடிஞ்செழும்பி ஊரு சுத்தி
ஆலங்காய் வாயழகா
ஆரொடட வாய் கொடுத்தாய்

கடக்கிக் கடகுந்தி
கடதாசி தான் பொறுக்கி
பொருத்தி உடுத்தாலும் - உண்ட
புறதனங்கள் போறதில்ல

போன்ற பாடல்கள் வயற்கள நண்பர்களிடையே பரண்களில் பாடப்படும் வாதுக்கவிகளில் பாடப்பட்டுள்ளன. இங்கு ஒரு பரணிலிரப்பவர் ஆணாகவும், இன்னமொரு பரணிலிருக்கும் ஆண் பெண்ணாகவும் பாடல்களை மாறி மாறிப்படிப்பார்கள். இது அவர்களின தூக்க அசதியை குறைக்கவும், தனிமையைப் கழிக்கவும் துணையாக இருந்திருக்கின்றது.


சாதிகலம் நல்வயிரம்
தாழ்வுகடல் ஆணிமுத்து 
ஆணிமுத்து வாயாரே – ஒன்ன
ஆரணைக்கப் போறாரோ

பூசின செம்பே –எந்தன்
புழுதிபடா வெங்கிலமே
ஆசைக்கிளியே மச்சி – ஒன்ன
ஆரணைக்கப்ப போறாரோ

குஞ்சி முகத்தழகி
கூர்விழுந்த மூக்கழகி
சாம்பல் குருத்தழகி- இப்ப
சாகுரண்டி உன்னால

உசரப் பரண்கட்டி
உசர விளக்கேத்தி
தனியாப் படுக்க மச்சான்
தலவிதியோ ஒங்களுக்கு

சுட்ட கட்ட போல
சுடுகாட்டுப் பேய்போல
மாட்டட்டை பொல – நீ
மறவணைக்கும் செப்பமில்லை 

இவை பெண்ணிடம் திருமண விருப்பம் கேட்டு கவி புனைவதும் அதற்கு மாற்றுக்கவியாக அடுத்தவர் பாடுவதாக இருக்கும். இவற்றில் எள்ளல் மிகைத்திருக்கும். இவை போல போடியார்மாரின் அதிகார கொடுமைக்கு எதிராகவும் தங்கள் மனக் கஸ்டங்களை பலர் கவிகளாக பாடியுள்ளனர். 

போடியாரு பெருவகிறன்
பொண்டாட்டி ஓட்டப்பல்லி
இளையதம்பி தலையன் -என்ன
ஏசி வரக்காட்டினானடி 

சீதனம் கேட்கும் மாப்பிள்ளைக்க பதில் கொடுக்கும் கவி

பத்தேக்கர் காணியும்
பால்மாடும் வேணுமெங்காய்
இத்தனையும் தாறதுக்கு –ஒங்கட 
உத்தியோகம் என்ன கிளி 

தனக்க பொருந்தாத கணவனைக் குறித்து புலம்புதல் 

புத்தியறிஞ்சி
பூலோகத்தில காத்திருந்து
வாண்டேங்கா ராத்தா – ஒரு
வகுத்துநசல் காரனுக்கு  

நாணப்பூப் போல 
நரைச்ச கிழவனுக்கு
குங்குமப்பூப்போல -இந்தக்
குமராகா வாச்சிருக்கு

இவை போல பல தொழிற்பாடல்கள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவற்றில் அம்பாப் பாடல்கள் எனப்படும் மீனவர் பாடல்களும் உள்ளடங்கும். இங்கு வயற்களத்தில் விவசாயிகள் பாடிய கவிகளில் பல வயற்களச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். தங்கள் தொழிற்சுமைகளையும் கவிகளில் வெளிப்படுத்தியிருப்பார்கள்

காவற்பறனிலே
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சி வந்து 
காலூண்டக் கனவு கண்டேன்

காவற் பரண்கட்டி 
கடும்வேல நான் பாக்க
ஊருதிண்ணிப் பணடி வந்து
வேலியால புகுந்ததுகா

மூலையில வெள்ளாம நல்லா
முறுக விளைஞ்சிரிக்கி
அள்ளித் துவையா கண்டார் -உனக்க
அள்ளித்தர நான் வாரன்

அதே போல் ஏக்கப்பாடல்களும் பல பெண்களால் பாடப்பட்டுள்ளன. தனது பெண்பிள்ளைகளிற்கு திருமணம் கைகூடாத வேளைகளில் சில தாய்மார் இவ்வாறான பாடல்களை பாடியிருக்கின்றனர். 

பாக்குமரம் பாளை போட்டு 
பதினாறும் காய்காச்சி
எல்லாம் விலை பொய்த்து
என்ட .........இன்னம் போகலையே! 

இடைவெளியில் மகளின் பெயர் இடம்பெறும் 

பட்ட மரத்தில் 
பழமிருந்து என்ன செய்ய
இலையருந்து காத்தடிச்சா –கிளி
எங்க இருந்தும் வந்து சேரும்

எவ்வளவு அழகாண பெண்ணாயிருந்தாலும் பணம் இல்லையென்றால் திருமணம் கைகூடுவது கடினம் என்பதை இந்தப்பாடல் வெளிப்படுத்துகின்றது.

அல்லையில பன் புடுங்கி
ஆவரணப் பாயிழைச்சி
போட்டுப் படுக்க ஒரு 
புள்ளமொகம் தந்திருவாய்!

குத்து விளக்கெரிய
குமரன் குர்ஆன் ஓத
பாலன் விளையாட –எனக்கொரு
பாக்கியம்தா ஆண்டவனே

போன்ற பாடல்கள் பல பிள்ளைப்பேறற்ற பெண்களால் பாடப்பட்டுள்ளன.  

அழிக் கடலில் 
அலையெழும்பி  வீசினாப்போல்
வாடுறங்கா உம்மா – உண்ட
வண்ணமுகம் கானாம

பிரிவுத்துயரில் பாடப்பட்ட பாடல்

இவை போலவே ஆசைக்கவிகள் பல பாடப்பட்டுள்ளன 

ஆத்துக்கு அங்கால 
ஆசைக்குரல் கேக்குதும்மா
தங்குதில்ல என்மனசு –நான்
தண்ணிக்கு போய் வரட்டா

தண்ணீர் எடுத்துவர உத்தரவு கேட்கும் மகளிற்கு தாயார் புத்திமதி கூறுவது அடுத்த பாடலில் இடம்பெறுகின்றது

தண்ணிக்கு போய் மகளே 
தரியாமல் வா மகளே
கண்ணுக்கு இசஞ்சவர நீ 
கண்ணெடுத்தும் பாத்திராத

போறாய்கா புள்ள ஒனக்கு
புத்தி சொல்ல தேவையில்ல
ஊரான்ட மணிக்கோர்வை
உடஞ்சி போன வந்தி வரும் 

என்று இன்னொரு தாய் பிள்ளையின் கற்பை பாதுகாக்குமாறு அறிவுரை பகர்கிறாள் இங்கே அடுத்தவருக்கு சொந்தமான பொருளாக (ஊரான் மணிக்கோர்வை) கற்பு உவமிக்கப்படுகின்றது

கணவரைப் பிரிந்து இருக்கும் துணைவியர்கள் பாடுகின்ற பாடலாக சில பாடல்கள் கூறப்படுகின்றன. இவ்வகையான பாடல்கள் பல ஆண்களாலேயே பாடப்பட்டுள்ளன.

கூரையில இருந்து
கூவுகிற சேவலாரே
தனிய இரிக்கனெண்டு – என்ர
தலைவருக்கு செல்லிருங்கோ

காகம் குருவி
கழுகுழுப்பை நங்கிணங்காள்
மாடப்புறாவே என்ட 
மச்சான வரச் சொல்லிருங்க

சத்தியப்பாடல்கள் சில

அல்லாஹ் அறிய 
ஆகிறத்துப் பாம்பறிய
பள்ளியறிய மச்சி – ஒன்ன
பண்ணுறது சத்தியங்கா

குமரழிஞ்சி போச்சுதென்டு
குடும்பமெல்லாம் வேகிறது
சத்தியமாய் சொல்லுறன்டா- ஒனக்கு 
சதி மகுத்து நிச்சயம்தான்

ஆரும் எழுதினத 
அழிச்செழுதிப் போட்டிரலாம்
அந்த ஆதி எழுதினத –அவன்
அழிச்செழுதப் போறதில்ல

இவ்வாறு எண்ணிலடங்கா நாட்டார் பாடல்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்துள்ளன, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை காத்தான்குடி, ஏறாவூர், கிண்ணியா போன்ற இடங்கள் நாட்டார் பாடல்கள் பெரிதும் வழக்கிலிருந்த கிராமங்களாகும். பெண்களும் ஏராளமான பாடல்களைப் பாடியள்ளனர். இன்றைய நவீன சாதனங்களின் வளர்ச்சி, நாகரீக மோகம், ஆங்கிலச் சொல்லாடல்கள், போன்றவற்றின் ஆதிக்கத்தாலும், புதிய தொழின்முறைகளின் விருத்தியினாலும் நடைமுறை உலகில் கைவிடப்பட்ட நாட்டார் கவிகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியது நாம் முன்னோக்கியுள்ள காலத்தின் பலவந்தமாகும். பழமை, மரபுகள் போன்றவற்றின் கனதி உரியமுறையில் உணர்த்தப்படாத இளைஞர் சமுதாயம் எதிர்காலத்தில் இப்பொறுப்பை சிரமேற்கொண்டு செய்வார்கள் என்பதனை உறுதியாக கூறிவிட முடியாது. பெற்றொர்கள் , துறைசார் அறிஞர்கள் துணைக் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன எஞ்சியிருக்கின்ற கவிகளை சரியான முறையிற் தொகுத்து வருங்கால சந்ததிகளின் பயன்பாட்டிற்காய் பேண வேண்டியது அவசியமாகின்றது. 

'உச்சாரக் கொப்பில்
உசந்ததொரு கூடுகட்டி
பஞ்சானும் குஞ்சும்
படிச்சகவி கொஞ்சமில்லை'

துணைநின்றவை

இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள் (மட்டக்களப்பு மாவட்டம்) (1979)
றமீஸ் அப்பல்லாஹ், கிழக்கிலங்கைக் கிராமியம் (2201)
எஸ். முத்துமீரான். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் (1997)
எஸ். எச். எம். ஜெமீல். கிராமத்து இதயம் (1995)
மருதூர் ஏ.மஜீத். தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல் (2007)
  Carolyne.RC, Lewis, Advances in  infancy research, lullabies
பாடல்கள் பாடிக்காட்டியவர்கள்

சீனி முஹம்மது ஆமித லெப்பை (வயது 800
காஸீம்பாவா இஸ்மாலெப்பை (வயது 70)
ஆதம் லெப்பை ஆமினா உம்மா (வயது 65)
ஆதம்பாவா இப்றாஹீம் (வயது 59)
இ.லெ.றுக்கியா உம்மா (வயது 55)
அப்தல் மஜீட் (வயது 54)
மரியம் பீவி கலந்தர் உம்மா

Views: 1015