இலையுதிர் காலம்

எழுத்தாளர் : ராஜா நர்மிமின்னஞ்சல் முகவரி: rajanarmi0@gmail.comBanner

அவர்கள் யார் 
என்ற அடையாளப்படுத்தலை
எப்போதுமே திட்டவட்டமாக
என்னால் தரமுடியாது

நேற்று வரை
என்னோடு இருந்தவர்கள்
இன்றைய பொழுதில்
காணமல் போனவர்கள்

நட்பு, காதல்
பரிவு, அன்பு
சுகம், துக்கம்
எல்லாவற்றிற்கும்
உரிமை கோரியவர்கள்

கனம் தாங்காத 
கவலைகளில்
சரிந்த போதெல்லாம்
அருகில் நின்று 
பார்த்தவர்கள்
உன்னை பற்றிய
புரிதல்கள் உண்டு
என்ற நம்பிக்கையை 
தந்தவர்கள்

கால சக்கரத்தின்
முன் இன்று
காணாமல் போனார்கள்
புரிதலற்று

வாழ் நாள் முழுவதும்
துரோகத்தில் தாக்கப்பட்டதையும்,
வஞ்சத்தில் வீழ்த்தப்பட்டதையும்,
அருகில் இருந்து பார்த்த
என் அன்பிற்கும், நட்பிற்கும்
பாத்திரமானவர்களையே

இந்த காலம்
ஒரு எதிரியாகவும்,
ஒரு துரோகியாகவும்,
என்னிடம் திருப்பி தந்தது

அதனாலேயே சொல்கிறேன்
அவர்களை என்னால்
அவ்வளவு இலகுவில்
அடையாளப்படுத்த முடியாது

அவர்களா இப்படி சொன்னார்கள்?
அவர்களா இயல்புக்கு ஒவ்வாத
ஒன்றோடு இணைத்து பேசுகிறார்கள்?
அவர்களா ஒரு துரோகத்தில்
என்னை வீழ்த்தியவர்கள?
என நினைக்கும் போதெல்லாம்

ஒரு காலத்தில் 
ஒரு நேரத்தில்
இருந்த மலர்ந்த அன்பை,
நம்பிக்கையை, நட்பை, 
காதலை, 
மீட்டும் போதெல்லாம் 
இந்த கணங்கள் 
சுத்த சூனியமாய் தெரிகின்றது.

Views: 373