வெறி

எழுத்தாளர் : நீதுஜன் பாலாமின்னஞ்சல் முகவரி: neethujan@gmail.comBanner

“ரோபி ஆஸ்பத்திரியிலையாம்.

இப்படி ஏதாவது ஆகுமென்று முதலே எதிர்பார்த்திருந்ததால் “எப்படி? ..என்பதை ஊகித்திருந்தாலும், கேட்டேன்.

“இடது கையில பிளேட்டால வெட்டி இருக்கிறாள். ரூமுக்குள்ள இருந்து முனகல் சத்தம் வர, மாமிதான் முதல்ல பார்த்திருகிறா.. இரவே கொண்டுவந்தாச்சு.. தேப்பன் தாயும் வந்திருக்கினம். நல்ல காலம் பெரிசா ஒண்டும் நடக்கேல்ல..

‘கெட்ட காலம்.. என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

நான் ரிசீவரை எடுத்து காதில் வைத்ததுமே துள்ளி மேசைமேல் ஏறி, தலையை நுழைத்து காதை ரிசீவரின் அந்தப் பக்கம் வைத்து ஒட்டுக்கேட்கும் பழக்கமுள்ள என் சம்யு நான் ரிசீவரை வைத்ததுமே கேட்டாள்.. “ஆரப்பா கைய வெட்டினவா? நோகாதோ?

குழந்தைகள் வாழ்க்கை எளிமையானது.. கேள்விகள் கேட்பது - எல்லாவற்றையும். பெரியவர்கள் வாழ்க்கை சிக்கலானது. பதில் சொல்வது - எல்லோருக்கும்.

*      *      *

இரண்டு வருடங்களுக்கு முன்னர், உயர்தரப் பரீட்சைக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது, பௌதிகவியல் மீட்டலுக்காக – பரீட்சை வினாத்தாள்கள் செய்து விளங்கப்படுத்தச் சொல்லி என்னிடம் வந்தவர்கள் சஹானாவும், ரோபியும். இருவருமே சாதாரண தரம் வரை யாழ்ப்பாணத்தில் படித்துவிட்டு, உயர்தரத்துக்காக கொழும்பு வந்தவர்கள். அங்கேயும், இங்கேயும் ஒரே பாடசாலை, அங்கே ஒரே ஊர் – இணுவில். இருவரும் உயிரியல்.. இப்படி பல ஒற்றுமைகள் இருந்தாலும், இருவருக்கும் ஒரே ஒரு வேற்றுமை – பெரிய வேற்றுமை எனக்குப் பேரதிர்ச்சியைத் தந்த வேற்றுமை.

 

ஒரு மணிநேரம் கவனமாக கற்பிப்பது எனது சிறப்பு என்றால், இரண்டு மணிநேரம் தேவையில்லாத பிரசங்கம் செய்வது எனது குறைபாடு. அவ்வாறு கதைத்ததில், ஒரு ஆச்சரியம் எனக்கு கிடைத்தது. சஹானாவின் சிந்தனை வீச்சு. இறைநம்பிக்கை, சமூக ஏற்றதாழ்வுகள், சாதியம், அரசியல் தத்துவங்கள், நடப்பு அரசியல்.. இப்படியான சிக்கலான தளங்களில் அவள் சொன்ன கருத்துக்கள் ஆச்சரியப்பட வைத்தன. அவள்மேலான எனது மதிப்பை பலமடங்கு அதிகப்படுத்தியது அது.

பரீட்சை அண்மித்து வகுப்புக்களை நிறுத்தியபின்னும் சந்தேகங்கள் கேட்கவெனவும், பின்னர் பரீட்சைகளின் பின்னர் விசாரிப்புகளாகவும், பின்னர் படித்த புத்தகத்தைப்பற்றி பகிர்ந்துகொள்வது, நாட்டு நடப்புக்களை அலசுவது என்றும் சஹாவுடனான (சஹானா எனக்கு சஹா ஆனாள். சகா கூட.) நட்பு நீடித்தது. இருவருமே பரந்த வாசிப்பாளர்களாக இருந்தது, எங்களுக்கிடையே கதைப்பதற்கு ஆயிரம் விடயங்களை வைத்திருந்தது. அவள் பாடத்தைப் படித்து முடித்திருந்தாலும், நாங்கள் உலகத்தைப் படிக்க விரும்பியதாலும், தொலைபேசியில் நிறையக் கதைத்தோம். பெரும்பாலும் எங்கள் இருவரது கொள்கை ரீதியான ஒற்றுமைதான் பேச்சுப் பொருளாக இருந்தது. சாதி ஏற்றத்தாழ்வு பற்றி அலசும்போது எனக்கே அதிர்ச்சி தரும் பல விடயங்களை சொல்லுவாள்.

படிப்பு பற்றி இருக்கும் மூடநம்பிக்கையில் ஒருநாள் சொன்னேன்..

“படிப்பு ஒண்டுதான் சாதியை மறக்கடிக்கிற வழி... இப்ப எடுத்துக்கொள், நீ சாதிக்கு எதிரா இப்பிடி எல்லாம் கதைக்கிறதுக்கு படிப்புதானே காரணம்.. உண்ட வயசு பெட்டையளுக்கு பெரும்பாலும் சாதி எண்டா என்ன எண்டே – தாங்கள் என்ன சாதி எண்டே தெரியாது எண்டு நினைக்கிறன்..

“கிழிஞ்சுது... சேர், உங்களுக்கு நம்பேலுமோ தெரியேல்ல, என்ட பட்ச்சிலையே சில கேள்ஸ் தங்கட வகுப்பில சிநேகிதிகளை பிடிக்கேக்கையே சாதி பார்ப்பினம்.. தெரியுமோ?

“சீரியசாய்த்தான் சொல்லுறியோ? இப்பத்தே பெட்டையளோ?

“பின்ன? நானே ஒரு கோமேஸ் காரியோட திரிய, அவள் வேற சாதி, ஏன் அவளவையோட திரியுறாய் எண்டு நேரயே கேட்டதுகள்.

“சத்தியமாய் சஹா, நம்பவே ஏலேல்ல..

“ஆனா உண்மை அதுதான் சேர், இவ்வளவு ஏன், சொல்லக் கூடாது எண்டு நினைச்சன், இவள் ரோபிக்கு இப்பிடி உங்களோட நான் கதைக்கிறேதே பிடிக்கிறேல்ல தெரியுமோ? படிப்பிச்சார், காசு குடுத்தம், பிறகும் ஏன் ஒட்டிக்கொண்டு இருக்கிறாய் எண்டு கேட்டாள்.. எனக்கும் முதல் விளங்கேல்ல.. பிறகு ஒரு நாள் சாடை மாடையாய் சொன்னாள்.

“மற்றப் பெட்டையளை விடு, இவள் ரோபியுமோ?

“உங்களுக்கு ஒரு கதை தெரியுமோ? யாழ்ப்பாணத்தில ஓ/எல் படிக்கேக்க இவள் ஒரு பெடியனை லவ் பண்ணினாள். கொஞ்ச நாள் பயங்கர நெருக்கம். திடீரெண்டு வீட்ட தெரிஞ்சுட்டு. இவளின்ட அப்பா சிம்பிளாய் சொன்னார், ‘அவன் யாரா இருந்தாலும் ஓகே, ஆனா இவன் வேற சாதி, சரிவராது எண்டு. இவள் கொஞ்ச நாள் அழுதாள், பிறகு அப்பா சொல்லுறதும் சரிதானே எண்டு அவனை காய் வெட்டிட்டாள்.

அன்றைக்கு சஹா சொன்னதிலிருந்து ரோபியைக் கண்டாலே, ஏன், பொதுவாகவே மெட்ரோ சிற்றியில் மொடேனாகத் திரியும் படித்த இளம் பெண்களைக் கண்டாலே ஒருவித பயம்... இந்த உலகம்தான் எத்தனை விநோதமானது.. அத்தனை நவீனம் தேடும் மனிதர்களிடமும் இத்தனை பழைய வக்கிரங்கள். நாளைக்கே நான் ஒரு சிறுகதை எழுதப்போய், ‘உயர்தரம் படிக்கும் நவயுக மாணவரில் சாதிவெறி என்று கதை எழுதினால், ‘நம்பகத்தன்மை இல்லை என்று உவங்கள் ஆசிரியர் குழு நிராகரிக்கக்கூடிய அளவுக்கு முரணாக இருக்கிறது நிலைமை.

*      *      *

சம்யுவை பாடசாலையிலிருந்து கூட்டிவரும் வழியில் ஒரு எட்டு போய் ரோபியை பார்த்துவிட்டு வருவோம் என்று களுபோவில வைத்தியசாலைக்கு வண்டியை விட்டேன். வைத்தியசாலை நடைபாதையில் செல்லும்போது சம்யு ஒரு மிரண்ட பார்வையுடன் வந்தாள். வரட்டும். உலகத்தை தெரிந்துகொள்ளட்டும். நாளைக்கு தனது கையை வெட்டிக்கொள்ளும் நிலை இல்லாத பக்குவத்துக்கு வர இப்போதே இவளை தயார்படுத்தவேண்டும்.

ஆனால் அன்றிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறாள்...

“ஏன் கைய வெட்டினவா, நோகாதோ?

“ம்...

விபத்துக்கு நாற்பத்தோராம் வாட், மனம் குழம்பியவர்கள் முப்பத்து மூன்று.. இவள் எங்கே இருக்கிறாள்?

நாற்பத்தொன்றை அண்மித்தேன்.

நடைபாதையில் வெளியே ரோபியின் மாமா நின்றார். கூட நின்றது தகப்பனாக இருக்க வேண்டும். மாமா அருகில் வந்தார். நான் ஒன்றும் பேசவில்லை. வார்டுக்கு உள்ளே எட்டிப் பார்த்தேன். பரபரப்பான தாதிகளும், தலை தடவி ஆறுதல் சொல்வோரும், கவலைப்பட்டு ஓரமாக நிற்போரும், கொஞ்சம்  அப்பிள்களும், தோடம்பழங்களும், நிறையக் கவலையுமாக இருந்தது வாட். அத்தனை பேரின் அழுகைகள், முனகல்கள், விசனங்கள் ஏச்சுக்கள் என்று சத்தத்தில் நிறைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு மயான அமைதியைத் தந்து பயமுறுத்தியது என்னையே. தேடினேன். ஒரு ஓரத்திலே ரோபி கட்டிலில் படுத்திருந்தாள். இடது கையில் கட்டு. கட்டை மீறிக் கசிந்த இரத்தமோ, அல்லது மருந்தோ கறையாகப் படிந்திருந்தது. கட்டிலுக்கு அருகிலே - தாயாக இருக்கவேண்டும் – என்னென்னவோ புலம்பிக்கொண்டு தோடம்பழத்தை  உரித்துக்கொண்டிருந்தாள்.

நான் அருகில் சென்றேன். “இப்பதான் டொக்டர் வந்து பார்த்தார்.. நினைவு வாற நேரம்தானாம். என்னை யாரென்று தெரியாவிட்டாலும், ரோபியைத்தான் பார்க்க வந்திருப்பது தெரிந்து தானாகவே சொன்னாள், அல்லது வரும் அனைவரிடமும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாளா? பின்னர் விட்ட இடத்திலிருந்து புலம்பத் தொடங்கினாள்.

நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இவள் கையை வெட்டியதற்கு கழுத்தை வெட்டி இருக்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. என்ன ஒரு கேவலம்! சஹா சொல்லித்தான் எனக்கு எல்லா விடயங்களுமே தெரியும்.

 

ரோபி யாழ்ப்பாணத்திலே படித்தபோது பாடசாலை பஸ்ஸில் இவளுடன் செல்லும் வேறு பாடசாலை மாணவன் ஒருவனது அறிமுகம் இத்தனை காலம் கழித்து பேஸ்புக்கில்  மீண்டும் கிடைத்திருக்கிறது. அந்தக் கால பாடசாலை பஸ் அனுபவங்கள், அடித்த கூத்துகளைப் பற்றி பேஸ்புக் உரையாடலில் கதைத்து,. அவ்வப்போது சட் என்பது அடிக்கடி சட் ஆகி, தொலைபேசி உரையாடலாகி, அத்தனை நெருக்கமாகி விட்டார்கள்.  ரோபிக்காகவே தான் யாழ்ப்பாணத்தில் படித்த கோர்ஸை கொழும்புக்கு மாற்றி இங்கே வந்தான் அவன். அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். எப்போதுமே கதைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மழைநாளில், அந்தப் பிரபல வறுத்த கோழிக் கடையில், உறிஞ்சுகுழாயால் ஸ்ட்ரோபறி மொஜிட்டோவைக்  கலக்கியபடி, கொஞ்சம் தயக்கத்துடன் அவன் ரோபிமேலான தனது காதலைச் சொன்னான்.

ரோபிக்கு அதிர்ச்சியாயில்லை. அவளும் ஆசைப்பட்டதுதான். ஆனால் இந்தமுறைதான் ரோபி பக்குவமடைந்தவள் ஆயிற்றே.. வீட்டுக்குப் போய் பதில் சொல்வதாக சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள்.

வீட்டுக்குப் போனதும் தொலைபேசினாள்.

“உனக்கு என்ட பழைய கதை சொல்லி இருக்கிறன் தானே? எங்கட வீட்டுக்கும் சரி, எனக்கும் சரி.. ஒரு விஷயம் கட்டாயம்.

“நீ என்ன கேக்கிறாய் எண்டு தெரியுது.. அதெல்லாம் பிரச்சனை இல்ல, பார்த்துக்கொள்ளலாம்... நீ ஓம் எண்டுறதுதான் முக்கியம்.

“ஆனா எனக்கு அதுதான் முக்கியம்... சொல்லு!

“சரி, விடு, நானும் உங்கட சாதிதான்! இப்ப ஓகேவா?

“உண்மையாய்?

“சத்தியமாய்!!

அவன் சத்தியம் பண்ணியதும், ரோபிக்கு, செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தது.

*      *      *

 

சம்யு மெதுவாக எனது காலில் குத்தினாள். திடுக்கிட்டுப் பார்த்தேன். ரோபி பிரயத்தனப்பட்டு தலையை அசைக்க, கண்களைத் திறக்க முயற்சிப்பது தெரிந்தது. பக்கத்தில் அவளது தாய் என்னைப்பார்த்துப் புலம்பிக்கொண்டிருப்பது தெரிந்தது.. ஓ, இத்தனை நேரம் என்னிடம்தான் ஏதோ புலம்பிக்கொண்டிருந்திருக்கிறாள். நான்தான் கவனிக்கவில்லை.

“பாவி! என்ட பெட்டையை இப்பிடி சீரழிச்சுட்டானே! எப்பிடி வளர்ந்த பெட்டை.. இப்பிடி தன்ர கையத் தானே கிழிச்சுட்டு நிக்கிறாளே! எல்லாம் அந்த நாயாலதான்! அவன் அழிஞ்சுதான் போவான்!

நம் சாதிப் பையனைத்தான் காதலிக்கிறோம் என்கிற உண்மை தெரிந்ததும் துணிச்சலாகத் தனது தாயிடம் சொன்னாள் தனது காதலை. ரோபியின் குடும்பம் முற்போக்கானது. காதலுக்கு எதிர்ப்பு இல்லை*, தாய் பெண்ணுடன் நண்பிபோலப் பழகுவாள்.. இப்படி. மேலே நட்சத்திரக் குறி போட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. *நிபந்தனை : சாதி.

தங்களது மகளின் காதலை ஏற்றுக்கொண்டார்கள் பெற்றோர். அந்த மகிழ்ச்சியில் மணிக்கணக்கில் தொலைபேசுவதும், நாட்கணக்கில் ஊர் சுற்றுவதுமாக காதலைக் கொண்டாடினார்கள் அந்த நவயுக காதலர்கள். சில எல்லைகளை மீறினார்கள். காதலர் தினத்துக்கு தன் அன்புக் காதலனுக்கு இன்ப அதிர்ச்சிப் பரிசு கொடுக்கவென ரோபி கடைகடையாய் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அதே  தருணத்தில், எதார்த்தமாக யாழ்ப்பாணத்திலே ரோபியின் தகப்பன் சந்தித்த அவரின் பழைய  நண்பரும் ஒரு அதிர்ச்சியை வைத்திருந்தார்.

இரவு ரோபியின் தாய் அந்த விஷயத்தை ரோபிக்கு தொலைபேசியில் பக்குவமாக எடுத்துச் சொன்னபோது, அதிர்ச்சியில் தொலைபேசியை சுவரில் எறிந்தாள். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து உடைத்தாள்.

அந்த அதிர்ச்சியான இரவில்தான் ஏமாற்றம் தாளாது கையை வெட்டிக் கொண்டிருக்கிறாள் உயிரியலும், பௌதிகமும், இரசாயனவியலும் பொதுச் சாதாரண பரிட்சையும் பாஸான  எனது பழைய மாணவி.

ரோபி கட்டிலில் அசைவது தெரிந்து தாதி ஒருத்தி அருகில் வந்தாள். நான் சம்யுவை பின்னாலே இழுத்துக் கொண்டேன். தாய் அவளை தோளில் பிடித்துத் தூக்கி, நிமிர்த்த முயன்றாள், புலம்புவதை நிறுத்தாமல். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த ரோபி, என்னைக் கண்டதும் கத்தத் தொடங்கினாள்..

“இவன வெளீல கலையுங்கோ! இவன வெளீல கலையுங்கோ!

எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சனையுள் என்னில் இவளுக்கு என்ன வெறுப்பு? நான் என்ன செய்தேன்?

“இவனும் அவன்ட சாதிதான்! வெளீல கலையுங்கோ!

எனக்கு பிடரி சுரீரென்றது. கோபம் ஏறுவதற்குள் தாதி – தமிழ்ப் பெண்போலும் – சொன்னாள் – “ஹிஸ்டீரியா... டோன்ட் மைன்ட்.

தாய் அந்த அச்சந்தர்ப்பத்திலும் புலம்பலை தொடர, நான் வெளியே நடந்தேன்.

“... அந்த எளிய பாவி தானும் பெரிய சாதிக்காரன் எண்டு போய் சொல்லி என்ட மகளின்ட மனசக் கெடுத்துட்டானே! இப்பிடி ஆகிட்டாளே! அட துரோகி! நல்ல சாதியில பிறந்தவன் இப்பிடிச் செய்வானோ?

“அடேய்! போடா.. நீங்கள் எல்லாருமே செத்துப் போங்கடா! நீயும் அவன்ட சாதிதான் எண்டு எனக்குத் தெரியாதோ? பொய்யும் புரட்டும்! அம்மா.. இவனை வெளீல கலை!

“...பெருஞ்சாதியில சம்பந்தம் கேக்குதோ அந்த நாய்க்கு? என்ட மகளுக்கு சேவகம் செய்யக்கூட அவனுக்குச் சாதி பத்தாது!...

சத்தம் கேட்டு தாதிகள் ஓடிவந்தார்கள். நான் வாசலை தாண்ட, ஓடிவந்த தகப்பனும், மாமனும் என்னை எதிர்கொண்டார்கள். தகப்பன் உள்ளே ஓட, மாமன் என்முன் தலைகுனிந்தார். நான் அவரைத் தவிர்த்து, சம்யுவைத் தூக்கிக்கொண்டு வெளியே நடந்தேன்.

 

நடைபாதையில் வேகமாக நடந்துசென்றேன். சம்யுவை கூட்டி வந்திருக்கக் கூடாது. அந்தப் பிஞ்சுக் காதுகள் கேட்கக் கூடாத சொற்கள். அவள் கண்ணால் பார்க்கக் கூடாத உலகத்தின் மனிதர்கள்.

“அந்த அக்கா ஏன் அப்பா அப்பிடிக் கத்தினவா?

“ஹிஸ்ட்... ம்... அது... அவாக்கு வெறி!

“சாதி என்டா என்னப்பா?

“அந்த வெறியிண்ட பெயர்.

“வெறி என்டா என்ன, தொத்து வியாதி ஏதுமோ? அவாட அம்மாக்கும் தொத்திட்டுதோ?

“தொத்து வியாதி இல்ல செல்லம்...

“பின்ன?

அவளை தலையோடு அணைத்துக்கொண்டேன். பயத்தில் வியர்த்திருந்தாள். கைக்குட்டை எடுத்து அவளது குட்டி நெற்றியை துடைத்தபடியே சொன்னேன்.

“பரம்பரை வியாதி!

*  *  *  *  *

Views: 341