புல்லாங்குழல்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner

'நேற்று இரவெல்லாம் சத்தம் கனமாய் கேட்டிச்சு போல. ஒரு வேளை ஆமி பலாலியாலை வெளிக்கிட்டானோ..?' முதன் நாள் இரவு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை மனைவி பாக்கியத்திடம் விபரித்தவாறு கரித் தூளால் பல்லைத் தேய்க்கத் தொடங்கினார் சுப்பையர். திடீரென்று ஆரம்பித்து உச்ச நிலையை அடைந்துவிட்ட உள்நாட்டு யுத்தத்தால் பொருட்களின் விலை எல்லாம் ஆனை விலை குதிரை விலைக்குப் போக, இப்போது யாழ்ப்பாணத்தில் பலரின் வீடுகளில் பற்பசை எல்லாம் கூட கரித் தூளாக கூர்ப்படைந்திருந்தது. இவற்றிலிருந்து ஓய்வுபெற்ற சாதாரண தபால் ஊழியர் சுப்பையரின் குடும்பம் என்ன விதிவிலக்காகவா இருக்கப்போகிறது?

'அப்பிடி இருக்காது. காலங்காத்தாலை எழும்பி கதைக்கிற கதையே உது. கந்தசட்டி பாறணை விரதத்துக்கு இன்னும் ரண்டு நாள் தான் இருக்கு. போய் மணியத்தாரின்ட கடையில இண்டைக்காவது ஏதாவது காய்பிஞ்சு வந்திருக்கா எண்டு பாத்துக் கொண்டு வாங்கோ.' கணவனின் பேச்சை வேறு பக்கத்துக்கு திசை திருப்பினார் பாக்கியம்.

இந்த நேரத்தில் ஏதோவொரு வெளிப் பயணம் சுப்பையருக்கு மிக அவசியம் தேவையாய் இருந்தது. முகம், கைகால்களைக் கழுவி விட்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் அவர். இரண்டு செல் சத்தங்கள் அவரின் காதைப் பதம் பார்த்துவிட்டு ஓய்ந்தன.

சுப்பையருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகள். ஓரு மகன். போன வருசம் தான் யாழப்பாணத்தில் இருக்கின்ற காம்புகள் எல்லாவற்றுக்கும் அலைந்து திரிந்து தன்னிடம் இருக்கின்ற காணிபூமிகளை எல்லாம் கணக்கு காட்டி மகளை ஒருமாதிரி வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தார். இப்போது மனைவி பாக்கியத்துடன் மகனின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். மகன் சிவகுமார், மருமகள் பவானி இரண்டு பேரும் ஆசிரியர்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மதன். அடுத்த வருடம் பாடசாலைக்கு போக வேண்டும். இளையவன் மோகன். வருகின்ற சித்திரையுடன் அவனுக்கு மூன்று வயது. இன்னும் உலக அறிவு வரவில்லை. செல் சத்தங்கள் கேட்கும் போது 'வீல்' என்று கத்துவான். எப்பவாவது இருந்துவிட்டு 'என்னம்மா அது சத்தம்?' என்று ஆராய்வான்;. அவ்வளவு தான்.

சுப்பையருக்கு முதலாமவனுடன் தான் நல்ல வாரப்பாடு. அவனும் 'அப்பப்பா... அப்பப்பா....' என்று வாய் நிறைய சொல்லியவாறு இவரையே சுற்றி வருவான். இதுவே சாதாரண காலமாக இருந்திருந்தால் மதனை நேசறிக்கு கூட்டிக் கொண்டு போய் கூட்டிக் கொண்டு வருவதையே தலையாய கடைமையாய் செய்திருப்பார் சுப்பையர். இந்த நாட்டு பிரச்சினைகளால் மதன் இப்போதெல்லாம் ஒழுங்காக நேசறிக்கு போவதில்லை. இப்போது சில சமயங்களில் செல் சத்தங்களைக் கேட்டவுடன் அவன் சிறுநீர் கழித்து விடுகிறான். இதெல்லாம் சுப்பையருக்கு மட்டுமல்ல, குடும்பத்தினர் எல்லோருக்குமே சரியான கவலை. இதை எவ்வாறு தீர்ப்பதென்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே மதனுக்கு புல்லாங்குழல் என்றால் கொள்ளை பிரியம். எங்கே புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்கின்ற கண்ணனின் படத்தைப் பார்த்தாலும் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது அப் படத்தை வாயைப் பிளந்து பார்த்தபடி அப்படியே நின்று விடுவான். எப்படி அவனுக்கு புல்லாங்குழலின் மீது இப்படியொரு ஆசை வந்தது என்பது எவருக்குமே தெரியாத புதிர். சுப்பையர் எப்பவாவது இருந்துவிட்டு எம்.ஜி.ஆரின் தத்துவப் பாட்டுகளின் பல்லவிகளை மட்டும் முணுமுணுப்பார் (பாட்டுக்களின் மிச்சப் பகுதி அவருக்கு தெரியாது). பவானிக்கு இடைக்கால இளையராஜா பாட்டுக்கள் என்றால் கொஞ்சம் இஸ்டம். அதிலும் சிவகுமாரை  யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு போகும் பஸ்சில் முதன் முதலாக சந்தித்தபோது அந்த பஸ்சில் பாடியது என்ற ஒரே காரணத்துக்காக 'தென் மதுரை வைகை நதி...' பாட்டு என்றால் சற்று சுயநலத்துடன் ரசிப்பார். இப்போதெல்லாம் ரேடியோவில் பாட்டு கேட்க வேண்டும் என்றால், டைனமோவின் பிச்சைக் கரண்டுக்காக கை வலிக்க சைக்கிள் சில்லு சுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் தன் இளையராஜா மோகத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டார். அவ்வளவு தான் சுப்பையரின் குடும்பத்துக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு. அவர் குடும்பத்தின்  மற்றவர்கள் எல்லோருமே இசை என்றால் 'அது எவ்வளவு கிலோ?' என்று தான் கேட்பார்கள். இப்படிப் பட்ட கலைக் குடும்பத்தின் ஒரு வாரிசான மதன் புல்லாங்குழலில் ஆர்வமாக இருப்பதென்பது உலக அதிசயம் தானே

ஆனால் மதனை எதிர் காலத்தில் பெரிய புல்லாங்குழல் வித்துவானாக ஆக்க வேண்டும், ஊர்ப் பிள்ளையார் கோயில் முன்றலில் அவனது கச்சேரியை நடாத்த வேண்டும், அதை ஊரே பார்த்து வியக்க வேண்டும் என்றெல்லாம் பெரிய எதிர்கால திட்டங்களை சுப்பையர் போட்டு வைத்திருந்தார். தனது திட்டங்களுக்கு அத்திவாரமாக மதனை யாழ்ப்பாணத்தின் எந்த மூலையில் பாட்டுக் கோஸ்டி நடந்தாலும் தவறாமல் கூட்டிப் போவார். இதற்காக சில தடவைகள் சிவகுமாரிடம் வாங்கிக் கட்டியும் இருக்கிறார். ஆனாலும் அவர் அசருவதில்லை. அண்மையில் சில காலமாக நாட்டில் சண்டை சச்சரவுகளும் அதனால் பெரும் கெடுபிடிகளும் அதிகரித்திருப்பதால் அவரின் திட்டங்களில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

முன்பு அடிக்கடி கோஸ்டி என்று ஊர் சுற்றித் திரிந்த மதனுக்கு திடீரென்று எல்லாம் நிறுத்தப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது முற்றாகப் பிடிக்கவில்லைதிடீர் திடீர் என்று அவன் 'தாத்தா கோஷ்டிக்கு போவம். தாத்தா எனக்கு புல்லாங்குழல் வேணும்' என்று அடம்பிடிக்க தொடங்கிவிடுவான். அவனது இந்தப் பிடிவாதத்தை தணிப்பதற்குள் சுப்பையருக்கு போதும் போதும் என்று ஆகி விடும். இறுதியில் அவர் அதற்கு, ஜே.ஆர் ஜெயவர்த்தன இந்தியன் ஆமியை இலங்கைக்கு இறக்கியது போல தற்காலிகமாக ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். அது தான் பப்பாசி குழலால் ஆக்கப்பட்ட புல்லாங்குழல். இந்தியன் ஆமி ஜெயவர்த்தனவுக்கு கைகொடுக்காவிட்டாலும் பப்பாசி குழல் சுப்பையருக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

வீட்டு முற்றத்தின் ஓரத்தில் 'ஏன் வளர்ந்து நிற்கிறோம்?' என்ற பெருத்த சந்தேகத்துடன் ஒரு பெண் பப்பாசி மரம் உயர்ந்து நின்றது. நாட்டுப் பிரச்சினைகளை கவனிக்கின்ற அவசரத்தில் வீட்டில் எவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அந்தப் பெண் பப்பாசி தான் இப்போது சுப்பையருக்கு கை கொடுத்தது. சுப்பையர், அதன் ஓரளவு முற்றலான இலையை தேர்ந்தெடுப்பார். அதன் இலைப் பகுதியையும் பின் தண்டுப் பகுதியையும் வெட்டி அகற்றுவார். மீதமிருக்கின்ற நடுத் துண்டின் இரண்டு சாண் நீளமான நல்ல பகுதியைத் தெரிவு செய்வார். இவ்வாறு தெரிவு செய்த துண்டின் ஒரு திறந்த பக்கத்தை பொலித்தீன் பையால் நன்கு இறுகக் கட்டுவார்அதன் நீளப் பகுதியில் தன் கைக்கணக்கில் சில துளைகளை இடுவார். புல்லாங்குழல் தயார். அது பிய்ந்து சுக்கல் சுக்கலாக ஆகும் வரை மதன் அதை ஊதிக் கொண்டு திரிவான். எப்பவாவது இருந்து விட்டு அபூர்வமாக குழலின் நீளமும் துழைகளுக்கு இடையிலான இடைவெளியும் பொருத்தமாக அமைந்துவிட்டால் அதன் சத்தம் சிறிது நேரத்துக்கு கொஞ்சம் சகிக்கக் கூடியமாதிரி இருக்கும். மற்றைய நேரங்களிலெல்லாம் அதன் சத்தத்துக்கு செல் சத்தம் எவ்வளவோ பரவாயில்லை என்பது போல இருக்கும். ஆனால் சுப்பையருக்கு அது எப்போதும் தேவ கானம் போலவே இருக்கும். இப்போது கிட்டத்தட்ட முழு நேரமும் மதன் வீட்டிலேயே நிற்பதால் ஒரு நாளைக்கு நான்கைந்து பப்பாசி புல்லாங்குழல்கள் செய்யவேண்டிய தேவை சுப்பையருக்கு ஏற்பட்டு விடுகிறது. அவரும் சலிக்காமல் பேரனுக்கு செய்து கொடுப்பார். ஏதோ ஆச்சா மரத்திலிருந்து நாதஸ்வரம் செய்கின்ற நினைப்பு அவருக்கு

'நேற்று கிளாலிப் பக்கம் சரியான சண்டையாம். இரண்டு பக்கமும் சரியான இழப்பாம். புத்தூர் சண்முகம் வாத்தியாரின்ட பெடியனும் நேற்றைய சண்டையில செத்துப் போனானாம். பி.பி.சி நியூசில பேர் சொன்னவங்களாம். இன்னும் ரண்டு மூண்டு நாட்களுக்கை யாழ்ப்பாணதுக்கையும் சண்டை தொடங்கீடும் எண்ட மாதிரி எல்லாரும் கதைக்கிறாங்கள்.' அறா விலைக்கு வாங்கிவந்த சொச்ச மரக்கறிகளை மனைவியிடம் கொடுத்தவாறு தான் கடையில் கேள்விப்பட்ட விடயங்களை ஒப்புவிக்கத் தொடங்கினார் சுப்பையர்.

'அப்ப இந்த முறை சூரன் போருக்கு என்ட நல்லூரானிட்ட போகேலாதே? முருகா...! இது என்ன சோதனை? முப்பது வருசத்துக்கு மேலாய் பிடிச்சுக் கொண்டு வாற இந்த கந்தசட்டி விரதத்தை இந்த முறை எப்படி முடிக்கிறது? நல்லூர் கந்தா... நீ தான் இதுக்கு நல்ல தீர்வாய் தரவேணும்' பாக்கியம் புலம்ப ஆரம்பித்தார். அவர் அவர்களுக்கு அவரவர் பிரச்சினை. மேலும் 'இந்தியன் ஆமி பிரச்சினை காலத்தையே சமாளித்து விட்டோம். அதைவிடவா பெரியதொரு பிரச்சினை ஏற்பட்டுவிடப் போகிறது?' என்ற அலட்சியமும் பாக்கியத்தின் இப்படியான பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்.

'சும்மா பேய்க் கதை கதைக்காதை. நான் உயிர் போற விசயத்தைப் பற்றி கதைக்கிறன். நீ என்னடா என்றால் சூரன் போருக்கு போறதைப் பற்றி கதைக்கிறாய். இந்த கொஞ்சக் காலத்துக்கை எங்கட எத்தினை பெடியள், சனங்கள் அநியாயமாய் செத்துப் போச்சுதுகள். அதுகளை காப்பாத்த வக்கில்லாமல் உன்ர முருகன் இந்த வருசமும் சூரன் பொம்மையை கொல்லப் போறார். அதைப் போய் நீ பாக்கப் போறாய்.' கடவுள் நம்பிக்கையால் ஏற்பட்ட ஏமாற்றமும் மனைவியின் அறியாமை மீதான கோபமும் சுப்பையரின் கதையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

சுப்பையரின் சத்தம் கேட்டதும் 'தாத்தா புல்லாங்குழல்....' என்று கத்தியவாறு மதன் ஓடி வந்தான். திடீரென்று தொடர்ந்து கேட்ட செல் சத்தங்கள் அவனது வேகத்தை அதிகரிக்க வைத்து சுப்பையரை இறுக அணைக்கச் செய்தது. அந்த அணைப்பு மூலம் மதனது பயம் கலந்த உணர்வுகள் முழுவதும் சுப்பையருக்கு கடத்தப்பட்டன. 'இந்த பிள்ளைகளின்ர எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதோ..' என்று எண்ணமிட்டவாறு அவனை கூட்டிக் கொண்டு முற்றத்துக்கு நடந்தார் சுப்பையர்.

முற்றத்துக்கு போன சுப்பையர் படலையில் மகனையும் மருமகளையும் கண்டு அதிசயித்தார். ஏனென்றால் சாதாரணமாக அவர்கள் வீட்டுக்கு வரும் நேரம் அதுவல்ல. 'அப்பா கதை கேள்விப் பட்டனீங்களே..?' என்ற கேள்வியுடன் சைக்கிளைத் தள்ளியவாறு வீட்டுக்குள் நுழைந்தான் சிவகுமார். எதிர் காற்றுக்குள் முன் பாரில் மனைவியையும் வைத்துக் கொண்டு இரண்டரை கிலோ மீற்றர் தூரம் சைக்கிள் விளக்கியதை அவனது பெருமூச்சும் உடம்பெல்லாம் பெருகிக் கொண்டிருக்கின்ற வியர்வையும் எடுத்துக் கூறியது. பெற்றோல், மண்ணெண்ணையின் விலை தொட முடியாத இடத்துக்கு உயர்ந்து விட்டதனால், இப்போதெல்லாம் அவனது மோட்டார் வண்டி அவசர தேவைகளுக்கு மட்டும் என மட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது. பெற்றோலில் மட்டுமே தொழிற்படக் கூடிய அந்த 'மேட் இன் யப்பான்' மோட்டார் வண்டியை, அதன் இஞ்சினுக்குள் சில திருகு தாளங்களைச் செய்து மண்ணெண்ணையில் இயங்கக் கூடிய மாதிரி மாற்றி வைத்திருக்கிறான் சிவகுமார். இதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இப்போது சர்வ சாதாரணம்

'என்ன வெள்ளணவே வந்திட்டியள்?' என்ற பதில் கேள்வியுடன் மகனையும் மருமகளையும் எதிர் கொண்டார் சுப்பையர். 'இண்டைக்கும் எங்கட பள்ளிக் கூடத்தில தங்கியிருக்க புதுசாய் சனம் வந்திருக்குது. அதுகளின்ட கதையை வைச்சு பாக்கேக்க இந்தக் கிழமைக்கை யாழ்பாணத்திலையும் சண்டை தொடங்கும் போல கிடக்கு. எங்களையெல்லாம் தென்மராச்சி பக்கம் போகச் சொல்லி ஆமி சொல்லப் போறானாம். இப்பவே வெளிக்கிட்டா தான் உயிராவது தப்பலாம் போல. அது தான் எனக்கு என்ன செய்றது என்று தெரியேலை. உடன வெளிக்கிட்டு வந்திட்டன். இப்ப நாங்கள் என்ன செய்றது?' நீண்ட பெரு மூச்சுக்களுக்கு நடுவே சொல்லி முடித்தான் சிவகுமார். மகனின் சத்தத்தை கேட்டு முற்றத்துக்கு வந்திருந்த பாக்கியம் இதைக் கேட்டு 'முருகா...' என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்.

சிறிது நேரம் நிதானமாக யோசித்த சுப்பையர் 'நானும் கிட்டத்தட்ட இப்படித் தான் செய்தி கேள்விப்பட்டன். ரேடியோக்களிலையும் இதைத் தான் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறாங்கள். பிள்ளைகளும் சரியாய்ப் பயப்படுதுகள். இண்டைக்கு பின்னேரம் எல்லாரும் கொடிகாமத்தில இருக்கிற பாக்கியத்தின்ட அண்ணர் ஆறுமுகத்தின்ட வீட்டை வெளிக்கிடுவம்.' என்று தனது முடிவைச் சொன்னார்.

'என்னப்பா சொல்லுறியள். போன இருபத்திச் சொச்ச வருசமாய் ஆறுமுகம் மாமாவோட நீங்கள்  கதைக்கிறேலை எல்லோ. பிறகு எப்படி அங்க போறது?' இது சிவகுமார்.

'அது எனக்கு தெரியுமடா தம்பி. ஆனால் இந்தப் பிள்ளைகளின்ட பயத்தோடையும், உயிரோடையும் ஒப்பிடேக்க என்ர கோபம் ஒண்டும் பெரிசில்லை. அவன் இந்த பிள்ளைகளுக்காக எண்டாலும் எங்களை வரவேற்பான். போய் எல்லாரும் வெளிக்கிட ஆயத்தமாகுங்கோ. வெள்ளண வெளிக்கிடோணும். நாளைக்கு ஒரு ரக்ரரை பிடிச்சுக் கொண்டு வந்து சாமான்களை ஏத்திக் கொண்டு போவம்' மதனின் தலையை வாஞ்சையோடு தடவியவாறு உறுதியாகச் சொல்லி முடித்தார் சுப்பையர். எல்லோரும் விதம்விதமான கலவர மனங்களுடன் ஒரு பெரிய பெயர்தலுக்காக தங்களை ஆயத்தப் படுத்த வீட்டுக்குள் நுழைந்தனர். தூரத்தில் 'நாளை இரவுக்குள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்.' என்ற அறிவித்தல் கொச்சைத் தமிழில் ஒலிபெருக்கியில் ஒலித்தது. சுப்பையர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே மண்ணில் இருந்துவிட்டார்.

'தாத்தா எனக்கு நீங்கள் இன்னும் புல்லாங்குழல் செய்து தராமல் என்னத்தை யோசிச்சுக் கொண்டு இருக்கிறியள்?' என்று அப்பாவியாகக் கேட்டான் மதன். அவன் மீது கோபப் படுவதா அல்லது பரிதாபப் படுவதா என்று சுப்பையருக்கு தெரியவில்லை. 'தாத்தா நாளைக்கு செய்து தாறன்' என்று கூறியவாறு அவனை அணைத்து மடியில் இருத்திக் கொண்டார் அவர்.

இரும்பு அலுமாரி தொடக்கம் பிரிஜ் வரை வைத்திருந்தவற்றுள் (கரண்ட் இல்லாத காரணத்தால் தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வீடுகளில் பிரிஜ்உம் அலுமாரி போலவே பாவிக்கப் படுகிறது) முக்கியமான சிலவற்றைத் தெரிந்தெடுத்து சூட்கேசுகளினுள் உள்ளடக்கினர் சிவகுமார் தம்பதியர். பலவிதமான எண்ணங்கள் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருந்ததால் இருவரும் ஒருவரோடு ஒருவர் கதைக்கவில்லை. கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்தவாறு சமையல் பாத்திரங்களை தெரிந்தெடுக்கத் தொடங்கினார் பாக்கியம். நீண்ட காலத்துக்கு பிறகு தன் அண்ணரின் வீட்டுக்கு போகப் போகிறோம் என்கின்ற சந்தோசத்தை அவரால் முற்றாக  அனுபவிக்க முடியவில்லை.

மோட்டார் சைக்கிளில் சிவகுமார் பாக்கியத்தை ஏற்றிக் கொண்டு முன்னே போவதென்றும் பின்னால் மோகனை ஏற்றிக் கொண்டு ஒரு சைக்கிளில் பவானியும் மதனை ஏற்றிக் கொண்டு மற்றைய சைக்கிளில் சுப்பையரும் புறப்படுவதென்று தீர்மானிக்கப்பட்டது. விடை தெரியாத கேள்விகளுடன் ஒவ்வொருவராக புறப்பட்டனர். பலவிதமான மூட்டை முடிச்சுக்களை வெளியேயும் அதைவிட பலவிதமான கவலைகளை உள்ளேயும் சுமந்திருந்த சனக் கூட்டத்தால் றோட் நிறைய ஆரம்பித்தது

இறுதியில் சுப்பையர் வீட்டு படலையை பூட்டிவிட்டு வந்து சைக்கிளில் ஏறினார். அதுவரை சைக்கிளில் இருந்த மதன் துள்ளிக் குதித்து இறங்கி வீட்டை நோக்கி ஓடினான். அவனது செய்கை சுப்பையருக்கு புரிபடவில்லை. அவர் திரும்பிப் பார்த்தார். மதன் வீட்டு வெளிச் சுவருக்கு வெளியே விழுந்து கிடந்த  நான்கைந்து பழுத்த பப்பாசி இலைகளை பொறுக்கி எடுத்து வீட்டினுள் போட்டுவிட்டு ஓடிவந்து 'நாளைக்கு புல்லாங்குழல் செய்ய பப்பா குழல் வேணுமெல்லே. அதுதான் தாத்தா அதுகளை தூக்கி உள்ளுக்கை போட்டன்' என்று பெருமையுடன் கூறியவாறு மீண்டும் சைக்கிளில் ஏறிக் கொண்டான். சுப்பையரின் கண்கள் கண்ணீரால் நிரம்ப சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. 

Views: 871