ஆனைமுகத்தானே

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

கைலையில் ஒரு வழமையான அதிகாலைப்பொழுது...

தேவகணங்களின் வாத்திய இசையில் ஆழ்ந்து லயித்து போய் இருக்கிறார் ஆதிசிவன். பார்வதி தேவியும் அவர் அருகே அமர்ந்துள்ளார். தேவகணங்களோ லயிப்பிற்கு சிறிதும் பங்கம் வராமல் இசைத்தவாறே உள்ளன. ஆதிசிவனுக்கு இசையில் லயித்திருத்தல் என்பது அவ்வளவு பிடித்துபோன விடயம். இன்னும் சொற்பநேரத்தில் தேவனும் தேவியும் ஆனந்த தாண்டவம் ஆடக்கூடும். ஆகவே தேவகணங்கள் இப்போதைக்கு இசையை நிறுத்த போவதே இல்லை.

யையோ எம் பெருமானே..."

நாரதர் உள்ளே வர இசைவேள்வியும் முடிவுக்கு வருகிறது. நாரதரின் வருகை தேவியை பரபரப்புகுள் இழுக்கிறது.

"
சற்று பொறுத்து கூச்சலிட்டிருக்க கூடாதா நாரதா...? ஆனந்த தாண்டவத்தை குழப்பிவிட்டாயே.." தேவகணம் ஒன்று சினந்து கொண்டது.

வழமையாக நாரதர் வருகை கலகத்திலே தான் முடியும். ஒற்றை மாம்பழத்தை வைத்தே தனது குடும்பத்தை ஆட்டிய ஆட்டமும் பின் மகன்களை சமாளிக்க தான் பட்ட பாடும் தேவி நினைத்துக்கொண்டாள். நாரதரின் அறிமுகத்துடனே பிரச்சனைகளின் கனதி தன்மையை ஊகித்து கொள்வாள் தேவி. அதன் பின் அதற்காக தன்னை தயார்படுத்திகொள்ளல், பின் பிரச்சனையை சரியான திசையில் நகர்த்தி சொல்லுதல் என அவள் பொறுப்பு அதிகம் ஒவ்வொரு நாரதர் வருகையிலும். சற்றும் உசாராக இல்லாவிடின் நாரதர் கலகம் பெரும் தலைவலியாய் மாறிவிடும்.

ஆனந்தமாக தம்புராவை இசைத்தபடி "சம்போ சிவ சம்போ" என வந்தால் கலகத்தை இங்கிருந்து தான் இனி ஆரம்பிக்க போகிறார் என அர்த்தம். சற்றே குரல் தொனி ஒலிக்க "சம்போ…. சிவசம்போ" என வந்தால் கலகம் ஆரம்பித்து விட்டது, ஒரு பகுதி நாடகத்தை இங்கு நிகழ்த்தவுள்ளார் என அர்த்தம். அவ்வாறான தருணங்களில் தேவி மிக உசாராக இருப்பாள். நாரதன் எழுதிய நாடகத்தினை தான் நடத்தி முடிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி அவளுக்கு. ஆனால் இந்த வருகை ஐயையோ என அபாய குரலில் தொடங்குவதே நாரதன் நாடகமாட வரவில்லை எதோ பிரச்சனையுடன் தான் வருகிறார் என தேவி ஊகித்து கொண்டாள்.

"
ஆபத்து பெருமானே…. ஆபத்து….."
நாரதருக்கு கால்கள் நிலத்தில் இல்லை. பதற்றமாகவே நிண்டார்.

"
எதற்கு பதறுகிறாய் நாரதா...? பதறாமல் விசயத்தை சொல்."

"
பதறாமல் என்ன செய்வது தேவி"

"
நீ இருப்பது கையிலையில் ஆகவே பதற்றம் வேண்டாம் சொல்"

"
இல்லை எம்பெருமானே. அந்த சுயநினைவுடனே இருக்கிறேன். ஆனாலும்."

"
பதறாதே நரதா.. உன் பதற்றம் என்னையும் பதற வைக்கிறது."

"
தேவி வரும் வழியில் சனீஸ்வரனை சந்தித்து விட்டேன்."

"
அவனுக்கு என்ன வேண்டுமாம் இன்னும். தந்தைக்கு நிகராய் சக்தி கேட்டான் கொடுத்தேன் ஈஸ்வரன் எண்ட அடைமொழியும் கொடுத்தேன். வேறு என்ன வேணுமாம். அவனை அப்புடியே சூரியபகவான் இரண்டாம் மனைவி சாய தேவியின் மகனாகவே இருக்கவிட்டிருக்கனும். பேராசைக்காரன்." ஆதிசிவன் சினந்து கொண்டார்.

"
தேவி சற்று பொறுமையாக நீங்காளாவது விசயத்தை கேளுங்கள்."

"
சொல்லு நாரதா.."

"
ஆதிசிவன் சனீஸ்வரனுக்கு என்ன பணி கொடுத்தார்..?"

"
அவரவர் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைகளை குடுக்க சொன்னார். சிறந்த நீதிமானாகவும் இருக்க சொன்னார்."

"
ஆம் இந்தமுறை ஆதிசிவன் முறையாம்"

"
என்ன உளறுகிறாய் நாரதா...? நான் அவனுக்கு வரம்கொடுத்தவன்"

"
சுவாமி…. வரம் வாங்கி கொண்டவர்கள் வரம் கொடுத்தவர்கள் தலையில் கைவைப்பது என்பது நமக்கு என்ன புதிய விசயமா....??"

"
அதுக்காக என்னிடமேவா...??"

"
சுவாமி நீங்கள் செய்வது தரும தொழில் என்னும் அழித்தல். உங்கள் பாவக்கணக்கை நினைத்து பார்க்கையில் எனது சித்தமொல்லாம் கலங்குகிறது. தயவுசெய்து என் மாங்கலியத்துக்கு பங்கம் விளைவிக்கவேண்டாம். எங்காவது சென்று விடுங்கள்"

"
என்ன சொல்லுகிறாய் தேவி. புறமுதுகிட்டு ஓட சொல்கிறாயா...??"

"
இல்லை என் பிரியநாதா.. தயவு செய்து தப்பித்து விடுங்கள்."

"
ஆம் பிரபு பிரம்மதேவன் கட்டாயம் இதற்கு ஒரு உபாயம் சொல்வார். தயவு செய்து பிரம்மதேவனிடம் சென்று விடுங்கள். நேரம் தாமதிக்கவேண்டாம். நாங்கள் சனீஸ்வரரை சமாளித்து கொள்கிறோம்."

ஆதிசிவன் பிரம்மதேவரிடம் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.

"
ஆதிசிவனே இது என்ன சோதனை…..தாங்களை போல நானும் நிறைய பாவம் இழைத்துள்ளேன். எல்லா முறையும் படைப்பு நேர்த்தியாக அமைவதில்லை. அதில் ஒரு சில தவறுகளை விட்டிருக்கிறேன். ஆனால் இன்னமும் என் முறை வரவில்லை. உங்களை துரத்தி வரும் சனீஸ்வரன் என்னையும் பிடித்துவிடப்போகிறாரே. இப்பொழுது என்ன செய்வது...?"

"
சரி பதறாதே பிரம்மா... இப்பொழுது என்ன செய்யலாம்...?"

"
ஒரு உபாயம் உள்ளது"


"
சொல்லு பிரம்மா... நான் என்ன செய்யவேண்டும்..?"

"
ஓடோடிச் சென்று ஒரு பெரிய சேற்றுக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள். சேற்றுகுள் சனீஸ்வரன் வரமாட்டார்". சொல்லிமுடிக்கவும் சனீஸ்வரன் பிரம்மமண்டலம் எட்டவும் சரியாக இருந்தது.

ஆதிசிவனே மறுபடியும் புறங்கால் பிரடியிலடிக்க ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். சனீஸ்வரரும் விடுவதாய் இல்லை. இறுதியில் ஈஸ்வரன் எப்படியோ ஒரு சேற்றுகுழியை கண்டுபிடித்து அதற்குள் இறங்கி கொண்டார்.

இப்போ வா சனீஸ்வரா பாப்பம் எண்டு எள்ளி நகையாடிநார்.

"
எம்பெருமானே.. ஆதிசிவனே.. சர்வலேகரட்சகா.. உங்களை நான் எப்பெழுது சேற்றுக்குள் இறங்கவைத்தேனோ அப்பொழுதே உங்களை பிடித்து கொண்டேன். எனினும் உங்கள் பாவகணக்கில் சன்மானமாக நீங்கள் உங்கள் அவயவம் ஒன்றினை இழப்பீர்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்கள் கைகளால் ஒரு அவயத்தை இழக்க நேரிடுவார்" என சனீஸ்வரன் கூறிமறைந்தார்.******


இந்த
கதைகள் எல்லாம் இப்படியே இருக்க பூலோகத்தில் ஒரு பகுதியில் யாழ் திண்ணைவேலி பலாலி வீதி மதுக்கடை வாசலில் இருந்து இன்னும் ஒரு கதை விரிகிறது.

அதீதமதுபோதையில் தட்டுதடுமாறி ஒரு இளைஞன் தன் உந்துருளியில் பயணத்தினை ஆரம்பிக்கிறான். ஆர்முடுக்கியை முறுக்க முறுக்க அவன் வண்டியும் அவன் மனதைப்போல வேகமாகவே பயணிக்க தொடங்கியது. இரவு ஒன்பது மணி தாண்டியிருந்தது. அன்று முன்பகல் பெய்திருந்த மழை நீரால் வீதியும், வீதியின் வெப்பத்தை உறுஞ்சிய மழைநீர் ஆவியாகி வளிமண்டலத்தை நிரப்பியிருந்தது. காற்றை கிளித்து கொண்டு அவன் பயணிக்கையில் வளிமண்டல நீர்த்துளிகள் அவன் முகத்தில் சிதறி சில்லுறவைக்க அவன் போதையில் உச்சத்துகே சென்றான். அந்தபோதையில் தனக்காய் காத்திருக்கும் தன் மனைவியின் நினைவு வர வர அவன் வேகம் இன்னும் அதிகமாகியது.

கோப்பாய் சந்தியை தாண்டி செல்கையில் அதிகநேரம் இடம்விடாது முன் சென்ற கனரகவாகனத்தின் மீது கோவம்கொண்டவனாய் ஆர்முடுகத்தொடங்குகிறான். பின்பு நிகழவிருக்கும் கதைகள் யாவற்றையும் முந்தி சொல்லமுனைகையில் சறுக்குண்டு சில்லுகளுக்கு இடையில் சிக்குண்டு மூளை மரணித்த பின் அவன் பெற்றார் உறவினர் சம்மத்துடன் சாவக்சேரி சிவலிங்கத்துக்கு இடது சிறுநீரகம் வவுனியா அருளிற்கு வலது சிறுநீரகம் பொலன்னறுவை காமினி கொடகேக்கு ஈரல் என உறுப்புதானம் செய்யப்படுகிறது என முடித்துவிடப்போகிறேன்.*****

Organ transplantation - உடலுறுப்புகள் மாற்று சிகிச்சை

ஒருவரின் உடல் உறுப்புகள் பழுதடைந்த நிலையில் அதாவது சரிவர செயற்படாத நிலையில் அல்லது உறுப்புகள் உருவாகாத நிலையில் அந்த உறுப்பினை மாற்றம் செய்தல் உடலுறுப்புகள் மாற்று சிகிச்சை ஆகும். பொதுவாக இதயம், சிறுநீரகம், ஈரல், நுரையீரல்கள், சதையி, விழிவெண்படலம் என்பன மாற்றுசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றுள் சிறுநீரக மாற்று சிகிச்சை பிரசித்தமானது.

உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் உயிருடன் இருப்பவராய் அல்லது உயிருடன் இருந்து மூளை இறந்தவராய் அல்லது இறந்து போன நபராய் கூட இருக்கலாம். மூளை இறந்த நபர்களிடம் இருந்து அல்லது சுயாதீன இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டு சில மணி நேரத்துக்குள் உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காய் அங்கங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. உடலுறுப்பு மாற்று சிகிச்சை பற்றிய விளக்கங்களை அறிந்துகொள்ளமுன் பின்வரும் பதங்களின் தெளிவு அவசியம். 

1.
வழங்கி ( Donor ) :- உடல் உறுப்பினை தானம் செய்வேர்
2.
வாங்கி ( receipts) :- உடல் உறுப்பினை பெற்று கொள்பவர்
3.
வாங்கியால் அங்கம் நிராகரிக்கப்படல் ( Transplant Rejection) :- வாங்கியின் நிர்பீடண தொகுதியால் மற்றம் செய்யப்பட்ட அங்கம் நிராகரிக்கப்படுதல்.

உடலுறுப்பு தானப்பகுதியை மூன்று விதமாய் பிரிக்கலாம்

1.Autograft :-
குறித்த ஒரு நபரின் உறுப்பு அல்லது இழையப்பகுதி அந்த நபருக்கே மீள மாற்றிவைக்கப்படல். 
உதாரணம்  - தோல் மாற்றுசிகிச்சை

2.Allograft :-
ஒரேவகையான இன அங்கிகளிடையே உறுப்பு மாற்றிசிகிச்சை அளித்தல்
உதாரணம் -  ஒரு நபரின் சிறுநீரகம் பிறிதொரு நபருக்கு மாற்றப்படுதல்.

3.Xenograft :-
ஒரே வகையினை சேராத அங்கிகளிடையே உடல் உறுப்பு மாற்று சிகிச்சை அளித்தல்.
உதாரணம் -  பன்றியின் சதையினை மனிதனுக்கு பொருத்துதல்

உடலுறுப்பு மாற்றுசிகிச்சையில் உள்ள பிரதான சவால் மாற்றம் செய்யப்படும் உடலுறுப்புகள் வாங்கியால் நிராகரிக்கப்படுதல். கலங்களிலின் மேற்பரப்புகளில் காணப்படும் சில மூலக்கூறினை பிறபொருளாக (antigen) வாசிக்தறிந்து கொள்ளும் T-cells எனப்படும் கலங்கள் உடல்நிர்பீடாணத்தெகுதியில் காணப்படுகின்றன. அவை வாசித்தறிந்து கொண்டபின் அவ்வகையான Antigenகளுக்கு எதிராக பிறபொருள் எதிரிகள் (Antibody)என படும் எதிப்புசக்தியை உருவாக்கும். T-cells ஒருபோதும் அங்கியில் சொந்தகலங்களை antigen ஆக இனம்காணாது. அவ்வாறு இனம்காணும் T-cell கள் மனிதமுளையநிலையிலே அழிக்கப்படுகின்றன. 

மாற்றுசிகிச்சையில் மாற்றப்படும் அங்கம் வாங்கியின் நிர்பீடணத்தொகுதியால் பிறபொருளாகவே கருதப்படும். ஆகவே antibodies உருவாக்கமும் மாற்றுசெய்த அங்கம் செயலிழத்தலும் இடம்பெறும். இது Transplant rejection இன் அடிப்படை விளக்கம். இதன் பின்னால் உள்ள human leukocyte antigen, major histo compatible complex பற்றிய ஆய்வு கட்டுரையாக நகர்த்த விரும்பவில்லை. உறுப்புமாற்றுசிகிச்சையின் முன் வாங்கி மற்றும் வழங்கியின் குருதிமாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தபட்டு வாங்கியின் நிர்பீடண தொகுதியால் அங்கீகரிக்கப்படும் அங்கங்கள் மாத்திரமே மாற்றுசிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. *********

உடலுறுப்பு தானம் பற்றிய வரலாற்று குறிப்புகள் எம் பாரம்பரியத்துடன் ஆரம்பிக்கிறது. டாவின்சியின் ஹெலிகொப்டர் மாதிரி வரைபடம் பெரும் விஞ்ஞான புனைவாக இன்றும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் பிள்ளையாரின் தோற்றமே உடலுறுப்பு மாற்றுசிகிச்சை  Xenograft பற்றிய மிகப்பெரும் விஞ்ஞான புனைவின் ஆரம்பபுள்ளியாகும் என்பதை ஏற்க மறுக்கிறோம். பார்வதி தேவி மஞ்சள் மாவினால் உருவாக்கிய மகனுக்கு உயிர்கொடுத்து காவலிருக்க செய்ததும் சிவனால் சிரம் கொய்யப்படு தலை மாற்றப்பட்ட வரலாறுகளும் நாம் அறிந்தவையே. இந்தகதையின் எப்பகுதியலாவது எனது இஸ்ட தெய்வம் பிள்ளையார் தான் என்பதை பதிந்து வைத்துகொள்கிறேன். ஆனால் பிள்ளையார் தவிர்ந்த பிறிதொரு வரலாற்று பதிவினை பதிவு செய்யவேண்டிய தேவை உள்ளது.

சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை கிறிஸ்துவுக்கு முன் 600 களை சேர்ந்தவர். இவர் ரிஷி விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர் என்பது வரலாற்று குறிப்புகள். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமானசுஸ்ருத சம்ஹிதையைமனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் பற்றிய குறிப்புகளுக்கும் சொந்தகாரர். பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாக நவீன மருத்துவத்துறையாலும் அங்கீகரிக்கப்பட்டார்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சைகள் பற்றியும் 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகள் பற்றியும் விபரித்துள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன என குறிப்புகள் உள்ளன.

A history of organ transplantation ancient legends to modern practice
நூலை எழுதிய அமெரிக்க ஓய்வுபெற்ற உறுப்புமாற்று கிசிக்சை நிபுணர்  David Hamilton சுஸ்சுரதவை பற்றிய குறிப்புகளை தெளிவாக விளக்கியுள்ளார். நெற்றிபகுதியில் தோல்பகுதியினை மூக்கு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தியமை கன்னங்களின் சதைப்பகுதினை காது அறுவைசிகிச்சை முறைகளுக்கு பயன்படுதியமை போன்றவற்றை தற்கால பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முறைகளுடன் ஒப்பிட்டு விளக்குகிறார் Hamilton. 

இது தவிர்த்து சீனா வரலாற்று இலக்கியங்களில் Bian que என்னும் மருத்துவர் இரு நபர்களுக்கிடையே இதயங்களை மாற்றுசிகிச்சை செய்தமையாக பதிவுகள் உள்ளன. கிறிஸ்துக்கு பின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புனிதர்கள் Damian மற்றும் cosmas என்பவர்கள் இறந்துபோன எதியோப்பிய தேசத்தவரின் காலினை போரரசர் Justinian ற்க்கு மாற்றம் செய்ததாக பதிவுகள் உண்டு. இருப்பினும் முதல்முதன் வெற்றிகர corneal மாற்று சிகிச்சை eduard zirm எனும் இத்தாலிய கண்தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணரால் 1905 இல் வெற்றிகரமாய் நிகழ்த்தப்பட்டது

முதலாவது வெற்றிகர சிறுநீரக மாற்றுசிகிச்சை 1954.12.23 இல் Joseph Edward Murray இனால் ஒத்த இரட்டையர்கள் Richard மற்றும் Ronald இடையே மாற்றப்பட்டது. 1990 ஆண்டில் Murray நோபல் பரிசும் வென்றார்.1967 முதல் ஈரல் மாற்று சிகிச்சையும் 1968 இதயமாற்று சிகிச்சையும்1981 இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையும் வெற்றிகரமாய் நடந்தேறியது. போலாந்து தேசத்தின் இதய மாற்று சத்திர சிகிச்சை நிபுணர் Zbigniew religa வாழ்க்கை குறிப்புகள் மற்றும் முதல் இதய மாற்று சிகிச்சை பற்றிய குறிப்புகள் Bogowie திரைப்படமாய் வெளிவந்தன.*****


உடலுறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான நான்கு புனைவுக்கதைகள்

1.
தீடீரென தன்னை ஏமாத்திவிட்டு சென்ற சாந்தனின் அப்பா தான் சாந்தனின் முதலாளி சங்கர் என தெரிந்துகொண்டதும், சாந்தனின் அம்மா தீவிர இதய நோயினால் பாதிக்கப்படுகிறார். அவள் வாய்காலில் இரத்தவாந்தி வர வலது நெஞ்சை பிடித்தபடி சாந்தனின் அம்மா தரையில் சாய்கிறார். சாந்தனின் அம்மாவை சோதித்த வைத்தியர்கள் உடனடியாக இதயமாற்று சிகிச்சை செய்யவேண்டும் இல்லையெண்டால் அம்மா உயிர் பிழைக்க மாட்டாள் என கூறுகின்றனர். சாந்தனிற்கு தன் தாய் தன்னை வளர்க கல் தூக்கியமை மண்தூக்கியமை எல்லாம் கண்முன் வந்துபோகிறது. பிறகஸ்டங்களை எல்லாம் கற்பனை பண்ணிபார்க நேரம் போதாமையால் சாந்தன் கற்பனையை பாதியில் கலைத்து விடுகிறார். நீங்க ஆப்பிரேசனை தொடங்குங்க டொக்டர் 2மணித்தியாலத்தில இதயத்தோடு வாறன் என்ற  சாந்தன் தனது கலைக்கூடத்தை வந்தடைகிறார். சாந்தன் சிறந்த வொரு சிற்பி. அவர் செய்யும் சிற்பங்கள் உயிர்த்தன்மை வாய்ந்தவை. சாந்தன் ரெஜிபோம்களில் இதயம் ஒன்றை அழகாக செதுக்கதொடங்கினார். பின்னர் சிவப்பு நீலம் வர்ணங்களால் உயிர்கொடுக்க தொடங்கினார். தான் படைத்த இதயத்தை நெஞ்சோடு அணைத்தபடி வைத்தியசாலை நோக்கி ஓட ஆரம்பித்தார். இதனை எப்படியோ தன் ஏழாம் அறிவால் உணர்ந்து கொண்ட சங்கர் சாந்தனை தடுத்து நிறுத்தி அந்த இதயத்தை எடுத்துவருமாறு தன் அடியாள்களை அனுப்பி வைத்தார். சங்கரின் அடியாட்களை சாந்தன் பந்தாடுகிறார். இறுதியில் சங்கரின் அடியாள் குழு தலைவன் கருவாயன் கையில் இருந்த கோடாரி சாந்தன் முதுகை பதம்பாக்கிறது. சாந்தன் மயங்கி கீழே விழுகையில் கையில் இருந்த இதயத்தை வீசி எறிகிறார் அது 3 கிலேமீற்றர்கள் 278 மீற்றர்கள் தாண்டியுள்ள வைத்தியசாலை கண்ணாடிகளை உடைத்தவாறு சாத்திரசிகிச்சை கூடதில் உள்ள சாந்தனின் தாயாரின் திறக்கப்பட்டுள்ள விலா எலுப்புகூட்டினுள் விழுந்து துடிக்க ஆரம்பிக்கிறது.

2.
வில்லன் என்றாலே சாராயம் குடிக்கனும் சாராயம் வாசம் உடல் வியர்வை சிறுநீர் முழுவதும் இருக்கவேண்டும் அப்பொழுது தான் தன்னை பெரிய வில்லனாக இருக்கலாம் எண்டு கற்பனை பண்ணிகொண்டிருக்கும் பன்சூர் அலிகான் தனது சிறுநீரகங்கள் இரண்டையும் பழுதாக்கி விடுகிறான். பன்சூர் அலிகானின் அடிவருடிகளே மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்கள். தலைவன் பன்சூர் அலிகான் இல்லாத வாழ்க்கையை அவர்களால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. தங்கள் தலைவனுக்கு எப்படியாவது ஒரு சிறுநீரகத்தை பொருத்திவிடவேண்டும் என திட்டம்தீட்டுகின்றார்கள். 

ஹீரோவின் கண்தெரியா தங்கை கோவில் சென்று வரும் வழியில் வெள்ளைவானில் வந்த பன்சூர் அலிகனின் ஆட்கள் அவளை கடத்திசென்று காட்டுபகுதிக்குள் செல்கிறார்கள். பின் புயல் அடிக்கிறது, அலைகள் ஆர்ப்பரிக்கின்றன, ஒரு புலி மான் மீது பாய்கின்றது இறுதியாக மல்லிகைப்பூ கசங்கிப் போகின்றது. வேலைமுடிந்ததும் பன்சூர் அலிகான் ஆட்கள் அவளின் சிறுநீரங்கள் கண்கள் ஈரல்லை அவர்கள் கையிருந்த துருப்பிடித்த கூரிய கத்தியினால் அறுத்தெடுத்துகொண்டு அவளை கொன்று விடுகிறார்கள். பன்சூர் அலிகானுக்கு சீறுநீரகத்தை கொடுத்து விட்டு கண்கள், ஈராலை நல்லவிலைக்கு விற்றுவிடுகிறார்கள். விற்றுவந்த பணத்தில் மீளவும் சாராயம் வாங்கி குடித்து கொண்டாடுகிறார்கள். 

ஹீரோ பின் கண்கள் சிவக்க எப்படி கோவம்கொண்டு பன்சூர் அலிக்கானை கொல்லுகிறார் என்பதை அன்பு தங்கை கிட்டினி படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

3. 
கையிலையில் இருந்து சலித்து போன ஆதிசிவன் பூலோகத்தில் மீள திருவிளையாடலை ஆரம்பிக்க இத்தாலியில் Sergio Canavero பெயரோடு 1960 களின் பிற்பகுதியில் பிறந்து 2017 இல் முதலாவது தலை மாற்று சத்திரசிகிச்சையை செய்யவிருப்பதாய் அறிவிக்கிறார். ரஸ்யாவைச் சேர்ந்த தசைக்கலங்கள் நார்த்தன்மையாகும் பரம்பரை நோயினை கொண்ட 30 வயது இளைஞர் Sergio canavero இன் பரிசேதனைகளுக்கு உட்பட சம்மதம் அளிக்கிறார்.


4. 
இதே போல் பிறிதொரு விபத்தில் சிக்குண்டு 25 வயதான ஆரோக்கியமான இளைஞனின் உடல் பட்டானிச்சூர்புளியம்குளம் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் மண் நைதரசன் செறிவை அதிகரிக்க செய்யவும் இன்றிலிருந்து 3578 வருடங்கள் 11 மாதங்கள் 25 நாட்கள் கழித்து பன்நாட்டு கம்பனி ஒன்றினால் மசகு எண்ணை பெறவும் வித்திடப்படுகிறான். வவுனியா தாண்டிகுளம் சங்கரபிள்ளை சிறுநீரக மாற்றுசிகிச்சை செய்ய காத்திருக்கிறார். அவர் 175 இலக்கம் , 36 வது கொடிதுவக்கு சிறுநீரகம் கிடைக்ப் பெற்றால் அடுத்த சத்திரசிகிச்சைக்கு தயார்.

உடலுறுப்பு தானம் செய்வீர்!!! இறந்தும் வாழ்வீர்!!!

Views: 578