சுழியம்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

மெல்லிய சாரலாக மழைதூறிக்கொண்டிருந்தது. நடுச்சாமம் தாண்டி அரை நாழிகை கடந்திருக்கும். பாரிஸ் நகரம் முழுவதும் இழுத்து மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது. அதை சாதாரணமாக வீடு என்று சொல்லமுடியாது. ஷேப்பில் கொஞ்சம் பிரிட்டிஷ் மன்னர் கால அரண்மனையை ஒத்திருக்கும். ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடம். கொஞ்சம் தான். பாரிஸ்ஸுன் மற்றைய இடங்களுடன் ஒப்பிட்டால் உயரமான இடம் என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த வீடு மட்டும் கொஞ்சம் உயரத்தில் இருந்தது. அந்த மெல் இருளின் நிசப்தத்தைக்குலைக்காத வண்ணம் அவ் உருவம் அந்த வீட்டின் கதவைத்திறந்தது. சாவியால் என்று தீர்க்கமாக சொல்லமுடியாது. உள்ளே கும்மிருட்டு, கொஞ்சம் தூரத்தில் படுக்கையறை விளக்கு ஒன்றின் ஔி கதவிடுக்கினூடு கசிய அதை நோக்கி அசையத்தொடங்கியது. உன்னிப்பாக அவதானித்தால் அவ்வுருவத்தின் வலதுகைப்பெருவிரல் கிழிந்து இரத்தம் சொட்டுவதை காணலாம்அந்தப்படுக்கை அறையில் ஒரு பையன். பாரிஸ் பனிக்கு இதம் தரும் கம்பளிப் போர்வை ஒன்றை போர்த்தியவாறு சுகமான நித்திரையை அனுபவித்துக் கொண்டிருந்தான். பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. கொஞ்ச நேரம் அந்த வாலிபனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவ்வுருவம் பெரும்மூச்சுடன் தன் விசித்திரப்பணியை தொடங்கியது. மென்று கொண்டிருந்த கோந்தை அவன் பெருவிரலில் வைத்து தேய்த்த பின் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டது. அவன் போர்வையை மேலும் இழுத்து நன்றாகப்போர்த்தி விட்டு ஹோலுக்கு திரும்பி அவசர அவசரமாக வெளியேற முயன்ற அவ்வுருவத்தை சடாரென நிறுத்தியது அந்த போட்டோ...

       * * * * * *

வோல்ரேச் உயர்வாக இருக்க வேண்டும். மின் சாதனங்களில் கரண்ட் பாயும் ஒலி அந்த அடைத்த அறையில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தூய வெள்ளை நிற டைல்ஸ் பதித்து மிக மிகச் செப்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த லாப். நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதன் ஒருவன் ஏதோ முணுமுணுத்தவாறு எதையோ வைத்து இயக்கிக் கொண்டிருந்தான்.. கட்டுக்கட்டாக பர்முலாக்கள், கணிதங்கள் நிரம்பிய புத்தகங்கள் குவிந்து இருந்தன. சுவர் முழுவதும் ஜன்ஸ்டீனின் சமன்பாடுகள் உட்பட பல பர்முலாக்கள் கிறுக்கித்தள்ளப்பட்டிருந்தன. திடீரென ஓலமிட்டவாறு வெறிபிடித்தவராய் அந்த லாபினுள் ஓடத்தொடங்கினார். அவர் உழைப்பிற்க்கு பலன் கிட்டியிருக்க வேண்டும். ஏற்கனவே ஒருதடவை பற்றவைத்து அணைக்கப்பட்ட வாழைக்காய் அளவு சுருட்டு ஒன்றை மீண்டும் பற்ற வைத்தவாறு வெற்றிக்களிப்பை குறைக்கலானார். பால்யம் தொடங்கி முளைத்த அரும்புமீசை கூட மழிக்கப்படாமல் இருபது வருடங்களாக வளரந்து சடைத்த தன் தாடி சடாமுடிகளை தகர்த்து தன் முகத்தை மீண்டும் ஒருதடவை பார்ப்பதற்க்காக வோஷ்ரூமினுள் நுழைந்தார். சஸ்பன்ஸ் இல்லாமல் சொல்வதென்றால். அவர் இது வரை கொள்கைரீதியில் மட்டுமே சாத்தியமான டைம் மிஷினிற்க்கு உருவம் கொடுத்துவிட்டார். டைம் மிஷின் என்பதற்க்கு சினிமாவில் கொடுக்கப்பட்ட உருவங்களுக்கு எதிர்மறையாக அவர் கண்டுபிடித்தது பேனா சைஸிலான ஒரு கருவிமுனையில் கைரேகையை பதித்து உருட்டி விட்டால் த்ரீடீயில் ஹோலோகிராம் போன்ற ஔிக்கோளம் தோன்றும். அது முழுக்க முழுக்க பைனரி முறை கோடிங்ஸ்ஸாலானது. எது எப்படியோ வோஷ்ரூம் சென்ற அவர் திரும்பி வர குறைந்தது அரை மணி நேரமாவது எடுக்கும் முதல் பாதிக்கு செல்வோம்.

            * * * * * * * * * * * *

அந்த போட்டோவில் இருந்தது சாட்ஷாத் அவரே தான். ஆனால் அவர் இல்லை. அவரும் இருந்தார் தான் ஆனால் அந்த உருவம் அவர் இல்லை. தெளிவாச் சொன்னால் அந்த போட்டோவில் அவர் உருவத்தை ஒத்த ஒருவனின் உருவமும் இருந்தது. கதவு கிறீச்சிடும் சத்தம் கேட்கத்திரும்பினார். அந்த சிறுவனின் நித்திரை குழம்பியிருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்க்காக ஹோலுக்கு வந்தவன் அவ்வுருவத்தை கண்டதும் அப்பா என்று கூவிக்கொண்டு அவரை நோக்கி ஓடலானான். முதலில் ஓடலாமா என்று எண்ணியவர் தன் எண்ணத்தை மாற்றியவராய் அந்த சிறுவனை அணைத்துக்கொண்டார். அவர் முன்னேயிருந்த கண்ணாடியில் அச்சிறுவனை அணைத்த நிலையில் தன்னுருவத்தையும் அந்த போட்டோவில் இருந்த அந்த இரண்டு உருவங்களையும் மாறி மாறிப்பார்க்கும்போதே அவர் சில திடீர் திருப்பங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் தன்னை தயார் செய்துகொண்டார். காரணம் இந்தக்கதையின் அடிப்படையே இந்தச்சம்பவம் தான் என்பது போகப்போகப்புரியும்..அப்போது தான் அவரின் கடந்த கால நினைவுகள் சில அவரை ஆட்கொள்ளத்தொடங்கின.

                 * * * * * * *
க்ளீன் ஷேவில் அவர் மிகவும் ஹான்ட்சம்மாக இருந்தார். எப்படியும் அடுத்த ஐந்து வருடத்திற்குள் நோபல் பரிசில் அவர் பெயர் கட்டாயம் இடம்பெறும். முதல் முறையாக தன் டைம் மெஷினை இயக்கிப்பார்க்க முடிவு செய்தார். அந்தக்கருவி செயல் படத்தொடங்க ஆண்டு 2067 பிரஸ் செய்து எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாரானார். அவரது திட்டம் ஊகிக்கக்கூடியது தான், தான் பெறப்போகும் நோபல் பரிசுடனான தருணங்களை வெறொருமனிதனாகப்பார்க்க எண்ணினார். ஹோலோகிராம் அவரையும் இழுத்துக்கொண்டது. கண்விழித்துப்பார்த்தால் எங்கும் கும்மிருட்டு. அது எந்த இடம் என்று தெரியவில்லை. ஒரு வேளை அவர் ராத்திரி வேளையில் வந்திருக்கலாம். அவரது தியரியின் படி காலம் தான் மாறுமே ஒழிய பிரதேசம் மாற்றமடையாது. அதன் படி பார்த்தால் அவர் தனது லாபிற்க்குத்தானே வந்திருக்கவேண்டும். மீண்டும் ஒரு தடவை கருவியை நோக்கலானார். இல்லை சரியாகத்தான் நேரம் குறிக்கப்பட்டள்ளது. சுருட்டைப்பற்ற வைத்துக்கொண்டு லைட்டரை திருப்பினார். இடம் முழுதும் ஏதோ கிறுக்கப்பட்டு எறியப்பட்ட பேப்பர்களின் மயமாக இருந்தது. அவர் எதிர்பார்க்காத சமயம் ஏதோ ஒரு உலோகத்தால் பலமாக தலையில் அடிவிழ நிலை குலைந்து விழுந்தார். லைட்டரும் கீழே விழுந்து வெடிக்க பெற்றோல் சிதறி நிலத்தில் விசிறப்பட்டிருந்த பேப்பர்களில் தீப்பற்றிக்கொண்டது. முதலில் அவரால் எதையும் யோசிக்கமுடியவில்லை. தலை கடுமையாக வலித்தது. கோபத்தின் உச்சியை அடைந்தார். பேப்பர்கள் எரிந்து வெளிச்சம் பரவியதும் அவரின் வலப்புறத்தில் அவரை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு உருவத்தின் நிழல் அவர் விழுந்தபோக்கில்  இடப்புற சுவரில் மங்கலாகத்தெரிய சடாரெனப் பாய்ந்து அவ்வுருவத்தை கீழே தள்ளினார். நிலத்தில் கிடந்த உடைந்த  கதிரையின் பாகம் ஒன்று அவ்வுருவத்தின் தசையை ருசி பார்க்க ரத்த வெள்ளத்தில் சடலமானது அவ்வுருவம். அந்த வெறிபிடித்த மிருகத்தின் முகத்தைப்பார்ப்பதற்க்காக உடலைத்திருப்பிப்போட்டவரின் மண்டை மீண்டும் உறைந்தது. அவரது எதிர்கால உருவம் சடலமாகக்கிடந்தது..

             * * * * * * * 
அந்தநினைவுகளில் அழத்தொடங்கினார். அன்றைய நாளில் ராத்திரி நித்திரை வடமாட்டேன் என்றது. வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டான். காரணம் அடுத்த நாள் காலையில் தன் தந்தையுடன் அவன் இருப்பான். இச்சமயம் நிச்சயமாக அப்பா ப்ளைட்டில் தான் இருப்பார். ஏர்பன்சொக் சொக்லட்டுகள் எனக்காக பிரயாணித்துக்கொண்டிருக்கும். நாளையில் இருந்து நான் அப்பாசெல்லம். இந்த வேலைக்காரர்களை எனக்குப்பிடிக்காததன் காரணத்தை அப்பாவிடம் கட்டாயம் சொல்வேன். என்றெல்லாம் பல எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. இரண்டு மணி இருக்கும் தொலைபேசி ஒலித்தது எடுத்தான். ஆனால் அவனால் அதை நம்பமுடியவில்லை. நிச்சயம் கனவு தான் என்று நினைத்துக்கொண்டு தூங்கமுயன்றான். ஆனால் தூக்கம் வரவில்லை. மாறாகக்கண்ணீர் தான் தாரை தாரையாக வந்தது. நான்கு மணி நேர அழுகையின் பின் தான் அவனால் தன் தந்தை விமானவிபத்தில் இறந்ததை ஜீரணிக்கமுடிந்தது. இவ்வாறாக பல எண்ணங்கள் அவர் மனக்கண்முன் வந்து போகத் தொலைபேசி மணியின் ஒலி அவரை நிஜத்துக்குள் வரவழைத்தது.
முந்திக்கொண்டார். அவருக்கு தான் என்ன செய்யவேண்டும் என்பது விளங்கிவிட்டது. அந்தத் தொலைபேசி அழைப்பு மீண்டும் ஒரு தடவை அவனரக்காயப்படுத்த அதைக்காட்டிக்கொள்ளாமல் அச்சிறுவனை ஆசுவாசப்படுத்தினார். அப்பா நீங்கள் இனி என்னுடன் தான் இருப்பீங்களா. ஹாஹா. வேறு எங்கு செல்லலாம் நீ எதாவது ஐடியா வைத்துள்ளாயா. சரி சரி நேரமாகிற்று காலையில் பேசிக்கொள்ளலாம். இருவரும் நித்திரைக்குச்சென்றனர்..

                 * * * * * *  
நிச்சயமாக அது அவரது லாப் தான். அவன் வரும் முன் அங்கே என்ன நடந்தது என்பதைப்பார்த்துவிடலாம். எதிர் காலத்தின் குறித்த வருடத்தில் ஏற்பட்ட கடும்பஞ்சம் உள்ளூரப்புரட்சி ஒன்றிற்க்கு வித்திட , உள்ளுர்ப்புரட்சியால் அந்த வருடத்திற்க்கான நோபல் பரிசில் கௌரவிப்புக்கள் பிற்போடப்படுகின்றன. இராணுவத்தின் முறையான அனுமதியின்றி வெடிக்கும் தகவுடைய இரசாயணங்களைப்பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரும் சிறைப்படுத்தப்படுகின்றான். அவரது காலம் கடக்கும் கருவியும் பறிமுதல் செய்யப்படுகின்றது. அங்கே சித்திரவதைமுகாமினுள் நடந்த விடயங்களைவிட தான் நாற்பது வருட இளமையை தியாகித்து கண்டுபிடித்தது அனைத்தும் வீணாய்போனது பற்றிய அழுத்தமே அவரை முற்றிலும் மனநோயாளியாக்கியது. பைத்தியங்களுக்கு அந்த இராணுவ முகாமினுள் அனுமதியில்லை என்பதால் புதிதாகக்கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை சோதிக்கும் ஆய்வு ஒன்றிற்கு பரிசோதனைப்பிராணியாக அனுப்பிவைக்கப்படுகின்றார். ஆனால் எப்படியோ அங்கிருந்து தப்பித்த அந்தப்பைத்தியம் மீண்டும் தன் லாப்பை அடைந்து அதிலேயே காலம் கழிக்கலானது. கடைசியில் தன்னாலே தனக்கு கேடு என்பதற்க்கு இணங்க தன் இறந்தகாலத்தின் திடீர் வருகையில் மிரண்டு போய் கடைசியில் சடலமானது. இவையெல்லாம் அவர் அறிந்திருக்கவாய்ப்பில்லை என்றாலும் அந்த உயிரற்ற உருவத்தின் தோற்றம் அவரது எதிர்காலம் எவ்வளவு குரூரமாக மாறப்போகின்றது என்பதை அவருக்கு உணர்த்திக்கொண்டிருந்தது. அந்த லாபின் தோற்றம் அவருக்கு மண்டையை விறைக்கச் செய்தது. உண்மையில் அவர் எதிர்பார்த்து வந்ததைவிட மிக அனுகூலமாகவே இந்தப்பிரயாணம் அமைந்திருக்கின்றது. தனக்கு நேர்வதற்க்கு இருக்கும் புதினங்களை சிறப்பாக அறிந்துவிட்டார். இனியும் இங்கே தாமதிக்கக்கூடாது. ஆனால் தன் இளமை வீணடிக்கப்பட்டது பற்றிய கவலை அவனையும் மெதுவாக ஆட்கொள்ளத்தொடங்கியது. இந்தச்சுவர்களில் ஏதோ. இந்த சுவர்கள் ஏதோ சொல்ல விழைகின்றன. ஐந்து வருடங்களில் அவரது லாப் பார்க்கவே பயங்கரமாக மாற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் இந்த உருவத்திற்க்கு ஏதோ தெரிந்திருக்கவேண்டும் அந்த லாப்பின் சுவர் முழுவதும் 2017, 2017 என்று கிறுக்கித்தள்ளி ஏதோ சொல்வதற்க்கு முயன்று இருக்கிறதுஅப்படியானால் நான் வரப்போவதை இது எப்படியோ ஊகித்திருக்க வேண்டும். இந்த சிம்பொல்களால் என்னிடம் ஏதோ சொல்ல விழைந்திருக்கின்றது. அப்படி என்னதான் 2017 இல் நடந்திருக்கும். மண்டையைப்பிசையலானார். அவர் உள்மனம் மிக மிக மெதுவாக 2017 ற்குச்சென்று பார்த்தால் தான் என்ன என்றது...

                     * * * * * *

சாப்பாட்டு மேசை மிக மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தக்காளி, ஹம் ஸ்லைசஸ், சலட் இலை,அத்தோடு மிளகாய் சோஸும் மொர்சிலா சீஸும் சேர்த்து பேர்பக்ட் காமினேசனில் அந்த சன்ட்விச் செய்யப்பட்டிருந்தது. முதன் முறையாக தனக்குப்பிடித்த முறையில் சன்விச்சை அப்பா செய்திருக்கிறார் கத்தியால் அழகாக வெட்டி கரண்டியால் குத்தி எடுத்து அதை வாய்க்குள் திணித்து உதடுகளைக் குவித்து படு ஸ்டைலாக மென்று கொண்டிருந்தான். உனது எதிர்காலம் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கின்றாயா. ஏதாவது ஐடியா உள்ளதா என்று கையில் இருந்த ஈரத்தை டவலால் துடைத்தபடி பேச்சுக்கொடுத்தார். இல்லை அப்பா ஆனால் அதோ அந்த மாதிரி ஆக வேண்டும்.  இதற்க்கு அடுத்ததாக என் போட்டோவும் வர வேண்டும்.  அவன் கைகள் குறித்துக்கொண்டிருந்த திசையில் நியூட்டன், ஐன்ஸ்ட்டீன்,ஹொக்கிங் என குறிப்பிடத்தக்க சில விஞ்ஞானிகளின் உருவங்கள் பதிக்கப்பட்ட போட்டோக்கள் வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. பேச்சை மாற்ற விரும்பினார் சுற்றி நோக்குகையில் தூரத்திலுள்ள மேசை ஒன்றில் அவனது விளையாட்டு விமானம் ஒன்று அவரின் பார்வைக்குப்புலனானது. உனக்கு விமானம் ஓட்டத்தெரியுமா என்று விளையாட்டாக கேள்வி கேட்கத்தொடங்கினார். தந்தை மகன் உறவோடு சில வருடங்கள் கழிந்தன. 2031,அவர் அந்தவீட்டிற்க்கு வந்த இராத்திரியில் இருந்து பதின்னான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன...அவரது பெருவிரல் காயமும் மறைந்துவிட்டது ஆனால் அந்தக்காயத்தின் தழும்பு மாறாத வடுவாக கையில் பதிந்துவிட்டது. இப்போது அவர் ஒரு அரைக்கிழவன். உண்மையைச்சொன்னால் அவர் அந்தவீட்டிற்க்கு வந்ததற்கான காரியம் மனதுக்கு நிறைவாக நிறைவேறி விட்டது..

                        * * * * * * *

அவரின் எண்ணம் செயல் உருவம் பெற்றது கொஞ்ச நேர யோசனையின் பின் கைரேகையைப்பதித்து கருவியை உருட்டினார். ஹோலோகிராம். மீண்டும் கும்மிருட்டு. இந்த முறை கதிராளிகள் கொஞ்சம் இசைவாக சில இடங்கள் புலப்படத்தொடங்கின. அவர் தன் முழு நேர வேலைக்காக தனது சொந்த வீட்டின் கராச்சையே லாப்பாக மாற்றியிருந்தார். ஆனால் அப்போது அவர் வந்தடைந்த இடம் தூசி படிந்து ஒட்டடைகள் நிறைந்து கைவிடப்பட்டநிலையிலுள்ள ஒரு கராச். அதாவது லாப்பின் இறந்தகால வடிவம் கதவைதிறக்கமுயன்றார்  ஆனால் கராச் வெளிப்புறமாகப்பூட்டப்பட்டிருந்தது. வெளியேறுவதற்க்கு வேறு வழிகள் இல்லாததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க வேண்டியதாயிற்று. அவருக்கு சனிப்பார்வை கொஞ்சம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அவர் ஜன்னலைத்தாண்டும் போது கண்ணாடித்துண்டு ஒன்றின் முனை அவர் வலதுகைப்பெருவிரலைக்கிழித்துவிட ஒரு இக்கட்டான சூழ்நிலை அவரைச்சூழ்ந்து கொண்டது. அதாவது அவன் தன் கருவியை இயக்குவதற்க்கு செக்கியூரிடி சிஸ்டமாக தன் பெருவிரல் கைரேகையைக்கொடுத்திருந்தார். முனையில் கை ரேகையைப்பதித்தால் ஒழிய வேறெந்த முறையிலும் அந்தக் காலம் கடக்கும் கருவியை ஆன் செய்யமுடியாது. அவரால் அந்த செக்கியூரிட்டியை ப்ரேக் செய்யமுடியும் ஆனால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவரால் எதுவும் செய்யமுடியாது. அத்தோடு அதற்க்கு அவர் தன் லாப்பில் இருக்கவேண்டும். அதே தான். அவருக்கு சரியான யோசனை ஒன்று தோன்றியது. தன் இளமைப்பருவத்தின் கைரேகையைப்பயன்படுத்தி மீண்டும் நிகழ்காலத்திற்க்கு செல்ல முடிவெடுத்தார். 2017 க்கு வந்தது அவருக்கு தவறான முடிவாகப்பட்டது. இந்த ராத்திரி நேரம் அவன் நிச்சயமாக இந்த வீட்டில் தான் இருப்பான் அதுவும் நித்திரையில் இருப்பான். சரியான நேரம் தன்னிடம் இருந்த ச்விங் கம்மை வாய்க்குள் போட்டுக்கொண்டு அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைதான் அடுத்த செக்சனாக வருகின்றனவே...

      * * * * * * * * 

தன் கைதடியை ஊன்றியபடி மெதுவாக அந்த ஹோலை நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்த ஹோலின் சுவர் முழுவதும் நிறைய போட்டோக்கள் ப்ரேம் போட்டுத்தொங்கவிடப்பட்டிருந்தன. நவீன வகை ஹோல் அலங்கரிப்புகளில் இதுவும் ஒரு வகை. அதில் பல போட்டக்கள் இருந்தன சிறப்பாக தன் இளமையின் அதாவது தன்னை அப்பாவாக நினைக்கும் தன் இறந்தகால உருவத்தின் இறந்தகால நிகழ்ச்சிகள் பல அழகாக கப்சர் பண்ணப்பட்டிருந்தது. அதில் அவன் விமானஓட்டியானது. அவனின் திருமணம். அவனின் குழந்தைகள் போன்ற அவன் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களும் உள்ளடங்கும். அவற்றைக் கடைசியாகப்பார்த்தவர் அதில் அவன் தன் மனைவி குழந்தைகளுடன் போஸ் குடுக்கும் போட்டோ ஒன்றை தன்னுடன் எடுத்துக்கொண்டார். ஒரு லெட்டரை டைனிங்டேபிளில் வைத்துவிட்டு கடைசியாக தன் காலம்கடக்கும் கருவியை கையில் எடுத்தார். தான் அன்றைக்குப்பத்திரப்படுத்தி வைத்திருந்த கைரேகை  கொண்ட கோந்தை எடுத்து அதை அழுத்தி அந்தக்கருவியின் முனையில்  கைரேகையைப்பதித்துவிட்டு தன் வாழ்வில் தான் கடைசியாக மேற்கொள்ளவிருக்கும் அந்தக்காலப்பயணத்தை எதிர்கொள்ளத்தயாரானார். நிகழ்காலத்தை பிரஸ் பண்ணி ஆண்டு நேரத்தை குறித்துக்கொள்ள ஹோலோகிராம் அவரை விழுங்கிக்கொண்டது. ஆனால் இந்தமுறை அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. இப்போது அவரை எதிர்பார்த்து அவருக்கான குடும்பம் ஒன்று நிகழ்காலத்தில் காத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் இதன்பிறகு அவரின் காலம் கடக்கும் கருவிக்கு வேலையில்லாமல் போய்விடும்.

Views: 360