உச்சி தனை

எழுத்தாளர் : யோ. கிருத்திகன்மின்னஞ்சல் முகவரி:Banner

கள்ளமில்லாப்புன்னகை
சிறிய கண்
சிறிய மூக்கு
சற்றே பெரிதாய் காதுகள்
அப்படித்தான் அறிமுகமாகியிருந்தாள்

திருவிழாவில்
தொலைந்த குழந்தைக்கு
தாயைக்கண்ட மகிழ்ச்சி
எனக்கு

அக்குட்டிதேவதையை
ஓடிச்சென்று
இறுக
அணைத்துக்கொண்டது
என் மனது
புன்னகைத்துவிட்டு
பறந்துசென்று கொண்டிருந்தாள்

அவளின்முன்
என் முகமூடியை கிழித்தெறிந்து
பலவீனமாகியிருந்தேன்
வாயில் வார்த்தையில்லை
சற்றே
சிறகு சிலிர்த்திருந்தால்
சின்னாபின்னமாகியிருப்பேன்
அணைத்துக்கொண்டது 
சிறகால்
அத்தேவதை

என் கண்களில் 
வலி அறிந்தவள்
தாங்கிக்கொண்டாள் 
என்னை

சிறகொடிய அவளை
அணைத்துக்கொண்டேன் 
நான்

கண்ணீரில் அவள் முதுகை
நனைத்திருந்தேன்
தாங்கி நின்றது
தேவதை

மண்டியிட்டு
உன் வயிற்றில் முத்தமிட்டிருந்தேன்
சுமப்பாயா
எனை நீ 
மீண்டெழுந்து
உன் நெற்றியில் முத்தமிட
அணைத்துக்கொண்டது
அத்தேவதை

தாயால் புறக்கணிக்கப்பட்டோனுக்கு
தன் மடியில்
தாலாட்டினாள்
விம்மி அழுதேன்
நாட்கள்
நாழிகைகளாகின

அத்தனை துன்பத்தையும்
என்னிடமிருந்து
வாங்கிக்கொண்டாள்

என் ஒட்டுமொத்த
தனிமை துன்பம் காயம்
அத்தனைக்கும் உன்னை
மருந்தாகப் பாவிக்கும் 
அத்தனை
சுயநலம் படைத்தவன்
நான்

எத்தனையோ தடவை
அவளை கொடூரமாக காயப்படுத்தி
அதற்காகவே அவளை இறுக அணைத்து 
மன்னிப்புக்கேட்டபோதும்
என்னை
எண்ணிலடங்காமுறை
மன்னிக்கும் ஜீவன் அது

சிறகொடிப்போன்
நான்
இந்த
இராவணச்சிறையில் இருந்து
தப்பிவிடு

தப்பிவிடு தேவதையே
நீ
வாழ்ந்து முடி
நான் 
வாழ்ந்து மடிகின்றேன்

உன்னுள் ஊடுருவி
தொலைந்துவிடவேண்டும்

காலம் முழுவதும்
ஆயுள் கைதியாய்
வாழ்ந்து அழிந்துவிடுகிறேன்

வரம்கொடு
நான் 
மரணிக்கவேண்டும்
உன் 
கர்ப்பப்பைக்குள்
Views: 518