தனிவல்லபன் - இலங்கைத்தமிழர் நடுகல் வழிபாட்டின் எச்சம்

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.com



Banner

இலங்கையில் எங்காவது நடுகல் வழிபாடுகள் இருக்கின்றனவா 

இருக்கின்றது 

இலங்கையின் நடுகல் வழிபாடொன்று கிறித்துவ பௌத்த கலாச்சார மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து நின்று பிடித்துக்கொண்டிருக்கின்றது. பணிக்கனொருவனின் சந்ததியில் பிறந்து வெள்ளைத்தலைப்பாகையுடன் அதில் முத்துக்களைச்சுற்றி வெள்ளைக்குதிரையோடு மாதம்பேயை தலைநகராகக்கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் தனிவல்லபனின் வரலாற்றை இன்றும் சொல்கிறது தனிவெல்ல ராஜா நடுகற்கோவில். அதன் வரலாற்றுப்பின்னணி நடைமுறைகள் வழிபாட்டுமுறைகளோடு விரிவாக என் சக்திக்குட்பட்ட வரைமுறையோடு தொகுத்திருக்கின்றேன். இந்த முறை உவங்களோடு "தனி வல்லபன்" தமிழ் கூறும் எங்கள் நல்லுலகத்துக்கு இனிதே அறிமுகமாகின்றான். 

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் செல்கிற போது அறுபத்திரண்டாவது கிலோமீற்றரில் கடக்கின்ற போது மாதம்பை நகருக்கண்மையான ஒரு விகாரையொன்றைக் காணமுடியும். விகாரைக்கு அண்மையாக வெள்ளை நிறத்தில் பெரிய குதிரையொன்றின் உருவத்தைக் காண்பீர்கள். தெளிவாக அவதானத்தைச்செலுத்தினால் விகாரையோடு இருக்கிற நடைமுறைகளில் இருந்து குதிரையுருவத்திற்கு, அத்தோடு சேர்ந்து இருக்கிற சிறு வழிபாட்டிடத்தொகுதிக்கும் தொடர்பேயில்லாத நடைமுறைகளை பேணவதை அவதானிக்க முடியும். கடந்த ஆவணி மாதமளவில் தொன்மங்களைத்தேடி புத்தளத்தில் திரிகின்ற பொழுதிகளில் தற்செயலாக நண்பர்களுடன் இந்த இடத்திற்குச்சென்ற பொழுது பொங்கிப்படைக்கிற நடைமுறைகளைக்கண்டு விசாரிக்கத்தொடங்கியதில் நிறைய விடயங்களை புதிதாக அறிந்து கொண்டோம். அங்குள்ள கறவாக்கள் ஆரம்பத்தில் இக்கோயிலில் பெரிதாக ஆர்வங்காட்டியதில்லை.


அக்குதிரை ஒரு மன்னன் பயன்படுத்தியது அந்த மன்னனின் அடையாளம் அவனின் வெள்ளைக்குதிரையே தான். எப்போதும் அவன் குதிரையை பிரிந்ததில்லை. தனி வல்லபன் என்று அழைக்கப்படுகிற அம்மன்னனின் பெயர் இப்போது தான்ய வல்லப,  வல்லபாகு என்கிற திரிபுகளில் புழங்குகின்றது. வயல்களையும், வில்லுகளையும் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கள் முழுமையையும் தினமும் இக்குதிரையிலே சென்று மேற்பார்வை செய்த தனிவல்லபனின் உருவச்சிலையும் விகாரையை விட்டு தனியாகவே இருக்கின்றது. பிற்காலத்தில் விகாரை வந்திருந்தாலும், இப்போது விகாரையை மையப்படுத்தியே  குதிரைச்சிலை, தனிவல்லபன் கோயில் இனங்காணப்பட்டாலும் தனிவல்லபன் வழிபாட்டு நடைமுறைகளில் சிறிய விலகல்களையே விகாரையால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அந்த அளவுக்கு அங்கிருக்கும் மக்கள் தனிவல்லபனை நேசிக்கிறார்கள்.


அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? எதற்காக அவனுக்கும் குதிரைக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? தனிவல்லபனின் வரலாற்றுப்பின்னணி என்ன? 

மகாவம்சத்தில் தனிவல்லபவன் பற்றி எந்தவொரு பதிவுகளுமில்லை. ராஜாவளியில் சிலகுறிப்புக்கள் இருக்கின்றன. மாதம்பே விஸ்தரய, குருநாகல விஸ்தரய போன்ற தொன்மைச்சாசனங்கள் மூலமாகவும் மக்களிடையே எஞ்சிக்கிடக்கிற தொன்மக்கதைகள் மூலமாகவும் இந்தக்கேள்விகளுக்கான பதில்களை அறிய முயற்சித்தேன். இயன்ற வரையில் அங்கே வசிக்கிற ஒரு நூறுபேரிடமாவது விசாரித்து அறிந்தவைகளை ராஜாவளிய கூறும் செய்திகளோடு இணைத்துப்பார்த்து பொருத்தமாக இருக்கிற தகவல்களை மட்டும் இங்கே தருகின்றேன். அவ்விடயங்களை வாசிப்பதற்கு முன்னர் தனிவல்லபனின் காலத்து அரசியல் நிலையைப்பற்றிய சிறிய புரிதலோடு மேற்செல்லலாம்.


மாதம்பேயை தலைநகரமாகக்கொண்டு வடமேற்கை ஆண்டவன் தான் இந்த தனிவல்லபன். ஆய்வாளர் பெல் அவர்களின் கருத்துப்படி எட்டாம் வீரபராக்கிரம்பாகுவின் இரண்டாவது மனைவியின் இரண்டாவது மகன் என்கின்றார். இன்னும் சிலபேர் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகன் என்கின்றார்கள். எவ்வாறாயினும் உடுகம்பொலவில் இருந்த இவனுக்கு சமகாலத்தவனாக ஆட்சி செய்த சகலகலா வல்லபன் என்ற மன்னன் இந்த தனிவல்லபனின் சகோதரன் என்பது பல இடங்களில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. வடமேற்கில் ஆட்சியாக இருந்த முக்குவத்தமிழர்களை முகமதியர்களாகவும், இடப்பெயர்வாளர்களாகவும் மாற்றிய கறவாப்படைகளின் படையெடுப்புகளின் (முழுமையான விபரங்களிற்கு மெல்லத்தமிழ் இனி 1, 2ஐ வாசிக்க) காலம் என்று தனிவல்லபவன் காலத்தைக்கூறவேண்டும். மாதம்பேயின் தனித்துவமான யானைத்தந்தங்களுக்கும், முத்துக்களுக்கும் , மயில்த்தோகைகளுக்குமான போட்டிகளில் தனிவல்லபன் மன்னன் என்ற ரீதியில் தலையிட்டுக்கொண்டதோடு அவனுக்கான மக்கள் ஆதரவையும் பெற்றுக்கொண்டிருக்கிறான். கோட்டை மன்னர்கள், கண்டி மன்னர்கள் , யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திகளின் அரசியலுக்கிடையே வடமேற்கு ஒரு முத்துக்கள் தந்தங்களாக மட்டுமே பார்க்கப்பட்ட போது தன்னெழுச்சியாக வந்து மக்களை மையப்படுத்திய அரசை உருவாக்கினான் தனிவல்லபன். இவர்கள் மட்டுமல்லாது முக்குவ - கறவா தளம்பல் போர்களோடு கறவாக்களிடம் தோற்றுப்போன முக்குவர்களிடம் இருந்து இடைக்கிடையே வந்த எதிர்ப்புக்களையும் , காயல் பட்டினத்து முத்து வியாபாரிகளின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு தன்னரசை காப்பாற்றி வந்திருக்கிறான். 


மாதம்பே விஸ்தரய என்ற தொன்மப்பதிவு சொல்கிற படி முக்குவ-கறவா போர்களில் சிதைந்த வில்லுகளை திருத்தி , குளங்களை மறுசீரமைத்து  மாதம்பேயை அரசியிலும் , தானியங்களிலும் தன்னிறைவுள்ளதாக்கினான். மின்னேரியாகுளத்தைக்கட்டியதோடு அதைக்கட்டிய மன்னன் எப்படி மின்னேரியாத்தெய்வம் ஆனானோ அப்படி இவனும் தெய்வநிலைக்குயர்த்தப்பட்டிருக்கிறான். தன் மாளிகைக்கு பக்கத்திலேயே பெரியகுளம் என்கிற குளத்தையும், குடாக்குளத்தையும் கட்டுவித்து விவசாயத்தை ஊக்கப்படுத்தியிருக்கிறான். உப்பை ஏற்றி நெல் இறக்கிய வடமேற்கு இவன் காலத்தில் தன்னிறைவாகி முத்து , தந்தங்களையும் அந்நியப்பிடியில் போதிமரமும் காத்து சுதேசிகளுக்கு வழங்கினான். சிலாபத்தையும், கற்பிட்டியையும், நீர்கொழும்பையும் ,புத்தளத்தையும் கொண்ட முத்துச்சலாபங்களில் காயல் பட்டினத்து முசுலீம்களின் ஆதிக்கங்களை ஒழித்தான். மாதம்பே விஸ்தரய இவனை எதிர்த்து  காயல்பட்டினத்தாரின் படைகளோடு கிளர்ச்சி செய்த முக்குவனைப்பற்றி கூறுகின்றது. 


முத்துக்குளிக்கிற உரிமைகளை இழந்த காயல்பட்டினத்தார் தனி வல்லபனை எதிர்க்க அவனுக்கு படைகொடுத்து உதவினர் என்பதில் எந்த முரணும் இல்லை. படை வளம் போதாமையால் தனி வல்லபவன் உடகம்பொல  படைகளை உதவிக்கழைத்திருக்கிறான். சகலகலாவல்லபன் தன் யானைப்படைகளை வழங்கியதோடு நின்றுவிடாமல் நேரிடையாக கட்டுப்பிட்டிய மாதம்பைக்கும் சென்றிருக்கிறான். 

இந்த முக்குவனை கதிராயன முதலியார் என்றும் அலையாஸ் ஆதியரசன் என்றும் விஸ்தரய தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. ராஜாவளிய இன்னும் ஆழமாக இந்தச்சமர் / கிளர்ச்சி பற்றிய விபரங்களை தரவுகளோடு சொல்கின்றது. போரில் முக்குவன் தலைமையிலான படைகள் படுதோல்வியடைந்ததாகவும், படைத்தலைவன் கதிராயன முதலி கொல்லப்பட்டான் என்றும், கதிராயன முதலி இறந்ததன் பிற்பாடு யானைப்படைகள் மூலம் முக்குவன் படைகள் வந்திறங்கிய படகுகள் இருநூறு வரையில் உடைக்கப்பட்டாதாகவும் ராஜாவளிய சொல்கின்றது. முடிவில் எண்பத்தொன்பது எதிரி வீரர்களை  சிறைப்பிடிக்கப்பட்டார்கள் என்பதாக ராஜாவளிய பதிவு செய்துள்ளது.

பெரப்பன்முல்ல என்ற இடத்தின் செப்புச்சாசனம் கறவாக்கள் மற்றும் மன்னன் தனிவல்லவனுக்கெதிரான இன்னொரு முக்குவக்கிளர்ச்சியைப்பற்றி சொல்கின்றது. அதிலும் புத்தளத்து யானைகளை கைப்பற்ற வந்த முத்து என்றழைக்கப்பட்ட தமிழ் முதலியை கோட்டே மன்னனின் காலத்தில் தனிவல்லபன் வென்றதாகவே உள்ளது. ஆக பதிவுகளின் படி தனிவல்லபன் உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது காயல்பட்டினத்தின் வியாபாரிகள் உட்பட்டோரின் பெரும் எதிர்ப்போடு தான் மாதம்பேயை நிர்வகித்திருக்கிறான் என்ற முடிவுக்கு வரமுடியும்.

இவனின் பிற்காலத்தைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. வீதிய இளவரசனுக்கும் , தனி வல்லபனுக்குமான உள்நாட்டுப்போரில் "குமாரக்கட்டுவ" என்கிற வில்லுப்பூமியில் இவன் கொல்லப்பட்டான் என்கிறார்கள் இக்கோயில் நிர்வாகிகள். இதை உறுதிப்படுத்தும் வகையில் தெதுறு ஓயா குறுக்கிடும் இடத்தில் இவனின் யக்கடதோழிகள் இரவோடிரவாக படகேறி கோட்டைக்குத்தப்பியோடினர் என்று பதிவுகள் உள்ளன. 

பரமக்கந்தையில் எடுக்கப்பட்ட செப்புச்சாசனம் அங்குள்ள தனியாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அச்செப்புச்சாசனத்தின் படி "தெமழ பட்டுவ" வின் பெரியகுன்றொன்றின் மீதிருந்து தனி வல்லபன் தற்கொலை செய்து கொண்டான் என்கிறது. தன் மனைவியை எதிரிகள் (யார் என்று குறிப்பிடவில்லை) கவர்ந்ததும் தன் குதிரையோடு முடிவைத்தேடிக்கொண்டானாம் . இது தவிர உதவி அரசாங்க அதிபராக சிலாபத்தில் பணியாற்றிய நோயஸ் என்கிற ஒரு ஆய்வாளரும் மாதம்பே இளவரசன் தற்கொலை செய்து கொண்டான் என்று மக்கள் நம்புவதாக எழுதியிருக்கிறார். கடவர தேவாலயத்திற்கும் அத்தற்கொலைக்கும் தொடர்பிருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. 

தீவின் மூன்று பலமான அரசுகளையும், விரட்டியடிக்கப்பட்ட வன்னிமைகளுக்குரிய முக்குவர்களையும், தென்னிந்திய படைகளையும் எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமல்லாது மக்களின் பொருளாதாரத்திற்காக விவசாயத்தை உப்பு முத்து ஏற்றுமதிகளை நல்ல நிலைக்கு கொண்டுவந்ததாலேயே சுதேச மாதம்பே வாசிகளிடம் அவன் தெய்வநிலைக்குயர்த்தப்பட்டான். 

வடமேற்கு நோக்கிய கறவாக்களின் வருகைகள் பற்றிய செய்திகளை முக்கர ஹட்டன போன்ற தொன்மங்களில் இருந்து அவர்கள் கீழக்கரை காவிரியில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்ற முடிபு அறுதியானதே. ஆக அவர்களின் குடியேற்றங்களை நிலைநிறுத்த தங்களிலொருவனாக செயற்பட்ட ஒரு மன்னன் தனி வல்லபனுக்கு அவர்களின் "நடுகல்" வழிபாட்டுமுறைமூலம் நன்றிக்கடன் செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

தற்போது இருக்கிற வழிபாட்டுமுறைகளை தொகுத்துச்சொல்லும் போது சிங்கள மக்களின் சாதாரண வழிபாட்டிலிருந்த பெரும் விலகலையும், தமிழர்களின் நடுகல் வழிபாட்டுடனான நெருங்கிய தொடர்பையும் உணர்ந்து கொள்வீர்கள். 

ஆவணி மாதத்தில் நடைபெறுகின்ற நடுகல்லுக்குரிய விழாக்களில் சில சொற்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நானுமுற மங்கல்லய 
கப்புத் தோரண
விளக்கு மர கஹ


திருவிழாத்தொகுதி நானுமுற மங்கல்லய என்றழைக்கப்படுகின்றது. சம்பத்த ஜயந்தி ஸ்தூப என்கிற பிந்திய விகாரையின் முன்னால் "விளக்கு மர" வைக்கப்படும். "கப்புத்தோரண" செய்வதற்கு அங்கிருக்கிற சிலர் காலாகாலமாக உரித்துடையவராகின்றனர்.  பதினேழு அடி உயரத்தில் பாக்குமர தண்டு வெட்டப்பட்டு மரம் சுத்தப்படுத்தப்படும். பின்னர் கிளைகள் அகற்றப்பட்டு முக்கோண வடிவில் அடித்தளம் பலமாக்கப்பட்டு பாக்கு மர தண்டு நடப்படும். நடப்பட்ட மரத்தண்டின் உச்சியில் இருந்து கீழ் நோக்கி தென்னோலையிலான தோரணங்கள் மூலம் அலங்கரிக்கப்படும். கப்புத்தோரணக்கு முன்னால் மூன்று பிரம்புக்கூடைகளில் நூறு வெற்றிலைகள், நூறு பாக்குகள், நூறு றத்மல் என்று வழக்கில் இருக்கிற சிவப்புநிறப்பூக்கள் நிறைக்கப்படும். அடுத்த நாள் அதிகாலை பொங்கிப்படைக்கிற நிகழ்ச்சி "நானுமுற மங்கல்லய" ஆரம்பமாகும். தனி வல்லபன் அணிந்திருந்த நகைகள் இப்போதும் நடுகல் வளாகத்து பூமியிலேயே பாதுகாக்கப்படுகின்றன. கசப்பு நெல்லி, அம்புல் தொடம் சாறுகள் கலந்த நீரில் நகைகள் கழுவப்பட்டு தனிவெல்ல தெய்யோவின் (தனி வல்லவப தெய்வம்) நடுகல்கோவிலை மூன்று தடவைகள் சுற்றி வரப்படும். டிக்கும் வெட்டிய என்ற ஒரு ஓடை பொங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இருபத்தொரு "மடுவ" என்கிற பால் நிரம்பிய மண்பானைகள் பொங்கலுக்கான ஓடைகளில் பொங்கப்படும். அதிகாலையிலேயே பெருமெடுப்பில் ஊர்மக்களுக்கான சமையலும் நடைபெறத்தொடங்கும். பொங்கிப்படைத்த பின் பூசைகள் நடைபெறும்.

பூசையின் போது பரம்பரையாக கோயிலை நிர்வகிக்கின்றவர்களின் முறைக்குரியவர் பூசை செய்வார். அருகாமையில் இருக்கிற விகாரையும் போதிமரமும் பிற்காலத்திற்குரியது. இருநூறு ஆண்டுகள் முன் தான் மாதம்பே வாசிகளில் சிலரது ஆதரவோடு புத்தபகவான் உட்புகுந்தார். உட்புகுந்ததோடு பிக்குகள் சில காலத்திற்குள்ளேயே தனி வல்லபன் கோயிலை தங்களது நிர்வாகத்தோடு இணைத்துவிடக்கோரிக்கை விடுத்தனர். எனினும் தனி வல்லபனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் போன்ற கதைகள் மீது மக்களிற்கிருக்கிற நம்பிக்கைகள் அன்றிலிருந்து இன்று வரை தனித்துவமாக தனி வல்லபன் நடுகல் தொன்மத்தை பேணிக்கொண்டிருக்கின்றன. நடுகல் செங்கற்கோயிலாக 1845ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது. அப்போது அக்கட்டிடப்பணியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த முதலியார் லோறன்ஸ் மெண்டிஸ்,  முகாந்திரம் ஜோன் மெண்டிஸ் சொலமன் மெண்டிஸ் ஆகியோர் அங்கு சிதறலாக நடைபெற்ற வழிபாட்டு முறைகளை அப்படியே தொகுத்து ஒரே நடைமுறைக்கு கீழ்க்கொண்டு வந்தார்கள். 

இப்போது வெள்ளைத்தலைப்பாகை கட்டி தலைப்பாகையில் முத்துக்கள் பதித்த மாலையை சுற்றிக்கொள்கிற முத்துவீரன் தனிவல்லபனும், அவனின் குதிரையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தொடங்க "சம்புத்த ஜெயந்தி ஸ்தூப" வெளிக்கிளம்பத்தொடங்கியிருக்கிறது. தற்செயலாக கிடைத்த பத்திரிகையொன்றில் ஆதி காலத்தில் இலங்கையில் மூன்று தர்ம பிரசாத இருந்ததாகவும் இரத்தினபுரி , அம்பலாங்கொடையிலும் மூன்றாவது தர்ம பிரசாத மாதம்பேயிலும் இருந்ததாகவும் கட்டுரை ஒன்றை வாசிக்க முடிந்தது. மூன்று தர்ம பிரசாதக்களிலும் பிரதானமானதாக இருந்ததால் மகா தம்ம பிரசாத என்ற பெயர் மாதம்பே ஆகி விட்டதாக அந்தக் கட்டுரையாளர் எழுதியிருந்தார். தீப வர்ணனை என்ற அடிமுடி தெரியாத வரலாற்றை பிறழ்வுகளாகக் கொண்ட இலக்கியத்தை தனது சான்றாதாரமாகச்சொல்லியிருந்தார். ஆனால் சீத்தாவாக்கை மாயாதுன்னை காலத்து இலக்கியமான மாதம்பே விஸ்தரயவில் அப்படி ஒரு விகாரையை பற்றிய சான்றாதாரங்கள் எதுவும் இல்லை. டி.பி.ஹேவாவாஸம் தர்ம பிரசாதய பற்றி ஆதாரங்கள்  கிடைக்காமையால்  குருநாகல்பாதையில் இருக்கிற தன்சல என்கிற குக்கிராமத்திலிருந்து வந்து இங்கே தன்சல வைத்தார்கள் என்று செயற்கையான ஆதாரம்  சொல்கின்றார். 

உள்ளூரில் நிலவுகின்ற கதைகளே தனி வல்லபன் கோயிலுக்கு இப்போதும் விகாரையுடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைச்சொல்கின்றன. யானைப்பணிக்கனின் மகளின் மகனாக தனிவல்லபனைக்கூறும் வழக்கமும் பரவலாக இருக்கின்றது. கோட்டை மன்னனின் மகனாக இவனை கொண்டு போய் தொடுப்பது கோட்டையின் கீழான ஆட்சிப்பரப்பாக மாதம்பேயை காட்டுவதற்கான செயல் என்றும் கருத முடியும். எவ்வாறாயினும்  தமிழ்க்கறவாக்களின் தொல் நடுகல் வழிபாட்டின் வடமேற்கத்தைய எச்சமாக இன்றும் குதிரையோடு காட்சி தந்து கொண்டிருக்கிறான் தனியவெல்ல ராஜா என்கிற தனி வல்லபன். 
Views: 868