கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் வழக்கிலிருந்த பரிகார முறைகளும் அவை தொடர்பான பண்பாடுகளும்

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.comBanner

ஐரோப்பிய ஆக்கிரமிப்பும் அதனால் ஏற்பட்ட கலாசார மாறுதல்களும், அலோபதி வைத்தியத்தை முன்னிலைப்படுத்துகின்ற கல்வித் திட்டங்களும், மாற்று மருத்துவம் என்கிற பெயரில், இன்று இலங்கை சுதேசிகளான தமிழர்கள், முஸ்லிம்களின் பல வைத்திய முறைகளை ஒதுக்கியுள்ளன. காலனியத்திற்குப் பின்னரான இலங்கையில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சி பல முன்னேற்றகரமான மாற்றங்களையும், விருத்திகளையும் ஏற்படுத்தியிருக்கின்ற போதும் பண்பாடுகளையும், அடையாளங்களையும் தொலைத்த அல்லது அவற்றில் அக்கறைகொள்ளாத, அடுத்த தலைமுறைக்கு தம்மை யாரென அடையாளங்காட்ட முடியாத ஒரு மலட்டு மனோபாவத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்பது நிதர்சனம். மாற்றங்களும், புதிய பரிமாணங்களும் ஒரு நாகரிகத்தை தொடர்ந்தும் நிலைபெறச் செய்யும் என்றாலும் முழுக் முழுக்க சொந்தப்பண்பாடுகளை புதைத்துவிட்டு ஒரு மாற்றுக் கலாசாரத்தின் மனிதப் பிரதிகளாக தம்மை மாற்றிக் கொள்வது அழிந்து போன சமூகங்களின் பட்டியலில் இணைத்துவிடும் செயலாகும். 

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடுகள் வித்தியாசமானவை, இவர்களிடம் திராவிடக்கலாசாரமும், மத்தியகிழக்குக் கலாசாரமும், மற்றும் தனித்துவமான மேலும் சில இயல்புகளும் இணைந்திருக்கின்றன. இந்த ஆவணப்படுத்தல் அவர்களிடம் வழக்கில் இருந்த மருத்துவ பண்பாடுகள் பற்றிய தொகுப்பாகும். தற்போது அறிவியல் விருத்தியும், ஆன்மீக விருத்தியும் இவற்றில் பெரும்பாலான நடைமுறைகளை கைவிடவைத்துள்ன. பல மேலும் புதிய நடைமுறைகளை வழக்கில் கொண்டுவந்துள்ளன. தற்போதைய விஞ்ஞான அளவுகோல்கள் இவற்றில் பலவற்றை மூடநம்பிக்கைகள் என வரையறை செய்யத்துணிந்தாலும், ஒரு ஆதியான பண்பாட்டு வளர்ச்சியின் தொடர்சியாக இதனை கண்டு கொள்ளலாம். ஆன்மீக அறிவின் வளர்சி இவற்றில் ஆரோக்கியமான பங்களிப்பை வளங்கியிருக்கின்றது. 

மேலும் கிழக்கிலங்கை தமிழ் மக்களின் பண்பாடுகளுடன் ஒத்துப் போகக்கூடிய பல ஒற்றுமைகளையும் இவை கொண்டிருக்கின்றன. இந்த பரஸ்பர இணைப்பகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறுக்கப்படமுடியாதவை.

மருத்துவம்

மருத்துவம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவையாகும். மருத்துவ நடைமுறைகள் (Medicinal Practise ) சமுகத்துக்குச் சமுகம் வேறுபட்டனவாகக் காணப்படுகின்றன இருப்பினும் தற்கால உலகமயமாக்கம் இவற்றிலுள்ள தனித்துவங்களுக்கிடையான இடைவெளியைக் வெகுவாகக் குறைத்து வருகின்றது. ஆரோக்கியம் என்கின்ற பொது நோக்கத்தில், நோய்களை இனங்காணல், பரிகரித்தல், அவற்றிலிருந்து முற்காப்புப் பெறல் என்பவற்றிற்காக நடைமுறைப்படுத்தப்படும் உத்திகள், வழிமுறைகள் என்பவை வைத்தியம் எனப்படும். இவற்றுள் மக்களிடையே காணப்படும் நம்பிக்கைகள், சடங்குகள், தூய்மை- தீட்டு, பத்தியம் தொடர்பான வரன்முறைகள் போன்ற பண்பாட்டம்சங்களும் உள்ளடங்குகின்றன.

கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் வழக்கில் இருந்தநலம்பேணல் முறைகளை ( Health care systems) பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1. நம்பிக்கை, அனுபவம், மரபுசார் பண்பாட்டம்சங்கள்
2. கீழைத்தேய அல்லது பாரம்பரிய வைத்திய முறைகள் ( Traditional Medicine)
3. மேலைத்தேய வைத்திய முறைகள் (Western medicines )

 “பாரம்பரிய மருத்துவம் எனப்படுவது கொள்கைகள் கொள்கைகள் ( (Principles) , நம்பிக்கைகள் (beliefs), மற்றும் அனுபவங்கள் (Experience) என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட காலாச்சாரங்களினுள் காணப்படும் சுதேசமான அறிவு, திறன் மற்றும் செயற்பாடுகள்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது (World Health Organization).

நம்பிக்கை, அனுபவம், மரபுசார் வழிமுறைகளையும் பாரம்பரிய வைத்திய முறைகளுள்; உள்ளடக்கலாமெனினும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின்; பாரம்பரிய மருத்துவ வரலாற்றில் நெறிப்படுத்தப்பட்ட வைத்தியமுறைகளிலிருந்து (சித்த, ஆயுர்வேதம், யூனானி) இவற்றை பெரிதும் வேறுபடுத்திக்காட்ட முடியுமாக இருக்கின்றது. நெறிப்படுத்தப்பட்ட வைத்திய முறைகளை சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களே (Physcicians ) மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஏனைய பண்பாட்டு நடைமுறைகளை சாதாரண வாழ்கையில் மக்கள் அவர்களாகவே செய்து வருகின்றனர்.

மரபுகள், வீட்டு வைத்திய முறைகள்

அன்றைய ஆன்மீக மற்றும் விஞ்ஞான அறிவு குறைந்த காலத்தில் மக்களிடம் மரபுவழியாக இருந்த நோய்பற்றிய எண்ணக்கருக்களிலொன்று நோய்கள் கெட்ட சக்திகளின் வினை என்றும் அச்சக்திகளைத் துரத்துவதே நிவாரணம் எனவும் கருதினர். பிற்காலத்தில் ஏற்பட்ட சமய மற்றும் கல்வி விழிப்புணர்ச்சி மற்றும் விருத்திகளினால் மக்களின் பெரும்பாலான அந்நம்பிக்கைகளும் மரபுகளும் கைவிடப்பட்டன.

சம்மாந்துறை மக்களிடையே மூலிகை வைத்திய அறிவு சந்ததிகளாக பேணப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் கிராமப்புறங்ளில் இதனை அதிகம் கண்டு கொள்ளலாம். வெட்டுக்காயங்கள், ஊரோடிக்காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்துகள் கழிம்புகளை (Cream) தாமாகவே தயாரித்து பயன்படுத்துகின்றனர். வீட்டுச் சூழல்களில் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, வேம்பு, மாதுளை போன்றவை வளர்க்கப்படுகின்றன. 

முடிவெட்டுதல் புதன்கிழமையும், நகம் வெட்டுதல் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமை கட்டாயம் குளித்தல் என்றும் ஒரு மரபு பேணப்பட்டு வருகின்றது. 

முஸ்லிம்களிடையே சுர்மா (கண்மை), மிஸ்வாக் (அராக்கு மர குச்சியினால் பல்விளக்கல்) பயன்படுத்தல், கருஞ்சீரகம், ஒலிவ் எண்ணை, சைத்தூன் காய், பேரீச்சை, தேன், ஸம்ஸம் தண்ணீர் போன்றவற்றின் பயன்பாடு வழக்கமாக காணப்படுகின்றது. இஸ்லாமிய நம்பிக்கையின் பிரகாரம் முஸ்லிம்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர். 

விஷக்கற்கள் 

பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தீண்டல் ஏற்பட்டவர்கள் விஷக்கல்லில் தீண்டப்பட்ட காயத்தை வைத்து பிடித்துக் கொண்டிருக்க விஷம் இறங்கிவிடுவதாக நம்புகின்றனர். இவ்வாறு விஷநிவாரணம் பெற்றவர்களின் பல அதிசயமான சம்பவங்களை இன்றும் நினைவு கூரப்படுகின்றன. இவ்வாறான ஒரு விஷக்கல் சம்மாந்துறையை அண்மித்திருக்கும் மாவடிப்பள்ளி கிராமத்தில் உள்ள செயின் மவுலானாவின் பள்ளி வளவில் கிணற்றிற்கருகில் இருக்கின்றது. மேலும் பல கற்கள் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் இருப்பதாக அறிய முடிகின்றது. சில கோயில்களிலும் இவ்வாறான விசக்கற்கள் இருப்பதாக அறிய முடிகின்றது. 

ஊரோடி

ஊரோடி ஒரு துர்சக்தியாக கணிக்கப்படுகின்றது. ஒருவருக்கு இந்நோய் வந்தால் ஊர் முழுக்க பரவிவிடும் என்பதால் இதனை ஊரோடி என அழைக்கின்றனர். தொற்று நோய்கள் பற்றிய அச்சம் மக்களிடையே நிலவி வந்திருக்கினறது.  இதனால் காய்சல், கொப்புளம், வயிற்றோட்டம் போன்றவை ஏற்படுவதாகக் மக்கள் கருதினர். ஊரோடி ஏற்பட்டவர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். தாய்மார் பிள்ளைகளின் தலைமாட்டில் ஒருகொத்து அரிசியை சுளகில் அள்ளி வைத்து அல்லது சீலைத் துண்டொன்றில் பணத்தை முடிந்து வைத்து நோய்தீர்ந்ததும் அதனை மிஸ்கீன்களுக்கு (ஏழைகளுக்கு) ஸதகாவாக (தானமாக) கொடுப்பார்கள். நோய்க்காலத்தில் பத்திரம் சந்தணம் எனப்படும் ஏழுவித மூலிகைகளை அரைத்து செய்யப்படும் கழிம்பு பூசப்படும்

பத்திரம் சந்தணத்தில் துளசி, கற்பூரவள்ளி, மஞ்சள், வேப்பிலை, மாதுளை, சந்தணம் போன்ற மூலிகைகள்காணப்படும். அம்மை, ஊரோடி ஏற்பட்டவர்களின் வீட்டுக் கடப்பல் (வாயில்) படலையில் வேப்பங்கொத்து ஒன்று கட்டித் தொங்க விடப்படும். இதனை எச்சரிக்கை சமிக்ஞையாக அடுத்தவர்கள் புரிந்து கொள்வார்கள். கத்னா (விருத்த சேதனம்) வீட்டிலும் இவ்வாறு செய்யப்படும் இது தீட்டுடையவர்களின் நுழைகையை எச்சரிப்பதற்காகவாகும்


மிஸ்கின் சோறு- பாத்திஹா – நிய்யத்

சிலர் மிஸ்கின்கள் (ஏழைகள்), கன்பொஞ்சாரிகள் (விதவைகள்) அனாதைகள் போன்றவர்களுக்கு உணவளிப்பதாக இறைவனிடம் நேர்ச்சை செய்து நோய் தீர்ந்ததும் அவர்களின் நேர்ச்சைப் பிரகாரம் செய்வார்கள். இன்னும் சிலர் உயிருக்கு உயிர் ஹதியாக் கொடுத்தல் (அன்பளிப்பு) என்று கூறி மாடு , ஆடு போன்றவற்றை அறுத்து ஏழைகளிற்கு கொடுத்துவருகின்றனர். அத்தோடு சிலர் ஹயாத்தினியப்பா, கலந்தரப்பா, மையதீன் ஆண்டவர் (முகையதீன் அப்துல் காதர் ஜீலானி) போன்றவர்கள் பெயரில் பாத்திஹா ஓதி நிய்யத் எனப்படும் முஸ்லிம்களிடையே பிரபலமாகியிருந்த ஒருவகை இனிப்பான பால் சோறு சமைத்து சுற்றத்தார், உறவினர்களுடன் உண்பார்கள். இவ்வழக்கம் இஸ்லாமிய புத்தெழுச்சிகளின் பின்னர் தற்போது நடைமுறையில் இல்லை.

நேர்த்திகள்

கபுறாளிகளின் (மரணித்தவர்களின்) குற்றம் அல்லது நேர்ச்சைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் பிள்ளைகள் குறைபாடாக பிறப்பதாகவும், பேச்சு திருத்தமின்றி (கொன்னை)யாக வருவதாகவும் நம்பினார்கள். இதற்காக  “கத்தம்” எனப்படும் கதமுல் குர்ஆன், பாத்திஹா என்கிற சடங்குகளை செய்தனர் . பள்ளிவாசல் முஅத்தின் (மோதினார்) –பள்ளிவாசலில் பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சொல்பவர்- வரவழைக்கப்பட்டு குர்ஆன் ஓதி தமாம் செய்து. அவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு பாத்திஹா ஓதலுடன் இது நிறைவடையும்.

நேர்சைகள் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை வியாபித்துச் செல்லும். நோய்களின் தீவிரம், இயலுமை, பக்தி சிரத்தை என்பவைகளின் கூட்டு விளைவாக நேர்சைகளின் அளவைப் பார்க்கலாம். அரிசிமா ரொட்டி சுட்டு வெள்ளைச் சீலை விரிக்கப்பட்ட சுளகில் வைத்து அதனை நோயுற்றவர் அல்லது பிள்ளைகளின் தலையை மூன்று முறை சுற்றி கையால் உடைத்து வளவு வாயிலில் நின்று சுற்றத்தாருக்கும் வழிப்போக்கர்களுக்கும் பகிர்வார்கள். எஞ்சும் துணிக்கைகளை உதறி காகங்களுக்கு போடுவார்கள் 

தர்கா - யாத்திரைகள்

பிள்ளைப்பேறு இல்லாதவர்களும், தீரா நோயுள்ளவர்களும் அவ்லியாக்கள் எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் காராமத்துக்கள் மூலம் நிவர்த்தி பெற வேண்டி, அவர்களின் கப்றுகளை (அடக்கத்தலங்களை) ஸியாரத் (தரிசித்தல்) செய்வதும் அவர்கள் மூலமாக வஸீலாத் (உதவி) தேடுவது, நேர்ச்சைகள் செய்வது, தொட்டில், பண முடிச்சு கட்டுவது போன்றவற்றையும் செய்து வந்தனர்.

சம்மாந்துறையில் காட்டவுலியா, வீரையடியப்பா, கலந்தரப்பா, குருந்தையடியப்பா, கோஸப்பா, சீலக்கரை மஸ்தார், மஸ்தார் வாப்பா, பூசிரங்கன்னி நாச்சியார், கண்கத்தியப்பா, போன்ற இறைநேசர்களாக மதிக்கப்பட்டவர்களின் ஸியாரங்கள் இருந்திருக்கின்றன. இன்று அவற்றுள் சிலதே எஞ்சியுள்ளன. சிலர் பாவாதமலை, தப்தர் ஜெயிலானி, கதிர்காமம், இறக்காமம் சேகுஒலியுல்லா ஸியாரம், கல்முனைக்குடி நாகூர்   போன்ற தூர இடங்களுக்கு யாத்திரைகளும் செய்து வந்துள்ளனர். இவ்வழக்கமும் இஸ்லாமிய புத்தெழுச்சிகளின் பினனர் நடைமுறையில் வழக்கொழிந்து விட்டன.

மேலும் கொடியேற்றம் நடைபெறும் தர்ஹாக்களுக்கு சென்று வழிபடல், கடலில் உப்பு அள்ளி பொடுதல், பாலுண்ணி, புற்று உள்ளவர்கள் பாலுண்ணிப் பணியாரம் எனும் பலகாரம் செய்து அதனை கடலில் வீசுவார்கள், ஆடு, மாடு, கோழி, தென்னம்பிள்ளை, தேங்காய் என்பவற்றை நேர்சை செய்து பள்ளிவாசலுக்கு வழங்குதல், காணிக்கைகள் செலுத்துதல் என்பவற்றையும் செய்து வந்தனர். இது தவிர நோன்பு பிடித்தல், தொழுகைகளில் ஈடுபடல் போன்ற நேர்சசைகளும் அதிகமாக கைக் கொள்ளப்பட்டன.

கண்ணூறு   ( Evil look)

கண்ணூறு (Evil loo) அல்லது திருஷ்டி எனப்படும். பிறரது பார்வை காரணமாக ஏற்படுகின்ற கெடுதியையும், நாவூறு எனப்படும் பிறரது நாவினால் ஏற்படுகிற கெடுதியையும் எண்ணி அவற்றிற்காக முற்காப்பு நடவடிக்கைகளையும், அவற்றை நீக்க சில மரபு முறைகளையும் கைக் கொள்கின்றனர்..

மழுப்போடுதல் - (Iron Treatment )

மழு என்றால் தமிழிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்று பொருள்படும். கண்ணூறு பட்டவர்களுக்காக . மாட்டின் லாடங்களை அல்லது இரும்புகட்டிகளை கோர்வை செய்து தயாரிக்கப்பட்ட மழுக் கோர்வை அடுப்பில் செஞ்சூடாகும் வரை பழுக்க சூடாக்கப்பட்டு ஒரு கோப்பைத் தண்ணீரில் அவ்விரும்பு போடப்படும். இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் நோயாளிக்கு, அல்லது கண்ணூறால் பாதிக்கப்பட்டவருக்கு அருந்தக் கொடுக்கப்படும். மழுவிற்கு பதிலாக சீனிக்கல் எனப்படும் வெண்ணிற கற்கள் அல்லது தென்னஞ் சுரட்டைத் தணல் என்பனவும்  பயன்படும்.

இது தவிர ஏழுமிளகு, ஏழு மிளகாய் என்பவற்றுடன் இறந்த கிடுகோலைத்துண்டு என்பவற்றை உள்ளங்கையில் வைத்து கண்பட்டவரின் உடலை ஏழு முறை தலையிலிருந்து கால்வரை தடவி அவரை  அதன் மீது துப்பச் செய்து முச்சந்தியிலுள்ள குப்பைகளுடன் போட்டு எரியூட்டப்படும்.


திருஷ்டி விரட்டி

குழந்தைகளிலிருந்து பார்வைகளை விலக்க அரிசிமையினால் கறுப்புப் புள்ளியொன்று கன்னத்தில் இடப்படும். அல்லது கறுப்பு நிற நூல் ஒன்று கைகளில் அல்லது கழுத்தில் கட்டி விடப்படும். பயிர்ச்செய்கை நிலங்களில் கண்ணூற்றைத் தவிர்க்க சோலைக்காட்டு பொம்மைகள் செய்து வைக்கப்படும்.

கெட்ட சக்திகள் , கண்ணூறு என்பவற்றின் விளைவைத் தடுக்க தாய்மாமனால் பின்னப்பட்ட ஏழு நிற நூல்களை நோயாளிக்கு அணிவிப்பார்கள் இது மாமநூல் எனப்படும்.

சேனைகள் வயல்வெளிகளில் பயிர்களுக்கும் கண்ணூறு ஏற்படுவதாக கருதி பார்வையை திருப்பும் சோலைக்காட்டு பொம்மைகள், மாட்டுத்தலை போன்றவையும் பயிர்செய் நிலங்களில் வைக்கப்படுகின்றன.


வானத்தில் எரி நட்சத்திரங்களைக் காண்பது கெட்ட விடயமாக கருதப்பட்டது, வால் வெள்ளிகள் எவி நட்சத்திரங்களைக் காணும் போது பால் வரக்கூடிய மரமொன்றை நினைவிற்கு எடுக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.

கைமருந்துகள் - வீட்டுவைத்தியம்


விவசாயம், வேட்டையாடுதல் போன்றவேளைகளில் ஏற்படும் காயங்கள், என்பு முறிவுகள் வி~ ஜந்துக்களின் தீண்டல், நச்சு செடிகளின் தாக்கம், அஜீரணம் போன்ற உபாதைகளிற்கு கைமருந்துகளைப் பாவித்தனர். குணப்படாத பட்சத்தில் பாரம்பரிய வைத்தியர்களை நாடினர்.

சிறுவர்கள் கூட விளையாடும் போது ஏற்படும் காயங்களுக்கு தாமாகவே கைமருந்துகளை பிரயோகித்துள்ளனர் உதாரணமாக பத்திரம் சந்தணத்தைக் குறிப்பிடலாம். 

ஒவ்வொரு வளவுகளிலும் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளியுடன் ஏதாவது இலைக்கறி செடிகளும் காணப்படும். வீடுகளில் மருந்துகளாக சந்தணக்கட்டை ஸம்ஸம்தண்ணி, பன்னீர் என்பவை இருக்கும் அத்துடன் சந்தணம் உரோஞ்சக்கல், மருந்தரைக்கும் உருளைக்கல், அம்மி, குளவி, கையுரல், உலக்கை, குளிசை அரைக்கும் சிரட்டை, சுக்குறிச்சான், மருந்துக்கீஸா, மளுக்கோர்வை, என்பனவும் காணப்படும்.


கிழக்கின் பாரம்பரிய மருத்துவம்

கிழக்கிலங்கையில் வழக்கிலிருந்த மற்றும் வழக்கிலிருக்கின்ற பாரம்பரிய வைத்திய முறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. ஆயுள் வேதம் -

ஏறத்தாள 5000 வருடங்களுக்கு முன்னர் இந்திய துணைக்கண்டத்தில் தோற்றம் பெற்றதாக கருதப்படுகின்றது. இந்திய துணைக்கண்டத்துடனான நெருக்கமான தொடர்புகள் இலங்கையிலும் சுதேசமான வைத்திய துறையாக ஆயர்வேதத்தை ஆக்கியிருக்கின்றன. நிவாரணத்திற்காக மூலிகைகள் கனிமங்கள் என்பவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒளடதங்கள் பயன்படுகின்றன. 

2. சித்த மருத்துவம் - 

சித்தர்களின் மூலிகை மருத்துவமாகும். பொதுவாக தமிழ் சித்தர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட வைத்தியமுறையாகும். இவற்றிற்கான குறிப்புகள் ஏடுகளில் பாடல் வடிவில் காணப்படுகின்றன.

3. யூனானி மருத்துவம் - 

அரேபியர்களால் விருத்தி செய்யப்பட்ட மருத்துவமுறையாகும். குறிப்பாக மத்தியகாலத்தில் இஸ்லாமிய அரசுகளினால் ஊக்குவிக்கப்பட்ட இவை அராபிய, பாரசீக வர்த்தகர்களாலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாலும் இலங்கையை அடைந்ததாக நம்பப்படுகின்றது.

4. முறிவு வைத்தியம் -

எலும்பு முறிவு, நோவுகள், மூட்டுக்களில் ஏற்படும் குறைகளிற்கான நிவாரண முறையாகும். முறிவு வைத்தியத்திற்கு விசேடமான வைத்தியர்கள் காணப்படுகின்றனர்.

5. உழுக்குப் பார்த்தல்

சுழுக்கு அல்லது சொடக்கு எனப்படும் என்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை நீக்கும் கலையாகும். இதனை பிறப்பில் இரட்டையர்காக உள்ளவர் அல்லது காலினால் பிறந்தவர்கள் செய்ய வேண்டுமென்கிற ஐதீகமுண்டு அன்றி ஏனையவர்கள் புற்று மண்ணில் மந்திரித்து செய்ய வெண்டும்.

சுழுக்கு காலில் அல்லது கையில் ஏற்பட்டவர்கள் கால் அல்லது கையை நிலத்தில் வைத்துப் பிடித்திருக்க பரிகாரம் செய்பவர் புற்றுமண் கட்டியொன்றை எடுத்து மந்திரத்துக் கொண்டே அதனை துகளாக்கி குறித்த உறுப்பில் தூவுவார். பின்னர் பா பா பா பா என்று பரிகாரி; அழைக்க இவரது உறுப்பும் மெதுவாக நார்ந்து செல்லும் உடனடியாக அதனைப் பிடித்து நெட்டி முறித்து (சொடக்கு) எடுத்து விடுவார். பின்னர் சில மூலிகை ஊறல்களைக் கொடுத்து பத்து போடக் கொடுப்பார்.

கழுத்து, இடுப்பு பகுதிகளில் சுழுக்கு ஏற்பட்டவர்களுக்கு பச்சையாக வெட்டியெடுக்கப்பட்ட தடியொன்றை நெடுக்காக இரண்டாகப் பிளந்து நோயாளியின் இடுப்பு அல்லது கழுத்துப் பகுதியில் வைக்கச் சொல்லி அவரின் பருமட்டான உயரமுடைய இன்னமொருவரை அவருக்கு எதிரே நிற்கச் செய்து அவரிடம் தடியின் மறுமுனையை வைத்திருக்கச் சொல்லி. மந்திரிக்கப்பட்ட புற்று மண்ணை தடிகளின் மீது சிறிது சிறிதாக  போடுவார் இருதடிகளும் மெதுவாக வளைந்து ஒட்டிக்கொள்ளும். பரிகாரி அவற்றை அப்படியே பிடித்து முழங்காலில் வைத்து முறித்து வீட்டின் கூரை மீது வீசிவிடுவார்.

6. தொங்கலுக்கப் பார்த்தல் , வயிறு திறாவி (தடவி) பார்த்தல்

கைப்பிள்ளைகளின் குடலில் ஜீரணமாகாத பொருட்கள் தங்கியிருந்தால் அல்லது குடல் பின்னி அல்லது ஏறி இறங்கியிருந்தால் பரிகாரிமார். வயிறு தடவிப்பார்த்து ஊதிப்பார்ப்பார்கள்.

7. விச வைத்தியம்

ஆயர்வேத வைத்தியக் கலையின் ஒரு வகையாக காணப்பட்டாலும், தனியான சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்துறையில் காணப்படுகின்றனர், பாம்பு, தேள், விசச்செடிகள் போன்றவற்றினால் ஏற்படும் நச்சுத் தன்மைக்கான சிகிச்சை முறையாகும்

8. கனாக்கண்ட வைத்தியம்

நெடுந்காலம் தீரா நோய்களிற்கு சிலருக்கு கனவுகளில் மருந்து அறிவிக்கப்படும். அந் நிவாரணக் குறிப்புகளைக் கொண்டு அவர்கள் குறிந்த மருந்தை பயன்படுத்துவார்கள். சிலர் பிறருக்கும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

9. மந்திர வைத்தியம் (மலையாள, அரபு, தமிழ்) 


இதில் மலையாள மாந்திரீகம், அரபு மாந்திரீகம், தமிழ் மாந்திரீகம் என மூன்று வகைகள் சம்மாந்துறையில் கையாளப்பட்டு வருகின்றன. இவை பொதுவாக மட்டக்களப்பு மாந்திரீகம் என் அழைக்கப்படுகின்றன. மந்திரச் சொற்களின் உச்சாடணங்களின் மூலமும், விஷேட சடங்குகள் மூலமும் நிவாரணம் பெறும் முறையாகும். இம்முறைகளின் பயன்பாடு தற்காலத்தில் ஓரளவு குறைந்து வருகின்றது. 

10. ஜின்வைத்தியம்

இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளின் படி உள்ள மறைவான ஒரு படைப்பினமான நெருப்பினால் படைக்கப்பட்டதாக கருதப்படும் ஜின்களின் உதவியினைக் கொண்டு (அமானுஷ்ய படைப்புகளின்) நிவாரணம் செய்யப்படுவதாக கருதப்படுவது

11. குறி பார்த்தல்

பால்,தீபம் அல்லது அரிக்கும் உலையில் எடுக்கப்பட்ட நீர் என்பவற்றை அல்லது வெற்றிலையில் மையிட்டு கடந்தகால நிகழ்வுகளைப் பார்த்து அவற்றிற்கு நிவாரணம் செய்தல்.

12. சோதிடம், இராசி 

பிறந்த நேரம், திகதி, கிரகநிலைகள், நட்சத்திரங்கள்,; சார்பாக குறித்த நபர்களின் எதிர்காலம் பற்றியறிந்து கொண்டு தோஸங்கள், குறைகளிற்கு நிவாரணம் பெறும் முறை

13. கால்நடை வைத்தியம் 

ஆடு, மாடு, குதிரை, யானை போன்றவற்றிற்கான வைத்தியமும்
முதலை, யானை, விஷ ஜந்துக்களைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாந்திரீகமும்

14. வாஸ்து சாஸ்திரம் - மனை வாகுடம்

வீடு கட்டுதல், காணிகளில் எல்லைகள், வாசல் (கடப்பு) வைத்தல், கிணறு தோண்ட இடம்பார்ததல், பாதைகளிற்கு நிலமெடுத்தல் போன்றவற்றிற்காக மனை வாகுடம் கற்றவர்களிடம் பெறும் அறிவுரைகள்.

3.1 மாந்திரீகம் 

கிழக்கிலங்கையில் கைக்கொள்ளப்படும் வைத்திய பிரிவுகளில் மாந்திரீகம் இதுவரை விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கலையாகவே கருதப்படுகின்றது. Psudo science, Mata Physics என்று நவீன விஞ்ஞான விளக்கங்களும், தத்துவார்த்த வர்ணணைகளும் (Phylosophical explanations ) வளங்கப்படுகின்றன. நவீன உலகம் இதனை அடுத்த கட்டத்திற்க நகர்த்தியள்ள போதிலும். எமது பிராந்திய மாந்திரீக வரலாறு இன்னும் பாரம்பறிய அறிவினை பிரதிபலிக்கும் தனித்துவத்தினை கொண்டுள்ளது.  

“மட்டக்களப்பார் பாயிலே ஒட்டவைப்பார்” என்கிற பழமொழியினை நோக்குகின்ற போது இன்னும் எம் பிராந்திய மாந்தீரீகச் செல்வாக்கை கட்டியம் கூறுகின்றது. மாந்திரீக வைத்திய முறைகளில் ஜின்வைத்தியம், அரபு, மலையாள மாந்திரம், (ஓதிப்பார்த்தல்- ஊதிப்பார்த்தல், மந்திரித்தல் செய்வினை, சூனியம், காவல், கழிப்பு) போன்றவற்றை தனித்துவமாகக் குறிப்பிடலாம்


கெட்ட சக்திகள்

கெட்ட சக்திகளாக கிழக்கிலங்கை மக்களிடம் ஒரு பெரும் பட்டியலே இருக்கின்றது. பேய், பிசாசு, வைரவன், மோகினிப் பிசாசு (பெண்களை பீடிப்பது), கொள்ளியாப் பேய் (கொள்ளிவாய் பிசாசு) , கரையாக்கன்(மீனவர்களை பீடிப்பது), சைத்தான், அமுக்குச் சைத்தான்(தூக்கத்தில் எழும்பவிடாமல் செய்வது), கம்பளிச் சைத்தான், கௌசி (மனித ரூபத்தில் வருவன), கெட்ட ஜின், இத்தா பேய், கிக்கிலிப்பேய், முடப்பேய்,  என பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். 

இவைகளின் உறைவிடங்களாக பாழ் வளவு, பாழ்வீடு, பாழ் கிணறு, பட்ட மரம், வேம்பு, ஆல், அரசு, புன்னை, புங்கை மரங்கள் என்பவற்றைக் கருதினர். இவை சம்பந்தமான பிரபலமான பேய் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. இவற்றினால் ஏற்படும் கெடுதிகளை பேய் அல்லது ஷைத்தான் பார்வை கொள்ளுதல், பேய் அறைதல், ஜின் உடம்பினுள் புகுதல் என கூறுவார்கள். பெரும்பாலும் மனோ வியாதிகளுடையவர்களையும், சித்த சுவாதீனமற்றவர்களையும் இவ்வாறு நோயேற்பட்டவர்கள் என்று கருதுகின்றனர். 

தலைப்பிள்ளைகள், ஏழு தலைமுறை தலைப்பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகளையே பேய்பிடிப்பது அதிகம் என்றும் கருதினர்.

கெட்ட சக்திகளின் துர்விளைவுகளிலிருந்து பாதுகாப்பு பெற. பிள்ளைகளை வெளியில் அனுப்பும் போது தாய்மார் எச்சிலால் நெற்றி மற்றும் கழுத்துக்குழியில் தடவி அனுப்புவார்கள்- (பிறர் எச்சில் பட்ட பொருளை  கெட்ட சக்திகள் ஒதுக்கிவிடும் என்கிற நம்பிக்கை), தூர இடங்களில் வயல்களிற்கு சோறு ஆக்கி கட்டியனுப்பும் போது சோற்று முடிச்சுடன் கரித்துண்டுகளையும் சேர்த்து அனுப்புவர். குழந்தைகள் உறங்கும் பொழுது தலைமாட்டில் பாக்கு வெட்டி, செருப்பு, துடைப்பம் (தூப்பாங்கட்டு), விளக்குமாறு (ஈர்க்குமாறு) போன்றவற்றை காவலுக்கு வைப்பார்கள் அதனை காவல் காரன் என்றும் அழைக்கின்றனர்.

இந்த கெட்ட சக்திகளிடமிருந்து தப்பிப்பதற்காய் சிறுவயது முதலே இடுப்பில் அரைஞாண்கயிற்றில் (அறுநாக்கயிறு) மெழுகு சீலையில் அட்சரம் (மந்திர குறியீடுகள்) எழுதி அதனை ஒரு அங்குலமளவு மடித்து அல்லது அட்சரக்கூடு (அட்சரக் கூடு)இனுள் வைத்து தாயத்தாக (Talisman ) அதனை தொப்புளின் கீழ் இருக்கும் வண்ணம் அட்சரத்துடன் இணைத்துக் கட்டுவார்கள் இதனை மாந்திரீக பரிகாரிகாரிகளிடம் இருந்து பெற்று வருவார்கள். இந்த அட்சரம் போட்டவர்கள் மூன்று அல்லது ஏழு நாட்களுக்கு பத்திய உணவு சாப்பிடுவதுடன், வெண் பளிங்கு தட்டுக்களில் அல்லது வெற்றிலையில் அரிசிமையால் இஸ்ம்  எனப்படும் அரபு எழுத்துக்களை எழுதி கொடுப்பார்கள் இதை பன்னீரில் அல்லது அவர்கள் ஓதித்தரும் தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். தாயத்து அணிந்தவர்கள் கத்னாவீடு (விருத்த சேதனம்), பூப்பெய்திய வீடு, மையித்து வீடு (மரண வீடு), அம்மை நோய் வந்தவர்களின் வீடு, ஊரோடி வந்தவர்களின் வீடுகளுக்கு சென்றால் தாயத்து முறிந்துவிடும் (சக்தியிழந்து விடும்) என்று கூறுவார்கள். இதனால் இவ்வாறான வீடுகளுக்கு செல்வதாயின் தாயத்தை கழற்றி அரிசிப் பானையில் வைத்து விட்டு செல்வார்கள். பின்னர் மணக்குச்சியைப் பிடித்து வாசணை காட்டிய பின்னரே மீண்டும் அணிவார்கள். 

ஊதிப்பார்த்தல், ஓதிக் கொடுத்தல்

பிள்ளைகள் தூக்கத்தில் திணுக்கெறிவதாற்கும், பல்லுக்கடித்தல், மற்றும் சில வழமைக்கு மாறான நடத்தைகளைக் காட்டுவதை பேய் பார்வை கொண்டதற்கான அடையாளங்களாக கொண்டு. அவர்களைப் பரிகாரியிடம் அழைத்துச் செல்வார்கள். பரிகாரிமார் சில மந்திரங்களை ஓதி “சுவாயா சுப்” என்று ஊதுவார்கள். தண்ணீர் ஓதி அதனைக் குடிக்கவும், உடல் கழுவவும் கொடுப்பார்கள். சில போது ஓதிய தண்ணீரை முகத்தில் வீசியடித்து தெரு எல்லைவரை திரும்பிப் பார்க்காமல் சென்று யாரையாவது பார்த்துவிட்டு திரும்பிவரவேண்டும் என்று கூறுவார்கள். இதற்காக சேகரிக்கப்படும் தண்ணீர் நகம் படாத கிணற்றுத்தண்ணீராக இருக்க வேண்டும். சிலருக்கு ஏழு கிணற்றுத் தண்ணீர், கடற்தண்ணீர் என்பவையும் ஓதிக் கொடுக்கப்படுவதுண்டு. இச் சடங்குகள் அதிகாலை அல்லது மாலை வேளைகளிலேயே நடைபெறும். குழந்தைகளிற்காக (பௌடர்) முகப்பூச்சு, பன்னீர் என்பன ஓதிக் கொடுக்கப்படும். 

விஷ ஜந்துக்களின் நுழைவைத் தடுக்க மண் ஓதிக் கொடுக்கப்படும். இது வளவின் எல்லைகளில் தூர்வப்பட்டு வீட்டின் நான்கு மூலைகளிலும் கட்டிவைக்கப்படும்.

காவல் வைத்தல்

வளவினுள் கெட்ட சக்திகளின் நுழைவைத் தடுக்க வளவு காவல் பண்ணுதல் எனும் செயற்பாடு நடைபெறும் இதற்காக பரிகாரி மந்திரித்து கொடுக்கும் மந்திரத் தகடு அடங்கிய கண்ணாடிக் குப்பிகள் வளவின் நான்கு மூலைகளிலும் புதைக்கப்படும்.

கழிப்பு கழித்தல்

சில தீவிர நோயாளிகளுக்கு கழிப்புக்கழித்தல் எனப்படும் இது தோஸம் நீக்குதலுக்கான சடங்கு இதற்காக ஒரு பெரும் பட்டியலையே பரிகாரி தருவார் அப் பொருட்களை பட்டோலைக் கடையில் கொடுத்து அப் பொருட்களை வாங்கி அவற்றை பரிகாரியிடம் எடுத்துச் சென்று அவற்றின் மூலம் தோஸம் நீக்கப்படுவதாகவும் நம்பினர்.  சில பொருட்களை நாமே தேடி எடுக்க வேண்டியும் ஏற்படும்.

செய்வினை, ஏவல், சூனியம், அங்கம் விடுதல் (Witchcraf)

செய்வினை என்பது மக்களிடம் குறித்த ஒரு தேவையை நிறைவேற்ற செய்யப்படும் மாந்திரீக சடங்காகும் இது பல வகைப்படும்
1. சேர்த்திக்கு செய்தல் - பிரிந்திருக்கும் கணவன் மனைவி சேர்வதற்காக, அல்லது தான் ஆசைப்பட்டவரை திருமணம் செய்யவதற்காக செய்தல்.
2. புறிவுக்கு செய்தல் (பிரிவுக்கு செய்தல்) – விரோதம் ஏற்படவும், தம்பதிகள் பிரியவும் செய்வது
3. அழுந்தச் செய்தல் - நீண்டகாலம் நோயாளியாக காயில் படுக்க வைக்க செய்வது
1. ஏவல் அல்லது அங்கம் விடுதல் - குரங்கு, நாய், சேவல் போன்ற விலங்குகளில் ஏவி குறித்த நபரை தாக்கி அழுந்தச் செய்யும் முறை

இதற்காக இலக்கு வைக்கப்பட்வரின் தலைமுடி, நகம், சீப்பு போன்ற பாவனைப் பொருட்கள், உடுத்தாடை(உடுத்த ஆடை)ச் சீலை, காலடி மண், கடந்த நூல், அவர்களின் பிரத்தியேக பாவனைப் பொருட்கள் மற்றும் கழுவெண்ணை, மண்டையோடு, சுடலைச்சாம்பல், மந்திரித்த பொம்மை, ஆணி, எலுமிச்சை என்பவற்றைக் கொண்டு மந்திரித்து செய்து இலக்கானவரின் வளவில் புதைக்கப்படும்.

இவ்வாறு செய்வினை சூனியம் செய்யப்பட்டுள்ளதை அறிவதற்காக குறிபார்ப்பவர்கள், சோதிடம் பார்ப்பவர்களிடம் செல்பவர்களுமுண்டு. அவர்கள் அரிக்கும் உலை( அரிக்குமலாய்), மண் சட்டி, மை தடவிய வெற்றிலை, விளக்குச் சுடர் என்பவற்றைப் பார்த்து குறிப்புக்களைக் கொடுப்பார். இவற்றைக்கொண்டு பலவித பூஜைகளின் பின்னர் செய்வினை தோண்டியெடுக்கப்படும்.

மாந்திரீக வைத்தியர்கள் பயன்படுத்தும் பொருட்கள்

அரிசிமை. வெள்ளைச் சீலை, மெழுகு சீலை, அரிசி, ஊதுபத்தி, அறுநாக்கயிறு, அட்சரம் அல்லது தாயத்து, வெள்ளை பீரிஸ் (பளிங்குத் தட்டு), வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, செப்புத்தகடு, ஆணிகள், கடல் மண், ஏழு கிணற்றுத் தண்ணீர், மயிலிறது, முள்ளம்பன்றி முள், முட்டை, பட்டைகள், வேர்கள், எண்ணைகள் 

பாரம்பரிய வைத்தியர்கள் 

கிழக்கிலங்கையில் வைத்தியம் செய்பர்களை பரிகாரி, வைத்தியன், மருத்துவிச்சி, ஒஸ்தாத்மாமா போன்ற பல சொற்களால் அழைத்து வருகின்றனர். 

1. பரிகாரி :- “பரிசாரி” பொதுவாக அனைத்து பாரம்பரிய வைத்தியர்களும் (கீழைத்தேய) இவ்வாறு அழைக்கப்பட்டனர். இந்தப் பதம் அவர்களின் பெயருடன் இணைந்ததாகவே ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (உதாரணமாக நூலச்சியன் பரிகாரி, அக்கரைப்பற்றுப் பரிகாரி, குழலியன் பரிகாரி) 

2. வைத்தியன் :- வைத்தியர், மருத்துவன், (வைச்சியர்) போன்றவாறாக அழைக்கப்பட்ட இவர்கள் விச வைத்தியம், முறிவுவைத்தியம், கனாக்கண்ட வைத்தியம் கால்நடை வைத்தியம் என்பவற்றை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.

3. மருத்துவிச்சி :- பிள்ளைப்பேறு, பிரசவம் பார்த்தல், காது குத்துதல், ஏழாம் நாள் மற்றும் நாற்பதாம் நாள் முடியிறக்குதல் போன்ற பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான தேவைகளை இவர்கள் நிறைவேற்றினர். இவர்களை எமது பண்டைய மகப்பேற்று மருத்துவர்களாக (Gynocologist ) குறிப்பிடலாம். இவர்களின் பங்கு சமுகத்தில் பெரிதும் மதிக்கப்பட்டது. பெரும்பாலும் மருத்துவிச்சிகளாக பரிட்சயம் பெற்ற மூதாட்டிகளே காணப்பட்டனர். 

4. ஒஸ்தாத்மாமா (விருத்த சேதகர்) :- ஒஸ்தாத் எனப்படுவது ஆசிரியர் எனப் பொருள்படும் அரபுப் பதத்தின் திரிபாகும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக கத்னா(விருத்தசேதனம்) செய்வதில் சிறப்பு தேர்சியுடையவர்களாக காணப்படகின்றனர். விருத்த சேதனம், குருதியிழப்பைக் கட்டுப்படுத்துதல், காயங்களை விரைவில் குணப்படுத்தல் போன்ற சிகிச்சை மற்றும்; சத்திர சிகிச்சை போன்றவற்றில் திறனைக் கொண்டிருந்தனர். இவர்களின் ஆதி பரம்பரையினர் அபிசீனிய பகுதியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது. முஸ்லிம்களின் தனித்துவ வைத்திய பாரம்பரியத்தில் இவர்களுக்கு சிறப்பானதோர் இடமுண்டு. 

5. பச்சத்தண்ணி வைத்தியர் :- ஹோமியோபதி (ர(Homeopathy ) வைத்தியர். இவர்கள் சிறிதளவு மருந்தை நீரில் கலந்து கொடுத்து வந்தமையால் இவர்கள் பச்சத்தண்ணி வைத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

6. பூசாரி – தமிழ் வைத்தியர்களில் மாந்திரீக வைத்தியர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்


கிழக்கிலங்கை வைத்தியர்களின் சிறப்பியல்புகள்


இவர்களின் சிறப்பியல்புகளைப் பார்க்குமிடத்து இவர்களை இனங்காண்பதில் உள்ள தனிச்சிறப்பியல்புகளில் சுட்டுப் பெயர்கள் முக்கியமானவை. சுட்டுப் பெயர்களான பட்டப்பெயர்களுக்கு (இடுகுறிப்பெயர்கள்) பெயர்போன கிழக்கிலங்கையில்; வைத்தியர்களையும் அவர்களுக்குரிய பட்டப்பெயர்களைக் கொண்டே அறிந்து கொள்வது இலகுவாயிருக்கின்றது. பலருக்கும் வைத்தியர்களின் பதிவுப் பெயர் இன்றுவரை தெரியாமலும் இருக்கின்றது. குடுக்கைப்பரிசாரி, சின்னமரைக்கார், நூலச்சியர், குழலியர், சப்பாத்தர், புழுகன், வாலக்கர், கச்சிர நானா போன்று பல பெயர்கள் புழக்கத்திலுள்ளன.

இதேநேரம் வைத்தியர்கிடையே இன,மத,மொழி வேற்றுமைகள் பராட்டும் தன்மைகள் இருப்பதில்லை. வேற்றுக்குறிப்பறிந்து வைத்தியம் செய்வதில்லை . எல்லோரையும் மனிதர்களாகவே கருதி உயிர்காப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்கிற பொதுவான வைத்திய ஒழுக்கநெறி (Medical Ethics ) இவர்களிடமும் தொன்று தொட்டுக் காணப்படுகின்றது. இதனைப் பல நோயளர்களின் அனுபவக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த வைத்தியக்கலையை கற்றுக்கொள்ள வேண்டுமாயின் சீடர்கள் அவற்றிற்கான தன்னொழுக்க நெறிகளை (Profetional Ethics ) பேணுவதுடன், குருவிற்கு பல வாக்குறுதிகளையும் வழங்க வேண்டியிருந்தது. சேரும் சீடர்களுக்கு பல குணநலன் சோதனைகள் செய்தே கலையை கற்றக் கொடுக்கின்றனர். இது பற்றிய சித்தர் பாடலொன்று


செப்பனவே வந்து வந்து அனைகள் சொல்வார்
செகசாலை கூத்தாடித் திரிவர் மட்டு
அப்புறம் போய்ப் பொய்ய ரென்பார்
ஆருமெனக் கெதிரில்லை யென்பார் பாரில்
தப்புரை செய் மக்களுக்கு சாற்றேடாதே
சபித்திடுவார் சித்தரப்பா கணத்திலேதான்
ஒப்புவது மனதறியாது ஓதுவாயேல்
உனக்குவரும் சாபமென் றுரைத்திட்டேனா.

(பாடிக்காட்டியவர் - விச வைத்தியர் சிவசம்பு அரசம்மா – சம்மாந்துறை)

மற்றும் பெரும்பாலான பராம்பரிய வைத்தியர்கள் பரிகரித்ததற்காய் நிருணயிக்கப்பட்ட தட்சணைகள் காணிக்கைகளை பெறுவது கிடையாது பிணியாளர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வார்கள். ஆயினும் சில தயார்செய்யப்பட்ட ஒளடதங்களுக்கான பெறுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். பாரம்பரிய வைத்தியர்களிடையே பரஸ்பர நல்லுறவுகள் காணப்பட்டுள்ளன. மூலிகைகள் மருந்துகளை கைமாற்றுதல், தன்னாற் பரிகரிக்க இயலாதவிடத்து முடியுமான வேறொரு வைத்தியரை அழைத்து தீர்த்து வைத்தல். வைத்தியர்களுடன் சந்திப்புக்ள். கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் போன்றன வைத்தியர்களிடையே போட்டித்தன்மையினை குறைத்திருக்கின்றன. பாரம்பரிய வைத்தியர்களின் மந்திரங்களிற் அரபு உச்சாடனங்களுடனானவையும் தமிழ் உச்சாடங்கள் கலந்தவையுமிருக்கின்றன. தமிழ் வைத்தியர்கள், முஸ்லிம் வைத்தியர்கள் இருவரும் இவற்றை பயன்படுத்துகின்றனர்.

கிழக்கிலங்கை பாரம்பரிய வைத்தியர்களை நோக்குகின்ற போது, அவர்கள் தனியொரு வைத்தியக்கலையை மட்டும் அறிந்தவர்களாயிராமல் அவற்றுடன் ஏனைய வைத்திய முறைகளையும் அறிந்தவர்களாயிருப்பார்கள்”.

சம்மாந்துறை பாரம்பரிய வைத்தியர்கள் வைத்திய குறிப்புக்கள் வாகுடம் எனப்படும் ஏட்டுச் சுவடிகளிலும். கிதாபு என அழைக்கின்ற அராபிய புத்தகங்களிலும் பேணிவருகின்றனர். சில மந்திரங்களும், இரகசியங்களும், அனுபவக் குறிப்புகளும் வாய்வழியாகவே பேணப்பட்டு வந்துள்ளன. இந்த மருத்துவ அறிவு பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக குறித்த வாரிசுகளுக்கு கடத்தப்பட்டு வந்தது மற்றும் சிலர் சி~;யர்களுக்கும் கற்றுக் கொடுத்தனர். என்றாலும் நவீன அச்சுக்கலை வளர்சியின் பக்கம் அறிவின் பொக்கிஸங்கள் நகராதமையினால் பல அரிய வைத்தியக் குறிப்பகள் செல்லரித்து மாண்டு விட்டன. 

பாரம்பரிய மருந்து மூலங்கள்

பாரம்பரிய வைத்தியர்கள் தமது மருந்துகளிற்காக தாவர மூலிகைகள், விலங்குப் பொருட்கள், கனிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தகின்றனர். மருந்துக்காக பயன்படும் தாவரங்கள் மூலிகை, முகிலி என்று அழைக்கப்பவதோடு அவற்றினை விசேட கவனத்துடனும் வளர்த்த வந்தனர். 

இலங்கையில்  4000 க்கு மேற்பட்ட முலிகைகள் இனங்கானப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடும் அதேவேளை அவற்றில் 2000ற்கு அதிகமானவைகள் கிழக்கிலங்கை; பிரதேசத்தில் இருந்ததாகவும் தற்போதும் பலவகையான மூலிகைகள் இருப்பதாகவும் ஆயர்வேத வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மருந்துகளாக மூலிகைத்தாவரங்களின் பல பாகங்கள் பயன்படுகின்றன. இவற்றுள்

1. இலைகள் - துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, கஞ்சா, ஊமத்தை
2. தளிர் - ஆனைத்தகரை, திருக்கொண்றை,
3. நெட்டி(இலைக்காம்பு) - வேம்பு, விளா, கருவேப்பிலை
4. தண்டு - சந்தணம், வெள்வேலம், விளா
5. வேர - இலாமிச்சை, வெள்ளெருக்கலை, கோரைப்புல், பலா, நொச்சி 
6. பட்டை - எலும்புருக்கி, வேம்பு, விளா, முள்முருங்கை
7. பூ - பொன்னவரை, வேம்பு, குங்குமம்
8. காய் - பப்பாசி, அன்னாசி
9. கனி - மாதுளை, வில்வம்பழம், கொறுக்காய், எலுமிச்சை
10. விதை - ஆமணக்கு, மா, வேம்பு, இலுப்பை
11. கசிவுகள்- பிசின் - உதிரவேங்கைப்பால், கள்ளிப்பால், வேப்பம் பிசின், மதிரைப்பிசின்


விலங்குப் பொருட்களாக

1. பால் - ஆடு, மாடு
2. முட்டை - கோழி
3. எண்ணைய் - மயில், கரடி
4. கோரசணை - மாடு, ஆடு
5. நெய் - பசு
6. தேன், கஸ்ரிதூரி போன்றவைகள்

கனியங்களாக பெருமளவில் இரதம் (பாதரசம்), உப்பு, கற்கண்டு, படிகாரம், போன்றவை பயன்படுகின்றன

இம் முலிகைகள் 

பற்றைக்காடுகள் : சீந்திக்கொடி, ஆனைத்தகரை, தொட்டாச்சுருங்கி
ஈரநிலம் : நீர் முள்ளி, பொன்னான், வசம்பு, தாமரை 
வரள்நிலம் : கற்றாளை, நகச்சுத்தி, கொடிக்கள்ளி, சதைகரைச்சான், நாகதாளி
குற்றுப்புறச் சூழல் : குப்பைமேனி, சீதேவியார்செங்களுநீர், கீழ்க்காய்நெல்லி, ஆனை வணங்கி
காடுகள் : வில்வம், பூலா, எலும்புருக்கி, ஆத்தி, இலுப்பை 
போன்ற பல இடங்களிலிலிருந்து பெறப்படுகின்றன. இவை தான்படுவனாகவே (இயற்கையாகவே) இச்சூழல்களில் பெரும்பாலும் காணப்படும். கிடைத்தற்கரிய மூலிகைகள் வெளியூர்கள், வெளிநாடுகளிலிருந்தும் பெறப்படுகின்றன.

வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளும் மூலிகைகள்

1. அதிமதுரம்
2. செஞ்சந்தணம் சந்தணம் வெண்சந்தணம்
3. கடுக்காய்
4. கஞ்சா  
5. அபின
6. கருஞ்சீரகம்
7. குங்கிலியம் 
8. கராம்பு 
9. மிளகு P
10. குங்குமம்

ஒளடதத் தயாரிப்பு 

சித்த-ஆயள்வேத-யூனானி வைத்தியர்கள் ஒளடதங்களாக தூள் (தனித்தூள், கலவை), குளிசை, லேகியம், கசாயம், பூச்சுக்கள், ஒத்து, பத்து, சாறு, ஊறல், எண்ணெய், தைலம் போன்ற வடிவங்களில் தேவைக்கேற்ப வழங்கிவருகின்றனர். இதற்காக மூலிகைகளையும், விலங்குப்பாகங்களையும், கனிமங்களையும்,  பயன்படுத்துகின்றனர்.
குறித்த ஒரு ஓள~தம் பல வியாதிகளிற்கு நிவாரணியாக அமையலாம். அதே வேளை அதனைத் தயாரிக்க பலவகை மூலிகைகளைச் சேர்க்க வேண்டியுமிருக்கும். இவ்வாறு சேர்க்கப்படும் கூட்டுப் பொருட்கள் அலிமான் என்கிற சொல்லால் அழைக்கப்படும்.

மூலிகைகள் கொய்வதற்கு துறட்டிகளும், பட்டைகள் சீவுதற்கும் தண்டுகளை வெட்டி எடுக்கவும் வில்லுக்கத்திகளை வைத்தியர்கள் இடுப்பில் வைத்திருப்பார்கள். அம்மி குளவி, மருந்தரைக்கும் கற்கள் என்பன மூலிகைகளை அரைக்கவும் உரல் உலக்கைகள் இடிப்பதற்கும் ,வேர்கள் பட்டைகளை நறுக்க பலகையில் இணைக்கப்பட்ட பாக்கு வெட்டிகளும் பயன்படுகின்றன. எண்ணை காய்ச்ச மண் சட்டிகளும், முடாப் பானைகளும், சவள் எனப்படும் மரத்தாலான அகப்பைபும் பயன்படும். 

எண்ணைய் இளஞ்சூட்டில் காய்ச்சப்படும், இதற்கு பல வாரங்கள் எடுக்கும். எண்ணையின் தூய்மைத்தன்மை (நீரற்றதன்மை) அறிய எண்ணையை திரியொன்றில் தொட்டு தேங்காயெண்ணை விளக்கில் பிடித்து பார்ப்பார்கள்.. “நீர் தன்மை இருப்பின் திரி பொரிந்து கொண்டு எரியும். எண்ணை மட்டுமிருப்பின் பொரியாமல் எரியும்” என்ற தத்துவத்தை இதற்கு பயன்படுத்துகின்றனர். எண்ணைகளை வடிக்க வடி, சீலை வடி, வடிகளை முறுக்கிப் பிழிய கிட்டிப் பிணைச்சல் போன்றவை பயன்படும். விச வைத்தியர்களும், ஆயர்வேத வைத்தியர்களும் சீவிக்கழுவி தூய்மைப்படத்திய சுரட்டைகளை மருந்து கொடுக்க பயன் படுத்துவார்கள்.

மருந்துகளை சேமிக்க சுரைக்குடுக்கைகள், சுரட்டைக் குடுக்கைகள், மூடி தயார்செய்யப்பட்ட எருமை மாட்டின் கொம்பு  போன்றவை பயன்படும்.

குழந்தைகளுக்கு மருந்து வழங்க சுத்தம் செய்யப்பட்ட பாற்சங்கு, வெண்சங்கு அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட பேணிகள் பயன்படுத்தப்பட்டன, நோயாளிகளுக்கு மருந்து வழங்க சுக்குறிச்சான், மருந்துக் கரண்டிகள் என்பவை பயன்படும். திரவ மருந்துகளை கொண்டு செல்ல சிறிய கண்ணாடிக் கீஸாக்களைப் பயன்படுத்துவர். 

மருத்துவ இலக்கியம்

மருத்தவப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை ஆதிகாலமுதல் வாய்வழி அனுபவக் குறப்புக்களுடாகவும், பரம்பரை பரம்பரையாக கைமாறி வந்த ஏட்டுச் சுவடிகள், கிதாபுகள் மூலமாகவும், வைத்தியர்கள் பிரதி பண்ணிய ஏடுகளிலிருந்தும் மருத்துவ அறிவு கடத்தப்பட்டு வருகின்றது.

வைத்திய இலக்கியங்களில் அடுத்து அமைவது பிரார்த்தனை நேர்ச்சைப் பாடல்கள். இவை எழுத்தறியா கிராமிய மக்களின் மனவெழுச்சியாக இயல்பாகவே கவிதையாக பிறக்கின்றன. இந்நாட்டுக்கவிகளில் இத்துறை சார்பான பெரும்பாலானவை பிரார்தனைக்கவிகளாகவே இருக்கின்றன.


மருத்துவம் மாந்திரீகம் சம்பந்தப்பட்ட நாட்டார் இலக்கியம்

இறக்காமத்தில வாழும்
இறசூல் அவுலியாவே
கொடிபறக்கம் சீமானே - எனக்கொரு 
கொழந்தை முகம் தந்திடுவாய்

காட்டுப்பள்ளி அவுலியாவே
கருணையுள்ள சீமானே
பூட்டுடைச்ச மீரானுக்கு
புடையன்கொத்த உதவி செய்டா

மச்சானும் மச்சினனும்
மாடி தேடிப் போகையில
காரமுள்ளு தைச்சிராம
கலந்தரப்பா உன்காவல்

இவை தவிர சில சுவாரஸ்யமான சம்பவற்களும் இடம்பெற்றுள்ளன. கட்கட்டி ஏற்பட்டவர்கள் கிணற்றிற்குள் உப்புக்கல் போட்டுவிட்டு. அதிகாலையில் எழுந்து சென்று யாருடையதாவது வீட்டின் கதவைத் தட்ட வெண்டும். வீட்டுக்காரர் யார் என வினவும் போது. 
“காயா மூயா கக்கட்டி
காய்ஞ்சு போகா கக்கட்டி
ஓயா மாயா கக்கட்டி
ஓய்ஞ்சு போகா கக்கட்டி” 
என்று கூறிவிட்டு ஓடிவந்து விடுவர்.

பாற்பல் விழுந்த சிறுவர்கள்  தமது பல்லை கையில் எடுத்து 
“நாய்ப்பல்லு வராம
நரிப்பல்லு வராம
பூனைப்பல்லு வராம
புலிப்பல்லு வராம
அரிசிக்குத்துப் போல பல்லு வரணும்”  
என்று கூறி வீட்டின் கூரையின் மீது வீசிவிடுவார்கள் இந்நடைமுறை இன்னும் கிழக்கிலங்கையின் கிராமப்பகுதிகளில் வழக்கிலுள்ளது.
என்று கூறுவார்கள்.

ரொட்டியை தலையை சுற்றும் போது

"மலபோல வாற ஆபத்த
பனிப்போல ஆக்கிடு றஹ்மானே"


என்று மூன்று முறை கூறுவர்பழமொழிகள்


1. பரிசாரி பொண்டாட்டி புழுத்து சாகுறயாம்
2. சூட்டுக்கு மிஞ்சின பரிசாரம் இல்ல
3. நானும் பிரசாரியெண்டு நடக்கான் மிருவாடியில
4. மட்டக்களப்பார் பாயிலே ஒட்ட வைப்பார்
5. புத்தியுள்ள பிள்ளைக்கு செவ்வரத்தம்பூ நஞ்சில்லை
6. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு
7. அரண கடிச்சா மரணம்
8. ஊரா கோழியறுத்து உம்மா பேருல கத்தம் ஓதுறயாம்
9. வாயில ஓதல் இருந்தா வழியெல்லாம் சோறு
10. ஒம்பது புள்ள பெத்தவளுக்கு ஒருபுள்ள பெத்தவள் மருத்துவிச்சி வேல பாக்குறயாம்
11. அயலூரானுக்கு ஆத்துக்கு பயமாம் உள்ளுரானுக்கு பேய்ககு பயமாம்
12. பேய்க்கி வாண்டா புளிய மரத்திலதான் ஏறணும்
13. சும்மாவே ஆர்ர பெய்க்கி கொட்டு மொழக்கம் வேறயாம்
14. வஹிலன (பஹிலன்- கஞசன்) சேர்த்து வயிச்சியனுக்கு கொடுக்கிறயாம்
15. உள்ளதும் ஒரு புள்ளண்டு ஒம்பது தரம் சின்னத்து வைச்சானாம்
16. கத்த வித்தைய காச்சியா குடிக்கிற
17. வயித்துப்புள்ள வாய்க்கி நஞ்சி
18. சேத்திக்கி செஞ்ச மருந்த உம்மாக்குப் போட்டப் பாக்கப் போடா
19. மந்திரிக்கப் போய் முந்திரிந்த குறுஞ்சிரிப்பும் பெய்த்து
20. ஈழைய உட்டுப்பொட்டு இருமலையா வாங்குற
21. நோயாளி விதியாளியானால் பரிசாரி பேராளி
22. ஹவ்ளுத் தண்ணி நசலுக்கு நல்லம்
23. திண்ட ஒரட்டிக்கு ஓதினது பாத்pதிஹா
24. தூக்கச் சாத்த ஆளிருந்தா பள்ள சோர்ந்து சோர்ந்து உழுமாம்
25. மடவைக்கப் போய் பேயோட வாறாராம்
26. ஆமான குதிரையெல்லாம் இரணம் கேட்டழுகிறயாம் மொடக்குதிர பொண்கேட்டழுகிறயாம்
27. வாதத்தை சரியாக்கலாம் புடிவாதத்தை சரியாக்கேலா


நோய்கள் குறைகளுக்கு வழங்கிய கிராமிய பெயர்கள்

தலைவலி, தலைச்சுத்து தலைப்பாரம் தலையிடி ,அம்மாள், காய்ச்சல், ஊரோடிக்காய்ச்சல், கண்டமாலை , கண்ணாக்கோடு, கக்கட்டி, மாலக்கண் , மின்னிக்கண், பொட்டக்கண், குருடு, கரப்பன், மூச்சி, தடுமல், காசம், வாதம், சுவாதம், வாய்வு, பித்தம், சத்தி, நீர்க்கடுப்பு ,கடவாய்ப்புண், கவறை, சொறி (செவன), சிரங்கு சிராய்யு வெட்டுக்காயம் கீறல், கட்டு ,கொழுகல் பிடிப்பு ,வலி நோவு கடுப்பு குத்து குடைவு  பத்துதல் பரவுதல், வகுத்தால போதல்

சந்திப்புகள்

1. காஸீம்பாவா இஸ்மாலெப்பை (பாரம்பரிய கால்நடை வைத்தியர்)
2. முகைதீன்பாவா முஹம்மட் தம்பி (1925) (முன்னாள் புதுக்காடு, வளத்தாப்பிட்டி வட்டானை) 2014-12-30
3. வைத்தியர் எம்சி.எம். காலித் (டீருஆளு) 2015-01-21 2015-01-24
4. சிவசம்பு அரசம்மா (சித்த வி~ வைத்தியர்) 2015-01-28
5. பாத்தும்மா (196..) உடங்கா 2
6. றுக்கியா உம்மா (1964) விளினையடி
7. ஆ.லெ.நஹீம் பரிகாரி (1981) கருவட்டக்கல்
8. ஆ.பா.இப்றாஹீம் (1958) 
9. மஹ்முது லெப்பை பரிகாரி (1948) 


உசாத்துணைகள்

1. றமீஸ்  அப்துல்லாஹ், கிழக்கிலங்கைக் கிராமியம் (2001)
2. அறுவடை, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி வெள்ளிவிழா மலர்
3. மீலாத்மலர், (2005) வலயக்கல்வி அலுவலகம் சம்மாந்துறை,கல்வி,பண்பாட்டு, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சு, வட கிழக்கு மாகாணம், திருகோணமலை
4. அன்வர் அலி. எச்.எம்., சம்மாந்துறையின் அரசியல் வரலாறு (1639-2010), (2012)
5. முத்துமீரான், கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும்.(2013)
6. ஜெமீல்.எஸ்.எச்.எம், கிராமத்து இதயம் -இலங்கை முஸ்லிமக்களின் நாட்டுப்புறவியல். (2008)

Views: 4304