மூப்படைதலும் சமூகமும்

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: luxshekuna@gmail.com



Banner


தொன்று தொட்டு பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கடைப்பிடித்து வரும் இலங்கையர்கள் அனைவருமே மூத்தோரைப் பேணுவதில் முன்னிற்பவர்கள். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்றும் பெரியோரைக் கனம் பண்ணுவோம் என்றும் சிறு வயதிலிருந்தே வயதிற்கும் அனுபவத்திற்கும் முதன்மை கொடுக்க நாம் சமூகமயப்படுத்தப்படுகின்றோம். அந்த வகையிலே மூப்படைதல் என்பது வயோதிபமாதல், முதியோராதல், பெரியோராதல், மூத்தோராதல் போன்ற பதங்களைக் குறிப்பதாய் உள்ளது. 

வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டு செல்லும் சனத்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் ஆசிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. தங்கி வாழ்வோர் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கின்ற போது அது நாட்டின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பிலே பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாததே. நாட்டை ஆள்வதற்கு இளைஞர்கள் தொகை குறைவடைகின்ற போது அது, எதிர்கால நலனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலம் சவால் மிக்க தளமாக அமையும் என்ற எதிர்வு கூறல் இருக்கின்ற போது அதனை எதிர்கொள்ள நம் சந்ததியினர் தயார் நிலையில் இருப்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கான சிறந்த வழிமுறையாகும். எனவே முதியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கி, சமூகத்தில் அவர்களின் வகிபங்கு யாது என்பதனை விளக்குவதுடன், இளையோருக்கு ஒரு விழிப்புணர்வு ஊட்டுவதனையும், நோக்காகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.


உலகம் முழுவதும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது. 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினான்காம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டுவரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமைய பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நோக்கினால்; 1991ம் ஆண்டு முதலாவது முதியோர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் முதியோர் தினத்தை தேசிய விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. ஜப்பான் அரசாங்கம் மூத்தோரை கௌரவிக்கும் அவர்களுக்கான கௌரவத்தைச் செலுத்தும் தினமாகக் கொண்டாடுகின்றது. உலகிலுள்ள முதியோர்களின் நலன், அவர்கள் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்நாளின் பிரதான நோக்கமாகும். 

எம்மை விடப் பெரியோர்களை, மூத்தோரை அந்த ஒரு நாளில் மட்டுமா நினைவு கூர வேண்டும் எனச் சிலர்; எண்ணுவது விளங்குகின்றது. அனைத்து நாட்களுமே அவர்களுக்கான பொன்னான நாட்கள் தானே. பின்னே எதற்காகத் தனிப்பட்ட தினம். அது அப்படியல்ல. நாம் எதனையும் அக்கறையின்றி பொதுப்படையாக இருப்பதைக் காட்டிலும் குறிப்பிட்ட நாளை எந்தவொரு செயற்பாட்டிற்குமென ஒதுக்குவது எமக்கான மீள் நினைவூட்டலாக அமையும். எனவே தான் ஒக்டோபர், முதலாம் திகதி எமது பாரம்பரியங்களையும், பண்பாட்டையும் பேணி, எமக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முதியோருக்கான, சிறப்பான தினமாக அமுல்படுத்தி, அவர்களை ஆராதிக்கின்றோம். வருடத்தின் 365 நாட்களும் ஒரே விதமான நேர அட்டவணையில் தொழிற்படும் நாம், அந்த ஒரு நாளை எமக்காக இன்றி முதியவர்களுக்காக அர்ப்பணம் செய்கின்ற போது அது எம்மையும் புத்துணர்ச்சி பெறச் செய்யும் அதேவேளை பெரியோர்களுக்கான கனம் பண்ணலாகவும் அமையும். எனவே இங்கு யாரை வயோதிபர்கள் என்ற எண்ணக்கருவுக்குள் உள்ளடக்குவது என்பது முக்கியமடைகின்றது.  


அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை முதியோர்கள் என வரையறுக்கலாம். சனத்தொகையில் எண்பது வயதினைத்தாண்டியவர்கள் முதியோர்களிலும் முதியோர்கள் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றனர். தற்போது உலகில் 60 கோடி முதியவர்கள் இருக்கின்றார்கள். அதுவே 2050 இல் 200 கோடியாக மாறும் வாய்ப்புள்ளது. பிறப்பு வீதம் குறைவடைவதனைப் போன்று இறப்பு வீதமும் குறைந்திருப்பதனால் உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது. ஐ.நா அறிக்கையின்படி உலகில் தற்போது ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். அதுவே 2050ம் ஆண்டாகும் போது ஐவருக்கு ஒருவர் என்ற நிலையிலும் 2150ம் ஆண்டளவில் மூவருக்கு ஒருவர் என்ற நிலையிலும் காணப்படுவார்களென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 12.5% மானவர்கள் முதியோர்கள். இத்தொகை, 2021ம் ஆண்டாகும் போது 16.7% மாக உயர்வடையும் (உலக வங்கி, 2011). அதுவே 2041 ஆகும் போது நாட்டு மக்களில் நால்வருக்கு ஒருவர் முதியவராகக் காணப்படுவார் என கணக்கிடப்பட்டுள்ளது. 1871ம் ஆண்டு இலங்கையின் முதலாவது சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது 2.4 மில்லியன் மக்கள் தொகையினை மாத்திரமே கொண்டிருந்த இலங்கை, இன்று முதியோரின் சனத்தொகை மாத்திரம் 2.8 மில்லியன்களைக் கொண்டுள்ளது. ஆகவே முதியோரின் சமூக நலனிலும், பொருளாதார நலனிலும், சுகாதார நலனிலும், உளநலனிலும் அதிகளவில் அக்கறை கொள்வது எமது கடமையாகின்றது. 


இலங்கையின் முதியவர்களின் சனத்தொகையினை வயதின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். தொண்ணூறு வயதிற்கு மேல் 1.3% வீதமானவர்கள் காணப்பட 80-90 வயதுக்குட்பவர்கள் 10% வீதமாகவும், 70-80 வயதிற்குட்டவர்கள் 32.3% வீதமாகவும் காணப்படுகின்றனர். எனினும் 60-70 வயதிற்குட்பட்டவர்களே 54.4% வீதமாக, மிக உயர்ந்த முதுமைச் சனத்தொகைக் கட்டமைப்பைக் கொண்டு விளங்குகின்றனர். எழுபது வீதமான முதியவர்கள் இலங்கையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும் அப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் சார்ந்திருப்போர் தன்மையானது அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அதற்கு முதியோர் தொகை அதிகரித்தலே பின்புலமாகவுள்ளது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 48.3 வீதமான பெற்றோர்கள் தமது முதுமைப்பருவத்தில் பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்கின்றார்கள். இந்தக் கணக்கெடுப்பானது, அப்பாடா! எமது பாரம்பரியக் கலாசாரம் இன்னும் செத்து விடவில்லை. உயிர் வாழ்கின்றது என்ற நிம்மதியினைத் தருகின்றது. 

ஆனால் மீதியிருக்கும் 42.7% வீதமானவர்களின் இன்றைய நிலைமையினையும் சற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு என்னவாயிற்று என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அதில் 13.5 % வீதமானவர்கள் ஓய்வூதியத்தை நம்பி வாழ்க்கை நடாத்துகின்றார்கள். விவசாயம் மற்றும் ஏனைய தொழில்களைச் செய்பவர்கள் 10.3% வீதமானவர்களாகக் காணப்பட, 7.7% வீதமானவர்கள் தமது சொத்துக்களின் வருமானம் மூலம் வாழ்கின்றார்கள்.

பொதுப்படையில் சொல்கின்ற போது முதுமை என்பது எமக்குத் தெரியாமலேயே எம்முள் வந்து விட்டது என்பர். பெரும்பாலும் பெண்களிடம் இந்தப் பழக்கம் உள்ளது. ஏனெனில் உடலழகு தொடர்பாகவும் வயது சம்பந்தமாகவும் அதிகம் அலட்டிக் கொள்பவர்கள் பெண்கள்தான். சாதாரணமாக சொல்வார்கள்;, ஆண்களிடம் அவர்களின் சம்பளத்தைக் கேட்கக் கூடாது, பெண்களிடம் அவர்களின் வயதைக் கேட்கக் கூடாது என்று ஒரு வழக்கம் உள்ளது. ஏனென்றால் இரண்டிற்குமே சரியான பதில் கிடைக்காது என்பது தான் அதன் காரணம்.  தலையின் முன்முடி நரைக்கின்ற போது தான் ஐயகோ! கிழவியாகி விட்டோமோ! என்ற எண்ணம் மனதில் எழும்.

இன்று பல மணி நேரமாக என் தலைமுடியையே பார்த்தபடி கண்ணாடி முன்னே நின்றேன். உனது முடியைப்பார் எவ்வளவு கருமையா இருக்கு. நீ என்ன டை பாவிக்கிறனீ, எனக்கென்ன அவ்வளவு வயதாகியாகியா விட்டது?' என  முதிர் பருவம் கொள்ளும் பெண்கள் தமது நண்பிகளிடம் ஆதங்கம் கொள்வர். தங்களைத் தாங்களே கேட்டபடி பெண்கள் வயதாக, வயதாகப் புலம்புகின்ற தன்மையினை இன்றைய சமூகத்தில் அதிகம் காணக்கிடைக்கின்றது. ஆனால் முதுமை என்பது எமது பிறப்பில் இருந்தே தொடங்குகிறது. ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் முதுமை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனை ஏற்றுக் கொண்டு ஜீரணிக்கத் தான் ஆண்களும் சரி பெண்களும் சரி தவறி விடுகின்றோம். 

மூப்படைவது என்பது ஒரு வியாதியல்ல. இது ஓர் உயிரியல் செயல்முறையாகும். இக் கால கட்டத்திலே தோன்றும் உடல், உள மற்றும் சமூக மாற்றங்களை ஒரு சமநிலையான வழியில் எதிர்நோக்கப் பழகிக் கொண்டால் நோய்களையும் அங்கவீன நிலைகளையும் தவிர்ப்பது சாத்தியமாகும் என்கின்றார் வைத்தியர் சாந்தி குணவர்த்தன. அதனுடன் உடல் ரீதியாக எவ்வகையான மாற்றங்களை மூத்தோர் சமூகம் எதிர் கொள்கின்றது என்பதனையும் விளக்குகின்றார். உடல் ரீதியாக மூப்படையும் போது ஆணுக்கு அவசியமான சக்தி முன்பை விட பத்து வீதத்தினாலும், பெண்ணுக்குப் பதினொரு வீதத்தினாலும் குறைவடைகின்றது. அவ்வாறே, சமிபாட்டுத்தொகுதியிலும் சில மாற்றங்கள் ஏற்படும். உமிழ்நீர்ச் சுரப்பிகள் சுருங்குவதன் காரணமாக உமிழ்நீர்ச் சுரப்புக் குறைவடைகின்றது. 

அதனோடு, இரைப்பைச் சமிபாடும் குறைவடைந்து போசாக்குக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பற்கள் இல்லாத காரணத்தால் மென்று அரைத்த உணவை உட்கொள்வது சாத்தியமில்லை. இதனால் பசி குறைவடையக்கூடும். அவ்வாறே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் என்பவை ஏற்படலாம். ஒருவர் முற்றுமுழுதாக மருந்து பயன்பாட்டில் தங்கி நிற்கும் நிலையும் ஏற்படலாம். ஏனைய உயிர்ச்சத்துகள் மற்றும் கனிப்பொருட்களின் தேவைப்பாடு ஒரு சாதாரண நபரின் தேவையைப் போன்றதாகவே அமையும். ஆயினும் தாகம் போன்ற பொறி உணர்வுகள் படிப்படியாகக் குறைவடைவதனால், ஒருவரை அறியாமலேயே உடல் உலரும் தன்மை ஃ நீரகற்றப்படும் தன்மை ஏற்படலாம். 
                                                 
இலங்கையில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு முதியோர்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகத் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றது. அதனூடாக பல சேவைகள் முதியவர்களுக்குச் செய்யப்பட்டு வருகின்றன. முதியோர்களுக்கான தேசிய சபையும் மற்றும் செயலகமும் 2000ம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டமூலத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள முதியோர் சனத்தொகையினைக் கருத்திற் கொண்டு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கான பகல் நேர நிலையங்கள், பிரதேச மட்ட முதியோர் சங்கங்களினை நிறுவுதல், ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னரான கருத்தரங்குகளை நடாத்துதல், விழிவெண்படலமற்ற முதியோர்களுக்கான கண்வில்லைகளை வழங்குதல், முதியோர் இல்லங்களைப் புதுப்பித்தல், சுவீகரிப்பு முறைமை, முதியோர் அடையாள அட்டை வழங்குதல், முதியோர்களுக்கான இல்லப்பராமரிப்புச் சேவைகள், முதியோர்களுக்கான  பராமரிப்புச் சபை, சர்வதேச முதியோர் தினக் கொண்டாட்டம், மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை மூலம் முதியோர்களுக்கு வலுச்சேர்த்தல் போன்ற முதியோர்களுக்கான  சேவைகளை வருடாவருடம் வழங்குகின்றன. 

முதியவர்கள் தாம் சுதந்திரமாகவும் அதேவேளை உற்றதுணையுடனும் உறவாடி மகிழ வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்பவர்கள். காமம் கசந்த வயதினிலும் காதல் இனித்து வாழ்வது தானே வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையினை வாழ்வதற்கே அவர்கள் விருப்பம் கொள்வர். அவர்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஒருவர் பரிவுடன்  இருப்பது நன்மை பயக்கும். அப்படிப்பட்ட சூழலுக்கு ஏங்குபவர்களுக்கு அதற்கான சூழலை உருவாக்குதல், முதியோரைத் தனிமையிலிருந்து விடுவித்தல், நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் திடமான பங்களிப்பினை ஏற்றுக் கொள்ளல், நாடு பூராகவும் உள்ள முதியோர் சங்கங்களுக்கிடையே வலையமைப்பினைக் கட்டியெழுப்புதல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் நலனோம்புகை அமைச்சுத் தொழிற்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள் ஒவ்வொரு பிரதேச ரீதியிலும், மாகாண ரீதியிலும் செயற்படுத்தப்படுகின்றன. 

சமூக சேவைகள் அமைச்சு முதியோரின் நலனில் அக்கறை கொண்டதாக விளங்குகின்றது. அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லங்களைப் பராமரிப்பதிலிருந்து முதியோர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும் இலாவகமாக வழங்குகின்றது. அத்துடன் அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவர்களையும் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டில் உள்ளீர்க்கின்ற கடமைகளைச் செய்கின்றது. அதே போன்று தேசிய முதியோர் செயலகமும் முதியோர் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் சமூக மேம்பாட்டிற்காக அனைத்து வசதிகளையும் ஆதரவையும் வழங்குகின்றது. 


இத்தகைய பராமரிப்புக்கள் மூத்தோருக்கு வழங்கப்பட்ட போதிலும் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக முதியவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. முதுமைப் பருவத்தில் தனிமை, சமூகப் புறவொதுக்கம், தொடர்பாடல் பிரச்சினைகள், சுமை என்ற உணர்வு, உடலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள், பாதுகாப்பற்ற உணர்வு போன்ற சமூகப் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

இன்றைய நவீன யுகத்தில் அனைத்துமே பொருளாதாரத்தையும் பணத்தையும் மையப்படுத்தியதாகவுள்ளது. அதனால் நாம் மெல்ல மெல்ல பாராம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து விலகி நவீனத்துவ சமூகத்தை நோக்கி முன்னேறி வருகின்றோம். கைத்தொழிற்புரட்சியின் பின்னர், உலகமயமாதல், மேலைத்தேயமயமாதல், நகரமயமாதல் மற்றும் நவீனமயமாதல் செயற்பாட்டின் காரணமாக அனைத்து செயற்பாடுகளுக்கும் மேலை நாடுகளையே பின்பற்றத் தொடங்கி விட்டோம். அதனால் எமது சுயம் இழக்கப்பட்டு வெளிநாட்டு வாழ்க்கையினை உள் நாட்டில் வாழ்கின்றோம். அதுவே பெற்றோர் தனியாகவும் பிள்ளைகள் தனியாகவும் வாழ்வதற்குத் தூண்டிற்று எனலாம். 

கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறைமை மருந்துக்கும் காணக்கிடைப்பதில்லை. அதிலிருந்து விலகி தனிக்குடும்ப வாழ்க்கை முறைக்குள் நுழைந்து விட்டோம். சனத்தொகை அதிகரிப்பும் பொருளாதாரச் சுமைகளும், இடப்பற்றாக் குறையும் காரணங்களாக அமைகின்றன. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைமை வாழ்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பினும் நவநாகரீக மோகத்தால் அடுத்த வீட்டு ஜன்னலினூடே பார்த்து எமது வாழ்க்கை முறையினையும் தெரிவு செய்கின்றோம். அது தான் வேதனையாகவுள்ளது. எதிர் வீட்டுக்காரன் என்ன செய்கின்றானோ அதற்குப் போட்டியாக நாமும் வாழத் தலைப்படுகின்ற போது தான் இங்கே சிக்கல் தன்மையே தோன்றுகின்றது. மனதாரச் சிந்தித்துப் பார்த்தோமானால் ஆழ் மனம்; நம் உண்மைக் கதையைக் கூறும். 

போலி வாழ்க்கையும் பகட்டு படோடபங்களும் எம்மையே மாற்றுகின்றன. அவனும் நானும் அவளும் நானும் ஒரே அலுவலகத்தில் தானே வேலை செய்கின்றோம். அவனைப் பார் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறான். நானும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது. எதற்காக தேவையில்லாது, இருக்கின்ற பிரச்சினைக்கு மத்தியில் இவர்களை வேறு தலையில் போட்டுக் கொள்வான். அவர்களும் சுதந்திரமாக அங்கே, எங்கே முதியோர் இல்லத்தில் இருந்து விட்டுப் போகட்டுமே என்ற எண்ணங்கள் எம் மனதில் புலப்படுகின்ற போது சடுதியாக முடிவெடுத்து விடுகின்றோம். பிள்ளைகளுக்காகவே வாழ்கின்ற பெற்றோரும் சம்மதித்து விடுகின்றனர். 

முதியோர் இல்லங்களின் அதிகரிப்பும் முதியோர் தாமாக விரும்பி முதியோர் இல்லங்களுக்குச் செல்கின்ற தன்மையும், பிள்ளைகளே அவர்களை அவர்களின் விருப்பமின்றி முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கின்ற தன்மையும் அதிகளவில் காணப்படுகின்றது. இல்லை. தாங்கள் சொல்வது தவறு என என்னை நோக்கி நீங்கள் அம்பைப் பாய்ச்சினாலும் அது தான் நிதர்சனம். 

முகநூலிலும், இணையத்தளங்களிலும், பத்திரிகை வாயிலாகவும் அதிகம் முதியோர் கொடுமைகள், தனிமைப்படுத்தல் போன்ற கொடூரமான தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. வீட்டின் நாய்க் கூண்டுக்குள் தாயை அடைத்து வைத்திருந்த மகள், ஒரு வாரமாக வீட்டுக்குள் தாயைப் பூட்டி வைத்து விட்டு வெளியூருக்குச் சுற்றுலா சென்ற மகன், வீட்டில் வைத்துப் பார்க்க முடியாமல் தன் தந்தையை வீட்டை விட்டு வீதிக்கு அனுப்பி அவர் பஸ் நிலையத்திலும் வீதியிலும் உறங்கி உண்ண உணவின்றி பிச்சை எடுத்த செய்தி தெரிந்தும் மனதைக் கல்லாக வைத்திருந்த மகள், தாயை மலசல கூடத்திற்கு அருகாமையிலேயே தங்கியிருக்கச் செய்த மகள், தாயையும் தந்தையையும் சந்திக்கக் கூட விடாமல் ஆறு மாதக் கணக்கில் தமது வீடுகளில் வைத்து வேலைக்காரர்களைப் போல் நடத்தும் அவலம் என்று அன்றாடம் கேட்கக் கூடாத செய்திகளைக் கேட்கின்றோம். பார்க்க கூடாத காட்சிகளையெல்லாம் பார்க்கின்றோம்.
 
இவை எமக்குப் புதிது. எமது பண்பாட்டுக் கோலத்திற்கு இடைச்செருகல். எதற்காக இந்த அவலங்கள் சமூகத்தில் நிகழ்கின்றன என்ற சிந்தனையானது எம் மனங்களில் துளிர் விடுவது இயற்கையே. பல்வேறு காரணங்கள் முன்னிற்கின்றன. வயது முதிர்ந்த காலத்தில் உளம் செயலிழப்பது போன்று உடலும் தொழிற்படத் தாமதிக்கும். முதுமையும் மரணமும் தவிர்க்க முடியாதவை. விஞ்ஞான ரீதியாக முதுமை உடலளவில் ஏற்படும் தன்மையினை விளக்கக் காணலாம். 

தோல் சுருக்கம், மறதி, பார்வை மங்குதல், கேட்கும் திறன் குறைபடுதல், உணர்வு சக்தி குறைவடைதல் போன்றவற்றை அவர்கள் விரும்பி ஏற்பதில்லை. முதுமைப்பருவத்தின் அறிகுறிகள் அவை. எதிர்காலத்தில் அவர்களை விட மிக மோசமான நோய்த்தாக்கங்களுக்கும் நாம் ஆளாகலாம். யார் கண்டது. காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் கதை தான். ஆக இத்தகைய குறைபாடுகள் ஏற்படுகின்ற போது அதனைப் பார்க்க விரும்பாது பிள்ளைகள் அருவருப்பின் காரணமாக பெற்றோராகிய முதியோரைத் தாழ்வாக, தரக்குறைவாக மதிக்கின்ற தன்மைகளும் இழிவாக நடத்துகின்ற நடத்தைக் கோலங்களும் ஏற்பட்டு விடுகின்றன. உணவு உண்பதில் இருந்து சிறுநீர் கழித்தல் வரை அனைத்திற்கும் இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியேற்படும். அவர்களின் இத்தகைய நச்சரிப்புக்கள், புலம்பல்கள் போன்றவற்றைச் சகிக்க முடியாத பிள்ளைகள் முதியோரை அவமதிக்கின்ற போக்குகளே இன்றைய சமூகத்தில் அதிகம் விரவிக் கிடக்கின்றது.

முதியோர்களை ஒன்றுக்கும் பிரயோசனமற்றவர்கள் என்று நாம் ஒதுக்கி விடுகின்றோம். காலவோட்டத்திற்கு ஏற்ப மாற்றம் காண விரும்பாதவர்கள். எதைக் கேட்டாலும் அந்தக் கிழம் 'அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்து விடும், வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வானேன்'. என்ற எண்ணப்பாடு இன்றைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. எனவே முதியவர்களுக்கென தனியான உலகத்தை அமைத்து விட்டு நாம் ஒரு உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் தாம் எமக்கான பாதையில் இருந்த முட்களையும், கற்களையும் விலக்கி விட்டு எமது பாதையினைச் செப்பனிட்ட மூதாதையர்கள் என்பதனை நினைவில் கொள்ள மறந்து விடுகின்றோம். அவர்கள் அனுபவசாலிகள். அவர்களின் ஆழ்ந்த அறிவின் மூலம் எமது பிழைகளை நாம் திருத்திக் கொண்டு ஆளுமை மிக்க வாழ்க்கை வாழ முடியும். 

எமது வாழ்வின் அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்பம். அந்தக் குடும்பத்தில் இருக்கும் முதியோர் பராமரிப்பினை வேண்டுகி;ன்ற போதும், ஆதரவை விரும்புகின்ற போதும் குடும்ப அங்கத்தவர்கள் என்ற முறையில் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பராமரிப்புக்கள் நிதி சார் பொருளாதார அடிப்படையிலான பராமரிப்புக்கள் மாத்திரமல்ல. மாறாக அவை உணர்ச்சிகள் சார் மற்றும் உடல் சார் கவனப்பராமரிப்பு சம்பந்தப்பட்டதாகும். ஆதரவுக்கான தேவை அதிகரிக்கின்ற போது குடும்பமே முதியவர்களுக்கு முன்னுரிமையாகவுள்ளது. 


அதன் மூலம் குடும்ப அங்கத்தவர்களிடையே பரஸ்பர நம்பிக்கைகளும் சமூக இடைத்தொடர்புகளும் அதிகரிக்கும். இதனால் உளவியல் சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு நாம் நன்கு பயிற்றப்பட்ட உளவியலாளர்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி முதியவர்களுடன் நேரத்தைச் செலவழிப்போமானால் அது அத்தகைய சிரேஷ்ட பிரஜைகளுக்கும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மன அதிர்ச்சி என்பவற்றிலிருந்து விடுபட நன் மருந்தாகும். அது எமது வேலைப்பளு தொடர்பான இறுக்க சூழலைத் தளர்க்கும். 


ஓர் இளைய தலைமுறையுடன் நல்ல உறவுகளைக் கட்டியெழுப்புவது முதியவர்கள் அதிகரித்த மன நிறைவு உணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவும். அவர்கள் இருவருக்கும் இடையில் உறவு நெருக்கத்தை ஏற்படுத்துவது இருபாலாருக்கும் அனுகூலமானதாக அமைவதாக வைத்தியர். லக்மி சி.சோமதுங்க விளக்குகின்றார். இருபாலாருமே புதிய திறன்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பை வழங்கும், பிள்ளைகளுக்கும், முதியவர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு நோக்கம் சம்பந்தமான உணர்வைக் கொடுக்கும், சிறுவர்கள் முதுமையடைதலை விளங்கிக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

மேலும் தமது சொந்த மூப்படைதலை ஏற்றுக் கொள்வதற்கு உதவும், வயது முதிர்ந்த வளர்ந்தோருக்கு புனர் ஆற்றலையும் சக்தியையும் வழங்கும், முதியோரின் மனச் சோர்வுச் சாத்தியத்தைக் குறைக்க உதவும், முதியவர்களின் தனிமை நிலையைக் குறைக்கும், குடும்பத்தின் கதைகள் மற்றும் வரலாற்றை உயிர்த்துடிப்போடு வைத்துக் கொள்ள உதவும் போன்ற நற்பண்புகளும் பண்பாட்டு விழுமியங்களும், ஆன்மீகச் சிந்தனைகளும் இன்றைய இளஞ்சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊட்டப்படும்.
 
பல நிகழ்ச்சிகளைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். போட்டிப்பரீட்சைகள் எழுதி வெற்றி கொண்ட அறுபது வயது தந்தை, வாசித்தலில் முழு ஈடுபாடு கொண்டு ஆங்கில மொழியைத்; தனது நாற்பது வயதில் கற்க ஆரம்பித்து எழுபது வயதில்; சரளமாகப் பேசும் முதியவர், ஆண்களுடன் போட்டி போட்டு சிலம்பம் விளையாடி வெற்றி பெறும் சக்தி கொண்ட அறுபத்தைந்து வயது மூதாட்டி, தனது தொண்ணூறு வயதுகளில் கலாநிதிப் பட்ட ஆய்வை நிறைவு செய்த பெரியவர் எனப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவருமே சமூகத்திற்கு அஞ்சவில்லை. யாரும் நக்கல் அடிப்பார்களோ என்று எண்ணவில்லை. சாதிப்பதிற்கு வயது என்பது தடையல்ல, முதுமை என்பதும் தடையல்ல என்பதனை உலகிற்குப் பறைசாற்றியுள்ளனர். ஆனால் இன்றைய சமூகத்திலும் விட்டுக் கொடுத்தல் என்ற பேரில் வயோதிபர்கள் தமது திறமைகளை மழுங்கடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். 

முதுமைக்கோட்பாடும் மரபணுக்கோட்பாடும் மனிதனின் படிமுறை வளர்ச்சி தான் முதுமை என்பதனை எடுத்துரைக்கும். மேலும் சுதந்திரம், பங்களிப்பு, பராமரிப்பு, கௌரவம் மற்றும் சுய நிறைவு என்ற ஐந்து அம்சங்களையும் கொண்ட வாழ்க்கை வாழ்பவர்களாகவும் முதியவர்கள் பேணப்பட வேண்டும் என ஐ.நா பரிந்துரை செய்கின்றது. முதியோரென்றாலே அழுக்கானவர்கள், சுத்தமற்றவர்கள் என்ற நிலைப்பாடு இன்று தலை தூக்கியுள்ளது. அவர்கள் அவ்வாறானவர்கள் அல்லர். பக்குவமாக அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அவர்களைத் தொட்டுக் கதையுங்கள், பரிவுடன் விசாரியுங்கள், உங்கள் காதலையும் அன்பையும் வெளிப்படுத்துங்கள், பார்த்துப் புன்னகை புரியக்கூட நேரமி;ல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள், சேர்ந்திருந்து சிரியுங்கள், உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். அது முதுமையை மகிழ்ச்சிப்படுத்தும். முதிய தம்பதிகள் இருவரும் கதைக்கின்ற போது பார்த்திருக்கிறீர்களா? அன்பு சொட்டும். ஆழ்ந்த காதலும், பரிவின் உச்ச கட்டமும் வெளிப்படும், இரை மீட்பதைப் போன்று பழைய தமது காதல் கதைகளைக் கூறுகின்ற போது இது தான் அன்பின் பேரின்பமன்றோ! என்ற எண்ணம் வரும். ஒருவருக்கொருவர் ஆதரவாக, எத்தனை பேர் கூடி நின்றாலும் தன் மனைவியைஃகணவனைத் தேடுகின்ற தேடலில் ஒரு ஏக்கம், வாய்ப்பேச்சுப் போய் கண்ணால் கதைகள் பேசும், காட்சிகளைக் காணும் போது எமக்கும் வாழ்வின் அர்த்தம் புலப்படும்.

கணவன், மனைவி என்ற நிலை மாறி உற்ற நண்பர்களாக உருமாறியிருக்கும் தன்மையை ரசிக்க முடியும். அவர்கள்; கிழவன் என்றும் கிழவி என்றும் தமக்குள் சம்பாஷணையினை வளர்த்துக் கொள்ளும் காட்சிகள் இந்தத் தீண்டும் இன்பத்தை அனுபவிக்கவே ஒரு முறை முதுமையடைய வேண்டும் என்ற சிந்தனையை உதிக்கும். அப்போதே இயல்பாக நடக்கும் வயோதிபப் பருவத்தை நாம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவோம். பிறகென்ன வாழ்க்கை நிலையாமை என்று உணரும் நொடியே மூப்படைதலுக்கும் எம்மைத் தயார்படுத்திக் கொண்டு விடுவோமே. இதனால் இளமைப்பருவத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோமோ, அவ்வாறே முதுமைப் பருவத்தையும் வாழத் தலைப்படுவோம். சிந்தனையில் மாற்றம் ஏற்படுகின்ற போது செயற்பாட்டிலும் மாற்றம் தோன்றும். அவற்றை எமது எதிர்கால சந்ததிக்கு உரமாக்கிக் கொடுக்க வேண்டியது எமது பொறுப்பன்றோ! 
Views: 886