கொலைகள் மட்டும் முற்றுப்பெறவில்லை

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner

செம்மண் வரிந்து கட்டிய வீடு. சைனாவில் அந்த மாதிரியான வீடுகள் பெரும்பாலும் நகருக்கு வெளிப்புறங்களிலே தான் இருக்கும்.அதிசயமாக இந்த வீடு மட்டும் அந்த லேனில் திருஷ்டி தேவதையானது. அந்த வீட்டில் ஒரு பெண்குழந்தை. இன்னும் ஒரு மனிதன் அதன் அப்பாவாக இருக்கவேண்டும். இருவரும் மட்டும் தான். உண்மையில் அந்தக்குழந்தை இந்த கதைக்கு தேவையில்லாததொரு பாத்திரப்படைப்பு. கதையின் சட்டகத்தை வடிவமைப்பதற்க்காக மட்டும் காட்டப்பட்டுள்ளது..அக்குடும்பத்திற்க்கு சொந்தம் என்று யாரும் இல்லை. சொந்தத்தை காட்டிலும் அதிகப்படியாக ஒரு போலீஸ் நண்பன். அந்த சைனாக்காரக் கடையின் பெயர் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்க்கு கவர்ச்சியான தொன்றல்ல. அக்கடையில் தான் அந்த மனிதன் வேலைபார்த்தான். மாதசெலவுகள் போக கொஞ்சமாக ஒரு தொகை வங்கியில் சேரும் அளவிற்க்கு சம்பளம். அந்த பெண் குழந்தையும் நர்சரி ஒன்றில் நாளுக்கு சில மணிகளை செலவழித்து வந்தது. அவன் மனைவி இறந்தது பற்றி எந்த தகவலும் இதுவரையில் இல்லை. கார் அக்சிடன்ட் நடந்த அந்த இடத்தில் சடலம் கிடைக்காதது அந்த போலீஸ் நண்பனுக்கு அதிகம் வேலை வைத்தது. அந்த குடும்பத்திற்க்கு எதிரி என்று யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. ஒரு வேளை அவளின் முன்னால் காதலனாக இருக்கலாம். ஆனால் அவனும் இப்போது அமெரிக்காவில். அவளும் நல்லவள் தான். என்றவாறு பலவாறாக யோசித்துப்பார்த்தான். போலீஸ் மூளைக்கு கூட ஒன்றும் எட்டவில்லை. சிலவேளை உண்மையில் ஏதும் விபத்தான சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். என்றவாறு யோசித்தவனின் சிந்தனை  சில ஆண்டுகளுக்கு முன்னில் இருந்து அவனின் போலீஸ் நிலையத்திற்க்கு வந்துகொண்டிருக்கும் அந்த விசித்திரக்கேஸுகளின் பக்கம் திரும்பியது. அந்த கேஸ்கள் கூட இன்னும் இழுத்துக்கொண்டு தான் கிடக்கின்றன. அந்த பைலின் பக்கங்கள் சில இந்த கேஸுடன் ஒத்துப்போக மூளையில் கொஞ்சம் பொறி தட்டத் தொடங்கியது. அதே இடம் அதே நேரம். இதே போல சடலம் கிடைக்காததால் இழுத்துக்கொண்டிருந்தன. தற்காலிகமாக ஓநாய்த்தாக்குதல் என்று காரணம் காட்டி பழு குறைக்கப்பட்ட பைல்கள் அவை. இந்த சம்பவங்கள் நடந்த அந்தப்பகுதி ஒரு காட்டிடைப்பிரதேச நெடுஞ்சாலை. காடு என்றால் மண்டிய காடு அல்ல. சைனாவிற்கே உரித்தான தேவதாறு மரங்களை கொண்ட மிக ஐதான காடு. இப்போது பனி க்காலம் வேறு. போலீஸ் நிலையத்தின் பனி அகழ்வுப்புலனாய்வுத் துறையினர் அனைவரும் மேற்கு மலைத்தொடரின் சுரங்க அகழ்வுப்பணியில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்கச்சென்று விட்டதால் வேறு வழியில்லாமல் தனியே செல்வதென்று முடிவெடுத்தான் அந்த போலீஸ்காரன். துணைக்கு தன் கைத்துப்பாக்கியையும் ஒரு டோச் லைட்டையும் எடுத்துக்கொண்டு தன் மோட்டர்சைக்கிளை முறுக்கினான். குறித்த பகுதிக்கு இருநூறு மீட்டர் தொலைவில் மறைவாகத்தன் பைக்கை நிறுத்தி விட்டு தன் யூகங்களை மேலும் அசைபோட்டுக்கொண்டு அந்தக்காட்டுக்குள் காலடி வைத்தான். மணி ஏழைத்தாண்டியிருந்ததால் அப்பனிக்காலத்தில் அப்பிரதேசம் முற்றிலும் இருளால் சூழப்பட்டு விட்டது. ஆனால் அந்த இருள் கண்பார்வையை பூரணமாக உணர்வறச்செய்யவில்லை. அந்தப்பகுதியில் உண்மையிலேயே பனிக்கால ஒநாய்கள் அதிகமாக உலாவும். அத்தோடு சைனாவின் தற்போதும் வசிக்கும் காட்டுவாசிகள் நரமாமிச உண்ணிகள். இதனால் டோச் லைட்டை ஆன் செய்து வலியப்போய் அவற்றிடம் சிக்குவதை அவன் விரும்பவில்லை. கண்களைத் தீட்டிக்கொண்டு சென்றவன் நான்கு மணித்தியாலமாகியும் எதையும் அறிந்துகொள்ள முடியாதவனாய் மீண்டும் நடுக்காட்டை விட்டு நெடுஞ்சாலையை அடைந்தான். நிச்சயமாக ஓநாய்த்தாக்குதல் தான் நான் தான் கொஞ்சம் குழம்பியதோடு நண்பனின் நிம்மதியையும் சேர்த்துக் கெடுத்துவிட்டேன் என மனதுக்குள் கறுவிக்கொண்டான். நிசப்தமான அந்த நேரத்தை கெடுக்கும் முகமாக அவனுக்கு மிக அருகில் ஓநாய் ஒன்று உறுமும் சத்தம் லேசாகக் கேட்டது. அவன் டோச்சை ஒன் செய்ததும் அந்த ஜீவ் வகை வாகனத்தின் முன் விளக்கு எரியத்தொடங்கியதும் ஒரே நேரத்தில் நடந்தது. அது வரை மறைவில் இருந்து அவனைக்கண்காணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம் மறைவில் இருந்து தார்ப்பாதைக்கு ஏறியது. அதில் வயது போன ஒரு கிழவனும் அவன் ஓநாயும் அவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தன. அவனும் தன் கைத்துப்பாக்கியை தயாராகத்தான் வைத்திருந்தான்.ஆனால்

அடுத்த நாளின் பத்திரிகைத்தலைப்பு அவனுக்காக காத்திருந்ததை அவனால் அறியமுடியவில்லை. மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை மீறியதால் இளம் போலிஸ்காரர் ஒருவர் பலி. அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக சடலம் தேடும் பணிகள் தாமதம். அவனால் அந்தக் கொலைகள் மாற்றியமைக்கப்பட்டது என்னமோ உண்மைதான். அது வரை கொலை செய்ய பேஸ் போல் பட்டை மாத்திரமே லாவகமாக கையாண்ட அந்த எண்பது வயது சீரியல் கில்லர் அந்த நாளில் இருந்து கைத்துப்பாக்கியையும் கையாளத் தொடங்கி விட்டான். தன் தனிமைக்கு ஒரே விடையான தன் ஓநாய்க்கு உணவு கொடுப்பதற்க்காக மட்டுமே அவன் தன் பேஸ் போல் பட்டிற்க்கு வேலைக்கொடுத்துக் கொண்டிருந்தான். தனிமை அவனுக்கு அந்தளவுக்கு வெறியை விதைத்த மாதிரி மனித மாமிசம் அந்தளவுக்கு அந்த ஒநாய்க்கு விசுவாசத்தை கொடுத்திருக்கவேண்டும். இளமைகளில் வேட்டைக்காரனாக இருந்த அவனிற்க்கு மனிதவேட்டை மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

இரு வாரங்கள் மறைந்தன…

தன் மனைவி இறந்தது கூட அந்தளவிற்க்கு அம்மனிதனைப் நிலைகுலையச்செய்யவில்லை. அந்த இரண்டுவாரங்களில் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை. தன் மனைவியின் கொலையின் பிண்ணனியை அறியமுயன்று தன் நண்பனையும் அநியாயமாக பலி கொடுத்துவிட்டோம் என்ற குற்றஉணர்ச்சி அவனை உறுத்தத்தொடங்கியது. அடுத்த இரண்டு நாட்களில் ஏதோ முடிவெடுத்தவனாக தன் குழந்தையையும் தன் சேமிப்பு முழுவதையும் இளம் விதவையான தன் நண்பனின் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு இந்த தொடர் கொலைகளின் பிண்ணணியை காணப் புறப்பட்டான். உதவிக்கு ஒரு கைக்கத்தியை மட்டும் எடுத்துக்கொண்டான்.

காலை நேரம் முழுவதையும் தன் நண்பனின்மோட்டர் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலும் தன் மனைவியின் கார் கண்டுபிடிக்கப்பட்டஇடத்திலும் கழித்த அவன் இரண்டு இடங்களிலும் அந்த பழைய ஜீப்பில் இருந்து கழிவு ஒயில் சிந்தியிருப்பதையும். பெரிய சுருட்டு ஒன்று அணைக்கப்பட்ட நிலையில் இருந்ததையும் மட்டுமே கண்டுபிடித்தான். இரவு ஏழு மணி தன் யூகத்தை ஊர்ஜிதம் செய்வதற்க்காக பனியால் மூடியிருந்த பற்றை ஒன்றின் பின்னால் மறைந்திருந்தான். வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் பழைய ரக ஜீப் வண்டி ஒன்றின் இரைச்சல் கேட்கத்தொடங்கிய சில வினாடிகளில் அந்த வண்டி அவனுக்குப்புலப்படத்தொடங்கியது. சுருட்டுப்புகையில் முகம் மறைந்திருக்க ஓநாயும் கிழவனுமாக அவன் மறைந்திருந்த இடத்தைக்கடந்து போகத்தொடங்கினார்கள். அவனும் சில நிமிட இடைவெளிகளில் அவர்களை பின்பற்றத்தொடங்கினான். ஊரில் இருந்து வெளி நோக்கி அந்த ஜீப் போய்க்கொண்டிருந்தது. அந்த ஜீப் சுமாரான வேகத்தைக்கூட அடையாத போதிலும் ஜீப்பின் வேகத்திற்க்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை. பின் தங்கி விட்டான். அரை மணி நேர வேகநடை அவனுக்கு அதைக்காட்டியது. அவனது வீட்டை ஒத்துக்கட்டப்பட்டிருக்கும் ஒரு செம்மண் வரிந்த வீடு. அதன் பக்கமாக சாய்வாக வேயப்பட்டிருந்த ஒரு கராஜ். அதில் அந்த ஜீப் நின்று கொண்டிருந்தது. அந்த வீடு எதையோ ஞாபகப்படுத்த அரவம் செய்யாமல் அந்த வீட்டினுள் நுழைந்தான். தலை சுற்றத்தொடங்கியது. அவனது உருவம் பொறிக்கப்பட்ட போட்டோக்கள் அங்கே தொங்கிக்கொண்டிருந்தன. கையில் வேட்டைத்துப்பாக்கி, மனைவி, மகன் என்று கம்பீரமாக போஸ் குடுத்துக்கொண்டிருந்தான். அந்த போட்டோ அவன் வீட்டிலும் இருந்தது. அப்படியென்றால் அந்த கிழவன் தான் என் தந்தையா? என் தந்தை ஓநாய்க்கு இரையானதெல்லாம் பொய்யா. இவ்வாறு அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே கைத்துப்பாக்கியை உயர்த்திய சகிதம் சுருட்டு புகை கக்க அந்தக்கிழவன் உள்ளே நுழைந்தான். தான் அறிந்து கொண்ட உண்மைகளை கிழவனுக்கு விளங்கப்படுத்தும் தேவை அவனுக்கு இருக்கவில்லை. தன் இளமைக்கால போட்டோக்களையும் அந்த மனிதனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த அக்கிழவன் சட்டென வால்டரை அழுத்த கைத்துப்பாக்கி வெடித்தது.. அவன் நின்று கொண்டிருந்த இடத்தின் பின்புறத்தின் ஊடாக பதுங்கி வந்து அவனை நோக்கிப்பாய்ந்த அந்த ஓநாய் கண நொடியில் செத்து விழுந்தது.அக்கிழவன் மேலும் மெனக்கடவிரும்பவில்லை. காட்டின் எல்லையான இந்த வீட்டை ஓநாய்க்கூட்டம் தாக்கியதால் தன் குடும்பம் மொத்தமும் ஓநாய்க்கு இரையாக தான் மட்டும் ஓநாய்கூட்டத்தால் துரத்தப்பட்டு வேர் ஒன்றில் கால் இடறி விழுந்து மண்டையில் அடிபட்டு பழயதை மறந்து தனிமரமான தன் பழங்கதையை சொல்வதற்க்கு அரை மணி நேரத்தையும். தன் தனிமை தன்னுள் விதைத்த பிசாசைப்பற்றி சொல்வதற்க்கு அரைமணி நேரத்தையும் எடுத்துக்கொண்டான். ஆனால் தன் மருமகள் தன்னால் கொல்லப்பட்டதை அறிந்ததும் தன்னுள் இருக்கும் பிசாசால் தன் பேத்திக்கும் ஆபத்து வரலாம் என்பதை புரிந்துகொண்ட அவன் தாமதிக்காமல் மேலும் ஒரு தடவை வால்டரை அழுத்திக்கொண்டான்.  ஆனால் கொலைகள் மட்டும் முற்றுப்பெறவில்லை

Views: 202