பிறக்கட்டும் கற்காலம்

எழுத்தாளர் : யாழினி யோகேஸ்வரன்மின்னஞ்சல் முகவரி: yarliniwaran@gmail.comBanner

நீண்ட பயணங்களால் தொலைந்து போய்க் கிடக்கிறது மனது
விளைநிலங்கள் தந்த வியப்புக்குறிகள்
இன்னும் அடங்கிடவில்லை.
வானுயர்ந்த சீமெந்துகளும்
காரிருள் மறைத்த வெள்ளொளிகளும்
கண்ணீர் முட்டி மோத
தொங்கிக் கொண்டிருக்கின்றன 
அந்தர வானில்.
புகையும் புகை தந்த நாற்றமும்
சட்டையின் வண்ணத்தை மாற்றிவிட்டிருக்கிறது
பெருந்தெருப் பாவனையால்.
மனிதர்கள் கூட ஏதுமறியாப் பெருந்துயர் போல
ஒருவர் முகம் ஒருவர் பார்க்காது
பாதை மாறிக் கடந்து கொண்டிருக்கின்றனர்
பிடித்து உண்ணும் முதலைகளைப் போல.
மீண்டும் ஒரு காலம் 
அது கற்காலம் எனில் 
வானம் நீலமாகியும் 
காடு பச்சையாகியும்
கடல் அலைகொண்டெழவும்
மழை மரணிக்காது பொழியவும்
மண் வறண்டு போகாதும்
மனிதர் மனமுள்ளவராகவும்
இருக்கட்டும்
அது எக் காலமெனினும் 
கற்காலம் பிறக்கட்டும் - மீண்டும்
கற்காலம் பிறக்கட்டும்


Views: 199