சில விபத்துக்களும் ஒரு காதலும்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.comBanner


விபத்து - 01

2005 இன் ஆரம்பங்களில் யாழ்ப்பாணம். இப்போது போல பல உபகட்சிகள் உருவாகாமல் சையன்ஸ் ஹோல் மட்டுமே யாழ்ப்பாணம் முழுவதும் தனிராட்சியம் நடத்திக் கொண்டிருந்த காலம். யாழ்ப்பாணத்தில் யார் உயர் தரத்தில் இணைந்த கணிதம் அல்லது உயிரியல் படித்தாலும் கட்டாயம் சயன்ஸ் ஹோலுக்கு ஒரு தடவையாவது விஜயம் செய்திருக்க வேண்டுமென்பது கிட்டத்தட்ட எழுதப்படாத விதிகளில் ஒன்று. ஒவ்வொரு பாடத்திற்கும் தனி ஆசிரியர்களிடம் போய் கற்று உலகை வென்றவர்களைப் பற்றி நான் இங்கு கதைக்கவில்லை. 

இப்படியான இந்த உயர்தர மாய உலகில் குமரனும் சிக்குப்பட்டு, 2006ன் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்று ஒரு இஞ்சினியர் ஆவது என்ற பெருங் கனவோடு சயன்ஸ் ஹோலுக்குள் புகுந்து, பிளற் பிச்சில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பற்றிங் பவர்பிளே ஓவர்ஸ்சுக்கு ஆடுவது போல ஆரம்பத்தில் இயக்கவியல், பொது இரசாயனம், திரிகோண கணிதம் என்பவற்றில் எல்லாம் நன்றாக அடித்து ஆடி நல்லதொரு ஓப்பனிங் ஸ்கோரை எடுத்தாலும் மிடிள் ஓவர்களில் போடப்பட்ட அசேதன இரசாயனம், மின் புலம் போன்ற ஷோட் போல் மற்றும் டூஸ்ராக்களுக்கு கொஞ்சம் தினற ஆரம்பித்து தற்போது '2006ல் இறுதி பரீட்சைக்கு ஏதோ மூன்று பாடங்களுக்கும் 'சி' எடுத்தாலே போதும்' என்ற நிலைக்கு அவனது மனம் வந்து நிற்கிறது. 
  
அன்றும் வழமை போல பிஸிக்ஸ் முடிந்ததும் கெமிஸ்ரி பாடத்தை கட்டடித்துக் கொண்டு சயன்ஸ் ஹோலை விட்டு வெளியே வந்த குமரனுக்கு பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் அன்றைய தினம் கெமிஸ்ரி பாடத்தைக் கட்டடித்தது அவனோடு சேர்த்து வெறும் ஐந்து பேர் மட்டுமே. மற்ற நால்வரையும் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. விறுவிறுவென்று போய் சைக்கிளை எடுத்துக் கொண்டு பெருமாள் கோயில் றோட்டை நோக்கி பெடலை மிதிக்கத் தொடங்கிய போது தான் மனதுக்குள் ஏதோ உறுத்தியது. 

'இன்றைக்கும் கெமிஸ்ரியைக் கட் அடித்து விட்டோமே. திறீ 'சி'யே எடுக்கிறது கரைச்சல் போல கிடக்கே.' என்ற அவனது சிறுபான்மையினமான நல்ல மனதின் சந்தேகத்துக்கு 'இன்னும் ஒண்டரை வருசம் இருக்க தானே. அதுக்கை படிச்சுக் கொள்ளலாம்' என்று பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட அவனது கெட்டமனம் உடனடியான பதிலைக் கொடுத்தது. அந்த பதில் அவனுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கவே, அந்த திருப்தியை அவன் பூரணமாக அனுபவித்துக் கொண்டு சயன்ஸ் ஹோல் வீதியிலிருந்து பெருமாள் கோயில் வீதிக்கு திரும்புவதற்கும் எதிர்ப் பக்க ஓரமாக வந்த சைக்கிள் அவனோடு மோதுவதற்கும் சரியாக இருந்தது.

அந்த பூரண மோதலின் தொடர்ச்சியாக குமரனும் எதிர்ப் பக்க சைக்கிளில் வந்த யாமினியும் கீழே விழுந்து, அவர்களின் கொப்பிகள், புத்தகங்கள் எல்லாம் வீதி முழுவதும் சிதறி, இதை வித்தை பார்ப்பதற்கென்று இன்ஸ்டன்டாக அதில் ஒரு கூட்டம் கூடி, அந்த கூட்டத்தில் ஓரிருவர் திடீர் ஹீரோக்களாகி குமரனை கெட்ட கெட்ட வார்த்தைகளிலெல்லாம் திட்டி...... அந்த விபத்து என்ற சம்பவம் முடிய கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் எடுத்தது.

அந்த மோதலின் ஆரம்பத்திலேயே இந்த உலகுக்கு வந்துவிட்டிருந்த குமரன் அந்த சம்பவம் முடியும்வரை ஏன் அது முடிந்த பின்னரும் கூட அவதானித்துக் கொண்டிருந்த ஒரே விடயம் யாமினி தான். அவளும் அவனை கவனித்திருக்க வேண்டும். அது தானே யதார்த்தம். இந்த பரஸ்பர கவனிப்புக்கள் நாளாக ஆக 'அவர் யார்?' என்று விசாரித்தலில் தொடங்கி சில தூதுக்கள் மற்றும் பல பின் தொடர்தல்களுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் அதாவது 2006ன் ஆரம்பங்களில் காதலாக கசிந்தது. (தலைப்பிலுள்ள அந்த ஒரு காதல் இதுவல்ல) 

விபத்து – 02

2006ன் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் அவளது பாடசாலையில் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகச் சிறந்த பெறுபேற்றை பெறுபவர்களின் பட்டியலில் நயனாவின் பெயரும் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருந்தது. மிகக் கடினமான கணக்குகளை எல்லாம் அவள் மிக இலகுவாக தீர்த்திருக்கிறாள்.. இருபது வருடங்களாக கேத்திர கணிதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற லிங்கம் ஆசிரியரால் நிறுவ முடியாத ஒரு நிறுவலை நயனா வெறும் மூன்று மணி நேரத்துக்குள் நிறுவி விட்டாள் என்ற செய்தியை அறியாதவர்கள் அவளது ஏரியாவிலேயே இல்லை எனலாம். இந்த செய்தியைக் கேள்விப் பட்ட லிங்கம் ஆசிரியர் நயனாவை நேரடியாக அழைத்துப் பாராட்டியதோடு உயர் தரத்துக்கு இணைந்த கணிதத்தை கற்கும் படியும் அவளுக்கு அறிவுரை கூறியிருந்தார். எதிர் காலத்தில் ஒரு கொம்பியூட்டர் இஞ்சினியராக வரவேண்டும் என்ற தன் இலட்சியத்துக்கு ஏற்ப அவளும் உயர் தரத்துக்கு இணைந்த கணிதத்தையே தெரிவு செய்ய திட்டமிட்டிருந்தாள்.

2007ன் தைப்பொங்கலை அண்மித்த ஒரு நாளில் அவளின் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு பெரும் விபத்து அவளது திட்டங்களையெல்லாம் முற்றாக மாற்றியமைத்தது. ஆம். நயனா பேரூந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தபோது, வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்ரர் ஒன்று எதிரே வந்துகொண்டிருந்த இவள் ஏறவேண்டிய பேரூந்துடன் மோதியதில் அந்த விபத்து சம்பவித்தது. அதில் இருவர் ஸ்தலத்திலேயே இறக்க ஐந்து பேர் மிக கவலைக்கிடமான நிலையில் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த ஐந்து பேரில் இருவர் நயனாவின் மிக நெருங்கிய தோழிகள். நயனாவும் உடனடியாகவே மருத்துவமனைக்கு விரைந்தாள். அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக் குறை காரணமாக அவர்களை நகரத்தின் பிரதான மருத்துவமனைக்கு அனுப்புவதென்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை எடுத்து அவர்களை அங்கே அனுப்புவதற்கிடையில் நயனாவின் நண்பி ஒருத்தி இறந்துவிட்டிருந்தாள். ஒரு மாதிரி மற்றவார்களை நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தபோதும் அங்கும் போதிய சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்தியர்கள் இல்லாமையால் ஓரிரு நாட்களில் மேலும் இருவர் இறக்க இறுதியில் இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. எது எப்படியோ நயனாவுக்கு இரண்டு தோழிகள் இல்லாமல் போய்விட்டிருந்தனர். 
'அந்த விபத்து நடந்ததையும் தாண்டி பிறகு ஏற்பட்ட இந்த வீணான மூன்று இறப்புக்களுக்கு யார் காரணம்?, போதிய வைத்தியர்கள் இன்மையா? அப்படியானால் நம் நாட்டில் படித்து பட்டம் பெறும் வைத்தியர்கள் எல்லாம் எங்கு செல்கிறார்கள்? இதற்கு நான் ஏதாவது செய்யலாமா?' இவ்வாறான பல தரப்பட்ட கேள்விகள் நயனாவின் மனதைத் துழைக்க ஆரம்பித்திருந்தன. 

'நான் கணிதத் துறைக்கு பதிலாக உயிரியல் துறையை தெரிவு செய்து படித்து எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆகி என் ஊரிலேயே வேலை செய்தால்.......' என்று அவளின் மனம் சொன்ன பதிலின் தொடக்கவுரைக்கு, '....... எதுவும் ஆகப் போவதில்லை. இலங்கையிலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை ஒன்றால் கூடும். அவ்வளவு தான். ஆனால்.....' என்று அவளது மூளை அபத்தமாக ஒரு முடிவுரையை கூறியது. ஆனாலும் அந்த மூளையின் பதிலின் முடிவில் இருந்த அந்த 'ஆனால்....'இன் இழுப்பில் ஏதோ ஆளமான பொருள் இருப்பது போல நயனாவுக்கு பட்டது. 

தனது எண்ணத்தை பெற்றோர்களிடம் கூறினாள். முதலில் அவர்கள் சற்று தயங்கினாலும் பின்னர் மகளின் எண்ணத்திலுள்ள ஆழமான கருத்தை உணர்ந்து, அவர்களும் பெருமையுடன் சம்மதம் தெரிவித்தனர். இணைந்த கணிதத்தின் சிக்கல்களையெல்லாம் தீர்க்க திட்டமிட்டிருந்த நயனா உயிரியலினுள் மூழ்க தன்னைத் தயார்ப்படுத்தத் தொடங்கினாள்.

விபத்து – 03

2016 மார்கழி மாதம் 06ம் திகதி. இரவு எட்டு மணி.
தொண்டைக்குள் இறங்கியிருந்த ஒண்டரை போத்தல் சாராயம் முத்தையனை வேறொரு உலகத்துக்கு கொண்டுபோய்க் கொண்டிருந்தது. அவன் மிதந்து கொண்டிருந்தான். பறந்து கொண்டிருந்தான். இன்னும் என்னெனவோ எல்லாம் செய்து கொண்டிருந்தான். சிறைக்குள் வீணாகிப்போன ஒன்பது வருட இளமை, அடிக்காத குறையாக துரத்திவிட்ட மகன், திரும்பிக் கூடப் பார்க்காத முதலாளி என்று எல்லாமே அவனது மனதிலிருந்து முற்றாக இல்லாமல் போயிருந்தது. ஆனால் மனைவி சரசு மட்டும் ஆணி அடித்தது போல அவனது மனதில் அப்படியே வீற்றிருந்தாள். 

'சரசுவைப் இப்ப போய்ப் பார்த்தால் என்ன..?' என்ற எண்ணம் தோன்றவே நழுவிய சாரத்தையும் எடுத்துக் கட்டிக் கொண்டு வீதிக்கு வந்தான் முத்தையன். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலுக்கு போக முதல் இருக்கின்ற இரண்டாவது ஒழுங்கையின் மூன்றாவது வீட்டில் தான் சரசு இருப்பதாக யாரோ முதன்நாள் சொன்ன குறிப்பு அந்த வெறியிலும் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. அந்தக் குறிப்புப் படி அவன் நடக்கத் தொடங்கினான். இரண்டு அடி கூட அவன் எடுத்து வைத்திருக்க மாட்டான். மிக வேகமாக வந்த வான் ஒன்று அவனை அப்படியே தூக்கி அருகிலிருந்த கானுக்குள் வீசிவிட்டு மறைந்தது. கானுக்குள் விழுவதற்குள்ளேயே முத்தையன் முற்றாக இறந்து விட்டிருந்தான்.

விபத்து – 04

2016 மார்கழி மாதம் 07ம் திகதி.
மாலை நேரம் கிட்டத்தட்ட மணி ஏழை அண்மித்துக் கொண்டு இருக்கலாம். கையில் கட்டியிருக்கின்ற மணிக்கூட்டில் நேரம் பார்க்கின்ற நிலையில் நான் இல்லை. லேசான தூறலான மழை. காப்பெட் என்று சொல்லக்கூடியளவுக்கு ஏதோ கொஞ்சம் சுமாராகப் போடப்பட்டிருக்கின்ற K.K.S வீதி. கொஞ்சம் ஐதான வாகனங்கள். 150CC மோட்டார் சைக்கிள். முக்கியமாக இரண்டரை மாத தொடர் வேலை அழுத்தங்களுள் இருந்துவிட்டு திடீரென அபூர்வமாக கிடைத்திருக்கின்ற லீவு. சொல்லவா வேண்டும்? மோட்டார்  சைக்கிள் கிட்டத்தட்ட பறந்தது.. வேகக் காட்டிமுள் 100Km/h ஐ அசாட்டாக தாண்டி விட்டிருந்தது. பின்னால் உட்காந்திருந்த நண்பன் மயூரன் காதுக்குள் 'மச்சான் ரோட்டைப் பார்த்து ஓடுடா' என்று என் காதுக்குள் கத்தியும் அது எனது மூளைக்குப் போய் சேரவே இல்லை. 'எடேய் இதைத் தான் சொர்க்கம் எண்டு சொல்லுவாங்க போல' என்று அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் நான் பதில் சொன்னேன். 'ஓமடா இன்னும் கொஞ்சம் பாஸ்டா போனா அங்கே நேரா போகலாம் போலதான் கிடக்கு' என்ற அவனின் பதில் கவுண்டரை இரசிக்கும் நிலையில் நான் இல்லை.

எங்கள் நண்பர் வட்டத்தின் சீனியர் மெம்பர் குமரன் அண்ணா தனது பத்து வருட காதலி யாமினி அக்காவை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காக அவரின் வீட்டை இன்று  அலங்காரம் செய்ய வேண்டும் என்ற பெயரில் ஒரு ஓசி சாப்பாட்டைப் பதம் பார்க்கலாம் என்ற தொலைநோக்கை உடையது தான் எமது இந்த பில்டப்பான மோ.சை பயணம். இன்னும் இரண்டு நிமிடங்களில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில். அதிலிருந்து இரண்டு நிமிட ஓட்டத்தில் குமரன் அண்ணாவின் வீடு. 

'மச்சான் முன்னால பாத்து ஓட்டடா. யாரோ செத்த வீட்டு பனர் ஒண்டைக் கட்டிக் கொண்டு நிக்கிறாங்கள். அவங்களோட போய் மோதப் போறாய்..' என்று மயூரன் சொல்ல, நான் மோட்டார் வண்டியின் வேகத்தைக் குறைத்தவாறு நிமிர்ந்து பனரை பார்த்து அதில் கொட்டை எழுத்துக்களால் எழுதியிருந்த பெயரை வாசிக்கத் தொடங்கினேன். 

'கந்தையா முத்தையன்'.

நான் வாசித்து முடிக்கவும் எனது மோட்டார் சைக்கிள் ஏதோவொன்றோடு போய் மோதவும் சரியாக இருந்தது. 'அட.... பாவி..' என்ற மயூரனின் குரல் ஏதோவொரு ஆழத்தில் கேட்பது போலிருக்க நான் முற்றாக மயங்கிப் போனேன்.

அந்த ஒரு காதல்

நான் மெதுவாக கண்களை திறந்தேன். அதே தேசிய நாற்றம். இது சாட்ஷாத் ஒரு வைத்தியசாலை தான். அப்போது தான் நான் அவளைப் பார்த்தேன். லேசாக இளையராஜா என் மூளைக்குள் ஹார்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். 'அவள் டொக்டர் தான். ஆனால் தொழிலுக்கு புதிது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஒருவேளை இன்ரன்ஷிப் செய்பவளாக இருக்கலாம்.' என் மூளை ராஜாவின் மெலடியின் பின்னணியில் ஆய்வை முடித்திருந்தது.

'என்ன இஞ்சினியர் ஸார். போயும் போயும் ஓரமாய் நிண்ட ஒரு லான்ட் மஸ்ரரோட போய் மோதியா மயங்கி விழுவீங்கள்.' என்று அவள் ஒரு சிரிப்புடன் சொல்லிவிட்டு நகர தூரத்தில் நக்கல் சிரிப்பொன்றுடன் நின்று கொண்டிருந்தான் மயூரன். 'பாவி. இவன் தான் என்னை பற்றி அவளிட்ட வித்திருக்கிறான்.' இப்போ ரஹ்மானின் ரேண்.

'என்னடி நயனா... என்னவாம் உன்ட லான்ட் மாஸ்ரர் காரன்?' என்று யாரோ அவளைச் சீண்டுவது எனக்குக் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அவள் அதற்கு இயல்புக்கு மாறாக ஏதோவொன்று பட்டவாறு 'போங்கடி...' என்று சொல்லி புன்னகைத்தவாறு என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் என்ன பட்டாளோ எனக்கு தெரியாது. ஆனால் அதை வெட்கம் என்று என் மூளை எனக்கு மொழிபெயர்த்தது. இப்போது பெயர் தெரியாத மயூசிக் டைரக்ரர்ஸ் எல்லாம் புகுந்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள்.
அப்படியானால் எனக்கும் காதல் வந்து விட்டதா....? 

அடை மழை
ஒரு குடை
நான்-அவள். 
அட.... அதற்கிடையில் கவிதையெல்லாம் வர தொடங்கிவிட்டது. அப்போ உண்மையில் இது காதல் தான் போல. எனவே இனி என் முழு நேர டியூட்டி இந்த வைத்தியசாலையில் தான். நயனா.... இதோ வந்துகொண்டே இருக்கிறேன்.

..........

பி.கு: 2005ல் முத்தையனின் கன்ரருக்கு பயந்து யாமினி வீதி ஓரத்துக்கு ஒதுங்கும் போது தான் குமரனோடு விபத்து ஏற்பட்டது என்பதும், 2007ல் நயனாவின் கண்ணெதிரில் நடந்த விபத்தில் அந்த கன்ரரை ஓட்டி வந்ததும் அதே முத்தையன் தான் என்பதும் அதனால்தான் அவன் ஒன்பது வருடம் சிறைக்குச் சென்றான் என்பதும் இப்பொது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கின்ற உண்மைகள்.
Views: 1217