சுதாவும் நானும்

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.comBanner

01.

எழுத்துப் பிழைகளிலான உலகினை
சுதா உருட்டிக் கொண்டிருந்தாள்
அவள் உருட்டும் அழகிலோ
அல்லது
அவளின் சிறுபிள்ளை தனத்திலோ
இன்னும் இன்னும் உள்ள உணர்வு உடைத்தலிலோ
இவ்வாறு
ஏதோ ஒன்றில்
நான் தொலைந்து
அவள் உலகில் உருண்டு கொண்டிருந்தேன்

அவள் பொம்மைகள் செய்தாள்
பொம்மைக்கு சுதா அறிமுகம்
                                     அழகு
                                     அதிசயம்
                                     ஆச்சரியம்
பொம்மை சிரித்தது அவள் சிரித்தாள்
அவள் அழுத போது பொம்மைகளை அழும் படி 
கேட்டுக் கொண்டாள்
இப்படி உலகினை உருட்டிக் கொண்டிருந்தாள்

மீண்டும்
அவள் பொம்மைகள் செய்தாள்
மொம்மைகளோடு ஒன்றித்து போனாள்
சிரித்த பொம்மைகள் அழ தொடங்கின

இப்போது
அவளின் உலகத்தை நான் உருட்டிக் கொண்டிருக்கிறேன்
என் பிழைகளுடன்

02.

நான் அத்தியிலை போல் அவளைக் கொண்டாடிக் கொண்டத்தொடங்கி விட்டேன்
சரியும் பிழையும் சரிசமமானது

என் வாசல் வரைக்கும் வளர்ந்திருந்தவள்
இன்று 
தெரு , தேசம் என பரிணாமம் கொண்டாள்
எல்லா பிலாக்கணத்தின் பெறுமதி
அவள் குப்பை தொட்டிகள் மட்டுமே அறிந்திக்க....
சேடம் இழுக்கும் ஆன்மாவுக்கள் பற்றி
அவள் அக்கறை கொள்வதேயில்லை

அனைத்து  ஆன்மா மொழியும்
புலம்பி புழுங்கி இறுதியாய்
அழுகிக் கொண்டிருக்கையில்
மிகச் சாதாரணமாய்
மூக்கை பொத்தியடி நகர்ந்து விடுவாள்

03.

சபிக்கப்படாத தருணம் ஒன்று எனக்காய் இருந்தது
அன்றும் அவள் இருந்தாள்
பேரூந்து - களம்
பக்கத்து இருக்கை......!
பல முறை பார்த்துக் கொண்டோம்
ஏதும் பேசாது, பேசாத பலவற்றைப் பேசிக்கொண்டிருந்தாள்
வழமை போல் அவளைக் கொண்டாட முடியவில்லை
  • முன்பு போல அல்ல அவள்
எழுத்துப் பிழைகள் அற்ற உலகில் வசிக்கத் தொடங்கி விட்டாள்
புலம்பிக் கொள்ள முடியாது புழுங்கிக் கொண்டிருந்தேன்

அவளின் எந்த பற்றுதலிலும் மனம் லயிக்கவில்லை

ஏதாவது ஒரு தரிப்பிடத்தில் இறங்கிக் கொள் 
என்றது மனம்
முடியவில்லை

மேலும் ஏதேதோ நினைவுகளை எல்லாம்
அள்ளி சுருட்டிய படி ......
எனது தரிப்பிடம் தாண்டி போய்க் கொண்டிருக்கிறேன்
பேரூந்து தான் களம்
பக்கத்து இருக்கை இருக்கவே இல்லை

04.

நிழல்களில்  நிஜங்களை அனுப்பியிருந்த பொழுதுகளில்
உணர்வுகள் உதிர தொடங்கிவிட்டன.
இறந்த காலங்கள் அவளுக்குரியவை
உரியவற்றை எடுக்க தொடங்கி விட்டாள்.
இனி எந்த முகத்தை நான் அணிவது?

முகங்களை நெய்வதில் தீவிரமடைகிறேன்
இறந்த காலங்களால் 
என்னை கட்டி போடுகிறாள்

ஏதோ ஒரு இசையில்.......!
யாருமற்ற தெருவோரத்தில்..........!
தூசி படிந்த விசிறிகளில்..........!
இப்படி 
எங்காவது என்னை தொலைக்க தொடங்க வேண்டும்.
ஆனால் எப்பாதும் என்
இறந்த காலங்கள் அவளுக்குரியவை
உரியவற்றை எடுக்க தொடங்குவாள்.
இனி முகம்.......?

Views: 290