இழப்பின் கலை (Art Of Loss) “Translation is the Art Of Failure”

எழுத்தாளர் : கௌதமி - யோமின்னஞ்சல் முகவரி: ygowmi123@gmail.comBanner

இழப்பின் வழியேதான் இந்த உலகம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது. எந்தவொரு மொழியின் படைப்பும் மக்களுக்கு சென்று சேர்கையில் அது முழுமையாக படைப்பாளியின் அர்த்தவியலோடு எடுத்துச் செல்லப் படுவதில்லை. மொழி என்பது வெறுமனவே தொடர்பாடல ஊடகமாக மட்டுமே இருந்திருந்தால் கலை என்ற ஒன்றை  பெயர்த்தெடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் மொழி என்பது பண்பாடு, கலாச்சாரக் கூறுகள், இனக்குழுக்களின் தனித்த இயல்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒன்றாகத் திகழ்வதானால் மொழிபெயர்ப்பு (Translation) போன்ற கலைகளின் தேவைப்பாடு அவசியமாக இருக்கின்றது. இலக்கிய மொழிபெயர்ப்பில் கவிதை மொழிபெயர்ப்பென்பது இழப்பின் வழியே புத்தாக்கம் பெறும் ஒரு செயன்முறை.

ஒரு பிரதியானது அதனுடைய எழுத்தாளரை விட அறிவார்ந்தது. சிலவேளைகளில் அந்தப் பிரதியானது அதை எழுதியவரின் மனதில் உதிக்காத விடயத்தைக் கூட பரிந்துரைக்கலாம்.  ஒரு மொழிபெயர்ப்பாளர் அதை இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கும்போது அந்தப் புது எண்ணங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்தலாம்” (உம்பேர்த்தோ எக்கோ)

மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பரப்புவது என்ற தவறான கண்ணோட்டத்திலும் பார்க்கப்படுகின்றது. இலக்கியமும் கலையும் மக்களின் வாழ்க்கை முறைமையிலிருந்தே தோற்றம் பெறுகின்றன. இலக்கியத்தின் மிக வலிமையான , மிக அழகான பகுதியான கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்த்தெடுத்தல் என்பது இலகுவாக நடந்துவிடக் கூடிய ஒன்றல்ல. கவிதையை மொழிபெயர்த்தல் என்பது ஒரு படைப்பாளியின்  உணர்ச்சிகளை, ஆத்மாவை, படைப்பு மொழியின் நுண்மையான கூறுகளை, கலாச்சார அம்சங்களை , எல்லாவற்றிற்கும் மேல் அதே போன்றதொரு கவிதையை நகலெடுக்கவும் செயன்முறை அது.

மொழிபெயர்ப்பு அல்லது மொழிமாற்றம் என்னும் பதமே ஒரு நெகிழ்வற்ற இயந்திரத்தனமான சொல்லாக உள்ளது. உண்மையில் எழுதுவதென்பதே மொழிபெயர்க்கும் செயற்பாடுதான். இங்கு சிந்தனை மொழியை எழுத்து மொழிக்கு பெயர்த்தெடுக்கின்றோம். ஆனால் கவிதையை மொழிபெயர்க்கும்போது மட்டும் அங்கு ஏதோ ஒன்று இழக்கப்படுகறது. ஆனால் அந்த இழப்பிற்குப் பின்பு கிடைக்கின்ற படைப்பு மொழியாக்கமாக (Transcreation) வாசகனை வந்தடைகின்றது.  அதையே சவோரி தனது மொழியில்

”Poerty Takes the form of Transcreation in Translation” (Savory)

என்று கூறியிருக்கக் காணலாம்.

முன்பொரு காலத்தில் நவீன கவிதை என்பதே மொழிக்கு இழைக்கப்படும் துரோகச் செயலாகக் கருதப்பட்டது. அது போலவே ”மொழிபெயர்ப்பாளன் ஒரு துரோகி” என்கின்ற கருத்தும் 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு பரவலாக நிலவி வந்தது. அதன் பின் தமிழ்ச் சூழலில் எழுந்த பின் நவீனத்துவக் கூறுகள், உரையாடல்கள் என்பன மொழிபெயர்ப்பிற்கான சாதகமான சூழலை உருவாக்கின.

நாம் இன்று படிக்கின்ற இராமாயணம் , மஹாபாரதம் தொடக்கம் இலியட் , ஒடிசி வரை அனைத்துமே மொழிபெயர்ப்புக்கள்தான். இருப்பினும் அதன் பின்னே உள்ள மொழிபெயர்ப்பாளர்கள்  கண்டுகொள்ளப்படாத நிலமையே  இன்னும் நீடிக்கின்றது. கவிதை மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை அது எப்போதும் இழப்பிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது.

மொழிபெயர்க்கப்பட முடியாமல் இருப்பது கவிதைகளின் உயர்நிலையான பண்புகளில் ஒன்று என்பதாக  இலூசன் அன்ட் றியாலிட்டி என்னும் விமர்சன நூலொன்று கூறும். அந்த நூலின் ஆசிரியர் கிறிஸ்தோவர் கோல்ட்டுவெல். மிகவும் பிரதானமான ஓர் உண்மையை ஓரளவு மிகைப்பட அழுத்தங்களுடன் இவ்வாறு சொல்லியிருக்கிறார். கவிதைகள் மொழிபெயர்க்கப்படாமல் இல்லை. மெய்தான் ஆனால் மூலக் கவிதை தந்த அனுபவத்தை எந்தவொரு தலைசிறந்த மொழிபெயர்ப்புத்தானும்  , சற்றேனும் திரிபில்லாமல்  , நூற்றக்கு நூறு ”சரி செப்பமாகத் தந்துவிடுவதில்லை. இதற்கு ஏதுக்கள் பல.

(இ.முருகையன், மொழிபெயர்ப்பு நுட்பம், பக்.122)

ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதென்பது இலகுவான செயல் அன்று. சொல்லப் போனால் மூலக் கவிதை எழுதுவதைக் காட்டிலும் கடினமான வேலை எனலாம். மூலக் கவிதையில் உள்ள அதே உயிர்ப்பை இலக்குக் கவிதையில் கொண்டு வருவதற்கு இன்னொரு கவிஞனாலேயே முடியும். கவிதையை மொழிபெயர்ப்பவன் வெறுமனவே மொழிபெயர்ப்பாளன் என்பதில் மட்டும் நின்றுவிடாது கவிதையிலும் வல்லமை பெற்றிருந்தாலே அந்த மொழிபெயர்ப்பு செவ்வனவே அமையும்.  மொழிபெயர்ப்புத்தொடர்பான அனைத்துக் கோட்பாடுகள் கொள்கைகள் விதிமுறைகள் நடைமுறைகள் போன்றவற்றை ஒரே கட்டுரையில் உள்ளடக்கி விட முடியாது. 

ஒரு கவிஞனின் உணர்ச்சி (sense) போக்குநிலை , ஆகியவை மாறாமல் மொழிபெயர்க்கும்போது அவற்றை எவ்வலளவு தூரம் முடியுமோ அவ்வளவு ஆழமாக வெளிப்படுத்த முடியுமே தவிர அக்கவிதையை மொத்தமாகப் பிரதிபலிப்பது என்பது கடினம்தான்.

சாதாரணமாக மொழிபெயர்ப்பில் 4 வகை உண்டு.

§  சொல்லுக்குச் சொல்  மொழிபெயர்த்தல் (word to word Translation)

§  நேரடி  மொழிபெயர்ப்பு (Direct Translation)

§  சுதந்திரமான மொழிபெயர்ப்பு (Free Translation)

§  மொழியாக்கம் (Transcreation

முகப்புத்தகத்தில் பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் ரூமியினுடைய கவிதை ஒன்றினுடைய இரு மொழிபெயர்ப்புக்களை  படித்தேன். அவற்றை உதாரணமாகக் கொண்டு கவிதை மொழிபெயர்ப்புப் பற்றிய சில விடயங்களை இங்கு பார்க்கலாம்.

ஜலாலுத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  இஸ்லாமியக் கவிஞர். தமது உண்மைக் காதலனாகிய இறைவனைப் பிரிந்திருத்தலால் வரும் துயரும், இறைவனென்னும் காதலனோடு மீண்டும் கலக்க வேண்டிக்கொள்ளும் ஏக்கமும் பிரிவாற்றாமையும் ரூமியின் கவிதைகளில் இழையோடி இருக்கின்றன. அமெரிக்கக் கவிஞரும் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான கோல்மன் பார்க்ஸ் 1970 களிலிருந்தே ரூமியின் எண்ணற்ற படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தத் தமிழாக்கம் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு களைத் தழுவி செய்யப்பட்டிருக்கிறது. (நன்றி-காலச்சுவடு). இத்துணை புகழ் வாய்ந்த கவிஞனுடைய ஆங்கில மூலக் கவிதை இதுவே

”Lift your veil so I may see your face

Part the clouds so I may see the moon

Scatter your hair, so I may sense your fragrance

Part your lips so I may kiss your breath...

I want that Love that moved the mountains.

I want that Love that split the oceans.

I want that Love that made the winds tremble.

I want that Love that roared like thunder.

I want that Love that will raise the dead.

I want that Love that lifts us to ecstasy.

I want that Love that is the silence

of Eternity...!”

~~ ரூமி

இதனை உமையாழ் என்பவர் பின்வருமாறு மொழிபெயர்த்திருந்தார்

உன் திரையை விலக்கு; ஆதலால் நான் உன் முகம் காண முடியுமாயிருக்கும்

அந்த மேகங்கள் விலக்கு; ஆதலால் நான் அந்த நிலவை காண முடியுமாயிருக்கும்

உன் கூந்தலை கலைத்து போடு; ஆதலால் அதன் வாசனையை நான் நுகர முடியுமாயிருக்கும்.

உன் இதல்களை பிரித்துக்கொடு; ஆதலால் நான் உன் சுவாசங்களை முத்தமிட முடியுமாயிருக்கும்.

அந்த மலைகளை அசைத்துப் போட்ட அந்தக் காதல் வேண்டும்

இந்த சமுத்திரங்களை பிரித்து போட்ட அந்தக் காதல் வேண்டும்

அந்த காற்றை நடுங்கவைத்த அந்தக் காதல் வேண்டும்

இந்த இடியைப்போல கர்ஜித்த அந்தக் காதல் வேண்டும்

இறந்தவனையும் எழுப்பவைக்கும் அந்த காதல் வேண்டும்

எங்களை மகிழ்ச்சின் உச்சத்தில் உறைய வைக்கும் அந்தக் காதல் வேண்டும்

முடிவுறா மௌனத்தின் அந்தக் காதலும் வேண்டும்.

 

அடுத்து றிழா மர்சூக் என்பவர் பின்வருமாறு மொழிபெயர்த்திருந்தார்

முகம் காண

முகத்திரை விலக்கி விடு - அந்த

நிலவைக் காண

மேகங்களை ஒதுக்கி விடு.

உனை நுகர்ந்திட

கூந்தலைக் கலைத்து விடு - உன்

சுவாசத்தை முத்தமிட

இதழ்களைப் பிரித்து விடு.

வேண்டும் - அந்தக் காதல் வேண்டும்,

மலைகளை நகர்த்திய,

கடல்களைப் பிளந்திட்ட,

காற்றை நடுங்கவைத்த,

இடியாய் முழங்கிட்ட,

இறந்தவனையே உயிர்ப்பித்த,

மகிழ்ச்சியின் உச்சத்திற்கு எமை உயர்த்திட,

முடிவுறா மௌனத்தின் அந்தக்

காதல் வேண்டும்.!!!

- ரூமி, தமிழில் றிழா மர்சூக்

மேற்குறிப்பிட்ட இரண்டு மொழிபெயர்ப்புக்களிலும் வடிவம், சொற்கட்டமைப்பு, கவித்துவம் ஆகிய விடயங்களில் பெரும் வேறுபாடு இருப்பதைக் காணலாம்.

இங்கு உமையாழின் மொழிபெயர்ப்பில் அவர் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும் முறையினை அதனுடைய கருத்தோடு இயைந்து மொழிபெயர்க்க முயன்றிருக்கின்றார்  எனலாம்.  உண்மையில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும் முறையானது மூல மொழியினுடைய கருத்துக் கட்டமைப்பை தகர்க்கும் ஒரு விடயமாகும். ஆவண மொழிபெயர்ப்புக்களில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கின்ற முறை சில இடங்களில் அவசியமாகின்றது. ஆனால் இலக்கிய மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் முடிந்த அளவு அதைத் திருத்தமாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் அது மூலத்தின் சொல் வளத்தைக் கொடுத்துவிட்டு கருத்தைக் கொடுக்கத் தவறிவிடும்.

அடுத்து றிழா மர்சூக் தன்னுடைய மொழிபெயர்ப்பில் ஒரு சுதந்திரத் தன்மையுடன் கூடிய நேர் மொழிபெயர்ப்பு நிலையைக் காணலாம். அவர்   கருத்துக் கட்டமைப்பையும் அந்தக் கவிதையினுடைய ஜீவனையும்  தன் கவிதைக்கு மிக நெருக்கமானதாக்கி மொழிபெயர்த்துள்ளார். இவருடைய கவிதையில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருப்பதை அவதானிக்கலாம்.

வாசகர்கள் பரந்துபட்டவர்கள். மொழிபெயர்ப்பில் இலக்கு வாசகனைக் கருத்தில் கொள்வதுவும் அவசியம். இந்த கவிதையைக் காதல் உணர்ச்சியோடு நெருங்கும்போது

Part your lips so I may kiss your breath... என்னும் வரிகளுக்கான மொழிபெயர்ப்பில்  

"உன் இதழ்களை  பிரித்துக்கொடு; ஆதலால் நான் உன் சுவாசங்களை முத்தமிட முடியுமாயிருக்கும்"  என்னும் வரிகளில் தோன்றும் அந்த  உணர்ச்சிக்கும்

"உன் சுவாசத்தை முத்தமிட

இதழ்களைப் பிரித்து விடு."

என்னும் வரிகளில் தோன்றும் உணர்ச்சிக்கும் ஒரு மெல்லிய வேற்றுமையை அவதானிக்கலாம். உமையாழ் கோரிக்கையுடன் பெயர்த்திருப்பதை   றிழா மர்சூக் கட்டளைத் தொனி கலந்த  காதலுடன்  பெயர்த்திருக்கக் காணலாம்.

உமையாழ், ரிழா ஆகியோரின் மொழிபெயர்ப்புக்களை  ஒட்டிய ஒரு மறுபடைப்பாக்கத்தையோ (Transcreation)  அல்லது ரூமியின் கருத்துக்களை எடுத்து எம் மொழியில் அதே போன்ற கவிதைகளையோ யாரும் உருவாக்கலாம். மறுபடைப்புக்கு தமிழ்ப்பரப்பில் ஆதி தொட்டே இடமுண்டு.  இந்த மொழிபெயர்ப்பில் இவருடைய கவிதை வடிவத்திலும் பெரும் மாறுபாடு உண்டு. ரிழாவின் மொழிபெயர்ப்பில் சொற்கட்டுமானம் என்பது கருத்தோடு இயைந்து அளவாகப் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் உமையாழின் மொழிபெயர்ப்பில்  கவிதையின் வடிவம் அகலிக்க சொற்களின் மிகைப்பாடு காரணம் ஆகின்றது. அத்தோடு இவருடைய மொழிப் பிரயோகப் போக்கிலும் மாறுபாடு உண்டு. உமையாழ் மூலக் கவிதையின் ஆங்கிலப் பெயர்ப்பின் போக்கிலேயே தன்னுடைய மொழிநடையையும் அமைத்துள்ளார். ஆனால் ரிழா அதை முற்றிலுமாக மாற்றியமைத்து  வரிகளின் போக்கை  இலக்கு மொழிக்கேற்றாற்போல் பெயர்த்துள்ளமையையும் அவதானிக்கலாம்.

உண்மையில் இரு மொழிபெயர்ப்புக்களுமே  மூலக் கவிதைக்கு கிட்டச் சென்றிருக்கின்றன. ஆனாலும்

"ஒரு மரத்தின் கிளையைப் பதியம் போட்டு மற்றொரு மரத்தை உண்டாக்கும்போது புதிய மரம் முதல் மரத்தின் இயல்பைப் பெற்றிருக்குமேயன்றி அதுவே முதல் மரமாகி விடாது. அதை போலவேதான் மொழிபெயர்ப்பும்.

எனவே ‘Nothing Original’.. உண்மையில் எந்த எழுத்து வடிவங்களும் மூலம் இல்லை. அவற்றிற்கான மூலம் என்பது சிந்தனையே. சிந்தனையை பிரதி செய்கின்றபோது படைப்புக்கள் பிறக்கி்ன்றன. அந்தப் படைப்புக்கள் இன்னொரு சூழலில் உயிர்வாழ மொழிபெயர்ப்பு உதவுகின்றது.  அந்தவகையில் கவிதை மொழிபெயர்ப்பு என்பதை மூலத்தின் கருப்பொருளிலிருந்து மாற்றமுறாமல் மூலத்தின் ஜீவனை உயிர்ப்புடன் பெயர்க்கும்போதே கவிதை ஓரளவுக்கேனும் கவிதையாக  உருப்பெறுகின்றது. உமையாழ், ரிழா இவருடைய மொழிபெயர்ப்புக்கலுமே ஒரு கருப்பொருளை இரண்டு விதமான மொழிநடையில் இரு வேறுவிதமான  போக்கமைவில் வேறுபட்ட  கட்டமைப்பில் உரைப்பதாக  அமைந்துள்ளன. ஒரு மொழிபெயர்ப்பிலேயே மொழிபெயர்ப்பாளன் திருப்திப்பட்டுவிடமாட்டான். அவன் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருப்பான். மொழிபெயர்ப்புத்தொடர்பான ஒப்பீட்டு ஆய்வுகள்  அவற்றினுடைய செழுமையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் .  ஆக மொத்தத்தில் மொழிபெயர்ப்பில் கருத்தியலைக் கடந்து அனுபவ ரீதியிலான துறைசார்ந்தவர்களின் ஒப்பியல் அணுகுமுறை அவசியம். அது எம் இலக்கியத்தளத்தை மேலும் விரிவடையச் செய்யும்.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் தரும் அனுபவங்கள் வித்தியாசமானவை.  அண்மையில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் மொழியெர்ப்புத் தொர்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  அந்த நிகழ்வில் தமிழ், சிங்கள, ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய பகிர்வுகள் பகிரப்பட்டன. இவ்வாறான நிகழ்வகள் மிக அரிதாகவே நம் இடங்களில் இடம்பெறுகின்றன. அது ஒரு புறம் இருக்க இந்த நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்களான அகிலன், சித்தாந்தன், கிரிசாந் ஆகியோரினுடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டன. அதில் கிரிசாந்தினுடைய என் தந்தையின் வீடு கவிதை

”என் மகனே

வீடென்பது பேறு”

என்பதாக முடியும். அதை றமணன் ஆங்கிலத்தில்

”My Son

Home is a boon”

என்பதாக மொழியாக்கம் செய்துள்ளார்.  ”வீடென்பது பேறு” என்கின்ற கிரிசாந்தினுடைய மூலமொழிக் கவிதைக்கு  மொழியாக்கம் மிக தொலைவாகவே அமைந்திருக்கின்றது. ”வீடென்பது பேறு” என்கின்ற அந்த வரிகள் தருகின்ற போதனை, முக்தி, அறிவுரை, இதம் எதையும் மொழிபெயர்ப்பால் வழங்கமுடியாதிருப்பதுதான் அந்தக் கவிதையின் உன்னத நிலை.

மொழிபெயர்ப்பு என்பது இயல்பான படைப்பு போலவே இருக்க வேண்டும் என்பது ஒரு கோட்பாடு. மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புப் போலவே இருக்கவேண்டும் என்பது இன்னொரு கோட்பாடு. காலம் காலமாக மொழிபெயர்ப்பில் இவ்விரு கோட்பாடுகளுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாகவே இருக்கும்போது அது இயந்திரத்தனமானதாக அமைந்துவிடுமோ என்னும் அச்சமும் மேலோங்குகின்றது. ஏனெனில் பல்வேறுபட்ட மொழிபெயர்ப்புக்கள் நிகழ்ந்தாலும் வாசகர்களுக்கு விளங்கக்கூடிய வகையில் இயல்பான படைப்பாக அமையும்போதே அது  படைக்கப்பட்டதன் பலனை அடைகின்றது.

தமிழில் இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக்களே. கம்பருடைய ராமாயணமானது வான்மீகியின் மூலத்தை ஒட்டிச் செல்கின்றது . அவர் பெரும்பான்மையான இடங்களில் சுருக்குதல் (summarization), விரிவாக்குதல்(Elaboration), விளங்கப்படுத்தல்(Exposition), மாற்றுதல்(Alteration), நீக்குதல்(Deletion), சேர்த்தல்(Addition)  போன்ற முறைகளைக் கையாண்டு உள்ளதால் அதை மறுபடைப்பு என்றே கூற வேண்டும். மறுபடைப்பு என்பது ஒரு தனித்தன்மையான கலை.

“The rigidity and canonisation of the rules of versification will stand on the way of Literature”

அதாவது இலக்கியத்தை இலக்கியம் என்று நிர்ணயிக்கின்ற மீற முடியாத கூறுகளும் அவற்றின் ஒன்றிப்பும் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வகையானவை. மொழிபெயர்ப்பில் இந்தக் கருத்தியல் பல்வேறு வகையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திரைப்படத் திருவிழாவில் ”சிவபுராணம்” என்கின்ற படம் திரையிடப்பட்டது. அதன் முடிவில் அந்தத் திரைப்பட இயக்குனர் அந்தப் படம் பிரம்மிளின் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை அடிநாதமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றுரைத்தார். அந்தக் கவிதையைத் தேடிப் பயணப்பட்டபோது பிரமிளின் பல கவிதைகளிலும் படைப்பு மொழி என்பது மொழியாக்கத்தின் சாயலுடன் இருப்பதை உணர முடிந்தது. சார்லஸ் போதலேரின் கவிதையொன்றை பிரமிள் மொழியாக்கம் செய்திருக்கும் ரகமே தனி.

ஆடும் பாம்பு (சூரியன் தகித்த நிறம்)

கட்டுக்கடங்காத கண்மணியேஉன் வடிவுடலில் என் பார்வையின் ஆர்வத்தைத் தூண்டும் உன்பீதாம்பரத்தோல்கசப்புகள் கமழ மணந்து அலையும் உன் கூந்தலின் ஆழங்காணாத சமுத்ரத்தில் மண்வண்ணமும் நீலமுமாய் மாறிமாறி எழும் அலைகள் மேல் வைகறைக் காற்றெழ விழித்தெழுந்த கப்பலாய்ஒரு தூரத்து ஸ்வர்க்கம் நோக்கி பாய்விரித்தேகும் கனவுதோய்ந்த என்னுயிர்.

உன் கண்கள் கசப்போ இனிப்போ தோன்றாத இரண்டு குளிரேறிய இரத்தங்கள்அவற்றுள் பொன் உருகிஉருகிய எஃகுடன் கலக்கிறது.

அழகு ததும்பும் அலட்சியங்களோடு கவிதையின் தாளகதியில் செல்லும் நின் நடைஇது பற்றி ஒன்றுசொல்லலாமாகொம்பு நுனி ஒன்றில் நின்றாடும் பாம்பு நீ!

உன் இளம் சலிப்பின் பளுவில் குழந்தைமை ததும்பும் உன் தலை குட்டியானைத் தலையாய் மெல்லெனஆடஉன்னுடல் கடைந்தெடுத்து நீண்டு கடலின் உவர்நீரில் துடுப்புகள் புதைத்து நழுவும் கப்பலாய் இருபுறம்சரிந்து சரிந்தாடுகிறது.

கர்ஜித்துப் பனிப்பாறைகளாய் நகரும் நதிகள் நீர்வீங்கிய ஓடைகளாய் உமிழ்நீர் ஊறிஉன் பற்களில்விளிம்பு கட்டும்போதுகூர்மை கொண்டு எனை மீறும் நாடோடித் திராட்சை மது ஒன்றைஎன் இதயத்தில்நட்சத்திரங்களைக் தெளிக்கும் ஒரு திராவகவெளியை ருசிக்கிறேன்.

 

 இந்தக் கவிதையை உரைநடைக் கவிதையிலேயே வழங்குவதுதான் சிறந்தது. இங்கு சார்லஸ் போதலேருக்கும் வாசகருக்குமிடையே அழகிய பாலமாக பிரமிள் திகழ்கிற்றார். மூலப் படைப்பிற்கும் , சொல்லாட்சிக்கும் மேம்பட்ட நிலையில் நின்று நெகிழ்வான உணர்வை அளிக்கவேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாகும்.

"ஒரு மரத்தின் கிளையைப் பதியம் போட்டு மற்றொரு மரத்தை உண்டாக்கும்போது புதிய மரம் முதல் மரத்தின் இயல்பைப் பெற்றிருக்குமேயன்றி அதுவே முதல் மரமாகி விடாது. அதை போலவேதான் மொழிபெயர்ப்பும்.  (Pasternak)

கவிதை மொழிபெயர்ப்பும் அவ்வாறே. சிலவேளைகளில் மூலப் படைப்பை விட வீரியமாகவும் சில வேளைகளில் மூலப் படைப்பையே திசை திருப்பக் கூடிய மறு ஆக்கமாகவும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் அமைந்து விடுகின்றன. எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு எதைக் கொணர்ந்தாலும் அடிப்படையாகக் கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதை விட எந்த மொழிக்கு அதைப் புரிய வைக்கப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

கவிதை போன்ற கட்டிறுக்கமான இலக்கிய அரசியற்செயற்பாட்டை மீண்டும் மீண்டும்  வெவ்வேறு பண்பாடுகளில்  புத்துயிர்ப்பளிப்பெதென்பது  சவாலான செயற்பாடு. அது கத்தி மேல் நடக்கின்ற கலை. கொஞ்சம் தவறினாலும் கொலையாகிவிடும். எல்லாக் கவிதை மொழிபெயர்ப்புச் செயற்பாட்டிலும் மூலத்தின் (source Language) கூறு ஒன்று இழக்கப்பட்டுவிடுகின்றது. நுட்பமான மொழிபெயர்ப்பாளர் இழத்தலின் வழியே படைப்பிற்கு புத்துயிர் அளித்துவிடுவார்.  படிமம் கடந்து வாழ்க்கையைப் புரட்டிப் போடவல்ல சொல் மீண்டும் மீண்டும் கவிதையை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும். சொல்லில் வல்லமை உள்ள மொழிபெயர்ப்பாளன் இழப்பின் கலையை மிக லாவகமாகக் கையாளவல்லவன்.  கலைகள் பற்றிய உரையாடல்களிலெலாம் மொழிபெயர்ப்பு புறந்தள்ளிப்போய் நிற்கின்ற நிலையில் அது பற்றிய ஏதேனுமொரு உரையாடலிற்கான கதவை  இந்தக் கட்டுரை  திறந்து வைத்தாலும் மகிழ்வே.

***உசாத்துணைகள்

§  மு. வளர்மதி. (1987). மொழிபெயர்ப்புக் கலை. சென்னை: திருமகள் நிலையம்.

§  பிரமிள், சூரியன் தகித்த நிறம், நற்றிணை பதிப்பகம்

§  Lawrence Venuti, The Translation Studies Reader 2nd Edition

§  John Biguenet (Editor), Rainer Schulte (Editor), Theories of Translation: An Anthology of Essays from Dryden to Derrida 1st Edition

 

Views: 368