தென்னவன்துறை - தேவந்துறை

எழுத்தாளர் : துவாரகன்மின்னஞ்சல் முகவரி: Thuvvva@gmail.comBanner

தென்னிலங்கையில் தமிழ்ப்பண்பாடு நிலவியதா? அதற்கு ஆதாரங்கள் உண்டா?

இதற்கு விடை காண முயற்சிக்கின்ற இக்கட்டுரையில் ஆரம்பத்தில் ஒரு சம்பவத்தோடு தொடங்குவது எங்கள் பண்பாடு சார் தொன்மங்களின் மீது நாங்கள் ஏன் அக்கறை வைக்க வேண்டும் என்பதற்கு காரணங்கூறுவதாக இருக்கும்.

இலங்கையிலே இதுவரை  வாசித்தறியப்பட்டவைகளில் ஒரு பழைமையான எழுத்துப்படிமம் தென்னிலங்கையின் திஸ்ஸமகாராமவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கருஞ்சிவப்பு சுட்ட ஓட்டில் இருந்திருக்கிறது . தமிழ்பிராமி எழுத்துக்களினைக்கொண்ட அந்த ஓடு கிறித்துவுக்கு முன் 2ம்  நூற்றாண்டுக்குரியது என்று ஜேர்மன் ஆய்வாளர்கள் காலங்குறித்த பிறகு அவ்வெழுத்துக்களை "திரளிமுறி" என்று வாசித்தறிந்தார்கள் எங்களூர் தொல்லியலாளர்கள்.  இதற்கான அர்த்தத்தைச் சொல்ல முனைந்த ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதியிருக்கிற திரளிமுறி என்பது உடன்படிக்கையொன்றின் எழுத்துவடிவமாக இருக்க வேண்டும் என்றார். 

ஆனால் அகழ்வாராய்ச்சியில் உறுதிப்படுத்த ஆதாரங்களின் மூலம் பலாங்கொடை மனிதன், பெல்லன்பதிபலஸ்ஸ மனிதன் என்று இலங்கையின் மானுடவியலுக்கான வயதுகள் அறுபதாயிரம் ஆண்டுகள் என்று நிறுவப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், அந்த மிகப்பழைய பலாங்கொட போன்ற பண்பாடுகளிற்கு உரிமையான இனக்குழுவாக காட்டுகின்ற அளவுக்கு அகழ்வுகளில் பண்பாட்டு ஆதாரங்கள் வெளிப்படாதபோதிலும் திஸ்ஸமகாராம ஓட்டுப்படிம்ம் இலங்கையின் தொன்மையான பண்பாடு தமிழர்களிற்குரியது என்ற வகையில் கருத்துக்களை உருவாக்க ஆரம்பித்தது.

ஆனால் இப்போது அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு தேசிய நூதனசாலை வரை சல்லடை போட்டு தேடியும் அந்த ஓட்டுப்படிமத்தை காண முடியவில்லை. அது காணாமல் போகச்செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகமே பரவலாக நிலவுகின்றது. நாங்கள் வரலாற்றில் அறிந்து கொண்ட பாடத்தின் படி பொம்பரிப்பு இடுகாட்டு ஆய்வுகள் தமிழர் தொன்மையை பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என பறைசாற்றியபோது பொம்பரிப்பு உள்ளடங்குகின்ற வில்பத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்ததோடு சாத்தியமில்லாது போகச்செய்யப்பட்டன என்பதையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்.

தென்னிலங்கையின் மேற்குக்கரையிலுள்ள சில பிரதான நகரங்களின் இடப்பெயர்களின் விளக்கங்களை மேலோட்டமாக பார்த்துக்கொண்டு பின்பு விரிவாக விடயத்திற்குள்ளே செல்லலாம். கொழும்பில் இருந்து கதிர்காமம் வரைக்கும் ஒரு வளைகோட்டை கரையோரமாக வரைந்தால் சந்திக்க நேருகின்ற பிரதானமான ஊர்ப்பெயர்கள்  பாணன்துறை , கல்லுத்துறை மாத்துறை , தேவன்துறை என்று அழகுத்தமிழில் நீள்கின்றன. பெயர்களை நன்றாக கவனிக்கவும்.

இங்கே சொல்லப்படும் கல்லுத்துறை என்பது இப்போது உள்ள பெயரல்ல. களுத்துறையைத்தான் அப்படிச்சொல்ல வேண்டியிருக்கின்றது.  ஏனென்றால் கறுப்பு நிறத்துடைய தேரர் என்பது தான் களுத்தற என்பதற்கு நேரடிச்சிங்கள அர்த்தமாகிறது. ஆனால் மிகச்சாத்தியமானதாக  கல்லுத்துறை அல்லது களித்துறை என்பதிலிருந்தே களுத்தற என்று வந்திருக்கலாம் எனலாம். துறை என்பது தனித்தமிழ்ச்சொல்லே. களுத்துறை என்றில்லாமல் களுத்தோட்ட என்றிருந்தால் என் வாதம் தவறாகியிருக்கலாம். ஏனெனில் களுத்துறையின் புவியியலுக்கும் கறுப்புக்கும் தொடர்பில்லை.  கறுப்பு என்ற அர்த்தத்தில் களு என்று பெயரிடவும் காரணங்களேதுமில்லை. ஆனால் கற்கள் நிறைந்த  கடற்கரை தான் களுத்துறையிலிருக்கின்றது. அத்தோடு இன்றும் பேருவளை களுத்துறை அளுத்கம முஸ்லிம்களில் பலர் சிங்களம் அறியாதவர்களே. வடமேற்கில் தனித்தமிழிடங்களாக இருந்தவைகள் சிங்களமயமானாலும் கூட (மெல்லத்தமிழ் இனி கட்டுரையில் அதை இயலுமானவரை பதிவுசெய்ய முயற்சித்திருக்கிறேன்) நுரைச்சோலை காக்காப்பள்ளி தில்லையடி போன்ற வடமேற்குமுஸ்லிம் கிராமங்களே தான் இன்று தமிழோடு எஞ்சி நிற்கின்றன் . அதேபோல ஆரம்ப அரபுக்குடியேற்றங்களிருந்த காலத்தில் இங்கே சிங்களவர்கள் இருந்திருப்பின் களுத்துறை முசுலீம்கள் நிச்சயம் சிங்களம் தான் பேசியிருப்பர். கரவாச்சிங்களவர்கள் தான் இப்போது களுத்துறையில் அதிகம் வாழ்கிறார்கள். கரவாக்கள் கட்டற்ற அகமண முறையை கொண்டவர்கள். அவர்களின் வருகைகள் இலங்கைக்கு  இடம்பெற்றது முக்கர கட்டனவின் படி கி.பி 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தான். ஆனால் பேருவளை சீனன்கோட்டை இஸ்லாமிய குடியேற்றங்கள் சம்பந்தமாக எட்டாம் நூற்றாண்டிலிருந்தே பதிவுகள் இருக்கின்றன. இன்னும் பெந்தோட்டை என்ற ஊரிற்கு பெந்துறை என்ற  பெயர் வழக்கில் இருப்பது இக்கருத்துக்கு வலுச்சேர்க்கின்றன. 

மாத்தற என்பது பிற்காலத்தில் உருவான பெயரே . இதை மாத்துறை என்றே ஐரோப்பியர் ஆவணப்பதிவுகளில் இருக்கின்றன. பாணன்துறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பத்தினி கோவில்களும் தமிழ்க்கடவுள் முருகன்களும் பரவலாக இருக்கின்றன. தேடலுக்கு நல்ல சுவாரசியமான புதிய தளங்களும் தென்பகுதியில் கிடக்கின்றன.

உதாரணத்திற்காக நான் இப்போது வசிக்கின்ற பகுதிக்கு அண்மையாக தமிழ்க்கடவுளுக்கு இரண்டு கோவில்கள் இருக்கின்றன. களுத்துற முருகன் கோவில் இருக்கிற பகுதி "வேலாபுரம்" என்று அழைக்கப்படுகின்றது. பாணந்துறை முருகன் கோவில் இருக்கும் நகரத்தின் பெயர் "நல்லூருவ".

இந்தத்துறைகளில் தென்கோடியில் உள்ள துறை தொந்தற என்றழைக்கப்டுகின்றது. தொந்தறயின் சிறப்புக்களை மகாவம்சத்தில் இருந்து கோகில சந்தேச வரை அனைத்து நூல்களுமே புகழ்ந்து நிற்கின்றன. அப்படி என்ன சிறப்பு இருக்கிறது அந்த தொந்தறைக்கு?

தொந்துறை தமிழில் தெய்வந்துறை , தேவன் துறை , தேவனம்துறை , தென்துறை , தென்னவன்துறை என்று சொல்லப்படுகின்றது. தென்துறையின் சிறப்பு தேவநாயனார் தேவாலயம் .  தேனாவரைநாயனார் தேவாலயம், தேவன் துறை ஆலயம் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற கேரளக்கட்டடக்கலையை ஒத்த கட்டிடம் ஒன்றை பிரதானமாக கொண்டு ஐந்து வழிபாட்டிடங்களின் தொகுதியே இவ்வாலயம். முருகன், பத்தினி, விநாயகர், சிவன்  ,விஷ்ணு தெய்வங்களிற்கான வழிபாடுகள் இங்கே நடைபெறுகின்றன. பிரதானமான தெய்வமாக ஆலயத்தில் விஷ்ணுவை போற்றுகிறார்கள். சிங்களவர்கள் உப்புல்வன் என்றே இவ்விஷ்ணுவைச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்த தேவாலயத்தையும் உப்புல்வன் தேவாலய என்கிறார்கள். பௌத்த நம்பிக்கைகளின்படி இலங்கைத்தீவை பாதுகாப்பதற்காக தென்திசையில் புத்தரால் பணிக்கப்பட்ட காவல் தெய்வமே உப்புல்வன் என்று நம்புவதோடு புத்தரின் அடுத்தடுத்த வடிவங்களுள் ஒன்றாகவும் உப்புல்வனையும் நாத தெய்யோவையும் வணங்குகின்றனர். 

தொண்டீசுவரம் என்று ஐதீகங்களில் நம்பப்படுகின்ற தென்னிலங்கை ஆலயத்தின் தொன்மங்களை காட்டுவதன் மூலம் தேவந்துறை தேவாலயத்தின் தமிழ்த்தொன்மையை உறுதிசெய்துகொள்ள முடியும். தொண்டீசுவரம் தொன்மங்களிற்கான ஆதாரங்களை பின்னர் பார்ப்போம்.

ஐந்து தெய்வங்களில் ஒன்றான சிவனின் கோவில் வளாகம் நாகிராசா கோவில் என்று அழைக்கப்படுகிறது. "பௌத்த விஷ்ணு" என்கிற புத்தகத்தை எழுதிய ஆய்வாளர் ஜோன்  ஐநூறு ஆடல்மங்கையர் கலைப்பணி செய்ததாகக்குறிப்பிடுகின்றார். 

வரலாற்றுப்பதிவுகளின் ஒழுங்குபடுத்தலின் படி கிரேக்கர்களின் மிகப்பழைய உலகப்படத்தின் படி இந்த ஆலயச்சூழலை புனித இடமாகக்குறித்திருக்கிறார்கள். தென்னிலங்கையின் கரையோரம் சார்ந்த சூழலில் இருப்பதால் இது கிரேக்கம் வரை பிரசித்தமாக இருந்தது சாத்தியமாகியிருக்கலாம். கி.பி 98இல் தொலமி தான் வரைந்த உலகப்படத்தில் தெகண என்று குறித்திருக்கிறார். சந்திரசேகரம் என்கிற தேவேந்திரமுனையின் சிவக்கடவுள் வழிபாட்டைப்பற்றி மேலோட்டமான அறிமுகத்தை தருகின்ற யாழ்ப்பாண வைபவ மாலை இதை தெய்வந்துறை என்கின்றது. 

பல்லவ மன்னனான முதலாம் நரசிம்ம வர்மன் ஏழாம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த போது இவ்வாலயத்தை பராமரித்தான் என்கிறார்கள். இவ்வாலயத்தின் அமைப்பு அடுக்கு வடிவமான பல்லவர் கலையைச்சேர்ந்ததாகவும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நான்காம் அக்கபோதி கட்டிய ஆலயமே ஐரோப்பியர் வருகையின் போது இருந்ததாகப்பதிவுகளை தென்னிலங்கை இலக்கியங்கள் கூறுகின்றன. 

கேகாலையில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடியொன்றின் படி விஷ்ணு திருவுருவம் தப்புல மன்னனின் காலத்தில் கடலில் மிதந்து வந்ததாகவும் அதைப்பிரதிட்டை செய்த பின்பு திருவுருவத்திற்குப் பூசை செய்வதற்காக தமிழர்களை அங்கே குடியமர்த்தினான் என்று தொடர்கின்றது. பதினேழாம் நூற்றாண்டைச்சேர்ந்த இன்னொரு எழுத்துச்சாசனம் மேற்குறித்த கதையை உறுதிசெய்கின்றது. அதன்படி தமிழ்ப் பூசகர்கள் தமிழ்ப்பணியாளர்களிற்கு தெருக்கள் தேவந்துறையில் இருந்தன என்கிறது அச்சாசனம். 

தம்பதெனியவை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகு காலத்தில் தேவந்துறை கடற்தலைவனைக்குறிக்கும் பதவி மகா பண்டிதர் என்று அழைக்கப்பட்டிருக்கின்றது.

பதினான்காம் நூற்றாண்டின் ரய்கம தேசத்தை ஆண்ட அழகக்கோனார் தன் ஆட்சிக்காலத்தில் தேவந்துறைக்கு நிலங்கள் பலவற்றை மானியமாகக்கொடுத்திருக்கிறான் . கோட்டே ஆறாம் பராக்கிரமபாகு காலத்தைச்சேர்ந்த கல்வெட்டொன்றைப்பற்றி எட்வேட் முல்லர் என்ற நிர்வாகி குறிப்பிட்டிருக்கிறார். அவரின் கருத்துப்படி கல்வெட்டு தமிழ் கிரந்த எழுத்துக்களில் இருந்ததாகவும் கல்வெட்டில் குங்கன்கொல்ல, பகரகரமுல்ல , வேர்டுவ, நாய்முனைக்கிராமங்களை அம்மன்னன் தேவந்துறை நாயனார் கோவிலுக்கு மானியமளிமத்த செய்தி இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மும்மொழிக்கல்வெட்டு (திரிபாஷா கல்வெட்டு) என்று அழைக்கப்படுகின்ற தென்னிலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்று மிகத்தெளிவான எழுத்துக்களுடன் இன்னும் சற்றும் சிதையாத சான்றாக கொழும்பு தொல்பொருள் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. இதைப்பிரதி செய்து சீனாவிலும் வைத்திருக்கிறார்கள் என்ற தகவலே இதன் சிறப்பைக்காட்ட போதுமானது. தென்னிலங்கையில் ஈழத்தமிழர்களின் செல்வாக்கு, அவர்களின் வாணிபம், கப்பற்கட்டுமானம், சர்வதேச உறவுகள், வழிபாட்டுத்தொன்மை என பல கேள்விக்குறிகளிற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தக்க அக்கல்வெட்டு மூன்று மொழிகளில் தன் செய்தியை வெளிப்படுத்துகின்றது. 

சர்வதேச வர்த்தகத்தில் ஆசியாவின் பிரதானமானவர்களான சீனர்களுன் சீன மொழி மற்றும் பாரசீகர்களின் பாரசீக மொழியோடு தமிழ் மொழி அக்கல்வெட்டில் இடம்பிடித்திருப்பதோடு மட்டுமல்லாது கல்வெட்டு கூறும் செய்தியும் ஈழத்தமிழரின் தென்னிலங்கை வரையானாதிக்கத்தையும் சர்வதேச வாணிபத்தில் வகித்த இடத்தையும் காட்டுகிறது. கி.பி 1409இல் சீனத்தளபதியான செங் ஹீ இலங்கைக்கு இரண்டாவது தடவையாக வந்ததை முன்னிட்டு உருவாக்கப்பட்ட அக்கல்வெட்டு 1911இல் காலியில் கண்டெடுக்கப்பட்டது. கிடைக்கின்ற தகவல்களின்படி செங் ஹீ சீனாவில் இருந்து மூன்றாவது முறையாக இலங்கைக்கு புறப்படுகின்ற போதே இக்கல்வெட்டை தயார்செய்திருந்தான் எனலாம்.


கல்வெட்டு பிரதானமாக கூறுகின்ற செய்திகள் இவை தான். தேவந்துறை கடவுளை சீனத்தளபதி உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தான். சீனத் தளபதியாலும் பிற தரப்பினராலும் பாரசீகர்களின் அல்லாஹ் இருக்கிற சிவனொளிபாத மலைக்கும் , தமிழர்களின் கடவுள் தேவானரை நாயனாருக்கும், பௌத்தக்கடவுள் சீனர்களின் புத்தருக்கும் என்று மூன்று இனத்தாரின் கடவுளர்க்கு கொடுக்கப்பட்ட தானங்களைப்பற்றியும் சொல்கின்றது. இதை விட ஒரு ஆதாரத்தை தென்னிலங்கையின் தமிழர் நிலவுகையை உறுதிப்படுத்த நாம் தேட வேண்டியதில்லை. இருந்தும் சில மேலதிக சான்றுகளும் இருக்கின்றன. 

பதினான்காம் நூற்றாண்டின்  யாத்திரிகர் இபின் பதூதா தனது பயணக்குறிப்பில்  ஆயிரம் சைவ யோகிகளும் , ஐநூறு வரையான ஆடற்பெண்களும் தேவந்துறையில் தொண்டு செய்கிறார்கள் என்று குறிப்படுகின்றார். 

கி.பி 15ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட கோகில சந்தேசய என்கிற குயில் விடு தூது நூல் சப்புமல் குமாரவைப்பற்றிய விடயங்களைச்சொல்கின்றது. அந்நூலின் அமைப்பின் படி குயில் ஒன்றின் தூதுப்பாதையாக தேவந்துறை ஆலயத்தில் தொடங்கி நல்லூரில் முடிவதாக தமிழர்களின் நிலவுகையை வடக்கு தெற்கு என தீவின் கரையோரம் முழுவதுமாப இருந்ததை உறுதிசெய்கிறது எனலாம். 

பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செப்புச்சாசனத்தின் படி ஏழாம் விஜயபாகு விஷ்ணுக்கு செய்த தானங்களைப்பற்றி அறியமுடிகிறது. 

கி.பி 1588இல் போர்த்துக்கேய கடற்படைத்தளபதி சூசா இங்கு இருந்த திரவியங்களை கொள்ளையடித்துச்சென்றான் என்றும் கோவிலை இடித்துக்கிடைத்த கற்களைக்கொண்டே சென் லூசியா உள்ளிட்ட மூன்று தேவாலயங்களை கட்டுவித்திருக்கிறான். ஐந்தாவது ஆளுனராக இலங்கைக்கு நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர் போர்த்துக்கேயர் அழிப்புக்கு முன்பு தேவந்துறை ஆலயம் மிகப்பெரியதாக இருந்திருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கி.பி 1807இல் வாழ்ந்த ஜேம்ஸ் என்கிற இன்னொரு நிர்வாகி இருநூறு வரையான கல்வெட்டுக்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். 

மாத்துறையில் தேவந்துறைக்கோவிலின் தொன்மங்களோடு இணைத்துப்பேசப்படுகின்ற தொண்டீசுவரம் கூட இருபதாண்டுகள் முன்னர் வரையில் வெறும் ஐதீகங்களாகத்தான் இருந்தன. ஆனால் 1998இல் மாத்துறையில் அகழ்ந்தெடுபக்கப்பட்ட நந்தியின் சிலையோடும், நான்கடி உயரமும் இரண்டரை அடி அகலமுமான சிவலிங்கத்தோடும் தொண்டீசுவரம் ஐதீகங்கள் வரலாறாகத்தொடங்கின. என்றாலும் மேலதிகமான இலக்கிய , தொல்பொருள் தரவுகள் தொகுக்கப்படுமிடத்து தொண்டீசுவரம், தேவந்துறை கோவில், திரிபாஷா கல்வெட்டு, திஸ்ஸமகாராம மட்பாண்ட எழுத்துக்கள், கதிர்காமம் என்று ஒரு தொன்மையான ஈழத்தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் வரலாற்றுத்தொடர்ச்சியை இன்னும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

வடக்கில் தொடர்ச்சியாக அகழ்ந்தெடுக்கப்படுவதாக காட்டப்படுகின்ற புத்தர்சிலைகளை விட,  மிகச்சிறந்த எங்கள் பண்பாட்டுத் தொன்மைகளை தெற்கில் தேடுவது காலத்தின் தேவையே. 


Views: 634