உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

பேரன்பு கொண்ட உவங்கள் இணைய வாசகர்களுக்கு உங்களுக்கு உவங்களின் அன்பு கலந்த வணக்கம். மீண்டும் ஒரு புதிய இதழில் புத்துணர்ச்சியுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. உவங்களின் சனம் ஒன்று ஆள் ஐந்திற்கான இதழ் இந்த முறையும் உங்கள் இலக்கியப்பசிக்கு விருந்தளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இம்முறையும் புதிய எழுத்தாளுமைகளுடன் உவங்களை வெளிக்கொணர்வதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகிறோம். வழமை போலவே இம்மாத உவங்கள் இதழ் வடிமைப்பை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்பு ஓவியத்தை வரைந்தளித்த சுலக்சன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி சுயம்பாக அரசியல் சுயலாபமற்ற போராட்டங்கள் உருவாகி உக்கிரமடைந்து முகப்புத்தகத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடாமல் வெற்றியடைந்தமையை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம். இவ்வகையாக சுயம்பாக வெடிக்கும் போராட்டங்கள் பாதி புலம்பல், பாதி வசைப்பாட்டு, பாதி கடந்தகாலத்தின் எதிரொலி, பாதி எதிர்காலம் பற்றிய அச்சுறுத்தல் என ஒரு கூட்டிணைந்த மக்களின் குரலாகும். சில நேரங்களில் அதன் கசப்பான கிண்டலான சுருக்கென தைக்கும் விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சக்குலை மீதே தாக்குவதாக இருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோ போராட்டங்கள் பற்றி  “புரட்சி என்பது ரோஜாக்களால் ஆன மெத்தை அல்ல. அது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம் (1959)” என ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அக்கருத்தின் அர்த்தம் உணர்ந்து போராட்டங்கள் எழுந்த போதும் போரட்டங்களின் நவீன  வடிவமும் வரலாற்றின் முன்னேற்றத்தை புரிந்துகொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாத காரணத்தினால் எப்போதுமே அதன் விளைவு பரிகசிக்கத்தக்கதாக மாற்றமடைந்து விடுமோ என்ற பயமும் கூடவே இருந்தது.

சிறிது சிறிதாக, ஒவ்வொரு ஒவ்வொரு பிரச்சனையாக மையப்படுத்தி வெடிக்கும் போராட்டங்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டமாக வெளிப்படுத்துகையில் வெளியேறும் மக்களின் சக்தியின் அளவு அபரீமிதமானது. அப்படியாயின் அவ்வாறான ஒரு ஒருங்கிணைந்த போராட்டவடிவத்தினை ஒருங்கிணைப்பது யார் என்னும் கேள்வி விடையினை  எதிர்பார்த்து தொக்கி நிற்கிறது. அவ்வாறான ஒரு ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா அல்லது மக்கள் அமைப்புக்களா..? எவராயினும் சிறந்த ஆளுமையுடன் காணப்பட வேண்டிய அவசியத்தை பிரச்சனையின் உக்கிரம் இக்காலத்தில் தெரியப்படுத்தியிருக்கிறது. இந்த இடத்தில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதில் நமது பங்கு என்ன என்பது விவாதத்திற்கு உட்படுகிறது. அதனை இங்கு விட்டுச் செல்கிறோம். 

அடுத்த உவங்களில் உறவுகள் அனைவரையும் சந்திக்கிறோம். 
Views: 277