தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல்

எழுத்தாளர் : வி.துலாஞ்சனன்மின்னஞ்சல் முகவரி: vthulans@thambiluvil.infoBanner


இந்தக் கட்டுரையாளன் சமூக வலைத்தளங்களுக்கு அறிமுகமான 2011ஆம் ஆண்டு, இணையத்தில் முக்கியமான பண்பாட்டு விவாதமொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. தமிழகத்தில், 2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த தைப்புத்தாண்டு, 2011இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன், பழையபடி தைப்பொங்கலாகவே கொண்டாடப்படவேண்டுமென்றும், சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

அரசு ஒன்றிற்கு, தன் மக்களின் பண்பாடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா? தன் ஆளுகைக்கும் வெளியேயுள்ள குறித்த இன மக்களின் உணர்வுகளை அது எவ்வாறு புரிந்துகொள்கிறது? போன்ற வினாக்களுடன் அது சார்ந்த மிக விரிவான விவாதம் சமூக வலைத்தளங்கள் எங்கணும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழக நோக்குநிலையையும் தமிழ்ப்பற்றையும் ஓரமாகத் தள்ளிவைத்து விட்டு, நடுநிலையுடன் வரலாற்றாய்வு செய்தபோது, இக்கட்டுரையாளனுக்குக் கிடைத்த விடைகள் வியப்புக்குரியவை. அந்த விடைகளைச் சார்ந்து, தமிழ் வானியலைப் பற்றியும் தமிழ்ப்புத்தாண்டைப் பற்றியும் இன்று சுருக்கமாக ஆராய இருக்கிறோம்.

சோதிடம்:

சூழலியலும், ஒருவரின் பிறப்பும் வாழ்க்கையும், வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கருதுகோளுடன், அதற்கான சூத்திரங்களை உருவாக்கி, அதன் பலன்களை முன்மொழியும் துறையே சோதிடம்.

இன்றைக்கு தம்மை முற்போக்காகவும் தமிழ்ப்பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் சிலர், சோதிடத்தை மூடநம்பிக்கை என்றும், ஆரியத்திணிப்பென்றும், தமிழரிடம் அது இருக்கவில்லை என்றும் வாதாடுவர். ஆனால், உலகின் எல்லாத் தொல்குடிகளிடமுமே காலக்கணிப்பு என்பது ஏதோ ஒரு வடிவில் இருந்தது என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். தமிழ்க் காலக்கணிப்பை ஆரியருடையது என்று தாரைவார்ப்பதன் மூலம், காலக்கணிப்பு பற்றி அறியாதிருந்த தமிழினம், அதை ஆரியரிடம் கடன் வாங்கிக்கொண்டது என்பது போல் அவர்கள் ஏற்படுத்தும் தோற்றப்பாடு,  பெருமைக்குரியதல்ல, ஒரு பழம்பெரும் இனத்துக்கு மாபெரும் தலைகுனிவு என்பதை அவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்?

தமிழரின் காலக்கணிப்பு என்றதுமே, தமிழனின் பேரறிவுடா, தமிழன்டா என்று கிளம்பிவிடாதீர்கள்!  நாம் தமிழரின் வானியல் பற்றிய சான்றுகளைச் சேகரிக்கும் அதே சமகாலத்திலேயே, வட இந்தியாவிலும், கிரேக்கம், சீனம் போன்ற பகுதிகளிலும் வானியல், காலக்கணிப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

இந்திய வானியல்:

இந்தியாவிலேயே மிகப்பழைய இலக்கியங்களான வேதங்களில் கிரகங்கள், கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.  பொ.மு 12 – 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக வரையறுக்கப்படும் “வேதாங்க ஜ்யோதிஷம்” இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலாகும். எனினும் இந்திய வானியல், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மிகச்சிறப்பான வளர்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஆரியபட்டரின் (பொ.பி 476 - 550) “ஆர்யபட்டீயம்”, வராகமிகிரரின் “சூரிய சித்தாந்தம்” (பொ.பி 6ஆம் நூற்.), பராசர ஓரைசாத்திரம், சாராவளி (பொ.பி 8ஆம் நூற்.) என்பன இக்காலத்தில் முகிழ்த்த முக்கியமான நூல்கள்.

 

தமிழ் வானியல்:

சங்க இலக்கியங்கள் (பொதுவாக பொ.மு 3 - பொ.பி 2ஆம் நூற்.) தமிழர் மத்தியில் மிகச்சிறப்பான வானியல் அறிவு விளங்கியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன.  நட்சத்திரங்களும் கோள்களும் தனித்தனியே நாண்மீன், கோள்மீன் என்று பிரித்துச் சொல்லப்படுவதால், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை சங்க காலத்தமிழர் தெளிவாகவே அறிந்திருந்தனர் எனலாம். மரபுவழி இருபத்தேழு நட்சத்திரங்கள், சங்க இலக்கியங்களில் தூய தமிழ்ப்பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக முடப்பனை (அனுசம்), கயம் (புனர்பூசம்) என்பனவற்றைக் குறிப்பிடலாம். ரோகிணி நட்சத்திரத்துடன் சந்திரன் கூடிய நாள், மங்கலநாளாகக் கருதப்பட்டு, அன்றே திருமணங்கள் நிகழ்ந்த குறிப்பும் கிடைத்திருக்கின்றது. (அகம் 86, 136) 

தை, மாசி (பதிற்று.59), பங்குனி (புறம்.229), முதலான மாதப்பெயர்கள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஏனைய மாதப்பெயர்கள் அப்படியே தான் இருந்திருக்கிறதா என்று கேட்டால், “மாதப்பெயர்கள் என் காலத்தில் ‘ஐ’யிலும் ‘இ’லும் தான் முடிந்தன” என்று கூறி ஆம் எனத்தலையாட்டுகிறார் தொல்காப்பியர். (எழுத்து. உயிர்மயங்கியல்.288)


அட்டமி (புறம்.118), பௌர்ணமி (புறம்.65) முதலான சந்திரனின் நிலைகள் பாடப்பட்டிருக்கின்றன. மேட இராசி பற்றிய குறிப்புகள் நெடுநல்வாடையிலும் (120-121), புறநானூற்றிலும் (229) வருகின்றன. நெடுநல்வாடையின் 73 முதல் 78ஆம் வரிகளில், கோலை நாட்டி சூரிய நிழல் மூலம் அன்றைய பொழுதை அறிந்து, அரசியொருத்தியின் அரண்மனைக்கான மனை தெரிவு செய்யப்பட்டமை சொல்லப்படுகின்றது. இவை எல்லாம், நட்சத்திரங்கள், கோள்கள், மாதங்கள், சூரியன் – சந்திரனின் இயக்கம் முதலியவை பற்றிய ஆழமான அறிவு சங்கத்தமிழருக்கு இருந்தன என்பதற்கான சான்றாதாரங்கள்.

 

நாட்காட்டிகளும் காலக்கணிப்பும்:

ஆதிமனிதன் காலம் கணிப்பதற்கு சூரியன், சந்திரன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினான். அவற்றின் நகர்வைக் கணிப்பதன் அடிப்படையில் முறையே கதிர் நாட்காட்டி (Solar Calendar), மதி நாட்காட்டி (Lunar Calendar) என்பன பயன்பாட்டில் இருந்தன. சூரியன் - சந்திரனின் இயக்கத்தோடு, சிலவேளைகளில் நட்சத்திரங்களின் சார்புநிலையும் கருத்திலெடுக்கப்பட்டது.

கதிர் நாட்காட்டி:

பழங்கால வானியலாளர், வான்வெளியில் தென்பட்ட உடுக்கோலங்களின் அடிப்படையில் பன்னிரு இராசிகளை கற்பனை செய்து கொண்டனர். இந்த இராசித்தொகுதிகளின் ஊடாக, புவியிலிருந்து பார்க்கும்போது தென்பட்ட சூரியனின் சார்பியக்கமே (இழை.01) கதிர் நாட்காட்டிகள் உருவாகக் காரணமாயிற்று.

(இழை.01 http://www.dailygalaxy.com/photos/uncategorized/2007/06/05/ancient_zodiac.gif) 

இந்தக் கதிர் நாட்காட்டிகள் மேலைத்தேயத்திலும், கீழைத்தேயத்திலும் சிறுவேறுபாட்டுடன் வளரலாயின.  கிரேக்க வானியல், அயனமண்டல இராசித்தொகுதியைப் (Tropical zodiac) பயன்படுத்தியது (இழை.02).  அது, இரவும் பகலும் சமனாக வருகின்ற நிகர்நாட்கள் (Equinoxes), சூரியன் அதிக வெப்பத்தை அல்லது குறைந்த வெப்பத்தை வழங்குகின்ற உச்சநாட்கள் (Solstice) என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கணிப்புமுறை ஆகும். இந்திய வானியலில் நட்சத்திரங்கள் அனைத்தும் நிலைத்த புள்ளிகளாகக் கருதப்பட்டு, அவை சார்பான கோள்களின் சார்பியக்கம் கருத்தில் கொள்ளப்பட்டது. (விண்மீன் இராசித்தொகுதி - Sidereal Zodiac)


யூலியன், கிரகோரியன் போன்ற புகழ்பெற்ற நாட்காட்டிகள் “அயனமண்டல கதிர் நாட்காட்டிகளுக்கான” (Tropical Solar Calendars) உதாரணம். தமிழ், மலையாள, சிங்கள நாட்காட்டிகள், “விண்மீன் கதிர் நாட்காட்டிகள்” (Sidereal Solar Calendar) ஆகும்.

(இழை.02: நிகர்நாள், உச்சநாள் கணிக்கப்படும் அயனமண்டல இராசித்தொகுதி - http://singingsun.com/wp-images/TropicalZodiac.jpg)

 

மதி நாட்காட்டி:

மதி நாட்காட்டி, முழுக்க முழுக்க நிலவின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது (இழை.03). இதில் அரிதாக, விண்மீன்களும் காலம் காட்டப் பயன்படுத்தப்படுவதுண்டு. நிலவின் சுற்றுவட்டத்துக்கும், பூமியின் சுற்றுவட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக, சூரியன் இராசிமண்டலத்தைக் கடக்க ஓராண்டு எடுக்கும் போது, சந்திரனுக்கோ ஒரு மாதமே (27 நாட்கள்) போதுமானதாக இருக்கிறது. இதனால், பன்னிரண்டு இராசிகளிலுமுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களை, நாளுக்கு ஒவ்வொன்றாகக் கணித்து, மதி நாட்காட்டியின் மாதம் 27 நாட்கள் என்று கொள்வதும் உண்டு.

(இழை.03: மதி நாட்காட்டியின் அறிவியல் https://s-media-cache-ak0.pinimg.com/originals/7a/f7/a7/7af7a7982c15dc04b048c034336040cb.png)


தமிழ் நாட்காட்டி:

இன்றுள்ள தமிழ் நாட்காட்டி, பொதுவாக கதிர் நாட்காட்டியாகவே கொள்ளப்படுகின்றது. அதாவது, தமிழ் வழியில் இன்றும் ஒரு இராசியை சூரியன் கடக்க எடுக்கும் காலத்தையே ஒரு மாதமாகக் கணிக்கிறோம். ஆனால் நாளொன்றைக் கணிப்பதற்கு சந்திரனின் இயக்கத்தையே கருத்தில் கொள்கிறோம். சமயரீதியில் புனிதமான நாட்களெல்லாம் சந்திரனின் அமைவை வைத்தே (விஜய”தசமி”, விநாயக “சதுர்த்தி”, சித்திரா”பௌர்ணமி”) கணிக்கப்படுவதை நாம் காணலாம். பிறப்பைக் கணிக்கப் பயன்படும் நட்சத்திரங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இராசி, இந்த நட்சத்திரம், என்று சொல்லியிருப்பார்களே, அதுதான்!),

முன்னோர் வழிபாட்டில் பயன்படும் “திதி”கள் முதலானவையும் மதிவழிக் கணிப்பீடுகளே. இந்த “திதி”க்கும் “திகதி”க்கும் - “மதி”க்கும் “மாத”த்துக்கும் உள்ள ஒலிப்பொற்றுமைகள், தமிழ் நாட்காட்டியில், மதி நாட்காட்டியின் செல்வாக்கை எடுத்துக் கூறுவன. ஆனால் தைப்பொங்கலும், சித்திரைப்புத்தாண்டும் இன்றும் கதிர் நாட்காட்டியின் படி கொண்டாடப்படுபவை தான். இந்த இருவழி நாட்காட்டிகளின் கலப்பு எப்போது ஏற்பட்டது என்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை.

 

தமிழரின் புத்தாண்டு:

சரி. தமிழரின் வானியல், அவர்கள் மத்தியில் வழக்கிலிருந்த நாட்காட்டி என்பன பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டோம். தமிழர் மத்தியில் நாள், வாரம், மாதம் முதலான காலக்கணிப்புகள் இருந்தன, சரி. ஆனால், குறிப்பிட்ட ஒரு நாளை புத்தாண்டு என்று கொண்டாடியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றதா? இல்லை! சங்க இலக்கியங்களோ, சங்க மருவிய இலக்கியங்களோ எங்குமே “புத்தாண்டு” என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.   

தமிழ் வழக்கில் ஒவ்வொரு மாதமும் பிறக்கும் முதல்நாள் விசேடமாகக் கருதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் ஆலயங்களில் “மாதப்பிறப்பு” பூசைகள் இடம்பெறுவதைக் காணலாம். காலக்கணிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்களிடம் இவற்றில் எது முதல் மாதமாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகளை எடுத்துப்பார்த்தால், முதல்மாதப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாதங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று சித்திரை, மற்றையது ஆவணி!

சித்திரை முதல் மாதம் என்று சொல்பவர்கள், இராசிமண்டலத்தின் முதலாவது இராசியாக மேடம் கொள்ளப்பட்டதை நினைவுகூரச் சொல்கிறார்கள். சங்க இலக்கியமான நெடுநல்வாடையிலேயே மேடம் முதலாவது இராசி (160 - 161) என்ற குறிப்பு வருவதால், கதிர் நாட்காட்டிப்படி, மேடத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதலாவது மாதம் என்று சொல்கிறார்கள். ஆண்டு, வருடம் என்ற சொற்களின் தமிழ்ச்சொற்பிறப்பு, அவை மேட இராசியின் ஒத்தகருத்துச் சொற்களாக நிகண்டுகள் கூறும், ஆட்டை, வருடை ஆகிய சொற்களிலிருந்தே பிறந்திருப்பதாக எண்ணவைக்கின்றது.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த “புட்பவிதி” எனும் இரு நூல்கள் சித்திரையே முதல் மாதம் என்ற குறிப்பைத் தருகின்றன. இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், “சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடவுள் நகர்வலம் சென்றுவிட்டபின் திருக்கோணேச்சரத்தை இடித்தழித்தோம்” என்ற 1622ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் குறிப்பே, சித்திரைப்புத்தாண்டு பற்றிய மிகப்பழைய குறிப்பாகக் கொள்ளத்தக்கது.

 

ஆவணி முதல் மாதம்:

பொ.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிங்கலம் (2.210) முதலான நிகண்டுகள், ஆவணியே முதல் மாதம் என்று சான்று கூறுகின்றன. தொல்காப்பியத்தின் அகத்திணையியலின் 6ஆம் 7ஆம் சூத்திரங்களுக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், ஆவணி முதல் ஆடி வரை ஒரு ஆண்டு என்று வரையறுக்கிறார். இவர் காலம், பொ.பி 14ஆம் நூற்றாண்டு. இந்த நூற்குறிப்புகள் தவிர, ஆவணிப்புத்தாண்டு எந்தளவுக்கு நடைமுறையிலிருந்தது என்பதற்கான எந்தவொரு சான்றுகளும் கிடைக்கவில்லை.

ஆக, ஆண்டுத்தொடக்கம் என்ற பந்தயத்தில் கலந்துகொள்ளவேண்டியவை சித்திரையும் ஆவணியும் தான். ஆனால், இதில் சம்பந்தமே இல்லாமல் தை எப்படிக் கலந்துகொண்டது? தைப்புத்தாண்டு என்பது, பண்பாட்டுவெளியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் சக்தியாக வளர்ந்தது எப்படி?

 

தைப்புத்தாண்டு:                                                                  

தைப்பொங்கல் தமிழரின் புத்தாண்டு, சித்திரைப்புத்தாண்டு வடநாட்டிலிருந்து வந்தேறிய  ஆரியரின் திணிப்பு என்ற எண்ணக்கரு, 1970களில் தமிழ் நாட்டில் மெல்ல உருவானது. இந்தக் குழப்பம் 2008, 2011 ஆண்டுகளில் உச்சநிலை அடைய, ஆண்டுதோறும் தையா – சித்திரையா என்று வாக்குவாதங்கள் இன்றும் தொடர்ந்தாலும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது.

இந்தத் தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த பலர், சங்க இலக்கியங்களில் தையே புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், 1921இல் மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் சென்னையில் கூடி தையைப் புத்தாண்டு என்று அறிவித்ததாகவும் கூறினர்.

உண்மையில், 1921இல் அப்படி ஒரு தமிழறிஞர் மாநாடு இடம்பெற்றதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. “1921 சென்னை பச்சையப்பன் கல்லூரி” என்பது மீண்டும் மீண்டும் கூறப்பட்டு மறுக்கமுடியாத சான்றாக நிறுவப்படுகிறதேயன்றி, அவ்வாறு இடம்பெற்ற தமிழறிஞர்களின் மாபெரும் மாநாடு பற்றியோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெளியான  நூற்குறிப்புகள் பற்றியோ, உருப்படியான ஒரு ஆதாரம் கூட பொதுவெளியில் வைக்கப்படவில்லை. அதிசயமாக,  மறைமலையடிகள் 1921ஆம் ஆண்டு, இலங்கையிலே தைப்பொங்கல் கொண்டாடியதாக அவரது வாழ்க்கை வரலாற்றில், அவரது மகன் குறிப்பிட்டிருக்கிறார் (2). மேலும், சங்க இலக்கியங்களில் பாடப்படுகின்ற தை மாதம் பற்றிய எல்லா வரிகளும், பெண்களின் நீராடல் விழாவொன்றைப் பாடுகின்றனவேயன்றி, எங்குமே தை புத்தாண்டு என்றோ, தையே முதல் மாதம் என்ற குறிப்புகளையோ கொண்டிருக்கவில்லை.

 

திருவள்ளுவர் ஆண்டு:

தைப்பொங்கல் புத்தாண்டாக முன்வைக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம், திருவள்ளுவராண்டு எனும் காலக்கணிப்புமுறை. தமிழரிலிருந்து இறுதியாகப் பிரிந்துசென்ற மலையாளிகள் உட்பட, இந்தியாவின் பெரும்பாலான இனக்குழுமங்கள் தத்தமக்கென்று சிறப்பான ஆண்டுத்தொடரொன்றைக் கைக்கொண்டு வருகின்றன. முன்தோன்றிய மூத்த குடி எனத் தமிழ்ப்புகழ் பாடிய பலருக்கும் இது உறுத்தலாகவே இருந்து வந்தது. இப்பின்னணியில் தமிழருக்கென முன்வைக்கப்பட்ட காலத்தொடர் தான் “திருவள்ளுவர் ஆண்டு” முறைமை.

இது பரவலாகப் புழக்கத்துக்கு வந்தது எப்போது, எப்படி என்ற எந்தத் தகவலும் இன்று தெளிவாகக் கிடைப்பதாக இல்லை. “திருவள்ளுவர் பிறந்தது பொ.பி 31இல்” என்று முன்மொழிந்ததைத் தவிர, மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு முறைமையில் எத்தகைய பங்களிப்பை வழங்கியதாகவும் தெரியவில்லை. 

ஆனால், திருவள்ளுவர் ஆண்டு, தை ஒன்றில்  ஆரம்பிக்கப்பட்ட ‘மரபு’க்கும் மறைமலையடிகளுக்கும் தொடர்பு உண்டு. “திருவள்ளுவர் திருநாள்” எனும் விழாவை, 1935இலிருந்து, வைகாசி அனுசத்தில் மறைமலையடிகள் முதலான அறிஞர் கொண்டாடி வந்திருக்கின்றனர்.  1963இல், யூன் மாதம் திருவள்ளுவர் தினத்துக்காக விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று அறிஞர் அண்ணா கோரிக்கை விட,  1966இலிருந்து ஜூன் 3ஆம் திகதி “திருவள்ளுவர் திருநாள்” என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு,  தமிழகத்தில் விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், 1971இல் திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் திகதிக்கு மாற்றப்படுகிறது. இதில் சோமசுந்தரபாரதியாரின் பங்கும் கலைஞர் கருணாநிதியின் பங்கும் அதிகம் என்று தெரிகின்றது 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் அரச ஆவணங்களில் திருவள்ளுவர் ஆண்டு உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது. திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல தைப்பொங்கலுக்கு மாற்றப்பட்டு, பின் அது திருவள்ளுவர் ஆண்டாக  முன்னிறுத்தப்பட்டு, கங்கா முழுசா சந்திரமுகியா மாறின கதை இது தான்.

 

கடைசியாக, தமிழர் புத்தாண்டு:

புவியியல் சூழலியல் ரீதியில் கொஞ்சம் உற்றுநோக்கினால், சித்திரை மாதம் கோடை காலத்தின் ஆரம்பம். குயில் கூவ, கொன்றை முதலான மரங்கள் பூத்துச்சொரிந்து மணம் வீச, இளவேனில் ஆரம்பிக்கும் மாதம் சித்திரை. அழகியல் நிறைந்த சூழலை ஏற்படுத்துவதாலும், இன்றைக்கும் நடைமுறை ரீதியில் வழக்கிலுள்ளதாலும், ஆவணிப்புத்தாண்டு வழக்கிலிருந்தமை பற்றிய சான்றாதாரங்கள் எதுவும் கிடைக்காத வரையிலும், சித்திரைப் புத்தாண்டு, தமிழர் புத்தாண்டாகத் தொடர்வதே சரியானது. 

மத அடையாளத்தை விடுத்து, தூய வானியல் -  சூழலியல் மட்டுமே சார்ந்து சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது என்பதை தமிழ்ச்சமூகம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆண்டுவாரியான காலக்கணிப்பு தான் சிக்கல் என்றால், திருவள்ளுவர் ஆண்டை சித்திரை ஒன்றிலேயே ஆரம்பிக்கலாம்.

தமிழரின் மிக நெருங்கிய பண்பாட்டுப் பங்காளிகளான மலையாளிகள், சிங்களவர் மாத்திரமன்றி பழந்தமிழரோடு பண்டுதொட்டே வரலாற்றுத்தொடர்பு கொண்ட வங்கர்கள், ஒடியர்கள் (கலிங்கர்), தாய்லாந்தினர், கம்போடியர், பர்மியர், லாவோஸ் நாட்டினர் போன்ற பல்வேறு நாட்டினரும் சித்திரை முதலாம் திகதி (ஏப்பிரல் 14) அல்லது, அதை அண்மித்து வரும் நாளொன்றிலேயே இன்றும் தங்கள் புத்தாண்டை ஆரம்பிக்கின்றனர் என்பது நாம் ஊன்றி நோக்கத்தக்கது.

கன்னடரும் தெலுங்கரும் உகாதி கொண்டாடும் அன்று தான் (இவ்வாண்டு மார்ச்சு 29) பெரும்பாலான இந்திய இனக்குழுமங்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றன. இப்படிப்பார்த்தால்   முழுக்க முழுக்க மதி நாட்காட்டியைச் சார்ந்த உகாதியே அல்லது சைத்ர மாதப்பிறப்பே இந்துப்புத்தாண்டாகக் கருதத்தக்கது

நிலைமை இவ்வாறிருக்க, கதிர் நாட்காட்டியான தமிழ் நாட்காட்டியின் படி கணிக்கப்பெறும் சித்திரைப்புத்தாண்டை மதப்புத்தாண்டாக முத்திரை குத்துவது, வேறு விதமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், சமீபகாலமாக சிங்கள ஊடகங்கள் சித்திரைப்புத்தாண்டை “சிங்கள - ஹிந்துப் புத்தாண்டு” என்று அழைக்க ஆரம்பித்திருப்பது. தமிழ்ப்புத்தாண்டு என்ற சொல்லாடல் திட்டமிட்டு மறைக்கப்படுவதும், உலகின் பழைமைவாய்ந்த ஒரு கதிர் நாட்காட்டி சார்ந்த பண்பாட்டு அடையாளம் கண்முன்னே பறிபோவதும், சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கும் ஒரு இனக்குழுமத்துக்கு அவ்வளவு உவப்பான செய்தி அல்ல.

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Views: 4842