பிறப்பொக்கும்...

எழுத்தாளர் : நீதுஜன் பாலாமின்னஞ்சல் முகவரி: neethujan@gmail.comBanner

கண்விழித்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. மங்கலாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தான். தலை லேசாக கனத்தது. உடம்பில் ஒரு இடமுமே வலிக்காதது புதுமையாக இருந்தது. வந்த வேகத்துக்கும், அந்த லொறியில் மோதிய மோதலுக்கும் இந்நேரம் செத்தல்லவா இருக்கவேண்டும்... சளீர் என்கிற சத்தத்தோடு நெற்றிக்கு மேலே நட்சத்திரங்கள் பறக்க, கண் இருட்டியது வரைக்கும்தான் நினைவில் இருந்தது. ஒருவேளை செத்துக்கித்துதான் போய்விட்டோமோ.. உடம்பைத் தடவிப் பார்த்தான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“செத்துதான் போய்விட்டாய்.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். வெள்ளையாக ஒரு பிரகாச ஒளி. அப்போதுதான் சுற்றிலும் பார்த்தான். முடிவில்லாது எல்லாப் பக்கமும் நீண்டு போகிற வெள்ளை நிலம், இடையிடையே முகிற்கூட்டம் - அல்லது பனியோ, புகாரோ, ஏதோ ஒன்று. மேலேயும் முகிற்கூட்டம் சூழ்ந்த வெண்மையான கூரை.. இவை தவிர கண்ணுக்குத் தெரிந்து எந்தத் தூரத்திலும் வேறு எதுவுமே இல்லை. இதையெல்லாம் பார்த்தும் பயமோ பதட்டமோ வரவில்லை. நிதானமாக எழுந்தான். உடல் பாரமாக இல்லாததை உணர்ந்தான். தான் செத்துவிட்டதையும், சொர்க்கமோ, நரகமோ, ஏதோ ஒன்றின் வாசலுக்கோ வந்திருப்பதையும் உணர்ந்துகொண்டான். குரல் கொடுத்த பிரகாசமான ஒளி அந்தரத்தில் மிதந்தது. அதைப் பார்த்துப் பேச எத்தனித்தான்.

“நீங்கள்தான் மேலுலகத்துக்கு என்னை வரவேற்க வந்திருப்பவரா? சித்திரகுப்தன் மாதிரி கணக்கு எழுதும் ஒபிசரா? எனக்கு என்ன நரகமா, சொர்க்கமா, மறுபிறப்பா? செய்த பாவத்துக்கெல்லாம் புது நரகம் கட்டித்தான் என்னை உள்ளே தள்ளவேண்டும், என்ன? இத்தனை துணிச்சலாக எப்படிக் கதைக்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை. செத்துவிட்டோமே, சொந்தங்கள் என்ன கவலைப்படும், மேலுலகத்துக்கு வந்திருக்கிறோமே, என்ன நடக்கப்போகிறது.. என்று எந்தவித சோகமே, பயமோ இல்லாது வெறுமையாக இருந்தது மனம். அதுசரி, சுகம் துக்கம் எல்லாம் பூமியின் கட்டுமானங்கள்தானே. அறச் செத்தவனுக்குக் கூதலென்ன, குளிரென்ன.

“வா, புரியவைக்கிறேன்.. என்றவாறு அந்த வெள்ளை ஒளிப்பிரவாகம் ஒரு மனிதனாக உருவமெடுத்தது. அப்படியே தன்னைப்போலவே அந்த உருவம் இருப்பது கண்டு ஒருகணம் திகைத்துத்தான் போனான். இதுவரை பிரகாஷ்ராஜாகவும், மோர்கன் பிரீமனாக்கவுமே பார்த்துப் பழக்கப்பட்ட அந்த இறைவனின் ஒளி பிரவாகிக்கும் சாந்தமான முகத்தை - தன்னைப்போலவே இருந்த அந்த முகத்தை - உற்றுப் பார்த்தான்.

“நீ நீதுஜன் என்ற பெயரோடு பிறந்து, நாற்பது வருடங்கள் வாழ்ந்து, பிள்ளை- குட்டி- கல்யாணம் என்று மகிழ்ந்து, நான்கைந்து கண்ணராவியான கதைகளையும் எழுதி, உண்டு குடித்து, உல்லாசமாக வாழ்ந்து, இன்றைக்கு விதி முடிந்து செத்துப்போயிருக்கிறாய். ஒரு விபத்து. கண்மூடித்தனமான வேகத்தில் நீ வந்ததாலும், முன்னால் வந்த சாரதி தவறான பக்கத்தில் வண்டியை செலுத்தியதாலும் இந்த விபத்து நடந்திருக்கிறது...

“அந்த நாயால் தான் நான் இன்றைக்கு இறந்திருக்கிறேனா? கோபத்துடன் வலதுகையை இடது உள்ளங்கையில் குத்தினான். காற்றில் காற்றால் குத்தியது போலிருந்தது.

“இப்படிப் பொறுப்பற்ற மனிதர்களை என் படைக்கிறீர்கள்? குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள், குற்றம் செய்துவிட்டு தப்பி வாழ்பவர்கள், போலியான அரசியல்வாதிகள்.. இவர்களை எல்லாம் படைக்கவேண்டும் என்று யார் அழுதது?

“அதைத்தான் உனக்குப் புரியவைக்கப் போகிறேன். என்றவாறு அந்த தேவதை - கடவுளா, தேவதையா என்று தெரியவில்லை - ஒரு முகிற்கூட்டத்தை விலக்கியது. திரையில் விழுவதுபோல அகண்ட பூமியின் படம் அதிலே தெரிந்தது. இதோ பார், இதுதான் நீ இறந்த கணத்தில் இருந்த பூமி. இதிலே உன்னைப்போல எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறாய்?

“என்ன, ஒரு ஏழரை பில்லியன்...? பொது அறிவுத் துணுக்குகளை வாசித்து வைத்திருப்பது இந்த இடத்தில்தானா உதவவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

“அது மனிதர்கள் மட்டும் ஐயா. மரம், பூச்சி எறும்பு, யானை, கரடி எல்லாமே ஒன்றுதான்.. உயிர்தான். எண்ணிக்கை சொன்னால் உனக்குப் புரியாதளவு உயிர்கள் இந்தப் பூமியில் இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. உனது பெரியம்மா, மைத்திரிபால சிறிசேன, பிரேசிலின் அமேசன் காட்டில் ஓடித்திரியும் சிறுத்தைகள், பனிக்கரடிகள், இப்போது நீ செத்துப்போனது தெரியாமல் உல்லாசமாக மண்ணில் விளையாடிக்கொண்டிருக்கும் உன் மகனின் கையில் உள்ள பக்டீரியாக்கள் -  சே, என்ன குப்பையனாக இருக்கிறான் உன் மகன்- கடலின் ஆழத்தில் வாழும் மீனினங்கள்.. எல்லாமே உயிர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுகிறாய் தானே?

“தெரிந்த விஷயம்தானே..

“உனக்குத் தெரியாத விஷயத்தைச் சொல்லுகிறேன், கேள். அத்தனை உயிர்களுமே நீதான்..

“ஒ.. ஏழாம் ஆண்டு சமயப்புத்தகத்தில் படித்தோமே.. பிள்ளையார் எலிக்கு விறாண்டிவைக்க, அது உமாதேவிக்கு காயமாகிப் போனது.. அதைச் சொல்ல வருகிறீர்களா?

“நீ முட்டாள் என்பதை இப்படியெல்லாம் கதைத்துத்தான் நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. நான் அறிந்த விஷயம் அது.  சொல்லுவதை மட்டும் கேள்.

“முட்டாள் என்றால் அப்படிப் படைத்தது நீங்கள் தானே.. என்று முணுமுணுத்தான்.. “சரி சொல்லுங்கள்.

“இந்தப் பூமியின் சகல உயிரினங்களுக்கும் உள்ளது ஒரே உயிர் தான். இப்போது நீ நிற்கிறாயே, அது நீதுஜன் அல்ல. அவனது உடலில் இருந்த உயிர். அதுதான் என்முன் நிற்கிறது. இதே உயிரைத்தான் நான் இன்னொரு உடலாக.. அது புல்லோ, பூடோ, புழுவோ, மரமோ... மாற்றவேண்டும்.

“அட..மறுபிறப்பு. இதைத்தானே மாணிக்கவாசகர் அழகாக...

“நிறுத்து.. நான் சொல்லுவது புரிகிறதா?

“ஆம், இப்போது இந்த உயிர், இன்னொரு உடலுக்குள் போகப்போகிறது. உயிருக்கு அழிவில்லை. உடல் அழியும். உயிர் உடையை மாற்றுவது மாதிரி உடல்களை மாற்றிக்கொண்டு இருக்கும்..

“சமயப்புத்தகங்களை கரைத்துக் குடித்திருக்கிறாய்.. சொல்லுவதை கவனமாகக் கேள். அந்த சித்தாந்தம் சரி இல்லை.. இந்தப் பூமிக்கு, இந்தப் பிரபஞ்சத்துக்கே ஒரே ஒரு உயிர்தான் இருக்கிறது. அது இதோ, நீதான். உன்னைத்தான் ஒவ்வொரு தடவையும் புதுப்புது உடலுக்குள் புகுத்தி அனுப்புகிறேன்.. வேறு உயிரே இல்லை. நீ மட்டுமேதான்.

“அப்படியானால் ஒரே நேரத்தில் உலகத்திலே கோடிக்கணக்கான உயிர்கள் இயங்குகிறதே.. அது எப்படி சாத்தியமாகும்..

“அப்படி வா.. அதைத்தான் புரியவைக்க முயற்சி செய்கிறேன். இதோ, இந்தப் பூமியை காலத்தில் சற்றுப் பின்னோக்கி எடுக்கிறேன், பார்..

திகைத்துவிட்டான். பூமியில் நின்றான். சுற்றிலும் பார்த்தான். படங்களில் பார்த்த பண்டையகால ஐரோப்பா போல இருந்தது.

“என்ன இடம் இது?

“இதுதான் ஈரான். நீ வாழ்ந்த காலத்துக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூமியில் நீ நிற்கிறாய்.

“அது எப்படிச் சாத்தியமாகும்?

“காலம் என்பது உங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணம். மற்றபடி நீங்கள் நினைப்பதுபோல அது முன்னோக்கி மட்டுமே இயங்குவது அல்ல. அது முன்னும் பின்னும் பயணிக்கக்கூடிய ஒரு பரிமானம்தான். அவ்வாறு பயணிக்கும் சாத்தியக்கூறு உங்களுக்கு இல்லை. அவ்வளவுதான். எப்படி ஒரு பல்லிக்கு மின்குமிழ் ஒளிர்வது எப்படி என்று புரியாதோ, அதுபோல, காலத்தில் இயங்குவது எப்படி என்பது உங்களுக்கு புரியாது.

“நீங்கள்தான் கடவுளா? உங்களுக்கு மேலே ஒருவர் இருக்கிறாரா?

தேவதை சிரித்தது. “நான் சொல்லிக்கொண்டிருப்பதே உனக்கு இன்னும் முழுதாகப் புரியவில்லை.. அது புரியும்போது எல்லாம் புரியும். இவ்வாறாக, நாற்று நடுவதுபோல, ஒவ்வொரு முறை நீ ஒரு உடலிலிருந்து செத்து என்னிடம் வரும்போதும், உன்னை வேறு ஒரு புதிய காலத்தில், புதிய இடத்தில், புதிய உடலிலே நட்டுவிடுகிறேன். அதுதான் என் வேலை. இப்போது இந்தக் கிராமத்தின் ஒரு குடியானவனின் வீட்டில் ஆடாகப் பிறக்கப் போகிறாய். இன்னும் சிறிது நேரத்தில். ஏதாவது கேட்க விரும்பினால் கேள்..

“அப்படியானால் இதுவரை காலமும் பிறந்து செத்துப்போன எல்லா உயிரும் நான்தானா?

“ஆம். ஒரே நேரத்தில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களும் நீதான். நாற்பது வயதில் நீ செத்துப்போகிறாய். இன்னுமொரு வேளையில், நீ பிறந்து ஏழு வருடங்கள் கழித்துப் பிறக்கப்போகும் உனது மனைவியாக நீ மறுபடி பிறப்பாய். இன்னுமொரு வேளையில், உன்னை இன்று இடித்தானே, உன் சாவுக்குக் காரணமான அந்த வண்டிச் சாரதியாக நீ பிறப்பாய். இன்னுமொரு வேளையில் ஏசுவாக, பின்னர் புத்தராக, உன் வீட்டுக் கோடியில் நிற்கும் விளாமரமாக, தெருநாயாக, பாண் வியாபாரியாக, சுஜாதாவாக, ரஜினிகாந்த் ஆக, வள்ளுவராக, பல்லியாக, நயன்தாராவாக, எதிர்காலத்திலும் பிறக்கப் போகின்ற எல்லாமுமாக நீதான் பிறப்பாய்.

“கேட்கவே அலுப்பாக இருக்கிறது. ஆனால் அப்படி என்றால் இத்தனை காலமும் நான் வெறுத்த, விரும்பிய, கோபித்த எல்லாருமே நான்தானா?

“நீயேதான்.. ஏழாம் ஆண்டிலிருந்து வேண்டுமென்றே கிடைத்த பொழுதெல்லாம் சீண்டினாயே, அந்த காந்தன், நீ கல் எடுத்து எறியும் நாய்கள், நீ ருசித்து சாப்பிடும் ஈரலுக்கு சொந்தமான ஆடு, கொத்துக் குண்டு வீச உத்தரவிட்ட மகிந்த, வீசியவன், அதிலே செத்துப்போனவர்கள்.. எல்லாமே.

“அப்படி இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே ஒரு உயிர் மட்டும் தான் இருக்கிறது என்றால் நீங்கள் யார்? கடவுள்தானே?

அந்த தேவதை ஒரு பெருமூச்சை விட்டபடி எங்கோ ஒரு அந்தரத்தை வெறித்துப் பார்த்தது.

“நான்தான் நீ. இத்தனை பிறவிகளும் எடுத்து முடிக்கும் போது நீ நானாக ஆகியிருப்பாய். நான்தான் நீ. நீதான் நான். நீ, நானாக ஆகுவதற்கு எடுக்கவேண்டிய பிறப்புக்களை எல்லாம் எடுக்க வைப்பதுதான் என் வேலை.

“புரியவில்லையே..

“எனக்கும் தானடா புரியவில்லை.. ஒவ்வொரு முறை நீ இறந்து வரும்போதும் உனக்கு எல்லாம் புரியவைத்து, நீ போய், எல்லாம் மறந்து மறுபடி வாழ்ந்து மறுபடி இறந்து மறுபடி என்னிடம் வந்து... ஒரு கட்டத்தில் நீ, இறந்து வரும்போதே எல்லாம் புரிந்தபடி வருவாய். அந்த நாளில் நீ மறுபடி பூமியில் பிறக்கத் தேவையில்லை. அந்த நாளில் நீ நானாகிறாய். நானாகிற நீ, பழையபடி பிறந்து இறந்து இங்கே வரும் ‘நீகளை மீண்டும் பூமிக்குப் பிறக்க அனுப்பவேண்டும்.

“மில்லியன் கணக்கான உயிர்களாக நான் பிறப்பேன், ஒவ்வொரு முறையும் பிறந்து முடித்து, இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கவேண்டிய எல்லா உயிர்களுமாக நான் பிறந்து முடித்தபிறகு, ஒரு காலத்தில், பூமியின் கணக்கில் சொன்னால் எதோ ஒரு எதிர்காலத்தில், நான் நீங்களாக மாறுகிறேனா...  அப்படி நீங்களாக ஆனபிறகு கூட, இந்த அசையாத காலத்தில் நின்று, இறந்து வந்துகொண்டிருக்கும் நான்களை மறுபடி மறுபடி பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேனா? இதற்கு என்னதான் முடிவு?

தலையில் கைவைத்து உட்கார்ந்தது தேவதை. “இதற்கு என்ன முடிவு என்று எனக்கே தெரியாதடா...

அதனுடன் சேர்ந்து நீதுஜன் அழத் தொடங்கினான்.

 

Views: 425