பேச்சு வழக்கு – பதியப்படாத ஒரு அடையாளம்

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.comBanner

மொழி என்பது மொழியப்படுவது. இது ஒலியனை மாத்திரம் கொண்டதன்றி குறியீடுகள், சைகைகள், நிறங்கள், சங்கேதம் என வியாபித்துச் செல்கின்றது. எறும்பகளின் வாசனை மொழியும், தேனீக்களின் நடன மொழியும் இன்னும் பூரணமாக தொகுக்கப்படவில்லை, குகை ஓவியங்கள், பிரமிடுகளின் ஹீரேகிளிபிக்ஸ் உருவ மொழிகள், நாஸ்கா கோடுகள், பரிதி வட்டங்கள் என மொழியப்பட்ட பல விடயங்கள் இன்னும் புதிராகவே இருக்கின்றன. விரல் ரேகைகளின் மொழியும், நாடித்துடிப்புகளின் மொழியும், நட்சத்திரங்களின் அசைவுகளும், கனவின் காட்சிகளும் சொல்லுகின்ற செய்திகளைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது என இன்னும் சிலர் நம்புகின்றனர்.

மொழி சுவாரஸ்யமானது. இது இல்லாமையும் இருத்தலும் கொண்ட தொடர்ச்சியான நுண்ணிய வடிவமைப்பாகும். கருத்தைப் புதைத்து குறுக்கி அதே பரிவை இலக்கு நபரிடம் அல்லது இலக்கிடம் ஏற்படுத்துவதில் மொழி வெற்றியடைகின்றது.

இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளும் ஒரு செய்தியைக் காவிக்கொண்டிருக்கின்றன. அது சுற்றும் முற்றும் அத்தனை கோணங்களிலும் ஒத்ததும் வேறுபட்டதுமாக பலவாறு புரிந்து கொள்ளப்படுகின்றது. இவ்வளவு நேர்த்தியான மொழிகளில் ஆக்ககூடிய பல்வகைமை காணப்படுவது மனிதர்களின் இன்னுமொரு சிறப்பு. இது ஒரு அற்புதமான இறைவனின் வரம் என்றே கூறலாம்.


தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஆதியான மொழிகளில் இன்று வாழுகின்ற சில மொழிகளுள் முதன்மையானதாக கருதப்படுகின்றது. தமிழ் காலத்திற்குக் காலம் விருத்தியடைந்து சமகால தொழிநுட்ப விருத்திக்கும் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் பிரயத்தனத்துடன் பயணித்து வருகின்றது. 

பிறமொழிகளைப் போல தமிழிலும் எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்று இரு பிரிவுகள் உள்ளன. எழுத்து வழக்கு உத்தியோகத் தேவைகட்கும், ஆவணங்கள், சட்டங்கள் இயற்றுவதற்கும், கல்விசார் நூல்கள், ஆய்வுகளை எழுதவும் பயன்படுகின்றது. பேச்சு வழக்கு அன்றாட நடவடிக்கைகளில் கருத்துப் பரிமாற்றத்திற்கு மாத்திரம் பயன்பட்டு வந்தாலும், தற்காலத்தில் இலக்கியங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளது. சமூகம் பேசுகின்ற மொழியில், அவர்களுக்குப் புரியம்படியான வழியில் மக்கள் இலக்கியங்கள் பொதுத்தளத்தில் புழங்கவிடப்பட வேண்டும் என்ற நவீன உத்திகளினால், சிறுகதை, நாவல், கவிதை, மற்றும் சில கட்டுரைகளிலும் பிராந்திய பேச்சுவழக்குகள் இடம்பெறகின்றன. 
இதை சிலர் கொச்சை வழக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆனால் ஒரு தனிமனிதன் மொழியைச் சிதைத்து பேசும்போது இவ்வாறு கூறலாம், ஒரு சமுதாயமே அவ்வாறு பிரயோகிக்கும் போது அதை வட்டார வழக்கு அல்லது பிராந்திய வழக்க என்று கூறுவதே பொருத்தமானது. இந்த பேச்சு வழக்கு மொழியில் குறித்த பிராந்தியத்தின் பண்பாட்டு அடையாளங்களை நாம் கண்டு கொள்ளலாம்.

பேச்சு மொழியில் இரண்டு வகை உண்டு 

1 பொதுவான சொற்களின் மாறுபட்ட வடிவம்
2. பிராந்தியத்திற்கே உரித்தான சொற்கள்
எகா. யாழ்ப்பாணத் தமிழில் 
இந்த – உந்த (பொது) பேந்து- பிறகு , கெதியா – விரைவாக (பிராந்தியம்)
சோனகத் தமிழில் 
செல்லுங்க – சொல்லுங்க (பொது) மறுகா –பிறகு, சுறுக்கா – விரைவாக (பிராந்தியம்)

கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை

கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த சில பேச்சு வழக்கு சொற்களின் பட்டியல். 

அச்சிரம் - அரைஞாண் கொடியில் கட்டப்படும் மந்திரித்த தாயத்து
அட்டாதுட்டி, கணாட்டு  – குறும்புத்தனம், தொல்லை
அரியண்டம், அரிச்சாணியம், கரைச்சல், கக்கிசம் -- தொந்தரவு
அத்தாங்கு – மீன்பிடிக்கும் உபகரணம்
அத்தக்கூலி – பிரதியுபகாரமாக உடனடியாக வழக்ப்படும் சன்மானம்
அமிசடக்கி - இரகசியம் காப்பவன்
அரட்டுதல் - எழுப்புதல்
அயின – அங்கே
விசகிளம் - செய்தி
இலவிசம் - இலவசம்
ஏனம் - பாத்திரம்
உண்டுண – சற்று அதிகமாக
உதக்காய் - பழத்திற்கும் காய்க்கும் இடைப்பட்ட பருவம்
உப்புத்தி – உப்புப்பாத்திரம்
ஒள்ளுப்பம், இம்மிணியாம் போல, மண்போல – சிறிதளவு
கறுத்துக்கரி – மிகக்கறுப்பு
இனிச்சிக்குட்டான் - மிகஇனிப்பு
இருட்டுக்கும்பாசம் - இருள்
புளிச்சிப்புளியாணம் - கடுமையான புளிப்பு
கைமாத்து – கடன் 
கட்டாது – தட்டுப்படியாகாது
கடப்பு –   வழி வாசல் 
கடப்படி –வாசல்
கண்ணூறு – திருஷ்டி
கத்தறை – வம்சம்
கந்தப்பார்த்தல் - தேவையற்றதை நீக்குதல்
கந்தறுத்தல் - நாசமாக்குதல் 
கால்மாடு தலைமாடு – கால்பக்கம் தலைப்பக்கம்
கீசா – போத்தல்
குண்டாமாத்து – சகோதரியை மணமுடித்தவரின் சகோதரியை மணமுடித்தல்
துறட்டி, கொக்கை – ஆய்வதற்காக பயன்படும் தடி 
கோப்பத்தை – கமுகு ஓலையின் அடிமடல்
பூப்பான்பாளை – தென்னை ஓலையின் அடிமடல்
கூப்பன்மா –கோதுமை
சக்கு சந்தேகம்
சகடை  - உழலைத்தடி
சீக்குறிஞ்சி – சாத்தாவாரி கொடி
சுள்ளாப்பு – முன்கோபம்
விலாய்- பலாய்- குறை  
அறவாய்போவாய் - அறவே இல்லாமல் போவாய்
நாசமத்துபோ – நாசம் அற்று போ
நல்லாரிந்திருவாய் - மங்கலச்சொல்
களிசறை, காவாலி – திட்டல் வார்த்தைகள்
கடப்பொலி – கடைசிப் பொலி

இன்று தமிழிற் கலைச்சொற்களைத் தேடி உழைக்கும் நாம் தமிழில் பல சொற்கள் இன்னும் பாவிக்கப்படாமல் இருப்பதை மறந்து விடுகின்றோம். மேலேயுள்ள சொற்பட்டியலைப் போன்று ஆயிரக்கணக்காண சொற்களை மக்கள் புழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றில் பெரும்பாலனவற்றினை அகராதிகளில் காண முடியாதளவு இருக்கின்றன 
இவற்றிற்கான காரணம். 
தமிழ்ப்படுத்தப்படாமை அல்லது இச்சொற்கள் சொல்லாராய்ச்சிக்கு உட்படுத்தப்படாமை
வேர்ச்சொற்கள் அறியப்படாமை
இலக்கியங்களில் பயன்படுத்தப்படாமை 
கிராமத்து பேச்சுவழக்கு கொச்சையானதாகவும், அநாகரீகமானதாகவும் கருதும் சுய தாழ்வு மனப்பாங்கு சிந்தனை. மாற்றமும் புறக்கணிப்பு 

எதிர்காலத்தில் ஈழத்தில் வழக்கிலுள்ள வழக்கொழிந்த அனைத்து பேச்சுவழக்கு சொற்களையும் கொண்ட ஒரு முழுமையான அகராதி நமக்கு எதிர்கால தலைமுறைக்கு தேவைப்படுகின்றது. 

இதுவரை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் எண்ணிவிடத்தக்க சில பிராந்தியங்களினது வட்டாரவழக்கு அகராதிகளே தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தியா

வட்டார வழக்குத் தமிழ் அகராதி - வீரமாமுனிவர் 
கரிசல் வட்டார வழக்கு அகராதி - கி. ராஜநாராயணன்
வழக்குச் சொல் அகராதி - இரா. இளங்குமரனின்
செட்டி நாட்டில் செந்தமிழ் வழக்கு
கொங்கு வட்டார வழக்கு அகராதி - பெருமாள்முருகன்
கடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்
நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி - அ. கா. பெருமாள்
தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்
செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி - பழனியப்பா சுப்ரமணியன் ஜ2ஸ
நெல்லை வட்டார வழக்குச் சொல் அகராதி - வெள் உவன்
நடுநாட்டு சொல் அகராதி (தென்னாற்காடு, கடலூர் விழுப்புரம் மாவட்டங்கள்)- கண்மணி குணசேகரன்

இலங்கை

மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி
இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி - ஈழத்துப் பூராடனார்

இவைதவிர 


மட்டக்களப்புத் தமிழகம் - வீசி கந்தையா
சோனகதேசம் - ஏ.பி.எம்.இத்ரீஸ்
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியம் - றமீஸ் அப்துல்லாஹ்
கிழக்கிலங்கை முஸ்லிமகளின் பழமொழிகள் - முத்துமீரான்
கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் வாழ்வும் வாழ்வாதாரங்களும் - முத்துமீரான் ஆகிய நூல்களில் சில சொற்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன

என்றாலும் பாராட்டத்தக்க இம்முயற்சிகள் போதுமானவையாக இல்லை. இவற்றின் துணைகொண்டு விரிவுபடுத்தப்பட்ட தொகுப்புக்கள் வெளிவரவேண்டியது வருங்கால சந்ததியினரின் தேடல்களுக்கு துணை செய்யவல்லன. இவை மட்டுமன்றி பர்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ் போன்ற பகுதிகளில் பேசப்படும் தமிழ் வட்டார வழக்குகள் பற்றிய தொகுப்புக்களும் தமிழின் பரந்தபட்ட செல்வாக்கையும் பண்பாட்டிடைத் தொடர்புகளையும் வளர்திடவும் வழிசெய்யும் 

பெயரகராதி, மாணிப்பாய் அகராதி, தமிழ்பேரகராதி என்பவற்றை வெளியட்ட ஈழத்தில் இன்னும் பூரணப்படுத்தப்பட்ட பேச்சு வழக்குச் சொற்கள் கொண்ட அகராதி வெளியிடப்படவில்லை. வளரும் தமிழ் ஆர்வலர்கள் இவற்றை முன்னெடுப்பது பண்பாட்டை காக்கும் பணியாகும்.
 
Views: 7062