ஜனரஞ்சகம்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.comBanner


அவனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். எனது ஆவியின் புலன் அவன். இன்று நான் இருக்கும் நிலைமைக்கு ஆதாரம் அவன்.

என் பாடசாலை வாசலில் ஒர் நாள் நின்று  கொண்டிருந்தான். அன்று தான் அவனை முதலில் சந்தித்தேன். வெளியில் எதையும் வெளிக்காட்டாமல் முகத்தின் புன்னகையுடன் என்னுடன் உயர்தரம் படிப்பதற்;காக என் வகுப்பில் என்ட்ரியானான். கடைசி மேசை, யாரும் முதலில் பெரிதாகப்பழக தொடங்கவில்லை. முதலில் எல்லாரும் போல நானும் ஹலோ லெவல் ப்ரண்டு தான். சேம் ப்ரீக்குவன்சி என்பார்களே அந்த விடயம் வேலை செய்யத்தொடங்க. டெக்னாலஜி, சினிமா, போட்டோகிரபி என்று பேச்சு வளர்ந்தது. நெருக்கமானோம். எனக்கும் அவனைப்பற்றி அவ்வளவாகத்தெரியாது. ஒரு நாளும் வந்தது. ஈழம் பற்றிக்கதை எடுத்தேன். அவன் அவ்வளவாக சுவாரஷ்யம் கொள்ளவில்லை. போரின் காயங்கள் அவனையும் தீண்டியிருக்கலாம். அதன் பின் அந்தப்பேச்சை எடுக்கவில்லை. அன்று வழமைக்கு மாறான மழை. உயர்தர ஆசிரியர்கள் எல்லாரும் வீட்டில் குழந்தைகளுடன் போகோ சனல் பார்க்க வகுப்பறை கும்மாளமானது. டஸ்டரில் வொலிபால் விளையாட்டு தெவிட்டிப்போக.

நானும் அவனும் கன்ரீனில் ஏதோ சுட சுட கொஞ்சம் வாங்கிக் கொண்டு மைதானத்தின் அருகேயுள்ள திறந்த வகுப்பறையை அடைந்தோம். மைதானத்தின் மழைச்சாரல் மனதை நெருட குமரிக்கண்டத்தை தலைப்பாக தெரிவு செய்தோம். அது வளர்ந்து சோழர்காலம் பொன்னியின் செல்வன். தஞ்சை பெருவுடையார் கோவில். தமிழர் விஞ்ஞானம், தமிழர், ஈழத்தமிழர் என சூடு பிடிக்க இறுதியாக அவனின் சுய வரலாறு அரங்கேற்றம் கண்டது.

அவன் முள்ளிவாய்க்காலை சேர்ந்தவன் அல்ல. ஆனால் அதையும் தாண்டி வெளியுலகம் அறியாமல் நசுக்கப்பட்ட உண்மைகளின் எச்சம் அவன். அது ஒரு பின்தங்கிய கிராமம். கிராமத்தின் பெயர் அவனுக்கே ஞாபகம் இல்லை. பெயர் அவ்வளவுக்கு கவர்ச்சி இல்லாததொன்றாக இருந்திருக்க வேண்டும்.. பின் தங்கியதிலும் பின் தங்கியது. கல்வியறிவு எனும் சொல்லே அங்கு புழக்கத்தில் இல்லாத அளவுக்கு. ஆனால் அவனது குடும்பம் நியூயோர்க் நகரை விட அழகானது. அம்மா அப்பா தாத்தா வழமைக்கு அதிகமாக நான்கு உடன்பிறப்புக்கள் என கொஞ்சம் கலகலப்பான வட்டம். இரண்டாயிரத்து ஒன்பது. இந்தச்சொல்லின் கையாடலே பல விடயங்களையும் பல கால நேரங்களையும் குறிக்க வல்லது என்பதால் விளக்க விரும்பவில்லை. பங்கருக்குள் இடம் போதவில்லை. இவனுக்கு புழுக்கம் பிடிக்காது. தடையை மீறி காற்று வாங்கப்போனவன் காது பிளந்தது. பங்கருக்குள் இருந்த அவன் குடும்பம் ஐதரசன் குண்டால் அவன் இருந்த இடத்தைப் பிரதியிட்டது. அவன் தலைமையில் ஆயுதம் தரித்த பத்தாயிரம் பேர் நின்றிருந்தாலும் அவனால் அப்போது எதையும் செய்ய முடியாது.. அவனுக்கே தன் நிலை விளங்க வெள்ளைக் கொடி, அகதி வாழ்வு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் என கடைசியாக வவுனியா.  அவனும் இலக்கியப் பைத்தியம் எனவே கடைசியில் உயிராயுதத்தை காட்டிலும் அபாயமான எழுத்தாயுதக் கூர் கொண்டு பலரை பலதை கிழித்தெறிய எண்ணினான். ஆனால் அவனுக்கு பயம். கண் முன்னே சொந்தங்களின் மரணம். அத்தோடு அவன் கருவிழி அகதி முகாமில் பல  கோரங்களை பதிவு செய்து வைத்திருந்தது, எனக்கும் அச்சமயம் அது தான் தேவைப்பட்டது.

சரி... கொஞ்சம் என்னைப்பற்றியும்  சொல்லி விடுகின்றேன். போரிடையான, போரின் முந்தைய, போரின் உடன்பின்னான காலங்களாக என் மழழை, கட்டிளைமை பருவங்கள் அமைந்ததால் அதன் தாக்கம் என்னை அணுஅளவேனும் பாதிக்கவில்லை. எனக்கு தெரிந்த மட்டில் நான் என்நாட்டின்  பெரும்பான்மை இனத்தோரின் ராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமான வவுனியாவில் வசித்ததால் என் இனம் தொட்ட வெறி, ஏக்கம்,உணர்வு, தாகம் என்பவற்றின் விம்பமாக ஒரு துளி கண்ணீரை கூட நான் உதிர்க்க காரணம் காணவில்லை. எனது பெற்றோரும் என் காதில் படாத நான் அறியக்கூடாத முறையில் தங்கள் இனப்பற்றை வெளிக்காட்டி இருக்கலாம். பத்திரிகைகளின் சிறுவர் பகுதி தவிர்ந்த ஏனைய பக்கங்கள் பார்வையில் இருந்து தப்பி இருக்கலாம். இதெல்லாம் நான் மன நோயாளியாக மாற முன்பு நடந்த கதைகள். எனக்கு வந்திருக்கும் இந்த மன வியாதியை யாராலும் குணப்படுத்த முடியாது மிக மிக அபூர்வமான வியாதி. இது ஒரு வகையான அருவருப்பு நிலை. எப்போது என்று ஞாபகம் இல்லை மூன்று வருடம் முன்னதாக என் அம்மம்மா வீட்டுக்கு சென்றிருந்தேன். என் அம்மம்மா வீடு பெரும்பான்மை இன ராணுவங்களின் பிடியில் வந்து ஐந்து வருடங்கள் மட்டுமே. பாரதிராஜாவின் படங்களின் சாயல் அச்சுப்பிசகாமல் அந்த கிராமத்தின் எழிலில் விதைக்கப்பட்டிருக்கும். நவீனங்களின் விரல் நுனி கூட தீண்ட அனுமதிக்காமல், ஆனால் கல்வி , பொருளாதாரம் என எல்லா விதத்திலும் வீறு நடை போடும் பாரதி கண்ட புதுமை பெண் தேவதை அந்தக்கிராமம். இயற்கை, கிராமம், பசுமை என்னும் சொற்களை நான் முதல் முதலில் செவி வழி உணர்ந்த போது ஞாபகம் வந்த ஒரே விடயம் என் அம்மம்மா வீடு. ஆனால் கடைசியாக நான் சென்ற போது ஏதோ அருவருப்பு. என் அம்மம்மாவின் வீடு சமரில் பெரிதாக பாழாகவில்லை. சுற்றாடலும் அதே மாதிரி தான் இருந்தது. ஆனால் இனம் புரியாத ஏதோ ஒரு அருவருப்பு. என் மண், என் பூட்டனின் வியர்வை ஊறிய, என் தமிழ் சந்ததிகள் விளையாடிய என் மண் என்று ஆசை தீர அந்த மண்ணின் மணத்தை மணந்து வனப்பை கண்டு சத்தங்களை நுகர முடியவில்லை, அந்த சமர் ஊர்திகளின் டாங்கிகளின் ரயர்களின் ஊடாக தென் தேசத்து மண் துகள்கள் ஒட்டி என் தேசத்து மண்ணில் கலந்து வாசனையில் இடம் கண்டிருக்குமோ என்று தேவையில்லாமல்  ஐயம் கொண்டு அருவருப்படைந்தேன். அந்த துகள்களில் சிந்திய தென்தேசத்து காடையர்களின் வியர்வையின் வாசனை என் மூளையை குழப்பி மூர்க்கனாக மாற்றி விடுமோ என்ற ஐயம். அந்த எண்ணமும் நினைப்பும் நாளாக நாளாக வலுப்பெற்று சதா சர்வ காலமும் அந்த ஆதிமனிதன் வர மாட்டானா. அக்கரி காலன்  கல்லாயுதங்களை கொண்டாவது இந்த காடையர் கும்பலை நாசம் காண மாட்டானோ. என்று எண்ணி எண்ணி எனக்கு பித்து பிடித்துப்போனது. பேசாமல் நானே இதற்க்கு  பிறகு அடுத்த சொல் எழவில்லை. சும்மாவா சொன்னார்கள் தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்று. நடப்பது நடக்கட்டும் என்று தன் பாட்டில் இயல்பான வாழ்க்கை வாழும், பிரச்சினைகளை இயன்ற மட்டும் தவிர்த்து இணக்கமாக வாழும் என் குடும்பத்தில் பைத்தியம் நான் மட்டும் தான். பேஸ்புக்கிலும் குடிபோதையிலும் அரட்டும் வீர குடிகளாகவும் அமையப்பெறாததால் என் மனப்பிராதி அதிகமாயிற்று. சங்க இலக்கியங்கள் வாசித்த நாள் தொட்டு எம்முன்னோர்களின் ஆவியும் என்னுள் புகுந்து ஆட்டுவிக்கத் தொடங்கியது. ராஜராஜசோழனாக என்னை எண்ணிக் கொண்டேன். சந்திரமுகி படத்தில் வரும் அதே மனவியாதி. என் பிரதேச தமிழ் சங்கங்களை நாடினேன், உரமேறினேன். என் வியாதி தனிமையில் மட்டுமே வெளிக்காட்டும் வகையை சார்ந்தது. சிலரிடம் பகிர, எழுது என்றார்கள். எழுதினேன் எடுபடவில்லை. எனக்கே விளங்கியது. கை நடுங்கியது. நிறுத்தி விட்டேன்.

இப்படியாக நானும் கொஞ்சம் ஊரடிபட்டதால் போரடிபட்டதை அறிந்தவன். போரை தலைப்பாக்கி கிறுக்க ஆசை. ஆனால் எனது மூளையில் இருந்தவை செவி வழியில் நான் கேட்டவை. அவற்றுள் சில பச்சப்புனைவுகள். கிறுக்கி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. அப்போது தான் அவனின் அறிமுகம் கிடைத்தது. அவன் தன் கதையை வரிக்கு வரி விளக்க அவன் கண்ட அனுபவத்தைக் காட்டிலும் நான் மூளையால் செதுக்கிய கற்பனைகள் உண்மையில் காவியமானவை.  அவனின் கிராமத்து வாழ்வு.. போர்க்காலப்பதிவுகள், கண்முன்மரணங்கள், அகதி வாழ்வு என சொல்லிடங்காத நிஜங்கள், திருப்பங்கள் அவனுள் கொட்டிக்கிடப்பது கண்டேன். அவனை கருவாக்கினேன். அவன் பார்வையில் கதை நகர்த்தினேன். கதையை வலுவாக்க சில மாதங்கள் எடுத்துக்கொண்டேன். நாளாக நாளாக எனக்குப் பித்து அதிகமானது. கடைசியில் உயிரோட்டம் கொண்ட உண்மைப்பதிவுகளுடனான அவன் சொந்தக்கதையைக்காட்டிலும், காட்டம் அதிகமாய் இருந்தது நான் உருவாக்கிய உண்மைக் கதை.

இனி அச்சுக்கு வார்க்க வேண்டிய தேவை ஒன்றே இருந்தது.. ஆனால் இப்போது எனக்கும் கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது. முழுக்க முழுக்க உண்மைகளைக் கொட்டி இருந்தேன் என்பதால் அவசரப்படுவது போல் தோன்றிற்று. இப்போதும் சில சந்தேகநபர்கள் காணாமற் போய் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறைச்சாலை என்றால் கூட பரவாயில்லை. இது கொஞ்சம் வித்தியாசம் ஆயிற்றே. அச்சப்பட்டேன். அடுக்கி வைத்துவிட்டேன்.

நாற்பதில் ஏனோ என் மனவியாதி நான் லண்டனுக்கு புலம் பெயர்ந்ததில் இருந்து குணமடைந்து விட்டது. லண்டன் வாசனை என் அம்மம்மா வீட்டின் அந்த வாசனையை இடம் பெயர்த்து விட்டது போலும். ஏதோவெல்லாம் தோன்றியது. கிறுக்கினேன். பேனையை சற்று ஊன்றிப்பிடித்தேன், இப்பொழுது ஆட்டம் காணவில்லை. நானும் எழுத்தாளன். அங்கீகாரம் கிடைத்தது. அந்த கிரகம் பிடித்த மண் வாசனையையும் நினைப்புகளையும்  தொலைத்த பிறகு தான் சுதந்திரமாக கிறுக்க முடிகிறது. நிஜமாய் நடந்த வெண்பொங்கலை காட்டிலும் பயத்தம்பயறு சர்க்கரை  போட்டு கொடுத்த சக்கரைப்பொங்கல் வாசகர்களை என் பக்கம் இழுத்தது. அங்கீகாரம் கிடைத்த பின்பு கற்பனைகளுக்கும் நிஜ உருவம் கொடுக்கும் ஆற்றல் என்வசமானது. போற்றி எழுதுவதை காட்டிலும் தூற்றி எழுவதால் விமர்சனங்கள் என்னை இலவசமாக விளம்பரப்படுத்தும். இறந்தவர்கள், மறைந்தவர்கள், மறைக்கப்பட்டவர்கள், திரும்பி வரவா போகிறார்கள், உணர்வுக்கு உருவம் கொடுப்பதை காட்டிலும் மூளைக்கு வேலை கொடுக்கும் புனைவுகளுக்கு எப்போதும் கிராக்கி அதிகம் தான், என் ஆன்மாவின் குரல் நின்று பல ஆண்டுகளானது நான் அறியாமல் இல்லை காரணம் ஜனரஞ்சகம்.. இருபதில் கிறுக்கியது இன்னும் அலுமாரியில் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உண்மையாயிற்றே கொஞ்சம் நன்றாக பூட்டிவைக்கவேண்டும்..

என் ஊரின் மண் வாசம்.
ருபாய் - ஆயிரத்து ஐநூறு..
ஈழம் பதிப்பகம்..
லண்டன்.. 

Views: 334