ஞா.தியாகராஜன் கவிதைகள்

எழுத்தாளர் : ஞா.தியாகராஜன்மின்னஞ்சல் முகவரி: thiyagarajan852@gmail.comBanner

1.

இந்த அகாலத்தில் புகைக்க என்னோடு யாரும் வரப்போவதில்லை 
காதலியை முத்தமிட ஒரு புதுவழியை சிந்தித்து சோர்ந்திருக்ககூடும் 
காலக்கோட்டின் எல்லா பதிவுகளையும் அழித்துவிட்டு இந்த நகரத்திலிருந்து கிளம்பலாமென 
நினைக்கிறேன் 
நானில்லாதது உங்கள் கொண்டாட்டத்தில் எந்த கீறலையும் உண்டாக்காதென எனக்கு தெரியும் 
புறப்பட்ட பேருந்திலிருந்து நான் விடைபெறுவதை ஒரு தகவலாக மட்டுமே சொல்ல நேரும் 
ஏதோ ஒன்றினால் 
உங்களை பிரிவதில் நான் அழுவதற்கு கண்ணீரில்லாமல் இருக்கிறது 
இதோ போய் இறங்கும் நகரத்தில் உங்களை போல் யாரையும் நான் சந்திக்காமாலேயே போய்விடலாம் 
ஆயினும் சன்னலுக்கருகில் செல்லும் இந்த பயணத்தில் மெல்லிய வலியுடன் விடைபெற 
எனக்கு தோன்றவில்லை 
உறங்கப்போவதில்லை.சகபயணியின் எந்த ஒரு கதையையும் காதில் வாங்கிகொள்வதாக இல்லை.
தீர்ந்து ஒரு சிகரெட் அட்டையினை மட்டும் எடுத்துசெல்கிறேன் 
இருக்கிறேன் இப்போதைக்கு பசியில்லை உறக்கமில்லை களைப்பில்லை 
அப்படியேதேனும் தோன்றினால் உங்களை அழைக்கிறேன் 
வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக அந்த அகாலத்தில் ஒரு பெண் குரலையே 
கேட்கவேண்டியிருக்கும்.

2.

இன்று நீ என் ஞாபகங்களுக்கு வருவது சங்கடமான நிகழ்வுதான் 
எந்த காரணங்களுக்காக சில தண்டனைகளை  எனக்கு நானே அளித்துகொண்டேனோ 
அவை அர்த்தமற்றவையாகின்றன
இங்கிருந்து மூன்றாவது திருப்பத்தில் இருக்கும் பேக்கரியில் டீயும் கிடைக்கும் 
இன்று ஒரு சீஸ் ப்ரெட் என்னை எந்த விதத்திலும் காப்பாற்றாது என்னும் போது ஒரு ஆறாத 
ரணத்தை தான் பரிசோதித்து பார்க்க வேண்டும் 
எப்போதுமே நான் இப்படி தான் என்று கூறுபவர்கள் தொடர்பெல்லைகளுக்கு அப்பால் 
உயர்தர சைவ உணவகத்தில் காத்திருக்கிறார்கள் 
நாட்களை கொல்ல ஒரு கத்தி தயாரிக்கப்பட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும் காலத்தை பழிவாங்க 
மூன்று சிணுங்கலுக்கு பின் அணையும் அலைபேசியில் நான்கு ஒன்றில் தொடங்கும் எண்களே ஒளிர்கின்றன 
இன்றிரவில் கொல்லப்பட்டால் நீ கடைசியாக சொல்ல விரும்பும் மூன்றே வார்த்தைகள் என்னவாக இருக்கும்..?
இறுதியான நிராகரிப்பிற்கு பிறகே உங்களின் வரவேற்பரையில் நான் வந்து நிற்கிறேன் 
நீங்கள் சொல்வதில் இருக்கிறது இந்த தினத்தை நான் எப்படி எழுதிகொள்வதென்ற முடிவு.

3.

கட்டை விரலின் ரேகைகளில் பிளேடால் கீறிப்பார்க்காதே 
நைசில் சாண்டல் கோடை விடுமுறையை ஞாபகப்படுத்துகிறதா.
வயதேறிய சாளரத்தின் வழியாக உள்ளே பாயும் வெளிச்சம் உனக்கான மீட்பரில்லை 
அளவாக விஷமருந்து 
இறந்து விடாத அளவில் மணிக்கட்டுகளை அறுத்துக்கொள் 
மழையின் சொட்டாத குளிர்ச்சி வணிகவீதியின் தெருக்களை போர்த்தியுள்ளது 
கொஞ்சம் சாஸும் ஒரு ஒயின் பாட்டிலும் பொறித்த மீன் இறைச்சியுடன் 
பீத்தோவானின் இசைத்தட்டையும் கொள்முதல் செய்துவரலாம் இந்த மழையிரவில்
நம் காதலிகள் நினைவுகளை விரும்பாதவர்கள் என்பதால் சாவதற்கு முன் எழுதும் கடிதத்தை 
மின்னஞ்சல் செய்வதை தவிர்த்து விடலாம் 
மறுநாள் திறக்கும் அறையில் மரணித்த நம் சடலங்கள் இருக்கக்கூடாது 
ஒரு அழகான கண்ணாடி மேஜையின் மீது நாம் பருகும் மரணம்  
எத்தனை பித்தமாய் இருக்கிறது..?

4.

தெரிந்தவர்களை சொல்கிறார்கள் 
வேண்டப்பட்டவர்களை முன்மொழிகிறார்கள் 
உண்மையை நம்பி பகைத்துகொண்டாய் 
டாம்பீக பீடத்தில் அவர்கள் 
கைகளை எதிர்பார்த்து காத்திருக்க வாய்த்தது இப்போதுனக்கு 
முறைத்துகொண்டாய் இணங்கியவர்களை என்ன ஆயிற்று பார் 
இடைஞ்சல் எதுவும் அவர்களுக்கில்லை 
ஒன்றும் செய்ய முடியாமல் கைகளை பிணைந்துகொண்டு நிற்பது யார்...? 
இங்கே வந்து விட்டால் இதெல்லாம் பழகிகொள்ள வேண்டும் 
இதெல்லாம் எட்டாது உன் புத்திக்கு 
கூட்டம் வைத்தால் கலந்துகொள் 
பாராட்டி பேசினால் பயன் நிச்சயம் 
எங்கேயோ எதையோ வாசித்துவிட்டு உண்மை தூய்மையென்று விமர்சித்துகொண்டு திரியாதே.
இது சாமானியர்களுக்கு பிடிபடாத தனி இடம்.  
Views: 206