சரியாயின் 'சரி' எனவும், பிழையாயின் 'பிழை' எனவும்...

எழுத்தாளர் : கிஷாந்மின்னஞ்சல் முகவரி: krushkishanth8@gmail.comBanner

சற்று வகுப்பெடுப்பது போலானதொரு பதிவு. இவ்வகையான பதிவு பிடிக்காதவர்கள் இப்பொழுதே பதிவைக் கடந்துசென்றுவிடல் நன்று. ஆனால், பல நடைமுறைகளை முரண்நகையாக நோக்கவிருப்பதால் எதிர்வினையாற்றும் வாய்ப்பு அதிகம் உண்டு. மேலும், இடையிடையே சலிப்பைப் போக்கும் பொருட்டு சில கிளுகிளுப்புகளையும் இணைத்திருப்பதால் நம்பி வாங்கலாம் என்ற ஒரு உறுதியையும் வழங்குகிறேன்.

தலைப்பு எமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. சிறுவயது முதல் இது போன்ற கேள்விகளைத் தாங்காது எமது பாடசாலை வினாத்தாள்கள் கடந்ததில்லை. இங்கே 'சரி' எது? 'பிழை' எது? என்ற கேள்விதான் குழப்பத்திற்குரியது. ஆரம்பமே சிக்கலாக்கா வண்ணம் ஒரு சிறிய ப்ளாஸ்பேக் சென்று வரலாம்.

*******

நான் தரம் 11இல் கல்விகற்றுக்கொண்டிருந்த தருணம். தமிழ் பாடத்தில் ஒரு வினா "செல்வத்துள் சிறந்த செல்வம் எது?" என்பதாக அமைந்திருந்தது. அனைவரும் "கல்விச்செல்வம்" என்ற பதிலை தேர்ந்திருந்தோம். அதே தவணையில் தமிழ் இலக்கியநயம் (விருப்பத்திற்குரியது) பாடப் பரீட்சையில் ஒரு வினா "செல்வத்துள் சிறந்த செல்வம் எது?" என்பதாக அமைந்திருந்தது. என் நண்பர்கள் அனைவரும் "கல்விச்செல்வம்" என்னும் பதிலைத் தெரிந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் 'சரி' கிடைக்கப்பெற்று இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது. நான் "பிள்ளைச் செல்வம்" என்ற பதிலைத் தெரிந்திருந்தேன். எனக்கு 'பிழை' தரப்பட்டிருந்தது. பின் ஆசிரியரிடம் பாடப்புத்தகத்தைக் கொண்டு சென்று குறித்த பாடத்தைக் காட்டி அது "பிள்ளைச்செல்வம்"தான் என நிறுவினேன். உடனே ஆசிரியர் ஆனால், தமிழ் பாடத்தின் படி "கல்விச்செல்வம்" விடையாகிறது. எனவே, அதற்கு திறந்த புள்ளிகள் (open marks) வழங்கலாம் என்றார். அனைவருக்கும் இரண்டு புள்ளிகள் கூட்டுவோம் என்றார். அப்படி செய்யின் பிழையான பதிலளித்து 'சரி' வாங்கியவர்கள் 6மேலதிக புள்ளிகள் பெறுவார்கள் (எவ்வாறென புரியவில்லை எனின் கீழே பின்னூட்டத்தில் கேட்கவும்). அது நியாயமில்லை என வாதிட்டேன். அவர்களுக்கு இரு புள்ளிகள் குறைத்து எனக்கு இரு புள்ளிகள் அதிகரிக்க சொன்னேன். இறுதியில் இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்து எனக்கு இரு புள்ளிகள் கூட்டப்பட்டது. யாருக்கும் புள்ளிகள் கழிக்கப்படவில்லை.

*******
இப்போது குறித்த சம்பவத்தில் ஒரே வினா இரு வேறு விடைகள். இதில் எது சரி? எது பிழை? என்ற கேள்வியில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழில் "கல்விச் செல்வம்"உம், தமிழ் இலக்கிய நயத்தில் "பிள்ளைச் செல்வம்"உம் சரியென அப்போது தோன்றியது. இப்போது யோசித்துப் பார்க்கில் எம்மைப் பொறுத்தமட்டிலான சிறந்த செல்வம் எது என்பதை பாடத்திட்டம் எவ்வாறு முடிவு செய்யும்? என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் "குறித்த பாடத்தில், குறித்த இடத்தில், குறித்த எழுத்தாளரின் எண்ணப்படியான சிறந்த செல்வம் எது?" எனத்தான் கேள்வி எழுந்திருக்க வேண்டும். விடுத்தான கேள்விக்கு எந்தப்பதிலளித்திப்பினும் அது 'சரி'யே என்ற முடிவுக்கு வரலாம். 

இதிலிருந்தாக தொடரின் "கண்ணிற் சிறந்த உறுப்பில்லை..." எனத்தொடங்கி ஒரு பாடல் செல்லும். உண்மையில் கண்ணிலும் சிறந்த உறுப்பு இல்லையா? சிலருக்கு அவர்களது இனப்பெருக்க உறுப்புகள் மிக முக்கியமானதாகும், பிரிதொரு கூட்டத்துக்கு எதிர்ப்பால் கவரும் உறுப்பு மிக சிறந்ததாகும், பிரிதொரு கூட்டத்துக்கு தலைமுடி கூட சிறந்த ஒன்றாகப்படும். எனில் அந்தப்பாடல் 'பிழை'யா எனக்கேட்பின் இல்லை 'சரி'தான் என்றே கூறவேண்டும். காரணம் குறித்த பாடலை எழுதிய கவிஞருக்கு கண் மிகச்சிறந்த உறுப்பாக தெரிந்திருக்கலாம். அவரது பார்வையில் அது சரியானதே. அதனைப் பொதுமைப்படுத்தி ஒரு கருத்துருவாக்கம் கொண்டுவரும்போதே அது 'பிழை'யாகின்றது. 

உதாரணங்கள் போதும் என நினைக்கிறேன். உலகின் ஆரம்பம்தொட்டே ஒவ்வொரு தனிமனிதருள்ளாகவும் குறித்த ஒரு விடயம் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருந்துகொண்டேதான் உள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் செயற்பாடுகளையும் கொண்டுதான் உலகின் இயக்கம் நிகழ்ந்து வருகிறது. இதில் குறித்த ஒரு செயற்பாடு 'சரி'தான் அல்லது 'பிழை'தான் என்ற முடிவுக்கு எவ்வாறு வரமுடியும் என்பதுதான் பிரச்சினையே. உடனே இப்பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு உங்கள் மனதில் உதித்திருக்கும். "சமூகவியல் கட்டமைப்புகள் உருவாக்கியிருக்கின்ற பண்பாடு மற்றும் சட்டதிட்டங்களின்படி அமைந்தவை 'சரி' என்ற முடிவுக்கு வரலாம்" இவ்வாறானதொரு எண்ணம் உதித்திருப்பின் நீங்களும் என் போன்ற ஒரு சாதரண மனிதன்தான். ஆனால், அவ்வளவு எளிதாக இந்த சிக்கலைக் கடந்துவிடமுடியாது.

சமூகவியல் கட்டமைப்புகள் ஏற்படுத்தியிருக்கும் விடயங்கள் அனைத்தும் சரியெனின் கால தேச வர்த்தமானங்கள் கடந்தும் அவை ஏற்புடையதாக இருக்கவேண்டும். ஆனால், அருகருகாக இருக்கும் வீடுகளில் கூட ஒரே மாதிரியான விடயங்கள் ஒரே பார்வையில் நோக்கப்படுவதில்லை. எளிதாக நோக்கின் ஒரு வீட்டில் காதல் திருமணம் 'சரி'யென நோக்கப்படும் அதேவேளை பக்கத்துவீட்டில் கொலைசெய்யும் அளவிற்கு 'பிழை'யென நோக்கப்படுகிறது. இன்னும் பரந்துபட்டு நோக்கில் ஐரோப்பிய நாடுகளில் வயது வந்தவர்கள் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தலும் உடலுறவு கொள்ளலும் 'சரி'யென நோக்கப்படும் அதேவேளை எமது நாட்டில் அது மாபெரும் பாவச்செயலாக நோக்கப்படுகிறது.

எனின் சரியையும், பிழையையும் எவ்வாறு அறிவது என்று இப்பதிவிலேயே கூறிவிடலாம். ஆனால், நீண்ட பதிவை நிச்சயம் வாசிக்கமாட்டீர்கள் எனத்தெரியும். இப்பதிவிற்கான உங்களின் பின்னூட்டம் கொண்டு இப்பதிவு தொடரும்.

தொடரும்...

பி.கு:-பின்னூட்டம் வழங்கப்படாவிடினும் இப்பதிவு அடுத்த உவங்களில் தொடரும்.


Views: 499